ஹதீஸ் : அறம் பற்றி ஓர் அழகுப் பா!

எவை எவை அறத்தின்பாற்படும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஒரு ஹதீதைப் பின்வரும் அழகுப்பாவில் வடித்துத் தருகிறார் புலவர் காதிறு முஹ்யித்தீன் மரைக்காயர் (1888-1975). மர்ஹூம் அப்துற்-றஹீம் அவர்களின் ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து…

***

சோதரன் முகத்தை நோக்கித்
     தூயபுன் முறுவல் பூத்தல்;
தொல்லறம் புரியத் தூண்டல்;
     தொடர்பவம் விலக்கல்; செல்லும்
பாதையை விட்டுத் தப்பிப்
     பருவரல் அடைந்து நிற்போர்
பார்க்கின், நேர்வழியைக் காட்டி
     பரிந்(து) அவர்க் குதவி செய்தல்;
ஓதரும் பார்வை நீங்கி
     உழலுவோர்க் குதவல்; எனபோ(டு)
உறுத்தகல், முள்ளைப் பாதை
     யூடுநின் றகற்றல்; உன்றன்
சீதநீர்க் கடகால் நின்று
     சிறி(து) உடன் பிறந்தாற்(கு) ஊற்றல்;
செப்பிய இவையா வும்நீ
     செய்தகு தருமம் ஆமே.

***

தோற்றம் – ஹமீது ஜாஃபர்

கிருஸ்துமஸ் வாழ்த்து சொன்னதற்கே ‘நீங்க எப்படி மெர்ரி கிறிஸ்துமஸ் சொல்லலாம் – நீங்க காஃபிர் தான்.. இல்ல.. நீங்கள் முஸ்லீம்தான் என்றால்.. நீங்கள் வாழ்த்து சொன்னது ‘ஹராம்’தான்.. அதெல்லாம் கிடையாது..’ என்று தம்பி இஸ்மாயில் மறுமொழிந்திருந்தார் (வேடிக்கையாகத்தான்). இந்தப்பதிவில் என்ன சொல்லப்போகிறாரோ, தெரியவில்லை. முருகனைப் போட்டதற்காக ‘முன்கர்-நக்கீர்’ஐ இழுப்பார்கள் நம்ம முஸ்லிம்கள், பாருங்கள்! பிரச்சினையில்லை. ஹனிபாபாய் பாடியது மாதிரி ‘ஆண்டவன் எந்த மதம்?’ என்று கேட்பவன் ஆபிதீன். அதேமாதிரிதான் ஹமீதுஜாஃபர் நானாவும். என்ன, ‘அவன் பச்சைநிற தலைப்பாகை கட்டியிருப்பான்’ என்பார் கூடுதலாக. அவ்வளவுதான்!

நானா சொல்லும் ‘மகுடிநாடகங்களை’ நான் நம்புவதில்லை. அதுவும் ‘அவர் சொன்னதாக இவர் சொன்னது’ என்பதில் சுத்தமாக நம்பிக்கையில்லை. ஆனாலும் , சொல்லவருவதை புரிந்துகொள்கிறேன் – இலக்கியரீதியாக. அவர் குறிப்பிடும் ‘அதிசய’ சம்பவம் அதிராம்பட்டினத்தில் நடந்ததா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நுழையாமல் – ஆதாரம் கேட்காமல் –  நல்லிணக்கத்திற்காக எதையும் சொல்லலாம் என்று எடுத்துக்கொள்வோம். அதுதான் நல்லது. அதிரை புலவர் அண்ணாவியார் அவர்களும் அதையே விரும்பினார்கள் என்றுதான் தோன்றுகிறது.

‘நீயல்லால் தெய்வமில்லை – எனது நெஞ்சே
நீவாழும் எல்லை முருகா’

ஆபிதீன்

***

தோற்றம்

ஹமீது ஜாஃபர்

என்னால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இதெல்லாம் சாத்தியம்தானா? சாத்தியம் என்றால் எப்படி? இந்த கேள்விகளுக்கு பதில்? அலசி ஆராய்வதற்கு நான் எல்லாம் தெரிந்த ஹீரோ அல்ல. என்னைப் பொருத்தவரை ஒன்றுமே தெரியாத ஜீரோ. எனக்கு அது தெரியும் இது தெரியும் என்று பீற்றிகொள்ளும் அறிவுகூட இல்லை. நான் சொல்லப் போவது வேடிக்கையாகவும் இருக்கலாம் ‘கப்சா’வாகவும் இருக்கலாம் உண்மையாகவும் இருக்கலாம். முடிவு செய்துகொள்வது உங்கள் விருப்பம்.

