கஸலும் நானும் 04 : நாகூர் ரூமி

கஸல் – 04
பாடியவர் குலாம் அலி
பாடலாரிரியர்: மஸ்ரூர் அன்வர்
குலாம் அலியோடு எங்களுக்கான உறவு ரொம்ப அலாதியானது. இவர் குரல் ஜக்ஜித் சிங் மாதிரியான கம்பீரக்குரல் அல்ல. பங்கஜ் உதாஸ் மாதிரியான வெள்ளியைச் சுண்டின மாதிரி கணீர்க்குரலல்ல. இவர் ஒரு தனி ரகம். இப்படித்தான் பாடுவார் என்று இவரைப்பற்றிச் சொல்லிவிடவே முடியாது.
எல்பி ரெகார்டில் வேறு வழியில்லாமல் ஒரு வட்டத்துக்குள் பாடியிருப்பார். ஆனால் கச்சேரி என்று வந்துவிட்டால் இவர் அவிழ்த்துவிட்ட காளை மாதிரி. ஒரே பாட்டுதான். ஆனால் கச்சேரிக்குக் கச்சேரி இவர் அதில் செய்யும் நகாசு வேலைகள், தாவல்கள் அற்புதமானவை. ஆன்மாவை நெகிழ வைப்பவை.
அடிப்படை மெட்டு அப்படியே இருக்கும். ஆனால் இவர் அதில் சும்மா சிலம்பமெடுத்து விளையாடுவார். வேண்டுமானல் ’ஹங்காமா ஹை க்யூன்’ என்ற பாடலை இரண்டு வேறுவேறு கான்சர்ட்டுகளில் இவர் பாடுவதைக் கேட்டுப்பாருங்கள். நான் சொல்வதன் உண்மை புரியும்.
குலாம் அலி என்றால் எனக்கும் ஆபிதீனுக்கும் மட்டுமல்ல, மர்ஹூம் ஜஃபருல்லாஹ் நானாவுக்கும் உயிர். நள்ளிரவில் நாகூர் நிஜாம் நானாவின் கேசட் செண்டரின் ஸ்பீக்கரில் ’ஜின்கெ ஹோண்டோன்’ என்ற குலாம் அலியின் பாடலைக்கேட்டுவிட்டு ஜஃபருல்லாஹ் நானா அழுதார். (எனக்காவது கொஞ்சம் உர்து தெரியும். உர்து என்று ஒரு மொழி இருப்பதே ஜஃபருல்லாஹ் நானாவுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது.)
அழும்படியாக அந்தப் பாட்டில் ஏதும் உள்ளதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜஃபருல்லாஹ் நானா அழுதார். நான் அப்போது உடனிருந்தேன். எனவே கஜலைப்பொறுத்தவரை அது எங்கள் மூவரின் ஆன்மாவோடு தொடர்பு கொண்டது. அதிலும் குலாம் அலி எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்.
நிகாஹ் படத்தில் வரும் ’சுப்கே சுப்கே ராத் தின்’ என்ற பாடல் உலகப்புகழ் பெற்றது. ஆனால் அதில் உண்மையான குலாம் அலியை தரிசிக்க முடியாது.
எல்பி ரெகார்டில் அவர் வாமனன். கச்சேரியில்தான் அவரது விஸ்வரூபம் தெரியும்! யாராவது விசிலடித்தால் கடுப்பாகிவிடுவார்! (அந்த லிங்க்கைத்தான் உங்களுக்குக் கொடுத்துள்ளேன்).
ஆள் கொஞ்சம் லொள்ளுதான்! பாகிஸ்தான்காரரான இவர் இந்தியாவுக்கு வந்தபோது ஒரு பத்திரிக்கை இவரைப் பேட்டி எடுத்தது.
