சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (27)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22அத்தியாயம் 23அத்தியாயம் 24அத்தியாயம் 25அத்தியாயம் 26

அத்தியாயம் 27

ஆபிதீன்

*

நேற்றுடன் 53 வாரம்! இடையில் ஒரேயொரு முறை வெள்ளி செஷனை – அதுவும் ஊரில் – தவறவிட்டிருக்கிறேன். ஒரு வருடம் போதாதா புது உயிராய் பிறக்க? நான் சாதித்ததுதான் என்ன? அரிப்பை அடக்க முடிந்திருக்கிறது.. வலது கையில் மணிக்கட்டுக்கு சற்றுமேல் அரித்தது. உடனே சொறியப் போனவன் உற்றுப்பார்த்தேன். உன் நீளம் என்ன என்று கேட்டேன். இதை அளக்க ஸ்கேல் தேவைப்படுமா அல்லது தையல்காரன் கழுத்தில் உள்ள ‘டேப்’ போல வேண்டுமா அல்லது இதுவே அளவுபார்க்கும் கருவிதானா? இதை வைத்துக் கோடு போட முடியுமா? இதை எரிக்க முடியுமா, புகைக்க முடியுமா? இதை சுருட்டு, சிகரெட் போல குடிக்க இயலுமா? அல்லது இது ‘டவல்’ போன்றதா? முகம் துடைக்கலாம். இல்லை, இது கண்ணாடி. முன்பக்கம் முகம் பார்க்க, உள்ளே கூலிங்கிளாஸ். அல்லது இது டீத்தூள். இதைப்போட்டு வடிகட்டினால் வரும் வண்ணம் என்ன? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வண்ணம். எல்லை இல்லை, அல்லது வடிகட்டினால் வருவது ராமர்பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல். ‘புரட்சியாகவும் தெரிகிறது, மிரட்சியாகவும் தெரிகிறது. ஆனால் பெட்ரோலாக இருந்தால் வறட்சி இருக்காது’ என்றார் கலைஞர். திரட்சியான பேச்சு இந்த அரிப்பு. இதை மோதிரமாக போட்டுக்கொள்ளலாமா? அஸ்மாவுக்கு 10 பவுன் இந்த வருடத்திற்குள் வாங்குவது இயலாது போலிருக்கிறது. இதை அனுப்பிவிட வேண்டியதுதான். எல்லா ஸாஃப்ட்வேர்களின் முக்கியமான லாஜிக்கும் இதுதான். இது எந்த மொழியோ ஆனால் மனிதனுக்கு மிகவும் நெருக்கமானது. இதன் வயதென்ன? நரைமுடி தெரியவே இல்லையே. ஆனால் முகத்திலோ மூவாயிரம் கோடி சுருக்கங்கள் தெரிகின்றன. கண்ணோ பளபளவென்று குழந்தையினுடையதைப்போல் இருக்கிறது. இதற்கு பிடித்த உணவு என்ன? இதுவே உணவுதானா? ‘ஜாலூர்புராட்டா’வுக்கு தொட்டுத் தின்றால் நன்றாக இருக்குமா? பார்க்க ஒரு மர நாற்காலிமாதிரிகூட இருக்கிறது. ஆனால் தட்டி வழிக்கலாம். அந்தக்கால சபராளிகள் கொண்டுவரும் மெத்தைக் கோரைப்பாய் மாதிரி… அல்லது முஸல்லாவாக ஆக்கி தொழலாம். இதைப் போர்த்திக்கொள்ளவும் செய்யலாம். ஸ்கூட்டரை மூட உபயோகிக்கலாம். மழைக்கோட்டு மாதிரி மாற்றிக்கொள்ளலாம். இது ஏதாவது படித்திருக்கிறதா? இஞ்சினியரா டாக்டரா? ஆணா பெண்ணா? தொட்டால் எப்படி இருக்கும்? நுங்குமாதிரியா அல்லது மூக்குப்பீ மாதிரியா? இதன் இனம், மொழி என்ன? மூத்திரம் , பீ, கொட்டாவி. தும்மல் சுகங்கள் இதற்கு உண்டா? இது ஒரு பானமா? கோடி வருடங்கள் பூமியில் புதைக்கப்பட்ட ஷாம்பெய்ன்? இதை எறும்பு மொய்ப்பதுண்டா? இதை ஃப்ரேம் செய்து மாட்ட இயலுமா? இதன் மதம் என்ன? இது பழமென்றால் கசப்பா இனிப்பா? இதற்கு ஒளி உண்டா? டார்ச்லைட் போல ஒளிருமா அல்லது சிம்னிவிளக்கு மாதிரியா? சலவைக்கல்லாக வீட்டிற்கு உபயோகிக்க முடியுமா அல்லது கூரை ஓடாகவா? மழையில் கரையுமா? தடியா , ஒல்லியா? திரவமா , திடப்பொருளா? நீரில் மிதக்கும் இலையா, இலையின் நரம்பா? புதுக்கவிஞன் பாஷையில் , அரிப்புக்கு அரிக்குமா?