நான் மேஜிக் ஷோக்கள் நேரிலும் பார்த்திருக்கிறேன், டிவியிலும் பார்த்திருக்கிறேன். நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கந்தசாமி வாத்தியார் ஒரு மேஜிக் ஷோ ஸ்கூலில் நடத்திக்காட்டினார் பலவற்றை நிகழ்த்திக் காட்டினார் அதில் ஒன்று , என்கூட படித்த ஜம்புநாதன் என்ற மாணவனை தன் அருகில் அழைத்து அவனைத் தொடாமலே ஆட்காட்டி விரலால் அங்கே இங்கே சுட்டிக் காட்டினார், அவர் காட்டிய இடமெல்லாம் எதோ செய்ய ஆரம்பித்தது நெளிய ஆரம்பித்துவிட்டான். சார் அரிக்கிது என்று கத்திவிட்டான். சரி சரி ஒன்னுமில்லை, போ என்று முதுகில் தட்டி அனுப்பினார். அதன் பிறகு நான் ஆக்கூரில் ஓதிக்கொண்டிருக்கும்போது ஹைஸ்கூலில் ஒரு ஷோ. மேஜிஷியன் தன் மகள் எட்டு ஒன்பது வயது சிறுமியை ஹிப்னாட்டிசம் செய்து ஏர் ரைஃபிள் முனையில்(20 mm dia)  ஒரு மரக்கட்டைப் போல் horizantally படுக்கவைத்து காட்டினார். அடுத்து 66/67 ம் ஆண்டு நாகூர் கந்தூரி சமயம் சின்ன கொத்துபா பள்ளியின் வாசல் அருகில்  தெருவில் ஒரு ஆளைப் படுக்கவைத்து அவன் மீது ஒரு கருப்புத் துணியால் மூடி levitaionஐ காண்பித்துக் கொண்டிருந்தான் ஒருவன். உடம்பு அரை அடி மேலே வந்தது. ஆனால் மூடப்பட்டிருந்த போர்வை தரையை தொட்டுக்கொண்டிருந்தது.  இதெல்லாம் எப்படி செய்கிறார்கள் என்று அப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சாதாரணமாக பூமி எந்த பொருளையும் தன் வசம் இழுக்கும் சக்தி படைத்தது. 50,60 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக எப்படி எந்த ஆதாரமுமில்லாமல்  மேலே உயரமுடிகிறது? இந்த கேள்வி என் மூளையைக் குடைய ஆரம்பித்தது, பதில் சொல்வார் இன்றுவரை யாருமில்லை. இப்படி  இருக்க துபையில் ‘கலீஜ் டைம்ஸ்’ பத்திரிக்கை ஆரம்பித்த சமயம் weakend magazine ல் ஒரு  செய்தி, 1908-ல் நியுயார்க் நகரில் பத்திரிக்கை நிருபர்கள் முன்னிலையில் ஒருவர் சுய உணர்வோடு நாற்காலியில் அமர்ந்தபடி levitation செய்து காட்டினார். நிருபர்கள் கேட்டதற்கு இதை இந்தியாவில் ஒரு ஃபக்கீரிடத்தில் கற்றுகொண்டேன் என்று சொன்ன செய்தி வந்திருந்தது.

