சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (09)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08|

அத்தியாயம் 09

ஆபிதீன்

*

09.04.1996

சாதாரண விஷயம் கூட மஸ்தான் மரைக்கான் பேசும்போது அணுகுண்டின் தன்மை பெற்றுவிடும். நானோ , இல்லாத அணுகுண்டுக்கு திரிவைத்து பயப்படும் ரகம். இப்போதுதான் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. இன்று காலை அவன் ஃபோன் செய்தான். ‘செய்தி தெரியுமா?’ என்று ஆரம்பிக்கும்போதே உஷாரானேன். ஊரில் சலாவுதீன் என்கிற சாபுவீட்டு பையன் தற்கொலை செய்து கொண்டான் என்று கேள்விப்பட்டபோது உடலை, முகபாவத்தை சற்றும் மாற்றாமல் அதிர்ச்சியை வாங்கிக்கொள்ளம முடிந்தது. இந்த மாற்றம், பனிமலையை பசியோடு பார்த்து பரவசம் கொள்ளச் சொல்லும் பரதேசிகளின் பேச்சைக் கேட்டால் வந்திருக்குமா? சக்தியைத் திரட்டி பின் அனுபவிக்கச் சொல்லும் சர்க்காரின் பாதை வேறு; பேச்சும் வேறு.

தங்கசாபுவின் இளையமகன் சலாவுதீனுக்கு மூலம் இருந்தது. ஆனால் அவனது மூல அனுபவத்தைக் கேட்டால் நமக்கு மூலம் வரக்கூடாதா, வந்தாலும் சாகும்வரை இருக்கக்கூடாதா என்று ஆசைவரும். அப்படியொரு சிரிப்பான பேச்சு. சலாவுதீன் கொஞ்சநாள் அஸ்மாவுக்குக்கூட ஓதிக்கொடுத்திருக்கிறான் , சிறுவயதில். இப்போது தீக்குளித்து இறந்தது அதற்குப் பிராயச்சித்தமாக அல்ல. கடன் தொல்லை என்றான் மஸ்தான் மரைக்கான். அந்த நொடியில், இது தற்கொலை என்று என்னுடைய ‘இஸ்மாயில் தம்பி ராவுத்தர்’ சொன்னார். ராவுத்தர் 38 வருஷங்களாக என்னுள் தூங்கிருக்கிறார். சர்க்கார்தான் போனால் போகிறது என்று தட்டி எழுப்பி விட்டிருக்கிறார்கள். ஊர் சென்ற தம்பி தௌஃபீக்கிடம் – மெய்தீனப்பா என்னும் , வீட்டுக்கு வேலை செய்யும் பணக்கார வட்டிப் பொன்னையர் ஒருவருக்கு , அவர் நச்சரிப்பால் – ஒரு டி-ஷர்ட் கொடுத்தனுப்பினேன். தௌஃபீக் புறப்படும்போதே அவன் சூட்கேஸில் அந்த டி-ஷர்ட் இருந்தது. ‘இவன் ஏன் இதை இங்கே வைக்க வேண்டும்?’ என்று இஸ்மாயில்தம்பி ராவுத்தர் கேள்வி கேட்டார் என்னுள். ஊர் சென்ற ரஃ·பீக் தகவல் அனுப்பினான். ‘டி-ஷர்ட்டை கஸ்டம்ஸ்காரன் எடுத்துக் கொண்டு விட்டான் நானா!’

கல்லூரிப் பருவம் தொடங்கி அரபுநாடு போகும்வரை எனக்கு ஒரு சக்தி இருந்தது. மனிதனைப் படைக்கிற சக்தியே இருந்தாலும் அரபுநாடு வந்தால்தான் போய்விடுமே. என்னிடமுள்ளதும் தொலைந்து போயிற்று. ஒரு சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னே தொடர்ச்சியாக எனக்குத் தெரியும் – மிகத் துல்லியமாக. இதை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். எங்கே ? கனவிலா? சொல்லத் தெரியாது. அடுத்து இவர் இன்னதுதான் செய்யப்போகிறார் என்று நினைக்கும் முன்பே அவர் அதை அப்படியே செய்வார். நினைக்கும் முன்பே அல்ல, நினைத்த அந்த அல்லது அடுத்த நொடியில். நடந்த ஒரு வினாடி முன் தள்ளி நான் பார்த்தேனா? இல்லை. சத்தியமாக இல்லை. பல சமயங்களில் திகைத்திருக்கிறேன். சில புத்தகங்கள் இது சாத்தியம்தான் என்றன. நரி வலமாகப் போனால் என்ன இடமாகப் போனால் என்ன? விழுந்து கொட்டையைக் கடிக்காமல் விட்டால் சரி என்றா? விஞ்ஞானம் விசித்திரமானது. சுஜாதாவின் ‘ஏன் எதற்கு எப்படி’ தொடர் ஞாபகம் வருகிறது. ‘நான் அம்பாளை என் கண்ணால் சத்தியமாகப் பார்த்தேன் என்று ஒரு தீவிர பக்தர் சொல்ல , சுஜாதா பதில் சொன்னார்: ‘பசியில் அப்படியெல்லாம் சில காட்சிகள் தெரியும்!’. நான் சர்க்காரிடம் சொன்னேன், முன்பு எனக்கு அந்த சக்தி இருந்ததை. ‘அடடா..’ என்று வருத்தப்பட்டார்கள். நான் மிகத்தாமதமாக அவர்களிடம் வந்ததாக சொன்னார்கள். ‘என்னைப் பாருப்பாண்டு பலதடவை கெஞ்சிப் பாத்திச்சி..நீங்க அலட்சியம் பண்ணுனீங்க. சரிப்பாண்டு ஒதுங்கிடிச்சி..’ என்றார்கள். இல்லை சர்க்கார், எனக்காக அவரை வேறு வேலை பார்க்கச் சொல்லியிருக்கிறீர்கள் இப்போது. அதையா, அவரையா? இவர் என்றும் இருப்பாரா? நான் மௌத்தான பின்பும்? ஏன்? விடைகள் தெரியவில்லை. குழம்பினால் ,’தெரிஞ்சி என்னா மயிரப் புடுங்க போறீங்க?’ என்று திட்டுவார்கள் சர்க்கார். ஆ, அந்த அற்புதம் எப்போது நிகழும்? சலாவுதீனிடம் கேட்டால் அற்புதம் என்பானா? இரண்டு வாரங்களுக்கு முன்பு கேன்சர் வந்து இறந்துபோன அந்த பேரழகு இளைஞன் முஜூபிடம் கேட்டால் அற்புதம் என்பானா? இவர்களின் பிள்ளைகளும் அற்புதம் எனுமோ? மௌத் சில சமயம் சுவாரசியங்களையும் உண்டு பண்ணுகிறது. முஜீப் மௌத்தாகிவிட்டார் என்றார் ஒரு நண்பர் ஃபோனில், தன் மனைவியிடம். நண்பர் கட்டையாக கறுப்பாக இருப்பார். ‘உம்மாடி..முஜீபா..! வெள்ளைக்காரன் மாதிரி அளஹா இப்பாஹலே.. பாத்தாவே ஆசை வருமே’ –  ஏங்கியிருக்கிறது பதில். ‘அளஹா இக்கிறவனுக்குத்தான் பெரிய வியாதிலாம் வரும். தெரியும்லெ?’ – நண்பர் சடாரென்று ஃபோனை வைத்தார் ‘ங்கொப்பனஓலி’ என்று கோபமாகச் சொன்னவாறு!

