சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள்
அத்தியாயம் 03
ஆபிதீன்
04-09.02.95ல் சர்க்கார் பேசியதிலிருந்து :
‘என் அறிவை, என் செய்தியை எந்த சமுதாயம் எந்த ஊரு எந்த நாடு மதிக்கிதோ அங்கே நான் போவமாட்டேன், அல்லாவே கொண்டுபோயி போட்டுவான்; நீங்க அம்போதான்!’. (ஆசைப்படுகிறவனுக்கு தான் உதவ ஆசைப்படுவதைச் சொல்கிறார்கள் சர்க்கார்).
Sylva Mind Control : சிதறாத நேரத்தில் கற்பனையை விதைத்தால் – cosmic force , பிக்-அப் பண்ணிக்கொள்ளும் (Subconscious Mind பொறுப்பை எடுத்துக் கொள்ளும். புது பாட்டிலில் பழைய தியரி)
‘திங்கிற சோறுக்கு வர்ற பீ மாதிரி எண்ணுகிற எண்ணத்துக்கு வர்ற விளைவுதான் காசு. பணம் சம்பாதிக்கிறதுக்கு ‘ரூஹானியத்’ வேணும். அதனால் பணம் மட்டுமே முக்கியம்ங்குறதல்ல.
‘உறவு வைக்கிம்போது பாம்பு கடிச்சா கூட தெரியாது. உறவுலெ வர்ற இன்பத்தால அல்ல. அந்த சூட்டுலெ தெரியாது. ஆயிரத்தெட்டு கவலைகள் இக்கிம்போதே புதுப்புது நெகடிவ் எண்ணங்கள் நுழையுதே..அப்ப blankஆ வச்சா எப்படி கொப்பளிக்கும்! Stillஆ mind இருக்கும்போது அது எங்கே போவுதுண்டு கண்டுபிடி. Dominating Feeling.. அதை lightஆ , பின்னாலேயே போயி , control பண்ணனும். அதுவரைக்கிம் Stilling of Mind என்பது quite impossible’ ( சர்க்கார் படித்துத் தூக்கி எறிந்த ரஜ்னீஸின் blank mind பற்றி)
‘நம்மள்ட்டெ உள்ள குறையை குறை அல்லண்டு நெனைக்கனும், அல்லது நீக்கனும்’
*
‘Suggestion கொடுப்பதற்கு 3 point முக்கியம். 1. Body ரிலாக்ஸ்டா இருக்கனும். 2. concentration 3. Imagine பண்ணனும். எதையும் மாற்றலாம். எதை மாற்றனும்டு நான் சொல்லனும்’
மீராமெய்தீன் குறுக்கிடுகிறார், வழக்கம்போல : ‘பையன் ஸ்கூலுக்கு போவ மாட்டேங்கிறான், வெளையாட்டுப் புத்தி ஜாஸ்தியாக இக்கிது, படிப்பு ஏறமாட்டேங்குது’
‘ஒங்க பேச்சை கேட்க மாட்டேங்குறாண்டுதானே சொல்றீங்க? அவ்வளவுதானே? இதுலெ உங்க part என்ன? நீங்க படிண்டு சொன்னா படிக்கனும்? அதை ஏத்துக்குற பக்குவம் அவனுக்கு இக்கினும்லெ.. படிப்புண்டு சொன்னா அவன் படிச்சுத்தான் ஆகனும்ங்குறமாதிரி உங்க பவர்-ஐ ஏத்துங்க. கண்ணால பாத்து, ‘படி’ண்டு சொன்னா படிப்பான். ஆனா நீங்க proper ரெஸ்ட் கொடுக்கனும். ஆக Auto Suggestion கொடுக்க நம்மளோட self powerஐ கூட்டனும்’
*
‘உனக்கு தெரிஞ்சதை வச்சி செயல்பட்டா உனக்குத் தெரியாத உண்மைகளையெல்லாம் அல்லா சொல்லிக் கொடுப்பான், இருக்கிற toolsஐ வச்சி வேலை பண்ணு, New tools will be givenண்டு அர்த்தம்’
‘கோபம் வருகிறது..அல்லது proper timeமுக்கு proper எண்ணம் வரமாட்டேங்குது. என்னா செய்யலாம்? எந்த கட்டத்திலெ இது வருது, எந்தெந்த கட்டத்திலே வரமாட்டேங்குதுண்டு பாருங்க. ஒருத்தன் கேள்வி கேக்குறான். அதுக்கு தவறா பதில் சொல்லிப்புட்டு வீட்டுலெ வந்து யோசனை பண்ணுறீங்க. அதேமாதிரி சூழல் வர்றமாதிரி..அவன் கேள்வி கேட்குறமாதிரி..நீங்க properஆ – அவன் நெத்தி நடுவுலெ பார்த்து பேசுற மாதிரி , பதில் சொல்ற மாதிரி , கற்பனை பண்ணுங்க. பண்ணிப்புட்டு மறந்துடுங்க. அது பிராக்டிகல் லைஃப்லெ தானா வரும்’
பேசிக்கொண்டிருக்கும்போது (மழை பெய்கிறது.. சாதாரணமாகவே ஆயிரத்தெட்டு உவமானம் வரும். இதைப்பார்த்தால் சும்மாவா இருப்பார்கள்?) உதாரணத்தை வாழ்க்கைக்கு பயன்படுகிறமதிரி சொல்லவேண்டுமே..
‘மழை பெய்யுதுங்க.. இப்ப ஜனங்களுக்கு என்னா தேவை? குடை தேவை. குடையெ ரெண்டு ரூவா குறைச்சி விய்ங்களேன்.. எல்லா வூட்டுக்கும் ஒரு ஆளைவுட்டு சொல்லி வுடுங்களேன். இதுக்கு மான மரியாதையெல்லாம் பார்த்தா? அரபி வூட்டுலெ போயி கக்கூஸ் கழுவுலாமா? மானமரியாதை உள்ளவன் செய்யிற வேலையா அது? நான் சொல்றது business + Service’
*
(‘நஜாத்’ பிள்ளைகள் பற்றி) : ‘என்னா செய்யிறது, அவன் ‘நஸீபு’. அவனுக்கு நம்மால வழிகாட்ட முடியாது.. இங்கெ யாரோ ஒத்தருதான் கேட்டாராம், ‘ஏம்ப்பா எல்லோரும் சூம்பிப்போயி இக்கிறீங்க? உங்கள்லெ யாராச்சும் ஒரு ஆள் நல்ல வளர்ந்திக்கிறதை சொல்லேன்..’டு. அவன் சொன்னானாம், ‘ஏன்..அதிராம்பட்டினத்துலெ ஒத்தரு இக்கிறாரே..’. அப்ப , இங்கெ இல்லெ!. ஆனா ஒண்ணு, புள்ளைங்க எல்லாம் நல்ல புள்ளைங்க. அறிவைத்தேடி அலையிறானுவ – short periodலெ. கிடைக்கலே. அவனுக்கு இப்ப ‘டக்’குண்டு கெடைச்சிக்கிறது (அவங்க) இதுவரைக்கிம் பாக்காதது. அவ்வளவுதான்’.
