பெருநாள் பரிசு (pdf) – பிரேம் சந்த் சிறுகதை

இமேஜை க்ளிக் செய்து PDF -ஐ பார்க்கவும்.  (or use ‘save link as’ option to Download) . இது  ருசிக்கால பரிசும் கூட !

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா & எஸ். பாலபாரதி

‘ஹத்தம்’ ஸ்பெஷல் : முகுந்தன் தேர்வு செய்த முஹம்மது சிறுகதை

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக எம். முகுந்தன் தொகுத்த ‘சமீபத்திய மலையாளச் சிறுகதைக’ளிலிருந்து (முதற்பதிப்பு 1980), நன்றியுடன் பதிவிடுகிறேன். மொழிபெயர்ப்பு : ம. இராஜாராம். தட்டுத் தடுமாறி தட்டச்சு செய்து விட்டதாலேயே நான் எழுதிய சிறுகதையாக இதைச் சொல்வதை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்; படவா, பெரும் பாவம் செய்தாய் என்று மீளா நரகத்தில் தூக்கியெறிந்துவிடுவான். ஏனெனில் கதையின் மையமே கள்வனொருவன் திருந்தி மறுமையில் சேரவேண்டிய இடத்தைக் கணிப்பதுதான்! நல்லிணக்கத்திற்கு பெயர் ‘போன’  நாகூர் ஹந்திரி ஸ்பெஷலாக இதைத் தருவதில் நமக்கொரு சந்தோஷமுண்டு.  ‘ஆன்ம பரிசுத்தத்திற்காகப் போராடும் கதாபாத்திரங்களைப் படைத்த’ ஆசிரியர் என்.பி. முஹம்மது பற்றிய குறிப்பும் அடியில் உண்டு. சந்தனக்கூட்டை எரித்தவர்களைத் தவிர சகலரும் வாசிக்கலாம். கதை படிக்க விரும்பாதவர்கள் இஸ்மாயில்கானின் கவ்வாலியைக் கேளுங்கள்.  சொந்தக்கார வீட்டில் எண்பதுகளில் நடந்த கச்சேரி. தபேலா மாஸ்டர் நவாப்ஜான் பிய்த்து உதறியிருப்பார்.  அன்று கொஞ்சம் கூடுதலாகி விட்டதாம்! சேமித்து வைத்த இசைக்கோப்பை அனுப்பிய அசனா மரைக்காயருக்கு நன்றி. – ஆபிதீன்

**

n_p_mohammed

ஒரு அடியீடு மட்டும் – என்.பி. முஹம்மது

கனன்று எரிகின்ற வாழ்க்கையையும் பளிங்குக் குவளையில் செருகிய மஞ்சள் இலைகள் போன்ற தீ நாக்குகளையும் பின் தள்ளிவிட்டு யூசுஃப் நகர வாசலைக் கடந்தான்.

ஆகாயத்தில் முத்துமணிகள் உலரப் போடப்பட்டிருக்கின்றன. தூரத்தில் திட்டுத்திட்டாக இருள் மூடிக்கிடக்கின்ற பாலைவனத்திலிருந்து காற்று விஸிலடித்துக் கொண்டிருந்தது. பாலவனத்தின் முகத்தில் பாலுண்ணிகள்போல நகர வாயிலுக்கப்புறத்தில் சாகக் கிடக்கும் ஒட்டகங்கள் சுருண்டு கிடந்தன.

யூசுஃப் சற்று நின்றான். தன்னைப் பாவத்தால் வளர்த்த பட்டணத்தை இன்னொருமுறை அவன் நோக்கினான். அவன் பெருமூச்சுவிட்டான்.

பாவத்தில் திளைத்துப் புரளும் நகரம், வானளவு உயர்த்திய ஸ்தூபிகளைப் போல எழுந்து நிற்கும் மசூதிகளின் கோபுரங்களில் வௌவால்களின் ரீங்காரம் கேட்கலாம்.

இனி விடை பெறட்டும்.

திறந்திருக்கும் நகர வாசல். படுக்கையறை செல்லப் பரபரக்கும் நகரம். அவனுடைய பெரு விரல்கள் நடுங்கின. வேண்டாம். தான் இப்பட்டணத்தின் மயானத்தைச் சென்றடையவேண்டியவன். இனியுள்ள நட்களை இங்கேயே கழிக்கலாம்.

யூசுஃப் அந் நகரத்தை பயத்தால் ஆட்சிசெய்தான். யூசுஃபின் பரந்த மீசையும், அடர்ந்த தாடியும், சிவந்து உருண்ட கண்களும், நீண்ட அங்கியும் காண்கையில், அவனுடைய உறையில் தொங்கிய வாள் அவர்களுடைய மனத்தினுள் புகுந்து பாய்கிறது. தாய்மார் அவனைக் காண்கையில் குழந்தைகளை மார்போடணக்கின்றனர்; ஆண்கள் பதுங்குகிறார்கள். அந் நகரத்தின் முதுல் அறைகிற சாட்டையாகவிருந்தான் அந்த ஆள்.

யூசுஃப் தலைகுனிந்தான்.

தூரத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் மணற்காடுகளில் ஓரிடத்திலும் ஒளியின் மின்னல்கள் பரவுவதில்லை. எவ்வளவு தூரம் அவன் நடக்க வேண்டியிருக்கும்? அவனுக்குத் தெரியாது. பார்க்க வேண்டியவனை அவனுக்குத் தெரியாது. அவன் எங்கே இருப்பான்? தெரியாது. ஒன்று மட்டும் யூசுஃப் அறிவான். பெற்று வளர்ந்து கொழுத்த வாழ்க்கையிலிருந்து அவன் பின்வாங்கிக்கொண்டிருந்தான்.

அவன் பின்வாங்குகையில் கடந்த காலத்தின் நேரக் கற்களில் மனம் சென்று முட்டிக்கொண்டிருந்தது.

மசூதியின் மினாரிலிருந்து காற்றில் மிதந்து வந்த பாங் அழைப்பின் ஓசையை யூசுஃப் அப்போது கேட்கிறான்.

அல்லாஹூ அக்பர்.

-தெய்வம் மகானாகிறான்.

பிரார்த்தனைக்கான அவ்வழைப்புடன் மனத்துள் எல்லாம் புகுந்தேறி வருகின்றன. எப்படி இது நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது?

விளக்குகள் அணையவும் மனிதர்களின் கண்கள் மூடவும் செய்தபோது பாலைவனத்தின் விரக வேதனையை அனுபவிக்கும் சுழற்காற்று வீசி ஒலிக்கையில் அவனுடைய சிவந்து உருண்ட கண்கள் மின்னவும், உறையில் ஒதுங்கிக் கிடந்த வாள் கையில் எழவும் செய்தது. அடைத்த வாசல் அவனுக்காக மலர்ந்தது.

படுத்துறங்கும் வீட்டுத் தலைவன்; அவனைத் தழுவிக் கிடக்கும் தலைவி. ஜமுக்காளத்தில் கட்டிப் பிடித்துக் கிடக்கும் குழந்தைகள். யூசுஃப் பெட்டியைக் குத்தி உடைத்தான். இரும்புப் பெட்டியின் எதிர்ப்பைக் கேட்டு கணவன் எழுந்தான்.

“அட கடவுளே..”

“பேசாதே, நாக்கை அறுத்துப்போட்டு விடுவேன்.”

பெட்டியில் ஒளித்து வைத்திருந்த பணம் கலகலத்துச் சிரித்தது. மூடி மறைத்த பொன் நாணயங்களின் தடுப்புப் பலகையை நீக்க யூசுஃப் ஆர்வம் கொண்டிருந்தபோது தேம்பித் தேம்பி அழுத கணவன் அவனுடைய கையில் தொங்கினான்.

யூசுஃபின் வாள் பளபளத்தது. பளபளத்த வாளின் நுனி சிவக்கையில்…

“அல்லாஹ்!”

கேவிய மனைவி, அலறியழுத அப் பிஞ்சு சிசுக்கள். யூசுஃபிற்கு அவர்களது முகங்களைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

வாளை வீசி அவன் வெளியே பாய்ந்தான். எத்தனை யெத்தனை இரவுகள்; எத்தனை யெத்தனை குடும்பங்கள்! கழுத்துகள் இரத்தம் பீறிட்டுத் தெறித்து உடலிலிருந்து துள்ளி விழுந்தன. பயந்து நிற்கும் பெண்களின் ஆடைகளை அவன் கிழித்தெறிந்தான். அது ஓர் ஆவேசமாக இருந்தது. செய்ய நினைத்ததை யூசுஃப் செய்தான். அவன் செய்தபோது ஜனங்கள் அவனிடம் பயந்தார்கள்.