முஜீப் இறந்தாரா, யார் சொன்னது?!

10.04.1996 காலை. 8 மணி

இன்று சேத்தபொண்ணின் கல்யாணம். நேற்று ஊருக்கு ஃபோன் செய்தால் , ‘நீங்கள் அழைத்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை’. அப்படியா மேடம், சர்க்காரிடமாவது பேசிவிடுகிறேன் ஒருமுறை. நீங்கள் நவீனப் படுத்துவதை நாளைமறுநாள் வைத்துக் கொள்ளுங்கள். ‘நீங்கள் அழைத்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை’. போடி! ஆனால் மனம் முழுக்க குறுகுறு.. இத்தனைதூரம் வந்துவிட்டபிறகு பிரச்சனையின்றி முடிந்துவிடும்தான், சர்க்காரின் பார்வையில். ஆனாலும் பார்த்துச் சொல்லுங்கள் என்று சொல்லவும் கல்யாணத்திற்கு போய் ஒரு 5 நிமிடமாவது இருந்துவிட்டு வாருங்கள் என்று சொல்லவும். அவர்கள் எங்கே வெளியே போவார்கள்? ஒரு ஆளுக்குப் போய் மறு ஆளுக்குப் போகவில்லையென்றால் ஏற்படும் பேதம் குறைக்கவே அமர்ந்துவிடுவார்கள். இருந்தாலும் கல்யாணத்தன்று அசம்பாவிதம் நேராமல் இருக்கவேண்டும். இரவு குழப்பமான கனவுகள்.. அறையில் ஒரு பூனை மூத்திரம் பெய்துவிட்டுப் போயிருக்கிறது. மலமுமா? சேத்தபொண்ணுக்குப் பூனை என்றால் பிரியம். இதற்கு கவலையோடு எழுந்து சர்க்கார் பதில் சொன்னால் மனது நிம்மதியாக இருக்கும் என்று நினைத்துப் படுத்தால் அடுத்த கனவில் சர்க்கார். பீரோட்டத்தெருவிலா வீடு இருக்கிறது அவர்களுக்கு? நாசுவத்தி வீடு மாதிரி இருக்கிறது. வெளியில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள். சேர்ந்து சாப்பிடுகிறோம்… மனது தெம்பாக இருக்கிறது இப்போது.

*

12.04.1996 வெள்ளி செஷன் முடிந்து..

கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்ததா என்று கேட்டறிய காலையில் ஃபோன் செய்தாலும் அவளேதான் வந்தாள். ‘நீங்கள் அழைத்த எண்..’. ஆண்டவனே! என்னுடைய குழப்பமும் கவலையும் சேத்தபொண்ணின் சொந்த அண்ணன்களுக்கு கிடையாதா? கல்யாணத்திற்கு லண்டன்காரர் பணம் அனுப்பிவிட்டார். அமெரிக்கா போகிறேன் என்று சொன்னாரே.. போனாரா இல்லையா? போவதற்கு முன் எனக்கு தகவல் கொடுக்கச் சொன்னேன். தகவல் வரவில்லையெனில் போகவில்லை எனக் கொள்ளலாமா? இவர் போனாரா என்று கேட்டறியவும் பத்தாவது முறையாக நானே U.Sக்கு ஃபோன் பேசவேண்டுமா? பதில் அறிவது சிரமமாயிருக்கிறதே.. ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு, ஆசைக்கு பலன் கிட்டாமல் இருக்குமா? கேட்கிற முறையில்தான் கேட்டிருக்கிறேன். பயிற்சி தரும் பலத்தோடு. அதெப்படி அனைத்தும் நல்லபடி நடக்காமல் போகும்? அதுவும் சர்க்கார், ‘நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாமல் இருங்கள்’ என்று சொல்லியிருக்கும்போது? நான் நாலுமாதமாக -ஒருநாள்விட்டு ஒருநாள் – சேத்தபொண்ணின் கல்யாணம் பிரச்சனையின்றி முடிய 10 நிமிடம் ஃபோகஸ் பண்ணியிருக்கிறேன். ஆபிதீனின் Consciousness, மற்றும் எண்ணக்கூர்மையை தூக்கிக் குப்பையில் போடு! இன்று ‘தேரா’வில் கக்கூஸில் மூத்திரம் பெய்துவிட்டு (எல்லோரும் அறையிலா பெய்வார்கள்? வார்த்தை விரயம்!) பேண்ட் ஜிப்பை போடாமல் மறந்து வந்து அரைமணிநேரம் இருந்திருக்கிறேன் – ‘ஜம்’ நேரத்தில். (வெள்ளி மட்டும் பகல் 3 to 6. மற்ற நாட்களில் 6 to 9). நல்லவேளையாக ரூமில் அனைவரும் குஸ்கா தூக்கத்தில் பொரிச்சகறி குறட்டையில் இருந்தார்கள். நானே உணர்ந்ததுதான் தவறை. எத்தகைய அசமந்தத்தனம்! என்னாலா? மைத்துனர் சேத்தப்பா, துணைவி அஸ்மா, ஏன் சேத்தபொண்ணுவும் சர்க்காரின் ‘இஸ்மு’ ஓதிவருபவர்கள்தான். இவர்களின் ஆசையாகவும் இருக்கலாம். ஆனால் சர்க்காரின் பார்வையல்லாது நேற்றுவரை காரியங்கள் சிறப்பாக முடிந்திருக்காது. சேத்தபொண்ணின் சிறிய தவறும் பலவீனமும் குடும்ப நிம்மதியை எவ்வளவு குலைத்துவிட்டது? கல்யாணம் முடியுமா இதற்கு – பைத்தியக்கார மாமா மகனைத் தவிர்த்து குடும்பம் விரும்பும் நல்லபையன் ஒருவனுடன்? முடிந்துவிட்டது கடைசியாக, இனிமையாக! காலையில் ஊரிலிருந்து தௌஃபீக் ஃபோன் போட்டான் விசா விசயமாக. அவன் எந்த திடுக்கிடும் செய்தியும் சொல்லவில்லை. அப்போ சுபம்தான்!?

