சித்தி மா (சிறுகதை) – எஸ்.எல்.எம். ஹனீபா

நன்றி : காலச்சுவடு  & ஹனீபாக்கா

*

slmhan-by-naleem

சித்தி மா  – எஸ்.எல்.எம். ஹனீபா

ஆற்றின் மேற்குக் கரையின் கண்டல் காடுகளில் சூரியன் மிதந்து கொண்டிருந்தான். ஆற்றங்கரை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. சூரியனின் அந்திக் குளியல், கொள்ளை அழகில் குதூகலிக்கும் இரவைத் தழுவும் தாபம்.

கண்கள் சுட்டெரிந்தன. வாப்பாவின் கை பிடித்து ஆமையரப்பாட்ட ஆட்டுக் குட்டி வாங்கப் போன அன்றிலிருந்து இந்த ஆற்றங்கரையை இத்தனை காலமாக அவரும் பார்க்கிறார். எத்தனை அழகு, எத்தனை கோணம், எத்தனை சிலிர்ப்பு.

அவர் ஆற்றங்கரையைப் பார்த்துக் கொண்டிருக்க வீதியில் போவோரும் வருவோரும் அவரைப் பார்த்துக் கொண்டு போவார்கள். அவர் ஊருக்குப் புதினம். ஊர் அவருக்குப் புதினம். தீராத புதினம்.

அண்ணாவி சாச்சாவின் களி கம்பு…

நூகு சாச்சாவின் சிலம்பாட்டம்…

அலிக்குட்டி ஓடாவியாரின் தொட்டில் ஊஞ்சல். . .

ஓடக்கரை பூலாமீர்சா சாச்சாவின் கோடு கச்சேரி…

வெடிக்கார இபுறான்குட்டி மாமாவின் புலி வேட்டை…

அலியார் போடியாரின் குதிரை வண்டி…

உலக்க பாவாவின் வெட்டுக்குத்து…

நெடிய மையப்பாவின் களகம்பும் விரால் மீன் கூடையும்…

அபுசாலி மச்சானின் கரப்பந்தாட்டம்…

பட்டறையர் மாமாவின் கந்தூரியில் பசு நெய்யில் குழைந்துகிடக்கும் ஆட்டுக்கறித் துண்டங்கள்…

சித்திமாவின் பொங்கிப் பூரித்துக் கிடக்கும் பேரழகுத் துண்டங்கள்…

குண்டுமணி போலும் ஊருக்குள் எத்தனை புதினங்கள்.

ஹாஜியார் மக்காவுக்குப் போய்வந்த பதினைந்து நாட்கள் பதினைந்து மணித் துளிகள்போல் உம்மா இரண்டு நாட்கள் கண் கலங்க, உடல் குலுங்க, ஹாஜியாரை முத்தமிட்டுச் சென்றார்.

இன்று வியாழன் மாலை – உம்மாவைக் காணும் நாள். உம்மாவின் கையால் இஞ்சி பிளேன்டீ குடித்து விட்டு ‘மஃரிப்’ தொழப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நெஞ்சில் நிய்யத் உறுதியாகியது.

ஆற்றங்கரை வீதியில் மிதந்து சென்ற ஹாஜியாரின் புராதன காலத்து சைக்கிள் வண்டி திடீரென்று குறுக்கு வீதியால் அவரை அழைத்துச் சென்றது. முன்னால் வரும் சந்தியால் திரும்பினால் மூணு வீடு தள்ளி உம்மாவின் மண் குடிசை. வாசலில் பனி அவரைப் பந்தல். குருத்து மணலைக் கொட்டி நிறைத்திருந்த வாசல்.

எதிரே வரும் சந்தியைக் கண்டு சைக்கிளின் வேகம் மட்டாகியது. திடீரென்று கேற்றின் உள்ளிருந்து ஒரு ‘கை’ அவரின் சைக்கிளின் ஹெண்டலை அலாக்காகப் பிடித்து நிறுத்தியது.

இந்த நேரம் பார்த்து, இந்த வீதியால் நான் வருவேனென்று சித்திமாக்கு யார் சொன்னது? எத்தனை தருணங்களின் காத்திருப்பு… அவரின் எண்ணம் மடிந்து விழுந்த மறுகணம்,

“என்ன ஹாஜியார்! மக்காவுக்குப் போய் அன்று பிறந்த பாலகனா, சந்தனக் கட்டை ஆயிட்டீங்களாமே. எங்களக் கொத்திப் பிளந்த ‘கொறக் கொள்ளிக் கட்டைய’ நாங்க மறக்கல்ல. என்னையும் தொட்டுட்டுப் போயிருந்தா, என்ட பாவமும் அழிஞ்சிருக்குமே. நீங்க ஆம்பிளைக, லேசா மறந்திருப்பீங்க” சித்திமாவின் குரலில் ஏதோ ஒன்று இழையோடிக் கசிந்தது.

சித்திமா, தனக்கு முன்னால் வளைந்துகிடந்த வீதியை மேலும் கீழும் பார்த்தாள். மறு கணம், ஹாஜியாரின் தோள் பட்டையைப் பிடித்து, தலையைக் கவிழ்த்து, தொழுகையில் பூத்துக் கிடந்த நெற்றியிலும் அத்தர் மணக்கும் மோவாய்த் தாடியிலும் மூச்சுமுட்ட முத்தமிட்டாள். ஹாஜியாரின் சைக்கிள் ஆடிப் போனது.

அவரின் பாதங்கள் நிலத்தை அழுத்திப் பிடித்தன. ஹாஜியார் முன்னும் பின்னும் பார்த்தார். இடது பக்கப் புற வளவில் மாமரங்களும் தென்னைகளும் பூத்துக் குலுங்கும் முருங்கை மரங்களும் மஹ்ஷர் பெருவெளியில் கண் கண்ட சாட்சியங்களோ.

மரங்களெல்லாம் கொண்டல் காற்றில் அவருக்குப் பயங்காட்டிச் சிரிப்பதுபோல் கெக்கலித்தன. குளிர் தழுவிய மஃரிப் வேளையிலும் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பள்ளிவாசலிலிருந்து “அல்லாஹு அக்பர்”. அவரின் சைக்கிள் அவரிடமிருந்து விடை பெற்றது.

“மெய்தான்! நம்மடெ ரசீதாவுக்கு… உங்கட ரசீதாவுக்கு கவிதைப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாவது” அந்த வார்த்தையில் சந்தனத்தின் மணம் குழைந்து காற்றில் கலந்து அவரின் நாசித் துவாரங்களை நிறைத்தது.

“யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னித்து விடு.”

உம்மாவின் குடிலை மறந்து அவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

(end)

*

ஒவியம் : நளீம்

அதிசயம் – கந்தர்வன்

சீர் வாசகர் வட்டம் வெளியிட்ட ‘கந்தர்வன் கதைகள்’ தொகுப்பிலிருந்து நன்றியுடன் வெளியிடுகிறேன். அந்தப் பனைமரத்தை பயில்வான் மோதும் ஒவ்வொருமுறையும் என் கண்கள் கலங்கின. இது என்ன அதிசயம் என்கிறீர்களா? – AB

*

gandarvan kathaikal - seer vasakar vattam - design Santosh Narayanan

அதிசயம் – கந்தர்வன்

அறுப்புக் காலம் முடிந்திருந்தது. பிந்தி எள் விதைத்தவர்களின் வீட்டு வாசல்களில் மட்டும் எள் செடி போர்களாய்க் கிடந்தது. வெயில் மயக்கத்தில் ஆட்கள் திண்ணைகளில் கண் செருகிக் கிடந்தனர். மூன்று மணி சுமாருக்குப் பெரிய வீட்டுப் பக்கம் சலசலவென்ற சத்தம் வந்தது. தொடர்ந்து தெருக்களில் சலனம். உற்சாகமாகப் பெரிய வீட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். ஓட்டச் சத்தத்தில் திண்ணைகளின் உறக்கம் கலைந்தது. என்னவென்று பார்க்கக் கைப்பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு பெண்களும், துண்டுகளை எடுத்து முதுகில் போட்டுக்கொண்டு ஆண்களும் போனார்கள்.

பெரிய வீட்டு சிமெண்டுத் திண்ணையில் ஒரு திடமான மனிதர் உட்கார்ந்திருந்தார். முகம் மட்டுமே சின்னப் பூசணிக்காய் மாதிரி உருண்டு பெரிதாயிருந்தது. கைகள் ஒவ்வொன்றும் நீளமான தேக்கங்கட்டைகள் போலிருந்தன. தோள்கள் உயர்ந்து நெஞ்சு படர்ந்து பெரிய வயிறு அடங்கிப் பதவிசாக உட்கார்ந்திருந்தார். அவருக்கு அளவாயிருந்த அரைக்கைச் சட்டைக்குள் ஊர்ப் பெரிய ஆம்பளைகள் ரெண்டு பேர் நுழைந்து கொள்ளலாம். மழைக்கு அடர்ந்து வளர்ந்த புல் கூட்டமாக, நெஞ்சு முடி செழித்துத் தெரிந்தது கழுத்துக்குக் கீழே. வலது தோளில் கறுப்புப் போர்வை ஒன்று மடித்துக் கிடந்தது. சுற்றிச் சேர்ந்துவிட்ட கூட்டம் காரணமாகக் காற்றில்லாமல் முகத்தில் வேர்வை படர்ந்தபோது அந்தப் போர்வையில் துடைத்துக்கொண்டார்.

அவர் பனைமரத்தைப் பிடுங்கப் போகிறார் என்றார்கள். “வேரோடா?” என்று கேட்டதற்கு, “பூமிக்கு மேலே உள்ள கொஞ்ச வேரோடு” என்றார் பெரிய வீட்டுக்காரர். ஊரில் அதுவரை நடந்திராத அதிசயம் நடக்கப் போறதில் குதியாட்டம் போட்டார்கள். ஓடிப்போய் ஊருக்குள் நிற்கும் பனைமரங்களை அண்ணாந்து பார்த்துவிட்டு, “ஆ” என்றார்கள். மரத்தின் தூரைக் கட்டிப் பிடித்துவிட்டு, “அம்மாடி” என்றார்கள்.

Please click the links

தொடர்ச்சி 2
தொடர்ச்சி 3
தொடர்ச்சி 4
தொடர்ச்சி 5

தொடர்ச்சி 6
*
நன்றி : சீர் & ஆசிப் மீரான்
*
தொடர்புடைய ஒரு பதிவு

கொம்பன் – கந்தர்வன் சிறுகதை

பெருமையின் பிரிவுகள் – இமாம் கஜ்ஜாலி

அறிஞர் குழு அறிவை வைத்துப் பெருமையடிப்பது போல், பக்தர் குழு பக்தியை வைத்துப் பெருமையடிக்கிறது ! – இமாம் கஸ்ஸாலி (ரஹ்)

*

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் , Sufi Islam அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் (ஷரியத்,தரீக்கத்)
*

நூல் : சிந்தனையின் சிறப்பு
மூலம் : ‘ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்‘ ‘இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள்.
தமிழ் விரிவுரை : எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி

**
அறிஞர்களும் பக்தர்களும் தெரிந்தோ தெரியாமலோ பெருமையடிக்கிறார்கள் என்று நான் குறிப்பிட்டேன். இப்போது, அவர்களின் பெருமையுணர்வு எத்தனை பிரிவுகளாகப் பிரிகிறது என்று பார்ப்போம்.

முதற் பிரிவு: இந்தப் பிரிவிலுள்ளவர்கள் நீங்காத பெருமையுடையவர்கள். இந்த உணர்வு மனப்பரப்பில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. பெருமையான எண்ணமும்” சிந்தனையும் இவர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கின்றன. என்றாலும் இவர்கள் அவற்றை வெளியில் காட்டிக் கொள்வதில்லை. சில வேளைகளில் அவர்கள் பணிவுள்ளவர்கள் செய்யும் வேலைகளைச் செய்கிறார்கள்; பணிந்து நடப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். தம்மை விட மேலானவன் என்று கருதப்படும் ஒருவனைப் பின்பற்றுகிறார்கள்.
இவர்களின் உள்ளப் பரப்பில் பெருமை மரம் வேரூன்றி நிற்கிறது என்றாலும் அதன் கிளைகள் துண்டிக்கப் படுகின்றன. எனவே இவர்கள் பகிரங்கமாகப் பெருமையடிப்பதில்லை.

