ஒபாமாவுக்கு மஹாதீர் முஹம்மதின் கடிதம்

‘இலங்கையில் அப்பாவித்தமிழர்களை கொன்று குவித்த அரசியற்தலைவர்களை போர்க்குற்றவாளிகளாக, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மலேசிய முன்னாள பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்’ என்பதை ‘இனியொரு‘ தளத்தில் (நன்றி : தமிழ்மணம்) இன்று பார்த்தேன்.  தொடர்ச்சியாக , மஹாதீர் அவர்கள் ஒபாமாவுக்கு எழுதிய பழைய கடிதத்தைப் ( தமிழாக்கம் : காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி) பதிகிறேன்.  சமநிலைச் சமுதாயம் – பிப்ரவரி 2009 இதழில் வெளிவந்தது. அதன் ஆங்கில மூலம் இங்கே

ரத்தக்கண்ணீர் வடித்தபடி , வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு , ‘வெய்னக் அல்லாஹ்..வெய்னக் அல்லாஹ்’  (அல்லாஹ் எங்கே, அல்லாஹ் எங்கே?) என்று புலம்பிய, புலம்பும் பல்லாயிரக்கணக்கான ஈராக் தாய்மார்களுக்கு இந்தப் பதிவு.

***

DrMahathir02

அன்புள்ள அமெரிக்க அதிபர் பராக் ஹூசைன் ஒபாமாவுக்கு மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மது எழுதும் பகிரங்கக் கடிதம்!

அன்புள்ள ஜனாதிபதி அவர்களே! நான் ஒரு மலேசியப் பிரஜை என்பதால் உங்களுக்கு என்னால் வாக்களிக்க முடியவில்லை. ஆனால், நான் என்னை உங்கள் தொகுதியைச் சேர்ந்த ஒருவனாகக் கருதுகின்றேன்.

ஏனெனில், இனி நீங்கள் சொல்லவிருக்கும் சொற்களும், செய்யவிருக்கும் செயல்களும் என் மீதும் எனது நாட்டின் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்லவை.

“நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் செயல்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவருவேன்” என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது நீங்கள் அளித்த வாக்குறுதியை நான் வரவேற்கின்றேன். நிச்சயம் உங்கள் நாடான அமெரிக்காவின் போக்கில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

ஏனெனில் அமெரிக்காவும் அமெரிக்கர்களும் உலகிலேயே மிக அதிகமாக வெறுக்கப்படுபவர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். ஐரோப்பியர்கள்கூட உங்கள் ஆணவப்போக்கை வெறுக்கிறார்கள்.

ஒரு காலத்தில் உங்களை உலகம் விரும்பியது. மதிப்புடன் பார்த்தது.

ஏனெனில், அப்போது நீங்கள் பலநாடுகளைப் பகைநாடுகளின் படையெடுப்பிலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் காப்பாற்றினீர்கள்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உறுதிமொழிகள் பலவற்றை எடுத்துக்கொள்வது, இந்த உலகின் வழக்கமான மரபு.

நீங்கள் உங்கள் நல்ல உறுதிமொழிகளை முன்பே பட்டியலிட்டுக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆயினும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சியாகப் பின்வரும் உறுதிமொழிகளையும் எடுத்துக்கொள்ளும்படி மெத்தப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

1. அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதை தயவு செய்து நிறுத்திவிடுங்கள். அமெரிக்கா தனது சொந்தநலன்களை அடைவதற்காகப் பிறமக்களைக் கொல்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளது. நீங்கள் அதைப் போர் என்று பெயரிட்டு அழைக்கிறீர்கள்.

ஆனால் இன்றைக்கு தொழில்முறைப் போர் வீரர்கள் ஒருவரையொருவர் போர்க்களத்தில் கொல்வதைப் போர் என்று சொல்வதில்லை. ஒன்றுமறியாத நிரபராதிகளான சாதாரணப் பொதுமக்களை, லட்சக்கணக்கணக்கில் கொன்று குவிப்பதுதான் போர் என்றாகி விட்டது. ஒட்டுமொத்தமாக ஒரு நாடு முழுவதுமே போர் என்ற பெயரால் அழித்து நிர்மூலமாக்கப்பட்டு விடுகின்றது.

