வாசகர் பார்வை : ‘தங்ஙள் அமீர்’

மறைந்த உயிர் நண்பர் தாஜ் (எழுதும்போதே கண்ணீர் வருகிறது எனக்கு) எழுதிய குறுநாவல்களின் தொகுப்பான ‘தங்ஙள் அமீர்’ பற்றி சகோதரர் முஹம்மது சுஹைப் முகநூலில் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளரா என்று ஆச்சரியப்படும் சுஹைப், யாரென்றே தெரியாமற் போனாரே தாஜ் என்று உருகுகிறார்.

பதிவில் கண்ட மறுமொழிகளையும் கீழே இணைத்திருக்கிறேன். – AB
*

தமிழில் இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் இருந்தார் என்றே ரொம்ப நாட்களுக்குப் பிறகு… எனக்கு இந்தப் புத்தகம் பார்த்துதான் தெரியும்.

சீர்காழியைச் சேர்ந்த தாஜ் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை .மிகச்சமீபமாகத்தான் இவர் நம்மை விட்டும் மறைந்தார் என்ற தகவல் கூட அருமை நண்பர் நிஷா மன்சூர் சொல்லித்தான் தெரியும்.

இப்படித்தான் சிலர் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்து போகின்றனர்.

அவரது அடர்த்தியான எழுத்துக்களைக் கொண்ட ’தங்ஙள்அமீர்’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை ..வாசிக்கும் போது இவர் இருக்கும் போது இவரை அறியாமற் போனோமே என்ற வருத்தமே மேலோங்கியது.

சிறுகதை என்ற இலக்கணத்தையும் மீறிய சற்றே பெரிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது…நாலோ…ஐந்தோ கதைகள்தான் உள்ளன.

பொதுவாக… தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்து எங்கள் பக்கம்…அல்லது குமரி மாவட்டத்தைச் சேர்ந்ததான கதைகளையே நான் பெரிதும் வாசித்துள்ளேன். ஆனால்…முஸ்லிம்கள் தமிழகமெங்கும் பரவி வாழ்கிறார்களே…இல்லையா…?

கீழ்த் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை…மிக நேர்த்தியாக .எனதுமுதல்திருமணம்… பெருநாள்காலை..போன்ற கதைகளில் மிக விரிவாக சித்தரிக்கிறார்….

தொகுப்பின் தலைப்புக் கதையான ’தங்ஙள் அமீர்’ கதை முழுக்க சவூதி அரேபியா தம்மாம் மற்றும் ரியாத் நகர்களில் நடக்கிறது…இந்த இரண்டு ஊர்களிலுமே நான் பணி செய்தவன் என்பதால் இக்கதையும் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது…

இந்தியாவிலிருந்து மாந்ரீகம் செய்யும் ஒரு கேரளத் தங்ஙள் மும்பை வந்த ஒரு அரபியின் அழைப்பை ஏற்று அவன் காதலிக்கும் ஒரு பெண்னை மாந்த்ரீக சக்தியால் அவனோடு சேர்த்து வைக்கும் பொருட்டு அவனோடு ரியாத் சென்று… அது முடியாத காரணத்தால் எங்கே அந்த அரபி தன்னை நாடு திரும்ப அனுமதிக்க மாட்டானோ…?என்ற அச்சத்தில் கேரள முஸ்லிம்களிடம் தஞ்சமடைய…அவர்கள் தங்களது செல்வாக்கை பய்படுத்தி தங்ஙளை இந்தியாவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும் செயலை…மிக அற்புதமாக சித்தரிக்கிறது கதை.

சவூதிக்கு ஒரு முதலாளியிடம் வேலை செய்ய வந்து அந்த முதலாளியின் அராஜகம்…பிடிக்காததால்…அவனை விட்டும் தப்பி…வேறு எங்கோ சென்று தலைமறைவாக வாழ்ந்து…நாலைந்து ஆண்டுகள் உழைத்த பொருளோடு ..இறுதியாக இந்தியத் தூதுவரகத்தில் தஞ்சமடைந்து பிறகு தூதுவரகம் வழங்கும் தற்காலிக பாஸ்போர்ட்டில் தாய்நாடு திரும்பிய பலரது கதைகளை நான் அங்கிருக்கும் போது நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

தங்ஙள் கதையும் அம்மாதிரியானதுதான். என்ன வழக்கமான கூலித் தொழிலாளியாக இல்லாமல் சற்று மேல் மட்ட கதையாக இது சொல்லப்படுகிறது

“எனது முதல் திருமணம் “கதை தாஜ் சிறுவயதாக இருந்த போது… விளைச்சல் இல்லாத தென்னை மரத்துக்கு திருமணம் செய்து வைத்தால்…விளைச்சல் பெருகும்..என்ற பாரம்பர்ய கீழ்த்தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நம்பிக்கையையொட்டி….அந்த தென்னை மரத்துக்கு தாஜையே திருமணம் செய்து வைத்த கலகலப்பான நிகழ்வை… அங்குள்ள முஸ்லிம்களின் பேச்சு நடையில் சித்தரித்துள்ளார்..