இரண்டாம் பிரிவு: இந்தப் பிரிவில் கட்டுப்பட்டவர்கள் தம்முடைய பெருமையுணர்வைச் செயலில் காட்டுகிறார்கள். எண்ணத்தில் மட்டுமின்றி, சொல்லிலும் செயலிலும் இந்தப் பெருமை பிரதிபலிக்கிறது. இவர்கள் நாலு பேருக்கு மத்தியில் அர்த்தமில்லாத பல வேலைகளைச் செய்கிறார்கள். புன்னகை பூப்பதும் இனிமையாகப் பேசுவதும் அவர்கள் வரவேற்காதவை. புன்னகை பூத்தால் தம் கண்ணியம் குறைந்து விடுமாம்! இனிமையாகப் பேசினால் தம் அந்தஸ்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமாம்! அறியாமை! பெருமானாரை விட அந்தஸ்திலும் அறிவிலும் பக்தியிலும் சிறந்தவர் யாரேனும் இருக்க முடியுமா? ஆனால் அவர்கள் இப்படி நடக்கவில்லையே! அவர்கள் புன்னகையோடு பழகினார்கள்; இனிமையோடு உரையாடினார்கள். எனவே இவர்கள் முதற் பிரிவினரை விடத் தாழ்ந்தவர்கள்.

அறிஞர்கள் பெருமைக்குரியவர்கள் தான்; இதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் பெற்றிருக்கும் அறிவைப் பொறுத்து அவர்களின் சிறப்பு பெருகுகிறது. அவர்கள் தம்மைப் பற்றி அதிகமாக எண்ணாமலிருந்தால் இறைவனிடம் அவர்களின் பெருமை உயரக்கூடும். ஆனால் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் உரையாடும் முறையையும் பார்க்கும் போது நம்மால் வேதனைப் படாமல் இருக்க முடியவில்லை. அறிவைச் சுமந்த அவர்கள் எதற்காக இந்த குப்பையைச் சுமக்க வேண்டும்?

அகிலத்தை அளந்து பார்க்கும் திறன் படைத்த அவர்கள் யாருக்காக அருவருப்பை வாரிக் கட்டிக் கொள்ள வேண்டும்? “என்னைப் போல் இந்தத் துறையில் அல்லும் பகலும் ஈடுபடுகிறவர்கள் யார்?” என்று அவர்கள் கேட்கிறார்கள். “என் ஆயுளில் பெரும்பகுதியைக் கல்விக்கும் சிந்தனைக்கும் செலவிட்டு விட்டேன். மார்க்கத்தின் மர்மங்களையெல்லாம் நான் கரைத்துக் குடித்திருக்கிறேன்…” என்று வெட்கமின்றிக் கூறுகிறார்கள். இதுபோன்ற விவரங்களை வெளியிடும் போது உண்மையான அறிஞன் நிச்சயம் வெட்கப்படுவான்.

மற்றவர்களின் கருத்திலும் பேச்சிலும் தவறு கண்டு பிடித்து அதைப் பலருக்கு மத்தியில் அவர்கள் கூறுகிறார்கள். இதில் அவர்கள் காணும் இன்பம் எல்லையற்றது….

அவர்கள் ஒரு விவரத்தை நினைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். சிறிதளவு பெருமையுணர்வு கொண்டவனும் சுவனத்தின் வாடையை அனுபவிக்க முடியாது என்னும் பெருமானார் கருத்தை இவர்கள் உணர்ந்துதான் இருப்பார்கள். பெருமைக்கு மறுப்புத் தெரிவிக்கும் திருக்குர் ஆன்வசனங்களையும் இவர்கள் பார்த்துத்தான் இருப்பார்கள். அறவழி நடந்த முன்னோரின் பொன்னான வாழ்வையும் இவர்கள் உணர்ந்துதான் இருப்பார்கள். இவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு எதிர்திசையில் நடக்கும் இவர்கள் ஆத்மீக வெற்றியை எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் நமக்குத் தெரியவில்லை.

மூன்றாம் பிரிவு: குலத்தையும் கோத்திரத்தையும் வைத்துச் சிலர் பெருமையடிக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன் பெருமானார் அறுத்தெறிந்த குல வேற்று மையை இப்போது இவர்கள் புத்துயிர் கொடுத்து எழுப்புகிறார்கள். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உண்மையையும், கரிய நிறம் படைத்தவன் வெண்ணிறம் படைத்தவனுக்குத் தாழ்ந்தவனல்ல என்ற தத்துவத்தையும் இவர்கள் சுக்குநூறாக உடைத்தெறிகிறார்கள். கரிய நிறம் படைத்த பிலாலுடன் வெள்ளி நிறம் படைத்த பெருமானார் கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை இவர்கள் உணரவில்லையோ என்னவோ!

“அபூதர்! வெண்மேனி பெற்றவன் கரியமேனி பெற்றவனை விட உயர்ந்தவனல்ல!” என்று பெருமானார் குறிப்பிட்டிருக்கிறார்கள். இங்கு நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். நிறம் என்பது சூழலால் ஏற்படும் ஒன்று. அது எந்த விதத்திலும் சிறப்புக்குக் காரணமாகாது. உண்மையான சிறப்பு, அல்லது இழிவு மனத்திலிருக்கிறது. அதுவே மனிதனின் சிறப்பை உயர்த்துகிறது; அதுவே அவன் கண்ணியத்தைக் காற்றில் பறக்க விடுகிறது.

நான்காம் பிரிவு: இன்னும் சிலர் அழகை வைத்துப் பெருமையடிக்கிறார்கள். இந்தத் துறையில் ஆண்களை விடப் பெண்களே பெரிதும் முன்னேறியிருக்கிறார்கள் என்று நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன். இந்த அழகுணர்ச்சியின் அடிப்படையில் உருவாகும் உரையாடல்கள் மற்றவர்களின் மர்மங்களைச் சந்திக்குக் கொண்டு வருகின்றன.

இந்த ஆபத்தில் அன்னை ஆயிஷாவே சிக்கிக் கொண்டி ருக்கிறார். பெருமானாரிடம் ஒரு பெண் வந்தாள். அன்னை ஆயிஷா தம் கையால் ‘ அவள் குட்டையாக இருக்கிறாள்’ என்று சைகை செய்தார். உடனே பெருமானார் கண்டித்தார்கள். “நீ புறம் பேசி விட்டாய்!” என்று! இந்தச் சம்பவத் துணுக்கு ‘புறம் பேசாதே!’ எனும் நூலில் இடம் பெற்றிருக்கிறது.

ஐந்தாம் பிரிவு: பொருளை வைத்து வேறு சிலர் பெருமையடிக்கிறார்கள். அரசர்கள், வர்த்தகர்கள் முதலியோர் இந்தப் பிரிவில் சேருகிறார்கள். அரசர்கள் தம்மிடமுள்ள ‘கஜானா’வை வைத்துப் பெருமையடிக்கும் போது, வணிகர்கள் தம்மிடமுள்ள சரக்குகளை வைத்துப் பெருமையடிக் கிறார்கள். தாம் அணியும் துணிமணிகளை வைத்துப் பெருமையடிப்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் தனித்து விளங்கும் எண்ணம் படைத்தவர்கள். ஏழைகளையும் வழிப்போக்கர்களையும் கண்டால் இவர்களுக்குப் பிடிக்காது. ஏனெனில் அவர்களிடம் ‘கஜனா’வுமில்லை; சரக்குமில்லை; உயர்ந்த துணிமணிகளுமில்லை. கிழிந்த சட்டையும் குழிவிழுந்த கண்களும் காய்ந்து போன உதடுகளுமாகக் காட்சியளிக்கும் ஏழையை அவர்கள் இழிவுக்கண் கொண்டு பார்ப்பார்கள்; இரக்கம் காட்ட மாட்டார்கள். “பிச்சைக்காரப் பயல்! நான் எண்ணினால் உன்னைப் போன்ற மனிதனை விலை கொடுத்து வாங்கி விடுவேன்!” என்று அனல் தெறிக்கப்
பேசுவார்கள்.

ஆ! என்ன பேச்சு இது! மனிதனை மனிதன் விலை கொடுத்து வாங்குவதா? பெருமானார் ஒழித்துக் கட்டிய மனித விற்பனைக்கு உயிர் கொடுப்பதா? இல்லை. விலை கொடுத்து வாங்குவது அவர்களின் எண்ணமல்ல. தம்மை உயர்வாகவும் ஏழையைத் தாழ்வாகவும் மதிக்கும் போது இத்தகைய பேச்சு வெளிவந்து விடுகிறது. அவ்வளவுதான்!

இந்தப் பெருமைக்காரர்கள் சில பொன்மொழிகளை அடிக்கடி உலகில் இறைக்கிறார்கள். உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போமா?

“போ வெளியே! உன் கால்பட்ட இடத்தை ‘சல வாத்து’ சொல்லிக் கழுவ வேண்டும்!”

புனிதத்தன்மை என்பது செல்வர்களுக்கு மட்டுமே உரித்தானதா? ஏழை என்ற ஒரே காரணத்தால் அவனது புனிதத்தன்மை மறைந்து போய் விடுமா? உலகை மாற்றிய உத்தமர்களில் பெரும்பாலோர் ஏழைகளாகத் தானே தம் வாழ்வுப் பயணத்தைத் துவக்கினார்கள்? “ஏழைமை என்பது எனக்குப் பெருமை கொடுக்கிறது” என்று பெருமானாரே கூறியிருக்கிறார்களே!

இது இரண்டாம் பொன்மொழி: “உன்னை யார் மதிக்கிறார்கள்? நீ ஓர் ஆண்டு முழுவதும் சம்பாதிக்கும் தொகை, எனக்கு ஒரே ஒரு நாளைக்குப் போதாது!”

சிக்கனத்தின் சிறப்பை உணராததால் ஏற்படும் வேற்றுமை இது. விரயம் செய்கிறவர்களை மார்க்கம் எதிர்க்கிறது என்னும் உண்மை இவர்களுக்குத் தெரியாதா?

”நீ ஓர் ஏழை; பிச்சைக்காரன்; போதிய வருமானம் இல்லாதவன். என்னிடம் வந்து விவாதம் செய்கிறாயே, என்ன துணிச்சல் உனக்கு!”

செல்வமும் வறுமையும் இரண்டு சூழல்கள். இவ்விரண்டிலும் நன்மையும் தீமையும் கலந்திருக்கின்றன. ஆத்மீகத்தில் முன்னேறிய ஏழைகளைப் போல், ஆத்மீகத்தில் முன்னேறிய பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஆத்மீகத்திற்கு ஒளி கொடுத்த பெருந்தகைகளில் எத்தனையோ செல்வர்கள் தோன்றியிருக்கிறார்கள். நபிமார்கள், நபித் தோழர்கள் சட்ட நிபுணர்கள், வேத வியாக்கியானிகள் முதலியோரில் எத்தனையோ செல்வர்கள் காணப் படுகிறார்கள்.

எனவே இவ்விரு சூழல்களில் நம்மால் எதையும் இழித்துக் கூற முடியாது. ஒன்றை ஒளி என்றால், மற்றொன்றை இருள் என்று சொல்ல வேண்டும். ஒளி மட்டுமின்றி, இருளும் மனித வாழ்வுக்குப் பயன்படத்தான் செய்கிறது.