இந்த மாப்பிள்ளைக்கு முன் தௌஃபீக்கைத்தான் பேசினார்கள். சேத்தபொண்ணின் அழகைக் கேள்விப்பட்டிருந்த அவன் ஆர்வமாகவும் இருந்தான். ஆனால் முன்பே வீட்டில் கலந்து பேசியபடி தௌஃபீக்கிற்கு சேத்தபொண்ணின் பழைய காதல் கடிதங்களைப் பற்றியெல்லாம் சொல்லிவிடுவது நல்லது என்பதால் அவனுக்கு கடிதமும் எழுதினேன் நேர்மையாக. ‘இப்போது பெண் தன் தவறை உணர்ந்துவிட்டதாக, முற்றிலும் மாறிவிட்டதாக எழுதியிருக்கிறீர்கள்; எனக்கு துளியும் ஆட்சேபணையில்லை’ என்று பதிலும் எழுதினான் அவன். அது தவறு
அல்ல. ‘செய்வினை’யில் மாட்டிக் கொண்டது…

சேத்தபொண்ணின் மாமா பையன் கும்பகரத்தூர் மந்திரவாதியை வைத்து ஏதோ செய்து மயக்கி சேத்தபொண்ணுவை வசியப்படுத்தினானாம். அது பதில் எழுதிவிட்டது. இவனைத்தான் கண்டிப்பாக கல்யாணம் செய்வேன் என்றும் சொல்லிவிட்டது. அந்த சாதுவான பெண்ணின் நடவடிக்கைகள் மாறி விட்டன. கிரிக்கெட் கமெண்ட்ரி உண்டு, பூனைக்குட்டி உண்டு என்று இருந்தவள் வேறு ஒன்றை திடீரென்று , இப்படிப் பிடிவாதமாக எப்படிக் கேட்க முடியும்? அவளது உடலும் ஏதோ பாதிப்புக்கு உள்ளானதுபோல் மாறிக்கொண்டு வருகிறது.. அஸ்மா மூன்று வருடத்திற்கு முன்பு என்னிடம் அழுதுகொண்டே சொன்னாள் தன் தங்கையின் திடீர் மாற்றம் பற்றி. நான் சர்க்காரிடம் சென்று விபரம் சொன்னேன் அப்போது. 3 நாள் சீனி ஓதிக் கொடுத்தார்கள். சேத்தபொண்ணு அப்போதே தெளிவடைந்துவிட்டது. அது செவுனைதானா என்றெல்லாம் சர்க்காரிடம் கேட்க இயலாது. வியாதிகளை குணப்படுத்தும்போது ஏன் எப்படி என்றெல்லாம் அவர்களிடம் கேட்க இயலாது. எனக்கு ஒருமுறை இடைவிடா இளைப்பு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வந்தபோது – சவுதியிலிருந்து onewayல் திரும்பியிருந்த சமயம் – நாவப்பட்டினத்தின் புகழ்பெற்ற மருத்துவர்களினால் குழம்பி மேலும் இளைப்பை அதிகமாக்கியபிறகு சர்க்காரிடம் போனேன். மஞ்சள்கொத்து ஓதிக் கொடுத்தார்கள். அதை புகைக்கவிட்டு சுவாசிக்க வேண்டும். மூன்றுநாள். போச்சு! இதற்கு 1500 ருபாய் டாக்டர்களுக்கு அழுதிருக்கிறேன். எதனால் இந்த திடீர் இளைப்பு? ஏக்கமா ஏதும்? உடல்சுகம் அதிகமானதின் விளைவா? சர்க்காரிடம் அப்போது கேட்கவும் செய்தேன். ‘சரியாப் போச்சுல்ல? வுடுங்க அதோட!’ என்பது அவர்களின் பதிலாக இருந்தது. பல ‘பேய்’களையும் ஓட்டிவிட்டு இதே பதில்தான். சர்க்காரிடம் விளக்கமா கேட்பது? அதற்குப்பிறகு சேத்தபொண்ணுவும் ‘செட்’டு பிள்ளையாகிவிட்டது. தொடர்ந்த பார்வை.. கும்பகரத்தூர் மாமா மகனால் நெருங்க முடியவில்லை. ஆனால் சேத்தபொண்ணுக்குப் பேசும் மாப்பிள்ளைகளின் வீட்டிற்குப் போய் அல்லது மாப்பிள்ளையிடமே போய் கடிதங்கள் பற்றி சொல்வது, அது இன்னும் தன்னை காதலிப்பதாக சொல்லுவது என்று கெடுத்துக் கொண்டிருந்தான். சரி, இத்தனை பிரேமையுடம் இருக்கிறானே சொந்த மாமா மகன் வேறு, ஏன் அவனுக்கே கட்டிவைக்கக் கூடாது என்று நான் கேட்டேன் வீட்டிடம். அவனது அக்கா இப்போது கும்பகரத்தூரில் மூன்றாவது வைப்பாட்டனுடன் இருக்கிறாளாம். இதைக் கண்டுகொள்ளாத குடும்பமும் அதைவிட செவுனை அளவுக்கு போன தன்மையும் வேண்டவே வேண்டாம் என்பது பதில். தவிர அவன் ஊர் சுற்றி. சம்பாதிக்கவில்லை..ஆ, முக்கியமான ஒன்று. சம்பாத்தியம்! எட்டு ரக்-அத்தா? அது பரவாயில்லை! ‘புருனேயில் இருந்தானாமே, இதுதான் அவனை வாருங்கள் என்று சொல்லி லெட்டர் போட்டதாமே?’ ‘அப்படி சொல்லிட்டு வந்துட்டான் இந்த கொல்லை கழிச்சல்ல போறவன் – லாத்தாவை கூட்டிக் கொடுக்க!’

சரி, சேத்தபொண்ணுக்கும் தன் மாமா பையனை நினைத்தாலே இப்போது பற்றிக்கொண்டு வருகிறது.. இதை தௌஃபீக் உணர்கிறான். அவன் தாயார் – என் சின்னம்மா- உணர்வார்களோ? ‘ஆ..என் புள்ளைக்கி அவன் செவுனை செஞ்சிட்டா என்னா பன்னுறது?’ என்று ஒதுங்கி விட்டார்கள். தௌஃபீக்? ‘எல்லோரும் எதிர்க்கிறார்கள் குடும்பத்தில். என்னால் ஒன்றும் செய்ய இயலாது நானா’ என்று படு துணிச்சலாக பதில் எழுதிவிட்டான்!