‘அடிப்படை இல்லாத காரணம். ‘பட்’டுண்டு மாட்டிக்கிட்டானுவ’ – கை இரண்டையும் மேலே உதறிவிட்டுக்கொண்டு தோளை நெளிக்கும் சீடர் ஒருவர் – இப்போது அப்படியெல்லாம் செய்யாமல்- சொல்கிறார். அடிப்படையைக் கற்றுக் கொண்டார்?
‘ம்.. Basic Knowledge இல்லே.’ – சர்க்கார்
*
‘நாம பின்னால எப்படி வாழ நெனைக்கிறோமோ அந்த Similarityஐ இப்ப இங்கெ உண்டாக்கனும் – சின்னச் சின்ன காரியங்கள்லெ. நீங்க பெரிய வசதி படைச்சவனா – பேசும்போது பணம்டு சொல்றேன், ஆனா பணம் மட்டுமேயில்லே லைஃப் – ஏதாச்சும் உதாரணத்துக்கு எடுத்துக்கனும்லெ? – செல்வாக்கு உள்ளவனா வாழனும்டு ஆசைப்பட்டா அப்படி வாழுறவன் எப்படி இருப்பானோ, எத்தனை வருஷத்துக்கு முன்னாலெ அவன் ரெடியாவானோ – ஒரு 5 வருஷம், அஞ்சு வருஷத்துலெ உச்சிக்கு பொய்டுவோம்டா – step by stepஆ – அஞ்சுவருஷத்துக்கு முந்தி ஆரம்பிச்சி, கம்ப்ளீட் பண்ணிடனும். ஒவ்வொருநாளும் ஸ்டெப்-ஐ increase பண்ணிக்கிட்டே வரனும். இதற்கு ஒரு சின்ன similarity கொடுங்க, Miniature formலெ தாங்க பார்ப்போம்’
‘ஒவ்வொரு நாளும் improve பண்ணிட்டே வரனும்’ – சீடர்
‘ஆமா, அதுக்குத்தான் என்ன செய்யனும்ங்குறேன். நான் கேட்குறது, Main Target அடையிறதுக்கு முன்னாலெ similarity ஒண்ணு இக்கிதுண்டு சொன்னேன்லெ, totally differentஆ அதுதான் வேலை செய்யுதுண்டு சொன்னேன்ல… என்ன அது?’
சர்க்காரே சொல்கிறார்கள்: ‘இன்னக்கி 10 புடி சோறு சாப்பிடனும்டு நெனைச்சா 10 புடிதான் சாப்புடனும். பதினோராவது புடி சாப்பிடக்கூடாது. 9 புடிலெ நிப்பாட்டக்கூடாது. நாளக்கி சாப்பிட்டபிறகு 5 நிமிஷம் தூங்கனும்டா 5 நிமிஷம்தான் தூங்கனும். 6வது நிமிஷத்துலெ முழிச்சிடனும். நாலு நிமிஷத்துலெ முழிச்சிடக்கூடாது. அப்ப நெனைச்சதை அடையிற சக்தியை வளக்குறீங்க. Isolated Thingsண்டு எதுவுமே இல்லை. எல்லாமே linked’.
*
‘காசு வேற ‘பரக்கத்’ வேற. ‘பரக்கத்’ இருந்தா காசு வரும். ‘பரக்கத்’தோட நிழல்தான் காசு. ‘பரக்கத்’ இருந்தா நிழல் இருக்கும். வெறும் நிழல்ண்டு சொன்னா Hallucination, Illusion. ‘பரக்கத்’ இல்லாத பணம் பணமே அல்ல. கண்ணாடில தெரியிற பிம்பம். பரக்கத்-ஐ கூட்டாளியாக்கி அடிமையாக்குங்க. ‘அஸ்ஸலாமு அலைக்க தால் ஷரிஅன் வ கஸீரா (அஸ்ஸலாமு அலைக்கும், சீக்கிரம் அதிகமா திரும்பி வாங்க). உருவேத்தனும் – கமாண்ட் பண்ணி வரவழைக்க.’
1712 தடவை ஓதவேண்டும் – 3 நாளில் உருவேத்த. முன்பின் சலவாத் 11. ஒரு நோன்பு பிடிக்க வேண்டும். மீன் கருவாடு சாப்பிடக்கூடாது’ – காசை அடிமையாக்க.
சரியான சிரிப்புதான். முதலில் , ‘அஸ்ஸலாமு அலைக்க தால் கஸீரன் வ ஷரிஆ’ என்று தவறாக எழுதியிருக்கிறேன். Nov’95 செஷனில் நேரில் கேட்டுக் குறித்தது. இதற்கு முன்பே கேட்ட செட் பிள்ளைகள் சர்க்காரின் மறதியை பயந்து சுட்டிக் காட்டாததால் என் ‘பரக்கத்’துதான் எப்படிப் போய்விட்டது! அதுதானே பார்த்தேன், அப்படிச் சொல்லி பணத்தைக் கொடுக்கும்போதெல்லாம் வெறும் ‘அலைக்கும் சலாம்’ என்ற பதில்தான் கிடைத்தது! இனிமேல் மாறட்டுமாக. தாய், மனைவி, பிள்ளைகள் , சர்க்கார் தவிர மற்றவர்களுக்கு கொடுக்கும்போது (பணமாக; காசாக அல்ல) அப்படி (சரியாக : ‘அஸ்ஸலாமு அலைக்க தால் ஷரிஅன் வ கஸீரா) சொல்ல வேண்டுமாம். ‘ஆனா இத என்னெட்டெயே போடாதீங்க, பலிக்காது’ என்றார்கள் சர்க்கார் அந்த சமயம். இப்போது, ‘பொஞ்சாதிக்கு கொடுத்தாலும் இதை ஓதிதான் கொடுக்கனும்’ என்று சொல்கிறார்கள். குழப்பம். கொடுக்காமலேயே இருந்துவிடலாம் இதுக்கு!
சர்க்காருக்கு ஞாபகமறதி என்பதே கிடையாது போலும். மேலே உள்ளது போல பேச்சினூடே சிறு பிழைகள் வரலாம். ஆனால் இருபது வருடத்துக்கு முன்னால் பேசிய கேஸட்டில் , அதற்கும் இருபது வருசத்துக்கு முன்பு வந்த ஒரு பத்திரிக்கையில் வந்த article பற்றி சொல்வதை முஸ்லிம்லீக் தலைவரே வியந்து பாராட்டுவாராம். அந்த 40 வருஷ மேற்கோள் இப்போதும் வரும், அதே தொனியில்!
‘Whenever a company grows bigger and bigger its products become smaller and smaller’ – Sony கம்பெனி பற்றியது. அதேபோல , ‘கற்பனையா , Will Powerஆ எது ஜெயிக்கும்?’ என்று சொல்வதற்குள்ள ‘தயிர்க்காரி – எலக்ட்ரிக் போஸ்ட் – சைக்கிள்’ உதாரணம். அப்படியே அதே வார்த்தை அமைப்பில் , சொல்லப்படும் நேரத்தில் , அச்சுப் பிசகாமல் அப்படியே இருப்பது அதிசயம்தான். உடல் – உணர்ச்சி – மூளை – இதயம் ஆகியவற்றின் தொடர்பை விவரிக்க அவர்கள் பயன்படுத்தும் ‘குதிரை – வண்டி – வண்டியோட்டி – முதலாளி’ உதாரணமும் அதே வேகம்தான். இப்போதிருக்கிற ஒரே வித்யாசம் , பல் விழுந்ததால் சற்றே தமிழ் கொழகொழவென்று போகிறது. அவ்வளவுதான். பழைய சம்பவத்தைச்சொல்லும்போது மிக நுணுக்கமாக விவரிப்பார்கள். அவர்கள் வாங்கப்போன சுருட்டு , எந்த இடத்தில் தவறி, உருண்டு, எங்கே போய் விழுந்தது? அது 50 வருட சுருட்டு ! ஆனால் இது பெரிய விஷயமே இல்லை என்பார்கள். பயிற்சிதானாம். எல்லோராலும் முடியுமாம். நானும்கூட இதை எழுதனும் எழுதனுமென்று இரண்டு மாதமாக நினைத்து இப்போது எழுதி விட்டேனே, எல்லாம் பயிற்சிதான்!