யூசுஃப்.

அவன் நகரத் தெருக்களில் நடந்தபோது மற்றவர்கள் விலகிப் போனார்கள். அக்கொள்ளைக்காரன் முன் அரண்மனைகள் நடுங்கின. யூசுஃப் இருட்போர்வை போர்த்தி மணற்காட்டை நோக்கினான். இருள் நீங்குமோ? கதிரவன் கனன்று ஜொலிப்பானோ? யூசுஃபின் மனத்தில் கடந்துபோன நாட்கள் விழித்திருந்தன.

அந்த யாத்ரீகனும் ஒட்டகமும் நகர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

ஒட்டகத்தின் கால்கள் பாலவைனத்தில் பதிந்தன. யாத்ரீகன் கூனிக்குறுகி அமர்ந்திருந்தான். சுற்றிலும் தீப்பொறி பறந்துகொண்டிருந்தது. அலைகள் போல மணற்பொடிகள் வழுக்கி வழுக்கி விழ, பாலைவனப் பரப்பில் புதிய பாதைகள், ஓடைகள் உண்டாகிக் கொண்டிருந்தன.

“நில்லுடா!”

யாத்ரீகனின் கையிலிருந்த மூக்கணாங்கயிறு தளர்ந்தது. ஒட்டகம் நின்றது. சீற்றமிகு சூரியன் தகித்தது. உதடு வரண்ட அம் மனிதனின் முகம் தெரியவில்லை. நெற்றியும், மூக்கும், காதுகளும் துணியில் மறைந்திருந்தன. கண்கள் மட்டும் தெரிந்தன. கேள்விக்குறி செதுக்கிய கண்கள்.

யூசுஃப் கட்டளையிட்டான்.

“இறங்கு!”

யாத்ரீகன் பணிந்தான். யூசுஃப் வாளை உயர்த்தினான். ஒளி தட்டிப் பளீரிட்ட வாளில் இரத்தக்கறைகள் காணப்படவில்லை.

“எங்கே உன் பண மூட்டை? கொடு.”

உலர்ந்த உதடுகளின் புன்னகை விரிந்தது.

“அதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?”

அவன் பண மூட்டையை எடுத்தான். இரண்டு கையாலும் யூசுஃபினிடம் அதைக் கொடுத்தான்.

“அல்லாவின் கருணையால் இது உங்கள் குடும்பத்திற்கு நல்லவிதத்தில் செலவாகட்டும்.”

யூசுஃப் அவ்வார்த்தைகளை நன்றாகக் கேட்டான். ஒருபோதும் ஒருவரும் அவனிடம் அப்படிச் சொன்னதில்லை. பல தடவைகள் அவர்கள் பணப் பையைக் கொடுக்கத் தயங்குவதும் யூசுஃப் அதைத் தட்டிப் பறிப்பதுமே நிகழ்ந்துள்ளன. சிலர் வாய்விட்டு அழுதிருக்கிறார்கள். சிலர் பயந்து விறைத்திருக்கிறார்கள்.

“உன் மூட்டையில் என்ன இருக்கிறது?”

“ஓஹோ, பணப் பையோடு சேர்த்து எனது மூட்டையையும் ஒட்டகத்தையும் உங்களுக்குத் தர மறந்து போனேன். மன்னித்து விடுங்கள்!”

பிரயாணி ஒட்டகத்தின்மேலிருந்து இறங்கினான். யூசுஃப் தாவியேறினான். திருட்டு ஆதாயத்தைப் பார்த்தவாறிருந்தான். விலையேறிய பட்டாடைகள்; ஜாடி நிறைய பொற்காசுகள்; உலர்ந்த பழங்கள்; கொழுத்துத் தடித்த ஒட்டகம். எல்லாம் அவனுடைய உடமைகளாகிவிட்டிருந்தன. யூசுஃப் ஒட்டகத்தின் மேலிருந்து இறங்கினான். எங்கே யாத்ரீகன்? காணவில்லை. பளீரிடும் சூரியன். நிழல் விழாத மணற்காடுகள். அவன் வலது கையை நெற்றியின்மேல் நீளவாட்டில் வைத்துக்கொண்டான். தூரத்தில், பரந்த பாலைவனத்தில், ஒரு வெள்ளைப் பிராணிபோல அம் மனிதன் நடந்து போய்க்கொண்டிருந்தான். யூசுஃபின் மனம் களவு சாமான்களிலிருந்து அம் மனிதனிடம் தாவியது. இதற்கு முன்பு ஒரு தடவைகூட யூசுஃபிற்குத் தன் இரையைக் குறித்து நினைத்துப் பார்க்கவேண்டி வந்ததில்லை.

தாவியேறினான் ஒட்டகத்தின் மேல் அவன்; தடியை ஆட்டினான். ஒட்டகம் நகர்ந்தது.

“நில்!”

யூசுஃப் அலறினான். யாத்ரீகன் நின்றான். யூசுஃப் அவனைக் கவனமாகப் பார்த்தான்.

கறைபடிந்த செப்புத்தகடு போன்ற அம் முகத்தில் இளநீல நிறத்தில் சிறு கண்கள். கருத்த வட்டத் தாடியைத் தடவியவாறு அவன் யூசுஃபை நோக்கிச் சிரித்தான்.

“என்ன சகோதரா, என்ன வேண்டும்?”

யூசுஃபின் முன்னால் பயமறியாது துளிர்த்த அற்புதம் மனித உருவத்தில் நிற்கிறது.

“என் மேலாடை வேண்டுமோ?”

“வேண்டாம்.”

” எனது செருப்புகள் வேண்டுமோ?”

“வேண்டாம்.”

“என்னை அடிமையாக்கி விற்க வேண்டுமோ?”

“வேண்டாம்.”

“உங்களுக்கு என்னதான் வேண்டும்?”

“நீ யார்?”

“நான், நான்.. உங்களைப் போல ஒருவன்!”

“கொள்ளைக்காரனா?”

யாத்ரீகன் சிரித்தான்.

“ஒரு விதத்தில் ஆட்களை பயமுறுத்தி உங்களைப்போல நான் சொத்து சம்பாதிக்கவில்லை. அவர்களுக்கு ஆசைமூட்டி பொருட்களை நல்ல லாபத்தில் விற்று சொத்துச் சேர்த்திருக்கிறேன்.”

“உன் பெயர்?”

“அது தெரிந்து என்ன பயன்? நானொரு யாத்ரீகன். மரணத்தை நோக்கி நடக்கும் மனிதன்.”

“உன் ஊர்?”

“குராஸ்தான்.”

யூசுஃபின் நா தளர்ந்தது. மனிதர்களிடம் மென்மையாகப் பேச அவன் கற்றதில்லை. முன்னால் நிற்கும் அம் மனிதனிடம் கூற அவனுக்கு எதுவும் இருக்கவில்லை.

யாத்ரீகன் மெதுவாக, சுட்டுப் பழுத்த நிலத்தில் நடந்தபோது காலடிச் சுவட்டின் மணல் தூள்கள் நாற்புறமும் சிதறின.

யூசுஃப் அவனைப் பார்த்தான். சற்று நேரம் பாலைவனத்தில் நின்றான். ஒட்டகத்தின் மேலே ஏறினான். மெல்ல மெல்லப் பட்டணத்தை நோக்கி நகர்ந்தான்.

யூசுஃப் ஏராளமான பொருள்களைக் கவர்ந்திருக்கிறான். அப் பொன் நாணயங்கள் மதுவின் மேலே நுரைத்துப் பொங்கும் குமிழிகளோடு சேர்ந்து காணாமற்போயின. பொன் நாணயங்கள், சூதாட்டத்தில் பகடைகள் திரும்பியபோது கைமாறிப்போயின. மீண்டும் யூசுஃப் திருடினான்; கொடுங்கொலை செய்தான்; நாணயங்கள் நீர்போல ஓடிப்போகவும், பிணங்கள் பாலைவனத்தில் காய்ந்து பொடியாகவும் செய்தன.

