சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (16)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 |

அத்தியாயம் 16

ஆபிதீன்

*

10.06.1996

நேற்று மாலை ஜெப்பார்நானா ஃபோன் செய்தார். ‘இப்போ எந்த ஸ்டேஜ்லெ இருக்கீங்க?’ என்று கேட்டார். எனக்குப் புரியவிலை. எந்த ஸ்டேஜ் என்றால்? அவரிடமிருந்து கேஸட்கள் வாங்கி வந்து அதை செயல்படுத்திக்கொள்ளும் , அதில் முக்கிய சந்தேகம் இருந்தால் சர்க்காரிடம் கேட்டுக்கொள்ளும் ஸ்டேஜ் என்றேன். இல்லை, ரியாலத்தில் புதிது புதிதாக சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றார். எனக்கு அது கிடைத்தால் அல்லவா செய்யமுடியும்? ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் ஊருக்கு ஃபோன் செய்து என்னால் கேட்க இயலாது. ஜெப்பார்நானா ஃபோன் செய்வார். அவர் சொன்னால்தான் உண்டு. ரவூஃப்? அவன் வளர்ந்துகொண்டிருக்கிறான். அதனால் உடனுக்குடன் கடிதம் போடமாட்டான். போட்டாலும் U.A.Eயின் தபால்துறை வளர்ந்து கொண்டிருக்கிறது. நான் சர்க்காரிடம் வாங்கி வந்தது, இடையில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் ஆகியவற்றைச் சொன்னேன். இப்போது ரியாலத்திற்கு முன்பும் பின்பும் மூச்சுப்பயிற்சி வந்திருப்பதைச் சொன்னேன். ‘அதெல்லாம் சரிதான், ஆனா நம்பர்கள் எண்ணுறதில மாத்தமிருக்கு’ என்றார்.

1 – 25 and 25 – 1 மூன்று முறை

ஒரு முறை :

25 – 10
25 – 9
25 – 8
25 – 7
25 – 6
25 – 5

(SS) ‘சிம்பல்’ வரைந்து முடித்ததும் அதிலிருந்து புறப்படும் வெண்ணொளி, Astral Bodyயின் கண்ணிலிருந்து புறப்படும் நீல ஒளியெல்லாம் இப்போது கிடையாது. வரைந்து முடித்து மேலே போவதும் மாற்றம். புறப்பட்டு வந்து 6 அடி சென்று , அங்கிருந்து 5 அடி நகர்ந்து , அதற்குப்பின் 11 அடி நகர்ந்து (மேலே போய்) – மொத்தம் 22 அடி தூரம் – Astral Body கீழுள்ள ‘கில்லா’வைச் சுற்றி வருகிறது. எனக்கு EB, IB என்ற பிரிவுகள் முதலில் கிடையாதென்றும் அது இப்போது வந்திருப்பதால் குழப்பமாக இருக்கிறது என்றும் சொன்னேன். வரும் வாரம் நேரில் போய் பேசினால்தான் கொஞ்சம் குழப்பம் தெளியும். PB, EB, IB, ABயின் நான்கு பிரிவுகளையும் ஒருமுறை சர்க்கார் அவர்களே என் நோட்புக்கில் வரைந்து காட்டினார்கள். புரிந்து கொள்வதற்காக .ஆனால் எனக்கு மட்டும் கொடுத்தது நேராக Astral Body பிரிவதுபோல.

haz1996diary - img09 - aug30diary-b

அதற்கு மேலும் உதாரணமாக வண்டி, குதிரை, வண்டியோட்டி, முதலாளி உதாரணமும் சொன்னார்கள். அவர்களின் வார்த்தையிலேயே தெளிவாக எழுத , இருக்கிற கேஸட்களையெல்லாம் தோண்டிப் பார்த்தால் 25 வருடங்களுக்கு முன்பு அந்த வண்டி ஓடியிருக்கிறது! அதே குதிரை, வண்டிக்காரன், முதலாளி. ஆர்க்கிடைப் (Archetype) II கேஸட்டில். ஆனால் குதிரையைக் கட்டுப்படுத்தும் பாக்கியம் 25 வருடங்களுக்குப் பிறகு வந்தவர்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது..

