சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (06)

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள்
அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05

அத்தியாயம் 06

ஆபிதீன்

*

07.02.1996

தம்பி செல்லாப்பா , பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுக்கான C1 Formஐ நேற்று அனுப்பியிருந்தார். நாவப்பட்டினம் சுப்பையாபிள்ளையிடம் கேட்டு அதன்படி அவர் பூர்த்தி செய்திருந்த நகலைப்பார்த்து , Original-ல் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு , இன்று ‘PBCo.’-பளவூட்டுத்தம்பியிடம் சேர்த்தேன். அவன் கம்பெனி ஆள் நாளைக்கு ஊர் போகிறாராம். DHL-ல் அனுப்பும் காசு மிச்சம். ஆனால் அந்தக் காசுக்கு இணையாக Bata ஷூ ஒன்று வாங்க வேண்டும்! அவீரில் என் கம்பெனிக்கு பின்புறம் 25 நிமிட நடை தூரத்தில் உள்ள ‘PBCo.’ கிடங்கிற்கு போகும் சாலை சேறும் சகதியும் நிரம்பியிருந்ததால் ‘ஷூ’ வீணாகப்போயிற்று. சேற்றினூடே நடந்துபோனது British Overseas குடியுரிமை அட்டையைப் பெற. பெற்றபிறகு உள்ள வாழ்க்கையின் தளமா இந்த சேறு? ஆனால், திரும்பி வரும்போது அங்கிருந்து ‘பிக்-அப்’பில் வந்துவிட்டேன் ஒழுங்காக. என் கம்பெனி டிரைவர் வழக்கமாக காலை எட்டரை மணிக்கு வருவான் ‘தேரா’விலிருந்து ஆஃபீஸ் ஆட்கள் இருவரைக் கூட்டிக் கொண்டு. அவனுடன் போயிருந்திருக்கலாம். ஆனால் லேட்டாக வந்தால்? காலை 9 மணிக்குள் கொடுத்துவிடு என்று பளவூட்டுத்தம்பி சொல்லியிருந்தான். சரியாக கொடுத்துவிட்டு , சரியாக சேற்றைப் பூசிக்கொண்டு வந்தேன். கணுக்கால் வரை அப்பியிருந்த சேற்றைப் பார்த்துவிட்டு அங்கிருந்த ஒருவர் சாதாரணமாகச் சொன்னார், இப்போது இந்தப்பகுதி ‘Dry’ ஆகிவிட்டதென்று. எனக்கு பாரீஸில் உள்ள தம்பி ஞாபகம் வந்தது. அவன் இரண்டுநாளைக்கு முன் தன் மச்சானுக்கு ஃபோன் செய்து , ‘இப்போது இங்கே நிலைமை மோசமாகி விட்டது. இதுபோல் Overseas Citizen Passportல் வந்தவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னானாம். அந்த நினைப்பை உதறிவிட்டு , பூர்த்தி செய்த formஐ அனுப்புவதற்காக கொடுத்துவிட்டு வந்தேன் – சிங்கப்பூர் போய்விடலாம் என்று! சிங்கப்பூரில் சேறு அவ்வளவாகக் கிடையாது. பிரம்படிதான்.

ஊரில் சர்க்காரிடம் இந்த பிரிட்டிஷ் பாஸ்போர்ட், இதன் மூலமாக எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கிடைக்கவிருக்கிற வசதிகள் பற்றிச்சொல்லி ஏற்பாட்டில் இறங்கவா என்று கேட்டதற்கு உடனே யோசனை செய்து ‘கணக்கு போட்டு பார்த்துதான் சொல்லனும். நீங்க சொல்றது common senseக்கு சரி, ஆனா common sense நிறைய சமயங்களில் உதவாது’ என்றார்கள். அப்புறம், நாளைக்கு நாளைக்கு என்று இரண்டுமுறை அவர்கள் இழுத்தடிக்கவே துணிந்து இறங்கினேன் – அவர்கள் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில். தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்! ஊரில் இருந்த 3 மாதத்தில் வராத பதில் , இங்கிருந்துகொண்டு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உடன் அங்கு வருகிறது. சரி, வந்ததா? ஒரு சர்டிஃபிகேட்தான் பாக்கி. School ‘டிசி’. என்னிடமுள்ளது தொலைந்து விட்டது. டிகிரியெல்லாம் காட்டினால் கொடுக்க யோசிப்பான் என்று அனுபவப்பட்ட சுப்பையாபிள்ளை சொன்னதால் School Levelல் உள்ள அனைத்து சர்டிஃபிகேட்களும் முக்கியமானதாக இருந்தன. அந்த Duplicate ‘டிசி’ வாங்க கிட்டத்தட்ட 3 மாதம். என்னே என் செல்வாக்கு! செல்வாக்குள்ள கலெக்டர் ஆஃபீஸ் குமாஸ்தா ஒருவர், அ.தி.மு.க நகரச் செயலாளர் ஒருவர் , முறையாக தாசில்தார்-இன்ஸ்பெக்டரிடம் கையெழுத்து வாங்க ( ‘டிசி’ கொடுக்க அனுமதி!) இரண்டரை மாதம் இழுத்தடித்ததில் ஊருக்குப் போயிருந்த நஸ்ருதீனிடம் சொல்ல , அவர் உடனே தன் செல்வாக்கைக் காட்டி விட்டார். எடுத்துக் கொடுத்தால் ‘அப்பாகடை’ ஒத்தானமும் ஒரு புராட்டாவும் இங்கே வாங்கிக் கொடுக்கிறேன் என்று அவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். துபாயில் நானும் அவரும் வேலையில் இல்லாத சில கொடுமையான நேரங்களில் பசியாற்றிய ஒத்தானம் வாழ்க!