நாட்கள் வாடி விழுந்தன. மனத்தின் எட்டாத மூலைகளில் அந்த யாத்ரீகன் வாழ்ந்தான். யூசுஃபின் இதயத்தினுள் ஏறியமர்ந்து அந்த யாத்ரீகன் யூசுஃபை நிம்மதியாக இருக்க விடவில்லை. பயந்து விழுந்த மனிதர்களைவிட அவனிடம் என்ன முக்யத்துவம்? யூசுஃபின் மனத்தில் பயத்தின் சிறு திரிகள் எரியத் தொடங்கின. அம் மங்கிய ஒளியில் அவன் தன் வாழ்க்கையின் இருண்ட பாகங்களைக் கண்டான். யூசுஃப் திடுக்கிட்டான். பருவமெய்திய பெண்மக்களைக் கல்யாணம் செய்து கொடுப்பதற்காகச் சேர்த்துச் சேர்த்து வைத்த குடும்பத் தலைவனை, பின்னிரவுகளில் அவன் கொள்ளையடித்தபோது.. தலையற்று விழுந்த குடும்பத் தலைவன் முன்னால் இளஞ்சிறுவர்கள் அலறியழுதபோது… அவற்றிற்கு ஓர் புது அர்த்தம் உண்டாயிற்று. யூசுஃப் பயந்து போனான்.

யூசுஃப் பேய்க் கனவுகள் கண்டான். தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தால் அவன் வியர்த்து வெளுத்துப் போவான். கைகால்கள் தளர ஆரம்பித்தன. ஆட்களைக் காண்கையில் அவனைப் பச்சாத்தாபம் பீடித்தது.

யூசுஃப் தலைகுனிந்து நடந்து போவான். பரிச்சயமான நகரம் அவனைப் பார்த்து தலைகுனிந்தபோது யூசுஃப் பெருமைகொண்டிருந்தான். புதிய யூசுஃபை அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் அறிந்திருந்தது கொள்ளைக்காரன் யூசுஃபைத்தான்.

மசூதிக்குள் ஏறிச்சென்றதை அவன் நினைவுகூர்ந்தான். மினாரின் உச்சியில் வெள்ளைத் தாடி காற்றில் பறந்தது. வராண்டாவில் பிரித்து வைத்த குரானை ராகம்போட்டு ஓதிக்கொண்டிருந்த முக்ரி அப்துல் ரஹ்மான் யூசுஃபைப் பார்க்கவில்லை. அவர் கண்ணைப் பாதி மூடிக் கொண்டிருந்தார். யூசுஃப் தொண்டையைக் கனைத்தான்.

முக்ரி யூசுஃபைப் பார்த்து பயந்து போனார். இக்கொடியவன் மசூதியிலும் புகுந்துவிட்டானா?

அரண்டுபோயிருந்த முக்ரியிடம் அவன் எல்லாவற்றையும் சொன்னான். அவனால் உட்கார முடியவில்லை. வேலை செய்ய முடியவில்லை. இப் பட்டணம் அவனை நெருக்கித் தொலைக்கிறது. அவன் குராஸ்தான் வியாபாரியின் கதையைச் சொன்னான்.

யூசுஃபின் நிற மாற்றம் கண்டு முக்ரி அதிசயப்பட்டுக்கொண்டிருந்தார்.அவர் கடவுளைப் பிரார்த்தித்தார்.

“முக்ரி, என்னை நன்மைக்குள் திரும்பியழைத்துச் செல்ல வேண்டும்.”

பளபளத்தன யூசுஃபின் கண்கள். மசூதி வாசலில் மாடப்புறாக் கூட்டம் பறந்து போயிற்று. விரிந்து நிற்கும் ஈச்சை மரங்களின் நிழல்கள் மசூதி முற்றத்தில் பதிந்தன.

“யூசுஃப், உங்களுக்கு அந்த சக்தி இருக்கிறதா?”

“எனக்குக் கொலை செய்யும் சக்தி இருந்தது.”

“இப்போதோ?”

யூசுஃபிற்கு பதில் சொல்ல முடியவில்லை. முக்ரி பதிலை எதிர்பார்க்கவுமில்லை. அவர் கேட்டார்:

“உங்கள் குரு யாரென்று தெரியுமா?”

“எனக்குக் குரு கிடையாது.”

“உண்டு.”

“இல்லை, முக்ரி ஸாஹேப்.”

“உண்டு. உங்களுடைய குரு குராஸ்தான் வியாபாரி? அவரைக் கண்டுபிடியுங்கள். அப்படியானால் நீங்கள் நன்மையை அடைவீர்கள்.”

கடந்துபோன நிகழ்ச்சிச் சுருள்களை, நகர வாசலின் முன்பு நின்று நிமிர்த்திக் கொண்டிருந்தபோது, இருள் மூடிக் கிடக்கும் நிலத்தையே அவன் கண்முன் கண்டான். யூசுஃபிற்கு அப்போது ஒட்டகமில்லை. குராஸ்தானின் வியாபாரி உயிரோடிருக்கிறாரோ, இறந்துவிட்டாரோ என்று தெரியாது. அவ் வியாபாரி இப்போது குராஸ்தானில்தான் இருப்பாரோ? வேறெங்காவது வியாபார நிமித்தம் போயிருப்பாரோ?

குறிக்கோளற்றதே அப் பிரயாணம் என்பதை யூசுஃப் அறிவான். மீண்டும் அவன் நகரத்தைப் பார்த்து நெடுமூச்செறிந்தான். பாவத்தில் மூழ்கிக் குளிக்கும் நகரம். பாவத்தாலேயே தன்னை வளர்த்த நகரம். தான் இங்கே மனிதனில்லை.

“கொள்ளைக்காரன் யூசுஃப்.”

உணர்ச்சி வேகங்கள் அவன் மனத்தைக் கொக்கியிட்டு இழுத்தன.

யூசுஃப் இருளில் காலெடுத்து வைத்தான்.

யூசுஃப் நடந்தான். பாதையோரங்களில் படுத்தான். கிடைத்த பண்டத்தைத் தின்றான். வயிறு காய்ந்த பகல்கள்; களைத்துறங்கிய இரவுகள், பாலவனத்தில் சூர்யன் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக இருந்தது. சிவந்த பளபளக்கும் சூரியன். பரந்து மயங்கிக் கிடக்கும் பாலைவனத்தில் ஒளியும் வெப்பமும் கொடுத்தது. மணற்குன்றுகள் காற்றில் குழம்பித் திரும்பின. மணற்குழுகளிலிருந்து காலைத் தூக்கியெடுக்க யூசுஃப் பெரும்பாடுபட்டான்.

காலைச்சுற்றிலும் மணல் வட்டம் சூழ்கிறது. அவனுடைய வலதுகால் மணற்குழியில் அகப்பட்டது. யூசுஃபின் முகம் வெளிறியது. உடம்பு வியர்த்தது. உடை கிழிந்து பறந்தது. குழியிலாழ்ந்தன சிவந்து இருண்ட கண்கள்.

மணற்காற்றின் விஸில் முழங்கிக் கேட்டது.

இல்லை. மணற்குழியிலிருந்து அவனுக்குக் காலைத் தூக்க முடியவில்லை.

யூசுஃப் பூமிக்குள் புதைந்து போகிறானோ? அவன் முழுச் சக்தியையும் உபயோகித்தான். காலை உதறினான். மணல் துகள்கள் காலைச் சுற்றிலும் அட்டைகள் போல பாய்ந்து கடிக்கின்றன.

யூசுஃபின் கண்கள் நனைந்தன. படலம் விழுந்தது கண்களுக்குப்பின், மங்கிய வெளிச்சத்தில் வெள்ளை ஜந்து பொல குராஸ்தானின் வியாபாரி நடந்து போய்க்கொண்டிருக்கின்றானோ?

“நண்பா!” யூசுஃப் கடைசியாக யாசித்தான்.

“நண்பா!” மணற்காற்றிலிருந்து உண்டான விஸிலடிப்பில் அச்சப்தம் எதிரொலியில் அமிழ்ந்தது.

அலைகள்போல மணல் கர்ஜித்துப் பொங்கிச் சிதறிப் பறக்கிறது.

யூசுஃபின் நெஞ்சம் துடித்தது. அவன் கத்தினான். “ஐயோ!” அத்துடன் அவன் முன்பக்கம் பாய்ந்தான். மணற்குழியிலிருந்து கதறித் தாவின விரல்கள். அம் முயற்சியில் அவன் நிலை தடுமாறி விழுந்தான்.