மாப்பிள்ளையும் குடும்பமும் இந்தப் பெண்தான் வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லவைக்க சர்க்காரால் இயலாதா? பேசப்படும் மாப்பிள்ளையும் சர்க்காரின் ‘செட்டு பிள்ளை’யாக இருந்தால்? நன்மை யாருக்கு செய்வது?! சர்க்காருக்கு குழப்பம் வராதா?

சர்க்கார் எல்லோருடைய குழப்பத்தையும் இந்த முறை போக்கிவிட்டார்கள். செவுனையையும்…

சேத்தபொண்ணின் மாமனார் பூவூர்மாமா… எப்படி சிக்கல் இல்லாமல் – இந்தப் பெண்தான் தன் கடைசி மருமகள் என்று – துணிந்து நின்றார்கள்! அவர் ஒரு தேர்ந்த வியாபாரி. நாக்கூரில் 63 வருடங்களாக கொடிகட்டிப் பறக்கிற ஒரு கடைக்கு சொந்தக்காரர். பெரியகடைத்தெருவில் நின்றுகொண்டு குஞ்சாலி மாலிமார் தெரு வழியாகப் பார்த்தால் நேராக சியாந்தெருவில் அவர் வீடுதான் தெரியும். இப்போது மனசுக்குள் கடையைப் பார்த்துகொண்டிருந்தாலும் பூவூர்மாமா வாயிற்படியில் நின்றுகொண்டே கடைத்தெருவையே பார்த்து விடுவார்கள். எளிமை, கணக்கற்ற பிள்ளைகளிருந்தும் கணக்கான வாழ்க்கை. கணக்கை மாப்பிள்ளைக்கு விட்டுக் கொடுப்பதில் மட்டும் – எந்தப்பகுதி , எப்படி, எப்போது எழுதிக்கொடுப்பீர்கள் என்பதில் – பிடிவாதமாக நின்றார். போனவருடம் டிசம்பர் 1ஆம் தேதி முடிவு பண்ணும் தினத்தன்று – சர்க்கார் சொன்ன தேதி – எப்படி குழந்தையாய் , மைத்துனர் முத்துவாப்பா போட்ட நாலைந்து கோடுகளில் வீட்டை சரிகண்டார் என்பது புதிர். அன்று பகல் மாமா தூங்கவே இல்லை என்று சர்க்காரின் மருமகன் சொன்னார். புதிருக்கு விடை புலப்பட்டது. ‘ஆம்பளை இல்லாத வீடு..யாராச்சும் கலாட்டா பண்ணுவாஹா.. எதா இருந்தாலும் என்னெட்ட சொல்லுங்க’ என்று வீடு வந்து பூவூர் மாமாவும் சொல்லிவிட்டுப் போனார்களாம் தைரியம் – கும்பகரத்தூர் செவுனை புகழ்காரர்கள் சேத்தபொண்ணின் கடிதங்களைக் கொண்டுவந்து காட்டி , குலைத்துவிட முயற்சித்துவிட்டுப் போனபோது. ‘இருந்தாலும் பொண்ணுட்ட எழுதி வாங்கி வச்சிக்கிட்டா..கும்பகரத்தூர் ஜமாஅத்திடம் சொல்லி கொஞ்சம் தட்டி வைக்கலாம்’ என்று யோசனை கொடுத்து, சேத்தபொண்ணுவிடம் எழுதியும் வாங்கிவிட்டார்கள். அதற்கு முன்பே நாமே சொல்லிவிடலாமா அவர்களிடம் என்று சர்க்காரிடம் கேட்டோம். சேத்தபொண்ணுதான் கேட்கச் சொன்னது. ‘சேத்தபொண்ணுக்கு பாரபைத்தியமா? ஒரு தடவ சுவத்துல முட்டுனா மறுபடியும் சுவத்துலதான் முட்டிக்கனும்டு இக்கிதா? நான் பாத்துக்குறேன்..பேசாம இக்கெச் சொல்லுங்க’ என்றார்கள் சர்க்கார். இதில் துணைவி அஸ்மாவின் பங்கு மறக்க முடியாதது. அலையாய் அலைந்திருக்கிறாள் சர்க்காரிடம். ஆணாய் நின்று குடும்பப் பெரியவர்களை ஒன்று கூட்டி பூவூர்மாமா முன் சேத்தபொண்ணின் சம்மதத்தை வாய்வழியாக, எழுத்து வழியாக, வாங்கித் தந்தவள் அவள்தான். பாவம் இன்று காலை என் ஃபோனை மிகவும் எதிர்பார்த்திருப்பாள். நான் இன்று Exit-இல் ஊர்போன நண்பர் நஸ்ருதீனிடம் அவசரமாக கடிதம் எழுதி அனுப்பினேன். ஃபோன் கிடைக்காத விபரம் எழுதி, உன் முயற்சிகளுக்கு என் முத்தங்கள்’ என்ற முடிவுடன். அஸ்மாவை முத்தமிட்டுத்தான் எவ்வளவு நாளாகிறது.. என் அஸ்மா… கல்யாண கேஸட்டை அனுப்பு. உன்னையும் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்கிறேன்..அப்படியே கல்யாணத்தையும். Astral Bodyயோடு பார்த்தது பத்தாது!

சரியாக எதிர்வீட்டு பயில்வான் புர்ஹானும் வந்துவிட்டார் ஊருக்கு, கல்யாண சமயத்தில். மாப்பிள்ளை பேசியது அவர்தான். இளைய மைத்துனரின் நெருங்கிய கூட்டாளி வேறு. சௌதி போனார். வேலை பிடிக்கவில்லை என்று வந்துவிட்டார். அவர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், எதுவும் அசம்பாவிதங்கள் நடந்தாலும் சமாளிக்கும் வலிமை உள்ளவர் என்று நினைத்ததுண்டு நான்! கல்யாணத்தன்று குண்டை கட்டிக்கொண்டு வீட்டில் குதிப்பேன் என்று சொல்லிக்கொண்டு அலைந்ததே அந்த கும்பகரத்தூர் பைத்தியம்!

கல்யாணத் தேதிதான் எப்படியோ இருந்தது. 10 ஆ? சேத்தபொண்ணு ஒத்துவருமா என்று கேட்டது என் அரைகுறை எண் கணித ஜோதிடம். தேதி குறித்தது சர்க்கார்தான் என்று அஸ்மா சொன்னதும் ‘கப்சிப்’ என்றானேன். இது அரபி நியூமராலஜி!