இங்கே ஜக்ஜித் சிங், பங்கஜ் உதாஸ், அனூப் ஜலோட்டா போன்றோர் கஸல் பாடுகிறார்களே அவர்களைப்பற்றி உங்கள் கருத்தென்ன என்று கேட்டபோது, ‘அவர்களெல்லாம் நன்றாகத்தான் பாடுகிறார்கள். ஆனால் கஸல் என்பது வேறு’ (கஸல் அவுர் குச் சீஸ் ஹை) என்றார்! ஆனால் அப்படிச் சொல்வதற்குரிய தகுதி உள்ளவர்தான்!
ஒருமுறை முந்தயை இசைஞானியும் இன்றையை ’நெகிழ்வு’மான (’லூஸ்’ என்பதன் மேலோட்டமான தமிழாக்கம்!) இளையராஜா பவ்யமாக குலாம் அலியிடம் கேட்ட ஒரு வேண்டுகோளை (உங்களைப் புகழ்ந்து பேசவா அல்லது பாடவா என்று கேட்டிருக்கலாம்) குலாம் அலி சட்டென்று புறக்கணித்தார்! சரி பாடலுக்குள் செல்வோமா?
தொகையறா
தில் கி ச்சோட்டோன் நெ கபீ / சேன் ஸே ரெஹ்னெ ந தியா
இதயத்தின் காயங்கள் (எனை) எப்போதுமே / அமைதியில் இருக்க விடவில்லை
ஜப் ச்சலீ சர்த் ஹவா / மேனெ துஜெ யாத் கியா
எப்போதெல்லாம் குளிர்காற்று வீசியதோ / அப்போதெல்லாம் உன் நினைவு வந்தது!
இஸ்கெ ரோனா நஹீ க்யூன் தும்னெ கியா தில் பர்பாத்
நீ ஏன் (என்) இதயத்தைக்கொன்றாய் என்பதால் நான் அழவில்லை
இஸ்கா கம் ஹை கெ பஹுத் தேர் மெ பர்பாத் கியா
ரொம்ப தாமதமாகக்கொன்றிருக்கிறாய் என்பதுதான் வருத்தமே!
பல்லவி
ஹம் கொ கிஸ்கெ கம்னெ மாரா / யாருடைய துக்கம் என்னைக் கொன்றது?
எ கஹானீ பிர் சஹீ / அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
கிஸ்னெ தோடா தில் ஹமாரா / யார் என் இதயத்தை உடைத்தது?
எ கஹானீ பிர் சஹீ / அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
தில்கெ லுட்னே கா சபப் பூச்சோ ந சப்கே சாம்னே
இதயம் திருடப்பட்ட காரணத்தை எல்லாருக்கும் முன் வைத்துக்கேட்காதே
நாம் ஆயேகா தும்ஹாரா எ கஹானீ ஃபிர் சஹீ
உன் பெயர் வந்துவிடும், அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
நஃப்ரதோன்கி தீரு காகர் தோஸ்தோன் கி ஷெஹ்ர் மெ
நண்பர்களின் நகரத்தில் வெறுப்பின் அம்புகளை வாங்கிக்கொண்டு
ஹம்னெ கிஸ்கிஸ் கோ புகாரா / நான் யார் யாரையெல்லாமோ அழைத்தேன்
எ கஹானி ஃபிர் சஹீ / அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்
க்யா பதாயேன் ப்யார் கி பாஸி வஃபா கி ராஹ் மேன் / நம்பிக்கையின் பாதையில் காதல் விளையாட்டு பற்றி நான் (உனக்கு) என்ன சொல்வேன்
கோன் ஜீத்தா கோன் ஹாரா எ கஹானி ஃபிர் சஹீ / யார் வென்றார், யார் தோற்றார் அந்தக் கதையை அப்புறம் வைத்துக்கொள்வோம்

