நவம்பர் இருபத்தெட்டு சந்தோஷம்

செல்லமகளுக்கு  பிறந்தநாள் வாழ்த்துகளும் ஆசிகளும்.. எனக்குப் பிடித்த பழைய மினோல்டா கேமராவில் (SR-T101) நான் எடுத்த ஃபோட்டோ இது. (Click here  to enlarge Photo). பார்த்துவிட்டு, ’அப்படியே நீம்பர்தாங்கனி..’ என்றார்கள்  வாப்பா. சவுதியிலிருந்து ‘OneWay’-ல் ஊர் போயிருந்த சமயத்தில் கிடைத்த அவமானங்களை மறக்க மகளின் இந்த முகம்தான் உதவிற்று. சரி, கஷ்டங்களை மறப்போம். என்னைப்போலில்லாமல் நகைச்சுவையாகப் பேசுகிறார்கள் பிள்ளைகள் இருவருமே. சொந்தக்காரர்கள் தோழிகள் எல்லாருக்கும் இம்முறை குவாலிடிஸ்ட்ரீட் சாக்லெட் டின் கொடுக்கப்போவதாக நேற்று சொன்ன மகளிடம் , ‘ரொம்ப செலவாகுமே கண்ணு…’ என்றேன்.  ‘வெறும் டின்தான் வாப்பா. உள்ளே சாக்லெட்லாம் கிடையாது’ என்றது M.Sc.,(Maths). ’துஆ’ செய்யுங்கள் அண்ணன்மார் தம்பிமார்களே! – ஆபிதீன்

அழகின் மகளே பொழியும் நிலவே…

என் செல்லமகள் அனீகா நிலோஃபருக்கு இன்று (28/11/2011) பிறந்த நாள். தடபுடலாக டாம் அண்ட் ஜெர்ரி கச்சேரி நடத்தலாம் இங்கே என்று நினைத்தேன். ஆனால் , எங்கள் வீட்டுப் பொடியன்கள் ஃபஹதும் ராஷீதும் தேர்ந்தெடுத்தது இந்த ஓவியத்தைத்தான். நதீமும் ஓகே சொல்கிறான். ஐந்தாவது படிக்கும்போது அனீகா வரைந்ததாம் (இப்போதும் தன் வாப்பாவை அப்படித்தான் வரைகிறாள்!). வாழ்த்துங்கள். நன்றி.

குறிப்பு : நண்பர் ஹரன்பிரசன்னா சென்றமுறை வாழ்த்தியதிலிருந்து தலைப்பு சுடப்பட்டது.

***

போனஸ் :

உயிர்மை பதிப்பகத்தின் ’சூஃபி கதைகள்’ நூலிலிருந்து (தமிழில் : சஃபி) :

’இளமையாக இருப்பதா அல்லது முதுமையாக இருப்பதா?’ என்ற கேள்வி ஒரு சூஃபியிடம் கேட்கப்பட்டது.

’முதுமையாக இருப்பது, உன் முன்னால் குறைந்த நேரமும் , அதிக தவறுகள் உன் பின்னாலும் இருப்பதைச் சுட்டுகிறது. இந்த நிலை இதற்கு எதிரான நிலையிலிருந்து சிறப்பானதா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உன்னிடம் விட்டுவிடுகிறேன்’ என்று பதில் சொல்லப்பட்டது.

இரண்டு நல்ல செய்திகள்…

முதல் செய்தி , என் சம்பந்தமானது. இன்று என் செல்ல மகளார் அனீகாவின் பிறந்த நாள். வீடு அமர்க்களப்படுகிறது. வாழ்த்து சொல்லிவிட்டு ‘உம்மா என்னா செய்றா’ என்றேன். அனீகாவையும் நான் உம்மா என்றுதான் பிரியம் வழிய அழைப்பேன். அவளுக்கு – நான் சொல்லும் தோரணையை வைத்து – அது தன் உம்மாவைக் குறிக்குமா அல்லது தன்னைக் குறிக்குமா என்று புரியும். வெளியாட்களுக்குத்தான் கொஞ்சம் – கொஞ்சமல்ல , நிறையவே – குழப்பம் வரும்.

‘நெய்சோறு , தாழிச்சா செய்றா வாப்பா’

‘சித்திமா?’

‘கோழி பொறிக்கிறா’

‘பப்புமா?’

‘குப்பத்தா பொறிக்கிறாஹா’

‘நீ என்னா செய்யப்போறா கண்ணு?’

‘சாப்புடுவேன்!’

எப்படி? எம்.எஸ்.ஸி (கணிதம்) இரண்டாம் ஆண்டு படிக்கிற என் செல்ல மகளுக்கு ஒரு பூவை சமர்ப்பிக்கிறேன். இது ரொம்பவும் விசேஷமானது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் – அலுவலகத்தின் கீழேயுள்ள நடைபாதையில் இருந்தது. என் டப்பா டிஜிடல் கேமராவில் (Exif பார்த்து கேமரா மாடல் என்ன என்று பாருங்கள். புத்திசாலித்தனமாக அலைந்து திரிந்து நான் வாங்கிய ஆறாவது நொடியில் 600 திர்ஹம் குறைந்து விட்டது!) ‘க்ளிக்’ செய்தேன். பக்கத்திலிருந்த ரெஸ்டாரண்ட் சென்று ‘ச்சாய்’ குடித்துவிட்டு – இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தால் அந்தப் பூ இல்லை; காணோம்!