‘ஞானிகள் என்னா சொன்னாங்க… மனுஷன்ற லைஃபை நாலு பாகமா பிரிச்சாங்க. ஒண்ணை ஒண்ணுக்கு மேலே, அதை அதுக்கு மேலே. ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் கீழ் ஒன்றாக. அல்லது ஒண்ணுக்கு பக்கத்திலேயே ஒண்ணாக. நாலு அடுக்கு வச்சாங்க. இதுக்கு அவங்க கொடுக்குற சாதாரண உதாரணம் குதிரை, வண்டி, வண்டிக்காரன், முதலாளி. வண்டி அப்படீங்குறது உடல். குதிரைங்கிறது உணர்ச்சி. வண்டிக்காரங்குறது மூளை. முதலாளிங்குறது Heart. புரியுதா? குதிரை, அது இஷ்டத்துக்கு.. முந்திய முதலாளி எவனோ அவனைத் தேடிக்கிட்டு போறதல்ல; (தற்போதைய) முதலாளி எந்த டீக்கடைக்கி போறானோ அங்கே கூட்டிக்கிட்டு போவனும். அதுதான் குதிரையோட வேலை. குதிரைக்காரனுக்கு எது தேவையோ அங்கே பொய்டக்கூடாது. இல்லே, வண்டி சக்கரத்தை பழுது பாக்குற கடைக்கி பொய்டக்கூடாது. முதலாளி என்னா சொல்றானோ அதத்தான் குதிரை செய்யனும். ஆனா நாம குதிரையை அப்படி பழக்கப்படுத்தலே.. குதிரை இழுத்த பக்கத்திலேயே வண்டி ஓடுனதாலே , வண்டியோட்டியும் கண்ட்ரோல் பண்ணாததாலே வண்டியோட்டி பின்னாலே ஓடி, வண்டிக்குள்ளே இக்கிற முதலாளியும் போயி, குதிரை திங்கிற கொள்ளையே இவன் திங்கிறமாதிரி வந்துடுது! வயிறு காய்ஞ்சி ஹோட்டல்ண்டு நினைச்சி உட்கார்ந்திக்கிறான் முதலாளி! ஆனால் இவனுக்கு வாய் திறந்து பேசத்தெரியலே. இவன் ஊமை. கையினாலே தட்டிப்பாக்கலாம், குதிரைய ஓட்டிட்டு எங்கே போனாண்டும் தெரியலே. குதிரையோட்டி தூங்கிக்கிட்டு இக்கிறான். இப்ப குதிரை ‘கொள்’ளை நோக்கி ஓடுது. இவன் பசியோட இக்கிற காரணத்தாலே அந்த கொள்ளை இவனும் திங்க வேண்டிய நிலைமை வந்துடுது. எதை திரும்பிக்கூட பார்க்க மாட்டானோ, எதெ காலால எட்டி உதைப்பானோ , அத திங்க வேண்டிய நிலைமை. அப்ப.. குதிரை இக்கிது பாத்தீங்களா..அதுக்குண்டு தனி ஆசைகள் இருக்கு. வண்டிக்கு சில தேவைகள் இக்கிது. குதிரை ஓட்டிக்கிண்டு வீடு, வாசல் தேவை இக்கிது. முதலாளிக்கு ஒரு தேவை இக்கிது. அதாவது Bodyயோட தேவை , உணர்ச்சிக்கு கட்டுப்படாம, மூளைக்கு கட்டுப்படாம, Heartக்கு கட்டுப்பட்டதா இக்கினும். Heart-ண்டு நான் உயிரைத்தான் சொல்றேன். Heartக்கு மூலமா உள்ளது எதுவோ அதைத்தான் நான் Heartண்டு சொல்றேன். Heart-உம் Heart-உம் கலந்து நிக்கிற பொருள் – இலையிலே பச்சை நிறம் கலந்திக்கிற மாதிரி, தண்ணியிலே ஓடுற குணம் கலந்து நிக்கிற மாதிரி, நெருப்புல சூடு கலந்து நிக்கிற மாதிரி – இரண்டறப் பின்னிப்பிணைஞ்சி நிக்கிது. ஒண்ணை விட்டு ஒண்ணை பிரிக்க முடியாது. நெருப்புலேர்ந்து சூட்டைப் பிரிச்சீங்கண்டா அது நெருப்பு அல்ல. இலையிலேர்ந்து பசுமையை பிரிச்சா சருகு. தன்ணியிலேர்ந்து ஓடுற தன்மையைப் பிரிச்சா அது தண்ணி அல்ல. ஐஸ்கட்டி. அதே மாதிரி இந்த Heartலேர்ந்து அத இயக்குற சக்தியைப் பிரிச்சீங்கண்டு சொன்னா – பிரிக்க முடிஞ்சா – அது Heart அல்ல. வெறும் சதைத்துண்டு. அது பொணத்துக்குத்தான் இருக்கும். இறந்து போன இஸ்மாயில் தம்பி ராவுத்தர் பேரு என்னா? படுத்துக் கிடக்குதே ‘அது’. அத எப்படிக் கூப்பிடுவீங்க?’

‘அது’

‘அப்ப…’அவர்’ண்டா யாரு? ‘ராவுத்தர்’ என்னாச்சி? அப்ப யாருக்கு பேரு ராவுத்தர்? உயிருக்கு! விளங்குதா? குதிரைக்காரன்ற வேலை என்னா? குதிரையை தன் குறிக்கோளுக்கு பக்கத்துலெ திருப்பனும். அதுக்காக குதிரையை பட்டினியா போடனும்டு அர்த்தமல்ல. கொடுக்கவேண்டியதை கொடுத்துத்தான் திருப்பனும். கொடுத்துக்கொண்டு போகும்போது வண்டி உடையாத அளவுக்கு நல்ல ரோடா பார்த்துக்கொண்டு போவனும். அப்படி போகும்போது எந்த குறிக்கோளுக்கு முதலாளி போக நினைக்கிறானோ அந்த குறிக்கோளுக்கு ஓட்டிச் செல்லனும். இதுலெ ஒண்ணே ஒண்ணு மாறினாலும் சரி, அவன் குதிரைக்காரன் அல்ல, அது குதிரையும் அல்ல, அது வண்டியும் அல்ல, அவன் முதலாளியும் அல்ல. எல்லாமே அவுட்.’