பூவூர் மாமா சரி, என்னதான் வாப்பா பேச்சை தட்டாத பிள்ளையென்றாலும் மாப்பிள்ளை எப்படி ஒத்துக்கொண்டார்? மஸ்கட்டிலிருந்து அவர் ஊர் போகும்போது துபாய் வழியாகத்தான் வருவதாக இருந்தது. அவர் மாமா பிஸ்தாமரைக்கார் இங்கிருக்கிறார். இருவரிடம் சொல்லிவிடலாமா முன்கூட்டியே என்று யோசனை வந்தது. ஆனால் சர்க்கார் சொல்லத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்களே.. மாப்பிள்ளை காசிம்  ஏதோ காரணத்தால் துபாய் வழியாக வரவில்லை. ஊர் சென்ற அவர் மாமா பிஸ்தாமரைக்கார் , அங்கே தன் பாட்டனார் பூவூர்மாமா மூலம் விஷயங்களைக் கேள்விப்பட்டு , காசிமிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி, இந்தக் கல்யாணத்தை கலைத்துவிடுவதில் தீவிரமாக நின்ற டோலக்மியான் குடும்பத்தை எதிர்த்து நிற்க வைத்திருக்கிறார். டோலக்மியான் உயர்வான மனிதர்தான். ஆனால் அவரது பெண்பிள்ளைகள் அவரை மீறிக்கொண்டு புதுப்புது நடையைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் தூரத்து சொந்தக்காரர்கள் வேறு. ஒருவேளை அதனால்தானோ? ‘இது எங்களுக்கு உள்ள பிரச்சனை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று பூவூர்மாமாவும் , மாப்பிள்ளை காசிமும் சொல்லிவிட்டார்களாம். சர்க்கார் வீட்டிற்கு அந்தப் பெண் பிள்ளைகளும் ஓதிப்பார்க்க வருபவர்கள்தான். சர்க்காருக்கு’ இது தெரியுமா? அவர்கள் எல்லோரிடமும் ரஹ்மானியத்’ இருக்கிறது என்று அதை மட்டும் பார்ப்பவர்கள். அந்தப் பெண்பிள்ளைகளை – சொந்தம் என்பதற்காக – அஸ்மாவும் கல்யாணத்திற்கு அழைத்திருக்க வேண்டும். ஒரு கதை ஞாபகம் வருகிறது.. ஜோல்பேட் ஹஜ்ரத் சொன்னதாக அவர்களின் சீடர் ஃபரீது சொன்னார்.

பசுமாட்டை ஒருவன் காணாமலடித்து விடுகிறான். கையில் ஒரு விளக்குடன் அதைத் தேடிப் புறப்படுகிறான். காட்டில் நுழைந்து விடுகிறான். எங்கும் கிடைக்காமல் இருட்டாகி விடுகிறது, விளக்கோ உசிரை விடப் பார்க்கிறது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் அதைக் கண்டுபிடித்து விடுகிறான். அன்பாக அதன் தலையைத் தடவியவாறு , ‘உனக்கு என்ன குறை வைத்தேன்? வெயிலில் நின்றால் நிழலில் கட்டுகிறேன், மழையில் நனையக் கூடாதென்று கூரை போட்டுக் கொடுத்திருக்கிறேன். வேளாவேளைக்கு தீனியும் கொடுத்துவிடுகிறேன். என் மேல் என்ன கோபம்? இப்படி செய்யலாமா?’ என்று இருட்டில் அதனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். பொழுது புலர்ந்து விடுகிறது. வெளிச்சம் வந்தவுடன்தான் தெரிகிறது, அது மாடல்ல, சிங்கம்!

ஃபரீது இப்போது யார் தலையைத் தடவிக் கொண்டிருக்கிறார் என்று யோசனை வந்தாலும் ஆண்டவனிடம் விளையாடக் கூடாது என்ற கருத்தில் அவரது ஹஜ்ரத் சொல்லியதை உணர்ந்தேன். சொந்தங்களில் எது மாடு, எது சிங்கம், எது பன்றி என்று விளங்கத்தான் இல்லை. மாப்பிள்ளை காசிமுக்கு விளங்கியிருக்க வேண்டும்..

*

13.04.1996

இன்று காலை ஊரிலிருந்து ஃபோன் . மைத்துனர் முத்துவாப்பா! இன்று வந்து இறங்கியதைச் சொல்லவா? அல்லவாம். கல்யாணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பே வந்துவிட்டாராம். எல்லாம் சிறப்பாக முடிந்ததென்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். சேத்தபொண்ணின் கல்யாணத்தை விட முத்துவாப்பாவின் ஃபோன்தான் ஆச்சரியம். துபாய் புறப்படும்போது , அன்று காலை உம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது சாப்பாட்டுப் பேச்சு வந்தது. இந்தமுறை எல்லாவற்றையும் தின்றாகி விட்டது ஆசைப்பட்டதெல்லாம். ‘புடி’, றால் கொலக்கட்டை, இறைச்சிப் புராட்டா, தொதல்… ஆனால் இந்தப் ‘போனவம்’தான் சாப்பிடத்தான் முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ‘ஓட்டுமாவு’ கூட சாப்பிட்டாகி விட்டது. ‘போனவமா?, இப்பல்லாம் எங்கெ வாப்பா செய்யிறாஹா? காசுக்கு செஞ்சி கொடுக்குறஹலுக்கும் இப்ப அதுலாம் செய்யத் தெரியாது. நாங்களுவ பாத்தே ரொம்ப நாளாவுது!’ என்றார்கள் உம்மா.

அப்போதுதான் சிறியபாட்டியா முத்தாச்சி வீட்டில் நுழைந்தார்கள். ‘நாலு நாளைக்கு முன்னாலே ஒரு மனுசர் கொண்டு வந்து கொடுத்தாஹா. நான் ஃப்ரிஜ்லெ வச்சிக்கிறேன் ஒரு துண்டு. பாரு, இவனுக்குண்டே இந்திக்கிது!’ என்று சொல்லிக்கொண்டே எடுத்துக் கொடுத்தார்கள். கொடுத்தது யார்? சர்க்காரா நானா? சிறிய பொருளிலிருந்து இப்போது முத்துவாப்பா ஃபோன் வரை வந்திருக்கிறது..!

*

ஃ·பரீது அக்கவுண்டண்ட்தான். போலி டிகிரியாக இருந்தால் என்ன? வேலையும், கிரிமினலாக கணக்கு பார்க்கும், சொல்லும் வழிகள் தெரிகிறதே! அவர் கொழுந்தியாளுக்கும் இரு வாரங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்தது. அதை அறியாமல் மறந்துவிட்டு நாளை நடக்கவிருக்கிற, மஸ்தான் மரைக்கான் கொழுந்தியாளின் கல்யாணத்திற்காக இங்கே துபாயில் அவனை விருந்து தரச் சொன்னார்.