*
29.01.1996
காலையில் இப்ராஹீம் ஃபோன் செய்தார். ‘ராத்திரி செல்லாப்பா பார்க்கா வர்றாராமுலெ.. நானும் சேந்து அவர்கூட வந்துடுறேன்’ என்று. தம்பி செல்லப்பா என்னிடம் சொல்லச் சொல்லியிருக்க வேண்டும். 3 நாளைக்கு முன், ‘ரூமுக்கு வா, பிரிட்டிஷ் பாஸ்போர்ட் சம்பந்தமான சர்டிஃபிகேட்கள் தருகிறேன், ஊருக்கு எடுத்துக் கொண்டு போ, வேறு என்னென்ன வேலை பாக்கி இருக்கிது என்று சொல்கிறேன்’ என்றும் சொன்னேன். குறிப்பாக இங்கே அவீர் ரூமுக்கு அவரை வரச் சொன்னதன் காரணம், நாலு பேருக்கு தெரியக் கூடாதே என்பதற்காக என்றும் விளக்கினேன். ‘வண்டி கேரேஜில் இருக்கிறது, இரண்டு நாள் கழித்து வருகிறேன்’ என்றார். வந்தார், இப்றாஹீமுடன்+ மஸ்தான் மரைக்கானுடன்! என்ன காரணத்திற்காக இங்கு வரச் சொன்னேனோ அதைப் புரிந்தானா இல்லையா இவன்? ‘கண்டிப்பாக பாஸ்போர்ட் கிடைத்துவிடும், இந்த இந்த வேலை முடிந்திருக்கிறது, தாசில்தார் சர்டிஃபிகேட் வாங்கி, ஹைஸ்கூலிலிருந்து எனது ‘டிசி’ டூப்ளிகேட் வாங்கி (ஒரிஜினல் தொலைந்து விட்டது) அதை ட்ரான்ஸ்லேட் செய்து, நோட்டரி பப்ளிக்கிடம் ‘சீல்’ வாங்கவேண்டியதுதான் பாக்கி என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரூமில் எழுந்த கரிய பொறாமை பூதத்தின் பெருமூச்சு புகைவடிவத்தில் என்னை நெருங்கிப் பயமுறுத்துவதை உணர்ந்தேன். தனியாக கூட்டிக் கொண்டுபோய் சொல்லவும் இயலாது. அப்படிச் சொன்னாலும் ரூமுக்கு வந்து அத்தனைபேர் முன்னிலையில் ‘இதை எப்படி செய்யிறது?’ என்று உரக்கக் கேட்கும் ரகம். பேசும்போது கண்பார்த்துப் பேசாத அருவருப்பான பழக்கம். இரண்டு மூன்று வருடங்களாக இருக்கிறது அவருக்கு. அது தங்கை ஃபாத்திமா இங்கு வந்தவுடன் மசாலாவோடு கலந்த பெரட்டுன கறியாகப் போய்விட்டது. ஹைர்.. நல்லது நடக்கட்டும். எல்லாம் ரெண்டு சுருட்டுக் கட்டையும், மூன்று காராபூந்தி பொட்டலத்தையும் பாரீஸிலோ லண்டனிலோ உள்ள ஈஸிசேரில் உட்கார்ந்து அனுபவிக்கத்தான். முஸீபத்து பிடித்த அரபுநாட்டு விசா தொந்தரவுகளை விட்டு நீங்கினாலே ஒரு வளர்ச்சி இருக்கும் என்ற நம்பிக்கையில் இறங்கியிருக்கிறேன்.
இரண்டு வருடத்திற்குள் – மேலேயுள்ள பத்தியை – லண்டன் அல்லது பாரீஸில் படிக்க வேண்டும். இப்போதைய திட்டம். இதை துபாயில் அல்லது வேறெந்த ‘கலவாடை’ நாடுகளில் படித்தால் சர்க்காரைப் பற்றி நான் எழுதுவது தப்பு. ஓங்கி அறைவார்கள், அதுவும் பீச்சங்கையால்.
**
9-10.02.95 கேஸட் :
‘ஜனங்களுக்கு service பண்ண ஆசைப்பட்டாலே போதும். அது தனக்குத்தானா காத்துல பறந்துபோயி ஜனங்களை இழுத்துக்கிட்டு வரும்ங்க. ரொம்பபேரு நெனச்சிக்கிட்டு இக்கிறாஹா, நான் ஓதிப்பாக்குற காசுலதான் சோறு உண்டுக்கிட்டிக்கிறேண்டு.. தெரியலை . அஹலுக்கு! நான் சொல்லவும் இல்லே.. அதுக்கு தேவையுமில்லே’
‘ஆசை முக்கியம்; அறிவு முக்கியமல்ல. மேலே வந்தவன்லாம் அறிவாளியல்ல, வராதவன்லாம் முட்டாளுமல்ல. ஆசை முக்கியம் , ஆசையை திரட்டப் பாதையை பாருங்க, குறுக்கே பேசாம ‘ஜம்’ பண்ணுங்க. எனக்குலாம் அறிவாளி தேவையில்லை. முட்டாள்தான் தேவை. அவந்தான் சொன்னதை நிறைவேத்துவான்’ . சர்க்கார் எங்களை தேர்ந்தெடுத்ததன் காரணம்?
வவுத்தால போற’ Psychology :
‘மாத்திரை தயாரிக்கிறவன்ற வீர்யம்தான் உங்களுக்கு வயித்தால போவ வைக்கிது – போட்டா நிக்கிறதுக்கு! அவன்ற ‘ஃபோர்ஸ்’தான் அவன்ற தேவையை நிறைவேத்துது – உங்களுக்கு வவுத்தால போவ வச்சி!’
‘பிரித்து செய்யும்போது சக்தி கூடும்’. (உம். அலுவலகத்து வேலை பிரிக்கப்படும்போது Resultன் தரம் கூடுகிறது)
*
வேணும் வேணும் என்று ஆசைப்பட்டால் கிடைக்கும் என்பார்கள் சர்க்கார் . Burning Desire…கொந்தளிக்கும் ஆசை
‘வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்
வேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே’
– எனும் சிவவாக்கியம் 9 ஆம் நூற்றாண்டுக்கு வேண்டுமானால் பொருத்தமாயிருக்கலாம். சர்க்கார் 21ஆம் நூற்றாண்டுக்காரர். ‘மெய்ஞ்ஞானப்புலம்பல் எல்லாம் மயிர் புடுங்கத்தான் லாயக்கு’ என்பார்கள். சிவவாக்கியரின் ஆசை அதாகக் கூட இருக்கலாமோ? அப்போ வேணும்தான்!