யாரோ கொண்டு போயிருக்க வேண்டும். ஏதோ , எனக்காகவே காத்திருந்தது போல இது…! ( ‘எல்லாவற்றின்  தொடக்கமும் அடுத்த வினாடியிலிருந்து அல்ல; அதே வினாடியிலிருந்துதான்’ – ரூமி) அன்றிலிருந்து இந்தப்பூவை பத்திரமாக வைத்திருக்கிறேன் – யாரிடமும் காட்டாமல். இன்று உங்களுக்காக இங்கு தருகிறேன். ஒரிஜினல். அழகுபடுத்த நீங்கள் பிக்னிக்.காம்  செல்லலாம் (அட்டகாசமாக புகைப்படமெடுக்கும் சகோதரர் மோகன்தாஸின் சிபாரிசு) அல்லது , நான் எப்போதும் உபயோகிக்கும் மிக எளிமையான Free Digital Enhance  என்ற குட்டி ப்ரோக்ராமை உபயோகிக்கலாம். உங்கள் இஷ்டம். அமீரகத்தின் புகழ்பெற்ற புகைப்படக்காரர், மறைந்த நூர்அலிக்கு இம்மாதிரி டிஜிடல் கோப்புகள் பிடிக்காது என்பது ஞாபகம் வருகிறது. ஒரிஜினல் என்றால் ஒன்றுதானே இருக்கவேண்டும் என்பது அவர் கட்சி. சரிதானே?

அந்தப் பூ இந்தப் பூ… (பெரிதாக்க க்ளிக் செய்யுங்கள்)

மகளுக்கு வாழ்த்து சொல்லுங்கள். மகளென்ற மலர் இன்று சிரிக்கட்டும்!

இரண்டாவது செய்தி நம் சம்பந்தமானது…

வாய்கொள்ளாத சிரிப்புடன் ஜஃபருல்லா நானா இப்போது தொடர்பு கொண்டார். மகளார் அனீகாவின் பிறந்தநாளுக்காக அவரது ஆசிகளைக் கோரி எஸ்,எம்.எஸ் அனுப்பியிருந்தேனே அதிகாலையில். அதற்காக ஃபோன் செய்கிறாரா? அதற்கு ஏன் இவ்வளவு சிரிப்பு? சந்தோஷம் வழிந்து ஓடுகிறதே.. ஏதேனும் அரசுபதவி கிடைத்துவிட்டதோ? இல்லையே, இதற்கெல்லாம் மகிழ்கிற ஆள் அவரல்லவே..

என்ன நானா, ஒரே சந்தோஷம்?

உம்ம மெஸ்ஸேஜ் கெடச்சிச்சி. சாய்ந்தரம் உம்ம வூட்டுக்கு போவேன் சாக்லெட்டோட. ஆனா இப்ப ஃபோன் பண்ணுனது வேற நல்ல செய்தி சொல்ல. ரொம்ப சந்தோஷமான செய்திங்கனி. ரூமிக்கும் இப்ப சொல்லனும்.. ஹமீதுஜாஃபருக்கு ஃபோன் பண்ணி நீம்பரும் உடனே சொல்லும். ஹா..ஹா.. மியாந்தெரு போன லாத்தா கொஞ்சநேரத்துலெ இங்கெ வந்துடுவா.. அவளும் வுழுந்து வுழுந்து சிரிப்பா.. ஹைய்யோ… அல்லாவே… வவுத்துவலி தாங்கலையே..

சொல்லுங்க நானா.

வூடு வுழுந்துடுச்சி…!

… …… …….

நாம பேசிக்கிட்டிருப்பொம்லே – டிவிக்கு எதுத்தாபோல. அந்த எடம். நான் உக்காந்திருக்கிற நாக்காலிக்கு மேல் போர்ஷன். அப்பதான் எந்திரிச்சி பக்கத்து ரூமுக்கு கொஞ்சம் நவந்தேங்ஙகனி.. தடதடன்னு வுழுந்திச்சி பாரும்.. ஹாஹ்ஹா… ரூமும் நாளைக்கி வுழுந்துடும்..

சே, என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு நானா இதுக்கு?

ஆமாங்கனி.. இன்னமே வூடுகட்ட அல்லா வழிகாட்டுவான்லெ? மழை முடிஞ்சதும் ஆரம்பிச்சிடவேண்டியதுதான், இன்ஷா அல்லாஹ்.

பூவே, என்ன சொல்வது இவரிடம்?