‘ஓய்..என்னையும்ல மாட்டி விடுறியும்! நீம்பரு மாட்டிக்கிடுவியும். காசு இல்லேண்டா கூட கடன் கொடுத்து விருந்து தரச் சொல்லுவான் அவன் – ‘அலாகைஃபக்’ ரெஸ்டாரண்ட்லெ’ என்று எச்சரித்தேன்.

மஸ்தான் மரைக்கான் சமாளித்தான். ‘தம்பி.. ஆபிதீன்ற சகலப்பாடி மஸ்கட். உம்பர்ட சகலப்பாடி அமெரிக்கா. என் சகலப்பாடி ஊர்லெயே வேலை இல்லாம இக்கிறவரு. நாங்க எப்படி கொடுப்போம்?’

‘அப்போ அத்தனை ‘தாக்கத்’ இக்கிது உம்ம மாமனார்ட்டெ. அப்படி இக்கிறவரு தாராளமா கொடுக்கலாமே!’ – நான்

ஃபரீது ஒரு புரட்டி புரட்டினார்: ‘ஆபிதீன், அதெ உடும், அமெரிக்காகாரன் ஒரு மாசம் போடுவான். மஸ்கட்காரன் மிஞ்சி மிஞ்சிப்போனா ரெண்டுமாசம் போடுவான். ஊருலேயே இக்கிறவன் போட்டுக்கிட்டே…இக்கெலாமே. இதுக்கே விருந்து கொடுக்கனுமே!’

மஸ்தான் மரைக்கான் அசந்து போய் குப்புறப் படுத்துக் கொண்டான்!

கோழி தீவனத்தை வாங்கிப்போன ஈரானி வாடிக்கையாளன் ஒருத்தன் அடுத்தவாரம் வந்து என் கம்பெனி அக்கவுண்டண்ட்டிடம் , ‘பெஹ்லே அச்சா சல்தாத்தா.. அபி தேடா ஹோகயா!’ (நன்றாக முதலில் நடநது இப்போது நொண்டுகிறது) என்று விக்கிவிக்கி – நொண்டி மாதிரியே – நடந்து காட்டினான். ‘மத்லப், மோட்டா ஹோகயா. ஹமாரா மால் பஹூத் தாக்கத் வாலா ச்சீஸ் ஹை’ (அதாவது, கோழிலாம் குண்டாயிடிச்சி.. எங்க சரக்கு அப்படிப்பா!) என்று போட்டார் ஒரு போடு. வில்லங்கமானவர்கள் கணக்காளர்கள். தலை சுற்றவிடும் ‘லாஜிக்’ஐ சுழன்று வருபவர்களாதலால் எதிலும் குறையும் நிறையும் சொல்ல முடியும்- தன் குறை எது என்று தெரியாமல் போனாலும். என் மாற்றத்தை ஃபரீதுதான் ஆச்சரியப்பட்டு சொன்னார். ‘பயங்கரமான மாத்தம்ங்கனி, இந்த தடவை நீம்பரு ஊருக்கு பொய்ட்டு வந்ததுலேர்ந்து..’

‘அப்படியா?’

‘நான் கவனிச்சிட்டுதான் வர்றேன். ரொம்ப ரிலாக்ஸ்டா , அதே சமயத்துலெ பெர்ஃபெக்டா பேசுறியும்’

‘உம்மை பேயன்டு சொன்னேனே, அதைச் சொல்றியுமா?’

‘இதானே வாணாங்குறது. பயங்கரமான சகிப்புத்தன்மை வந்துடுச்சி இப்போ உமக்கு’

‘உதாரணமா?’ – அவருடன் பழகிவருவதை சொல்லப் போகிறாரோ?

‘அன்னக்கி வழக்கமான ரூட்லெ வராம, வேன்-ஐ ரஷீதியா பக்கம் ஓட்டச் சொல்லி, ஒத்தரு இழுத்தடிச்சதுனாலே மூணுமணி நேரம் டிராஃபிக் ஜாம்லெ மாட்டி , சாப்புடறதுக்கு வந்தியும் – பகல் மூணே முக்காலுக்கு’

‘ஆமா’

‘ரொம்ப ‘கூலா’ இந்தியும். சுவாரஸ்யமா அந்த நிலையை வேடிக்கை பார்த்ததா சொன்னியும். வேன்லெ உள்ள மத்த கம்பெனிக்காரன்லாம் கொதிச்சி சண்டை போட்டுக்கிட்டு இந்தாண்டு சொன்னியும். பொறுமை!’

இது பொறுமையல்ல ஃபரீது என்று முணுமுணுத்தேன். ஆனால் பொறுமையாய் கேட்டுக் கொண்டேன். சர்க்காருக்கு மனதார நன்றி சொன்னேன். Everyday and in every way I am growing better and better..நான் வளர வேண்டும். மேலே வர வேண்டும். அதற்குரிய பயிற்சிதான் இது. சர்க்கார் சொன்னது.. Emotional Bodyயின் ஆளுமையிலேயே கிடந்து அவதிப்பட்டது போதும்…நான் வளர வேண்டும்.

