அப்பாக்களின் நாட்கள் – போகன் சங்கர்

’போக புத்தகம்’ நூலில் இருந்து..

நன்றி : போகன் சங்கர் & கிழக்கு பதிப்பகம்

*

நேற்று ஒரு நண்பர் திடீரென்று அழைத்து, தான் அடைந்த அவமானங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். உண்மையில் அவர் வாழ்க்கை அவமானங்களின் கூடை. அவருடன் வாழ மறுத்துப்போன அவர் மனைவி சொன்னதாக அவர் ஒன்று சொன்னார். எந்த மனிதனையும் வீழ்த்திவிடும் ஒரு சொல். நான் ஏண்டா இன்னும் உயிரோட இருக்கேன்?’ என்றார். அவர் என்னை அழைத்துப் பேசினதற்கு ஒரு காரணம் உண்டு. அவரைப்போலவே நான் இன்னுமொரு அவமானங்கள் நிரம்பி வழியும் கூடை என்பதே அது. ஆனால் பெரிய அவமானங்கள் இல்லை . பிறர் சிறிய அவமானங்கள் என்று கருதக்கூடியவையே எனக்குள் ஆறாத ரணங்களாக இன்னும் இருக்கின்றன.

டிவியில் சினிமா பார்க்க என்னையும் தன்னுடன் கூட்டிப் போன நண்பனின் அக்காவிடம், இவனைப் பார்த்தா நம்மவா மாதிரி தெரியலியே. இவனை இனிமேல் கூட்டிட்டு வராதே’ என்று அந்த வீட்டுப் பெண்மணி சொன்னது, கார்க் கதவை இப்படி சத்தமாச் சாத்தக்கூடாது என்று பணக்கார நண்பன் முகம் சுளித்தது, வேலை நிமித்தமாகப் போன இடத்தில் பேருந்து இல்லாமலாகிவிட ஆட்டோ வரவழைத்த பெண் உயரதிகாரி பின்னால் வேறு ஆளே இல்லாதபோதும் என்னை முன் சீட்டில் டிரைவரோடு உட்காரப் பணித்தது (நான் மறுத்து 6கிமீ நடந்தே ஊருக்கு வந்தேன்) போன்ற சிறியதுபோலத் தோற்றமளிக்கும் நுட்பமான அவமானங்கள்.

இந்த அவமானங்களைச் செய்கிறவர்களைக் கவனித்திருக்கிறேன். தெரிந்தே பலர் செய்வார்கள். ஒரு வகையில் அவை உன் இடம் இது’ என்று நமக்கு சுட்டிக்காட்டுவது. சிலர் இயல்பாகவே அவர்களையும் அறியாமல் தங்கள் வர்க்கத்தால், சாதியால், பதவியால் இந்த அவமானங்களை மற்றவருக்குச் செய்யப் பயிற்றுவிக்கப்பட்டிருப்பார்கள். இது மாதிரி சமயங்களிலெல்லாம் ஏனோ நான் என் அப்பாவைத் தான் நினைத்துக்கொள்வேன். அவர்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதுபோல. இப்படிப் பூஞ்சையாய் வளர்த்து என் னைத் தெருவில் விட்டாயே என்பதுபோல. தந்தை மகற்காற்றும் உதவி அவையில் முந்தி இருக்கச் செய்வது அல்லவா?