‘உணர்ச்சி – அதுதான் குதிரை – ‘டக்’குண்டு கொந்தளிக்குது உடலிலே..அது அடையிறதுக்கு துடிக்குது உடலு.. உள்ளத்துலே உணர்ச்சி வந்த உடனேயே அத அடைய உடல் துடிக்குது. ‘டக்’குண்டு பாதையை தேட முயற்சி பண்ணுது. Imagination அப்ப பாதையை அடைய பாதையை சொல்லிக்கொடுக்குது; இது அடைஞ்சிடுது. என்னா அர்த்தமாச்சு? குதிரை, தான் கொள்ளு திங்கினும்டு சொல்லுது. வண்டியோட்டி ,’கொஞ்சம் கொள்ளு திண்டுட்டு குதிரை போவட்டுமே முதலாளி’ங்குறான். ‘சரிதாங்குறேன்’டு தலையாட்டிட்டாரு முதலாளி! இவர் அங்கே கொள்ளு திங்க நின்னுக்கிட்டிக்கிறாருண்டு கதை! இதே முட்டாள்தனம் நாம செய்யிறோம். அதானால சூஃபியாக்கள் எதை வகுத்துக் கொடுத்திக்கிறாங்க? உணர்ச்சிங்குறது மூளைக்கும் இதயத்துக்கும் அடிமையா இருக்கனும். அந்த உணர்ச்சி அடிமையா இருந்துதான் உடலைத் தூண்டனும். அதுக்காக உடல்லெ உணர்ச்சி இல்லாமலிருக்கனும்டு அர்த்தமல்ல. உணர்ச்சிக்கு உள்ளமும் மூளையும் அடிபணிஞ்சி போகக்கூடாதுண்டு அர்த்தம். அதுக்கு, மூளை கண்ட்ரோல் பண்ணுனா அங்கே அறிவு வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்தக் கட்டத்துலெ துன்பமா இருந்தாலும் துன்பத்தை தவிர்க்கிறது முக்கியம். இந்தப் பாத்திரம் முக்கியமானதா இருந்தாலும் இது உடைஞ்சிடுச்சி.. ‘கிட்டாதாயின் வெட்டன மற’ங்குறது உண்மைண்டு எடுத்துக்கனும். இதுக்கு மேலே , spiritual லைஃப்லெ போனீங்கண்டா அது Astral. Pure சக்திமயமானது. எந்த எல்லைக்கும் கட்டுப்படாதது. Heartக்கு உள்ளே ஒண்ணு இக்கிதுண்டு சொன்னேனே அது! அந்த நிலைக்கி நீங்க போனீங்கண்டா இந்த உணர்ச்சி, மூளை, Body, மூணுமே அதுக்கு அடிமையாகி , அதனுடைய குணம் எதுவோ அது இந்த bodyக்கு வர ஆரம்பிக்கும். அத நெருப்பாலெ கரிக்க முடியாது. எனவே Bodyயை நெருப்பு கரிக்காது. நீளுன வரைக்கிம்தானே கை நீளும். இல்லெ! கை, அமெரிக்கா வரைக்கிம் போவும். உலகம் முழுவதும் சுத்தும். எஜமான் (ஷாஹூல் ஹமீது பாதுஷா) ஜோப்புலெ கையை வுட்டு எடுத்தாஹா. பச்சைக்கிராம்பு வந்திச்சி குலையோட! அப்ப , அந்தக் கை சிலோனுக்குப் போயி பறிச்சிக்கிட்டு வந்திக்கிது! எஜமான், தலையணையை தூக்கும்போது , முழுக முயற்சி பண்ணிக்கிட்டிக்கிற கப்பல் மேலே வருது. இந்த கை தலைகாணியை தூக்கலே, Mindலே இமேஜினேசன்லெ எது தோணிச்சோ அத தூக்குனிச்சி! இதே மாதிரி ‘அஸ்மா லைன்’லெ இக்கிது. உங்களைப்போல படத்தை வரைஞ்சி இது அபுபக்கர்தாண்டு நான் கற்பனை பண்ணி குத்துனா கத்திக்குத்து உங்க நெஞ்சிலே இறங்கும். அதேமாதிரி , கத்திக்குத்துப் பட்ட அபுபக்கரை சித்திரம் வரைஞ்சி , ‘இதுதான் அபுபக்கர். இவருக்கு கத்திக்குத்து பட்டிக்கிது.. நான் தடவுறது படத்துலே படாது, நெஞ்சிலே படும்’டு நான் நெனைச்சி தடவுனா போதும். உங்க நெஞ்சு சுத்தமாயிடும். எங்க வூட்டு கிணத்துலே தண்ணியை மெத்தி (அள்ளி) , ஓதி, அதுலே திரும்பவும் ஊத்திட வேண்டியது. உங்க வூட்டு கெணத்துலெ தண்ணியை மெத்தி நீங்க குடிச்சா இந்த தண்ணி அங்கே வந்துடும்! இந்த உண்மைகள்லாம் ஈஸியா புரியிறதுக்கு நீங்க கொஞ்சம் ‘அஸ்மா லைன்’லெ ஈடுபட்டிருந்தா நல்லா இந்திக்கிம். ம்… அப்ப என்னா செய்யினும்? உணர்ச்சிக்கு ஓரளவு இடம் கொடுக்கனும். ஆனா அது நம்மளை ஆட்டிப்படைக்கக் கூடாது. எல்லாத்துக்கும் மேலே அந்த அப்பன் இக்கிறான்லெ? முதலாளி! உள்ளத்தோட கலந்து நிக்கிறவன், அவன்ற ஆர்டர் வேலை செய்யினும். உங்க உடல் உடலாயிருக்காது. தெய்வமணமா இக்கிம். எந்த நோய் நொடியும் வராது. எல்லா ‘பரக்கத்’தும் வரும். மேலும் மேலும் செழிப்பு வந்துக்கிட்டேயிருக்கும். சிறப்பு ஏற்பட்டுக்கிட்டே போய்க்கிட்டிக்கிம். இத யோகிகளும் போட்டு பெரட்டுனானுங்க. வலம்புரிசங்கு எடுத்துக் கொடுப்பான்; தண்ணியோட வரும். அவனுக்கும் நம்மளுக்கும் உள்ள ஒரே வித்யாஸம், இந்த அற்புதம் நிகழ்த்துற சக்திதான் முக்கியம்டு அவன் சொன்னான். நம்ம ஞானிகள், ‘இது முக்கியமல்லப்பா, இறைவனை அடையிறதுக்குள்ள பாதையோட ஒரு எல்லைதான்டாங்க. அதனால்தான் நம்ம எஜமாண்ட்டெ பெரும்பெரும் சித்தன்கள்ளாம் மோதும்போது தோத்துப்போயிட்டான். அவன் சின்னதை லட்சியமா வச்சான். இவங்க பெருசை வச்சாங்க. ‘எனக்கு சித்திகள் வாணாம், நீயே வேணும்’டாங்க. அதனாலெ , இமேஜினேசனை கரெக்டா யூஸ் பண்ண தெரிஞ்சிடுச்சிண்டு சொன்னா வாழ்க்கையிலே ஃபர்ஸ்ட் ஸ்டெப் அடைஞ்சிட்டீங்கண்டு அர்த்தம். இமேஜினேசன் எப்ப வேலை செய்யும்? Body, ரிலாக்ஸ்டா இக்கினும்’ – ‘S’