விழுந்த இடத்திலிருந்து அவன் கையூன்றி நகரப்பார்த்தான். கைகள் தளர்ந்து போயின. அவன் ஓரடி ஊர்ந்தான். ஒரு அடியீடு மட்டும்.

ஒரு அடி ஊர்ந்ததின் நேர்க்கோடு ஒரு நிமிடம் மணலில் தெரிந்தது. காற்றடித்தது; அக் கோடு அழிந்தது. கண்ணுக்கெட்டா தூரம் பரந்து கிடக்கும் மணற்காடு மட்டும்.

யூசுஃபிற்கு கையை ஊன்ற இயலவில்லை. உலர்ந்த மாமிசம் போல அவனுடைய உடல் பழுக்கக் காய்ந்த மணலில் பதிந்து கிடந்தது. சூர்யனின் குரூரமான ரேகைகள் அவனுடைய காதுகளில் துளைத்து நுழைந்தபோது யூசுஃப் இருமினான். அவன் செருமினான். தன் இதயத்தை யாரோ பறித்தெடுக்கிறார்கள். அவன் வாய் பிளந்தான்.

கதிரவன் கனன்று ஒளி வீசினான். மணற்காற்று சப்தமிட்டது.

யாரும் பார்க்கவில்லை. யாருக்கும் தெரியாது. ஆயிரம் பேரைக் கொன்ற யூசுஃப் பாலைவனத்தில் ஒரு துளி நீருக்காகத் தலையை அசைத்தான்; தலை சுற்றிற்று. அசைய முடியவில்லை. ஏடுபடிந்த கண்கள் உற்று நோக்கின, அவை மூடவில்லை.

வளைந்த ஆகாயம் தூரத்தில் மண்டியிட்டு கிடக்கிறது, அடிவானத்திலிருந்த மேகப் பாளங்கள் உதிர்ந்து விழுவதுபோலக் காட்சியளித்தன. பிளந்த ஆகாயத்திலிருந்து வெண் பறவைகளைப் போல மேகத் துண்டுகள் பறந்து வருகின்றன. அவ் வெண்பூக்கள் பாலைவனத்தில் இறங்கின. யூசுஃப் கண்ணை மூடவில்லை. விரிந்த சிறகுகளுடன் தேவதூதர்கள் யூசுஃபின் வலப்பக்கம் வந்து நின்றனர்.

யூசுஃபிற்கு அதையெல்லாம் பார்க்க முடிந்தது.

மீண்டும் ஆகாயத்திலிருந்து மேகக் கீற்றுகள் கீழே பறந்து வருகின்றன. சிறகுகளையுடைய தேவதூதர்கள். அவர்கள் தரையில் இறங்கினார்கள். யூசுஃபின் இடப்பக்கம் அவர்கள் நின்றனர்.

நடுவில் கீழே சரிந்து கிடக்கும் யூசுஃப். இடப்புறமும் வலப்புறமும் தேவதூதர்கள்.

வலப்பக்கமிருந்த தேவதூதர்கள் அவனைத் தூக்கியெடுக்கக் கைகளை நீட்டியபோது இடப்பக்கத் தேவதூதர்கள் தடுத்தார்கள்.

“இது எங்கள் ஆத்மா.”

வலப்பக்கத் தேவதூதர்களின் தலைவன் கேட்டான்: “நீங்கள் யார்?”

“நாங்கள் சொர்க்கத்தைக் காக்கும் தேவதூதர்கள்.”

“நண்பர்களே, உங்களுக்கு ஆள் மாறிப் போயிற்று. இவனை நரகத்திற்கு கொண்டு போகவே நாங்கள் வந்தோம்.” இடப்பக்கத் தேவ தூதர்களின் தலைவன் சொன்னான்.

தேவதூதர்கள் அவனுடைய ஆத்மாவிற்காகத் தர்க்கமிட்டுக்கொண்டார்கள். யூசுஃபிற்கு அதைக் கேட்க முடிந்தது. பார்க்க முடிந்தது. ஆனால் அவனுடைய கைகள் உயரவில்லை. உதடுகள் அசையவில்லை. வெப்பமில்லை. தண்மையில்லை. கண் முன்னால் கண்ணாடியில் பார்ப்பது போல எல்லாம் தெரிகிறது.

“ஆயிரம் பேரைக் கொன்ற துஷ்டம் இவன். நரக பாவி!”

“அதெல்லாம் சரி, ஆனால் அவன் பச்சாத்தாபமுற்றிருக்கிறான்.”

“குற்றம் செய்துவிட்டு வருந்தி என்ன பயன்?”

“நல்லபடியாக வாழவே இவன் நகரத்திலிருந்து கிளம்பினான்.”

“ஒருவனுடைய செயலே முக்கியம். இவன் தீமையின் அவதாரம்.”

“யூசுஃப் தீமையிலிருந்து விடுதலையடைந்தான்.”

“இல்லை.”

“இவன் நன்மையை நோக்கிப் பயணம் போய்க்கொண்டிருந்தான்.”

“எண்ணத் தூய்மையல்ல முக்கியம்.”

“எண்ணத் தூய்மைதான் முக்கியம்.”

“இவன் நரக பாவி!”

“இவன் சொர்க்கத்தைச் சேர வேண்டியவன்!”

“நாம் இரு கூட்டத்தினரும் கடவுள் சேவை செய்பவர்கள், இந் நரக பாவிக்காக நமக்குள் சச்சரவிட வேண்டுமா?”

“சண்டை போடக்கூடாது. ஆனால், சொர்க்கத்தைச் சேர வேண்டியவனை நரகத்திற்கு விட்டுக்கொடுத்தால் எங்கள் கடமையில் தவறியவர்களாவோம்.”

“ம்ஹூம்.”

“தொலைவிலுள்ள நகரத்திலிருந்தாக்கும் இந்த ஆள் வருகிறான். பார், இவனுடைய இடுப்பில் வாள் இல்லை. கையில் பணப் பையில்லை. இவன் திருந்துவதற்காகப் புறப்பட்டவன்.”

நரகத்தின் தேவதூதர்கள் யூசுஃபைப் பரிசோதித்தார்கள். சொர்க்கத்தின் தேவதூதர்கள் கூறியவையெல்லாம் சரிதான்.

“ஆனால் இவனுடைய பூர்வ சரித்திரம்!”

“பூர்வ சரித்திரம் இருளடைந்திருந்த எத்தனையோ பேர்கள் பிற்காலத்தில் மகாத்மாக்களாக ஆகியிருக்கிறார்கள்.”

“அது சரி, அவர்களுடைய செயல்தான் அவர்கள் மகத்வத்தின் சாட்சி.”

“அதுபோலவே யூசுஃபின் இந்தச் செயலும்.”

“யூசுப் செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள்.”

“இப் பிரயாணம் நன்மையை நோக்கிச் சென்ற இப்பிரயாணம்!”

“இவன் எங்கே போகிறான்?”

“குராஸ்தானுக்கு. அங்குள்ள வியாபாரியே இவனுக்கு நன்மையின் வாசலைக் காட்டிக் கொடுத்தான்.”

“அதற்கு சாட்சி எங்கே?”

“சாட்சி இல்லை.”

பிடிவாதக்காரர்களாகிய நரகத்தின் தேவதூதர்கள் விடுகிற மாதிரியாகக் காணவில்லை. சொர்க்கத்துத் தேவதூதர்கள் மண்டையைக் குடைந்துகொண்டு யோசித்தார்கள்.

சூர்ய வெப்பத்தினால் மணல் துகள்கள் சூடடைந்திருந்தன. யூசுஃபின் திறந்த கண்களைத் தேவதூதர்கள் பார்த்தார்கள். கண்ணீர் நிறைந்த கண்கள். சாந்தம் நிறைந்த முகம்!

“உங்கள் கையில் அளவு நாடா இருக்கிறதா?”

“இருக்கிறது.”

“நாம் ஒன்று செய்வோம். நாம் இவ்வாத்மாவிற்காக ரொம்ப நேரமாகச் சச்சரவிட்டுக் கொண்டிருக்கிறோம். நரகத்திலிருந்து யூசுஃப் இறந்து கிடக்கும் தூரத்தை அளக்கலாம். இங்கேயிருந்து குராஸ்தானுக்குள்ள தூரத்தையும் அளப்போம்.”

“எதற்காக?”