நான் வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் அப்பாவிடம் கொட்டுவேன். அப்போதெல்லாம் அப்பா மிகுந்த பதற்றமும் துயரமும் அடைந்து இரவெல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்ததை இப்போது நினைவுகூர்கிறேன். அது நேரடியாக என் வாழ்வு மட்டுமல்ல, அவர் வாழ்வும் ஒரு தோல்விதான் என்று சுட்டிக் காட்டும் செயல் என்பது இப்போது புரிகிறது. பின்னர் அவர் மனச் சிதைவில் விழுந்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்று உணர்கிறேன். நான் மெல்ல மெல்ல என் தோல்விகளால் அவரை உடைத்தேன். தன் மகன் இந்நேரம் யார் முன்னால் குறுகி நிற்கிறானோ என்ற பதற்றத்திலேயே அவர் கடைசிக் காலங்களில் இருந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் என் வீட்டுக்கு எதையோ விற்க வந்தார்கள். ஏதோ ஒரு வணிகப் படிப்பின் மாணவர்கள். அவர்களை களப் படிப்பு என்று கூறிப் பொருட்களை விற்க அனுப்புவது இங்கொரு வழக்கமாக உள்ளது. நான் மறுத்தேன். அவர்கள் விடாது வற்புறுத் திக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்து, வெளியே போங்கலே’ என்று கத்திவிட்டேன். அவர் கள் ஒருகணம் ஸ்தம்பித்து பிறகு, சாரி சார்’ என்று விலகிப் போனார்கள். மனைவி அருகில் வந்து என்னாச்சு’ என்றாள். உண்மையில் எனக்கே எனது எதிர்வினை அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் செய்தது சற்று அதிகம்தான். ஆனால் இளைஞர்கள். அவர்களுக்கு இவ்வளவு விற்றால்தான் மதிப் பெண் என்ற இலக்குகள் எல்லாம் உண்டு. எல்லாம் நான் அறிவேன். இருந்தாலும்….

நான் மிகுந்த குற்றமாய் உணர்ந்தேன் ஒரு கட்டத்தில் தாள முடியாது வண்டியை எடுத்துக்கொண்டு அவர்களைத் தேடிப் போனேன். தபால் ஆபீஸ் அருகே உள்ள டீக்கடையில் அவர்கள் நின்றிருந்தார்கள். என்னைக் கண்டதும் சற்று மிரண்டார்கள். நான் வண்டியை நிறுத்தி, அந்தப் பொருளை வாங்கிக்கறேன் தம்பி’ என்றேன்.

இன்று காலை அவர்களில் ஒரு பையன் என்னைத் தேடி வந்தான். என்னைப் பார்த்ததும், பொருள் விக்க வரலை சார்’ என்றான் அவசரமாக . பிறகு தயங்கி, படிப்பு முடிஞ்சு போச்சு. ஊருக்குப் போறேன் சார். உங்ககிட்டே சொல்லிட்டுப் போணும்னு தோனுச்சு.’ நான் சற்று வியப்படைந்து அவனை உள்ளே வரச் சொன் னேன். ‘உன் ஊர் எங்கே?’

திருநெல்வேலிப் பக்கம் செய்துங்க நல்லூர் சார்.”

ஓ, எனக்கும் அங்கனக்குள்ளதான்.’

தெரியும் சார். பேச்சிலே கண்டுபிடிச்சேன். சற்று நேரம் மௌனம்.

அவன் திடீரென்று , அன்னிக்கு ஏன் சார் தேடி வந்தீங்க?’ என்றான்.

நான் சற்றுத் தடுமாறி, ‘உங்களை ரொம்பத் திட்டிட்டதுபோல தோனுச்சு.’

அவன் அதைக் கேட்காமல் கண்கள் தூரமாகி, எங்க அப்பா வும் இப்படித்தான் சார்’ என்றான். அவர் வாத்தியார். பள்ளிக் கூடத்திலே யாரையாவது அடிச்சிட்டா, ராத்திரிலாம் எழுந்து அழுதுகிட்டிருப்பாரு என்றவன், நீங்க பரவால்ல சார். இங்கே சில வீட்டுல நாயை ஏவி விட்டுடறாங்க.’

நான் மிகுந்த தர்ம சங்கடமாய் உணர்ந்தேன். மன்னிச்சுக்கோ தம்பி. ரொம்ப மோசமா நடந்துகிட்டேன் அன்னிக்கி.’

அவன், ‘ஐயோ சார்’ என்றான். பிறகு எழுந்து, வரேன் சார்.”

நான், இரு, உன்னியக் கொண்டுவிடறேன்’ என்று அவன் மறுக்க மறுக்க அவனை வண்டியில் ஏற்றி குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் கொண்டுவிட்டேன். டீ சாப்பிடறியாடே.’

‘வேணாம் சார்.’

‘பரவால்ல சாப்பிடு.’

