போதுமப்பா பழையபடிப்பு மூட்டெ கட்டுங்க

காக்காவுக்கு வரும் 19ஆம் தேதி கண் ஆபரேஷன். ’ஒவ்வொன்றாகப் பழுதுபட்டு கடைசியில் கண்ணிலும் கொஞ்சம் கோளாறு’ என்கிறார். ரொம்ப சங்கடமாகிவிட்டது மனசு. அதற்காகத்தான் எச்சரிக்கையாக அவர் இருக்கவேண்டுமென்று முந்தைய பதிவைஇட்டேன். ’எங்கே போகிறோம்?’ என்று புரிய அது (பார்வையைச் சொன்னேன்) முக்கியமாயிற்றே.. ‘ நமது கவிஞர் அனார், நாளை சென்னை பயணம். காலச்சுவடு பதிப்பகத்தார் அவரை புத்தகச்சந்தைக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருகிறார்கள். கவிஞர் சேரனின் கவிதைத்தொகுதியை வெளியிட்டு உரையாடுகிறார். அந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பாரத தேசத்தின் சமூகப் போராளி மதிப்புக்குரிய அருந்ததி ராய் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். அனாரின் கவிதைகள் கொடுத்து வைத்தவை. நமது நண்பர்களுக்கெல்லாம் இந்தச் செய்தியை எத்தி வையுங்கள்.’ என்றும் இன்னொரு மெயில். நண்பர் தாஜ் கவிதாயினி அனாரை சந்திப்பார் என்று நினைக்கிறேன். கவிதையை நினைத்து பயமாக இருக்கிறது! – ஆபிதீன்

***

அன்புள்ள ஆபிதீன்,

இசையில் தொடங்கும் உங்கள் பயணம் 2012ல் குதூகலிக்கட்டும்.

சூறாவளி நாகூரையும் தாக்குமோ என்ற கவலையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். அல்லாஹ் பாதுகாத்தான்.

இயற்கையோடு மனிதன் இசைந்து வாழும் காலமெல்லாம் இயற்கையும் அவனோடு இசைந்து வாழ்ந்தது. இன்று எல்லாவற்றையும் நாம் குழப்பி விட்டோம்.

மெய்தான், நமது அருமை நண்பர் ஜயதிலக்க கம்மல்லவீரவின் கதையை நமது நண்பர்கள் யாரும் படிக்கவில்லை போலும். ஒட்டுமொத்தச் சிங்களவர்களும் இனவாதிகள் என்ற விதமாக ஒரு குறிப்புப் பார்த்தேன். எவ்வளவு பெரிய அபத்தம்.

இந்தத் தேசத்தில் விகிதாசாரப்படி நல்லவர்களைத் தெரியப்போனால், தமிழ் முஸ்லிம்களை விட சிங்களவர்கள் மேலானவர்கள். யூதர்களின் இலக்கியத்தையே படிக்கும் நமக்கு சிங்களவர்களின் இலக்கியத்தைப் படிப்பதில் அவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடாது.

நாம் எங்கே போகிறோம்? ஒன்றும் புரியவில்லை.

இன்று, நான் பிறந்த வாரம் வெளிவந்த 07.04.1946 ஆனந்த விகடனிலிருந்து ஒரு கவிதையை அனுப்புகிறேன். ஆபிதீன் பக்கங்களில் ஏற்றி விடுங்கள். கவிதை பொருத்தமாகத்தான் எனக்குப் படுகிறது.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எஸ்.எல்.எம். ஹனீபா காக்கா

***

 

பரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க!
கவிஞர் சுரபி

படிச்ச படிப்பு போதுந் தம்பி மடிச்சு வையுங்க
பரீட்சை முடிஞ்சு போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க

போட்டி போட்டுப் பொஸ்தகத்தெப் பொரட்டி வந்தீங்க
பொஸ்தகமா நாளைக்கெல்லாம் பொதி சொமந்தீங்க
நோட்டு நோட்டா எழுதிக் கையும் நொந்து போனீங்க
நூறு வருஷம் எரிக்க ஒதவும் மூட்டெ கட்டுங்க

கப்பு கப்பா டீ குடிச்சுக் கண்முழிச்சீங்க
கணக்கு சயின்ஸ் இஸ்டரிண்ணு கடமும்போட்டீங்க
குப்பி குப்பி யாக்கெரஸின் கொளுத்திப்புட்டீங்க
கும்பிருட்டாப் போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க

கடியாரத்தெத் திருப்பிவச்சிக் கனவுகண்டீங்க
கதறியெழுந்து கண்ணெநிமிட்டிக் கர்ம மிண்ணீங்க
விடிய விடியத் தூங்கிவழிஞ்சி வெறுத்துப்புட்டீங்க
விடிவு காலம் வந்ததப்பா மூட்டெகட்டுங்க

மாலையெல்லாங் கோயிலிலே மண்டி போட்டீங்க
வழக்கமில்லா வழக்கமாக வலமும் வந்தீங்க
பாலை வாங்கிக் கொட்டிக் கொட்டிப் பழிகெடந்தீங்க
பார்த்துக்கலாம் பலனையெல்லாம் மூட்டெ கட்டுங்க

அருத்தமில்லா எழுத்தெக் கரைச்சிக் குடிச்சிப்புட்டீங்க
அப்பாவோட ஆஸ்தியெல்லாங் கரைச்சிப்புட்டீங்க
கருத்து தெரிஞ்ச நாள்மொதலா கஷ்டப்பட்டீங்க
கவைக்கொதவாப் படிப்பு தம்பி மூட்டெ கட்டுங்க

கோட்டு சூட்டு பூட்டு ஹாட்டு மாட்டிக்கிட்டீங்க
கோலெரிட்ஜு மில்ட னின்னு கொளறிப்புட்டீங்க
ஏட்டுச் சொரையே நம்பி அடுப்பெ மூட்டிப்புட்டீங்க
ஏளனமாப் போச்சுதப்பா மூட்டெ கட்டுங்க

பிரஞ்சு நாட்டு அரசியலெ அலசிப்புட்டீங்க
பின்லந்தோட குளிரையெல்லாம் அளந்துபுட்டீங்க
பொறந்த நாட்டெ மறந்துப் பேசப்புகுந்துபுட்டீங்க
போதுமப்பா படிச்ச படிப்பு மூட்டெ கட்டுங்க

ஒரஞ்செய்த க்ளைவை கர்ம வீரனாயாக்கி
ஒலகக் கொள்ளைக் கார ட்ரேக்கை உத்தமனாக்கி
மாரதத்தின் சிங்கந்தன்னை மலை எலியாக்கி
மானங்கெட்டது போதுமப்பா மூட்டெ கட்டுங்க

பண்டெக்காலப் படிப்புமில்லே அலட்சியமாச்சு
பரதேசத்துப் படிப்புமில்லே அரைகொறையாச்சு
ரெண்டு ஆட்டெ ஊட்டி வளர்ந்த குட்டியாயாச்சு
ரேஷன் படிப்பு போதுமப்பா மூட்டெ கட்டுங்க

அடிமெ வாழ்வு தீருங் காலம் வந்திருக்குது
ஆத்திரமா தேசமெல்லாங் காத்திருக்குது
புதுமெ வெள்ளம் பொரண்டு வரக் காத்திருக்குது
போதுமப்பா பழையபடிப்பு மூட்டெ கட்டுங்க.

***

நன்றி :  எஸ்.எல்.எம். ஹனீபா , விகடன்