செல்வம் பெற்றவர்கள் மட்டும் பெருமையடிப்பதற்கு என்ன இருக்கிறது? அவர்கள்தம் செல்வத்தை மார்க்கத்தின் கட்டளைப்படி புனித வழிக்கும் ஆக்க வேலைக்கும் செலவிட்டால் அவர்கள் பெருமைக்குரியவர்கள். மக்கள் அவர்களைப் பெருமைப்படுத்துவார்கள். தமக்குத் தாமாகப் பெருமையடித்துக் கொள்வதும் ஏழைகளை இழித்துரைப்பதும் அறிவுடைமையல்ல. ஏனெனில் இவ் விரண்டும் நீடித்து நிற்பவையல்ல. இந்த மண்ணகத்தில் ஏழைகள் பணக்காரர்களாகவதும் பணக்காரர்கள் ஏழைகளாவதும் சாதாரண சம்பவங்கள்.

எனவே, இப்போது பெருமையடிப்பவர்கள் நாளைக்கு முடிதுறக்கலாம்; அல்லது செல்வம் இழக்கலாம். இன்று வாடி வதங்கி நிற்கும் அந்த வறியவன் நாளை அரசனா கலாம்; அல்லது பணக்காரனாகலாம்; இதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இறைவனின் ஆற்றலைப் பற்றி நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை
என்று பொருள்.

ஆறாம் பிரிவு: இன்னும் சில வேளைகளில் வலிமையை வைத்துப் பெருமையடிக்கப் படுகிறது. பெரும்பான்மை இந்தப் பெருமை பலவீனர்களிடம் தான் காட்டப்படுகிறது.

இன்று மட்டுமின்றி, உலகம் தோன்றிய நாளிலிருந்து, அதில் மனிதன் வாழத் தொடுத்த நேரத்திலிருந்து இறைவன் எத்தனையோ செல்வங்களைக் கொடுத்திருக்கிறான். வற்றிப் போகாத அவனுடைய அருட் கொடைக்கு நம்மால் எப்படி வரம்பு காட்ட முடியும்! மலையைக் குடைந்து மனை அமைத்து வாழ்ந்த வலிமை வீரர்கள் பலர் இந்த மண்ணில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என்ன ஆனார்கள்? இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டார்கள். அவர்களின் வலிமை அழிந்து போய் விட்டது. பெருமைக்காரர்களே! தயவு செய்துஇதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். நீங்கள் பலவீனத்துடன் பிறந்தீர்கள். ஒரு காலத்தில் அந்தப் பலவீனத்துடனேயே இறப்பீர்கள் அந்தக் கடைசிக் கட்டத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

ஏழாம் பிரிவு: மாணவர்களின் எண்ணிக்கை, உறவினர்களின் எண்ணிக்கை முதலியவற்றைச் சிலர் பெருமையடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். படை பலத்தை வைத்துப் பெருமையடிக்கும் அரசர்களும் இருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால், இறைவனின் அருட் கொடைகளை வைத்துத்தான் அனைவரும் பெருமையடிக்கிறார்கள். சிறப்பம்சத்தை வைத்துப் பெருமையடிப்பது சாதாரணச் செயல். சிறப்பம்சம் என்று எண்ணிக் கொண்டு சிலர் எதை எதையோ வைத்துப் பெருமையடிக்கிறார்கள். குடிகாரர்கள் சிலர் தம்முடைய அனுபவம் பற்றி விரிவாகப் பேசுவதை நீங்கள் கேட்டதில்லையா?

குடிப்பது இகழப்படுகிறது; அது சிறப்பம்சமல்ல. என்றாலும் குடிக்கிறவர்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். போதையுடன் வந்திருக்கும் அவர்கள் தம் நிலையைப் பகிரங்கப்படுத்துவதில் இன்பமடைகிறார்கள். ஏனெனில் மதுபானம் உபயோகிப்பதை அவர்கள் ஒரு சாதனை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவனே! உன்னிடமிருந்து உதவியையும் அன்பையும் எதிர்பார்க்கிறோம். நீ அனைத்தையும் படைத்தவன்; அனைத்தையும் ஆள்பவன்; அனைத்தையும் அழிப்பவன். உன் சக்தி வரம்பிட முடியாதது. உன் படைப்புகள் அனைத்தையும் உன் ஆற்றலைப் பறை சாற்றுகின்றன. நீ சர்வ வலிமை யுள்ளவன்!

*

தொடர்புடைய பதிவு : ஆறுதல் தரும் ஆன்மீகப் பொக்கிஷம் (pdf)

காதரும் ஸ்கலிதமும் (சிறுகதை) – மீரான் மைதீன்

நன்றி : ’மணல் வீடு’ இதழ் (ஆகஸ்ட் 2023) , மீரான் மைதீன்.

’ரகள விட்டிருக்காருண்ணே’ என்று பிடிஎஃப் அனுப்பிய ஆசிப் மீரானுக்கு ஸ்பெஷல் நன்றி!

meeran fb 1

காதரும் ஸ்கலிதமும் – மீரான் மைதீன்
*
இது காதரின் கதை மட்டுமென சொல்ல முடியாது.ஒரு காலத்தின் கதையும்கூட. காதரைப் போலவெல்லாம் இப்போது நீங்கள் ஒரு மனுசனையும் பார்க்கமுடியாது. காதர் என்ற உடன் கருத்தான் காதரில் போய் நிற்காதீர்கள். இவன் ஒரு மாநிறக் காதர். அப்போது எங்கள் கூட்டத்தில் கொஞ்சம் பிராயங்கூடியவன் என்பதால் அவன்தான் நாயகனாக இருந்தான். மற்ற இரு நாயகர்கள் ரசாக்கும்,மொட்டை நாசரும். அவர்கள் மூவரும் எங்களுக்கு நாயகனும் கோமாளியும் கூட. நாயகனுக்கும் கோமாளிக்கும் ஒரு பேப்பர் கனத்தில்தான் வித்தியாசமிருக்கும்.சின்னவெங்காயத்தின் உலர்ந்த தோல் போல என்றும் சொல்லலாம். எங்களுக்கு பதினாலு பதினைந்து வயதிருக்கும் போது காதருக்கு பதினெட்டு பத்தொன்பது வயதிருக்கும்.நாலு ஐந்து வயது வித்தியாசம். அப்பாஸ் குட்டியாப்பா சொல்வதுபோல சவத்த மண்ணள்ளிப் போடு என வயசை விட்டுவிட்டு கதையின் விசயத்துக்கு வந்து விடுவோம்.இன்று இரவு இஷா தொழுகை முடிந்த பிறகு காதர் தொழுகைப் பள்ளிக்குப் பின்னாலுள்ள மனல் மேட்டில் மண்னைக் குவித்து வைத்து சத்தியம் அடிக்க போகிறான் என்ற செய்தி நேரமே வந்து சேர்ந்துவிட்டது.அதற்கு முந்திய இரவு கூட அவன் தூறல் நின்னு போச்சி படத்தில் பாக்கியராஜ் மாந்தோப்பில் ரவுடிகளை அடித்து விரட்டுவதுபோல அப்படியே அச்சு அசலாக அவன் பூவாறு சென்றிருந்தபோது ஏழுபேரை தனியாளாக நின்று கடல் மணலில் போட்டு அடித்து விரட்டியதாகச் சொன்னான். அவன் அடிபுடி கதைகளைப் பேசும்போதோ அல்லது காதல் கதைகளைப் பேசும்போதோ அதன் ரேகைகளை முகத்தில் பரப்பிக்கொள்வான்.அந்த ரேகைகளில் நமக்கு காட்சி ஓடும். ஆனால் அவன் நேற்று காட்சியை ஓட்டியபோது இன்று சத்தியம் அடிக்கப் போவதைச் சொல்ல வில்லை.எனவே இந்த சத்தியமடிக்கும் விசயம் இந்த பகலில் மேற்கொண்ட முடிவாக இருக்கும்.எழவுடுப்பானுக்கு இந்த பகலில் என்ன எழவு எடுத்ததோ தெரியவில்லை.காதரின் ஈட்டான் பள்ளியின் பின்னாலுள்ள மணல்மேடு ரசாக்கின் ஈட்டான் ஐதுரூஸ் காம்பவுண்டிலுள்ள பழைய பாழடைஞ்ச கிணத்து மதில், மொட்டைய நாசரின் ஈட்டான் மாணிக்கம் வயலிலுள்ள வளைந்த கட்டைத் தெங்கு.

இஷா தொழுகை நடக்கும் போது பள்ளி காம்பவுண்டுக்குள் போக முடியாது “லெச்சணங் கெட்ட இபுலீசுவளே பள்ளியில தொழுகை நடக்கத்துல ஹவ்வாத்து மயிரா மறிஞ்சிட்டு கெடக்கியோ …”என யாராவது சத்தம் போட்டு தொழுகை0கு செந்தூக்காகத் தூக்கிப் போய்விடுவார்கள்.இஷா தொழுகை முடிந்து ஆட்கள் ஒதுங்கிய பிறகுதான் பள்ளியின் சின்னக் கேட் வழியாக வளாகத்தில் புகுந்து மூத்திரப்பெறை மதில் எட்டிச்சாடி மணல்மேட்டுக்குப் போக முடியும்.நாங்கள் ஏழெட்டு பேர் உண்டு மைதீன்,காஜா,ஷேக்நூகு,இக்கு, இதில் நேரமே நானும் சோமனும் பிள்ளைமார் தெருவிலுள்ள மூர்தியின் தம்பி மாதவனுமாக நாங்கள் பள்ளி பின்பக்க மூத்திரப்பெறை மதில் எட்டிச்சாடி மணல் மேட்டுக்குப் போய்விட்டோம்.காதரின் சத்தியத்தை நினைத்து எங்களுக்கு சிரிப்புத் தீரவில்லை.போனதடவை அவன் சொப்பனஸ்கலிதம் பற்றி அடித்த சத்தியமே இன்னும் விடை தெரியாமல் கிடக்கிறது.காதருக்கு பிற்பாடு நடைபெற்ற ஹெரணியா ஆப்ரேசன் பற்றியும் பின்னர் இந்த கதையிலேயே பேசலாம். அப்போது எங்களுக்கு ஹெரனியா என்று சொல்லக்கூடத் தெரியாது.எரணியா என்றும் புடுக்காப்புரேசன் என்றும் இரணியல் என்றும் சொல்லியிருக்கிறோம். இங்கு இரணியல் என்று ஒரு ஊர் இருப்பதும் கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை.அதுபோல சொப்பபனஸ்கலிதம் என்ற வார்த்தையும் கூட பிரம்மிப்பூட்டும் புதிய சொல்தான்.என்ன காரணமோ தெரியவில்லை அந்த சொல்லில் மிகக் கடுமையான போதையிருந்தது.