பாடலுக்கான இணைப்பு:
https://www.youtube.com/watch?v=VqZIkfVptHg

*

**

nagoreumi - fb1
நன்றி : நாகூர் ரூமி

கஸலும் நானும் 02-03 : நாகூர் ரூமி

nagoreumi - fb1

கஸல் – 02
பாடல்: பூலோங்கி தரஹ்
கவிஞர்: குல்ஸார்
பாடியவர்: ஜக்ஜித் சிங்
பூலோங்கி தரஹ் லப் கோலு கபீ
பூவைப்போல இதழ்களை விரி எப்போதும்
குஷ்பூ கி ஸூபான் மெ போலு கபீ
நறுமணத்தில் மொழியிலேயே பேசு எப்போதும்
நான் மிகவும் ரசித்துக் கேட்கின்ற கஸல்களில் இதுவும் ஒன்று. ஜக்ஜித் சிங் தன் தங்கக்குரலில் பாடியது. பாடலாசிரியர் குல்ஸார்.
இந்த ஒரு பாடலுக்காக அவருக்கு எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதுவும் பல்லவியாய் இருக்கும் அந்த ஆரம்ப இரண்டு வரிகளுக்கு.
இன்றைக்கு அரசியலிலும் அதிராகரத்திலும் இருக்கும் பல வாய்கள் பன்றிகளைப்போல பேசிக்கொண்டுள்ளன. ஆனால் பூவைப்போல உன் இதழ்களை விரி என்கிறது பாடலின் முதல் வரி.
எனக்கு ஒரு நபிமொழி நினைவுக்கு வருகிறது. இதைமட்டும் காப்பாற்றிக்கொள்பவருக்கு நிச்சயம் சொர்க்கம்தான் என்று சொல்லிப் பெருமானார் தன் நாக்கை வெளியில் நீட்டிக்காட்டினார்களாம்.
ஏனெனில் பேச்சினால் ஒருவரைக் கொல்லலாம். அல்லது வாழவைக்கலாம்.
தன் இரண்டு தொடைகளுக்கு நடுவில் உள்ளதையும், இரண்டு இதழ்களுக்கு நடுவில் உள்ளதையும் காப்பாற்றிக்கொள்பவர்க்கு சுவனம் உண்டு என்று சொன்ன நபிமொழியும் உண்டு.
தொடைகளை விரித்தே பழக்கப்பட்டிருந்தால் இது கொஞ்சம் கஷ்டம்தான்!
இந்த கஸலின் முதல் இரண்டு வரிகளை நான் எனக்கான உபதேசமாகவே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் கடந்த காலத்தில் நானும் என் வாயால் பலரைக் காயப்படுத்தியிருக்கிறேன்.
திறமை என்ற பெயரில். கிண்டல் என்ற பெயரில். பேச்சுத்திறன் என்ற பெயரில். பதிலுக்கு பதில் என்ற பெயரில். இன்னும் என்னென்னவோ பெயரில்.
என்னால் காயப்பட்டவர்கள் யார் யார் என்று என்னால் பட்டியல்போடக்கூட முடியாது. நான் என் கடந்த கால நாக்குக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோருகிறேன். இதைப்படிக்கும் யாராவது ஒருவர், நண்பர் அல்லது அவரது உறவினர் யாரும் என்னால் கடந்த காலத்தில் காயப்பட்டிருப்பார்களேயானால் நான் அவர்களிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
நீ என்ன இவ்வளவு குள்ளமா இருக்கே, இவ்வளவு கருப்பா இருக்கே என்பது போன்ற வார்த்தைகள்கூட வாயால் நிகழ்த்தப்படும் வன்முறைதான். அப்படிப்பட்ட வன்முறைகளுக்கு இப்பாடல் வரிகள் (உணர்ந்து பின்பற்றினால்) ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றன. மிக அழகாக.
பூலோங்கி தரஹ் லப் கோலு கபீ
பூவைப்போல இதழ்களை விரி எப்போதும்
குஷ்பூ கி ஸூபான் மெ போலு கபீ
நறுமணத்தின் மொழியிலேயே பேசு எப்போதும்
அல்ஃபாஸ் ஃபரக்தா ரெஹ்தாஹெ
வார்த்தைகள் வேறுபட்டுக்கொண்டே உள்ளன
ஆவாஸ் ஹமாரி தோலு கபீ
(எனவே) நம் குரலை (நாம்) எடைபோட வேண்டியுள்ளது
(என்ன பேசவேண்டும் என்று யோசித்துப் பின் பேசவேண்டியுள்ளது)
கிடுகி மெ கட்டி ஹை சப் ராத்தேன்
ஜன்னலோடு நின்றுவிட்டது இரவு முழுவதும்
குச் சௌரஸ் அவர் குச் போலு கபீ
சமயத்தில் கொஞ்சம் சதுரமாகவும், சமயத்தில் கொஞ்சம் வட்டமாகவும்
(இருள் பல வடிவங்களை எடுக்கிறது, சொற்களைப்போலவே என்பது குறிப்பு)
எ தில் பி தோஸ்து ஜமீ(ன்) கி தராஹ்
இந்த இதயம்கூட பூமியுடைய நண்பன்தான்
ஹோ ஜாதாஹெ டாவான் டோலு கபீ
(எனவே பூமியைப்போலவே) அதுவும் அசைந்தாடுகிறது
பூலோங்கி தரஹ் லப் கோலு கபீ
பூவைப்போல இதழ்களை விரி எப்போதும்
குஷ்பூ கி ஸூபான் மெ போலு கபீ
நறுமணத்தில் மொழியிலேயே பேசு எப்போதும்
குறிப்பு: இந்தப்பாடலுக்கான காணொலியில் வரும் பெண் ரொம்ப அழகு. தமிழ்ப்பெண்ணைப்போலவே இருக்கிறார்!