ஒரு நாள் ஹஜ்ரத் அவர்கள் hypnotism பாடம் நடத்தி முடிந்தவுடன் நான் பார்த்த/படித்த levitation ஐப் பற்றி கேட்டேன், இதை நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டார்கள். எதோ ஒரு ட்ரிக் இருக்கிறது என்றேன். ஒரு ட்ரிக்குமில்லை மண்ணுமில்லை இதை நீங்களும் செய்யலாம் நான் ஒரு நாளைக்கு செய்து காண்பிக்கிறேன் என்றார்கள். அதற்குள் நான் துபை வந்துவிட்டேன் அதன் பிறகு அந்த பேச்சுக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஆனால் ஜஃபருல்லாஹ் நானாவுக்கு செய்து காண்பித்தார்களாம். ஆம், ஒருமுறை டீ வாங்கிவரும்படி நானாவை அனுப்பினார்கள். டீ வாங்கிக்கொண்டு லேட்டா வந்தார். “ஏன் இவ்வளவு லேட்டா வாரே?” என்று கேட்டார்கள். “இல்லை சாபு நானா (ஹஜ்ரத்தை அப்படிதான் அழைப்பார்) அலங்கார வாசல்லெ ஒருத்தன் வித்தை காண்பிச்சிக்கிட்டிருந்தான், ஒருத்தனைப் படுக்கப்போட்டு கையெ இப்டி இப்டின்னு தூக்கினான் பாடி மேலே வருது, அதை பார்த்துக்கிட்டிருந்தேன் அதான் லேட்டாயிடுச்சு.” அப்டீன்னார். உடனே “டேய் சாதிக்கு” என்று கூப்பிட்டார்கள். சாதிக் அவர்களின் தங்கச்சி மகன் அப்போது ஏழெட்டு வயது சிறுவன். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் “என்ன மாமா” என்று ஓடி வந்தான். ‘படு’ என்றார்கள். அங்கேயே அப்படியே படுத்துட்டான். கையை தலையிலிருந்து கால் வரை அசைத்தார்கள், அவன் unconscious stage க்குப் போய்விட்டான். உடனே கையை அவன் மீது படாமல் அருகில் வைத்துக்கொண்டு கொஞ்சங்கொஞ்சமாக மேலே உயர்த்தினார்கள், கையை உயர்த்த உயர்த்த அவனும் மேலே வந்தான். எந்த pre hypnotism மும் கிடையாது, எந்த key word ம் கிடையாது, எந்த key sighn ம் கிடையாது, எல்லாமே அந்த சமயத்தில் நடந்தது.

‘பாத்துக்கிட்டியா levitationஐ ? இதானே அங்கே செஞ்சான்? நல்லா குனிஞ்சு கையை கீழே வுட்டு பாரு எதாவது தட்டுப்படுதான்னு’ என்றார்கள். அந்தரத்தில் இன்னும் ‘பாடி’ மிதந்துக்கொண்டிருந்தது! ‘இது ஒன்னுமில்லை, வெறும் குப்பை, இந்த குப்பையெப்போய் பார்த்துக்கிட்டிருந்தேன்னு சொல்றியே!” என்றார்களாம்.

ஹஜ்ரத் எதை குப்பை என்று சொன்னார்களோ அந்த குப்பை எப்படி நிகழ்கிறது என்பதற்கு பதில் சொல்ல அறிவியல் திணறுகிறது, உளவியல் முழிக்கிறது. இப்படி விடை காணமுடியாத வினாக்களில் ஒன்று ‘தோற்றம்’.

இத்தோற்றம் இன்று நிகழ்ந்தால் காரணம் கற்பிக்க முடியும், இது ப்யூர் மேஜிக், இது வெர்சுவல் ரியாலிட்டி, இது லேசர் ஹோலோகிராம், இல்யூஷன் அப்படி இப்படி என்று எதோ ஒன்று சொல்லமுடியும். ஆனால் இப்போது சொல்லப்போவது எலக்ட்ரிசிட்டியே கண்டுபிடிக்காத காலம், ஆனால் மாந்திரீக மோகம் இருந்த காலம், மாந்திரீகம் என்றால் ஒரு பொருளை மறைத்து வைத்து தானோ அல்லது வேறொரு ஆளைக்கொண்டோ எடுப்பது. மாந்திரீக வித்தையில் போட்டிகள் நடந்தன, இதற்கு ‘மகுடி நாடகம்’ என்று பெயர்  என வரலாற்றுக் குறிப்புக்களில் காண முடிகிறது.
 