அன்று உறக்கத்திலேயே விந்து வெளியேறும் பேச்சை காதர் துவங்கி பேசிக்கொண்டிருந்தான்.நாங்கள் கர்மசிரத்தையோடு காதைத் தீட்டி வைத்திருந்தோம்.அவனுக்கு விந்து உறக்கத்தில் சுமார் அரை லிட்டர் அளவிலிருந்து முக்கால் லிட்டர் வரைக்கும் போவதாச் சொன்னான்.காதரிடம் கதை கேட்கும் போது சிரிக்ககூடாது. சிரித்தால் அவன் மணல்மேட்டிலுள்ள மணல் குவியலைக் கையால் குத்தியும் காலால் சமுட்டியும் கடும் டென்ஷனாகிவிடுவான்.முன்பு அவன் பண்டாரத்தோப்பிலிருந்து வாங்கி வந்த ஒரு கேன் கள்ளை அவனே எட்டிச் சமுட்டிக் கொட்டினான்.இன்னொரு முறை அவன் உம்மா வாங்கிவரச் சொன்ன ஒரு கிலோ தக்காளிப் பழத்தை ஆத்திரம் அடங்கும் வரை ஒவ்வொன்றாக நசுக்கிப் போட்டான்.தக்காளிப்பழம் நசுக்கிய போது நாங்கள் மேலும் சின்ன புள்ளைகளாக இருந்தோம்.அவன் “பாருங்கலே “என்றபடி ஒரு தக்காளிப் பழத்தை கையிலெடுத்து ” இதாம்புல உங்க வெதக்கொட்டை… நான் இப்போ நசுக்கம்புலே”அவன் கையில் தக்காளி பிய்ந்து தெறித்தது.சோமனெல்லாம் அப்போது பயந்து ஓடியவன் நாலைந்து நாட்கள் காய்ச்சலில் கிடந்திருக்கிறான்.தக்காளி மேட்டர் ஒர்க்அவுட்டான பிறகு பலநேரங்களில் தூசனக்கதைகள் பேச மணல்மேட்டில் கூடும் போது காதர் சில தக்காளிப்பழங்களை ரகசியமாக வைத்திருப்பான்.எப்போது எப்படி எடுப்பான் என்று தெரியாது.பள்ளி கொடிக்கெட்டுக்கு மேஜிக் காட்ட வந்தவன் கைக்குட்டையிலிருந்து புறாவை எடுத்தது போல தக்க சமயத்தில் ஆஊவென ஓசையை எழுப்பியபடி தக்காளியை எடுத்துவிடுவான்.காதருக்கு டென்சன் வந்து விட்டால் அவனுக்கு முன்னால் பேசவோ சிரிக்கவோ கூடாது பயந்த மேனிக்கு முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.எனவே அவன் சொன்ன அரைலிட்டரிலிருந்து முக்கால் லிட்டர் வரை விந்து வெளியேறும் அவனின் சொப்பனஸ்கலிதம் பற்றி பயந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தோம்.எங்களுக்கு அது உண்மையா பொய்யா என்று அப்போது தெரியவில்லை.சொப்பனஸ்கலிதம் விசயம் வெளிவந்த நாலமத்த நாள் ஐதுரூஸ் காம்பவுண்ட் பாழடைந்த கிணத்து மதிலிலிருந்த ரசாக் ஏழுகடல் தாண்டிப் போய் பழிவாங்கும் சில நாகங்களின் கதைகளைச் சொல்லி எங்களைப் பிரமிக்க வைத்துவிட்டு பின்னர் சொன்னான் .”முக்கால் லிட்டரெல்லாம் வாய்ப்புகிடையாது… காதர் டூப்படிப்பான்.. நம்ம பக்கராக்கா கடையில தண்ணி குடிக்க கப்பு இருக்குல்லா ?”

“ஆமா…”

“அந்த கப்புல முங்க முங்க கோருனா எவ்வளவு இருக்குமோ அவ்வளவு வரும்…”

“ஆனா காதர் அடிச்சி சொன்னானே…”

வட்டமான கிணத்துமதில் அமைதியாக இருந்தது.

மறுநாள் காஜாதான் பக்கராக்கா கடையில் போய் காக்கா இந்த கப்புல எவ்வளவு தண்ணி பிடிக்கும் என நைசாகப் பேசியபோது

அவர் கப்பை ஒரு உருட்டு உருட்டிப் பார்த்து விட்டு “என்ன ஒரு நானூறு மில்லி பிடிக்கும்டே” என்றார்.

காதரின் சொப்பனஸ்கலிதம் விசயம் மெல்ல பள்ளியின் பின்னாலுள்ள மணல் மேட்டிலிருந்து ஐதுரூஸ் காம்பவுண்டு பழைய பாழடைஞ்ச கிணத்து மதிலுக்கு மீண்டும் மீண்டும் வந்து அந்தாக்குல மாணிக்கம் வயலிலுள்ள வளைந்த கட்டை தெங்குக்கு வந்து கடைசியில் மாஹீன் மச்சானிடம் போய் சேர்ந்தது.மாஹீன் மச்சானுக்கு நாற்பது நாப்பத்தி ஐஞ்சு வயசிருக்கும்.மாஹீன் மச்சான் பயலைத் தெறக்கி நடக்க காதர் இரண்டு மூன்று நாட்களாக ஆளு தலைமறைவாகி அவனை ஈட்டானில் காணவில்லை.மோதியார்தான் கடைசியில மாஹீன் மச்சானிடம் கேட்டார் எதுக்கு நாலு நாளா காதர தெறக்கி நடக்கே…

“முழுமாடு போல வளந்த பொறவும் இந்த துக்க ஒறக்கத்துல உடுத்துருக்க சாரத்தோட மோண்டு உடாம்ணு வீட்ல திட்டிட்டு கெடக்கா இந்த பண்ணிக்குப் பொறந்தவன் டெய்லி ஒறக்கத்துல முக்கா லிட்டர் விந்து போவுதுன்னு சின்ன பயலுவள்ட்ட கதை உட்டுருக்கான்…”

மோதியார் காணிக்கை பெட்டி பக்கமாக விழுந்து கெடந்தார். அவருக்கு சிரிச்சி சிரிச்சி விலாபுறத்தில் வலி எடுத்தது.மாஹீன் நல்லா இருப்பே என்னைய கொண்டுபோய் சர்கார் ஆசுத்திரியில விடு… இதான் கியாமத்து நாளுக்க அடையாளம் என்றபடி மெல்ல எழுந்து கொண்டார்.

காதரை பத்திருபது நாளாக ஈட்டானில் காணவில்லை.அவன் திருவிழா கடைக்கு பெண்களுக்கு வளையல் போடும் வேலைக்குப்
போயிருப்பதாகச் சொன்னார்கள்.இதையொட்டி பள்ளி நேச்சை தொடங்கியதால் கூடி விளையாட நல்ல இசைவான சூழல் இருந்தது.அவ்விரவுகளில் நாங்கள் கொள்ளிவாய் பிசாசுகளைப் பிடித்து வரலாமென மொட்டை நாசரோடு கூடியிருந்தோம். அறுத்த வயலின் காய்ந்த நாற்றுச் சருகுகளைப் புடுங்கி நடுவயலில் போட்டு தீ கொளுத்த வேண்டும் தீ கொளுந்துவிட்டு எரியும்போது சுற்றிக்கிடந்து ஆடவேண்டுமென நாசர் சொல்லியிருந்தான். அவன் இதற்காக எங்களுக்கு பொரிக்கடலையும் பிச்சபெருமாள் கடையிலிருந்து இழுவுன கருப்பட்டியும் தேங்காய்த்துண்டும் வாங்கி வைத்திருந்தான்.எனவே நாங்கள் மாணிக்கம் வயலின் கட்ட தெங்கினருகே கொள்ளிவாய் பிசாசை விரட்டிச்செல்ல ஆடுவதென முடிவெடுத்திருந்தோம்.ஆட்டம் துவங்கியது. மொட்டை நாசர் கையில் சின்ன மடக்கு கத்தியும் அதன் முனையில் சுண்ணாம்பும் தடவி ரெடியாக வைத்திருந்தான் .இடது கையில் ஒரு குப்பியுமிருந்தது.உண்மையில் நாங்களெல்லாம் பயந்து போயிருந்தோம் சோமன் நடுங்கி எனக்கும் காஜாவுக்குமிடையே ஒடுங்கியிருந்தான்.மொட்டை நாசர் என்ன நடந்தாலும் ஆட்டத்தை விட்டுவிடக்கூடாது என்றும் ஆட்டத்தைவிட்டால் கொள்ளிவாய் பிசாசு அடித்துவிடும் என்பதை முதலிலேயே எச்சரிக்கை செய்திருந்ததால் நாங்கள் பயந்து அழுதபிறகும்கூட ஒரு நொடிப் பொழுது இடைவெளியிலும் ஆட்டத்தை விடவில்லை. அல்லா ரசூல் யா முஹ்யித்தினே என பயந்து அழுத மேனிக்கே ஆட்டம் உச்சமாகப் போய் கொண்டிருந்ததுபோது திடிரென மொட்டை நாசர் மாணிக்கம் வயலின் வேலி எட்டிச்சாடி ஓடினான்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.அவன் ஓடும் போது மூன்று பிசாசுகள் குப்பியில் மாட்டியிருப்பதாக குப்பியின் வாயைப் பொத்திக் கொண்டே சொன்னான்.இதன் பிறகு எங்கள் எல்லோருக்கும் ஐந்தாறு நாட்களாக காய்ச்சல்.ஆட்களெல்லாம் மொட்டை நாசரை தேடி நடந்தார்கள்.பண்ணிக்குப் பொறந்தவன் சின்னப் புள்ளையளக் கூட்டிட்டு போய் கொள்ளிவாய் பிசாசப் புடிக்கப் போறேம்னு பொரிக்கடலையக் கொடுத்துப் பயங்காட்டி உட்ருக்கான்.சோமனுக்கு காய்ச்சல் விடாமல் அடித்துக் கொண்டிருந்ததால் பள்ளி ஆலீம்சாவிடம் தண்ணி ஓதி கொடுக்க அவனின் அம்மை கூட்டிக் கொண்டு வந்தபோது ஆலிம்சா “பயல இங்கண உள்ள துக்கயள்ட்ட சேர உடாதே… எல்லா சைத்தான் பிடிச்சவனுவோ ”

“இங்கணதானே ஒண்ணுக்குள்ள ஒண்ணா கெடக்கோம் வேற எங்க உடது… புள்ளையளுவள்லா …”

மீண்டும் எல்லோருக்கும் காய்ச்சலெல்லாம் குணமாகி உசாராக நாலைந்து நாட்களானது.ஐதுரூஸ் காம்பவுண்டு பழைய பாழடைஞ்ச கிணத்துமதிலிலிருந்த ரசாக்கு தீவிர ஆலோசனைக்குப் பிறகு கேள்வியாக கேட்டான்.

”மொட்டை நாசரு மூனு கொள்ளிவாய் பிசாச குப்பியில பிடிச்சத நீங்க கண்ணால பாத்தியளா… ?”

“பின்னே … என் கண்ணால பாத்தேன் மூணணத்த செந்தூக்கா தூக்கி குப்பியில போட்டான்…” காஜா அடிச்சி சொன்னான்.

ரசாக்கு தூ தூ வென அவூதுபில்லாஹி சொல்லியபடி ஒம்பது தடவை துப்பினான்.ஓந்தானைக் கண்டால் ஒம்பது தடவை துப்ப வேண்டும் எனவும் பாம்பருனையைக் கண்டால் பத்து தடவை துப்ப வேண்டும் எனவும் அணிலைக் கண்டால் ஆறு தடவை ஃபிளையிங் கிஸ்ஸடிக்க வேண்டுமென்பதையும் அவன்தான் முதலில் சொல்லியிருந்தான்.பாளறுவான் இப்போது ஏன் ஒம்பது தடவை துப்புகிறான் என்று புரியாமல் பார்த்தோம். அவன் முகம் இருண்டு கிடப்பதைப் போல இருந்தது.மொட்டை நாசரின் குப்பியிலிருந்த கொள்ளிவாய் பிசாசு ரசாக்கின் முகத்தை மேவிக் கிடப்பதைப்போல படர்ந்திருந்தது.கல்லுவீட்டு சேக்கு பாழடைஞ்ச கிணத்து மதிலின் பின்பக்கம் ஓலைப்பட்டாசோடு மறைந்திருந்தான்.மறுபடியும் ரசாக் காஜாவிடம் “என்ன சைசுல இருந்திச்சி”

“அஜீஸ் வீட்டுல கெட்டிப் போட்டிருந்த கிடாய்க்க பெட்டிச்சாவி போல இருந்திச்சி…” “பெட்டிச் சாவியின்னா…?”

“கிடாய்க்க கொட்டை..”