போர் என்பது நாகரிகமடையாத கற்கால மனிதன் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளக் கையாண்ட முதிர்ச்சியற்ற வழிமுறை. ஆயுதங்களைத் தயாரித்துக் குவிக்கும் போக்கைக் கைவிடுங்கள். வருங்காலத்தில் இன்னும் பல போர்களை உருவாக்க, இப்போதே திட்டம் தீட்டுவதை நிறுத்துங்கள்.

2. நீங்கள் அள்ளிக்கொடுக்கும் நிதி உதவியின் துணைகொண்டும், நீங்கள் வாரி வ்ழங்கும் நவீன ஆயுதங்களைக்கொண்டும் ஓர் இனப் படுகொலையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இஸ்ரேலியக் கொலைகாரர்களுக்கு நீதி நியாயம் பார்க்காமல் நீங்கள் வழங்கி வரும் கண்மூடித்தனமான ஆதரவை நிறுத்துங்கள். காஸா பகுதி மக்களைக் கொன்று குவிக்கின்ற விமானங்களும், குண்டுகளும் இஸ்ரேலியர்களுக்கு உங்களிடமிருந்து கிடைத்தவைதான்.

3. இதேபோன்ற ஓர் அட்டூழியத்தை உங்களுக்கெதிராக நிகழ்த்த முடியாத நாடுகள்மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதையும் , அதைச் செயல் படுத்துவதையும் நிறுத்துங்கள்.

இராக்கின் மீது நீங்கள் விதித்த பொருளாதாரத் தடைகள் 50,000 குழந்தைகளை அவர்களுக்கு மருந்தும் உணவும் கிடைக்கவிடாமல் இதுவரை கொன்று குவித்துள்ளன. மற்ற குழந்தைகள் எல்லாம் உருச்சிதைந்த நிலையில் பிறந்துள்ளன.

இந்தக் குரூரச் செயல்களால் நீங்கள் என்னதான் சாதித்துவிட்டீர்கள்? அநியாயமாக பலியான மக்களின் வெறுப்பையும் நியாயமாகச் சிந்திப்பவர்களின் மனவேதனையையும், குரோதத்தையும் தவிர வேறென்ன சம்பாதித்தீர்கள்?

4. இன்னும் ஏராளமான மக்களை இன்னும் அதிக ஆற்றலுடன் கொன்றுகுவிப்பதற்காக அதிநவீன, புதிய புதிய கொடூரமான ஆயுதங்களை, ஏராளமான எண்ணிக்கையில் கண்டுபிடித்துக் குவித்துவரும் உங்கள் ஆயுத விஞ்ஞானிகளளயும் ஆராய்ச்சியாளர்களையும் தடுத்து நிறுத்துங்கள்.

5. உங்கள் ஆயுதத் தயாரிப்பாளர்களுக்கு அந்தப் பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடாதென்று தடைவிதியுங்கள்.

உலகம் முழுவதற்கும் ஆயுதம் விற்கும் உங்கள் ஆயுத வியாபாரத்தை நிறுத்துங்கள். ஆயுத வியாபாரத்தால் கிடைக்கும் வருமானம் ரத்தம் சிந்தியதால் கிடைக்கும் பணமாகும். அது கிரிஸ்தவ நெறிக்கே ஏற்புடையதல்ல.

6. உலக நாடுகள் அனைத்தையும் மக்களாட்சி (ஜனநாயக அமைப்பு) முறைக்கு மாற்றிட முயற்சி செய்வதை நிறுத்துங்கள். ஜனநாயகம் அமெரிக்காவுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், அது மற்ற நாடுகளுக்கு எப்போதுமே பொருத்தமானதாக இருப்பதில்லை.

இவ்வாறே ஒரு நாட்டு மக்கள் ஜனநாயக வழிமுறைப்படி நடக்கவில்லை என்பதற்காக அவர்களைக் கொல்லாதீர்கள்.