**

11.06.1996

நண்பர் ஃபரீது சௌதியிலிருந்து நேற்று ஃபோன் செய்தார். ஷார்ஜாவிலுள்ள டிராவல் ஏஜென்ஸியில் அவருக்கு விசா ஏற்பாடாகி இருக்கிறதாம். வாங்கி , ஃபேக்ஸ் பண்ணச் சொன்னார். ஷார்ஜாவிலுள்ள ஃபேக்ஸும் அனுப்பும்தான், ஆனால் துபாய் ஏர்போர்ட்டில் ஒரிஜினலை ‘சப்மிட்’ பண்ண உதவும் ஆபிதீன் அனுப்புவது அவசியம். இன்று காலையில் ஆஃபீஸுக்கு பல callகள் வந்தன, ஒரு callஐ நான் அட்டெண்ட் செய்துவிட்டு அங்கிருந்து குரல்கேட்கும் முன்னாலேயே , ‘சொல்லுங்க ஹிதயத்துல்லா.. ஃபரீது விசாவை ஃபேக்ஸ் பண்ணிட்டீங்களா? நான் எப்ப அங்கே வர?’ என்று கேட்டதை கப்பமரைக்கார் வெறித்துப் பார்த்தார். ஹிதாயத்துல்லாவும் அப்படித்தான் வெறித்துக் கேட்டிருக்க வேண்டும். நான் ஷார்ஜாவில் அவரைப் பார்த்தபோது அதே வெறித்த பார்வையுடன்தான் இருந்தார்! வாங்கிக்கொண்டு ‘தேரா’வில் மஸ்தான் மரைக்கான் ரூமுக்கு பகல் வந்தேன். இன்று இரவு 7: 30 க்கு சௌதியா ஃப்ளைட்டில் ஃபரீது வருகிறார் என்று ஒரு சீட்டு. இதை கப்பமரைக்கார்தான் ஆஃபீஸிலிருந்து சொல்லியிருக்க வேண்டும். அங்கும் பல ஃபோன் கால்கள் வந்தன. மஸ்தான் மரைக்கான் , நாக்கூர் ஜமாஅத்தில் முக்கியமான ஆளாகப் போய்விட்டான். இந்த வேலையாலேயே நாக்கூரில் சண்டைகள் குறைந்து விட்டன. இருந்தாலும் அவனிடம் இப்போதும் அவனுடைய நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது. இந்த முறை தான் வாங்கி வந்த அரிசியை வியந்து சொன்னான். ”நாலு கிளாஸ் போட்டேன், எட்டு கிளாஸ் காணுது! அப்ப ஒண்ணுமே போடலேண்டா நாலு கிளாஸ் காணுமுலெ..!’ என்று. நாமும் மெஸ் காசை கொடுக்காமலிருந்துவிட்டு , உன் ஜோப்பில் சீக்கிரம் விளையும் என்றுவிடலாம்தான். இப்போதெல்லாம் அதிசயங்கள் சாதாரணம். அங்கும் ஒரு ஃபோனை நான் – அட்டெண்ட் செய்து குரல் கேட்கும் முன்னாலேயே – ‘என்னா நானா, இன்னக்கி ராத்திரிண்டுதானே சொன்னாரு ஃபரீது?’ என்று கப்பமரைக்காரிடமும் சொன்னேன். மஸ்தான் மரைக்கானுக்கு ஏற்கனவே ‘முழிச்சான்’ என்ற பெயருண்டு! இதை எழுதுவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் அவன் ரூமுக்கு ஃபோன் போட்டேன். குரல்கேட்கும் முன்னரே, ‘ என்னா ஃபரீது, நல்லவிதமா வந்து சேர்ந்தீங்களா?’ என்றேன். ஃபரீது மறுபடியும் சௌதி ஓடாமல் இருக்க வேண்டும்!

என்னுடைய வேலை ப்ரொக்ராம்கள் எழுதிக்கொடுப்பதும் மேனேஜ்மெண்ட் அக்கவுண்ட்ஸ் பேக்கேஜை பார்த்துக்கொள்வதும். மொயீன் சாஹிப்தான் Bank Reconciliation செய்வார் – Excelல். இதற்கென்று ப்ரோக்ராம் எழுதினாலும் , பேங்க் ஸ்டேட்மெண்டைப் பார்த்து ஃபீட் செய்தால்தான் அது செக் பண்ணும். இதற்கு bankல் உள்ள dataவை லிங்க் பண்ண வசதியிருந்தால்தான் சாத்தியம். ஆகவே excel. ஆனால் அவர் செய்வது உண்மையில் பயங்கரமான வேலை என்பது மாதிரி இருக்கும். அவர் எடுக்கிற ரிபோர்ட்டும் அப்படித்தான் இருக்கும். நான் இதுவரை அதில் சிரத்தை காட்டாமல் இருந்தேன். இது மிகவும் சுலபமான வேலைதான் என்று இன்று பட்டது. முதன்முறையாக நான் சின்ன ஃபார்முலாக்களோடு excelல் சுத்தமாக செய்தேன். Reconciled!. மொயீன்சாஹிப் பத்துவருடங்களாக செய்து கொண்டிருப்பவர். அவர் தன் தாடியை கோபமாக கோதிவிட்டுக் கொண்டார். இதற்குப்பிறகு அவர் ‘காலம் மோசமாகி விட்டது’ என்றார். பாகிஸ்தானிலுள்ள அவர் இளைய பெண்ணுக்கு இப்போது மூணாவது engagementஆம். முதல் தடவை பார்த்த பையனை ‘ too religious’ என்று ஒதுக்கி விட்டாளாம். இரண்டாம் பையன்? ‘too modern’.

‘இது ரொம்ப சுலபம்’ என்றேன்

‘என்ன சொல்கிறாய் ஆபிதீன்?’

‘பாதி தாடி வைத்துக் கொள்ள வேண்டும். எந்தப் பக்கமென்று மட்டும் பெண்ணிடம் கேட்டுக்கொள்வது!’

நாளை மொயீன்சாஹிப் வரும்போது பார்க்க வேண்டும். மருதாணி பூசிய அதே சிவந்த முழு தாடிதானா?.

மொயீன்சாஹிப் , என் அறையிலுள்ள சர்க்காரின் ஓவியத்தைப் பார்த்துவிட்டு ‘சர்க்கார் என்கிறாய்.. தாடி கூட இல்லையே..’ என்று ஒருமுறை சொன்னார். அறிவு, மயிரில் இருந்தால் தாடி அவசியம்தான்!

*

10.11.95 கேஸட்டிலிருந்து..

இமயம்: நல்ல காரியம் செய்வது. யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது. நியமம் : ‘இபாதத்’தை தொடர்ந்து செய்து பழக்கமாக்கிக் கொள்வது. Comisc Habit Forceஐ பிக்-அப் பண்ணவிடுவது.
ஹக் (Hug) : Stop!

*

‘நிலையா உட்கார்றது, நேரா உட்கார்றது, நேரா பேசுறது, வார்த்தைப் பிறழ்ச்சியில்லாமல் சுத்தமா பேசுறது ஒரு பழக்கம். இது வரனும்டு விரும்புனிங்கண்டா எதைச் செய்யிறோமோ அதை கவனிச்சி செய்யனும் – சொறியிறது உட்பட. இப்படி கவனிச்சி செய்ய ஆரம்பிச்சாக்கா நம்மள்ட்டெ திரள்ற பெரிய சக்தி தெரிய ஆரம்பிக்கிம்’

*

‘எதையுமே சுவைங்க. பீ பேலும்போதுகூட அத வர்ற சுஹத்தை நினைச்சி சுவைங்க’

*

‘முக்கியமான Decision பூரா வெளிக்கிருக்கும்போது – பாதி சூத்தை சுருக்கி பீ வெளிலே நிக்கிம்போது – எடுக்குறதுதான்’ (முதுகுத்தண்டு நேராக இருக்கிறது)
*

Suppressionக்கும் Controlக்கும் உள்ள வித்யாஸம் :

ஒரு (மில்லியன்) லாட்டரி பரிசு. கடைசி நம்பர் மாறியிருக்கிறது. ‘பொய்டிச்சே பொய்டிச்சே’ என்று புலம்பி அடக்குவது suppression. ‘கிட்டெ நெருங்கி வந்துடிச்சி…நாளைக்கி வந்துடும்’ என்று நினைப்பது control. (‘வந்தா வரட்டும், வராக்கட்டி போவட்டும்’).

*

‘எப்பவுமே நாம நம்மளை உத்துப்பாக்குற மாதிரி இருக்கனும். அதுக்கு ‘ஜம்’ ரொம்ப ஹெல்ப்ஃபுல்’

*

‘எதையெல்லாம் நீங்க நாடி அடையிறீங்களோ, ஐ மீன், உங்க கற்பனைக்கு எட்டாததுலாம் கைக்கு வந்து தானா வுழுவுதோ, வந்த உடனேயே எப்ப பிக்-அப் பண்ணுறீங்களோ நீங்க சின்னதுலேயே பிக்-அப் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கண்டு அர்த்தம். அப்ப நீங்க செய்ய வேண்டியது பெருசு அல்ல. சின்னதைத்தான் செய்யனும்’

*

‘வந்துட்டா செஞ்சி முடிச்சிடனும். இல்லே, செய்யக்கூடாது; செய்ய வாணாம்; தேவையில்லைண்டு வுட்டுடனும். தேவையில்லேண்டு வுட்டுடுறதுக்கும் பாத்துக்கலாம்டு ஏங்குறதுக்கும் வித்யாஸம் இக்கிது’

*

‘ஒரு நல்ல சாப்பாடை சுவையோடு சாப்புட நினைக்கிறீங்க. அதுலெ பூனை மூத்திரம் பெய்ஞ்சிடுது. என்னா செய்வீங்க? தூக்கிப்போட்டு மம்மட்டிகடை காய்ஞ்ச பறாட்டா வாங்கித் திங்க முடியனும் – அந்தச் சுவையோட! இந்த செயல் வந்தா எல்லா பக்குவமும் தானா வந்துடும்’

*

‘Intercourse.. ரொம்ப ரொம்ப ஒசத்தியான வார்த்தை.. தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. ‘கோமாதா’ண்டு சூத்தை முச்சம் வுட்டான் ஒருத்தன் – அங்கேர்ந்துதான் எல்லாம் வருதுண்டு. உண்மை! ஆனா பெண்கள்லெ ரொம்ப பேரு ‘மானி’யை அசிங்கமா நெனைக்கிறாங்க.. அசிங்கம் அல்ல அது. என்னா, கொஞ்சம் சுண்ணாம்பு வாசம் அடிக்கிது!. அதுலெ அத்தர் பூசிட்டா? பொம்பளங்க புரிஞ்சிக்கனும்’
*

‘கல்யாணம் பண்ணாம தனியா வாழுறவன் பேட்டரி போடாத லைட் மாதிரி. கையாலே சுத்திதான் சார்ஜ் உண்டாக்கனும்! அப்ப இந்த சுத்துற வேகமும், சுத்துற Time-ம், வேலையும் மிச்சம் – அண்டர்ஸ்டாண்டிங் உள்ள பெண்டாட்டி கிடைச்சா. பெண்டாட்டியை மட்டும் சரியா திருப்திபடுத்திட்டா… உயிரை வுடுவா. அந்த எண்ணமே நம்மளைத் தூக்கிவுடும்’

*

ஒரு அறை, பளாரென்று – எனக்கு :

‘டீ குடிக்கும்போது சுவைச்சி, கவனிச்சி,ரசிச்சி குடிக்கனும். அதுலெ விஷம் கலந்திக்கிதுண்டு தெரிஞ்சா சொட்டுக்கூட உள்ளே இறங்காம முழுசா துப்பத் தெரியனும்’ – S’

‘சர்க்கார்.. தேநீர் குடிக்கிறது எப்படீண்டு ஒரு கலையா.. ஜப்பான்லெ 3 மணி நேர ப்ராசஸ்ஸிங்கா சொல்லித் தர்றாங்களாம். இது தியானத்துலெ…’ – நான் பாய்ந்தேன்.

‘அது தியானம்.. ஆனா, நீங்க செய்யிறது ஹராம்! நான் இப்பதான் சொன்னேன், ‘நான் பேசும்போது உங்களுக்கு நெனைப்பு வர்றதையெல்லாம் சொல்லாதீங்க’ண்டு. நல்ல செய்திதான். ஆக்கபூர்வமான செய்திதான். அதே நேரத்துலெ நிங்க செஞ்சது ஹராம். புரியுதா? அப்பப்ப நீங்க உங்களை பாத்துக்குங்க’ -‘S’.

ஒரே கத்தி.. ஒரே குத்து! – லா.ச.ரா

17.06.1996

சென்ற 14.06.1996 வெள்ளி செஷனில் எதுவும் எழுத முடியவில்லை. ஹலால்தீனின் கம்ப்யூட்டர் ஆபிதீனுக்கு சொந்தமாகிவிட்டது. அது நிஜமாகவே புதிதாக இருக்க வேண்டும் என்று low level format பண்ணி Dosஐயும் Windowsஐயும் ஏற்றிவிட்டு ஒவ்வொரு புரோக்ராமாய் லோட் பண்ணியதில் நேரம் ஓடிவிட்டது – செஷன் முடிந்த பிறகுதான்!. Processor 486 என்று நினைத்துக் கொண்டிருந்தது 386ஆக இருந்ததில் ஏமாற்றமில்லை. 450 திர்ஹம் செலவு பண்ணிவிட்டால் Math Processorஐ போட்டுவிடலாம். ஏமாற்றம் , நான் கம்ப்யூட்டரில் வரைந்த ‘சீனரி’ (Scenary) , ‘லோட்’ ஆகாமல் போனதில்தான். சர்க்காரின் ஆசைப்படி அதை பிரிண்ட் செய்வதற்காக காகிதத்தில் வரைய முடியவில்லையென்றாலும் ஆஃபிஸில் கிடைத்த நேரத்தில் அங்கு Micrografxன் Photomagicல் அதை வரைந்து file தயார் செய்திருந்தேன். Micrografx ஒரு அற்புதம். தேர்ந்த Spray Painterஐ பிச்சையிடச் செய்யும் நேர்த்தி. ‘ஆத்தி விடுவது’ என்று சொல்வார்கள் ஆர்டிஸ்ட்கள். BMP ·பைலை தயார் செய்யும்போது கூட இதன் வண்ணக்குழைச்சல் அவ்வளவாகத் தெரியாது. இந்த ·ஃபைலை Graphic Workshop (GWS)ல் போய் EXEயாக மாற்றும்போதுதான் அசத்தும். ‘Fade’ என்கிற switchம் போட்டுவிட்டால் Monitorல் ஒளி கிளம்பி உயிர்பெற்று மெல்ல அடங்கும்போது அந்த இடத்தில் நேரில் நின்று வந்தாற்போல் பிரமை. நான் எனது சூபர்வைஸருக்கான லாகின் ஸ்க்ரிப்டில் போட்டுவைத்திருந்தேன் ஆபீஸில். ஒவ்வொருநாளும் அதில் புகுந்தபிறகுதான் மெனு வரும். இதை பிரிண்ட் எடுத்து சர்க்காருக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவார்கள்தான். ஆனால் கலர் பிரிண்டர் இல்லை. இந்த ஃ·பைலை அனுப்பினால் அவர்களின் கம்ப்யூட்டரில் போட்டுப் பார்ப்பார்கள்தான். அவர்கள் வைத்திருப்பது மோனோக்ரோமா அல்லது கலர் மானிடரா என்று தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் உறை மூடிதான் கிடக்கிறது. கலராகவே இருந்தாலும் இந்த SS256.EXE அங்கு வேலை செய்யுமா? நான், ரூமுக்கு வந்திருக்கிற என் (!) கம்ப்யூட்டரில் இயக்கும்போதுதான் தெரிந்தது. VGA கார்டு பொருத்தமாக இல்லையென்றால் மலங்க மலங்க முழிக்கும்! இதற்கு ஒரு 150 திர்ஹம் செலவா? அந்த BMP ·பைலை 16 கலர் ஃபார்மேட்டில் சேமித்தால்தான் இயங்குகிறது. ஆனால் பசுநெய்யில் மண் கலந்தாற்போல ‘நறநற’வென்று அந்த இடத்திற்கே போகவேண்டாம் போல தோன்றிவிடுகிறது. VGA மாற்ற வேண்டும். அந்த ‘சீனரி’ முக்கியம்.

*

இடையில் கண்ட கனவுகளில் இன்னும் தெளிவாகத் தெரிவது பாட்டனார் மரைக்காப்பாவைப் பார்த்ததுதான். மரைக்காப்பாதான் எவ்வளவு பெரிய திடகாத்திரமான சம்சின்! இப்போது ரொம்ப தளர்ச்சியாகத் தெரிந்தார்கள். நான் இரண்டாம் வகுப்பில் படிக்கும்போதுதான் இறந்தார்கள், இல்லையா? வயது கூடித்தான் இருக்கும். ஆனால் முகத்தில் என்னைப்பார்த்ததில்தான் எத்தனை சந்தோஷம்! மோந்து முத்தமிட்டார்கள். ஆனால், பாட்டனார்தானா இது? முகம் அப்படியே அச்சாக சர்க்கார் போல இருக்கிறது. சர்க்காரை பாட்டனார் என்று ஏன் சொல்லக்கூடாது? வாப்பாமார்கள் தன் வாழ்நாட்களை சபர் செய்வதிலும் சொத்து சேர்த்து அழிப்பதிலும் (இதில் என் வாப்பாவின் ‘பட்டறிவு’ பிரசித்தம்!) செலவழித்ததில் மகன்களுக்கு வாழும் முறையை போதிக்கவும் ஒரு நிமிடம் ஒதுக்காதபோது பாட்டனார்கள் தேவைதான்.

‘மத்தவன் பூராம சுவற்றைக் கட்டுவதற்கு பதிலா சுவற்றை, சுவற்றைக் கட்டுவதற்காக ஸ்ட்ராங்கா கட்டுங்க’ – ‘பாட்டனா’

*

‘கெட்ட பழக்கத்தை நிப்பாட்டுறதுக்கும் நல்ல பழக்கத்தை உண்டாக்கிக்கறதுக்கும் கான்சென்ட்ரேஸன் முக்கியம்’

‘சுவத்தையோ கதவையோ வீட்டையோ அல்லது தெருவையோ பார்த்து பயப்படுறவன் என்னா செய்யலாம்? ஒரு ஆளை துணைக்கி கூட்டிட்டுப்போனா பரவாயில்லே. ஆனால் daily துணை கிடைக்கனுமே..எதுக்கு பயப்படுறோமோ , எந்த வீட்டைக் கண்டு பயப்படுறோமோ , அந்த வீட்டையே நேரடியாக face பண்ணு. நே…ரா பாரு! Face the truth! இதை செஞ்சா (similarity) எந்த பிரச்சனையையும் நேரடியா மோதலாம். ‘பாத்துக்கலாம்’,’கேட்டுக்கலாம்’,’அவர்ட்டெ சொல்லலாம்’டுலாம் வராது. டைரக்டா மோத வைக்கிம்’

‘Once , ஒண்ணைப்பார்த்து எப்ப நாம ஏங்கிட்டோமோ அதைவிட நாம சின்னதுண்டு அர்த்தம். நாம் சின்னதுண்டு ஒத்துக்கிட்டோம்டு அர்த்தம். நாம எதை விடவும் சின்னதல்ல’

‘சாய்ஞ்சு உட்காரும்போது ‘சாய்ஞ்சி உட்காருறோம்’டு உணர்ந்து உட்காரனும்’. சர்க்கார் இதைச் சொல்லிவிட்டு தான் ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிற ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். ‘சீப்பு கொண்டு வா’ என்று கணவன் சொல்கிறான். ‘கண்ணாடியை(யும்) கொண்டுவரவா?’ என்கிறாள் மனைவி. வீட்டுக்கு வீடு மனைவிகள்! ‘
கொஞ்சம் நில்லு’ – யோசித்துவிட்டு, ‘கொண்டு வா’ என்கிறான் கணவன்.

‘ஏன் அப்படி யோசிச்சிங்க?’

‘சீப்பை அடையனும். தலை வாரணும்டுதான் நான் கேட்டேன். இப்போ ‘கண்ணாடி’ண்டு இன்னொரு புதுப்பொருளை கேட்டுட்டே..அது தேவைதானா என்று யோசனை பண்ணுனேன்’ – கணவன்.

*

‘மசால்தோசை திங்கப்போற நீ மசால்தோசைக்காகத்தான் போவனும்’ – ‘பாட்டனா’

*

19.06.1996

‘ஜம்’ செய்யும்போது இன்னக்கி என்னான்னா செஞ்சோம்டு நெனைச்சுப்பார்க்கனும். தவறை நினைச்சி, ‘சரி’ நாளைக்கி இப்படி பண்ணக்கூடாது, கண்ட்ரோல் பண்ணனும்டு நெனைச்சா இந்த எண்ணமே கண்ட்ரோல் பண்ணும். பண்ண விடனும். பண்ண விட்டா போதும். unncessary அசைவுகள் வரத்தான் செய்யிம். இதே..நிறைய வரக்கூடாதுண்டுதான் சொல்றேன்.50%க்கு மேலெ வரக்கூடாது. 50%க்கு மேலே பாசிடிவ்தான் இருந்துகிட்டிருக்கனும். அப்பத்தான் தீர்ந்த அசைவு வரும். தீர்ந்த அசைவு, தீர்ந்த பார்வை, தீர்ந்த எண்ணம், தீர்ந்த குறிக்கோள், தீர்ந்த ஃபோர்ஸ் எல்லாம் ஃபார்ம் ஆகும். ஒண்ணே ஒண்ணை இழுத்தா அதனுடைய தோழனை அது கூப்பிடும். Light attracts light.. நீங்கள்லாம் சரியா ‘ஜம்’ பண்ணலேண்டு நெனைக்கிறேன். அது சம்பந்தமா கேளுங்க’

ஒரு சீடருக்கு ஜம் சமயத்தில் சினிமாப்பாட்டு கேட்கிறது. கஷ்டம்! ‘சக்கரைவள்ளிக் கிழங்கு நீ சமைஞ்சது எப்படி’…’எப்படி..எப்படி..?!’

‘அட, பாட்டு போட்டா நானும்தான் ரசிக்கிறேன். ஒண்ணு பாட்டை ரசிங்க. இல்லே, எதைப்பத்தி நெனைச்சிக்கிட்டு இந்தீங்களோ – பாட்டை discard பண்ணிவுட்டு – அதை நெனைங்க. ரெண்டையும் சேர்த்து செய்ய முடியலேண்டு சொன்னா, அந்த சமயத்துலே ‘ஜம்’ பண்ணாதீங்க’

*

‘மனப்பண்பைப் பத்தி என்னக்கி ஊருலெ பேச ஆரம்பிப்பானோ அன்னக்கிதான் சமுதாயம் உருப்படும். அப்பதான் ஃப்ரீயா சமுதாயத்துலெ பழகலாம்’

*

‘Dominating Emotion’ண்டா… எந்த உணர்ச்சியை மெயினா வச்சி வாழுறீங்களோ, எது இல்லாட்டி வாழ்க்கை இல்லேண்டு போவுமோ..அது. செக்ஸ்ண்டு சொல்லலாம். ஆனா அதுக்குக் கீழே எத்தனையோ காரணம் இருக்கும். செக்ஸ் அல்ல, நூறு பேர்லெ ஒரு ஆளுக்குத்தான் செக்ஸ் மெயினா இக்கிம். செக்ஸ் ஃபோர்ஸ்அதிகமா இக்கிறதுக்கு ஏக்கம் காரணம். love starvation, தாயின் அரவணைப்பு கிடைக்காம போறது..இதுக்கு substituteஆ positive concentration ஏற்படுத்திட்டாக்கா , செக்ஸ் uncontrollableஆ இருக்காது. அப்படி நெனைச்சிப்பாருங்க. எதுக்காக நீங்க வாழுறீங்க? ரவூஃப், அன்னக்கி நீ பணம்டு சொன்னா! பணம் அல்ல. உனக்கு தேவைப்படுறது. அறிவு. தெரிஞ்சிக்கனுங்குற அறிவு! அன்னக்கி நான் சொன்னேன், அறிவுங்குறது ஆர்கனைஸ்டா இருக்கனும். Walking Encyclopediaவா இருக்கிறதுனாலே எந்த லாபமும் கிடையாதுண்டு. Lifeலெ கோர்க்க முடிஞ்சதா இருக்கனும். Each and everything must be co-ordinated. அதுதான் லைஃப்ண்டு சொல்லியிக்கிறேன். பணம் – ஒண்ணு, ஆரோக்கியம் – ரெண்டு, குழந்தைச் செல்வம் – மூணு, சோசியல் செல்வாக்கு – நாலு. எல்லாம் சேர்ந்து வரனும். இது இதுக்கு இத்தனை percentageண்டு நான் dominating feelingஐ வச்சித்தான் கொடுக்க முடியும். அடுத்த செஷன்லெ ஒவ்வொரு ஆளும் dominating feeling எது உங்களுக்குண்டு சொல்லுங்க. அதுதானா, அதுக்கு மேலே ஏதாவது இருக்காண்டு நான் சொல்றேன்’ – ‘S’
*

‘இப்ப நாம டாக்டர்ண்டு வச்சிக்குங்க.. உங்க உங்க வியாதியை புரிஞ்சிக்குங்கண்டு நான் சொல்லும்போது எனக்கு தலைவலிக்கு மருந்து தாங்கண்டு கேக்குறமாதிரி இருக்கு. உங்களுக்கு மருந்து கொடுக்க ஆரம்பிச்சா நான் பேசமுடியாது. முதல்லெ வியாதியை கண்டுபுடிங்க. அதோட எந்த வியாதியையும் எப்பவும் கண்டுபிடிக்கிற பக்குவத்தை வளர்த்துக்குங்க. அப்ப உங்களுக்கு compensation என்னாண்டு தெரிய ஆரம்பிக்கும். இல்லாட்டா தர்றேன். அப்ப எல்லாருக்கும் யூஸ்ஃபுல்லா இக்கிம்’ – ‘S’ (Postive compensation பற்றிக்கேட்ட சீடரைப் பார்த்து)