பாடலுக்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=px2-iWwdTTI

*


கஸலும் நானும் – நாகூர் ரூமி
*
கஸல் – 03
நான் கஸல்களுக்கு விளக்கவுரை போல ஏதோ எழுதுவதைப் பார்த்து தூண்டப்பட்ட என் சகோதரர் நஹ்வி அவர்கள் பங்கஜ் உதாஸின் இந்த கஜலை அனுப்பியிருந்தார். நான் விளக்க வேண்டும் என்பதற்காக அல்ல. சும்மா அனுப்பியிருந்தார்.
அந்த கஜல் இறப்பைப் பற்றியது. எனவே உடனே அது என்னையும் பற்றிக்கொண்டது.
இனி வாழும் காலம் எவ்வளவென்று எனக்குத் தெரியாது (யாருக்குமே). ஆனால் இனிமேலாவது இறைப்பொருத்தத்தை சம்பாதிக்கும்படி வாழ்ந்துவிடவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் உள்ளது. அதற்கான செயல்பாடுகளும்தான்!
சரி, இந்த கஜலையே தமிழாக்கம் செய்யலாம் என்று நினைத்தேன்.
நான் உர்து அதிகம் தெரிந்தவன் அல்ல. ஆனால் உர்துமீது காதல் கொண்டவன்.
அந்தக்காலமாக இருந்தால் ஒரு ஆசிரியரிடம் அல்லது உர்து நன்றாகத் தெரிந்த அறிஞரிடம் கேட்கவேண்டும். அல்லது அகராதிகளைப் பார்க்க வேண்டும்.
ஆனால் இந்த இணைய யுகத்தில் அர்த்தத்தோடு இந்தப்பாடலைக்கொடு என்று கேட்டுவிட்டால் பல தளங்களிலிலிருந்து தகவல்கள் கொட்டும்.
ஆனால் அவற்றிலிருந்து தேர்ந்தெடுப்பது ஒரு கலை. அதற்குப் பொறுமையும், மொழியின் மீது உண்மையான ஆர்வமும் வேண்டும்.
நான் ரேக்தா என்ற அகராதியைப் பார்ப்பேன் (https://www.rekhtadictionary.com/). ரொம்ப அருமையான அகராதி அது.
ஒரு சொல்லுக்குக் கீழே அதன் அர்த்தம் கொடுப்பது மட்டுமின்றி, பக்கவாட்டில் உர்துவில் பல வாங்கியங்களை விளக்கமாகக் கொடுக்கும். அது எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஹிந்தியில் சொல்லை ‘காப்பி’ செய்து போட்டுப்பார்த்தாலும் அதே அர்த்தம் வருகிறதா என்று பரிசோதிக்கவேண்டும். ஏனெனில் பேச்சு வழக்கு மொழியில் உர்துக்கும் ஹிந்திக்கும் பெரிதான வேறுபாடு ஒன்றுமில்லை.
எனக்கு ஹிந்தி எழுத்துக்கள் கொஞ்சம் பரிச்சயமுண்டு (இளமையில் நான் டெல்லி சென்றபோது பேருந்துகளின் எண்களைக்கண்டுபிடிக்க கஷ்டப்பட்டு நான் கற்றுக்கொண்டது அது!)
கொடுக்கப்படும் அர்த்தம் பாடலின் அர்த்தத்தோடு சரியாக ஒத்து வருகிறதா என்று சரி பார்க்க வேண்டும்.