*
சர்க்கார் சீடர்களைக் கேட்கிறார்கள். ‘அரைக்கண் மூடுன பார்வை, அதென்னா அது, ஆங்.. ஞானப் பார்வை.. ‘வாங்கம்மா சீதேவி… கண்ணுமுழி’ண்டுலாம் நடிக்காம , சிகரெட் குடிச்சிக்கிட்டு , கால்மேலே கால்போட்டுட்டு , வர்றவங்களை குதறி எடுத்துகிட்டு இக்கிற எனக்கு ஏங்க இத்தனை கூட்டம் வருது?’
‘அருள்..’
‘அருளுமில்லே..மயிருமில்லே. என்னெட்டெ ‘மசாலா’ இக்கிதுண்டு நெனைச்சிருக்கலாம்; அது உண்மைண்டே வச்சிக்குவோம், அதுக்கு மேலே, எனக்கு கொடுக்கனும்டு ஆசை இந்திச்சி.. அந்த ஆசை ஜனங்களை இழுக்குது.. காசை நான் பெருசா மதிக்கலே..இப்ப நான் காசு கேட்குறதுக்கு காரணம், இந்த காசை வச்சி நான் ஒண்ணும் பண்ண முடியாதுண்டாலும்… ஏமாத்துறாளுவ! ஏழு கணக்கு போட்டுட்டு 35 காசு கொடுத்துட்டு போறா ஒருத்தி!’
சர்க்காரை ஒரு கிழவி நன்றாகவே ஏமாற்றியிருக்கிறது. ‘வாப்பா.. சீதேவி.. தனிமரமா இக்கிறியே..’என்று பிலாக்கணம் பாடி..! சர்க்கார் , வந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு உடனே தண்ணீர் ஓதி விரட்டியிருக்கிறார்கள். ‘இந்த கழிச்சல்ல போறவன்ட்டெ எப்படி ஓதி வாங்குனேன் பாத்தியா, காசு கொடுக்காமெ?’ – கிழவி வாசலில் யாரிடமோ சொல்லிக் கொண்டு போனதாம்.
‘ஜன்னல்ல கையை வுட்டு அந்த கிழவிட துப்பட்டியைப் புடுச்சி இழுத்து ஒரு அறை வுடலாமாண்டு இந்திச்சி!’ – சர்க்கார்
*
நாவப்பட்டினத்தில் ஒருவருக்கு ஒண்ணுக்கு போகும்போது இரத்தமாக வந்திருக்கிறது. லூயிஸ் டாக்டர், கிட்னி கோளாறு என்று சொல்லிவிடவே பயந்துபோன அவர் , சர்க்காரைப் பார்த்திருக்கிறார். சர்க்கார் ‘ஏதோ’ செய்தார்களாம். அப்போதே அவருக்கு ஒண்ணுக்கு வருகிற உணர்ச்சி.. போய் இருந்து பார்த்தால்.. மூத்திரம் வருகிறது! ‘அவரு பாதியிலே நிப்பாட்டிட்டு – உடனே சொல்லனும்னு ஆசை – சுன்னியைப் புடிச்சிட்டே வந்து , ‘சாபு..இப்ப மூத்திரம்தான் வருது”ண்டார். நான் சொன்னேன், ‘இப்படியே புடிச்சிட்டுபோயி இன்னும் நல்லா தொறந்து காட்டிட்டு வாங்க டாக்டர்ட்டெ..’ – சர்க்கார்.
சர்க்கார் ஒருமுறை மிகக் கடுமையாக பெத்தடின் போடச் சொல்லி , சாதாரணமாக (வழக்கம்போலவே ) இருந்து, லூயிஸ் டாக்டரை அதிசயப்பட வைத்திருக்கிறார்கள். இப்போது லூயிஸ் எங்கே? அவர் மகனும் மருமகளும்தான் நாவப்பட்டினத்தில் போடு போடென்று இப்போது போடுகிறார்கள். அவர்களிடம் கேட்கலாம்: ‘லூயிஸ் இருக்கும்போது யாராவது சாமானை பிடித்துக்கொண்டு அவரைப் பார்க்க வந்தார்களா?’
*
‘நமக்கு நெஞ்சில் உண்மையான ஆசை இந்திச்சிண்டா அது நடக்காம போகவே போகாது. ஆசையை நீங்க மட்டும்தான் வைக்கனும். ஒரு லட்சியம் முடிந்த உடனேயே அதெ நெனச்சிக்கிட்டே இக்கெப்படாது. இதே வீர்யத்தோட அடுத்ததுக்கு ‘ஜம்ப்’ ஆயிடனும். லைஃப் முழுக்க பிளான் போட்டுக்கிட்டேதான் இக்கெனும். மேலே போய்க்கிட்டேதான் இக்கெனும். ஒரு வார்த்தை, ஒரு அசைவு எங்கே கெடுதல் விளைவிக்கிதுண்டு ‘செக்’ பண்ணிக்கிட்டே இக்கினும்’
‘தனிப்பட்ட எந்த மனுஷனும் தனியே வளர முடியாது. ஏதேனும் ஒரு உதவி – spiritual ஆகவோ, மென்டல் ஆகவோ, பொருளாதார துணையோடவோ, இல்லே, அட்வைஸ் பண்ணப்பட்டோதான் வளர முடியும். தனிப்பட்டு வளர்றதா இருந்தா வளரலாம். ஒரு மசால்வடை கடைதான் வைக்க முடியும்!’
*
‘வளர்ந்தபோது, வளர்க்க உதவியவர்களைத் தூக்கனும்’ என்றார்கள் சர்க்கார்.
*
‘அரபிக் குதிரைக்குப் பிறந்த குதிரைக்கு ஹராத்துல பொறந்த குட்டிட குட்டி’ – சர்க்காரின் வாப்பாவை அவர்களின் சொந்தக்காரக் கிழவி விவரித்த விதம்!
*
தஞ்சைப் பகுதி (குறிப்பாக நாக்கூர்) : ‘இந்த மண்..ஒரு ஆறு வந்து பிரிஞ்சு அப்படியே கூடும்.. டெல்டா.. எதை போட்டாலும் விளையும் – விந்து உட்பட! பொறந்த புள்ளையிலுவலாம் பெஸ்ட் புள்ளையிலுவ. என்ன ஒண்ணு, டிரையினிங் இல்லை’
*
ஒரு கதை சொல்கிறார்கள் சர்க்கார். பழைய கதைதான், ஆனால் இடம் இப்போது மினாரடி (மினாரா அடி).
‘அல்லா ஒரு நாளு மினாரடில உக்காந்துக்கிட்டிருந்தான். ரொம்ப கவலையா மொஹம். நம்மூரு ஆளு – ஒரு பெரிய மனுசன் – போயி , ‘என்னாங்கனி.. ஏங் இப்படி இக்கிறியும்? பீடி கீடி வேணுமா?’ண்டு கேட்டிக்கிறாரு’
‘அதெல்லாம் ஒண்ணும் வாணாம்ப்பா’
‘அப்ப என்னாங்கனி கவலை, சொல்லுமேங்..’
‘இல்லே..உங்களையெல்லாம் படைச்சேனே..அதெ நெனைச்சி கவலைப்பட்டிக்கிறேன்!’