*

14.04.1996

பகல் ‘தேரா’விலிருந்து புறப்படும்போது அறையில் இருப்பவர்கள் பொருட்களை அலட்சியமாக வைத்திருந்த கோலத்தைக் கண்டு உள்ளூர நகைத்துவிட்டு பயங்கர உஷாருடன் என் பொருட்கள் சரியாக இருக்கின்றனவா , எடுக்க வேண்டியதை (Hot pack, பர்ஸ் – அதில் ‘அக்காமா’ எனப்படும் ID Card, பேனா) எடுத்துக்கொண்டு விட்டேனா என்று செக் பண்ணிக்கொண்டு அவீருக்கு வந்து , என் அறைக்கதவை திறக்கப் பார்த்தால்….சாவி! டூப்ளிகேட் அறைசாவியையும் அறையிலேயே வைத்து விட்டிருந்தேன். இத்தனை பயிற்சிக்குப் பின்பும் இப்படியென்றால் இவைகள் இல்லாமலிருந்தால் பேண்ட்-ஐ போடாமல் வருவேனோ என்னமோ! இரவு திரும்பி ‘தேரா’ போய் சாவியை எடுத்துதான ஆகவேண்டும். அங்கு படுக்கவும் இயலாது. மூட்டைப்பூச்சி மருந்து வைத்து மூன்று மாதமாகிவிட்டது அங்கு. ‘மஸ்தான் மரைக்கார்.. நேத்து உங்க ரூம்லெ பாச்சை பெரிசுக்கு ஒரு மூட்டைப்பூச்சியை பார்த்தேன்’ என்று நேற்று சொன்ன பூவூர் மாமா பேரனுக்கு , ‘ஹும்.. தவக்களை பெருசுலாம் இக்கிது.. இதைப்போயி சொல்ல வந்துட்டீங்களே!’ என்றான் அவன். அரிப்பின் பயம் மட்டுமில்லை, என் தவறை சரி பண்ணியாக வேண்டும் உடனே. இதனால் அலைச்சலும், திரும்பிவர டாக்ஸிக்கு செலவும் ஆகும். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் உறைக்கும் என்று கிளம்பிப்போனேன். பட்டான் டிரைவர் மக்பூல்கானிடம் சொன்னேன். ‘தேரா’வில் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு அவன் ‘சத்வா’ வந்துதான் ஆகவேண்டும் – பர்துபாய் கடந்து. ‘என்னை ‘தேரா’வில் இறக்கி விடு, காத்திரு, ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன், வரும்போது பர்துபாய் டாக்ஸி ஸ்டாண்டில் இறக்கிவிடு, நான் டாக்ஸியில் வந்து கொள்கிறேன்’. பட்டான் வெறியுடன் முணுமுணுத்தான். அவன் காலையில் 7 மணிக்கு வண்டி எடுப்பவன். எப்படியும் இரவு ஒன்பதரை மணியாகிவிடுகிறது. பகலும் கால்மணி நேரம்தான் ஓய்வுகிடைக்கிறது. அவன் அல்ல. அவர். ஆஜானுபாகுவான, பட்டான்களுக்கே உரிய முரட்டு உடம்பு, பேச்சு. ‘நீ இன்ஸானா (மனுஷனா) பட்டானா? என்று கேட்டால் அவன் ‘ஹம் பட்டான்ஹை’ என்றுதான் சொல்வான் என்பார் பஞ்சாபி அக்கவுண்டண்ட் கிண்டலாக. நான் சாவியை எடுத்துக்கொண்டு , ஆசைக்கு இரண்டு தோசைகளும் வாங்கிக்கொண்டு (ஒரு ரூபாயில் பசியாறி விடலாம் – ‘தேரா’வில்!) மக்பூல் வண்டியில் வந்தேன். வண்டி ஹையாத் ரீஜன்ஸியில் திரும்பி ‘டன்னல்’ வழியாக நுழையாமல் எந்த ரூட்டில் போகிறது? பர்துபாய்க்கு ஏன் இப்படி சுற்றுகிறாய் என்று கேட்டேன். மக்தும் பாலத்தில் ஏறி நேரேயும் போகமாட்டேன் என்கிறதே..’உஷ்..’ என்றார் அதட்டலாக. பகல்நேரமே பட்டானிடம் பயந்துதான் பழக வேண்டும், அதாவது சூத்தாமட்டையை பொத்திக்கொண்டு என்பார்கள். இது இரவு நேரம்.. மக்பூல்கான் தன் மகா பூலுக்கு வேலை தரப்போகிறாரா? மூணு வருடமாக ஊருக்கே போகவில்லை அவர்.. Wafi Commercial Centre வந்தபிறகுதான் எனக்கு தெரிந்தது. அவீரில் என்னை விடப்போகிறார்! வரும்போது ஒருகணம் நினைத்தேன்தான் நான். ஆனால் பாவம் இவருக்கு கஷ்டம் என்று சொல்லாமல் அடக்கிக் கொண்டேன். ஆனால் நினைத்த நினைப்பு அவரை ஆபிதீனுக்கு உதவ வைத்திருக்கிறது. ‘உனக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவுவேன் என் சகோதரனே’ என்று வேறு 40 கி.மீ சொல்லிவிட்டுப் போனார். தினமும் கூட சாவி தொலைக்கலாம்தான்!

தோசை அற்புதமாக இருந்தது. இரண்டு நாளாக, ‘என்ன ஒரே தந்துரொட்டியும், குப்ஸூம்..இரவு தோசை சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று கூட ஆசைப்பட்டிருக்கிறேன்!. மக்பூல்கான் வெளி விசாக்காரர். இவருக்கு விடுமுறையில் போகும்போது இரண்டு மாச லீவ் சம்பளம் கிடைக்காது. ஆனால் அக்கவுண்டட்டிடம் சொல்லி வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று நினைப்பு இப்போது.

மக்பூலுக்கு சர்க்கார் யார்? ஆனாலும் தேவைகள் உள்ள இருவரையும் சந்திக்க வைக்கிற – பரஸ்பரம் உதவிக்கொள்ள வைக்கிற – விஷயம் எது? சர்க்காரிடம்தான் கேட்க வேண்டும்.

கொடி அசைந்தும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா?

*

29-06.10.95 கேஸட்டிலிருந்து:

‘வண்டி சக்கரத்தை நாங்க கவனிச்சிருக்க முடியும்டு எப்படி உங்களுக்கு தோணிச்சிண்டு கேட்டே, இல்லையா ரவூஃப்? காரணமும் காமிச்சே! முழிச்ச உடனே குளிக்க வேண்டியிக்கிது, பசியாற வேண்டியிக்கிது, காலேஜூக்கு
போக வேண்டியிக்கிது.. இப்படி.. We have no time at allங்குற மீனிங்லெ. ‘நான் அதுக்கு என்ன பதில் சொன்னேன்?’ – ‘S’

‘leisurely டயத்துலே.’

‘கரெக்ட். ஆனா ரொம்ப கரெக்ட் அல்ல. உலக சாதனைகள் பூரா leisurely டயத்துலெதான் உற்பத்தி ஆகுது. உலகத்து அட்டூழியங்களும் அங்கெதான் உற்பத்தியாகுது. அதனாலெதான் வேலை இல்லாதவங்கள்ற இதயம்
ஷைத்தான்ற தொழிற்சாலைங்குறது. Working Hours- Bread Winning, Sleeping Hours – to refresh our mind & Body and everything… அப்போ leisurely டயத்துலெதான் ஆக்கபூர்வமான, அழிவுபூர்வமான சிந்தனைகள் எல்லாம். சரி, இந்த மூணு டைம்லெ எது முக்கியமானது?’

‘leisurely டயம்தான்’

‘அதுதான் ஏன்?’

‘ஏண்டா, அதுதான் most constructive & destructive’

‘ரெண்டும் சேர்ந்து வந்தா equal ஆயிடுமே!’

‘… ….’