ஒரு மிக எளிமையான பாடலுக்குக்கூட இப்படியெல்லாம் கஷ்டப்பட்டால்தான் அர்த்தம் பிடிபடும்! சரி, பாடலுக்குள் செல்வோமா?!
நான் கொடுக்கும் அர்த்தங்கள் தவறாக இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
தொகையறா
மர் மர் கெ முசாஃபிர்னெ பசாயா ஹை துஜெ
கடுமையான முயற்சிக்குப்பின் (இறப்பு என்ற) பயணி உன்னிடத்தில் வந்துவிட்டான்
ருஹ் சப் ஸெ பிராகெ மூ திகாயா ஹை துஜெ
பலரிடம் காட்டாத (இறப்பின்) முகத்தை உன்னிடம் காட்டிவிட்டான்
க்யூன் கர்னா லிபட் கெ சோவூன் துஜ்ஸெ ஏ கப்ர்
நான் ஏன் போர்த்திக்கொண்டு (கஃபனிடப்பட்டு) உன்னிடம் உறங்கவேண்டும் மண்ணறையே?!
ஜிந்தகீ தேகே மெனெ பாயா ஹை துஜே
என் வாழ்வைக்கொடுத்து உன்னை நான் கண்டுகொண்டேன்
பல்லவி 1
ஜிந்தகினெ மௌத் செ பர்தா கியா
ஏ கஃபன் தூனே தோ ஷர்மிந்தா கியா
வாழ்வானது இறப்பை மறைத்துவிட்டது
ஓ கஃபனே, நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்!
உன்கொ ஆனாத்தா, ந ஆயே அவுர் யஹான்
இங்கே வந்திருக்கவேண்டும் இறப்பு , ஆனால் வரவில்லை
மர்னெ வாலா ராஸ்தா தேகா கியா
இறப்பின் விளிம்பில் இருப்பவர் அதன் சாலையைப் பார்த்திருக்கிறார்
ஏ கஃபன் தூனே தோ ஷர்மிந்தா கியா
ஜிந்தகினெ மௌத் செ பர்தா கியா
ஓ கஃபனே, நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்
வாழ்வானது இறப்பை மறைத்துவிட்டது
கோயி பீ மெஹ்ஃபில் ஹோ ஜீலக்தா நஹீ
சபை எதுவாக இருந்தாலும் இனி விருப்பமாக / சந்தோஷமாக இருக்க முடியாது
உஸ்கி யாதோனெ ஹமெ தன்ஹா கியா
(இறப்பபைப் பற்றிய) அந்த நினைவுகளில் நான் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன்
ஏ கஃபன் தூனே தோ ஷர்மிந்தா கியா
ஓ கஃபனே, நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்
த்தாவு ஸே கித்னா பிச்சட் நே கா மலா
பிரிந்துதான் ஆகவேண்டிய சூழ்நிலை
ஜாதே ஜாதே வோ முஜே தேக்கா கியா
போய்க்கொண்டே அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள்
ஏ கஃபன் தூனே தோ ஷர்மிந்தா கியா
ஓ கஃபனே, நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்
கஃபன் – இறந்த முஸ்லிம் உடலை மூடும் தையலில்லா வெள்ளைத்துணி

*

பாடலுக்கான இணைப்பு:

https://www.youtube.com/watch?v=6MfI9ZKcaQo

நன்றி : நாகூர் ருமி

கஸலும் நானும் – 01 : நாகூர் ரூமி

nagoreumi - fb1

நான் பிஏ ஆங்கில இலக்கியம் படித்த காலத்திலிருந்தே, ஏன் பள்ளிக்கூட நாட்களிலிலிருந்தே எனக்கு இசை கேட்பதில் விருப்பம் அதிகம். யாருக்குத்தான் இருக்காது!
குறிப்பாக அந்தக்காலத்தில் வந்த ஹிந்திப்படப்பாடல்கள். கிஷோர் குமார், முஹமம்து ரஃபி, லதா, ஆஷா இப்படி.
பள்ளிக்கூட நாட்களிலேயே நாகப்பட்டினம் பாண்டியன் தியேட்டரில் ஹிந்திப்படம் பார்க்கச்செல்வோம். (இப்போது பாண்டியன் தியேட்டர் சென்னையில் உள்ள தியேட்டர்களைவிட சிறப்பாக உள்ளது)!
பின்னர் அப்படியே அந்த ஆர்வம் மெல்ல கஸலுக்குத்திரும்பியது. கவ்வாலியில் எனக்கு ஆர்வமேற்படவில்லை.
ஜக்ஜித் சிங், சித்ரா சிங், குலாம் அலி,
மெஹ்தி ஹஸன் (கொஞ்சம்),
நுஸ்ரத் ஃபதே அலிகான் (கொஞ்சம்)
என என் விருப்பம் திரும்பியது.
ஆனால் நண்பர் ஆபிதீன் இதில் இன்னும் ஒருபடி மேல். பர்வீன் சுல்தானாவின் ’ஆ’ என்ற ஆலாபனையையே அவரால் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டிருக்க முடியும்.
அவர் ‘இசைபட’ வாழ்பவர்!
நான் இசை தொட வாழ்பவன்!
என்னாலும் வெறும் கருவிகளின் இசையை மட்டும் கேட்டுக்கொண்டிருக்க முடியும்தான். குறிப்பாக ஷிவ்குமார் ஷர்மாவின் சந்தூர், அல்லாஹ் ரக்காவின் தப்லா, ரவிஷங்கரின் சித்தார், எல் ஷங்கரின் வயலின், அலி அக்பர்கானின் சரோத் இப்படி.
என் குரலில் ஒரு பெண் தன்மை இருப்பதாக பலர் கருதினார்கள். ஆனால் இந்தக்குரலை வைத்துக்கொண்டு நான் ஒருகாலத்தில் நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீதவித்வான் மர்ஹூம் எஸ்.எம்.ஏ. காதர் மாமா – என் நண்பன் நூர்சாதிக்கின் வாப்பா -– அவர்களிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன். ஆறு மாதங்கள்.
ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்றுமணி நேரம்! வர்ணம் என்ற பாடம் வரை வந்தேன். அடுத்தது ராகம்தான். ஆனால் அதற்குள் எனக்கு வேலை கிடைத்து ஆம்பூருக்குச் சென்றுவிட்டேன்! நல்லவேளை கர்நாடக சங்கீதம் பிழைத்தது!
நிற்க. கஸலுக்கு வருவோம். நான் பிஏ ஆங்கில இலக்கியம் படித்த காலத்தில் தமிழுக்கு பதிலாக உர்து எடுத்தேன். அதனால் நல்ல உர்துவைப் புரிந்துகொள்ளவும் எழுதவும் என்னால் முடியும்.
அதற்கு முக்கியமான காரணம் உர்துத்துறைத்தலைவர், என் பேராசிரியர், கவிஞர் ஹஸ்ரத் சுஹ்ரவர்தி அவர்கள். ஆனால் உர்து பேசமட்டும் நான் பழகவில்லை.
நல்ல உர்து என்றால் என்ன என்று கேட்டால் இப்படிச் சொல்லலாம். கஸல் பாடல்களில் உள்ள உர்து! ஆமாம். அப்படி ஒரு பாடலைத்தான் நான் இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன்.
ஜக்ஜித் சிங் பாடிய ஒரு காதல் பாடல்.
கஸலின் அடிப்படைக்கரு எப்போதுமே காதல்தான்.