நாங்கள் டீ சாப்பிட்டோம். பஸ் வந்தது.

கூட்டமா இருக்கே. போயிடுவியா?” அவன், பரவால்லை சார்.’

ஊருக்குப் போக பைசா வச்சிருக்கியா?’

இருக்கு சார்.’

நான் தயங்கி, உங்க அப்பாவைக் கேட்டதாச் சொல்லு.’

அவன் புன்னகைத்து, அவரு செத்துப் போயிட்டாரு சார்’ என்றபடி பேருந்தில் தாவி ஏறிக்கொண்டான். ‘ஊருக்கு வந்தாக் கட்டாயம் வாங்க சார்.’

நான் ஏனோ மிகுந்த தளர்வாய் உணர்ந்தேன். சற்றுநேரம் அங் கேயே இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன்.

வீடு வந்ததும் மனைவியிடம் அவசரமாக, கீர்த்தி எங்கே?’ என்றேன். அவள், ‘விளையாடப் போயிருக்கான்’ என்றாள். பின்பு நெருங்கி, என்ன, உன் மூத்த மகனை பஸ் ஏத்தி விட் டாச்சா?’ என்று கேட்டாள். நான், என்ன உளர்றே?’ அவள், ‘நான் உளறலை. நான் தான் உன் கண்ணைப் பார்த்தேனே. நீ கீர்த்தியை மட்டும் ஒருமாதிரி தலையை சாய்ச்சி, நாடியை உயர்த்திப் பார்ப்பே. அந்தப் பையன் பேசப் பேச, நீ அதேமாதிரி அவனைப் பார்த்தே’ என்றாள். நான் சற்றுநேரம் அசையாது அப்படியே நின்றிருந்தேன். பிறகு தலையை உலுக்கிக்கொண்டு, “ச்ச்ச்சே’ என்றேன். பிறகு கீர்த்தி நினைப்பும்தான். ஆனா அதைவிட அப்பாவோட நினைப்பு.

அவள் இன்னும் நெருங்கி, ஒன்னு தெரியுமா?” என்றாள். ‘என்ன?’ “நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். இன்னிக்கு அப்பாவோட திதி.’


*
Thanks to : Bogan Sankar

Kindle Book : ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’

எனது மூன்றாம் சிறுகதைத் தொகுப்பு ‘அங்கனெ ஒண்ணு, இங்கனெ ஒண்ணு’ இப்போது அமேசான் கிண்டிலில். ஆதரவு தாருங்கள். சுட்டி : https://www.amazon.in/dp/B085T2JHYG

*

நன்றி: திண்ணை, பதிவுகள், வார்த்தை, விமலாதித்த மாமல்லன் & அஷ்ரஃப் சிஹாப்தீன்.

சால்வடார் டாலியின் ஓவியங்கள் – பிரம்மராஜன்

பிரம்மராஜனின் மீட்சி இதழ் 28-இல் இருந்து, நன்றியுடன்..

பெரும் பயப்பதியும், காரண அறிவும் பிணைந்து நம்மை இயக்குகிற இந்த இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் நமக்கு அர்த்தத்தை அளிக்க வேண்டுமானால் அது ஸர்ரியலிஸத்தின் மூலமாகவே அதிகமாய் சாத்தியப்படும். வேறு எந்தவித கோணத்திலும், ஆய்வு முறைமையிலும் பிடிபடாத பல உறுத்தும் உண்மைகள் – ஹிரோஷிமா, வியத்நாம், கம்பூச்சியா, டெஸ்ட் ட்யூப் குழந்தைகள், பெர்ஷிங் IIs ஏவுகணைகள்- இவை யாவும் ஸர்ரியலிஸ வெளிப்பாட்டில் நமது பிரக்ஞையில் கச்சிதமாகப் பதிவாகின்றன. ஸர்ரியலிஸ ஓவிய இயக்கத்தில் டாலியின் பங்கு தனித்துவமானது இருபதாம் நூற்றாண்டின் இரட்டை நிகழ்போக்குகளான Sexம், paranoiaவும் டாலியின் உலகத்திலும் நமது உலகத்திலும் ஒரே மாதிரி இயங்குகின்றன. மற்றொரு ஸர்ரியலிஸ ஓவியரான Max Ernst மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் William Burroughs ஆகிய இருவரிடமிருந்தும் டாலி வேறுபடுகிறார். முந்திய இருவரும் தமது தனித்துவ உலகங்களின் நிழல்களில் சமைந்துவிடும்போது டாலி தனது ஓவிய வெளிப்பாடுகளில் இருந்து வெளிப்படுகிறார்.