உலகநாடுகளை ஜனநாயக வழிமுறைக்கு மாற்றுவதற்காக நீங்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் நீங்கள் தூக்கியெறிந்த எதேச்சதிகார சர்வாதிகார அரசுகள் கொன்றொழித்ததைவிட மிக அதிகமான மக்களைக் கொன்றொழித்துவிட்டது. அப்படியிருந்தும் உங்களால் அந்தப்போரில் வெற்றியடைய முடியவில்லை.

7. நீங்கள் பொருளாதார நிறுவனங்கள் என்று அழைக்கும் சூதாட்ட விடுதிகளை இழுத்து மூடுங்கள். குறைந்த முதலீட்டில் அதிக ஆபத்துள்ள (மக்களை பொருளாதார இழப்புக்குள்ளாக்கும்) வணிகங்களில் ஈடுபடும் நிதி நிறுவனங்களையும் (Hedge Funds) தமக்குரிமையில்லாத பிறரது நிதி ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு நிதி வர்த்தகம் புரியும் நிறுவனங்களையும் (Derivatives) தடை செய்யுங்கள். பணமாற்று வர்த்தகத்தையும் (Currency Trading) தடை செய்யுங்கள்.

இருப்பதிலேயே இல்லாத கற்பனையான (அச்சடித்த வெற்றுத்தாள்) பணத்தைப் பல பில்லியன் கணக்கில் கடன்களாக வாரிவழங்கும் தவறான போக்கிலிருந்து (Non-Existent Money/Shadow Economy) உங்கள் வங்கிகளைத் தடுத்து நிறுத்துங்கள்.

உங்கள் வங்கிகளுக்கு முறையாக இயங்கும் விதிகளை ஏற்படுத்தித் தந்து அவற்றை கண்காணித்து வாருங்கள். வங்கி முறையைத் தவறாகப் பயன்படுத்தி, லாபமடைய முயலும் விஷமிகளைச் சிறையிலடையுங்கள்.

8. கியோட்டோ புரோட்டோகோல் (Kyoto Ptrotocol) எனப்படும் உலகம் வெப்பமயமாவதைத் தடுத்து நிறுத்துவதற்காகப் போடப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்திலும் (நீங்கள் புறக்கணித்து வைத்திருக்கும் மனித குலத்திற்குப் பயனளிக்கும் முக்கியமான) பிற சர்வதேச ஒப்பந்தங்களிலும் கையொப்பமிடுங்கள்.

9. ஐக்கிய நாடுகள் சபைக்கு (United Nations Organization)  உரிய மரியாதையை வழங்குங்கள்.

வரவேற்புக்குரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு மேலும் பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள இன்னும் பல ஆலோசனைகள் என்னிடம் உள்ளன. அவற்றையெல்லாம் நீங்கள் பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும் எனக் கோருகிறேன்.

நான் முன்வைத்த ஆலோசனைகளில் சிலவற்றை உங்களால் செயல்படுத்த முடிந்தாலும்ன நீங்கள் இந்த உலகத்தால் மாபெரும் தலைவராக நினைவு கூரப்படுவீரக்ள். அப்போது அமெரிக்காவும் மீண்டும் உலக மக்களின் மதிப்புக்குரிய ஒரு நாடாக மாறும்.

உலகெங்குமுள்ள உங்கள் தூதரங்கள் நம்மைச் சுற்றிலும் (பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக) அமைக்கப்பட்டுள்ள உயரமான வேலிகளையும் மின்கம்பித் தடுப்புகளையும் பிரித்து எறிந்து விட முடியும்.

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான புத்தாண்டு மலரவும், சாதனைகள் மிக்க பதவிக்காலம் அமைந்திடவும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

மஹாதீர் முஹம்மத்
மலேசிய முன்னாள் பிரதமர்
ஜனவர் 10, 2009

***

நன்றி :  ‘சமநிலைச் சமுதாயம்’ , காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி