கடற்காகமும் காயல் சுபுஹானும்

’கனவுப் பிரியன்’ முஹம்மது யூசுப்-ன் இரண்டாம் நாவலான கடற்காகம் பற்றி நண்பர் அ.மு.நெருடா மிகச்சிறப்பாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார் . பிரியத்திற்குரிய நூருல் அமீன்பாய் உள்பட பலரும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எல்லாவற்றையும் தொகுத்து அதையே மூன்றாவது நாவலாகக் கொண்டுவரும் திட்டம் தம்பி யூசுபிற்கு உண்டு என்று நன்றாக அறிவேன். அது இருக்கட்டும், இப்போது பிரபல புகைப்படக் கலைஞர் சுபுஹான் பீர் முஹம்மது அவர்களின் நிக்கான் பார்வையை இங்கே பகிர்கிறேன். நன்றி. – AB

*

“நாம் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே உருவாக்கினோம்” –(21: 30) அல் குர் ஆன்…

கடற்காகம் முன்னுரையில் இப்படித்தான் தொடங்குகிறார் முஹம்மது யூசுப் .
எதோ தண்ணீர் பிரச்சனையை தான் எழுதி இருப்பார் என நினைத்தேன் .

டெல்மாதீவு அபுதாபிக்கு சொந்தமானது தானே ? ஆமாண்ணே முன்னே அது ஈரானை சேர்ந்து இருந்திச்சி .. அதை பற்றியும் எழுதி இருக்கேன்

ஈரானில் கிருஸ்துவர்கள் இருக்காங்களா? ஆமா அதை பற்றியும் எழுதி இருக்கேன் ,

MSF அமைப்பு அப்படின்னா என்ன ? ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்

Man Made Disaster அப்படின்னா? ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்.

இப்படி நான் எதைக் கேட்டாலும் ஆமாண்ணே அதைப்பற்றியும் எழுதி இருக்கேன்னுதான் கடந்த எட்டு மாசமா சொல்லிகிட்டே இருந்தார். எதை எங்கே கோர்க்கப்போறார்.புரியாமல் மண்டையை பிச்சிகிட்டு இருந்தேன்.

கடற்காகம் கடல் பற்றி சொல்கிறது,கடலாடிகள் பற்றி சொல்கிறது,கரைமடிகள் பற்றி சொல்கிறது,கபட நாடகம் பற்றிச் சொல்கிறது, காதல் சொல்கிறது .காமம் சொல்கின்றது.கவிதை சொல்கிறது ,திருட்டு பற்றி சொல்கின்றது, திருந்தச் சொல்கிறது, சரித்திரம் சொல்கின்றது, ,நினைவுகளை சொல்கின்றது,மருத்துவம் சொல்கிறது .மருத்துவர் ,மருத்துவ உபகரணங்கள் பற்றி சொல்கிறது. யுத்தம் சொல்கிறது,பறவைகளின் இதமான சத்தமும் சொல்கிறது, . மரணம் ,ஜனனம் சொல்கிறது,சூது ,சூன்யம் , அழகியல் ,கோபம்,தாபம்.பரிவு,பாசம் நேசம் ,வெட்கம்,துக்கம்,மதம் ,மார்க்கம் கூடவே விரசம் கலக்காத சரசமும் சொல்கிறது .

இணையம் புத்தன் தருவையில் தொடங்கி அபுதாபி,டெல்மா தீவு ,பெசன்ட் நகர் கடற்க்கரை ,தூத்துக்குடி,ராமநாதபுரம் ,கீழக்கரை,பெரியப் பட்டினம் ,ஈரான் ,பாலஸ்தீன் என உலகெல்லாம் பறந்து வரலாற்றினையும் உலக அரசியல் பற்றியும் சொல்கிறது இறுதியாக சிரியாவின் அலீப்போ நகரின் Al Quds மருத்துவமனையில் “இவங்க எல்லாம் ஏன் முஸ்லீமா பிறந்தாங்க சத்யா?.முஸ்லீமா பெறக்குறது என்ன அவ்வளவு குற்றமா? இல்லே இந்த மண்ணுலே பெட்ரோல் கிடைகிறது இவுங்க செஞ்ச தப்பா….? என்று நம்முள் இறங்குகிறது .