ஆம், சற்றேறக்குறைய இன்றிலிருந்து மூன்னூறு ஆண்டுகளுக்கு முன்,  பழனி முருகப் பெருமானை தன் நண்பர் ஒருவருக்கு முன்னால் தோன்றச் செய்தது. கி.பி.1700 ல் அதிராம்பட்டினத்தில் வாழ்ந்த செய்யது முஹம்மது அண்ணாவியார் என்ற சூஃபி புலவர் தன் நண்பர் ஒருவருக்கு முருகப் பெருமானை தோன்றச் செய்து காண்பித்தது. அதே ஊரில் வாழ்ந்த கதிர்வேல் என்ற தமிழறிஞர் வாழ்ந்து வந்தார்.  தமிழில் புலமைப் பெற்ற அவர் மாந்திரீகக் கலையிலும் சிறந்து விளங்கினார். அறிவின் மயக்கத்தால் அண்ணாவியாருக்கு நண்பரானார்.

அதிரை வேலனுக்கு ஆசை வந்தது , பழனி வேலவனைக் காண. தாம் புறப்படும் செய்தியை நண்பரிடம் சொல்ல வந்தார். நண்பரோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். கதிர்வேலருக்குப் புரியவில்லை, நெற்றியை சுளித்தார். அண்ணாவியார் தொடர்ந்தார், ‘இத்தனை தூரம் அல்லல்பட்டு பழனி சென்று முருகனை தரிசிக்க வேண்டுமா? இங்கேயே தரிசிக்கலாம்’ என்றார்.

‘அதெப்படி, எம்பெருமான் பழனிமலையில் இருக்கிறான் நானோ செல்லி நகரில் இருக்கிறேன் எப்படி இங்கே தரிசிக்கமுடியும்? சாத்தியமில்லாததையல்லவா சொல்கிறீர்கள்’ என்றார் கதிர்வேலர். ‘சாத்தியமில்லாததை நான் சொல்லவில்லை நண்பரே, நீங்கள் இடத்தையும் காலத்தையும் குறிப்பிடுங்கள் அங்கு வேலவன் வருவான்’ என்றார் அண்ணாவியார்.

காலம் குறிக்கப்பட்டது . தெரிவு செய்யப்பட்ட இடமாகிய செழியன் குளத்தருகே பந்தல் அமைக்கப்பட்டது. செய்தியறிந்த மக்கள் அங்கே திரண்டனர். கதிர்வேலரும் வந்தார், அண்ணாவியாரும் வந்தார். ‘எப்போது எம்பெருமான் வருவான்?’ என கேட்க தம் கையில் கொண்டுவந்த பதினான்கு பாடல்களடங்கிய ஓலைச்சுவடியைக் கொடுத்து ‘பாடும் நண்பரே’ என்றார் அண்ணாவியார்.

‘சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்’ என்ற பெயர்தாங்கிய பதிநான்கு பாடல்கள் நிரம்பிய அந்த ஓலைச்சுவடியைப் பெற்ற கதிர்வேலர் பக்தி

மேலிட…. 

“பூவடியினில்லாதி சேஷசயனன் போற்ற
மாவடி வேலாலெறிந்த மாபழனி வேலவற்கே …. என்ற காப்பில்  தொடங்கி

‘ஐயனார் கௌரிபயிரவி யாணையேவா
அஷ்ட பாலகராணை யதிசீக்கிரமேவா
மெய்யின் வயிரவனனு மன்மே லாணையேவா
வீரபத்திர னாணை விரைவாகவேவா
கையேந்தினே னாணை கடுகவேவா
கந்த சுவாமிமே லாணையேவா
ஐயுற்ற மேருமே லாணையேவா
அரனாணை ஹரியாணை யதிசீக்கிரமேவா’

என்று இறுதியடியைப் பாடி முடிக்கவும் பழனிமலை முருகப் பெருமான் காட்சியளித்தார். கந்தனைக் கண்ணாரக் கண்ட கதிர்வேலர் முதல் கூடியிருந்த மக்கள் அனைவரும் களிக்கூத்தாடினர். ‘இங்குள்ள நமதண்பர் செய்யது முஹம்மது அண்ணாவியரது அன்புரிமையை யாவரும் காண்க’ என்று கூறி பழனி எழிலர் மறைந்தார்.