‘அதுக்கு ஏன் கவலைப்படனும்ங்கனி? நீம்பரு சொல்றபடிதானே செஞ்சிக்கிட்டு வர்றோம் நாங்க?’
‘செஞ்சிக்கிட்டு வர்றீங்களா, சரி. நீங்க கேக்குறதையெல்லாம் கொடுக்குறேனா இல்லையா?’
‘ஆமா’
‘மசால்வடை கேட்டீங்க, கொடுத்தேன், வூடு கேட்டீங்க, கொடுத்தேன், மனைவி மக்களை கேட்டீங்க, social prestige கேட்டீங்க..கொடுத்தேன்’
‘ஆமா, அதுக்கென்ன இப்ப?’
‘யாருமே என்னெயெ வேணும்டு கேக்கலியே..! நான் கெடச்சாதான் எல்லாம் கெடச்ச மாதியாச்சே…அத கேட்கத் தெரியாத பிறவிகளை நெனைச்சி கவலைப்பட்டுக்கிட்டு இக்கிறேன்’ண்டானாம் அல்லா’.
*
‘Lifeலெ ஒண்ணெ (ஒரு விஷயத்தை) mainஆ வச்சுக்குங்க (எல்லாம் சரியா நடக்கும்), அது ஒண்ணே போதும்.’
‘புரிஞ்சதை practicalityக்கு கொண்டு வந்தா லைஃப் ரொம்ப சிம்பிள். அடடா! வாழுறதுக்கு கொடுத்து வச்சிருக்கனும்ங்க. அளஹான ஜனங்கள், அளஹான மக்கள், அளஹான சூழ்நிலை.. என்னமோ தெரியலே, சிக்கல்லெ மாட்டிக்கிட்டு வாழவும் இல்லே, ரசிக்கவும் இல்லே, சுவைக்கவும் தெரியலே, சிரிக்கவும் தெரியலே..எல்லாம் மறந்து பொய்டுச்சி’
‘Life is not so sensible. Life is not so logical. லைஃப்லெ பகுத்தறிவுக்கு மாறா நிறைய நடக்குது. அதனாலதான் பகுத்துப் பார்க்க அறிவுக்கு முடிய மாட்டேங்குது’
‘உன்னை ஒரு வினாடி நேரம் மறந்து விட்டாய் என்று நிரூபிக்கப்பட்டால் நீ காஃபிர் ஆகிவிட்டாய் என்று ஃபத்வா கொடுத்து விடுவேன்’ – இது ‘தரீக்கா’.’
‘இபாதத்’ பண்ணுறோம்டு நினைப்பு வந்தா Superiority Complex வரும். இவங்க ‘இபாதத்’ பண்ணாதவங்களை ஏச ஆரம்பிப்பாங்க. இதுவே தப்பு. ‘இபாதத்’தை கெடுத்துடும்.’
*
ஜீவகாருண்யம் :
‘பாம்பை அடிக்காம வுட்டா உங்க தைரியம். ஆனா அத எடுத்து அடுத்த வூட்டுலெ உட்டுடக்கூடாதுல்ல.. ஆனா (அதைப்) பிடிக்காம சும்மாயிருந்தா அடுத்த வூட்டுக்குலெ போகும். நீங்க ஜாக்கிரதை இக்கிறதுனாலெ அடுத்த வீட்டுக்காரனும் ஜாக்கிரதையா இருப்பாண்டு சொல்ல முடியாதுலெ? அப்போ (பாம்பை) அடிக்காம வுடுறது அடுத்தவங்களை பாம்பு கடிக்கனும்டு வுடுற மாதிரில ஆவுது!’ – ‘S’
சர்க்கார் பேச்சுதான் எவ்வளவு வியப்பாக இருக்கிறது! ஆனால் மற்றவர்கள், வியக்கிறமாதிரி பேசினாலும் சந்தோஷப்படுவார்கள் – அவர்கள் குழந்தைகளாக இருந்தால். சர்க்கார்-ஐ என் மகன் அனீஸ் அழகாக வளைத்துப் போட்டான். வீட்டில் அவனது சித்திமாவிடம் சாக்லெட் கேட்டிருக்கிறான். சற்று முன்புதான் ஏதோ விஷமம் பண்ணி அதன் கோபத்தைக் கிளறி விட்டிருக்கிறான். இவன் சாக்லெட் கேட்டதும் அது கோபமாக , ‘உனக்கு கொடுக்குறதை மசுருக்கு கொடுக்கலாம்’ என்றிருக்கிறது. இவன் , உடனே, அடுத்த வினாடியே : ‘நாந்தான் மசுரு. கொடு!’
‘அட!’ என்று ரசித்து சப்புக் கொட்டினார்கள் சர்க்கார், நான் இந்த சம்பவத்தைச் சொன்னதும். சிரித்துக் கொண்டார்கள். ‘பெரிய மண்டையில்லெ, நல்லா பேசுவான் இவன். ஆனா ரொம்ப ஆச்சரியப்படுத்துற மாதிரி இவன் பேசும்போது மத்தவங்க கண் ரொம்ப படும். அப்பப்ப ஓதிப் பாத்துக்கனும்’ என்றார்கள்.
அனீஸின் பேச்சு மட்டுமல்ல, செயல்களும் சிரிப்பானவைதான். மூணு வயது கூட ஆகவில்லை. வாப்பாவைப் போலவே பிரஷ் பிடிக்க ஆரம்பித்து விட்டான். ஆனால் வாப்பாவுக்கு வராத ஐடியா அவனுக்கு. ஒரு பிரஷ் வைத்திருந்தான் கையில். ‘என்னாங்கனி, எங்கே கிடைச்சுது? என்னா பண்ணப் போறியும்?’ என்று கேட்டேன். அவன் சட்டென்று ஜட்டியைக் களைந்து தன் சாமானை பிரஷ்ஷால் துடைக்க ஆரம்பித்து விட்டான். சர்க்காரிடம் இதையும் சொன்னேன். அவர்களுக்கு சிரிப்பு வெடித்துக் கொண்டு கிளம்பியது.
*
02.02.1996 வெள்ளி செஷன்
10-15.02.95 கேஸட்டிலிருந்து (‘Secret Symbol’ ஆரம்பம்) :
‘மூணாவது கண் – Sixth Sense – மூளைக்கு அடியில் உள்ள பிட்யூட்டரிதான் . Whole Body, Whole Emotion, Whole Personality, Whole Egoவையே அதுதான் control பண்ணுகிறது. சூஃபியாக்களின் பாதையில் உள்ள மெயின் பாயிண்ட்டே பிட்யூட்டரி க்ளாண்ட்-ஐ ஃபோகஸ் பண்ணுவதுதான். (நெற்றிக்கு நடுவில் உள்நோக்கிப் பார்ப்பது). பேசும்போது நெற்றியைப் பார்த்து பேசணும்’
‘Pastஐ திரும்பிப் பார்க்கும்போது நாம செஞ்சது 100% கரெக்ட், தப்பில்லே, நல்லா இந்திக்கிறோம், நல்லா வாழ்ந்திக்கிறோம்டு எப்ப தோணுதோ அப்பத்தான் ஆக்சுவல் மனுஷனா இருக்க முடியும். சூஃபியாக்களின் முதல்பாடம் – அவங்க ஞானப்பாதையில் புக ஆரம்பிச்ச உடனே – தன்னைத்தானே உத்துப் பாக்குறது. ஃபிக்ரு க ஃபீக யக் ஃபீக் (உன்னை உற்றுப் பார், அது உனக்குப் போதும்). Habitஐ control பண்ணுறதுதான் ‘தரீக்கா’.