அதற்கு அரித்துவிட்டது; நின்று விட்டது! நான் இடதுகையில் மணிக்கட்டுக்கு போகச்சொன்னேன். போனது. இடதுகால் பாதத்தில் எனக்கிருக்கும் மச்சத்திற்குப் பக்கத்தில் போய் அரி. அரித்தது!

ஒரேயொரு முறைதான் இதுவரை சொன்னபேச்சைக் கேட்டிருக்கிறது. ஆனால் , பெரும் அரிப்பு என் கட்டுக்கு உட்பட்டு நிற்கிறது. உடல் இன்பம்.. புணர்ச்சி! இதுவரை ஆயிரத்தொரு முறை முட்டிமைதுனம் செய்திருப்பேன் –
ரியாலத் இல்லையென்றால். இப்போது என்னமோ அதில் நாட்டம் செல்லவில்லை. எப்போதாவது கனவு வந்து கசிய வைக்கும். அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. வெளியேறுவது அவசியம் என்றால் வெளியேற்றப்படத்தான் வேண்டும். ஆனால் கனவில் அஸ்மா வரமாட்டாள்! அவளைத்தவிர உறவுகள் அத்தனைபேரும் வந்திருக்கிறார்கள்- நான் புணர, இறந்த பாட்டி உட்பட! ஆசைப்பட்டு வரவழைத்தது ஒரே ஒரு ஆள்தான். நடிகை வி.தயாஸ்ரீ. சக்கைப்போடு! M.F. ஹூசைனுக்கு மாதுரி தீட்சித் போல எனக்கு வி.தயாஸ்ரீ. கஜகாமினி! காமி, நீ! மற்றபடி உடம்பின் முறுக்கலுக்குப் பதில்சொல்ல கை, குறியைத் தடவ நீளும்போது எதுவோ வந்து என்னை தட்டிவிடுகிறது. எது சர்க்கார்?

எனது கோபம் எங்கே போனது? நான் கோபப்படுகிறேன் என்று நினைக்கிற நினைப்பில் பறந்து விடுகிறது. கோபத்தை அடக்க்குவதற்கு வழி சொல்லித்தர , நான் படித்த படிப்பிற்கும் அதைக் கொடுத்த பல்கலைக்கழகத்திற்கும் தெரியவில்லை. இந்த ரியாலத் செய்துவிட்டது. தன் கம்ப்யூட்டரை என்னிடம் விற்ற ஹலால்தீன் தனது நண்பன் ஹாஜாவுக்கு அது பதினைந்துநாள் வேண்டும் என்றான். எனக்கு கோபம் தலைக்கேறியது. மிக வசதியானவேலையில் இங்கே உள்ள ஹாஜாவுக்கு – என்னிடம் அவன் நண்பன் கம்ப்யூட்டரை விற்றுவிட்டான் என்று தெரிந்தும் கேட்பதில் கூச்சம் இருக்காதுதான். தன்னிடம் ஏற்கனவே இருந்த கம்ப்யூட்டரை வேறு விற்றுவிட்டான். அதுபோல நாலு கம்ப்யூட்டர்களை வாங்குமளவு வசதி இருந்தும் இப்படி கேட்கிற புத்திக்கு துணைபோக ஹலால்தீனுக்கும் என்ன கேடு வந்துவிட்டது?

‘ராத்திரி வந்து எடுத்துக்க சொல்லவா நானா?’

‘எடுத்துக்க சொல்’ – நான் வெறுப்பில் சொல்லிவிட்டு அமர்ந்தேன். சற்றுநேரத்தில் என் கோபத்தையும் வெறுப்பையும் பார்த்து சிரிப்பு வந்தது. நான் ஹாஜாவை நினைத்தேன். ‘ஹாஜா.. உனக்கு இது தேவைப்படாது. நீ வேறு வாங்கிக்கொள். இது நான் onewayயில் ஊர்போனால் பிழைக்க உதவியாக இருக்கும் என்று வாங்கியிருக்கிறேன். இது எனக்குத் தேவை’. ஹாஜா அன்று வரவில்லை. அடுத்தநாள் காலையில் ஹலால்தீனிடமிருந்து ஃபோன் வந்தது. ஹாஜாவுக்கு நேத்து கடுமையான வயித்து வலியாம். அவன் வேறு கம்ப்யூட்டரை ஏற்பாடு பண்ணிட்டானாம். ஏன் கோபப்படவேண்டும் நான்?!

ரியாலத் செய்ய இடைஞ்சலாயிருக்கிறார்கள் என்று பெரிய முதலாளியின் ஸ்க்ரேப் மற்றும் அதன் ஆட்களின் மீது கோபம் இருந்தது.; இவர்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டார்களா? போனவாரம் நகர்ந்துவிட்டார்கள். கோபம் என்றால் ஆங்காரமாய் வெடித்துக் கிளம்ப வேண்டியதில்லை. உள்ளுக்குள் கசங்க வேண்டும், கனலும் நெருப்பாக. போதும்! நினைத்தால் நடக்கும். லைபீரிய பஞ்சத்தைப் போக்க முடியாதென்றாலும் கூலித்தொழிலாளர்கள் அதிகம் இருக்கிற சோனாப்பூர் பகுதிக்கு மட்டும் ஏன் ஏ.சி இல்லாத பஸ்களை இந்த அரசு விடுகிறது என்று நினைத்தால் அடுத்த நாள் 13-ஆம் நம்பர் பஸ்கள் ஏ.சி கொண்டை வைத்துக்கொண்டு ஒய்யாரம் காட்டுகின்றன.