“அதுக்கு அப்படியா பேரு வச்சிருக்கியோ…”

“ஆமா…”

“கருப்பா…?” “இல்லே செவலே…”

“அல்லாண…” “அல்லாண… வாப்பாண… ”

“குப்பியில எப்படி அடைச்சான்…”

வாவ கூவ மாவ… மாவ கூவ வாவ…பயலுவோ ரசாக்கை சுற்றிப் பாட்டாகப் பாடி கிணத்து மதிலை சுற்றிச் சுற்றி ஆடினார்கள். சுற்றி வரும்போது ஆட்டத்தின் இடையே சேக்கு ஓலைப்பட்டாசைக் கொளுத்தி ரசாக்கின் காலோடு போட்டுவிட்டான் அது படாரென ரசாக்குக்குப் பின்னால் வெடிக்க யாரப்பே என அலறியவன் ஐதுரூஸ் காம்பவுண்டின் பழைய பாழடைஞ்ச கிணத்தில் விழுந்தான்.அந்த சின்னக் கிணத்திலிருந்து அல்லோ வாப்போ என பெரிய சத்தமாக ரசாக் ஒப்பாரி வைத்தான்.ஆட்கள் ஓடி வந்தார்கள்.பெரிய சேதாரமில்லை,முட்டங்காலுக்கு கீழே சின்னதாகச் சிராய்ப்பு. ரசாக்கை வீழ்த்தியதிலிருந்து துவங்கியது பயலுவளின் புதிய ராஜ்யம்.இது முடிந்து மூணு மாசத்துக்குப்பிறகு மொட்டை நாசரை மாணிக்கம் வயலின் கடைசி அத்தத்தில் முறிந்து கிடந்த வளைந்த தெங்கில் உசுப்பேத்தி உசுப்பேத்தி குப்பியில் பேய் பிடித்த குவலயம் போற்றும் குலத்தென்றல் நாசரே…. என கோரசாகப்படி தெங்கின் மறுமுனையில் கிடந்து பயலுவோ துள்ளோ துள்ளு எனத் துள்ளியதில் கொண்டை அடந்து யா ரப்பி யா நாயனே… என பொத்தென விழுந்ததும் பயலுவோ ஆளுக்கொரு பக்கமாக தெறித்து ஓடினார்கள்.பண்டாரம் ஆசானிடம் மொட்டை நாசரைக் கொண்டுபோனதும் அவர் பார்த்து விட்டு பொஜம் இறங்கியிருப்பதாகக் கூறி துணியை பந்துபோல சுற்றி கம்முக்கூட்டில் ஏந்திவைத்துக் கெட்டி கையில் சீம்புளி துண்டுகளைச் சுற்றிக்கட்டி நல்ல தைலம் கோரிவிட்டு அனுப்பினார்.நாலுமாசத்துக்கு கெட்டப் பிரிக்ககூடாது என்றபடி.மொட்டை நாசரும் ரசாக்கும் சந்தித்துக் கொண்டு பயலுவோ பழையதுபோல இல்லே… என்னத்தையும் போய் வாய உடாதே… அன்னைக்கு ஆ ஊண்ணு மின்னல் கணக்க என்னைய கிணத்துல தள்ளிட்டானுவோ…

சொப்பனஸ்கலிதம் மேட்டரில் எஸ்ஸான காதர் ஒரு வருடங்களுக்குப் பிறகு ஊருக்குள் வந்தான்.ஐந்து நாட்கள் விடுமுறையில் வந்திருப்பதாக முதலில் சொன்னவன் பின்னர் திரும்பிப் போகவில்லை.அவன் ஓராண்டு கேரளாவின் கொல்லம் ஒரு மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்ததாகவும் அங்கு அவன் நான்கு பெண்கள் வரை காதலித்ததாகவும் இதன் காரணமாக தன்னிடம் சில காதல் கதைகள் இருப்பதாகவும் மீண்டும் நாம் மணல் மேட்டில் சந்தித்து கதைகள் பேசலாம் என்றான்.முதலில் நம்பிக்கை வரவில்லை ஆனால் அவனின் மொழி நம்பும்படியாக இருந்தது.அவன் கேரளாவில் ஓராண்டு ஜீவித்திருந்ததின் காரணமாக ஆட்டோவை ஓட்டோ என்றும் ஆரஞ்சியை ஓரஞ்சி என்றும் ஆப்பிளை ஓப்பிள் என்றும் சொல்லிக் கொண்டான்.பயலுவளுக்கு ஓரஞ்சியிலும் ஓட்டோவிலும் வராத ரசனை ஓப்பிளில் வந்து நின்றது காதரின் பாக்கியம்தான்.காதர் ஆள் கொஞ்சம் மினுங்கியிருந்தான்.அவனின் மீசை கூட கொஞ்சம் வளர்ந்திருந்தது.அவன் புகைப்பிடிக்கவும் படித்திருந்தான்.அவன் புகையை மெல்லமாக இழுக்காமல் உலகிலுள்ள எல்லா காற்றும் இன்றே தீர்ந்துவிடும் சூழலில் ஒருவன் சுவாசிப்பது போல புகையை இழுத்து கொப்பளித்து விழுங்கி மூக்கு மற்றும் வாய்வழியாக வெளியேற்றினான்.அவன் விரைவில் எங்கள் எல்லோரையும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு கொண்டு வர விரும்பியிருந்தான். காதரை நாங்கள் எல்லோரும் மச்சான் என்று அழைக்கும்படி கேட்டுக்கொண்ட போது சேக்கு சொன்னான் “நீங்கள் எனக்கு முறைக்கு குட்டியாப்பாவாக வருவீயோ நான் என்னனாக்கும் மச்சாம்னு கூப்பிடது…”

“குட்டியாப்பாயும் மயிருந்தான்… நீயும் மச்சாம்னே கூப்பிடு… “பிறகு காதர் எல்லோருக்கும் மச்சானான்.சோமனும் மாதவனுக்கும் கூட காதர் மச்சான்தான்.காதர் வேகமாக போகும் போது நாங்கள் கூட்டாக கேட்போம் “மச்சான் தூரமா..”

“இன்னா.. பாரேத்துல போயி ஒரு அரைக்கிலோ ஓப்பிள் வாங்கிட்டு வந்துடுறேன்..”

காதர் எங்கு போய் தொலைந்தால் என்ன,எங்களுக்கு அவன் வாயால் ஓப்பிள் என்ற சொல்லைக் கேட்க்க வேண்டும் அவள்வளவுதான்.காதரின் ஓப்பிள் என்ற சொல் போல இதுவரை உலகத்தில் வேறு ஏதேனும் வசீகரமான சொல் இருக்கிறதா என்று எங்களுக்கு அப்போது தெரியவில்லை.

மொட்டை நாசர் கன்யாமரிக்குப் போய் முழுமையாக செட்லாகிவிட்டான் ரசாக் இங்கொரு கில்ட் கடைக்கு வேலைக்குப் போகிறான்.காலையில் போனால் இரவு ஒன்பது பத்துமணியாகிவிடும்.வெள்ளிக்கிழமை அவதிநாள்.அவன் அன்று உடுதுணிகளை நனைத்துப் பொறுக்கி எடுத்து மதியம் பள்ளிக்கு குத்பா தொழுகைக்கு வந்தால் ஒன்றிரெண்டு வார்த்தைகள் அவ்வளவுதான்.நிலவியல் மாற்றமாக ஐதுரூஸ் காம்பவுண்டை இடித்து பாதை போட்டு விட்டதால் பாழடைந்த கிணற்றின் கதை முடிந்தது.ஆனாலும் ரசாக்குக்கு இந்த துனியா வாழ்க்கையில் சின்னக் கூதியுள்ளையள் ஒரு ஓலைப்பட்டாசைப் போட்டு உள்ளே தள்ளியது மறக்கவியலாதது.ரசாக்,காதர் ஊர்வந்து இறங்கியிருப்பதை அறிந்து வெள்ளிக்கிழமை குத்பாவுக்குப் பிறகு அவனிடம் ஒன்றிரெண்டு வார்த்தைகள் பேசிச் சென்றான் போலிருக்கிறது.பழையது போல அவனுவோ இல்லே… நீ முன்ன மாதிரி சொப்பனஸ்கலித கதையள உட்டியன்னா மலத்திப் போட்டு ஒருக்ககூட மார்க்கம் எடுத்துப் போடுவானுவோ… எச்சரிக்கையாகச் சொல்லியிருக்கிறான்.

காதர் கேரளாவிலிருந்து வந்த பிறகு அவனின் புதிய வெள்ளை பெல்பாட்டத்துக்கு நாப்பத்தியிரண்டு இஞ்சி அகலம் வைத்து அதன் அடியில் நல்ல கனமான ஜிப்பும் வைத்திருந்தான்.அவன் நடக்கும் போது தொடை வரை பேன்று இறுக்கமாகவும் அதன் கீழே மெல்ல விரிவடைந்து கீழே குடையை திருப்பிப் பிடித்தது போல இருக்கும்.அவன் அதை துவைத்துக் காயப்போடும் ஸ்டையிலும் கூட வித்தியாசமானதுதான்.நேராக அசையில் போடாமல் அவன் வீட்டில் நின்றிருந்த முருங்கை மரத்தினருகே இடுப்புக்கு மேலே உடலற்ற முண்டம் நிற்பது போல கயிற்றில் நேராக கட்டித் தொங்க விட்டிருப்பான்.காதர் கேரளாவிலிருந்து வந்த பிறகு இதுவரை மூன்று சத்தியங்கள் அடித்திருக்கிறான்.ஏற்கனவே மணலாகக் கிடக்கும் பள்ளியின் பின்னாலுள்ள மணல்மேட்டில் அடிப்பான் மணலைக் குவித்து வைத்து கையால் மூன்று முறை ஓங்கி அதன் வடிவம் இப்போதைய புரிதலில் சொல்வதாக இருந்தால் சசிகலா பெங்களூர் சிறைக்குப் போகுமுன்னால் ஜெயலலிதா சமாதியில் அடித்த சாயலைப்போல ஒப்பிடலாம். காதர் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறான்.சத்தியம் ஒன்று அவன் சாலுஅலெக்ஸ் பீட்டர் தாமஸின் மகள் மேரி லூயிஸ் ரேபேக்காளை கல்யாணம் பண்ணியே திருவேன் என்றும் இது வாகூர் பிள்ளை சாயிப்பு குவித்த மணல் மேடு என்றால் இந்த சத்தியம் பலிக்கவில்லை என்றால் இந்த மணல்மேடு இரவோடு இரவாக கடலாகட்டும் என்று ஓங்கி மூன்று முறை அடித்தான். காதர் சொன்ன பெயர்களெல்லாம் புதிதாக இருந்தது.இதன் பிறகு காதரும் சோமனும் நல்ல நண்பர்களாக மாறினார்கள்.ஒரே நெருக்கம் எப்போதும் ஒன்றாகவே சுற்றினார்கள்.அவர்கள் கிஸ்ஸடிப்பதும் கட்டிப்பிடிப்பதுமாகக் கிடந்தார்கள்.முதல் சத்தியமடித்த எட்டுக்கு காதர் இரண்டாவது சத்தியத்தில் முதல் சத்தியத்தைப் பின்வலித்துக் கொண்டான்.சாலு அலெக்ஸ் பீட்டர் தாமஸின் மகள் மேரி லூயிஸ் ரேபேக்காளுக்கும் செய்யதுகுஞ்சி ராவுத்தரின் மகன் டேஸ் டேஸ் காதருக்கும் இத்தோடு எல்லா எடவாடுகளும் முடிகிறது.இனி கடலாகாமல் மணல்மேடு மணல்மேடாக இருக்கனும் யாரப்பி யா நாயனே யாரசூல் முஹாயித்தீனே ஒங்க காவல் என குவித்திருந்த மணலில் ஓங்கி
மூன்றுமுறை அடித்தான்.