“நகரத்திலிருந்து இவ்விடத்திற்குள்ள தூரம் குறைவானால் நீங்கள் கொண்டுபோய்க் கொள்ளுங்கள். இங்கிருந்து குராஸ்தானுக்குள்ள தூரம் குறைவானால் நாங்கள் கொண்டு போகிறோம்.”

நரகத்திலிருந்து வந்த தேவதூதர்கள் கலந்தாலோசித்தார்கள். அவர்கள் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள். பிரச்னையைத் தீர்க்க வேறு வழிகளை அவர்கள் காணவில்லை. ஆனால், அந்த நிபந்தனையிலிருந்து அதிக லாபமடைய அவர்கள் தயாரானார்கள்.

“ஒரு சந்தேகம்! எந்தப் பக்கமிருந்து என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.”

“யூசுஃபின் தலை கிடக்கும் பக்கமிருந்து.”

“அது சரியில்லை. நாங்கள் சம்மதிக்க முடியாது.”

“பிறகு?”

“யூசுஃபின் காலடி மணலில் தொட்ட பக்கத்திலிருந்து.”

சொர்க்கத்திலிருந்து வந்த தேவதூதர்கள் யோசித்தனர். வேறு வழியில்லை. அவர்கள் நரக தேவதூதர்களின் யோசனையை ஏற்றுக் கொண்டார்கள்.

சொர்க்கத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் வந்த தேவதூதர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அவர்கள் இரு கட்சிகளாகப் பிரிந்தார்கள். ஒரு பகுதி நகரத்திற்குப் போயிற்று. மற்றப் பகுதி குராஸ்தானுக்குப் போயிற்று. அவர்கள் அளவு ரிப்பனால் இரண்டு பக்கங்களிலிருந்தும் அளந்தார்கள். இரண்டு பக்கங்களிலிருந்தும் அவர்கள் ஒரே சமயத்தில் வந்தனர். இரு கூட்டத்தினரும் யூசுஃப் இறந்து விழுந்திருந்த இடத்தை அடைந்தனர். ஒரே நேரம்.

இரு நாடாக்களையும் அவர்கள் நுனியைச் சேர்த்துப் பிடித்தனர். நுனியைச் சேர்த்து வைத்த நாடாக்களைச் சுற்றிச் சுருட்டி வைத்தனர் தேவதூதர்கள். நாடாக்களின் மறு நுனிகள் தெரிந்தன. இரு கூட்டத்தாரும் ஆவலுடம் நோக்கினர். ஒரு நாடாக்களும் ஒரே அளவா? யூசுஃபின் ஒரு பாதி சொர்க்கத்திற்கும் மறுபாதி நரகத்திற்கும் சேர வேண்டுமோ?

கண்ணத் திறந்து கிடக்கிறான் யூசுஃப்.

அளவு நாடாவைச் சுருட்டி வைக்கிறார்கள் தேவதூதர்கள்.

நரகத்துத் தேவதூதர்களின் முகம் கறுத்தது.

“எவ்வளவு வித்தியாசம்?”

சொர்க்கத்துத் தேவதூதர்களின் தலைவனுடைய கேள்வி.

சொர்க்கத்திலிருந்து வந்த தேவதூதருள் ஒருவன் கீழே பார்த்தான். அவனுடைய அழகான உதடுகளில் மனோகரமான சிரிப்புப் பரவியது. அவன் நாடாவையெடுத்து யூசுஃபின் மரத்துப்போன காலின் நீளத்தை அளக்கையில் நரகத்துத் தேவதூதர்கள் ஆகாயத்தை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்கள்.

சொர்க்கத் தூதன் அளந்தான்; அவனுடைய குரல் முழங்கியது;

“ஒரே ஒரு அடியீடு மட்டும்!”

***

ஆசிரியைரைப் பற்றி :

என். பி. முஹம்மது 1928-ல் கோழிக்கோட்டினருகே பிறந்தார், ஹைஸ்கூல் படிப்பை முடித்தபின் தேசீய குடியாட்சி நிறுவனங்களில் பணி புரிந்தார். சில காலத்திற்குப் பிறகு எல்லாப் பொது நிறுவனங்களிலிருந்தும் விலகி, தன்னந்தனியான படிப்பில் மூழ்கியிருந்தார். ஒரு நல்ல சிந்தனையாளரும் இலக்கியவாதியும் கூட. இலக்கியத்தில் ஒரு எழுச்சியோடும் சம்பந்தப்பட்டவரில்லை. ஆன்ம பரிசுத்தத்திற்காகப் போராடுபவர்களே அவரது கதாபாத்திரங்கள். தான் பிறந்து வளர்ந்த முஸ்லீம் சமுதாயத்தின் யதார்த்தமான சித்திரங்களை கதைகளில் காணலாம்.

நூல்கள் : தொப்பியும் தட்டும், நல்லவர்களின் உலகம், மரணம் தாலாட்டுப் பாடிற்று, நாற்பத்தியிரண்டாம் வீட்டில் சாத்தான். கவிதைகள் : முதுகெலும்புகள், பிரஸிடெண்டின் முதல் மரணம். கதைத் தொகுதிகள் : மரம், அரேபியத் தங்கம் ( எம்.டி. வாசுதேவன் நாயருடன் சேர்ந்து). நாவல்கள் : இரண்ய கசிபு.
***

எச்சரிக்கை : ‘நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி, ஆபிதீன்’ என்று போடாமல் கதையை ‘ஷேர்’ செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. மறுமையில் அல்ல, இங்கேயேதான்!

பாவம் மிஸ்கீன் அலி ஷாஹ்! – ஜீலானி பானுவின் நாவலிலிருந்து…

உருது எழுத்தாளர் ஜிலானி பானுவின் ‘கவிதாலயம்’ (Aiwan-E-Gazal) நாவலிலிருந்து கொஞ்சம் கிண்டலைக் கிண்டித் தருகிறேன். காலத்தைப் புதுமையாக இணைத்திருந்த குர்அதுல்ஐன் ஹைதரின் ‘அக்னி நதி’ (ஆக்-கா-தரியா) மாதிரி இவர் எழுத்து பிரமாண்டமாக இல்லை. ஆனால் இரண்டாம் அத்தியாயத்தின் இறுதியில் வரும் இந்தக் குத்தல் பிடித்திருந்தது (அதுதான் ரொம்ப பிடிக்குமே!). நாவலின் வேறு சில அத்தியாயங்களிலும் சின்னச் சின்ன வெடைகள் இருக்கின்றன. உதாரணமாக ஐந்தாம் அத்தியாயத்திலிருந்து ஒன்று – தன் சமூகத்தை விட்டுக்கொடுக்காமல்:

வடக்கிலிருந்து வந்த ஒரு கவிஞர் வாஹித் ஹூசனை சீண்டுவார் :அன்பரே! ஜாகீர்தாரர்களாக நீங்கள் ஹைதராபாத்தில் மூன்று வேலைகளைத்தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் – பிரியாணி சாப்பிடுவது, மாளிகைகள் கட்டுவது; மனித குலத்தை விருத்தி செய்வது” கொதித்தெழுந்த வாஹித் ஹூசென் பதிலளிக்கிறார் இப்படி : “இல்லை; நாம் இன்னுமொரு வேலையும் செய்கிறோம்; வெளிவாயிலில் நின்று பிச்சை கேட்பவர்களுக்குப் பிச்சையும் போடுகிறோம்!”.

நேஷனல் புக் டிரஸ்ட்டுக்கும் PDF சுட்டி கொடுக்கப்போகிற சென்ஷி சாருக்கும் நன்றி சொல்லுங்கள். இல்லையேல் ஏதாவதொரு தர்ஹாவில் உங்களை கட்டிவைத்துவிடுவேன், என் சங்கிலியை அவிழ்த்து! – ஆபிதீன்

***

JEELANI_BHANU_897471f

கவிதாலயம் – ஜீலானி பானு

தமிழாக்கம் : முக்தார்

… …. ….

அல்ஹாஜ் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் கரங்களில் அபூர்வ சக்தி இருப்பதாக எல்லாருமே எண்ணினார்கள். ஆனால் ஏனோ இப்போது அந்தச் சக்தியின் சிறப்பு குறைந்துகொண்டே போய்விட்டது. (ஹஜ்ரத் ரஹ்மாத் ஷா) தர்காவிலிருந்து மக்கள் வெறுங்கையுடன் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மிஸ்கீன் அலிஷாஹ் தோதா சஷ்மியும் இதையே சிந்தித்துக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். இந்தப் பழக்க வழக்கங்களில் சாயும் தூண்களை எப்படி நிலை நிறுத்துவது? நான்கு திக்குகளிலும் சம்பிரதாயங்கள், பல நடை முறைகளில் அமைப்புகள் கலைந்த வண்ணம் இருக்கின்றன.