விழுந்து கிடக்கிற பழங்களெல்லாம் நான் கிளையை உலுப்பியதால் என்று நினைக்கிறேனா? அப்படித்தான் இருக்கும். இல்லையென்றால் இத்தனைநாள் நினைத்தும் சம்பளத்தில் ஒரு திர்ஹம் கூட ஏறவில்லையே.. சம்பளம் கிடைப்பதுதான் இப்போதைக்கு அதிகம் என்றா? தவிர ஒரு திர்ஹம் ஏற்றத்தில் என்னதான் புதிதாக சாதித்துவிட முடியும்? நாவப்பட்டினம் டாக்டரை பார்க்கப்போகும் அஸ்மா அப்போது தஞ்சாவூர் டாக்டரை பார்க்கப்போவாள் – டாக்ஸியில். பரக்கத் என்பது பொருளாதார பலம் மட்டுமேதானா? சோம்பேறித்தனம் போயிருக்கிறது. ஒத்திப்போடும் குணம் அகன்றிருக்கிறது. திடீர் திடீர் என்று ஆரம்பித்து அதிகபட்சம் 40 பக்கங்களுக்குள் அற்பாயுசில் முடிந்து , பிறகு பார்க்கலாம் என்று கிறுக்குகிற குறுநாவல்கள் போல அல்லாமல் விடாமல் எழுதிய இந்த டைரி உதாரணம்.

துபாயின் காக்காக்கள் பற்றியும், அன்பழகனுக்கு பதில் சொல்லும் விதமாகவும் எழுதிய ‘கேண்மை’யும் பாதியில் இன்னும் இருக்க , இது மட்டும் என்னை இருக்கவிடமாட்டேன் என்கிறது. பழைய சீடர்கள் பதியத் தவறியதை ‘SS’ சீடர்கள் நீக்கவேண்டும் என்ற சர்க்காரின் ஆசை காரணமாக இருக்கலாம். சர்க்கார் ஆசைப்பட்டால் நடக்கும். பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுக்கு செய்கிற முயற்சி கூட அப்படித்தான். இதில் யாருக்கு ஆசை குறைச்சல்? சொல்லப்போனால் இதை முக்கியமான ஒன்றாக நினைத்து ஃபோகஸ் செய்து வந்திருக்கிறேன். என் முயற்சியில் தானும் புகுந்துகொண்ட செல்லாப்பாவின் அனாவசிய பரபரப்பு கெடுக்கிறதோ? அல்லது அது கிடைத்துத்தான் என்ன புது கொம்பு முளைத்துவிடப்போகிறது என்று சர்க்கார் நினைக்கிறார்களா? வெளிநாட்டுப் பிழைப்பே அவர்களுக்குப் பிடிக்காது. பிறந்த மண்ணிலேயே நிமிர்ந்து வாழ்ந்து காட்டவேண்டும்தான். புகப்போகும் எந்த நாடும் எந்த நேரமும் அந்நியர்களை விரட்டி அடிக்க முடியும். தாய்நாடே முஸ்லீம்கள் என்று மிரட்டி விரட்டுவதற்கு துணைபோகும்போது அந்நிய நாடு அவலம் நிறைந்ததுதானா?

நான் ஊரில்தான் பிழைப்பேன் என்று சர்க்கார் ஒருமுறை சொல்லியிருக்கிறார்கள். தொழில்செய்து பிழைப்பேன் என்றுதான்! தொழில் என்றால்? பீடி சுருட்டு கடையா? ‘SS’ சீடனா, போனால் போகிறது, அதில் ஹோல்சேல் கடை! எனக்கு வியாபாரத் திறமை இருக்கிறது என்று எப்படி கண்டு கொண்டார்கள்? அவர்களின் கஃபூர்ஷா தெரு புதுவீட்டுக்குப் போகும்போது நான் ஏதாவது வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று அஸ்மா அரித்ததில் ஒரு வால்-கிளாக் வாங்கிக் கொடுத்தேன். அழகான அஜந்தா குவார்ட்ஸ். நாவப்பட்டினத்தில் வாங்கினேன். விலையுயர்ந்ததை வாங்கிக்கொடுக்க ஆசைதான். பஜாரிலேயே சீக்கோ, சிட்டிஸன் என்று கிடைத்தது. ஆனால் பண நெருக்கடி அப்போது. அலார்ம் & தேதி இல்லாத சாதாரண வால்-கிளாக்-ஐ அவர்கள் கையில் கொடுத்துவிட்டு ,’இந்தியாவில் போடுகிற டிசைன்கள்தான் எவ்வளவு அழகு’ என்று வியாபாரி மாதிரி பேசியது அவர்களுக்கு என்மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கவேண்டும். டிசைன் அழகுதான். ஆனால் ஓடாது! அவர்கள் அடுத்தநாள் அதைத்திருப்பிக்கொடுத்து பழுது பார்த்துவரச் சொன்னார்கள். பண்ணிக்கொடுத்துவிட்டு சொன்னேன்..” ஒண்ணுமில்லே சர்க்கார்.. மைனர் ரிப்பேர்தான்’

‘என்னவாம்?’