மூன்றாவது சத்தியம் அவன் வேலை பார்த்த மிட்டாய்கம்பெனி முதலாளியின் மகள் சீனத்தைக் கட்டுவேன் என்பதாக இருந்தது. சீனத்து அவள் வீட்டில் குண்டு பல்பை பக்குவமாய் உடைத்து மேல்மூடியை நீக்கி பதினோரு பல்புகளில் விதவிதமான கலரில் தண்ணீர் நிரப்பி அவளின் மாடியில் கட்டி தொங்கவிட்டிருந்தாள். அவள் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம்.அப்துல் ஜப்பாரின் பேரன் உவைசும்,கருணாநிதி சேனப்பிள்ளையின் மகன் நூகு தில்கரமியும் மிட்டாய் கம்பெனி வேலைக்காரனான காதருமாக மூன்று பேருக்கும் அவள் மீது ஒரே நேரத்தில் காதல் மலர்ந்திருந்த நேரம்.நூகு தில்கரமி எதிர்வீட்டுக்காரன் அவனிடம் ஒரு ஏர்கன் இருந்தது.அவன் அதன் உதவி கொண்டு சீனத்தின் கலர்தண்ணி பல்பை சுட்டு வீழ்த்தினான்.உவைசு ஒரு சீப்பாங்கல் கொண்டு இரண்டு பல்புகளை ஒற்றையடியில் வீழ்த்தி தள்ளினான்.காதர் விசயம் தெரியாமல் ஒரு கவியாக உருக்கொண்டு அவன் ஒரு லெட்டரில் நாலு தெய்வீக லவ் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதி நேராக அவளிடம் போய் இது என் அன்பின் காணிக்கை எனக் கொடுத்தான். சீனத்து,காதரின் காணிக்கையை அப்படியே கொண்டுபோய் வாப்பாவிடம் கொடுத்தாள்.வாப்பா ஒன்றும் சொல்லாமல் கருணாகப்பள்ளியருகே ஒரு பள்ளிவாசலில் காணிக்கைப் பெட்டி உடைச்ச வழக்கில் இக்பால் எஸ்ஐக்கு ஒரு குற்றவாளி தேவைப்படுவதாக அறிந்து கூப்பிட்டுச் சொன்னார்.இக்பால் வந்து காதரைக் கொண்டு போனான்.மூன்று நாட்கள் போட்டு நல்லா புரட்டி எடுத்து பொரியக்கூடிய நிலையில் காதரை ஊருக்கு ஏத்திவிட்டார்கள்.ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு மாஹீன் மச்சான் கொல்லம் போய்வந்த பிறகுதான் கதை வெளியே உலாவத் துவங்கியது.கதை வெளியே பரவிக் கொண்டிருந்த அந்த நாளில் உண்மையில் காதர் அரைக்கிலோ ஓப்பிள் வாங்கப் போனவன் திரும்ப வரவில்லை.அவன் கன்யாமரியில் மொட்டை நாசரோடு கூடிவிட்டான் என்ற செய்தி மெல்ல மெல்ல மணல்மேட்டுக்கு வந்து சேர்ந்தது.சோமன்தான் காதர் மச்சான் இல்லாமல் ரொம்பவும் போரடிப்பதாக சொல்லிக் கொண்டே மணல்மேட்டில் கிடந்து பாடினான்.இடையில் மொட்டை நாசர் ஊருக்கு வந்து காதரின் வீட்டிலிருந்து அவனின் நாற்பத்தியிரண்டு இஞ்சி பெல்பாட்டம் பேன்றை இரகசியமாக வாங்கிக் கொண்டு போனதாக மணல்மேடு சலசலத்துக் கொண்டு கிடந்தது.எல்லாம் அப்படி இப்படி ஒரு ஆறுமாதம் ஓடியதும் ஒருநாள் மாலை நேரம் காதர் மீண்டும் மௌனமாக இருந்துவிட்டு எழுந்தருளினான்.

இம்முறை அவன் மணல்மேட்டுக்கு செக்ஸ் சீட்டுக்கட்டு கொண்டு வந்திருந்தான்.மொத்தம் ஐம்பத்தியிரண்டு கார்டுகள்.எல்லா காட்டுகளிலும் வெள்ளைக்காரிகளின் நிர்வாணப்படங்கள்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோலத்தில். எல்லோரிடமும் கார்டு கைமாறிக் கொண்டே இருந்தது.காதர் மச்சான் உண்மையில் பெரிய சகாப்தம்தான்.அவன் ஆர்வம்
பூத்து குலுங்க சோமனை மடியிலமர்த்திக் கொண்டான்.ஆட்டின் குலானும் இஸ்பேட் ஏழும் டைமன் எட்டும் காதரின் கையிலிருந்தது. மணல்மேடு நிசப்பதம் சூடியிருந்தது. எல்லாவனுக்கும் கண்களின் கருமணிகளை காதர் மச்சான் நிலைத்திருக்க வைத்திருந்தான்.எல்லாம் அரைமணி நேரம்தான் சீட்டுக்கட்டைத் திரும்ப வாங்கி எண்ணிய போது மொத்தம் ஏழு கார்டுகள் குறைந்திருந்தன.மச்சான் டென்சனானான். வரிசையாக எல்லாவனையும் செக் பண்ணிய போது காஜாவின் கைலியினுள் கிளாவர் ராணியும் ஆட்டின் பத்தும் கிடந்தது. அவன் அல்லாவைக் கொண்டும் அவனின் வாப்பாவைக் கொண்டும் அவ்லியாக்களைக் கொண்டும் சத்தியமடித்தான் கைலியில் தனக்குத் தெரியாமல் விழுந்து கிடந்ததாக.காதர் மச்சான் பொறுத்துக் கொண்டு இன்னும் ஐஞ்சு கார்டு இப்போ வெளியே வரனும் இல்லண்ணா குடும்பத்தையே உப்பு வச்சி கிழிப்பேன் என்றதும் மச்சான் இன்னா மண்ணுல மூடிகெடக்கு என இக்கு மூன்று கார்டுகளைக் காட்டிக் கொடுத்தான்.இன்னும் ரெண்டு கார்டு.ஒருவனும் அசங்கவில்லை.மச்சான் சோலே படத்திலுள்ள அம்ஜத்கான் போல சுற்றி வந்தார்.ஆட்டின் ஒன்பதும் கிளாவர் கிங்கையும் காணலே… எடுத்தவன் அவனா வெளியே போடனும் இல்லாட்டி என்ன நடக்கும்னு மச்சானுக்கே தெரியாது மச்சான் மிருகமாவான் மச்சான் கொலைப்பான் என அவனையே அவன் குறிப்பிட்டு பேசினான்.இன்னும் எவனும் அசங்கவில்லை.மச்சான் ஆவேசமாக எல்லாவனும் சீலைய உறிஞ்சி போடுங்கலே என்றதும் எல்லோரும் கைலியைக் கழற்றிப் போட்டோம்.அப்போது கூட்டத்தில் சோமன் மட்டும் ஜட்டி அணிந்திருந்தான்.மச்சான் இழுத்து ஜட்டியைத் தாத்துவிட்டதும் ஆட்டின் ஒன்பதும் கிளாவர் கிங்கும் விழுந்தது.காதர்மச்சான் எடுத்துவிட்டு பிசுபிசுப்பாக இருந்த கையை உதறிக்கொண்டான். கிளாவர் கிங்கிலிருந்த வெள்ளைக்காரி ஆதீத உணர்வை பொங்கச் செய்யும் ஒய்யாரமான உடல்வாகுடையவளாக இருந்தாள்.அந்த வருகையில் காதர்மச்சான் எங்கள் எல்லோர் மனதிலும் கிளாவர் கிங்கை ஏற்றிவிட்டு உடனேயே சென்றவர் நாலாவது நாளிலேயே கன்யாமரியைக் காலி செய்துவிட்டு ஊருக்கு வந்துவிட்டான்.

வந்தவனுக்கு எங்களைக் கிளாவர் கிங்கிலிருந்து மீட்டெடுப்பதுதான் முதல் வேலையாக இருந்தது.தூங்கினால் நடந்தால் இருந்தால் எதைப்பார்த்தாலும் எல்லாம் இயல்புகளை மீறி கண்களில் கிளாவர் கிங் நிலை கொண்டிருந்தது.எங்கள் கண்கள் பூஞ்சையடைந்து உடல் உருகிக் கிடந்தது.நல்ல வேளை நாலாவது நாளிலேயே பொன்னு காதர்மச்சான் திரும்ப வந்தான் இல்லையென்றால் பத்திரகாளியின் கிணத்துமூடியின் வளையங்களில் நுளைந்து வெளியேறுமளவுக்கு உருகி இளைத்திருப்போம்.காதர்மச்சான் வெள்ளைக்காரிகளின் புதிய சீட்டுக்கட்டைக் கொண்டு வந்து ஒரு கதை சொன்னான்.முன்னூற்றி எம்பத்தி ஏழாம் ஆண்டு ஒரு ராணி வசித்து வந்தாள் அவளுக்கு நாற்பத்தி ஆறு வயது நிறைவுற்றிருந்தது.அவளுக்கு இரண்டு ஆண் மகன்கள். மூத்தவன் பெயர் ஜாக் அடுத்தவன் பெயர் கிங்.மூத்தவனுக்கு பத்து வயது இளையவனுக்கு ஒன்பது வயது.அவள் ஐந்து ஆண்டுகள் அரசாட்சி செய்தாள். காதர் மச்சான் சொன்ன இந்த கதை நாம் சீட்டுக் கட்டில் புகுத்திக் கொண்டு நாம் அதற்குள் கிடந்தால் நமக்கு சீட்டுக்கட்டு மந்திரம் கைகூடும். நாங்கள் படிப்படியாக இந்தக் கதையில் சந்தேகங்களை அருமை மச்சானிடம் நிவர்த்தி செய்து செய்து தேர்ந்த சீட்டுக்கட்டு மந்திரவாதிகளாக மாறியிருந்தோம்.நினைத்த எடுத்து தருவது.கார்டுகளை கண்களை மூடிக்கொண்டு எண்ணி எறிவதென எங்கள் முன்னிருப்போர்கள் அண்டம் கலங்குமளவுக்கு அவர்களையெல்லாம் மிகைத்திருந்தோம். காதர் மச்சான் எங்களை இந்த கதையின்பால் புறட்டித் தள்ளாவிட்டால் நாங்கள் கிளாவர் கிங்கிலிருந்து மீண்டிருக்க முடியாது.நாங்கள் முற்றிலுமாக மீண்டும் மாணிக்கம் வயலின் பக்கவாட்டிலுள்ள ஜெம்மி நிலத்தில் அமர்ந்திருந்த ஒரு பகலில் சோமன் அரக்கப்பரக்க வந்து மச்சான் இன்று இரவு மணல் மேட்டில் சத்தியமடிக்க போவதாகவும் பின்னர் நமக்கெல்லாம் புதிய ஒரு கி கதை சொல்ல இருப்பதாகவும் தகவல் சொன்னான்.