இன்று நிலை யாதெனில் தனது நான்கு மனைவிகளை அவர்களுடைய பதினெட்டுக் குழந்தைகளுடன் ‘அலீப் லைலா’வில் அடைத்துவிட்டார். கண்களை மூடியவாறு, மாரடைப்புகளுக்குத் தாக்குப் பிடித்துத் தர்காவின் ஓர் அறையில் காலம் கழித்தார். தர்காவும் அலீப் லைலாவின் வட்டத்திற்குள்தான் இருந்தது. உலகின் கேளிக்கைகளிலிருந்து தர்காவைத் தனிப்படுத்துவதற்காக அரசாங்கம் அளித்த பூமியில் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பாட்டனார் பிரம்மாண்டமான மாளிகை ஒன்றைக் கட்டி முடித்து, அதற்கு ‘அலீப் லைலா’ என்று பெயரும் சூட்டிவிட்டார். தனது சந்ததியினர் தர்காவை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுவதற்காக இதே மாளிகையில் வசிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒருமுறை ஒரு பெரியார் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பாட்டனாரை ஒரு குடிசையில் சந்தித்தாராம். அப்போது “போ. உனக்காக அலீப்லைலா கதையில் வரும் மாளிகையைப் போன்றதொரு சிறந்த கட்டிடத்தை உண்டாக்கி விடுவோம்” என்று மொழிந்தாராம். எனவே தனது மாளிகையின் பெயரை ’அலீப்லைலா’ என்றே வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இப்போது மிஸ்கீன் அலி ஷாஹ் தோதா சஷ்மி தர்காவிலேயே கிடந்தார். நகரில் என்ன நடந்தாலும் – உறவினர் வீட்டுத் திருமணம், மரணம் எதுவாக இருப்பினும் – அவர் வெளியே செல்வதில்லை.

இந்தத் தர்காவைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை எல்லாரும் அறிவார்கள். ரஹ்மத் அலிஷாஹ் ஒருமுறை மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பாட்டனாருடைய கனவில் தோன்றி, ‘நான் குறிப்பிடும் இடத்தில் எனது கல்லறையைத் தோண்டி, அங்கு தர்கா கட்டினால் உனது சந்ததியினர் பசி, பிணியிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவார்கள்’ என்றாராம். எனவே அந்தத் தர்காவில் வேண்டுதல்கள் செய்ய பெரிய பெரிய மனிதர்களும் வந்து தலை குனிகிறார்கள்.

யாரேனும், மிஸ்கீன் அலிஷாஹ்விடம், வெளியே செல்லாததற்கான காரணத்தைக் கேட்டால், அவர் தனது கைகளை உயர்த்தி ‘எனக்குக் கிடைக்கும் ஆணைப்படி நடந்து கொள்கிறேன்’ என்பார். இதனால்தான் வழக்குரைஞர்களும் தரகர்களும் சாதிக்க முடியாத காரியங்களை மிஸ்கீன் அலி ஷாஹ்வின் தாயத்துகளும் மந்திரங்களும் செய்துவிடுகின்றன என்று எல்லாரும் சொல்லிக் கொள்கிறார்கள்.

அலீப்லைலாவின் பகட்டு ஆராவரத்தைப் பற்றியும் பல கருத்துகள் இருந்தன. ரஹ்மத் அலிஷாஹ் ஒவ்வொரு இரவும் மிஸ்கீன் அலிஷாஹ்வின் தலையணை அருகில் ஆயிரம் ரூபாய் கொண்ட பையை வைத்துவிடுகிறார் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். மிஸ்கீன் அலிஷாஹ் ‘ஜின்’ எனும் ஆவிகளுக்குப் பாடம் சொல்லித் தருவதால் அவர்கள் ஒரு மூட்டை நிலக்கரியை அவருக்குக் கொடுக்கிறார்கள். அது காலையில் தங்கமாக மாறி விடுகிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் இந்தக் கூற்றுகளை எவராலும் மறுக்க முடியவில்லை. ஏனெனில் அலீப்லைலாவின் பெண்களும் ஆண்களும் செய்த ஆடம்பரமும் பகட்டும் பெரிய பண்ணையார் வீட்டினரும் செய்யவில்லை.

இதனால் மிஸ்கீன் அலிஷாஹ் தோதா சஷ்மியின் அருட்செயல்கள் பெண்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தன. உயர்குடி மக்களும் ஏழைகள் வட்டாரமும் தனித்தனியாக இருப்பதுபோல், தர்காக்களும் ஆலயங்களும் வேறுபட்டு நிற்கின்றன.

ரஹ்மத் அலி ஷாஹ்வுடைய கல்லறையின் தங்கத்தாலான பின்னல் தடுப்பு, முத்துக்களால் செய்யப்பட்ட நிழற்குடை, மாளிகையின் ஒவ்வொரு செங்கல் எல்லாமே ஆஸிபியா அரசாட்சியை நிறுவிய அந்த வல்லாளர்களின் காணிக்கையாகும். அதனால் உயர்குடி பேகம்கள் அனைவரும் இங்கு வந்து தலை வணங்கினார்கள். தங்கள் சக்களத்தியரின் மரண ஓலையையும் இங்கு பெற்றுத் திரும்பினார்கள்.

பெரிய பெரிய நிலக்கிழார்கள் இங்கு வந்தார்கள். தங்கள் எதிரிகளின் தோல்விச் செய்தியைப் பெற்றுச் சென்றார்கள். இங்கு மங்கையரின் மடிகளும், ஆடவர்களின் கருவூலங்களும் நிரம்பினர். ‘உரூஸ்’ என்ற சந்தனக்க்கூடு நடக்கும் நாளில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

மிஸ்கீன் அலிஷாஹ் பணிவான நடையில் கூறுவார்: “இந்த ஏழை தனக்காகவே ஒவ்வொரு தானிய மணிக்கும் ஏங்குகிறான். இத்தனை மக்களுக்கும் உணவு வழங்கும் திறன் அடியேனுக்கு ஏது? எல்லாம் பெரியவரின் அருள்; அன்னாருடைய அன்புச் செயலே!’

மிஸ்கீன் அலிஷாஹ்வின் வெண்மையான முகம், சாயம் பூசப்பட்ட கருந்தாடி கொண்டு தலைமுடிகளுக்கு இடையே மதியைப்போல் பிரகாசித்தது. சரிகை போட்ட கறுப்பு மேல் அங்கியை அவர் அணிந்து தலையில் கைக்குட்டையைக் கட்டி, கையில் தொழுகை மணிமாலையை எடுத்து, தனது செந்நிறமான பெரிய பெரிய கண்களைச் சற்றே விரித்து ஏதேனுமொரு மங்கையை ஆசீர்வதிக்கும்போது நான்கு புறங்களிலும் விசித்திரமான ஒளி பரவி விடுகிறது. வானுலகத்தினர் தங்கள் நீலநிற ஆடைகளில், பட்டு இறக்கைகளுடன் சுற்றி வருகின்றனர். வானவில்லின் பாதை மிஸ்கீன் அலிஷாஹ்வின் கால்களிலிருந்து ஏழாவது வானம்வரை ஒளிர்ந்து மின்னுகிறது!

பிறகு அவள் தன்னை மறந்துவிடுவாள். பாவங்கள் பதிந்த உடல் சிதறி விடுகிறது. நிர்வாணமான ஆன்மா மிக்க நாணத்துடன் மிஸ்கீன் அலிஷாஹ்வினுள் இணைந்து விடவே விருப்பம் கொள்ளும்.

பெண்களின் அளவிலா பக்தியே மிஸ்கீன் அலிஷாஹ்வைக் கலவரப்படுத்தியது. முராத் அலியின் வாலிபமான பெண்ணுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது என்கிறார்கள். இரவுகளில் எழுந்து மிஸ்கீன் அலி ஷாஹ்வுக்கு அவள் குரல் கொடுத்தாள். அவளை வெகு நாளாக வருத்திய நோயைக் கண்ட முராத் அலி ஒருநாள் தனது மகளை அழைத்து வந்து மிஸ்கீன் அலிஷாஹ்வின் காலடியில் கிடத்தினார்.