பெருநாள் காலை’யும் அதே மாதிரியான ஒரு முஸ்லிம்கள் வாழ்வியல் சித்தரிப்புதான்.

இறந்தவன் குறிப்புக்கள்’ மிகவும் அடர்த்தியான இலக்கியச் சொல்லாடல்கள் மிகுந்த கதை.இப்படியான எழுத்துக்களை எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள் கூட…இருந்திருக்கிறார்களா..? என்று என்னை வியக்க வைத்த ஒரு நிரூபணம் .

தாஜ் பத்திரிக்கைகளில் எழுதியவரா…? என்று தெரியவில்லை.

எனக்குத்தான் தனிப்பட தெரியாமல் போனாரா…? அல்லது இஸ்லாமிய சமூகமே அவரைக் கண்டு கொள்ளவில்லையா….? என்பதும் தெரியவில்லை.

கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர். யாரென்றே தெரியாமற் போனது ஒரு இலக்கிய சோகம்.

*

Thanks to : K S Mohammed Shuaib

*

மறுமொழிகள் :

Firthouse Rajakumaaren Nazeer : ஒரு சிறந்த இலக்கிய வாசகர் கவிஞர் ,எழுத்தாளர் தாஜ் அவர்களைத் தெரியாமல் இருந்தது ஆச்சிரியமாக இருக்கு ஜி !

நிஷா மன்சூர் : பெரும் சோகம் இது. தமிழ்ச் சூழலில் படைப்புகளை விட படைப்பாளிகளின் பாலிடிக்ஸ் முக்கியத்துவம் பெறுகிறது

Slm Hanifa : எனக்கு பத்துவருடங்களுக்கு முன்னரே அறிமுகமானார்.. ஆபிதீன் பக்கங்களை அவர் எழுத்துக்கள் அலங்கரித்தன.. தளம் சிற்றிதழ் அவரின் படைப்புகளை பிரசுரித்தது.. தமிழ்சினிமாவின் பின்னணியில் அசோகமித்திரன் எழுதியதைவிடவும் இவரின் எழுத்து உன்னதமானது.. ஆனாலும் இவரைப்பலரும்கண்டுகொள்ளவில்லை… மரணத்திற்கு முதல் நாளும் இவரோடு பேசினேன் … அனாரின் கவிதைகள் பற்றிய இவரின் பார்வை எத்துணை சிறப்பானது தம்பி..

Mohamed Sabry : இவர் அறிமுகமானவர்தான். கட்டாயம் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். புத்தகம் இருந்தும் வாசிக்கவில்லை. அவர் மரணச் செய்தி கேட்டதும் மிகவும் கவலையாக இருந்தது. அண்மையில்தான் தங்ஙள் அமீர் வாசித்தேன்.

Meeran Mitheen : நல்ல நேசமுள்ள அன்பாளராக இருந்தார்.

Kannan Sundaram : சுரா நடத்திய காலத்திலிருந்தே காலச்சுவடில் பங்களித்துள்ளார். அதிகம் எழுதுபவர் அல்ல.

நசிஹா நேசன் : முகநூல் நண்பராக இருந்தவர்…முன்னர் சில நேரங்களில் முகநூல் உள்டப்பி மூலம் பேசியதுண்டு காகா….

Moulasha Moulasha (பிறைநதிபுரத்தான்)  : 2002-3 களில் திண்ணை இணைய தளத்தில் அடிக்கடி கட்டுரை கவிதை எழுதுவார். அவ்வப்போது நானும் எழுதும்போது நன்பரானோம். அடிக்கடி மெயில் மூலம் ஊக்கம் தருவார். சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இரண்டு முறை வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடையில் போன் மூலம் தொடர்பு கொள்வதுண்டு எழுத நிறைய விஷயங்கள் இருந்தன அவரிடம். எதிர்பாரா மரணம் – ஒரு படைப்பாளியை பறித்துக் கொண்டது.

Rasool Mohideen ; ஐம்பது லட்சம் முஸ்லிம்கள் வாழும் தமிழகம். இன்று ஐயாயிரம் முஸ்லிம் எழுத்தாளர்கள் உயிர் வாழக் கூடும். மாவட்டம், சாதி, இஸம், முற்போக்கு லாபி, குழு மனோபாவம் அழுத்துகிறது.இப்போதைக்கு முகநூல் இணைக்கிறது.