இஷா தொழுகையெல்லாம் நிறைவுபெற்று பள்ளிவளாகம் அனக்கம் தீர்ந்த பின்பு ஒவ்வொருவராக பின்னபக்கமாகப் போய் மூத்திரப்பெறை மதிலெட்டிச்சாடி மணல்மேட்டுக்கு வந்தாகிவிட்டது.காதர்மச்சான் தனக்கு முன்னால் மணலைக் குவித்து வைத்திருந்தான்.நாங்கள் இப்போதெல்லாம் காதர்மச்சானை எதிர்த்துப்பேச ஆரம்பித்திருந்தோம்,போனதடவைக்கூட திட்டமிட்டு பேய் பந்து விளையாடக் கொண்டு வந்து மச்சானை மணல்மேட்டில் போட்டு நய்யப்புடைத்தெடுத்திருந்தோம்.மச்சானின் உடம்மெல்லாம் தடிப்பு தடிப்பாகக் கிடந்தது.மகாராணிக் கதையைக்கூட சேக்கு மகாராஜா கதையாக மாற்றி மச்சானிடமே சொன்னான்.மச்சான் அன்று மறுநாள் அரைக்கிலோ தக்காளியோடு வருவதாக கடும் சினத்தில் எழுந்து போனான்.அடுத்தவாரம் மச்சானைக் கூட்டிக்கொண்டு ஆத்தங்கரைப்பள்ளிக்குப் போகும் வளியில் திருவம்பலபுரம் தாண்டியதும் மாலைப்பைனியும் தக்காளிஜாமும் கலந்து கொடுத்து பீ தெறிக்கவிட வேண்டுமென ஒரு திட்டமிருந்தது.ஒரு சால்வை போட்டு குவிக்கப்பட்டிருந்த மணல்குவியலின் மீது மச்சான் சத்தியமடித்தார் தாடிப்பெறை தங்கச்சங்கிலி தாஸீம்பீவியை கெட்டுவேன் என்று.மணல்மேடு நடுங்கியது.வடக்க மலை தெக்க கடலு நடுவுல ஆறு .எங்கிருந்து வந்ததென தெரியவில்லை இருட்டில் ஒரு பந்து போல வந்து காதர்மச்சானின் முகத்தில் விழுந்துடைந்த பிளாஸ்டிக் பையிலிருந்த மீன்தண்ணி நாத்தம்னா நாத்தம் படச்சவனே இது என்ன குதரத்து.எல்லாரும் ஓட்டம் காதர் கிட்டே போவமுடியாது .குவிஞ்ச மணல் அப்படியே இருக்கு.அவனால கண்ணு தொறக்க முடியலே.மீன் தண்ணீயில அழுவுன ஆட்டுக்கொடலையும் கலக்கிருப்பானுவோ போல. காதருக்க பொறமண்டையில இன்னொரு பந்து வந்து விழுந்து.காதர் சத்தமாகச் சொன்னான் மச்சினா எவனோ பீயக் கலக்கி அடிக்கானுவோ.நாங்கள் மதிலெட்டிச்சாடி மாணிக்கம் வயலின் வரப்பு வழியாக விழுந்து புறண்டு ஓடிப்போய் செம்பூத்தில் விழுந்தோம்.அருமாந்த காதர்மச்சான் என்னவானான் என்பது தெரியவில்லை.செம்பூத்தில் கிடந்த சோமன் சொன்னான் தள்ளே அரை லிட்டரு கி க் கதை சொல்லுவாம்னு வந்தேன்.எழவு இப்படி ஆயிப்போச்சே… ” சோமன் அரை லிட்டர் எனக் குறிப்பிட்டது காதர்மச்சானைத்தான்.செம்பூத்து என்பது ஒரு சின்ன நீர்நிலையின் பெயர்.மேட்டு வயலின் மத்தியில் தாழ்ந்து கிடந்தது.நீரில் வெங்கல மணம் பரவி நிற்கும்.நீண்ட நேரம் நீராடினால் உதட்டுக்கும் நாடிக்கும் நடுவே உள்ள பகுதியில் வெங்கலக் கலரில் மகிழி பிடித்துவிடும்.அன்று நல்ல நிலவொளி வேறு. திடிரென செம்பூத்தைச் சுற்றிலும் பீ நாத்தம் பரவியது
மறுபடியும் நாங்கள் பார்வையை பயத்தோடு திருப்பியபடி பார்த்தபோது நைஞ்சி பிஞ்சி நாற்றமெடுத்து மேட்டில் நின்றபடி காதர்மச்சான் அழுதுகொண்டே செம்பூத்தில் குதித்தான்.நீருக்குள் மறைந்து வாழும் லெச்சி நிர்வாணமாக கரையேறி ஊளையிட்டபடி ஓடிப்போனாள்.பரந்த தரிசு நிலத்தின் நடுவே இரயில் இரவில் சப்தமிட்டபடி ஓடுவது போல இருந்தது.இன்னாபிடி என்று போனது இரண்டரை வருசம்,மச்சான் நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கிற சமயத்தில் ஊர் வந்து சேர்ந்தார்.மச்சான் இல்லாத இந்த இடைபட்ட வருடங்களில் ஓராண்டுக்கு மேலாக மொட்டை நாசரும்,கில்ட் கடையில முதலாளியிடம் ஏவி விட்டு ரசாக்கின் வேலையைக்கொடுத்து மீதி காலத்தை அவனோடுமாக களித்திருந்தோம்.

மச்சானின் லுக் நிறைய மாற்றம் கொண்டிருந்தது.முதலில் அவனோடு பழையது போல தொடர்பு கொள்ளலாமா என்ற தயக்கத்தை சோமன்தான் போய் பேசிவிட்டு வந்து “நம்ம பொன்னு காதர் மச்சான் அப்படியேதான்… ஒரு மாற்றங்கிடையாது… நாங்கள் பழையதுபோல கூடினோம்.ஒரு பிரஞ்சிதாடி மச்சானின் தோற்றத்தில் உப்பலாக இருந்தது.பரவாயில்லை போகட்டும் இம்முறை இரண்டரையாண்டு கதைகள் என்றால் சும்மாவா மூன்று நான்கு நாட்களாக பொழந்து கட்டிவிட்டான்.பள்ளியில் புதிய மோதினார் என்பதால் அவருக்கு காதர் கொஞ்சம் அதிசயமாக இருந்தான்.பாம்பாய் டெல்லி சூரத் என காதர்மச்சானின் கதைகள் ஆலமரத்தின் விழுதுபோல ஆடிக்கொண்டிருந்தது.ஒரு வாரம் சென்று மணல்மேடு மீட்டிங்கில் காதர்மச்சான் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டு சொன்ன ஒரு ரகசியம் முக்கியமானது.ஒரு கி படத்தில் ஹிந்தி நடிகையுடன் நடித்ததாகவும் பிறகு அவள் மூன்று நாட்கள் அவளின் ஹெஸ்ட்ஹவுஸ்க்கு மச்சானைக் கொண்டுபோய் பிழிந்தெடுத்ததாக சிலாகித்து சொன்ன போது நாங்கள் கண்கள் கலங்கியிருந்தோம்.சோமனுக்கு மச்சானோடு பாம்பாய் போகலாமென்று ஒரு யோசனை இருந்தது.மச்சான் சரியாக பத்து நாட்களுக்குள் அசல் ஊர்காரனாக மாறிக்கொண்டான். தொடர்ந்து மச்சான் கிக்கதை கிபடம் என நடந்தவர் திடிரென கி படம் போடும் ஐடியாவைச் சொன்னார்.தம்புரான் பிள்ளையின் கடுவாயில் குடோனுக்குப் பின்னால் பார்ஷா சாயிப்பின் கோரம்பாய் குடோனில் கி படம் போடலாம் என முடிவானது.

சீலனிடம் வீடியோவும் டெக்கும் நூற்றிப்பத்து ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தால் மூணு கேசட் தருவான் என்றும் தலைக்கு ஐந்து ரூபாய் தந்தால் கி படம் சக்ஸஸ் ஆகும் என்றதும் நாள் குறிக்கப்பட்டது.நாங்கள் பனிரெண்டுபேர் மாதவனிடம் ஐந்து ரூபாய் இல்லை என்பதால் சோமன் இரண்டு ரூபாயும் மைதீனும் காஜாவுமாக மூன்று ரூபாய்கப் போட்டு மொத்தம் எங்கள் சார்பில் அறுபது ரூபாய் மச்சானிடம் கொடுத்துவிட்டு நாங்கள் மணல்மேட்டில் கனவுகளோடுக் கிடந்தோம்.மேலும் காதர்மச்சான் யார்யாரிடம் காசு பிரித்தான் என்று தெரியாது.மொட்டை நாசர் ஊரில் நடமாடினான். ரசாக்கும் கடைக்கு லீவு என்று காலையிலேயே பக்கராக்கா கடையில் சொல்லியபடி நின்றிருந்தான்.அந்த நாளின் இரவு எட்டுமணிக்கு மேல் பார்ஷா சாயிப்பின் பெரிய கோரம்பாய் குடோனில் நல்ல இருள் மூடிக்கிடந்தது.நாங்கள் பனிரெண்டு பேரும் ஏழுஅம்பதுக்கே உள்ளே போய் இருட்டோடு இருட்டாக கோரம்பாய் கட்டுகளுக்கிடையே மறைந்திருந்து கொண்டோம். யாரும் பேசக்கூடாது என்றும் சவுண்ட் வைக்க மாட்டேன் என்றும் சவுண்டு வைத்தால் போலிஸ் ஒயர்லெஸ்ஸில் மாட்டிக் கொள்வோம் என்றும் முன்னமே சொல்லியிருந்தான்.நேரமாகிக் கொண்டிருந்தது.புதிது புதிதாக ஆட்கள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.கும்மிருட்டு யார் எவர் என்று தெரியவில்லை. காதர்மச்சான் தாருமாறாக பணம் பிரித்திருப்பான் போல.உள்ளே வந்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு கோரம்பாய் கட்டுக்குப் பின்னால் மறைந்திருந்தனர்.எனக்கென்னமோ காதர்மச்சான்
ஜமாஅத்திலுள்ள வரிக்காரன்கள் அனைவரையும் உள்ளே ஏற்றிவிட்டான் போலத்தான் தெரிகிறது.குடோன் அறைக்குள் செம்பூத்திலிருந்து நிர்வாணமாய் சாமத்தில் ஓடிய லெச்சி இங்கு அடைக்கலம் புகுந்ததுபோல அவள் வவ்வாலாகப் பறக்கிறாள்.இருள் இருள் இருள்.பேச்சற்ற மொளனம் ஒரு மைய்யத்தைப் போல கிடக்கிறது.காதர்மச்சான் கடைசியில்
எட்டரை மணிக்கு குடோனின் மெயின் கேட்டைப் பூட்டியபடி வருகிறான்.ஒன்றும் தெரியவில்லை.ஒலியின் அனுமானத்தின் உத்தேசங்கள்தான்.மச்சான் தீப்பெட்டியைப்பற்றி
தீக்குச்சி வெளிச்சத்தில் படத்தை தட்டி ஓடவிட்டார்.படச்சவனே இந்த துணியாவில் முதன் முதலாகப் பிம்பத்தில் பார்க்கும் நிர்வாண பெண் உடல். உடல் நடுங்கி நாவு துடித்து பதறிய நடுக்கம்.
காஜாவும் சோமனுமாக ஏதோ கிசுகிசுத்து நகர்ந்த போது அங்கிருந்த பிளக்போர்ட் இருட்டில் தட்டி விழுந்து எல்லாம் நாசமாய்போனது. டீவியின் வெளிச்சம் போனதும் லெச்சியும் போனாள்.காதர்மச்சான் அறுத்துக் கிழித்துக் கொண்டே தீக்குச்சியைப் பொருத்தி அந்த வெளிச்சத்தில் வயர்களை இழுத்தெடுத்துப் பார்த்தார்.எங்கே வயர் பிரிந்தது என்று ஒன்றும் தெரியவில்லை.இருட்டில் நரங்கி நரங்கி வந்த சோமன் க்யா குவா மச்சான் என்றதும் குச் நகி என்றபடி தலையைச் சொறிந்து கொண்டபோது மேலும் நெருங்கிய சோமன் மச்சான் நமக்கு ரெண்டு ஓப்பிள் இருக்கு எடுக்கவா..என்றதும்.வீடு சாப்பிட எரியும் போது நீ வாளை வெட்டாதடே என்றபடி வயரை வேகமாக இழுத்தெடுத்தான்.அது பிளக்கோடு பூஞ்சி வந்தது. ஒன்றும் ஒப்பேறவில்லை.பொறுமை இழந்த காதர்மச்சான் கடைசியில் லைட்டைப் போட்டார்.வெளிச்சம் பரவியது.

கிட்டத்தட்ட நாற்பதுபேர் வரையிலும் காதர்மச்சான் குடோனில் ஏற்றியிருக்கிறான்.வெளிச்சத்தில் குட்டியாப்பாலே..” என ஓடினான்.ஆளாளுக்கு மாத்தி மாத்தி சொல்லி ஒரே குடும்பத்திலிருந்தே சிலரை காதர்மச்சான், அங்கு ஏற காஜா “லேய் எங்க யிருக்கிறான்.பக்கராக்கா கோரைச் ட்டுக்குப் பின்னால் மறைந்தபடி” தக்வா இல்லாத பண்ணிக்குப் பொறந்தவன் என்ன காரியம் செய்திருக்கான் பாருங்கோ… “நல்லவேளை மச்சான் விடியுமுன்னால் கன்யாமரிக்கு தப்பிப் போயிருந்தார்.பார்ஷா சாயிபுக்கு விசயம் தெரிந்து,ஊர் கலைந்து,காலையில் சீலன் வந்து உண்ணாமல் தின்னாமல் பைசா போச்சி என மானங்கெட்ட கிழி கிழித்துக்கொண்டே செட்டையும் டெக்கையும் எடுத்துக் கொண்டு போனான்.குடோனில் இரவு பரபரப்பில் சோமனிடமிருந்து தவறி விழுந்திருந்த இரண்டு ஓப்பிள் மட்டுந்தான் சீலனுக்கு மிச்சப்பட்டது.