ஓர் அந்நிய வாலிபமான மங்கையைத் தனது அறையில் எப்படி வைத்திருப்பது என்று மிஸ்கீன் அலிஷாஹ் குழம்பினார். பிறகு அவருடைய தாராள மனப்பான்மை உதவியது. வேறு வழியின்றி அந்தப் பெண்ணை அவர் நிக்காஹ் செய்து கொண்டார்.

அலீப்லைலாவின் ஓர் அறை அவருக்காக ஒதுக்கப்பட்டது. பிறகு என்ன? மிஸ்கீன் அலி ஷாஹ்வின் இந்த அன்புச் செயலின் புகழ் பரவி விட்டது. எல்லாப் பண்ணையார்களின் பேகம்களுக்கும் ஒரு வழி தென்பட்டு விட்டது.

இந்த இள மங்கையரும் வாலிப எழுச்சியின் மயக்கத்தில் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் முகத்தைப் பார்த்ததுமே ‘புறா’க்களாகத் துடித்தார்கள். அதனால் ‘அலீப் லைலா’வின் எல்லைக்குள் புதிய புதிய அறைகள் தோன்றின. பாவம் மிஸ்கீன் அலி ஷாஹ்! வேறு வழியின்றி நன்றியுள்ள பழைய மனைவியருக்கு விவாகரத்து வழங்கினார். ஏனென்றால் இறைவன் ஒரு சமயத்தில் நான்கு மனைவியரை விட அதிகமாக வைத்துக் கொள்வதை தடை செய்து விட்டானே!

ஆனால் ‘குற்ற மீட்பின்’ தேடுதலில் அலையும் இந்த ஆன்மாக்கள் அந்த அறைகளிலும், வலையில் சிக்கிய மீன்களைப் போல் தடுமாற்றம் கண்டன. சுவர்களுடன் தலைகள் மோதிக் கொண்டன; ஆனால் மிஸ்கீன் அலி ஷாஹ்வின் முகத்தைக் கண்டதும் மயக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றன.

மிஸ்கீன் அலி ஷாஹ்விடம் நிறைய வைரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பெண்ணும் வைரத்தை விழுங்கி விட்டுச் செத்துவிடுகிறாள் என்று மக்கள் சொல்கிறார்கள்.

…… …… ……

மிஸ்கீன் அலி ஷாஹ் தனது மகனான ஹூமாயூன் அலிஷாஹ்வுக்காகப் பதூல் பேகத்தைக் கேட்டபோது, கவிதாலயத்தில் தீபங்கள் ஒளி சிந்தின.

இப்போது பதூல் பேகம் பிறந்தகத்திற்கு வரும்போதெல்லாம் இரண்டு காவலர்களும் ஒரு வேலைக்காரியும் அவருடன் வந்தனர். தாய்வீடு தவிர வேறெங்கும் போவதற்கு அவருக்கு அனுமதி இல்லை; மக்கள் ஆன்ம குருக்களைத் தேடித்தான் வரவேண்டுமே தவிர அவர்கள் தங்களுடைய படிக்கட்டுகளைத் தாண்டக்கூடாது! தாய்வீடு செல்லவேண்டுமென்றால் ஒரு மனுவை பதூல் பேகம். மிஸ்கீன் அலி ஷாஹ்வின் அவையில் சமர்ப்பிக்க வேண்டும்; அப்போதுதான் அது பரிசீலிக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்படும். இதற்கான அவசியம் ஏற்படுவதற்கு ஒரு காரணமும் இருந்தது. மிஸ்கீன் அலி ஷாஹ்வின் பல மனைவியர் தங்கள் தாய்வீடுகளுக்குச் செல்வதாகச் சொல்லி தப்பியோடிவிட்டார்கள்! இதனால் பல நாட்கள் அரசாங்க அலுவலங்களின் ஏடுகளில் அதைப் பதிவு செய்வதில் செலவழிந்தன. அலீப் லைலாவில் ஒவ்வொரு விஷயத்திற்கும் நேரம் குறிக்கப்பட்டிருந்தது.

இது பக்கிரியின் குடில் அல்லவா. இங்கு இறைவனின் விருப்பப்படியே ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும் என்பார் மிஸ்கீன் அலி ஷாஹ். தன்னிசையாகச் செயல் படுவதற்கு இது ஒரு நிலக்கிழாரின் மாளிகை அல்லவே!

பதூல் பேகமும் ஹூமாயூன் அலி ஷாஹ்வும் வாஹித் ஹூசைனின் வீட்டிற்கு வரும்போது, பல நாட்களுக்கு முன்பே கடிதப் பரிமாற்றம் நடைபெறும். குறிப்பிட்ட நேரத்தில் ஹூமாயும் அலி ஷாஹ் தென்படுவார். சரிகைத் தலைப்பாகையுடன் நறுமணம் வீச, பளபளக்கும் வைர மோதிரம் அணிந்த கைகளால் முகத்தை கைக்குட்டையால் துடைத்தவாறு காரிலிருந்து இறங்கி வருவார். அந்தக் காரில் ‘அலீப் லைலா’ பெயர்ப் பலையும் பளிச்சிடும். அவர்களுடன் வரும் பழங்கள், இனிப்புகள் மீதும் அலீப் லைலாவின் பெயர் குறித்த சீட்டு இருக்கும். இவை எல்லாம் தர்காவின் பொருள்களே. ஏனென்றால் இது பெரியார் ரஹ்மத் அலி ஷாவின் கொடை, இதில் என்னுடையது எதுவும் இல்லை என்று பணிவுடன் மிஸ்கீன் அலி ஷாஹ் கூறுவார்.

பதூல் பேகத்தின் திருமணம் முடிந்து இது ஐந்தாவது ஆண்டு ஆகும். இப்போது அவள் மிஸ்கீன் அலி ஷாஹ்வுக்காக மூன்றாவது வாரிசை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.

***

நன்றி : ஜீலானி பானு ,  முக்தார் , நேஷனல் புக் டிரஸ்ட் , சென்ஷி

அது ஒரு அமானுஷ்ய பயம்… – மஹாஸ்வேதா தேவி

mahasweta-devi2

மஹாஸ்வேதா தேவி எழுதிய புகழ்பெற்ற ‘திரௌபதி’ சிறுகதையின் இறுதிப் பகுதி… (தமிழாக்கம் : என்.எஸ்.ஜெகந்நாதன்)

….

மாலை ஆறுமணிக்கு தோப்தி அப்ரிஹெண்ட் ஆனாள். அவளை காம்ப்புக்கு அழைத்துச்செல்ல ஒருமணிநேரம் பிடித்தது. கேள்விகள் சரியாக ஒருமணிநேரம் பிடித்தன. ஒருவரும் அவள் மேல் கை வைக்கவில்லை. ஒரு கான்வாஸ் ஸ்டூலில் உட்கார வைக்கப்பட்டாள். எட்டு ஐம்பத்தேழுக்கு அதிகாரியின் டின்னர் டைம். “அவளைக் கவனித்துக்கொள். டூ தி நீட்·புல்” என்று சொல்லிவிட்டு அதிகாரி அந்தர்தியானமானார்.

பிறகு பத்து லட்சம் சந்திரர்கள் தோன்றி மறைந்தனர்.. பத்துலட்ச சந்திர வருடங்கள் கடந்தன. ஒரு லட்சம் ஒளி வருடங்களுக்குப் பிறகு திரௌபதி கண்ணைத் திறக்கிறாள். என்ன அதிசயம்! வானையும் சந்திரனையும்தான் முதலில் பார்க்கிறாள். பிறகு அவளுடைய மனதிலிருந்து ரத்தம் தோய்ந்த நகநுனிகள் நகர்ந்து நகர்ந்து நகர்ந்து செல்கின்றன, தான் அசைய முயன்றபோது கால்களும் கைகளும் கட்டில் கால்களில் கட்டப்பட்டிருப்பதை உணர்கிறாள். ஆசனத்திலும், இடுப்பிலும் இது என்ன ‘பிசுக், பிசுக்’ என்று..? அவளுடைய ரத்தம். வாயில் சுருட்டி அடைக்கப்பட்ட துணி மட்டும் இப்போது அங்கில்லை. தாங்க முடியாத தாகம். ‘தண்ணீர்’ என்று கேட்க வாயை அசைக்க முயன்ற கணத்திலேயே பற்களால் கீழ் உதட்டைக்கடித்து வார்த்தையை விழுங்குகிறாள். தனது அல்குலில் ரத்தப் பெருக்கை உணர்கிறாள். எத்தனை பேர் தன்னைப் புணர்ந்திருக்கிறார்கள்…

கண்களின் ஓரத்தில் நீர் சுரந்தபோது வெட்கமடைந்தாள். கலங்கிய நிலவொளியில் பார்வையற்ற தன் கண்களைத் திருப்பி தன் முலைகளைப் பார்க்கிறாள். நன்றாக ‘கவனிக்கப்பட்டிருப்பதை’ உணர்கிறாள். இந்தமுறை ராணுவ அதிகாரிக்கு பூரண திருப்தி கிடைத்திருக்கும். அவளுடைய முலைக்காம்புகள் கடித்துக் குதறப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தன. எத்தனை பேர்? நான்கு? ஐந்து? ஆறு? ஏழு?