ஃபிராய்டிஸ யுகத்தின் தாக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்களில் முதன்மையானவர் டாலி. இருபதாம் நூற்றாண்டு ஸ்வயத்தினுடைய (Peyche)வினோத வியாபக உலகினை, தொலைபேசிகள், குழையும் கைக்கடிகாரங்கள், பொறிக்கப்பட்ட முட்டைகள். கடற்கரைகள் போன்ற சாதாரண உலகின் படிமங்களைக் கொண்டு சித்தரிக்கிறார். டாலியின் ஓவியங்களில் நடக்கும் ‘நிகழ்ச்சிகளுக்கும் நமது நடைமுறை யதார்த்தத்தின் நிகழ்ச்சிகளுக்கும் அதிக வேறுபாடில்லை என்று சொல்ல முடியும். டாலியின் ஓவியங்களின் பிரதான குணம் என்று சொல்லப்படக் கூடியது அவற்றின் hallucinatory naturalism of the Renaissance. இதற்கு மேற்பட்டு டாலி புகைப்படத் தன்மையான யதார்த்தத்தையும், குறிப்பிட்ட ஒருவித திரைப்பட வெளிப்பாட்டு முறையையும் உத்திகளாகப் பயன்படுத்துகினர். இந்த உத்திகள், பார்வையாளனை அவனுடைய வசதிக்கு ஏற்ப மிக நெருக்கமாக ஓவியங்களுடன் தொடர்புபடுத்துகின்றன.

பிற ஸர்ரியலிய ஓவியர்களான Max Ernat, Rene Magritte. Tanguy ஆகியோர் சம்பிரதாய விவரணை வெளியைப் (Traditional Narrative Space) பயன்படுத்தினார்கள். இவ் விதமான விவரணை வெளி, ஓவியத்தின் காட்சிப் பொருளை முன்பார்வை கொண்டதாகவும் (Frontal) பொதுப்படுத்தப்பட்ட கால அமைப்பை உடையதாகவும் ஆக்குகிறது. மாறாக டாலி தனது ஓவியங்களை, திரைப்படத்தில் ஒரு Frameலிருந்து மற்றொரு Frameக்கு கடந்து செல்வது மாதிரியான உணர்வைத் தரும்படி ஆக்கியிருக்கிறார். டாலியின் ஓவிய உலகில் நம்மை அமைதியில்லாமல் துன்புறுத்தும் வெளிச்சம், சூரியனைச் சார்ந்தது என்பதை விட மின் ஒளியைச் சார்ந்தது என்பது சரியாக இருக்கும். மேலும் டாலியின் ஓவியங்கள், சென்டிமென்டலிஸத்தைத் தவிர்த்த அழகான நியூஸ் ரீல்களாக நமது மண்டைகளில் தயாரிக்கப்பட்ட சினிமாப் படங்களின் இயக்கமற்ற Stillகளைப் போலிருக்கின்றன. முழு மனிதனையே தனது சித்திரங்களில் படைக்கும் டாலியின் ஒவிய வளர்ச்சிக் கட்டங்கள் பின்வருமாறு அமைகின்றன.

1.The classic Freudian Phase.
2. The Metamorphic phase. (A Poly-perverse Period) .
3. The Religious Phase.
4. The Nuclear Phase.

1968ம் ஆண்டு டாலி கூறிய வார்த்தைகள் ஒய்வற்று ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன !
“The Specialized Sciences of our times are concentrating on the study of the three constants of life: the Sexual instinct, the sentiment of death, and the anguish of space – time.”
*
மீட்சி முகப்பு அட்டை ஓவியம் : டாலியின் ‘Geopoliticus’ Child Watching the Birth of a New Man. 1943 Reynolds – Morse Collection, Cleveland, Ohio.