‘அவமானப்படும்போது மனம் திறள்ற மாதிரி , அப்ப concentration ஏற்படுற மாதிரி எப்பவுமே ஏற்படாது.
‘பாதிக்கப்பட்டவங்களின், வெந்துபோன, கசக்கப்பட்டவர்களின் ‘பதுவா’வுக்கு பயப்படு. ஏனெனில் அவங்களின் பதுவாவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரை கிடையாது. அதாவது பலிக்கும்.’
‘நிலக்கரி சுரங்கத்தில் வேலைபார்ப்பவனின் diaryஐ தேங்காய் பறிப்பவன் புரிஞ்சிக்க முடியுமா?’ (‘குஸூலுல் ஹக்ம்’ (தத்துவக் கல்) – சூஃபியாக்களின் புத்தகத் தன்மை)
*
a. ஷத்தரியா தரீக்கா – அனல்ஹக் (நான்தான் ஆண்டவன்)
b. அல்லாஹ் – இஸ்முல் ஆலம் (Most Powerful Word)
c. அர்ஷ் – ராஜபீடம். சீட்.
d. Literature – ‘இந்திய மூளை விலை உயர்ந்தது, ஏண்டா use பண்ணுனதில்லே’ங்குறது.
e. ஜூம்மா உரை – ‘இதை கேக்குறதுக்கு Rock & Roll ஆடிக்கிட்டிக்கலாம் (பெரிய ஹொத்துவாப் பள்ளி, குறிப்பாக!)
f. மழை பெய்யும்போது கேட்கும் துஆ – கண்ணீர். துன்பத்தின்போது வருவது.
*
‘தப்பு, தப்பா இருக்கிறதை விட செய்கிற எண்ணம்தான் முக்கியம். ‘நிய்யத்’ நன்மை செய்வதாக இருந்தால் நன்மை’
‘பொதுவான எந்த சட்டமும் விதிவிலக்குகள் இல்லாததல்ல – ஒன்றே ஒன்றைத் தவிர. அல்லா ஒருவன் இருக்கிறான் என்பதில்’
‘நம்பிக்கையினால் நடக்குற காரியத்துக்கு நம்பிக்கை வேணும். நம்பாத காரணத்துனால இருக்கும் ஒன்று இல்லாததாக மாறிவிடாது. எஜமானை (ஷாஹூல் ஹமீது பாதுஷா) நம்பாவிட்டாலும் கெடைக்கும். ஆனா நம்புறவங்களுக்கு கிடைக்கிற அளவு கிடைக்காது. நீங்க நம்புறீங்களோ இல்லையோ எஜமானுக்கு பவர் இக்கிறதுங்குறது Fact. Proved Fact. Purely Scientific’.
‘சுத்தமான knowledge கெடச்சிச்சிண்டு நெனைச்சா Positive. தன்னையெ ஒத்தவன் வேலை வாங்கிட்டாண்டு நெனைச்சா Negative’
‘Consious வேறு, Conscience வேறு’
‘ஏன்?’ என்பவர்களுக்கு பதிலைத் தாங்கும் சக்தி கிடையாது’ (புரிந்து கொள்ளும் தேவையும் இல்லை)
*
Secret Symbol – ஆரம்பமாகிறது பாடம்…
‘Pyramid என்பது கீழே இறங்கி வந்து (தெய்வத்தன்மை பரிணாமம் கொண்டு), கீழே , சாய்வாக வருது. இறங்கின உடனே இங்குள்ள காத்து , தான் யாருங்குறதை மறக்கடிக்குது. இப்ப (கோட்டை) வளர்க்கனும். வளர்த்த உடனே தான் யாருண்டு புரிஞ்சிட்டு இன்னொரு பக்கத்தை இணைக்குது. நடுவுல உள்ளது அண்ட சராசரம். அதன் மேலே இருப்பது ‘ஷைத்தானியத்’. ஷைத்தான் தலைக்கு மேலே இக்கிறான்லெ! கீழே உள்ளது ‘ரஹ்மானியத்’ – இதை அப்படியே கற்பனை பண்ணி,
‘யா கல்காயில் யா அஹ்ஜமாயில் யா மீகாயில்
பி சத்வத்திக வபி குத்ரத்திக
வபி ஜலாலத்திக யா வாஜிபல் உதூத் யா காலிகல் காயினாத்
யாஜ்னி.’ என்று ஓதணும்
பிரமிட்-இல் உள்ள வட்டத்தின் கீழ்ப்பகுதி: ‘உன் சர்வீஸ், உன் பயிற்சி – நீ ‘யூஸ்’ பண்ணி – சரிபாதி கீழே வருது , ரஹ்மானியத். சரி பாதியாவது மத்தவங்களுக்கு கொடுக்கனும். அதற்கு கீழே வரும் வட்டம் முழு ரஹ்மானியத்’ – சர்க்கார்.
(இதற்கு மேல் ? ‘வெள்ளித் திரை’யில் காண்க!)
*
‘பீ பேளுறது, குசு வுடுறத கூட controlஆ பண்ணனும், அடக்கனும். தன்னை அடக்குறவன் அகிலத்தை அடக்குவான். கரும்பா இருந்தா கரும்பு கரும்புண்டு புடுங்கித் தின்பான், வேம்பா இந்தீங்கண்டா தூ தூண்டு காறித் துப்புவான். அப்பப்ப கரும்பா இருக்கனும். அப்பப்ப வேம்பா இருக்கனும். நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன்.’
‘எவன் மனசாட்சியை வச்சி வாழ்ந்தானோ அவன் சொர்க்கவாதி – ஹதீஸ். என்னா அர்த்தம்? குர்ஆனைபின்பற்றி வாழ்ந்தவனும் மனசாட்சியை வச்சி வாழ்ந்தவனும் ஒண்ணு..அப்படீண்டா? குர்ஆனும் மனசாட்சியும் ஒண்ணு!’
*
பொறுமையாக இரு – ஷரீஅத் : கோபம், துன்பம் வரும்போது பொறுமை காத்தல்)
பொறுமையாய் இரு – ‘தரீக்கா’வில் : ஒரு தப்பான செயல் நடக்கும்போது முந்திக்கொண்டு பதில் சொல்லாமல் நம்மை அடக்குதல்
பொறுமை ,அடக்கம், அறிவு என்ற பண்பு பற்றிய வார்த்தைகள் இரண்டுக்கும் வேறுபடும். சமயத்தில் நேர்மாறாக இருக்கும் – சூஃபியாக்களின் பாதையில்.
*
a) ‘In serach of the Miraculous‘ b) ‘A moral for ReUniversity’ – சர்க்கார் இந்த இரண்டு புத்தகங்களையும் குறிப்பிடுகிறார்கள்.
*
ஆங்கிலம் ஏன் வளர்ந்தது?