நான்கு மாதங்கள் போயிருக்கும் நாங்கள் கல்லூரியில் சேர்ந்திருந்தோம் காஜாவும் சேக்கும் பாலிடெக்னிக்குப் போனார்கள். மாதவன் லாரியில் கிளினராகப் போனான்.சோமன் பனிரெண்டில் ஒரு பாடம் போனதால் வேப்பமூட்டில் ஒரு டியுடோட்ரியல் சென்டருக்குப் போய்க் கொண்டிருந்தான்.எங்கள் எல்லோருக்கும் நாகமூட்டுக்கடைதான் காலை ஒன்பதரைமணி வரையிலும் மீட்டிங் பாயிண்ட்.மச்சான் காலை டெய்லி வந்துவிடுவான்.முதல் செமஸ்டர் எக்ஸாம் முடிந்த மறுவாரம் பரபரப்பாக வந்த மச்சான் தனக்கொரு லவ் செட்டாகியிருப்பதாக சொன்னதும் நாங்கள் சத்தமாக சிரித்தோம். அன்றைக்கு ஆகாயத்தில் தாடகமலையின் மேலே செம்பூத்து லெச்சி நீர்வாணமாகப் போய்க் கொண்டிருந்தாள்.காதர்மச்சான் அல்லாண,வாப்பாண,உம்மாண,இது ரியல் பியார்,லாஸ்ட் ஃபோர் மன்ந்தா.. என்றான்.சோமன் சொன்னான்”மச்சான் எவனும் வரலைன்னாலும் மச்சினன் நான் துணை… இன்னைக்கு இவனுவோ நைட் பழையபடியும் பள்ளிக்குப் பின்னால மணல்மேட்டுல மண்ணக் குவிச்சி மச்சான் சத்தியமடிப்பாரு” என்றபடி அடித்து செம்பூத்தை நின்றான்.என்னமும் ஆகட்டுமென மெயின் ரோட்டுக்கு வந்தோம் 7ணி நேசர்புரம் பஸ் வந்து நின்றது.மச்சான் பச்சை கூலிங் கிளாஸ் போட்டபடி ஈகிள் பெல்ட் போட்டு டக்இன் பண்ணி கெமையாக நின்றான்.அவள் பஸ்ஸிலிருந்து இறங்கினாள்.படச்சவனே… வாய்பிழந்து நின்றோம்.பேரழகி.நிலவொளியில் நோக்கி வெற்று உடலில் ஆபரணங்கள் அணிந்து லெச்சி ஆரணங்காய் ஓடி வருகிறாள்.எங்களுக்கு மலைப்பு மாரவில்லை. அவள் உண்மையில் மச்சானைப் பார்த்து சிரிக்கிறாள்.பின்னர் நோக்கி கிட்டே வந்தாள்.ஹாய் டார்லிங் என்றவள்.பஸ்ஸின் பின்னால் நல்ல கர்லாக்கட்டையை முழுங்கியவன்கள் போல நின்றிருந்த ஏழெட்டு பேர்களிடம் “இவன்தன்னே” என்றதும் அவர்கள் மச்சானின் மீது பாய்ந்தார்கள்.காஜா மாப்பிளை ஓடிக்கோ என்று கத்தியதும் நாங்கள் எப்படி தெறித்து ஓடினோம் என்பது இப்போது வரையிலும் புரியவில்லை.காதர்மச்சானை எடுத்துப்போட்டு நல்லா சமுட்டியிருக்கிறார்கள்.சோமன் இடையில் கிடந்து மச்சானை அடிக்கவிடாமல் புகுந்து புகுந்து ஒன்றிரெண்டு சமுட்டுகளை ஏற்றெடுத்திருக்கிறான்.எல்லாம் சரபுராவென நடந்து முடிந்திருக்கிறது.மச்சானின் பச்சை கூலிங்கிளாசும் ஈகிள் பெல்ட்டும் பிடுங்கப்பட்ட நிலையில் சோமனோடு சேர்ந்து ஆற்றங்கரையோரமாக ஓடித் தப்பியிருக்கிறார்கள்.சாயங்காலம் போல சுண்டு வீங்கி வந்த சோமன் சத்தமாக “நீங்களெல்லாம் மனுசனுவளாலே … மச்சான் லவ் ஃபீலிங்குல அரைமணி நேரமா ஆலமூட்ல கெடந்து அழுதான் தெரியுமா…

நாங்கள் முகத்தை சோகமாக வைத்திருந்தோம்.மச்சான் சரியாக மறுவாரத்தில் நார்மலுக்கு வந்தான்.ஈகிள் பெல்ட் ராசியில்லை என்று சோமன்தான் துணைக்குப் போய் மச்சானுக்கு டபுள்பேரட் பெல்ட் வாங்கிக் கொண்டு மணிமேடையிலேயே ஆளுக்கொரு ஓப்பிள் ஜூஸூம் குடித்துக் கொண்டு தெம்பாக வந்தார்கள்.மச்சான் மீண்டும் பம்பாய் போகலாம் என்பதுதான் நல்ல விசயம் என நாங்கள் மணல்மேட்டிலிருந்து பேசிய போது மச்சான் உடனே மறுத்து பம்பாய் போனால் ஹிந்தி நடிகை என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி பிடிவாதம் பிடிப்பாள்…

“அவள் பிடிவாதம் பிடித்தால்… மச்சான் அவளின் ஹாஜத்தை நிறைவேற்ற வேண்டியதுதானே… ஒரு கொமரு காரியத்தில் சுணங்கலாமா அல்லாவுக்கு அடுக்குமா..”

“ஜமாஅத்ல பிரச்சனையாவும்டே..”

“ஒண்ணும் ஆவாது…அவள முஸ்லிமா மதம் மாத்தி படச்சவனே ஒனக்க காவல்னு ராகத்தா கட்ட வேண்டியதுதானே மச்சான்..” என மைதீன் சொன்னதும்

“அவளே முஸ்லிம்தான் மச்சினா “என காதர்மச்சான்

மூஞ்சை பாவம்போல வைத்துக் கொண்டு சொன்னான்.

”சரி அப்போ கொல்லம் போலாம்லா…பழைய மிட்டாய் கம்பெனிக்கு…”

“அங்குன கண்ணுல கண்டாலே..இக்பால் எஸ்ஐ ஸ்பாட்லயே சுடுவான்..”

மணல்மேடு மௌனமாக இருந்தது.

மூன்றாவது நாளிலேயே மச்சான் சில நாட்டு மருந்துகளை உட்கொண்டு புது உற்சாகத்தை பெற்றுக் கொண்டார்.7ணி நேசர்புரம் பேரழகி பக்கம் இனி கனவிலும் தலை வைப்பதில்லை என்று ஒரு சத்தியத்தை அடித்துக் கொண்ட காதர் மச்சான் இனி வாழ்க்கையில் லவ் என்பதே இல்லை என்று மணல் மேட்டில் சத்தியமடித்த மறுவாரம் மச்சான் ரப்பர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்த கனகா மீது ஒரு அபிப்ராயம் தோன்றியது.உண்மையில் கனகாவும் கூட கண்ணால் மச்சானை சாடைமாடையாகப் பார்பதும் பேசிச் செல்வதுமாக இருந்ததைப் புரிந்து
சத்தியத்தைப் பின்வலிக்கலாமென்று மணல் மேட்டுக்கு வேகமாக வந்தபோதுதான்,மணல்மேட்டை தோட்டமாக மாற்றும் வேலையை ஏழெட்டு வேலையாட்கள் ஜமாஅத் துவங்கியிருந்தது.அவர்கள் மணல்மேட்டு நிலத்தை வெட்டித் திரித்திக் கொண்டிருந்தார்கள். இவ்வாறாக மச்சானுக்கு சத்தியமடிக்க இருந்த ஒரேஒரு இடம் காலியானதும் மச்சான் ரொம்பவும் தளர்ந்து போனார்.நாங்கள் மச்சானை பலவாறாக தேத்திப் பார்த்தோம்.கனகாவை மச்சான் மேற்கொண்டு பார்க்கவுமில்லை.மச்சானால் சத்தியத்தை பின்வலிக்காமல் இன்னொரு காதலின் முன்னே நகர்தல் சாத்தியமில்லை போலும்.நாங்கள் தொடர்ந்து பேசினோம்,இனி சத்தியத்தை ஆற்றுமணலில் அடிக்கலாம் என்றபோது மச்சான் மறுத்து கடல்மணல் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தார். கனகா ஒரே சிரியும் நளினமுமாக மச்சானைக் கடந்து போகிறாள். நமக்கு மச்சானை முட்டம் கடற்கரைக்கு கொண்டு போய் கடல்மணலைக் குவித்து வைத்து பழைய சத்தியத்தை எடுத்துவிட்டு புதிய சத்தியமடித்தால்.கனகா மச்சானின் வாழ்வில் நுழைய ஒரு வழியுண்டாகலாம் என்று சோமனும் சொன்னான்.இதன்பிறகு நாங்கள் தாஹிரா ஓட்டோவில் மச்சானையும் தூக்கிப்போட்டு முட்டம் கடற்கரைக்கு கொண்டு போய் மணலில் மச்சானின் சத்தியபிரமாணத்தை செவ்வனவே நடத்தியிருந்தோம்.மச்சான் காற்றை இழுத்து சுவாசித்து ஆனந்த பெருமூச்சிவிட்டபடி இனி வாழ்வில் கனகாவைத் தவிர வேறு ஒருத்திக்கு இடமில்லை என்று இரண்டு கைகளையும் காற்றில் பரப்பி அந்த அலைமோதும் கரையில் டபுள்பேரட் பெல்ட்டும் அணிந்து ஒரு ஓவியம் போல நிற்கும் போது தூரத்தில் ஒரு பாறை மறைவில் ஒரு இளம் ஜோடி மறைந்திருந்து காதல் சில்மிசங்கள் செய்து கொண்டிருந்தனர்.மச்சான் சொன்னான்
காதல் ஜோடிகளுக்கு காதர் தொல்லை கொடுக்கமாட்டான் என்று.சோமன் சொன்னான்” தொல்லை கொடுக்க வேண்டாம் மச்சான் நமக்கு மறைந்திருந்து பார்க்கலாம் ”

காதல் ஜோடியின் சில்மிசங்களை இன்னொரு பாறையின் மறைவிலிருந்து பார்க்கலாமென முடிவாகி பம்மிப் பம்மி நாங்கள் பாறை மறைவுக்கு மச்சானின் தலைமையில் போய் நல்ல வாக்காக
எட்டிப் பார்த்தோம்.பாறையின் இடுக்கில் ஒரு வாலிபனின் மடியில் கனகா படுத்துக்கிடந்தாள்.கடல் தலைகீழாகப் புறண்டு அடித்தது. சரி விடுங்கள்.மச்சானின் வாழ்வில் மேலும் இதுபோல பதினெட்டு கதைகள் இருக்கிறது.காலம் ஓடிப்போய்விட்டது.இப்போது நாங்கள் யாரும் பழைய நாங்களல்ல.அப்போதிருந்தே மச்சான் எதற்கும் கலங்காதவர்.ஆனால் கடந்த வாரம் நடந்த அரசியல் விவாதத்தின் ஆத்திரத்தில் சோமன் சொன்ன வார்த்தை மச்சானை உடைத்துப் போட்டிருந்தது.என்ன பேச்சென்றாலும் அவன் மச்சானை நோக்கி “பாக்கிஸ்தானுக்குப் போயிடு” என்று சொல்லியிருக்க கூடாது.

**

நன்றி : ’மணல் வீடு’ இதழ் & மீரான் மைதீன்

« Older entries