ஆப் கோ தேக் கர் தேக்தா ரெஹ்கயா
என்ற காதல் பாடல். கேட்கலாமா?
கடைசியில் லிங்க் கொடுத்துள்ளேன். முடிந்தால் ஹெட்ஃபோன், அல்லது இயர்ஃபோன் போட்டு கேட்டுப்பாருங்கள்.
கஸல் ஒன்று
==========
ஆப் கோ தேக் கர் தேக்தா ரெஹ்கயா
உன்னைப்பார்த்தேன், அப்படியே பார்த்துக்கொண்டே இருந்துவிட்டேன்
க்யா கஹூன், அவ்ர் கெஹ்னெ கொ க்யா ரெஹ்கயா
என்ன சொல்வேன்? அதோடு, சொல்வதற்கு என்ன பாக்கி இருந்தது (ஒன்றுமில்லை)
ஆதே ஆதே மேரா நாம்ஸா ரெஹ்கயா
வந்துவிட்டது, வந்துவிட்டது,என் பெயர் மட்டும்தான் பாக்கி (அவளின் உதடுகள் உச்சரிக்க)
உஸ்கெ ஹோண்டோம்பெ குச் காம்ப்தா ரெஹ்கயா
(ஆனால்) அவளின் உதடுகளில் ஒரு முணுமுணுப்பு /நடுக்கம் மட்டும்தான் இருந்தது
ஓ மெரே சாம்னே ஹீ கயா அவ்ர் மெ
ராஸ்தே கி தராஹ் தேக்தா ரெஹ்கயா
அவள் என் அருகில்தான் இருந்தாள்
ஆனால் நானோ வீதியையே பார்த்துக்கொண்டிருந்தேன்
ஜூட் வாலே கஹீன் ஸே கஹீன் படுகயே
அவ்ர் மெ த்தாஹ் கெ சச் போல்தா ரெஹ்கயா
பொய் சொல்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்
நான் மட்டுமே உண்மை சொல்ல இருந்துகொண்டிருக்கிறேன்
ஆந்தியோன் கெ இராதே அச்சே ந த்தே
அவுர் ஏ தியா கைசெ ஜல்தா ஹுவா ரெஹ்கயா
புயல்களின் நோக்கம் நல்லதாக இருக்கவில்லை (காதலுக்கான எதிர்ப்பை புயல் என்று கவிஞர் குறிக்கிறார்)
ஆனால் இந்த (காதல்) விளக்கு மட்டும் எப்படி எரிந்துகொண்டே இருக்கிறது!
இந்தப்பாடலில் விளக்கு என்பதற்கு ’தியா’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
’தியா’ என்றால் ‘கொடுத்தாச்சு’ என்று பொருள் வரும்.
நான் முதலில் அது ஒரு வினைச்சொல் என்று நினைத்து கஸலின் அர்த்தம் பிடிபடாமல் குழம்பினேன். ஆனால் ‘எரிகிறது’ (ஜல்தா) என்ற சொல்லோடு தொடர்புபடுத்திப் பார்த்தேன்.
நிச்சயம் இது கொடுத்தல் என்ற பொருளைத்தரும் ‘தியா’ அல்ல. ஒருவேளை இது ஒரு பெயர்ச்சொல்லாக இருக்கலாம் என்று தோன்றியது.
அகராதியைப் பார்த்தேன். நான் நினைத்தது சரிதான். ’தியா’ என்ற பெயர்ச்சொல்லுக்கு அர்த்தம் ’அகல்விளக்கு’ என்று கொடுக்கப்பட்டிருந்தது!

*
Aap ko dekh kar dekhta rah gaya LIVE HQ Aziz Qaisi & Waseem Barelvi Jagjit Singh

**

நன்றி : நாகூர் ருமி

என்னைப்போலவே (கவிதை) – நாகூர் ரூமி

நண்பர் நாகூர் ரூமியின் ‘நதியின் கால்கள்’ கவிதைத் தொகுப்பில் இருக்கும்
இந்தக் கவிதை எனக்குப் பிடிக்கும் – அவரைப்போல நானில்லை என்பதால்!- AB


rafi fb 3

என்னைப்போலவே

அப்பாவுக்கு ரொம்ப வருத்தம்
அவரைப்போல நானில்லை என
அம்மாவுக்கும் ரொம்ப வருத்தம்
அவளைப்போல நானில்லை என

இப்படியெல்லாம் வருத்தப்பட
வேறெவரும் வரமாட்டார்
என்றாலும் எனக்குண்டு
எப்போதும் சந்தோஷம்
என்னைப்போலவே
நானிருப்பதில்.
*
நன்றி : நாகூர் ரூமி , ஸ்நேகா

« Older entries