‘மொளவுத்தண்ணிக்கு இங்கிலீஷ்லெ என்னாண்டு கேட்டேன். அவரு M.A Lit., அட, இதுதான் உங்கள்ட்டே கேக்கலாம்டு இருந்தேன்டாரு அவரு!. அப்ப, ஒத்தருக்கும் தெரியலேண்டு சொல்லுங்கண்டு டிக்சனரியை பாத்தா.. ‘மொல்குடண்ணி’ண்டு போட்டுக்கிறான்! அதுதான் வளந்திருச்சி!’ – ‘S’
*
‘மூஸா நபி தூர்ஸினா மலையிலே அல்லாவ பாக்கலே, தன்னைத்தான் பார்த்தாஹாண்டு இருக்கு. that means தன்னை அல்லாஹ்வாக நெனச்சிக்கிட்டாஹாண்டு அர்த்தம்; இல்லே, தன்னெட்டெ அல்லாஹ் இக்கிறான், தான்தான் அது என்று உணர்ந்தாங்கண்டு அர்த்தம். இதை பகிரங்கமா சொன்னா முதுகெலும்பை எண்ணிடுவான்!’
‘அல்லாஹூ ஹாழிர் அல்லாஹூ நாழிர்’ண்டு இல்லாத ‘திக்ரு’வே இல்லே , நான் வச்சிக்கிறதுலெ. இருவத்தஞ்சி வருஷமா ‘லாயிலாஹா இல்லல்லாஹூ’வை திக்ரு பண்ணவே இல்லை நம்ம ‘ராத்திபு’லெ. ஏண்டா , அல்லாஹ்ங்குறதுதான் most powerful word. இஸ்முல் அஃலம். லாயிலாஹா இல்லல்லாஹூங்குறது ‘அக்பர் அல் திக்ர்’ (‘திக்ர்’ல் பெரிது)
‘இந்த ‘இஸ்மு’வெ மூன்றரை நாளைக்கி ஓதனும்டு -‘யா ரஹ்மான்..யா ரஹீம்..யா ஹக் யா முபீன்’ண்டு – ஒரு பொம்பளையிட்ட எழுதிக் கொடுத்தேன். கீழே கண்டதை ஓதனும்டு மேலே போட்டிந்தேனா? இஸ்முக்கு கீழே ‘ஒரு மிஸ்கினுக்கு சாப்பாடு’ண்டு வேற எழுதியிருந்தேன். அந்த புள்ளெ..’யா ரஹ்மான் யா ரஹீம் யா முபீன் ஒரு மிஸ்கினுக்கு சாப்பாடு’ண்டு இப்படியே.. ஓதியிக்கிது! வூட்டுலெ கேட்டஹலும் சொல்லிக்கிறாஹா, ‘என்னா புள்ளெ இது?’ண்டு. ‘சர்க்கார் கொடுத்திக்கிறாஹா.. இது இஸ்மு அல்லண்டு எப்படி சொல்லுறது?’ண்டு கேள்வி வேற!’
– வேறொரு பெண்மணி , ‘யாஸின்’, ‘குல்ஃபு அல்லாஹூ’வை இத்தனை தரம் – எப்படியும் அரைமணி நேரம் – வருவதை வெறும் மூன்றே நிமிடத்தில் ஓதி அந்த எண்ணிக்கையை முடித்திருப்பதை சர்க்கார் குறிப்பிடுகிறார்கள். ‘யாஸின், குல்ஃபுஅல்லாஹூ’ என்று மட்டுமே ஓதியிருக்கிறது அது. ஒரே போட்டிதான்..!
*
சூஃபியாக்களின் புத்தகமொன்றில் (‘ஃபுத்தாதுல் முத்தகியா’) முதல் அத்தியாயம் இப்படி இருக்கிறதாம் : ‘இதை அஞ்சு பக்கம் படி; புரியாது. பத்து பக்கம் படி; புரியிற மாதிரி தெரியும். இது ரெண்டும் சேர்ந்து எந்த அளவோ அந்த அளவு மேலே படி; ஏதோ புரியிற மாதிரி தெரியும். மறுபடியும் மேலே படி , இன்னொரு பங்கு; ஓரளவு புரியும். அந்த நெலைக்கி வந்தவுடனே மறுபடியும் ஆரம்பத்திலேர்ந்து படி ; ஒவ்வொரு வரியும் புரியும்’டு எழுதியிருக்கும். பெரிய பாயிண்ட் இது. அத வுட பெரிய பாயிண்ட் எனக்கு இது ‘டக்’குண்டு இப்ப நெனப்புக்கு வந்தது!’ – ‘S’
‘நாய் வளர்க்குறது ஹராம்’டு ரசூலுல்லாஹ் ஹதீஸ் இக்கிது. அந்த வார்த்தைக்கு ஒரு நொடிக்கு முன்னாலெ, ‘ஏண்டா.. பாரபைத்தியம் புடிச்சி , நாய் மாதிரி குலைக்கிறா? தெரியுமா, நாய் வளர்க்குறது ஹராம்!ண்டு சொல்லியிருப்பாஹா. இப்ப ‘நாய்’க்கு என்ன அர்த்தம்?!’
ஆண்டவன் ஒவ்வொரு இரவும் மேல் வானத்திலேர்ந்து கீழ் வானத்திற்கு இறங்கி வருகிறான் – ஹதீஸ்.
‘தர்க்கத்திற்கு அப்பால்…’ எனும் தன் புத்தகத்தில் தான் ஒரு விளக்கம் கொடுத்திருப்பதாக சர்க்கார் குறிப்பிடுகிறார்கள் : ‘அல்லா மேலேர்ந்து கீழே வந்து ஓட்டாம்புடிச்சான் , டப்பாக்கொலெ விளையாட்டா வெளையாடுறான்? அங்கேர்ந்து இங்கே வந்தாண்டோ இங்கேண்டு அங்கே போனாண்டோ சொல்றது ‘குஃப்ர்’. ஏண்டா, எங்கெங்கும் நெறஞ்ச ஒண்ணை இங்கெதாண்டு கட்டுப்படுத்துறது ஹராம். எனவே அர்த்தம் அதுவல்ல. இது அல்லாஹ்வுக்கும் ஜனங்களுக்குமுள்ள நெருக்கத்தைக் காட்டுது. பகல் நேரம், ரொம்ப டென்சனான நேரம், பரபரப்பான நேரம், துன்பம் கலந்த நேரம், இன்பம் கலந்த நேரம் – இரண்டுமே பரபரப்புதான் – அமைதியில்லாத நேரம், மல்லாக்கொட்டை மாதிரி இக்கிற நேரமல்ல. ராத்திரிங்குறது ப்ராப்ளம் தீர்ந்த நேரம், அட்லீஸ்ட் ப்ராப்ளம் ஒத்திவைக்கப்பட்ட நேரம். இல்லே, ப்ராப்ளம் தீர்க்கப்படும் நேரம். ரொம்ப ரிலாக்ஸ்டான நேரம். எனவே முந்தைய (பகல்) நேரத்துல பாத்தா ஆண்டவன் ரொம்ப தூரத்துல இக்கிற மாதிரி இக்கிது. Nightலெ பாத்தா கிட்டெ இக்கிற மாதிரி இக்கிது. அதாவது , தூரம்ங்குறது ஏழாவது வானம். கிட்டேங்குறது ஒண்ணாவது வானம்!’ – ‘S’
ஆயத்துக்கு அர்த்தம் சரியாக பண்ணத் தெரியாமல் தனக்கு புரிஞ்சதுதான் அர்த்தம், அறிவுண்டு நினைப்பவர்களைச் சாடுகிறார்கள் சர்க்கார்: ‘அல்லா எங்கே இக்கிறாண்டு ஒரு மறுப்புக் கட்டுரை எழுதினேன். (அரசியல் தலைவர்) அப்துல் சலாம் பப்ளிஷ் பண்ணுனாஹா’ என்கிறார்கள் சர்க்கார். 40 பக்கம் எழுதினார்களாம். 3 issue-ல் வந்ததென்கிறார்கள்.