*

நன்றி : பிரம்மராஜன்

*

மேலும் :
சால்வடார் டாலி – பிரம்மராஜன் தொகுப்பில் இருந்து…  –  நன்றி : யுவன் பிரபாகரன்

மின்தூக்கி

தூக்குவது பற்றி நண்பர் ஆசாத் எழுதியிருப்பது உற்சாகம் தருகிறது!

//1857ம் ஆண்டு முதலாக மின்தூக்கிகள் கட்டிடங்களின் செங்குத்துப் போக்குவரத்துக்கான பயன்பாட்டில் இயங்கிவருகின்றன. பயனர்கள் செல்லும் கூண்டு, அது மேலும் கீழும் சென்றுவரத் தண்டவாளம், கூண்டின் எடைக்கும் பயனர்களின் எடைக்கும் எதிர் எடை, அனைத்தையும் இணைக்கும் எஃகு முறுக்குக் கயிறுகள், இயக்கும் இயந்திரம், கதவுகள் இவற்றை மின்தூக்கிகளின் முக்கியமான பாகங்கள் எனச் சொல்லலாம்.// என்று சிறு குறிப்பும் வரைகிறார், எச்சரிக்கையாக. வாழ்த்துகள்.

ஆசாத் நாவல் பற்றி ஃபேஸ்புக்கில் அய்யனார் விஸ்வநாத் எழுதியதை நன்றியுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

*

அபுல்கலாம் ஆசாத் அவர்களின் மின்தூக்கி நாவலை வெளிவருவதற்கு முன்பே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1980 மற்றும் 90 களின் வளைகுடா வாழ்வை நாவலாக எழுதியிருக்கிறார். சவுதி அரேபிய நிலம் குறித்தும் அங்கு வேலை நிமித்தம் செல்லும் தமிழர்களின் தனியர் வாழ்வு குறித்தும் சுவாரசியமான மற்றும் இலகுவான மொழியில் எழுதப்பட்டிருக்கும் நாவல்.

சவுதியிலிருந்து கதை துபாய்க்கும் வந்து சேர்கிறது. கதையின் நாயகனான ஆரிஃப் பாஷாவிடமிருந்து நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்த – குடும்பம் மற்றும் வேலை சார்ந்து வளைகுடாவில் வசிக்க நேரிடும் நம் ஒவ்வொருவரின் தன்மைகளையும் பார்த்துக் கொள்ள முடியும்.

பெரும்பாலான வளைகுடா வாசிகளின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஆரிஃப் பாஷாவின் பயணமும் எதிர்காலம் குறித்தான கனவுகளுடன் வாழும் இளைஞனின் மன ஓட்டமும்தான் இந்த நாவல். வளைகுடாப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மின்தூக்கி நாவலுக்கு வரவேற்பும் அன்பும்.

ஆசாத் அண்ணனின் தனித்துவமான பல குணங்களை ஆரிஃப் பாஷாவிடமும் காண முடிவது இன்னொரு சுவாரசியம்
*
நன்றி : அய்யனார் விஸ்வநாத்

அமேஜானில் வாங்க இங்கே அழுத்தவும்.

*

முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சுழன்று பார்க்கும் கதை இது. சவூதி அரேபியாவில் வரிசையில் நின்று, நிமிடத்துக்குப் பதினாறு ரியால் நாணயங்களை பொதுத் தொலைபேசியில் ஒவ்வொரு நாணயமாகப் போட்டுக் குடும்பத்தாருடன் வளைகுடாவாசிகள் உரையாடிய நாள்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரச் செய்த முயற்சி இது. அபாரமான வளர்ச்சியை நோக்கி துபை சென்றுகொண்டிருக்கையில் அதனுடன் சேர்த்துத் தன்பயணத்தையும் அமைத்துக்கொண்டவனின் சில ஆண்டுகளை வாழ்ந்து பார்க்கும் களம் இது. – ஆசாத்

 

 

« Older entries