சால்வடார் டாலியின் ஓவியங்கள் – பிரம்மராஜன்

பிரம்மராஜனின் மீட்சி இதழ் 28-இல் இருந்து, நன்றியுடன்..

பெரும் பயப்பதியும், காரண அறிவும் பிணைந்து நம்மை இயக்குகிற இந்த இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் நமக்கு அர்த்தத்தை அளிக்க வேண்டுமானால் அது ஸர்ரியலிஸத்தின் மூலமாகவே அதிகமாய் சாத்தியப்படும். வேறு எந்தவித கோணத்திலும், ஆய்வு முறைமையிலும் பிடிபடாத பல உறுத்தும் உண்மைகள் – ஹிரோஷிமா, வியத்நாம், கம்பூச்சியா, டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், பெர்ஷிங் IIs ஏவுகணைகள்- இவை யாவும் ஸர்ரியலிஸ வெளிப்பாட்டில் நமது பிரக்ஞையில் கச்சிதமாகப் பதிவாகின்றன. ஸர்ரியலிஸ ஓவிய இயக்கத்தில் டாலியின் பங்கு தனித்துவமானது இருபதாம் நூற்றாண்டின் இரட்டை நிகழ்போக்குகளான Sexம், paranoiaவும் டாலியின் உலகத்திலும் நமது உலகத்திலும் ஒரே மாதிரி இயங்குகின்றன. மற்றொரு ஸர்ரியலிஸ ஓவியரான Max Ernst மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் William Burroughs ஆகிய இருவரிடமிருந்தும் டாலி வேறுபடுகிறார். முந்திய இருவரும் தமது தனித்துவ உலகங்களின் நிழல்களில் சமைந்துவிடும்போது டாலி தனது ஓவிய வெளிப்பாடுகளில் இருந்து வெளிப்படுகிறார்.

ஃபிராய்டிஸ யுகத்தின் தாக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்களில் முதன்மையானவர் டாலி. இருபதாம் நூற்றாண்டு ஸ்வயத்தினுடைய (Peyche)வினோத வியாபக உலகினை, தொலைபேசிகள், குழையும் கைக்கடிகாரங்கள், பொறிக்கப்பட்ட முட்டைகள். கடற்கரைகள் போன்ற சாதாரண உலகின் படிமங்களைக் கொண்டு சித்தரிக்கிறார். டாலியின் ஓவியங்களில் நடக்கும் ‘நிகழ்ச்சிகளுக்கும் நமது நடைமுறை யதார்த்தத்தின் நிகழ்ச்சிகளுக்கும் அதிக வேறுபாடில்லை என்று சொல்ல முடியும். டாலியின் ஓவியங்களின் பிரதான குணம் என்று சொல்லப்படக் கூடியது அவற்றின் hallucinatory naturalism of the Renaissance. இதற்கு மேற்பட்டு டாலி புகைப்படத் தன்மையான யதார்த்தத்தையும், குறிப்பிட்ட ஒருவித திரைப்பட வெளிப்பாட்டு முறையையும் உத்திகளாகப் பயன்படுத்துகினர். இந்த உத்திகள், பார்வையாளனை அவனுடைய வசதிக்கு ஏற்ப மிக நெருக்கமாக ஓவியங்களுடன் தொடர்புபடுத்துகின்றன.

பிற ஸர்ரியலிய ஓவியர்களான Max Ernat, Rene Magritte. Tanguy ஆகியோர் சம்பிரதாய விவரணை வெளியைப் (Traditional Narrative Space) பயன்படுத்தினார்கள். இவ் விதமான விவரணை வெளி, ஓவியத்தின் காட்சிப் பொருளை முன்பார்வை கொண்டதாகவும் (Frontal) பொதுப்படுத்தப்பட்ட கால அமைப்பை உடையதாகவும் ஆக்குகிறது. மாறாக டாலி தனது ஓவியங்களை, திரைப்படத்தில் ஒரு Frameலிருந்து மற்றொரு Frameக்கு கடந்து செல்வது மாதிரியான உணர்வைத் தரும்படி ஆக்கியிருக்கிறார். டாலியின் ஓவிய உலகில் நம்மை அமைதியில்லாமல் துன்புறுத்தும் வெளிச்சம், சூரியனைச் சார்ந்தது என்பதை விட மின் ஒளியைச் சார்ந்தது என்பது சரியாக இருக்கும். மேலும் டாலியின் ஓவியங்கள், சென்டிமென்டலிஸத்தைத் தவிர்த்த அழகான நியூஸ் ரீல்களாக நமது மண்டைகளில் தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களின் இயக்கமற்ற Stillகளைப் போலிருக்கின்றன. முழு மனிதனையே தனது சித்திரங்களில் படைக்கும் டாலியின் ஒவிய வளர்ச்சிக் கட்டங்கள் பின்வருமாறு அமைகின்றன.

1.The classic Freudian Phase.
2. The Metamorphic phase. (A Poly-perverse Period) .
3. The Religious Phase.
4. The Nuclear Phase.

1968ம் ஆண்டு டாலி கூறிய வார்த்தைகள் ஒய்வற்று ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன !
“The Specialized Sciences of our times are concentrating on the study of the three constants of life: the Sexual instinct, the sentiment of death, and the anguish of space – time.”
*
மீட்சி முகப்பு அட்டை ஓவியம் : டாலியின் ‘Geopoliticus’ Child Watching the Birth of a New Man. 1943 Reynolds – Morse Collection, Cleveland, Ohio.

*

நன்றி : பிரம்மராஜன்

*

மேலும் :
சால்வடார் டாலி – பிரம்மராஜன் தொகுப்பில் இருந்து…  –  நன்றி : யுவன் பிரபாகரன்

Metamorphosis of Salvador Dali

In Memoriam: Salvador Dali (11 May 1904 – 23 January 1989)

Thanks to : Slideshow Metamorphosis & Sen She