முழுப் பாடலைக் காண இங்கே சொடுக்கவும்.

இந்நிகழ்ச்சியை ‘மகாபாரத அம்மானை’ என்ற நூலின் பதிப்புரையில் அட்டாவதானம் ராமசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

இதை எப்படி எடுத்துக்கொள்வது? உங்களிடம் பதில் இருக்கிறதா? சொல்லுங்களேன் நானும் புரிந்துகொள்கிறேன்.

குறிப்பு: படிக்கும் அன்பர்கள் பக்திப் பரவசத்தில் இப்பாடலைப் பாடி முருகன் காட்சி தரவில்லையென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. காட்சி கிடைத்தால் அது உங்களுக்குப் பெருமை!

**

நன்றி : ஹமீது ஜாஃபர்
அடிக்கநினைக்கும் (அதிரை) நண்பர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் : manjaijaffer@gmail.com

செய்யது முகம்மது அண்ணாவியார் – சமயச் சார்பின்மையின் இலக்கணம்

Annaaviar_Med‘சுவடிகளில் சமயச்சார்பின்மை’ என்ற தலைப்பில் ‘பெருங்குத்தூசி’ (உள்ளத்தைத் தைக்கும் ஒரு பெயர்!) எழுதிய கட்டுரையைப் பதிவிடுகிறேன். ‘உலக வெற்றி முரசு’ (‘தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ இளைஞர் அணியின் வார இதழ்) Feb’2006ல் வெளிவந்தது. மறைந்த ‘சொல்லரசு’ மாமா மூலமாக ஹமீதுஜாஃபர் நானாவுக்கு கிடைத்து, இன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. அண்ணாவியார் குடும்பத்தை விடாது தொடர்பு கொண்டு , அன்னார் பற்றிய சில நூல்களையும் பெற்று, விபரமான கட்டுரை எழுதுபவர் ஆனால் ஹமீதுஜாஃபர் நானார்! தனது புதிய வலைப்பதிவில் விரைவில் அதைப் பதிவார். ‘Ctrl+C’ நண்பர்கள் கவனம் கொள்வார்களாக!

நண்பர் ‘பெருங்குத்தூசி’யின் கட்டுரையில் இடம்பெற்ற ‘அமிர்தகவி’ செய்யது முகம்மது அண்ணாவியாரின் (1857 – 1934) புகைப்படம் ‘அமிர்தகவி’யுடையதல்ல என்பதுதான் சுவாரஸ்யம். ‘அமிர்தகவி’யின் கொள்ளுப்பேரனின் மகனது (‘லொள்ளுப்பேரன்’ என்று சுருக்கமாகச் சொல்லனுமோ?) புகைப்படம் அது! நாற்காலி மட்டும்தான் வித்யாசம்.இந்த Photoshop…! ‘அமிர்தகவி’யின் நாலாம் தலைமுறைப் புலவர் (இவரது பெயரும் செய்யது முகம்மது அண்ணாவியார்தான். Number Please..!) புகைப்படத்தை இத்துடன் இணைக்கிறேன். பாசம் வரவழைக்கும் இந்தப் பெரியவரின் கனிந்த முகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நம் முகம் மாதிரியே இல்லை! அப்புறம், ‘பெருங்குத்தூசி’ எந்த காரணத்தாலோ அப்துல் ரஹ்மான் பட்டினம்தான் பின்னர் அதிராம்பட்டினம் என்று மருவியது என்கிறார். மருவினாலே குழப்பம்தான். அதிவீரராமன் பட்டினம்தான் அதிராம்பட்டினமாயிற்று என்பதல்லவா வரலாறு? அதிரை சகோதரர்கள்தான் குழப்பம் தீர்க்கவேண்டும்.