‘ஆயிரம் பக்கம் எழுதலாம் பாய்.. ஷோக்கான சப்ஜெக்ட். அளஹா எழுதலாம்’ என்றார்களாம் சர்க்கார்.
‘எழுதலாம், எழுதுவீங்க. ஆனா படிக்கிறவங்க மவுத்தா போவாமெ இக்கினும்.. உங்க புஸ்தகம் படிச்சு நெறைய பேரு கெழவனா பொய்ட்டான்! தொடர் கட்டுரைண்டு சொன்ன மாசா மாசம் போடனும். ஆறு மாசத்துக்கொரு தடவை வருஷத்துக்கொருதடவை பப்ளிஷ் பன்றதுக்கா?’ – அப்துல் சலாம் , சர்க்காரின் சுறுசுறுப்பை கிண்டல் பண்ணுகிறார் நன்றாகவே,
*
கேஸட் கேட்பது போல – அந்தக் குரல் தரும் தெம்பும் , கட்டுண்டு போக வைக்கும் , மனதில் பதிய வைக்கும் , முறைபோல நோட்ஸ் எடுத்ததையும், ஏன் இந்த டைரியையே கூட ஒப்பிடமுடியுமா? சர்க்காரின் ஆசை , வீடியோ ரிகார்டிங் பண்ண வேண்டுமென்பது. ஆடியோவையே காதுகொண்டு கேட்கச் சகிக்காமல் ரிகார்டிங் பண்ணுகிற சூழலில் சர்க்காரின் ஆசை! ஆனால், நிறைவேறினால் அது பெரிய பொக்கிஷமாக அமையும். பேசும்போது அவர்கள் செய்யும் சில கண் அசைவுகள், முக பாவங்கள் விலை மதிக்கத்தக்கவை. ஏற்பாடு செய்தாலும் அவர்களின் ‘மூட்’ அமைய வேண்டும். அன்றைக்குப் பார்த்து , வீடியோவில் மட்டும் பார்த்துப் புரிந்து கொள்பவர்களை 3 மணி நேரம் சாடினால் என்ன செய்வது?!
கேஸட்கள் , நான் விட்ட Dec’95லிருந்து அனுப்பச் சொன்னதற்கு ரவூஃப் அவனது குறிப்புகளை xerox செய்து அனுப்பியிருக்கிறான். இதுவே பெரிய விஷயம்தான் என்றாலும் உணர்ச்சியற்ற தன்மை தாள்களெங்கும் விரவி நிற்கிறது. முக்கியமான விஷயங்கள் மட்டும் போதும் என்று மூளை சமாதானப் பட்டுக்கொள்ள மாட்டேன்கிறது. எனக்கு சர்க்கார் ரத்தமும் சதையுமாக வேண்டும். இரட்டைப்பிறவி பெண் ஜோடி ஒன்றை பிரித்தறிய – ஒருத்தி மூக்குத்தி குத்தியிருக்கிறாள், இன்னொருவளுக்கு மூக்குத்தி இல்லை. சர்க்கார் ‘நீ பொத்த(ல்) உள்ளவளா இல்லாதவளா?’ என்று கேட்கிறார்கள் – அவர்களில் ஒருத்தி நேரில் வரும்போது. எனக்கு பொத்தலும் வேண்டும். (எழுத்தாளனுமான) ரவூஃபின் ‘S’= Sarkkar , I – Important , bec – because , வி – விழிப்பு நிலை என்ற குறியீடுகள் அவனது எழுத்தை விட குழப்பமாக இருக்கிறது. ஆனால் அவனைப்போல , ‘To move from Alpha to Beta it takes only five breaths time’ என்று என்னால் எழுத இயலாது (என்று எழுத இயலும்!).
ரவூஃபுக்கு எழுதிய கடிதத்தில் – கவரில் – சர்க்காரின் ·போட்டோவை கலர் பென்சிலால் ‘பேட்ச் work’ல் தீட்டி அதன்மேல் அவனது முகவரி எழுதியிருந்தேன். கவுஸ் மெய்தீனுக்கும் அப்படித்தான் எழுதி அனுப்பினேன். கவுஸ் மெய்தீன் சர்க்காரின் முகத்தில் தபால் முத்திரை விழுந்ததை தெரியப்படுத்தியிருந்தார். ஆனால் ஓவியம் உட்புறம் இருந்ததால் தனக்கு முழுதாக கிடைத்திருக்குமே என்ற தொனியில். ரவூஃபோ என்னை வியக்க வைத்து விட்டான்.
‘உன் கடிதத்தில் ஒரு அழகிய தவறு உள்ளது. ‘S’ ஐ வரைந்திருப்பது சரி, ஆனால், அவர்களின் உருவத்துக்கு மேலே எழுத்து வருவது சரியல்ல. i.e மரியாதையல்ல. Please Note’. – 24.01.1996 கடிதம். ஆனால் (சீடர்) பரமசிவத்தின் பயமும் பக்தியும் நமக்கு இல்லையே என்று நான் கேட்டிருந்ததற்கு அவனது பதில் அடுத்து வருகிறது. அது எனக்கும்தான் , அவனுக்கும்தான்!
‘S’க்கு Obedience-உம் பிடிக்கும் , Sharpness-உம் பிடிக்கும். அவமரியாதை செய்ய எண்ணாதவரை , அன்பிருக்கும் வரை, பரமசிவத்திற்கும் கிடைக்கும், நமக்கும் கிடைக்கும்.’ – ரவூஃப்
நன்றி வாத்தியார் சார்! Mann Arafa nafsahu faqad afafa Rabbahu..! (தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிவான்). ரஃவூபின் லெட்டர்பேடில் உள்ள ஹதீஸ்!
(தொடரும்)
குறிப்புகள் :
ரூஹானியத் – ஆன்மிக சக்தி
நஜாத் – மார்க்கத்தின் ‘தூய்மை’வாதிகள்
நஸீபு – விதி
பரக்கத் – சுபிட்சம்
ஹைர் – நல்லது
‘ஜம்’ – ஒரு பயிற்சி
காஃபிர் – (இறைவனை) நிராகரிப்பவர்
ஃபத்வா – மார்க்கத்தீர்ப்பு
தரீக்கா – ஞானப்பாதை
இபாதத் – இறைச்சிந்தனை
‘பதுவா’ – சாபம்
நிய்யத் – எண்ணம்
ஷைத்தானியத் – தீயசக்தி
ரஹ்மானியத் – நல்லசக்தி
ஹதீஸ்.- நபிமொழி
ஷரீஅத் – மார்க்கச் சட்டம்
திக்ர்- இறைச்சிந்தனை
ராத்திபு – கூட்டுப் பிரார்த்தனை
இஸ்மு – மந்திரம்
ஹராம் – விலக்கப்பட்டது
குஃப்ர். – இறைவனை நிராகரித்தல்
மறுமொழியொன்றை இடுங்கள்