*

‘லைஃப்லெ அறிவு ரொம்ப முக்கியம். அந்த அறிவு கோர்க்கப்பட்டதா, லிங்க் உள்ளதா இருக்கனும்டு சொன்னேன். Life must be organised. எனக்கோ, உனக்கோ, என் கூட்டாளிக்கும் உன் கூட்டாளிக்கும், என் புள்ளைக்கிம் அவன் புள்ளைக்கிம், என் புள்ளைக்கிம் உன் கூட்டாளிக்கும்டு நான் சொல்றது எனக்கு கிடைச்ச பிறகுதான். முதல்லெ நீ உன்னைப் பார்க்கனும். உனக்கு தேவைபட்டு மிஞ்சினபிறகு பொஞ்சாதி புள்ளைக்கும் கொடு. ஊர்க்காரனுக்கு, தெருவாளிக்கு, கூட்டாளிக்குக் கொடு. அவனுக்குப் பிறகு அமெரிக்காக்கு கொடுத்துக்கலாம்!’
*

‘Unknown force : வெளிமக்களால் திணிக்கப்படும் கருத்துக்கள். Known Force : நம்முடைய pros & consஐப் பார்த்து, consequeces பார்த்து, நாம டிசைட் பண்ணி எடுக்கிற முடிவு. இதுக்கு வெளிமக்களின் அறிவும் stimulationம், suggestionம் helpஆ இருக்கலாம். ஆனால் செஞ்சிக்கிட்டிக்கிம்போது, செஞ்சி முடிக்கும்போது நமக்குத்தான் மகிழ்ச்சி கிடைக்கும். இது சுயநலம் அல்ல. பொதுநலம்தான் . ஏன்? இது மக்களுக்கும் பயன்படப்போறது. நீங்க வீடு கட்டுறீங்கண்டு சொன்னா உங்களுக்காகத்தான் கட்டிக்கிறீங்க. ஆனா உங்க காசு கூலியாப் போவுது. சாமானாப் போவுது! சுயநலம் எது? நீ சந்தோஷமா இக்கிறதுக்காக மத்தவன் மண்டையப்போட்டு நசுக்குறது. முடிஞ்சா மத்தவங்களுக்கு நன்மை வர்ற மாதிரி நீ வாழு. நீ வாழும்போதே மத்தவனுக்கும், ஒரு தேத்தண்ணி, பன்னு கிடைக்கிறமாதிரி பார்த்துக்க. இல்லையா? அட்லீஸ்ட் நீ வாழ்ந்துட்டு போயிடு. இது சுயநலம் அல்ல’
*

‘Mental Scienceலெ – ஷார்ப் லைன் போட்டு – இது மரம், இது தண்ணி, இது காத்துண்டு பிரிக்கிறமாதிரி பிரிக்க முடியாது.Subconsciousண்டு சொல்லும்போது unconcious கலக்கும். consciousலெ unconscious கலக்கும். ‘முஹாஷபா’லெ ‘முராக்கபா’ கலக்கும். சில நேரத்துலெ மேலேயும் கீழேயும் ‘ஜம்ப்’ ஆயிக்கிட்டிக்கிம். இப்படி மாறி மாறி வர்ரதுக்கு ‘ஹாலு’ங்குறது. பிராக்டிஸ் பண்ணிப்பண்ணி , ஒரேயடியா நிலைச்சிப்போய்ட்டா ‘முகாம்’ம்பாஹா. ‘முஹாஷபா’லெ ‘முகாம்’ ஏற்ப்ட்டிச்சிண்டா ‘முராக்கபா’ மோதிக்கிட்டே இக்கிம். Mental Scienceலெ இன்னதுதான் இன்னதுண்டு சொல்றது கஷ்டம்’
*

‘முத்தேவைகள்; உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை. சரி, இந்த மூணும் வேணாண்டுட்டு எத்தனையோ பேரு பொருட்படுத்தாம வாழலை? அவன் வளர்ந்து , நம்மளையும் சிரிக்க வச்சிருக்கானே! அப்ப , அவனைப் பொருத்தவரைக்கிம் அதுதான் லட்சியமா இருந்திருக்கு. மூணுவேளை சோறு நமக்கு லட்சியம். எது பெருசு, எது சின்னது? இதுக்கு நம்ம பார்வை பத்தாது’

*

‘ரியாலத் (‘SS’) பண்ணும்போது சுத்திக்கிட்டு வர்றது, நிக்கிறது, மேலே போறது எல்லாமே நீங்கதான். (கீழே கெடக்குற நம்ம உடல், Pant மாதிரி)’

*

22.06.1996

நேற்று வெள்ளி செஷன் முடிந்து சேத்தபொண்ணின் கல்யாண கேஸட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சின்னம்மா மகன் தௌஃபீக் கொண்டுவந்திருந்தான் ஊரிலிருந்து. எவ்வளவு சிறப்பாக முடிய சர்க்கார் உதவி புரிந்திருக்கிறார்கள்! சேத்தபொண்ணு பேரழகியாக இருந்தது. பம்பரமாய் அஸ்மா சுற்றிக்கொண்டிருந்தாள். ஆனால் எல்லாவற்றையும் விட என் பிள்ளைகள்தான் அழகு. கேஸட்டைப் பார்க்கமலே இருந்திருக்கலாமோ? மனது அவர்களை இழந்ததில் இந்த வலி வலிக்கிறதே.. காதுகுத்த, ‘மணவறை’யில் உட்கார்ந்திருந்த மகள் அஸ்ரா நிலாமாதிரி இருந்தாள். என் கண்ணே பட்டுவிடும் போல. வீடியோக்காரன் திறமையானவன்தான் போலும். அந்த சமயத்தில் உம்மாக்காரியின் முகத்தை க்ளோஸ்-அப்பில் காட்டுகிறான். அஸ்மாவின் முகத்தில்தான் அந்த சமயத்தில் எத்தனை உணர்ச்சிகள்! அழுகையை மறைத்துக்கொண்ட மாதிரிதான் இருந்தது , அவள் புருவச் சுழிப்பில். அட வாப்பாக்காரனே, அனீஸின் சுன்னத்திற்கும், அஸ்ரா பெரியமனுஷியாகும் வைபவத்துக்கும் இப்படித்தான் எங்கோ தூரத்தில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு இருப்பாயா?

(தொடரும்)

குறிப்புகள் :

ரியாலத் : (‘SS’) பயிற்சி
கில்லா – கோட்டை
எஜமான் – ஷாஹுல் ஹமீது பாதுஷா
அஸ்மா லைன் – மாந்திரீக வேலை
பரக்கத் – அருள், வளம்
இபாதத் – இறைவனைப்பற்றிய சிந்தனை
மானி – ஆண்குறி
ஹராம் – விலக்கப்பட்டது
சம்சின் – பயில்வான்
சபர் – பிரயாணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s