‘அமிர்தகவி’ எழுதிய, ‘நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து’ பற்றிய பதிவு பிறகு. நூலின் தோரணவாயிலில், ‘சந்த நயங்கள் சிந்தித் ததும்பும் சிந்து, செந்தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று. செந்தமிழுக்குச் சொந்தக்காரர்கள் அதிரை அண்ணாவியர்கள். பள்ளி வைத்துத் தமிழ் வளர்த்த பரம்பரை அது. அந்த நெடிய பரம்பரையினர் புலமைச் சிகரத்தை எட்டிப் பிடித்து வெற்றி கண்டவர்கள். புலமைச் செருக்கடந்தாரை அடக்கப் பேரிலக்கியமும் புனைந்தனர். பாமரரை மகிழ்விக்கச் சிறு பனுவல்களும் பாடினர். எதனை இயற்றியபோதும் தம் தனி முத்திரையை பதிக்க மட்டும் தவறவில்லை. இதனை இந்நூல் நெடுகிலும் பார்க்கக் காண்லாம்’ என்கிறார் அதிரைப் புலவர் அ. அஹ்மது பஷீர். ஆஹா! முனைவர் சே.மு.மு. முகமதலியின் ஆய்வு முன்னுரையும் சிறப்பு.

‘வானிடிச் சத்தம்போல் குமுறுதலைக் கண்டு
மயங்காதே மைடியர் மானே – சித்ர
வர்ணக் கிளிட்டிட்ட தங்கமயம் ரெயில்
வண்டியில் ஏறடி தேனே!’ – அமிர்தகவி

***

சுவடிகளில் சமயச்சார்பின்மை
‘பெருங்குத்தூசி’

இன்றிலிருந்து 250 ஆண்டுகளுக்குன் முன்பு ஓலைச்சுவடிகளில் சமயபேதம் பாராமல் காப்பியம் எழுதப்பட்டுள்ளது. இந்துக்களின் புனித நூலாக மதிக்கப்படும் மகாபாரத நிகழ்ச்சியின் ஒரு காட்சியை தமிழ்ச் சுவைத்தேன் சொட்டச் சொட்ட பாக்கள் அமைத்து ‘சாந்தாதி அசுவமகம்’ என்ற காப்பியத்தைப் படைத்துள்ளார், அமிர்தகவி செய்யது முகம்மது அண்ணாவியார். உ.வே.சாமிநாதய்யருக்கும் முற்பட்டவரான இவரால் 18-ஆம் நூற்றாண்டில் கடற்கரையோரத் தமிழர் மனங்களில் தமிழ் இலக்கிய மணம் வீசியுள்ளது.

தென்றல் வீசும்போதெல்லாம் நெற்குலை பாரம் தாங்காமல் தலைகவிழும் வயல்வெளி கொண்ட தஞ்சையின் அப்துல் ரஹ்மான் பட்டினம் என்று வழங்கி இன்று பெயர் மருவி அதிராம்பட்டினம் என்றழைக்கப்படும் ஊரில் பிறந்தவர் இப்பெரும் புலவர். 1750-ஆம் ஆண்டு வாக்கில் இவர் மேலைத்தெருவில் வாழ்ந்துள்ள வரலாற்றால் – கம்பன் வாழ்ந்த தேரெழுந்தூர் புகழ்பெற்றதுபோல – இந்த மதுரகவியால் இன்று அதிராம்பட்டினமே பெருமை பெற்றுவிட்டது.

குருச்சேத்ரப் போரில் கவுரவர்களைப் பாண்டவர்கள் வாகை சூடிய பின், பாண்டவர்களில் மூத்தவர் தருமர், நாட்டில் அமைதி வேண்டி யாகம் செய்கிறார். இந்த கருப்பொருளை மையமாக வைத்தே ‘சாந்தாதி அசுவமகம்’ என்ற காப்பியம் அமிர்தகவியால் எழுதப்பட்டுள்ளது. இன்றுபோல் அன்று காகிதம் அவ்வளவாகக் கிடைக்காத காலம். அமிர்தகவி அண்ணாவியார் ஓலைச் சுவடிகளிலேயே தம் பாக்கள் அனைத்தையும் இயற்றியுள்ளார்.

செய்யது முகம்மது அண்ணாவி அவர்கள், குமாரகாவியம், நாவான் சாத்திரம், மனையலங்கார சாத்திரம், சுப்ரமண்யர் பிரசன்ன பதிகம், நூர் நாமா, அலிநாமா, அய்யம்பேட்டை பாட்சா ராவுத்தர் பவனி, யானை விருத்தம், வாள் விருத்தம், பரி விருத்தம், நாகூர்ப் புகை ரத ஒய்யாரச் சிந்து, திருமண பவனி, மகாபாரத அம்மானை மற்றும் சாந்தாதி அசுவமகம் என்ற காப்பிய இலக்கியமும் படைத்து தமிழுக்கு அணி செய்துள்ளார்.