‘leisurely டயத்துலெ நீங்க ஆழமா, அழுத்தமா, தன்னை மறந்து எண்ணுன எண்ணம், leisurely டயத்த அடுத்து வரக்கூடிய sleeping or working hourலெ ‘continue’ ஆகும் – unconsiously or subconsciously. கண் அசரும்போது எந்த நெனைப்பு இந்திச்சோ முழிக்கும்போதும் அந்த நெனைப்பு இக்கெனும். நான் என்ன சொல்றேன், leisurely டயத்துலெ ஆக்கபூர்வமான சிந்தனை பண்ணுனா தூக்கத்தை கடந்தும் இருக்கனும். இப்படி ஆழமா பாக்குற பக்குவத்தை உண்டாக்கிட்டா வண்டி சக்கரம் fraction of secondதான்! எந்த அறிவை பெத்துக்கறதுக்கும் டைம் செலவு பண்ண வேண்டியதில்லே. நீங்க செலவு பண்ண வேண்டிய ஒரே நேரம் பயிற்சி பண்ணுறதுதான். பெர்ஃபெக்டா பண்ணனும். செகண்ட்லெ நூத்துலெ ஒரு பங்கு பாத்த உடனேயே ‘டக்’குண்டு தெரிஞ்சிடும்!’ – ‘S’

*

‘பயிற்சியை ஸ்பீட்-அப் பண்ணுறதுக்காகத்தான் நான் பேசிக்கிட்டிக்கிறேன். பேச்சு நிண்டா பயிற்சி நிண்டுடும். ஏன் அப்படி சொல்லனும் நான்?எதுக்கு பேசிக்கிட்டிக்கிறேன்? எங்கே, சொல்லுங்க பார்க்கலாம்’ – ‘S’

‘பேச்சுதான் உசிரு – பிராக்டிஸுக்கு’ – ரவூஃப்

‘சரி தம்பி.. இந்த பேச்சு பிராக்டிஸுக்கு தெம்பு கொடுக்குது. இதோட end result என்ன வரும்?’

‘எதோட end result?’

‘உதாரணம் சொல்றேன், இந்த ரியாலத்துலாம் பண்ணுறீங்கள்ளெ? இப்ப டைப்ரைட்டர் தூக்கி வைக்குறது, ரிப்பன் சரியா இக்கிதாண்டு பாக்குறது, பேப்பரை சொருவுறது, அவுட்புட் சரியா வர்ற மாதிரி பேப்பரை கரெக்டா
வைக்கிறது, வச்சிப்புட்டு டைப் பண்ணுறது.. Perfection! அப்ப உன்னெயெ typewriterண்டு சொல்ல முடியுமா? –
‘S’

‘சொல்ல முடியாது. ஏண்டா இப்பதான் learn பண்ணிக்கிட்டிருக்கோம். ஆட்டோமேடிக்கா , இன்னும் cosmic habit force ‘பிக்-அப்’ பண்ணனும்’ – ரவூஃப்

ரவூஃபின் பதிலில் சர்க்கார் சற்று திருப்தி அடைகிறார்கள் , ‘பக்கத்துல வந்துட்டா.. இன்னும் கொஞ்சம் அழுத்திப்புடி! ஒவ்வொரு செயலையும் பழக்கத்துக்கு கொண்டு வராம செய்ய ஆரம்பிச்சிங்கண்டா டைம் பத்தாது
– வாழுறதுக்கு. இப்ப நான் பேசுற பேச்சு பூராவும் – நான் சொல்ற பிரின்ஸிபிள்லெ – Cosmic Habit Force பிக்-அப் பண்ணுறதுக்கு, Thought Force வேலை பண்ணுறதுக்கு, Habit Force உங்களுக்கு ஃபார்ம் ஆவுறதுக்குத்தான். இது வேலை செய்ய ஆரம்பிச்ச உடனே நான் சொன்ன செய்திலாம், சொல்லாத செய்திலாம் – நான் மறைச்ச செய்தி, மறைக்கலாமா வேணாமாண்டு பட்டும் படாம சொன்ன செய்தி, தெளிவா சொல்லி அங்கே ஒரு ‘இக்’ வச்சது – எல்லாமே புரிய ஆரம்பிச்சுடும். அதனாலெ ‘ரியாலத்’ஐ விட இந்தப் பேச்சு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. ஆனா, இந்தப் பேச்சை மட்டும் கேட்டா பத்தாது. அதனாலெதான் simultaneousஆ ரெண்டையும் சேர்த்து கொடுத்துக்கிட்டு வர்றேன்’ – விளக்குகிறார்கள்.

*

‘நாம கண்டு புடிக்கிறோமா (அல்லது) செய்திகள் நெஞ்சிலேர்ந்து பொங்கிக்கிட்டு வருதா? எந்த செயல் தேவையோ அது தானா நெஞ்சுல வந்து பூறும். என்ன, ஜாக்கிரதையா இக்கெனும். அத கேர்ஃபுல்லா கவனிக்கனும். இதுக்காகத்தான் சொன்னேன், ரொம்பக் கெஞ்சிக் கூத்தாடி சொன்னேன், ‘ஜோப்பு’ வச்சுக்குங்க. அதுலெ பேப்பர் வச்சுக்குங்க, பேனா வச்சிக்குங்கண்டு. இப்படி வரக்கூடிய hunches, intutuion ஒரு செகண்ட்லெ மறைஞ்சிடும். fraction of second. மில்லியனில் ஒரு பங்கு கூட இக்கெலாம். அதனாலெ observe பண்ணுற சக்தியை வளர்த்துக்கனும். நீங்க வளர்க்க முடியாது, வளர வுடுங்கண்டு சொல்றேன்! வளர விட்டீங்கண்டா ஆராய்ச்சி பண்ணி கண்டு புடிக்கிறதுலாம் எங்கேயோ பொய்க்கிட்டிக்கிம்போது flash ஆவும்’ – ‘S’.

Movie , தையல் ஊசி கண்டு பிடிக்கப்பட்டது பற்றியும் எடுத்துச் சொல்கிறார்கள். எடிஸனின் ‘பல்ப்’ பற்றியும். Vacumn! ‘ஊசியோட துவாரத்துலெ முன்னாலெ வைக்கனும் , பொத்தலை!’ – ‘S’.

ஆஹா, யுரேகா! நான் குருவைக் கண்டுபிடித்துவிட்டேன்.

(தொடரும்)

குறிப்புகள் :

ஜம் – ஒரு பயிற்சி
இஸ்மு – மந்திரம்
எட்டு ரக்-அத் – எட்டு ரக்-அத் தொழும் பிரிவினர்
ரஹ்மானியத் – நல்லசக்தி
தாக்கத் – வலிமை
ரியாலத் – பயிற்சி
இக் – மறைவான, புதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s