திரௌபதி மூர்ச்சையடைகிறாள்.

கண்களைத் திறந்து பார்க்கும்போது, பக்கத்தில் வெண்ணிறமான ஒன்றைப் பார்க்கிறாள். அவளுடைய உடை . வேறொன்றும் கண்ணில் படவில்லை.

திடீரென ஆண்டவன் அருள் மேல் நம்பிக்கை சுரக்கிறது. ஒருவேளை அவளை விட்டெறிந்திருக்கிறார்கள் – நரிக்கு உணவாக.. ஆனால் காலடிகளின் ஒலி கேட்கிறது. தலையைத் திருப்பிப் பார்க்கும்போது பயனெட் ஏந்திய கார்ட் ஒருவன் சுற்றி வருவது தெரிகிறது. அவன் கண்களில் காமம் புகைந்து கொண்டிருக்கிறது. உதட்டில் வெறிச் சிரிப்பு.

திரௌபதி கண்களை மூடிக்கொள்கிறாள். வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. மறுபடியும் அவளைக் ‘கவனித்துக் கொள்ளும்’ பணி தொடங்குகிறது. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு துண்டு வெளிச்சத்தைக் கக்கிவிட்டு நிலவு தூங்கப்போய்விட்டது. இருள் மட்டுமே மிஞ்சியது.

கைகளும் கால்களும் கட்டப்பட்டு, படுக்க வைக்கப்பட்ட அசையாத பெண் தேகம். அதன்மேல் சுறுசுறுப்பாக இயங்கும் தசைகளால் செய்யப்பட்ட பிஸ்டன்கள் ஏறுகின்றன, இறங்குகின்றன, ஏறுகின்றன, இறங்குகின்றன..

மறுபடியும் காலை வருகிறது.

தோப்தி மேஜேன் கூடாரத்திற்குக் கொண்டுவரப்பட்டு வைக்கோல் போரின்மேல் தூக்கி எறியப்படுகிறாள். அவள் உடல்மேல் அவளுடைய ஆடை வீசப்படுகிறது.

பிரேக்ஃபாஸ்ட், தினசரி பத்திரிகைகள் படிப்பது எல்லாம் முடிந்து, ‘திரௌபதி மேஜேன் அப்ரெஹெண்டட்’ என்ற ரேடியோ மெசேஜ் அனுப்பப்பட்ட பிறகு, அந்த ராணுவ அதிகாரி திரௌபதி மேஜேனை தன்முன் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.

திடீரென ஒரு விபரீதம் நிகழ்கிறது. “உம். கிளம்பு” என்ற உத்தரவு வந்தவுடனே, திரௌபதி எழுந்து உட்காருகிறாள். “எங்கே போகச் சொல்கிறாய்?” என்று கேட்கிறாள்.

“பெரிய தொரை கூடாரத்துக்கு”

“எங்கே இருக்குது?”

“அதோ அங்கே”

திரௌபதி தன் சிவந்த கண்களை அருகிலேயே இருந்த அந்தக் கூடாரத்தின் மேல் திருப்புகிறாள். “சரி, நீ போ. நான் வருகிறேன்.” என்கிறாள்.

சென்ட்ரி ஒரு தண்ணீர்க் குவளையை அவள் முன்னால் தள்ளுகிறான்.

திரௌபதி எழுந்து நிற்கிறாள். குவளையை உதைத்து தண்ணீரைத் தரையில் கொட்டுகிறாள். தன் துணியை பல்லால் கடித்துக் குதறுகிறாள். இந்த அதிசய நிகழ்ச்சியைக் கண்ட சென்ட்ரி “பைத்தியமாயிட்டா! பைத்தியமாயிட்டா!” என்று கூச்சலிட்டுக்கொண்டே மேலிட ஆணைக்காக ஓடுகிறான்.

சாதாரணக் கைதிகளை அவனால் சமாளிக்க முடியும். ஆனால் புரியாதபடி இப்படி நடந்து கொள்ளும் கைதியை சமாளிப்பது அவனால் இயலாத காரியம். ஆகவேதான் அவன் மேலதிகாரியின் உத்தரவிற்காக ஓடுகிறான். ஜெயிலில் ‘பைத்தியக்கார மணி’ அடிக்கும்போது இப்படித்தான் அங்குமிங்கும் ஓடுவார்கள்.

கூச்சல் குழப்பத்தைக் கேட்டு ராணுவ அதிகாரி கூடாரத்திலிருந்து வெளியே வருகிறார். கண்ணைக் கூசவைக்கும் சூரிய ஒளியில் நிமிர்ந்த தலையுடன் முழுநிர்வாணமான திரௌபதி தன்னை நோக்கி நடந்து வருவதைப் பார்க்கிறார். ஆயுதம் தரித்த ஸெண்ட்ரிகள் நடுங்கிக் கொண்டே அவள் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள்.

“இதெல்லாம் என்ன?” என்று கேட்கத் தொடங்கிய அவர் மௌனமாகி விடுகிறார். திரௌபதி அவர் முன்னால் வந்து நிற்கிறாள். நிர்வாணமான தொடையிலும் அல்குலிலும் தோய்ந்து உறைந்து போன ரத்தம். இரண்டு முலைகளிலும் ரணங்கள்.

“இதெல்லாம் என்ன..?” அவர் அச்சுறுத்தப் பார்க்கிறார்.

திரௌபதி மேலும் அருகில் நெருங்குகிறாள். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சிரிக்கிறாள். “நீ தேடிக்கிட்டு இருந்தியே அந்த தோப்தி மேஜேன் நான்தான்..! ‘கவனிச்சுக்க’ன்னு சொன்னேயில்ல? அவங்க எப்படி கவனிச்சாங்கன்னு நீ பார்க்க வேண்டாமா..?”

“இவ துணியெல்லாம் எங்கே..?”

“உடுத்த மாட்டேங்குறா சார்! கிழிச்சுப் போட்டுட்டா..”

திரௌபதியின் கரிய உடல் மேலும் அருகில் வருகிறது. அதிகாரிக்குப் புரியாத ஆவேசத்துடன் சிரித்துக் குலுங்குகிறாள். சிரிக்கச் சிரிக்க, குதறப்பட்ட உதடுகளிலிருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. அந்த ரத்தத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டு வானத்தைக் கிழிக்கும் பயங்கரக் குரலில் கேட்கிறாள்:

“துணி என்ன துணி..? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால முடியும். ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா உன்னால? சீ.. நீ ஒரு ஆம்பிளையா..?”

நாலாபக்கமும் பார்த்துவிட்டு ராணுவ அதிகாரியின் தூயவெள்ளை புஷ் ஷர்ட்டின் மேல் ரத்தம் கலந்த எச்சிலை ‘தூ..’ என்று துப்புகிறாள்.

“நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பிள இங்க யாருமில்ல. என்மேல் துணியைப்போட எவனையும் விட மாட்டேன். அப்போ என்ன செய்வே? வா.. கௌண்டர் பண்ணு.. வா.. கௌண்ட்டர் பண்ணு..”

அருகில் நெருங்கி சிதைக்கப்பட்ட இரு முலைகளையும் அதிகாரியின் மேல் உரசுகிறாள். தனது ஆயுளில் முதல்முறையாக ஒரு நிராயதபாணியான டார்கெட் முன்னால் நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.

***

நன்றி : மஹாஸ்வேதா தேவி, என்.எஸ்.ஜெகந்நாதன், நேஷனல் புக் டிரஸ்ட் , சென்ஷி

« Older entries