***

ஜஃபருல்லா நானாவின் தொலைபேசி எண் :

0091 9842394119

மகளுக்கு வாழ்த்து சொன்ன மதுமிதா

‘மகள்க்கு’ படத்தில் மஞ்சரி பாடிய ‘முகிலின் மகளே’ பாடலை நேற்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த பாடல்களுள் ஒன்று. அவருக்கு அப்போது ஸ்டேட் அவார்ட் வாங்கிகொடுத்த பாடல் . ‘Anyone can sing the first two lines. But after that, it’s really difficult. It was a challenge and I really worked hard on the song under the guidance of Ramesh Narayan sir. Another favourite song of mine is `Parayaan maranna paribhavam,’ a similar song in `Garshom.’ என்று ‘பறைவார்’ மஞ்சரி.   அட, என்னைப்போலவே இந்த ‘பறயான் மரந்ன’வும் இவருக்கு பிடிக்கிறதே.. !  கேட்கும்போதெல்லாம் அழவைக்கிற இன்னொரு பாடலாயிற்றே அது.  ஹரி ஹரிதான்! சரி,  எனது மகளார் அனீகா நிலோஃபரின் பிறந்த நாளுக்கு கவிதாயினி மதுமிதாஜீயும் நண்பர் ஹரன் பிரசன்னாவும் முன்பு எழுதிய வாழ்த்துகள் ஞாபகம் வந்தது. அதைப் பதிகிறேன். செல்ல மகளாரின் பிறந்தநாள் நவம்பர் 28தான். ஆனால், ‘நதீமுக்கு மட்டும் ரெண்டு பதிவா?’ என்கிற அவரது நேற்றைய கோபத்தை இன்றே தணிப்பது மிக அவசியம். மகளிர்..!

**

முதலில்  – ‘இது ‘முகிலின் மகளே’ பாடலின் மெட்டில் எழுதிய பாடல். பாடலின் மொழிபெயர்ப்பல்ல’ என்று சொல்லும் – மதுமிதா :

உயிரின் உயிரே உருகும் உறவே
கண்ணில் மின்னும் நெஞ்சில் வாழும்
புண்ய தீஞ்சுடரே
உன்னைச் காணாது கண்கள் சோர்ந்து
உள்ளம் கொதிக்க ஜென்மம் வீணே
உயிரின் உயிரே

என்றோ சேர்கையில் பூபாளம் தென்றலாய் இசைமீட்டும்
வந்தே தூவிடும் தூறல்களாய் பூமியும் கரகோஷமிடும்
மாலை நேர மந்த்ரம் தானே மென்னிதழாம் காதல்                    (உயிரின் உயிரே)

வந்தே மனதில் ஒரு கனவாய் தந்திடும் உருவம் தோற்றம்
காணும் கண்ணில் மதன காவியம் தேடி வந்த தருணத்தே
சேரவந்தேன் வேர்த்தேஓடி நீவியணைத்தாய் பூஞ்சொர்க்கம்       (உயிரின் உயிரே)

***

இப்போது ஹரன்பிரசன்னா . ‘ஆபிதீன், எனது முயற்சி! யார் எந்த நாட்டில் மாட்டிக்கொண்டாலும் பரவாயில்லை.
இந்தப் பாடலைப் படித்துவிடுங்கள். 🙂 உங்கள் மகளுக்கு வாழ்த்துகள். இதை எழுத 45 நிமிடங்கள் ஆனது. பாடலை 6 முறை கேட்டேன். (எக்ஸெலெண்ட் சாங்.) முதல் நான்கு வரியிலேயே ஒரு பிடி கிடைத்துவிட்டது. அப்புறம் படபடவென தட்டிவிட்டேன். எங்காவது சந்தம் தப்பினால், ஸாரி, அது பாடகரின் குறை. நான் எழுதியது சரியாகத்தான் இருக்கமுடியும். 😛 அப்படியும் சரியாக வரவில்லையென்றால்  இடையில் மானே தேனேல்லாம் போட்டுப்பார்க்கவும்’ என்றார் பிரசன்னா!

அழகின் மகளே
பொழியும் நிலவே
கண்ணினுள்ளே வந்து வாழும்
தாயின் பெண்ணுருவே
உன்னைக் காண
அள்ளிச் சேர்க்க
நெஞ்சு தவிக்க
கண்ணினுள்ளே அழகின் மகளே

உந்தன் பார்வையில் வானெங்கும் மேகமாய் பூத்திருக்கும்
உந்தன் வார்த்தையில் பூவெல்லாம் மாலையாய் கோர்த்திருக்கும்
அந்திநேரம் மஞ்சள் வானம்
உன்னைக்கண்டே நீர்தெளிக்க (அழகின்)

உந்தன் சிரிப்பை பூமியிலே சோலை வந்து பார்த்திருக்கும்
எந்தன் வாழ்க்கைப் பாதையிலே சொர்க்கம் வந்து காத்திருக்கும்
வானவில்லின் நிறங்களெல்லாம்
உன்னைக்கண்டே பூவிறைக்க  (அழகின்)

 **

நன்றி : மதுமிதா, பிரசன்னா , ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமம்