எஸ்.ரா தேர்வு செய்த 100 தமிழ்ச் சிறுகதைகள் இலவசம் (pdf)

SRamakrishnan-Barathirajaநண்பர் எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்ட தமிழின் சிறந்த நூறு சிறுகதைகளை ஒரு பைத்தியம் போல நாலைந்து வருடமாக தேடிஅலைந்து , கிடைத்ததை உடனே தட்டச்சு செய்து இணையத்தில் பகிர்ந்த எங்கள் சென்ஷிக்கு ஒரு நன்றியும் சொல்லாமல் 650 ரூபாய்க்கு புத்தகம் போட்டு விற்க முனைகிற சிலரின் அராஜகத்தைக் கண்டித்து pdf கோப்புகளை இங்கே இணைக்கிறேன். இதிலுள்ள எல்லா கதைகளும் அழியாச் சுடர்கள் தளத்திலும் தனித்தனியாகக் கிடைத்தாலும் ஒன்றாக pdfல் கிடைப்பது அநேகமாக இங்கேதான் (இனிமேல் எங்கும் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்!) . ஒரு கிலோ  புத்தகமெல்லாம் தூக்கி அக்குளில் வைத்துக்கொண்டு சிரமப்படாமல் ஒரு மில்லிகிராம் pdfஐ எளிதாக தரவிறக்கி சேமியுங்கள். ஏன், படிக்கவும் செய்யலாம். சென்ஷி எங்கு தேடியும் கிடைக்காத சார்வாகனின் ‘கனவுக்கதை’, எஸ்,பொ’வின் ‘ஆண்மை’, செழியனின் ‘ஹார்மோனியம்’ கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ (சிறுகதை)போன்றவையெல்லாம் ஆபிதீன் பக்கங்களில்தான் முதன்முதலில் வெளியானது. இங்கிருந்து சுட்டு இணையத்தில் ‘தொகுப்புகள்’ போட்டவர்களும் நன்றி சொல்ல மறந்தது ஏனென்று தெரியவில்லை. இருக்கட்டும் அதற்கு ஒரு கதை இருக்கு.  ‘இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன’ என்று எஸ்.ரா சொல்லியிருப்பதில் அது சேரட்டும். ஒரு விஷயம். pdf லிஸ்டில் ஏதோ ஒரு கதை கூடவந்து 101ஆகிவிட்டது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சார்ஜா கஞ்சா பாக்கெட் இலவசம்! – ஆபிதீன்

Download :

எஸ். ரா  தேர்வு செய்த  சிறுகதைகள் (1 to 50)

எஸ். ரா  தேர்வு செய்த  சிறுகதைகள் (51 to 100)

***

நன்றி : எஸ். ராமகிருஷ்ணன், சென்ஷி, பண்புடன் குழுமம், யெஸ். பாலபாரதி

***

+

அப்படியே நேஷனல் புக் டிரஸ் வெளியிட்ட 22 நாவல்களையும் அள்ளுங்க! ஜெய் ஜென்ஷி!

ஈராக்கும் எஸ். ராமகிருஷ்ணனும்

‘அல்ஃப் லைலா வ லைலா’ (ஆயிரத்தொரு அராபிய இரவு) சிறப்பிதழாக வெளிவந்த அட்சரம் – செப்.2003 இதழிலிருந்து. தலையங்கத்தில் , ‘ஷெஹர்ஜாத’ என்பதை ‘ஷீரஷாத்’ என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டதை மட்டும் இங்கே மாற்றியிருக்கிறேன் (எஸ்.எஸ். மாரிசாமி எழுதிய ‘அரபுக் கதைகள்’-இல் ‘ஷாஜரத்’ என்றிருக்கிறது. தமிழ் விக்கியோ ‘ஷஹர்சாடே’ என்கிறது சாடையாக ! ).  شهرزاده’ (ஷெஹர்ஜாத) என்றுதான் சொல்லவேண்டுமாம். பிடிவாதம் செய்கிறான் என் ‘மிஸிரி’ நண்பன். ‘மாப்ளா கிளர்ச்சி’ பற்றிய பதிவில் நான் குறிப்பிட்ட ‘ஷெஹர்ஜாத்’ என்பதும் தவறாம்.  எஸ்.ரா பொறுத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன்.

எனது 200வது பதிவு இது. எந்தப் பதிவும் போடாதிருந்தால் அன்று அதிகம் பேர் வந்து பார்க்கிறார்கள்!

*

ஷெஹர்ஜாத கதை சொல்வதை நிறுத்தி விட்டாள்

எஸ். ராமகிருஷ்ணன்

பற்றி எரியும் எண்ணெய் கிணறுகளின் புகைநடுவில் நின்றபடி தன் ஊரை திரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறாள் ஷெஹர்ஜாத. ஆயிரத்து ஒரு கதை சொல்லியபிறகும் தீராத பாக்தாத் நகரின் புராதன தெருக்களை ஏவுகணைகள் இன்று தரை மட்டமாக்கி விட்டன. தொல்சுவடுகளும் ஓவியங்களும் சித்திர எழுத்துக்களும் அராபியக்கதைகளும் நிறைந்திருந்த பாக்தாத் மியூசியம் குண்டு வீச்சில் எரிகிறது. வார்த்தைகளின் மீது நெருப்பு பற்றி எரியும்போது எலும்பு முறிவது போன்று சப்தம் எழுகிறது. ஆயிரம் ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட நினைவுகள் ஒரு நாளில் அழித்தொழிக்கப்பட்டு விட்டன. உலகம் ஒரு வதையின் கூடம் என்ற வாசகம் நகரின் மீது பெரிதாக புகையால் எழுதப் படுகிறது. எந்த பூதத்தாலும் காப்பாற்றப்பட முடியாததாகிவிட்டது பாக்தாத். மாயக்கம்பளங்கள் தோற்றுப் போயின. அலாவுதீனின் அற்புத விளக்கும் அணைந்து போனது. எங்கும் இறந்து கிடக்கும் மனிதர்கள், குற்றுயிராக வேதனைப்படும் குழந்தைகள். பதுங்கு குழியினுள்ளே இறந்து கிடந்த வீரர்கள். ஒரு நகரம் பிடிபடும்போது அதன் அத்தனை உயிர்களும் அழிக்கப்படுமென்ற ஆதிவேட்டை இன்றைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. நாம் சுதந்திரமான காலத்தில் வாழ்கிறோம்; சுதந்திரமான காற்றை சுவாசிக்கிறோம், சுதந்திரத்தின் பேரால் நடைபெறும் கொலைகளுக்கு கை தட்டுகிறோம். தேசத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் மனிதர்களுடன் தலை கவிழ்ந்தபடி வெளியேறுகிறாள் ஷெஹர்ஜாத. இனி கதை சொல்வதற்கு தேவையில்லை. சாவை சந்தித்தபடியே ஆயிரம் கதை சொன்ன அவளது நாவு துண்டிக்கப்பட்டுவிட்டது. இப்போது கதை துயரத்திற்கும் மறுவாழ்விற்குமிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உடலில் பாய்ந்து அகற்றப்படாத துப்பாக்கிக் குண்டு போல ரணமாக உள்ளது. இரண்டு தேசபடை வீரர்களின் டிரக்குகளும் ஊர்ந்து சென்றபடியிருக்கின்றன. அசைவற்ற முகங்கள். தொலைக்காட்சி சாவு எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. உலகம் தன் களியாட்டத்திலும் கேளிக்கையிலும் புரண்டு கிடக்கிறது. போதும் , அணைத்து விடப்போகிறேன் எனது தொலைக்காட்சியை. இனி அந்த புராதன பாக்தாத் வரைபடத்தில் இல்லை. நம் நினைவில் மட்டுமே மிஞ்சியிருக்கப்போகிறது.  அரேபியக்கதைக்குள்ளாக பாக்தாத் நகரம் பதுங்கி தன் வாழ்வை நீடித்துக் கொள்கிறது. கதைகளும் அகதியைப்போல தேசம் விட்டு வெளியேறுகின்றன. அதோ ஷெஹர்ஜாத சொல்லாத கதையொன்று தன்னைத்தானே சொல்லியபடி ஒரு இறந்து கிடந்த மனிதனின் அருகே உட்கார்ந்திருக்கிறது. நீங்கள் கவனிக்காத அதன் வார்த்தைகள் உறைந்து கிடக்கின்ற குருதியில், ராணுவ வாகனங்கள் கடந்து செல்கின்றன. தொலைவில் நகரில் குண்டுகள் முழங்குகின்றன. வார்த்தைகளின் சாம்பல் காற்றில் பறக்கிறது. யாரோ துக்கத்தை அடக்கிகொண்டு பிரார்த்தனை செய்கிறார்கள்.

மீதமிருப்பது அது மட்டும்தானே.

*

நன்றி : எஸ். ராமகிருஷ்ணன்

***

Link : THE ARABIAN NIGHTS – Sir Richard Burton, translator