‘முள்ளு மட்டும்தான் நகரலே.. சரிபண்ணிக் கொடுத்தாரு கடைக்காரரு!’

சர்க்கார் தன்னை மறந்து சிரித்தார்கள். நான் நல்ல விற்பனையாளனாகவும் இருப்பேன் என்கிற Similarity கிடைத்துவிட்டது! ஊரில்தான் பிழைப்பேன் போலும்.. அதற்கு முதலீட்டுக்கு வேண்டிய பரக்கத்திற்கு பயிற்சி உதவியிருக்கிறதா? கடைசியாக கொடுத்த இஸ்முவில் வருகிற ‘சுபுஹானல்’ பரக்கத்தைக் குறிக்குமாம். அதுபோல 17 முறை வரவேண்டும். பிறகு நோன்பு வைக்கவேண்டும். அதற்குள் இறந்துபோனால்? வாழ்வு அபத்தங்கள் நிறைந்தது என்றுதான் பெரும்பெரும் தத்துவங்கள் சொல்கின்றனவே.. இறந்துபோனால்? மவுத்தே பரக்கத்துதான்! வேறொரு வழி இருக்கிறது. 07.06 to 06.09.1996 கேஸட்டில் சொல்கிறார்கள் – மை தயாரிக்கச் சொல்லி.

வெள்ளெருகு செடியின் வடக்குப்பக்கம் ஓடுகிற வேரைப்பிடித்துப் பிடுங்கி கொட்டாங்கச்சியில் எரியவிடவேண்டும். திரண்டுவரும் கரியை பச்சை விளக்கெண்ணெயில் குழைத்து வைத்து ‘வேலை’ செய்ய வேண்டும். சர்க்காருக்குத்தான் அந்த ‘வேலை’ செய்யத்தெரியும். சொல்லியும் கொடுக்கமாட்டார்கள். ‘இதெல்லாம் ‘யோக சித்தி புருடாக்கள்’ பண்ணுகிற மந்திரவாதிகள் வேலை. ரியாலத்தை மட்டும் கரெக்டா பண்ணுங்க போதும்!’ – ‘S’.

என் ரியாலத்தில் என்ன குறை? ரியாலத் பண்ணுவதற்கு இதைவிட சிறந்த அறை, இடம், ஊரில் கூட கிடைக்காது. இதற்கே பரக்கத் கிடைக்கவில்லையென்றால்? பண்ணும் ஆள் சரியில்லையோ? இந்த இடமும் இந்த வருடம் முடியும்வரைதான். அதற்குப்பிறகு கம்பெனி இருந்தால் (இன்ஷா அல்லாஹ்!) தங்குமிடம் கம்பெனி கொடுக்காது. பழைய துபாயின் சத்திர வாழ்க்கை. அதில் ரியாலத் பண்ணுவதைப் பற்றி நினைக்கவே அச்சமாக இருக்கிறது. ஏன், ஜெப்பார்நானா செய்யவில்லையா? துபாயிலாவது ‘SS’ கற்பனையில் 4 Bodyகள்தான் இருக்கின்றன. சௌதியாக இருந்தால் Police Body என்ற ஒன்று Astral Bodyயின் அருகிலேயே துப்பாக்கியை தூக்கிவைத்துக்கொண்டு நிற்கும். ஊரில் உள்ளவர்களுக்கு RSS Body அல்லது ஜிஹாத் Body அருகில் நிற்பதுபோல! இல்லை, நான் நினைக்கும் முறை சரியில்லை. இது சரியில்லையென்றால் சரியாக எப்படி நினைப்பது என்று சொல்லித்தரப்படவேயில்லை என்றாகிறது. பதியவில்லையோ? யார் குற்றம்? ‘ரொம்ப பேரு அறுந்துபோற காரணம் இதுதான். தெரியுது; நன்மை இருக்குண்டு தெரியுது; ஆனா எங்கே Cut ஆவுதுண்டு தெரியமாட்டேங்குது. சொல்லிக்கொடுத்த பாடத்தை சரியா விளங்கிக்கலே. விளங்கியதை பழக்கத்துக்கு கொண்டு வர்றதுதான் கஷ்டம்.’ – சர்க்கார் குரல் கேட்கிறது.

‘வாஹிதுசாபு பைத்தியக்கார ஆஸ்பத்திரி’யில் டாக்டர் உட்பட பைத்தியம்..! ஊரில் இப்போது ஏகப்பட்ட ‘நபிகள்’ இருக்க இந்த ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் பாரபைத்தியம்.. அவர்களுக்கு பிரச்னைகள் தீர்ந்ததாகத் தெரியவில்லை. How to..?