தாரிக்,சத்யா,அய்டா,முவாசின்,சமீரா,மர்வான்,செல்வராஜ்,அன்வர் ராஜா ,சுல்தானா,அலவிக்குட்டி , காசர்கோடு ஹமீது,டேனி,எஸ்தர் என மறக்க முடியாத பாத்திரங்கள்.

ஒரு சிறிய தீவில் நடக்கும் சம்பவங்களில் ஒருவருக்கொருவர் பேசிகொண்டிருக்கும் போதே சுவையாக உலக அரசியல் சொல்கிறார். ஷியா பிரிவு எப்படி தோன்றியது என்பதையும்,இஸ்லாமியர்களை பிரிக்க நடந்த ( நடந்து கொண்டிருக்கும்) சதிகள் பற்றியும் ,Haarp எனும் அதி நவீன வானிலை ஆயுதம் பற்றியும்.

சவக்காடு ஹமீது தாரிக்கிடம் “நபி நூஹுவோட காலத்துலே வந்த பிரளயம் பத்தி அல் குர் ஆன் பேசுது. இந்துக்களின் யுகத்தில் கலியுகம் என்பது நூஹு நபியின் வெள்ளப்பிரளய காலத்தில் துவங்குது.அவர்கள் அதை ஜலப் பிரளயவான் நீர் பெருக்குன்னு குறிப்பிடுவாங்க.’மனு’ மனித குலத்தின் வழிகாட்டியாகவும் , நிகரற்றவராகவும் இருந்தார் .அனைத்துமனித குலத்தின் தந்தையாகவும், மனித ஜீவராசிகளின் வாழ்கையை முறைப்படுத்தும் சட்டங்களைத் தோற்றுவிப்பவாரகவும் இருந்தார் (ரிக்வேதம் 1-13-4 ) ன்னு அவுங்க வேதம் கூறுது “மனித இனம் முழுமையாக அழிந்து போய் விட்டது . ஏழு பிரபலமான ரிஷிகளளாகிய வணக்கஸ்தர்களை தவிர எழு ரிஷிகளும் ஒரு கப்பலில் ஏறி உலகளாவிய அந்த அழிவில் இருந்து தப்பினர் .விஷ்ணு அக்கப்பலை செலுத்தினார் .இன்னொரு மகத்தான மனிதரும் அந்த அழிவில் இருந்து தப்பித்தார் அவர் “மனு”வாகும்ன்னு மார்க்கண்டேய புராணத்திலும் இந்த சம்பவம் வருது “ என சொல்லும் போது பிரான்ஸ் நாட்டின் அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த படகும் மனிதர்களுமே நினைவுக்கு வந்தார்கள்.

தாரிக்கும் ஜானுவும் கொஞ்சி குலவும் நேரம்
“துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்”
என்ற பாடல் நினைவுக்கு வந்தது .

டேனியல், எஸ்தர் இடையே நடக்கும் சம்பாஷனைகளில் வரிகளில் யூசுபை மறந்தேன் சுஜாதா நினைவுக்கு வந்தார் .சிறந்த சொல்லாடல் .

எத்தனை முறை முயன்றாலும் தவிர்க்க இயலாத் நிழல் போல் எப்போதும் தொடரும்,கடலில் அழிந்து போன நகரின் மிச்சம் போன்றது நினைவின் வடுக்கள். என்பதைப்போல அருமையான நிறைய உவமானங்கள் . செறிவான

நடை . நிறைந்த தகவல்களோடு சிறப்பாய் நகர்கிறது நாவல் .

யோவ் ..எங்கே போய் இவ்வளவு தகவல் சேகரித்தீர். வாழ்த்துக்கள் நண்பா .

என் போன்ற தகவல் கொண்டாடிகளுக்கு பெரும் பொக்கிஷம். தமிழ் இலக்கிய உலகத்தில் சிறப்பான இடம் இந்த ”கடற்காகம்” நாவலுக்கு உண்டு . மீண்டும் வாழ்த்துக்கள் முஹம்மது யூசுப் .

என்றென்றும் அன்புடன்

சுபான்

*

தொடர்புடைய காணொளி : யூசுப் ஏற்புரை (@ ஷார்ஜா புத்தகத் திருவிழா – 2019)