பெரும்புலவர் செய்யது முகம்மது அவர்களின் பெயருடன் அண்ணாவி என்ற சிறப்புப்பெயர் ஒலிக்கிறது. சென்னைப் பல்கலைக் கழக தமிழ் ‘லெக்சிகன்’ கூறும் விளக்கப்படி இவர் அண்ணாவியாக அதாவது உபாத்தியாயராகவும், தலைவராகவும், மெய்விளக்கத்துறை தலைவராகவும் தமிழ்க் காப்பாளராகவும் விளங்கியுள்ளார்.

கவிமனம் சுதந்திரமானது, எதற்கும் கட்டுப்படாதது என்பது இவரின் இலக்கியங்களின் தலைப்பைப் பார்த்தாலே நமக்கு விளங்குவதாகும்.

உ.வே.சா அவர்கள் பண்டைய சுவடி நூல்களைத் தேடிப்பிடித்து அச்சேற்றியவர். 1798-களில் இப்பணி இவரால் தொடங்கியது. ஆனால் அண்ணாவியாரோ, சுவடிகளிலேயே தம் இலக்கியங்களைப் படைத்து வந்துள்ளார் என்பதான சேதி உ.வே.சாவுக்கும் முந்தையவர் இவர் என்பது விளங்குகிறது.

இவரின் சுவடி நூல்களின் அச்சுப்பதிப்பு பதிக்கும் பணியை சிரமேற்கொண்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக சுவடி இயல்  துறை வெளியிட்டுள்ளது. முதன்முதலாக ‘சாந்தாதி அசுவமகம்’ என்ற நூலை வெளியிட்டுள்ள இப்பல்கலைக் கழகத்திடம் இப்புலவரின் பெயரர் செய்யது முகம்மது அண்ணாவியார் தம் பாட்டனாரின் அனைத்துச் சுவடிகளையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

255 ஆண்டுகளுக்கு முன்பே இம்மண்ணில் சமயங்களைக் கடந்த காப்பிய இலக்கியங்களைப் படைத்து, தமிழ் மண்ணில் சமயங்களுக்கு அப்பாற்பட்டு வெறும் தமிழ்ச்சுவை ஒன்றிற்காக புலவர் உலகம் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அவர்கள் காலம் காலமாகச் சமயச் சார்பின்மையைத் தங்கள் மேலான கொள்கையாய்க் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்தான் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்தகவி செய்யது முகம்மது அண்ணாவியார் அவர்கள்.

18-ஆம் நூற்றாண்டு பெரும் புலவர் படைத்த பலவும் சுவடிகளிலிருந்து இப்போதுதான் அச்சேர அரங்கம் நோக்கி வருகின்றன. இவரின் ஒரு சுவடியே தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக ஆய்வாளர்களை நூலின் கட்டமைப்பு ஆச்சரியப்பட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அஞ்சல்துறை 255 ஆண்டுகளுக்கு முன்னமே தன் இலக்கியப் பணி வாயிலாக சமய நல்லிணக்கம் பேணிய பெரும்புலவர் அமிர்தகவி செய்யது முகம்மது அண்ணாவியாரைக் கண்ணியப்படுத்தும் வகையில் நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்.

*
நன்றி : ‘உலக வெற்றி முரசு’, பெருங்குத்தூசி, ஹமீது ஜாஃபர் நானா மற்றும் அண்ணாவியார் குடும்பத்தினர்
*

தொடர்புடைய சில விபரங்கள்:

‘நல்லாப்பிள்ளை வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்து, பாரதக் கதையில் போருக்குப் பின்னர் தர்மன் நடத்துகின்ற அசுவமேத யாகப் பகுதியை ‘சாந்தாதி அசுவமகம்’ என்னும் பெயரில் சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியப் புலவர் 4,103 பாடல்களில் பாடியுள்ளார். சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றில் வரும் பாடல்களுக்கு இணையாக இப்புலவரின் இப்பாடல்கள் மிகச் சிறப்பாக உள்ளன. பாரத அம்மானை என்னும் பெயரில் இசைப்பாடல் வடிவில் இவர் எழுதியுள்ள பாரதக் கதையை இவர் வாழ்ந்த ஊராகிய அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்றும் நினைவில் இருத்திப் பாடிவருகின்றனர் எனக் கவிஞர் கா.மு. ஷெரீப் கூறுகின்றார் என்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் குறிப்பு உள்ளது’ – ‘ஜெயம் என்ற பாரதமும் நல்லாப்பிள்ளையும்’ – பொ. வேல்சாமி / காலச்சுவடு 

***

அண்ணாவியார் பற்றிய மேலதிக விபரங்களுக்கு சகோதர எழுத்தாளர்  ஹமீது ஜாஃபரின்  தளத்திற்கு செல்க.

துருக்கருக்கு ராமர் துணை!

‘ஒரு உருக்கமான செய்தியை நான் சொல்லவேண்டுமென்றால்…  நாகர்கோயில் பக்கம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. கோட்டாற்றுப் புலவர் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என்று ஒரு பெருந்தகை இருந்தார். அவர் ஒரு தமிழினுடைய கடல். சதாவதானி அவர்கள் வாய் திறந்தால் வண்ணம் பாடுகிறவர். விரல்கள் எழுதினால் வெண்பா தானாகவே வந்து பிறக்கும். தமிழ்மீது அவர் கொண்ட காதல்.. ஆனால் தன்னுடைய மார்க்கத்தின் மீது தணியாது அவர் கொண்டிருந்த  விருப்பம் அவரை எல்லாவகையிலும் தமிழ் உலகத்தில் அனைவரையும் அரவணைக்க வைத்தது. ஒரு நிகழ்ச்சி சொல்லுகிறேனே.. பாவலர் , ராமாயணம் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாமாம். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் கிண்டலாகப் பார்த்து ,பாவலரை கொஞ்சம் மடக்கலாம் என்று நினைத்து ,  ‘பாவலர் ஐயா அவர்களே.. ஒரு வெண்பா சொல்லமுடியுமா’ என்று கேட்டார். ‘பிள்ளை.. கேளுங்கள்’ என்று சொன்னாராம். எப்படியாவது பாவலரை மடக்க வேண்டும் என்று நினைத்து அவர் , ‘துருக்கருக்கு ராமர் துணை’ண்டாராம். பாவலர் முகத்திலே ஒரு மாற்றம் இல்லை. ‘கேளுங்கள்’ என்று ஒரு வெண்பா சொன்னாராம்: ‘அந்த நாள் அயோத்திதனை ஆண்ட லட்சுமண பரதசத் துருக்கருக்கு ராமர்துணை’ண்டாராம்! எனக்குத் துணையில்லேப்பா.. பரதசத்துருக்கருக்கு ராமர் துணை என்றாராம். அந்த அவை அப்படியே – ஒரு பத்தாயிரம் மக்கள் இருந்த அவை அப்படியே – குலுங்கியதாம். ராமாயணத்திலே பற்றிருக்கிறது என்பது உண்டு.. ஆனால் இஸ்லாமியத்தில் எனக்கிருக்கிற ஊற்றம் என்பது எதற்கும் ஈடு இல்லாதது என்பதை ஒரு வெண்பாவில் எடுத்துக் காட்டியதை பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்’

– அவ்வை நடராசன் / தமிழன் டி.வி./ 20th Jul’09

***

நன்றி : அவ்வை நடராசன், அமீர் ஜவ்ஹர் B.A.B.L, தமிழன் டி.வி

***

குறிப்பு : ‘பால்ஸ்’ தமிழ் மின் அகராதியில்..  ‘ஊற்றம் 1′ = பற்றுக்கோடு, நிலைத்த தன்மை, வலிமை, மன எழுச்சி, பழக்கம்.  ‘ஊற்றம் 2′ = இடையூறு, தீங்கு, தொடு உணர்வு

‘ஊற்றம் 1’ஐ எடுத்துக்கொள்வதே உசிதம்!

« Older entries