**

25.09.1996

‘How to?’ என்பது புரிந்திருந்தால் இத்தனை சீடர்கள்தான் சர்க்காருக்கு கிடைத்திருப்பார்களா? பிரச்சனைகளைத் தீர்க்கத்தான் வாழ்க்கையா அல்லது புரிந்துகொள்ளவா? அதிகம் புரிந்த சீடர்களும் இருந்திருக்கிறார்கள்தான். கமலக்கண்ணன். அதனாலேயே அவர் தான் ஈஸாநபியின் வாரிசு என்று வியாபாரம் பண்ண ஆரம்பித்து அடிவாங்கி இறந்துபோனார். ஆனாலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது சீடர் ஒருவர் இப்போது அதே கஃபூர்ஷா தெருவில் ஈஸாநபி படத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார். அதற்கும் தினம் கூடும் கூட்டம் குறையவில்லை. அவர் சர்க்காரைப்போல வாழ்க்கையைப்பற்றிப் பேசுகிறாரா அல்லது கற்பனையின் அவசியத்தை வலியுறுத்துகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் எதையேனும் சொல்லி கூட்டம் சேர்க்கமுடியும் என்று தெரிகிறது.

‘எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் சரி, நாமதான் தீர்க்கணும். அந்த How to?ஐ மட்டும் புரிஞ்சிக்கனும். ‘How to?’வைத் தேடனும், இல்லே, ‘How to?’ தானா வரும். ஆனா அப்ப ரிலாக்ஸ் ஆயிருக்கனும்’ என்கிற சர்க்காருக்கு தன் சொந்த மருமகன் தாவுதுகுட்டி, சம்பாதிக்க சிங்கப்பூர் போவதை தடுக்க முடியவில்லை. போனவனும் மூன்றே மாதத்திற்குள் விசா/வேலை பிரச்னைகளில் ஓடி வந்ததையும் தடுக்க முடியவில்லை. 1 1/4 லட்சரூபாய் இதற்கு செலவானதாகக் கேள்வி. வட்டலப்பத்தின் கதியை முன்பே புரிந்துகொள்ளும் சர்க்காருக்கு இது எப்படி தெரியாமல் போனது? வாழ்க்கை இனிப்பானதல்ல போலும். அதனால்தான் வியாபார வெற்றிக்கு யோசனை சொல்லும் அவர்களால் ஒரு சிறிய வியாபாரத்தைக்கூட தொடங்கமுடியவில்லையோ? ‘செல்வந்தனாவது எப்படி?’ என்று புத்தகம் போட்டு செல்வந்தனானவன் கதைதான். எந்தக் கற்பனையாளன் அச்சாக ஒரு முன்னோடியின் செயலைச் செய்து சாதிக்கிறான்? இருந்த பழையதை எடுத்து புதுவடிவம் தர ஒரு சக்தி அவனுக்கு உதவுகிறது. ஆனால் அவன் அந்த சக்தி உதவ தன்னைத் தயாராக வைத்திருக்கவேண்டும்? அதற்குத்தான் ரியாலத்தும் ’ஜம்’மும்? இதனால் என் பேச்சு, நடை, எண்ணம் எல்லாம் மாறிதான் இருக்கிறது. Instant Enlightenmentன்போது உயிரின் தளத்தை உள்ளே உணர்ந்து மனது பெருமிதப்படத்தான் செய்கிறது. ஆனால் இப்படியே இருந்தால் வளர்ச்சி வந்துவிடுமா? இப்போதுள்ள மனநிலையும் வளர்ச்சிக்கு அறிகுறிதானா?

‘வளர்ச்சி இருக்குண்டு சொல்றீங்க. என் கண்ணுக்கு தெரியலையே.. ‘லங்கோடு’க்குள்ளெ வச்சிருக்கீங்களோ வளர்ச்சியை? அதான் தெரியாம இருக்கு!’ என்கிற சர்க்காரின் கிண்டல் (24.05.1996 கேஸட்) நியாயமல்ல. முதலில், நான் ஜட்டி போடுபவன். அப்புறம் அது சுருங்கியிருக்கிறது – விசா பிரச்னைகளுள்ள அரபுநாட்டு சம்பாத்தியத்தில். இந்தத் தொல்லை இல்லாத பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுக்கு முயற்சி செய்வதும் நிறைவேற மாட்டேன் என்கிறது. இந்தியமண் என்னை இருக்கவைக்க ஆசைகொள்கிறது போலும். மண்ணுக்கு இருக்கும் ஆசை மனைவி மக்களுக்கு இருக்கிறதா? அவர்களின் ஆசைகள் வலிமையானவை. அவர்களின் ஆசை நிறைவேற என் எண்ணத்தைக் கூராக்கவேண்டும்! ரியாலத் செய்வது அதற்கு உதவுகிறதா? இந்தக்கேள்விதான் ஏன் வருகிறது? நான் சர்க்காரையே சந்தேகிக்கிறேனா? Ciritical Faculty.. ‘ரொம்பபேரை கெடுக்குறது இதுதான்.. ஒரு வேலையைச் செய்யச்சொன்னா அதுலெ நன்மை இல்லாம சர்க்கார் கொடுக்கமாட்டாஹா ..ஏதோ நன்மை இருக்குதுண்டு நினைக்கிறதே தப்பு. அப்ப, நன்மை இருக்குற காரணத்துனாலெதான் நீங்க செய்யிறீங்க..!. உங்களுக்கு கொஞ்சம்கூட புரியாத , தீமையா தெரியிற , காரியத்தைச் சொன்னா செய்யமாட்டீங்க.. அப்ப எனக்கும் உங்களுக்குமிடையிலே Critical Faculty குறுக்கே வருது.. அது வரக்கூடாது. Permission அல்ல அது’ – ‘S’ (17-24.05.1996 கேஸட்).

மூளையைக் கழற்றி எறி!

‘நம்ம ரூட்டுலெ உங்களுக்குண்டு ஒரு மூளை இருக்கக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடனும். நான் சொல்றதை ஏத்துக்கனும்; அதுதான் ஈஸி உங்களுக்கு ‘ – ‘S’

ஆனால், அதுதான் ஈஸி என்று புரிந்துகொள்ளும் அளவாவது மூளை இருக்கவேண்டும். அதுபோதும். ‘கிருத்துவமான’ எண்ணங்கள் வராது.

‘வ மக்ரூ மக்ரன் வ மக்கர்னா மக்ரன் வஹூம் லா யஷ்உரூன்’ * (27 : 50)

alquran chap27ver50

. ஆனால் கிருத்துவமான எண்ணங்களிலும் அல்லா இருக்கிறானே.. அது சிவப்பு வண்ண அல்லா. அதை ஆரஞ்சு வண்ணமாக்கி பிறகு பச்சையாக மாற்றும் பொறுப்பு நம் கையில் உள்ளது. எண்ணத்தில் மாற்றம் வேண்டும். எண்ணம்தான் நடத்தி வைக்கிறது. அது பயிற்சியால் கூர்மையானதா துன்பத்தைச் சகித்ததால் உண்டாவதா அல்லது எதையும் பொருட்படுத்தாமல் நாம் வாழவேண்டும் என்கிற தீர்மானத்தால் வந்ததா என்று கேள்விகேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

கண்ணதாசனின் வரிகளை ஒருமுறை மேற்கோள் காட்டினார்கள் சர்க்கார்.. ‘ஒரு படத்துலெ நாகேஷ் படிக்கிறான் ஒரு பாட்டு. ‘பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே’ண்டு. எழுதுனவன் தெரிஞ்சி எழுதுனானோ தெரியாம எழுதுனானோ , உண்மை அது!’ என்று. உண்மைதான். வானத்தில் பறக்கும்போது அந்தப் பாட்டு வரும். பூமியில் இருக்கும்போது சந்தேகம்தான் வரும். Spritual Lineஐ சொல்லிக் கொடுக்ககூடிய ஒரு கல்லூரி கட்ட வேண்டும், எல்லா சீடர்களும் சேர்ந்து ஒரு பெரிய – நாவப்பட்டினம் ’மாணிக்காஸ்’ மாதிரி நூறு மடங்கு பெரிய – சூப்பர் மார்க்கெட் நடத்த வேண்டும் – பங்கு போட்டு, மனோதத்துவ வழியில் மனித நோய்களை குணப்படுத்தும் ஆஸ்பத்திரிகளை எல்லா பகுதிகளிலும் கட்டி, சேவை செய்யவேண்டும் என்கிற சர்க்காரின் ஆசைகள் பூமியில் இருப்பவையாக இருக்க வேண்டும். நடக்கவில்லை! உடலை அந்தரத்தில் நிறுத்திக் காட்டுகிறேன் நேரம் வரட்டும் என்று 25 வருடங்களுக்கு முன்பு கூறியதுமாதிரி – கீரியும் பாம்பும் கடைசிவரை சண்டை போடாது! கூட்டம் கலையாமல் நின்று கொண்டிருக்கிறதோ என்னவோ? சந்தேகம் கூடாது. மூளையை தூக்கிப் போடு! ‘சர்புன் நியமத்’ என்கிற பெரும் சர்ப்பம் கொட்டிவிடும். கொட்டட்டும். இறப்பது விஷத்தாலா எண்ணத்தாலா? எண்ணக் குதிரை தறிகெட்டு ஓடுகிறது. அதன் பிடிவாத குணம் நான் சிறுபிள்ளையில் பள்ளிக்குப் போக முரண்டு பிடித்ததை ஞாபகப்படுத்துகிறது. அப்போது பெரியம்மா மகள் பஸ்ரியா லாத்தாதான் கிண்டலாக பாடுவாள். தாய் சொல்லச்சொல்ல மகன் பதில் கொடுத்துக்கொண்டே இருப்பான்.

‘உண்டா திண்டா பள்ளிக்குப் போடா மவனே’
‘பள்ளியெல்லாம் பாம்பா கிடக்குது தாயே’
‘பாம்படிக்க மட்டைக்குப் போடா மவனே’
‘மட்டையெல்லாம் பீயா கிடக்குது தாயே’ என்று போகும் அந்தப் பாட்டு.

பீ கழுவ தண்ணிக்குப் போய் , அதெல்லாம் மீனாய் நிறைந்திருக்க , வலைக்குப் போனால் அது பிய்ந்து கிடக்கும்.

எல்லாவற்றுக்கும் பதில் இருக்கிறது!

**

26.09.1996

இன்றிலிருந்து , ‘தேரா’ போய் வர ’வேன்’ கம்பெனி கொடுக்காது என்று பெரிய முதலாளி சொல்லிவிட்டார். அவரவர் காசில்தான் போய்வரவேண்டும். செலவைக் குறைக்கிறாராம். ஆனால் அதே பெட்ரோல் செலவுக்கான பணத்தை பலுச்சி டிரைவர் எடுத்துக்கொள்வது பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. கராமாவிலிருந்த கம்பெனியை வாடகை அதிகமென்று இத்தனை தூரத்திலுள்ள அவீருக்கு கொண்டுவந்து , அதைவிட கூடுதலாக வாடகை கொடுத்து , ஆஃபீஸ் ஆட்கள் வர, போக ’வேனும்’ டிரைவரும் உண்டு பண்ணிய மூளை! கப்பமரைக்கார் வேறு இன்றுடன் வேலைக்கு வரமாட்டார். குடும்பத்தோடு போகிறார் – ஃபேமிலி விசாவை புதுப்பிக்க முதலாளி ஒத்துழைக்காததால். விடுமுறை என்றுதான் அனுப்புகிறார்கள். ஆனால் அவரது டிக்கெட் பணத்தை Staff Advanceல் போட்டு வைக்க உத்தரவு. அரசின் பொதுமன்னிப்பு காரணமாக அவரது மனைவியின் OverStay , பெரும் அபராதத்திலிருந்து தப்பித்தது. அபராதம் என்று போட்டால் ‘RSS’ என்று பல்லைக் கடிக்கும் கப்பமரைக்கார் ராம்களையும் லால்களையும் கெஞ்சத் தயங்க மாட்டார். அவர்கள்தான் பாப்ரிமஸ்ஜித் பிரச்சனையில் பட்டான்களால் உதைபட்டும் , மத வித்யாஸம் பார்க்காது, டிக்கெட் எடுக்கக்கூட வழியில்லாத ஆயிரமாயிரம் இந்தியர்களுக்கு – இம்மாத முடிவிற்குள் வெளியேற – உதவிக் கொண்டிருக்கிறார்கள். You Save more at Lal’s..!

*

இன்னும் குதிரை தறிகெட்டுதான் ஓடுகிறது , பதில் கிடைக்காமல். ‘அழுக்கைத் துடைத்தனைத் தனைத்துமடி மீதுவைத்தும் புழுக்கைக் குணமெனக்கு போவதிலை..’! அரும்பும் விஷயத்தின் வலிமையைப் பொறுத்து அது கிடைக்கும் கால அவகாசம் இருக்கிறது என்பார்கள் சர்க்கார்.

பிரிட்டிஷ் பாஸ்போர்ட் பெரிதாக இருக்கலாம்.. முகத்தில் மூன்று வருடங்களுக்கும் மேலாக இருக்கிற இரு கரளைகளும் பெரிதா?

சௌதியில் இருந்தபோது வலது நெற்றிப்பொட்டில் ஒரு கரளை உண்டானது. பருக்கள் ஏராளமாய் வந்துபோகும் பாழாய்ப்போன முகம்தான் எனக்கு. ஆனால் இந்தக் கரளை ஒரு திரண்ட முடிச்சாய் இறுகி கறுப்பாய் புடைத்துக்கொண்டு நிற்கும். OneWayல் ஊர்போனபோது அதை ஆபரேஷன் செய்து அகற்றினேன். துபாய்க்கு வந்த பிறகு அதே இடத்திலும் இதற்குத் துணையாக இடது நெற்றிப்பொட்டிலும் கரளைகள் உண்டானது. மூன்று வருடத்திற்கு முன்பு ஊர்போனபோது மறு ஆபரேஷன். அப்போதெல்லாம் சர்க்கார் வீட்டிற்கு எப்போதாவது போய் வருவதுதான். ஆபரேஷன் செய்து, அகற்றாத துணிக்கட்டுடன் ஒருமுறை போனபோதுதான் அவர்கள் கேட்டார்கள், என்ன இது என்று. சொன்னேன். ‘அடடா.. ஓதியே குணப்படுத்தியிருக்கலாமே இதை ‘ என்றார்கள். அப்படியும் செய்யலாம் போலிருக்கிறது என்று அன்றுதான் தெரிந்தது. ஆனால் நம்பிக்கை வரவில்லை. முக்தார் அப்பாஸில் விசா மாற்றி, மறுபடி துபாய் வந்தபோது அச்சாய் அதே இடத்தில் மறு கரளைகள்..

பிளேடால்கூட நானாக அறுத்திருக்கிறேன் ஒரு கோடு போல. இரத்தமாய் கொஞ்சநேரம் சிரித்துவிட்டு மூடிக்கொள்ளும் அருவருப்பான முகங்கள் அவைகளுக்கு. மற்றபடி துபாயில் ஆரோக்கியத்திற்கு பஞ்சமில்லை… உடம்பைக் குறைக்கிறேன் என்று அல்-ஐய்ன் ரவுண்ட்-அபௌட் வரை தினம் இரவில் வாக்கிங்.. போகவர 6 கி.மீ.. தினம் மர அவுலியாக்கள் இருவரைப் பார்த்துவருவதும் சுவாரஸ்யம். துபாயில் எங்கும் அவுலியாக்கள் கிடையாது.. எல்லா அரபுநாடுகளையும் போல தர்ஹாக்கள் இல்லாத , இருந்தாலும் முக்கியத்துவம் கொடுக்காத நாடுதான். ஆனால் இதனால் வியாபாரம் அதிகமாகிறதென்றால் துபாய் சிரத்தை எடுத்துக்கொள்ளும். (மர) அவுலியாக்கள், புல்டோசரைக் கொண்டு இடிக்கச் சொன்னாலும் நிறுத்தி விடுகிறார்களாம் – பாகிஸ்தானிகள் சிலபேர் சொன்னார்கள்.

சரியாக அந்த பெரிய வட்டத்தில் ஒருவர். அவரின் வலதுபுறம் ஒருவர். வியாழக்கிழமை இரவுகளில் கொஞ்சம் பாகிஸ்தானிகள் கூட்டம் இருக்கும். பச்சைப்போர்வை, பாத்திஹா, ஊதுபத்தி எனும் வழக்கமான சூழ்நிலைகள்.. ’Creek’ இலும் கண்ட்ரிகிளப்-இலும் ஏதேனும் இரவில் ஆடிக்கொண்டிருக்கிற ஆங்கிலேயர்களைப் பார்ப்பதுபோலவே அதையும் பார்த்துவிட்டு தொப்பலான வியர்வையுடன் வருவேன். என் உடம்பு அத்தனை குறைந்தது கூட மர அவுலியாக்களின் பார்வையாக இருக்கலாம்! இந்த முறை ஊர்போனபோது சர்க்காரே அசந்து போனார்கள். ஆனால் அத்தனை இளைத்தது என்னமோ போலிருக்கிறது என்று சொன்னார்கள். தான் வாங்கிவைத்திருந்த சைக்கிளிங் மெஷினை பார்க்கச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் உபயோகிப்பதில்லையாம். அதுகூட என்னவோ போலிருந்ததோ என்னவோ..

அஸ்மாவுக்கும் என்னவோபோல்தான் இருந்தது. என் இளைப்பும் அந்த கரளைகளும்.. மறுமுறை அறுக்கப்போகிறேன் என்று சொன்னேன் அவளிடம். ஆனால் உம்மா மட்டும் ‘ஆவு.. ஹதாப்புலெ.. ’பொட்டு’ கிட்டெ இக்கிது வாப்பா.. பண்ணிடாதே..’ என்று வழக்கம்போல பதறினார்கள். பதறினால்தான் தாய்க்கும் மற்றவர்களுக்கு வித்யாஸம் தெரியும். எதற்கும் சர்க்காரிடம் கேட்டுக்கொள்ளலாம், இப்போதுதான் செஷனுக்கெல்லாம் எல்லாம் போகிற சீடனாயிற்றே என்று கேட்டால், ‘பேசாம..இதை தடவி வாங்க’ என்று பச்சை பாசிப்பருப்பை ஓதிக்கொடுத்தார்கள். ஒரு மாதத்தில் பாசிப்பருப்புதான் காணாமல் போயிற்று. பிறகுதான் ஆலிவ் எண்ணெய் கொண்டுவரச்சொன்னார்கள். ஓதிக்கொடுத்தார்கள். மூன்று வேளையும் தடவிவர வேண்டும். ‘இதெல்லாம் கூடத் தேவையில்லை.. ரியாலத்தை மட்டும் வுடாம , கரெக்டா செஞ்சிட்டுவாங்க போதும்’ என்று சொல்லியே கொடுத்தார்கள். நான் அன்றிலிருந்து மறக்காமல் தடவி வந்தேன். அது சிறிய பாட்டில். துபாய் வந்தவுடன் நான் செய்த முதல்வேளை குறைந்திருந்த அந்த ஆலிவ் எண்ணெயை ஒரு பெரிய பாட்டில் வாங்கி அதோடு கலந்துகொண்டதுதான்.

ஒரு வருடத்திற்கும் மேலாக தடவி, வாரத்தில் ஒருநாள் இதற்காக பத்துநிமிடம் ஃபோகஸ் செய்து வந்தும் கரளைகளில் துளியும் மாற்றமில்லை.. என் எண்ணத்தில் வலிமை இல்லையா அல்லது எண்ணுகிறமாதிரி எண்ணவில்லையா? முக்கோணத்தின் கீழ்க்கோட்டை சரியாக நீட்டவில்லையா அல்லது முக்கோணமே பொய்யா?

(தொடரும்)

குறிப்புகள் :

முஸல்லா – தொழுகைக்கான விரிப்பு
ரியாலத் – (‘SS’) பயிற்சி
oneway – Exit
பரக்கத் – வளம்
இஸ்மு – மந்திரம்
மவுத் – இறப்பு
‘S’ – சர்க்கார்
ஜம் – ஒரு பயிற்சி
லாத்தா – அக்கா
அவுலியா – இறைநேசர், ஞானிகள்
ஹதாப்புலெ – ’ஆ!’ என்று அதிர்ச்சியாக கூறுவது (அதாபு – தொந்தரவு)

1 பின்னூட்டம்

  1. Prof.w mohamed younus said,

    05/01/2018 இல் 02:35

    சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் ssssssuper ma….. ஃபோகஸ் செய்வது எப்படி?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s