பயிற்சி ஆரம்பத்தில் எத்தனையோ விஷயங்கள் ஒரு நொடி நினைத்த மாத்திரத்தில் நடந்திருக்கிறது. ஆனால் சில விஷயங்கள் என் இம்மாதிரி ஏன் நடக்காமல் ஒத்தானத்திற்கு செலவு வைக்கிறது அல்லது புது ஷூ வாங்க வைக்கிறது? எத்தனை ரிலாக்ஸ்டாக ஊரில் – நேரில் – எடுக்கிற, செய்கிற ஒரு விஷயம் அனாவசியமான தாமதத்தை தருவதற்கு காரணம் என் பயிற்சியின் குறைபாடா? முறைப்படி கேட்கவில்லையோ நான்?

ரவூஃபின் 12.01.1996 நோட்ஸ் : I asked ‘S’ about the difference between Focussing & Burning Desire. ‘S’ said the 1st is what we deliberately do & the 2nd is what occupies our mind always of its own accord..

‘நீயாகவே  செய்வது Focus.. அதுவாகவே வருவது Burning Desire’ – ‘S’

‘ஒரு விஷயத்தை focus பண்ணப்பண்ண அது Burning Desire ஆக மாறும் வாய்ப்பு உள்ளதா?’ – ரவூஃப்.

‘ஆமாம். ஆனால் Burning Desire இல்லாமலும் அடையலாம். நாம் கேட்கும் துஆ எல்லாமே பலிப்பதில்லை. சிலது பலிக்கும். ஏனெனில் அந்த நேரத்தில் மனது ஒருமுகப்பட்டு கூராக இருந்திருக்கிறது. அதாவது பலிக்காமல் போவது இப்படி மனது இல்லாததால்தான் என்று அர்த்தம்’ – ‘S’

*

‘மனது எப்போதும் கூராக இருப்பது இயற்கையல்ல என்று நம் நினைக்கிறோம். காரணம் இயற்கைக்கு மாறுபட்ட வகையிலேயே நாம் பழக்கப்பட்டு பின்னர் அதுவே நம் இயற்கையாகி விட்டது ‘ – ‘S’

‘குழந்தைகளும் மிருகங்களும் தங்களுக்கு தேவையானதை அடைவதில் எவ்வளவு பிடிவாதமாக உள்ளன! (i.e, That is Natural)’ – ‘S’

*

Burning Desire & Relaxation :

‘BD’ என்பது ஆங்கிலேயன் தந்த வார்த்தைகள். அடைந்தே தீரவேண்டும் என்ற ஆசை தோன்றும். ஒரு குறிப்பிட்ட ஸ்டேஜ் போனபிறகு அடையமுடியும் என்ற நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கை ஸ்ட்ராங் ஆகும்போது மனம் Totalஆ ரிலாக்ஸ் ஆகி விடும். அந்த Relaxed stageதான் நினைத்ததைக் கொண்டு வரும்’ – ‘S’

தானாக வருவது :

‘தானாக வருவது என்றால் நம்முடைய Training காரணமாக நம்முள்ளேயுள்ள ஒரு மாபெரும் சக்தியை காரியங்களை நாம் விரும்பியபடி நிகழ்த்தத் தூண்டி விடுகிறோம்’ என்று பொருள்’ – ‘S’

*

என்னுடைய Burning Desire என்பது என்ன? ஒரு டைரியை முழுதாக எழுதி முடிப்பது என்றா?

*

கனவு :

‘கனவோட கடைசி எல்லை சின்ன ஓரிரு வார்த்தை அடங்குனதா இருக்கும். ரயிலைத் தவற வுடுற மாதிரி, பஸ் கிடைக்காமல் டிரைவர் காலைவாரி விட்ட மாதிரி, இல்லெ – நமக்கு மட்டும் சீட் கிடைக்காத மாதிரி , அல்லது டிரைவ் பண்ணும்போது ஒரு தடுப்பு முன்னால் உருவாவுது.. பின்னாலும் எடுக்க முடியலே.. முன்னாலும் எடுக்க முடியலேங்குறமாதிரி.. – எல்லாம் ஒரே ரிஸல்ட்தான். லைஃப்லெ எதிர்காலத்துலெ நம்பிக்கையில்லே, அல்லது, குறைஞ்சிருக்கு. that means , ‘Hope of Achievement’ இல்லேண்டு அர்த்தம். Belief  குறைச்சலா இக்கிது அல்லது இல்லேண்டு அர்த்தம்.

‘சாதாரணமா கனவு காணுகிறவர்களுக்கு உருவாகும் அர்த்தம் ‘ரியாலத்’ பண்றவங்களுக்கு அறவே பொருந்தாது. இருந்தாலும் ஒரு சில கனவுகள் இருக்குது. அது Cosmic Artchitectural Forceஓடு சம்பந்தப்பட்டது. அதாவது பொம்பளை – கல்யாணம் பண்ணுனவ – சந்திரனை கனவு கண்டா புள்ளைண்டு அர்த்தம். திங்கிற பழத்தை கனவு கண்டாலும் புள்ளைண்டுதான் அர்த்தம். இது மட்டும் மாறவே மாட்டேங்குது. எவ்வளவு பெரிய ‘ரியாலத்’தாக இருந்தாலும் சரி.  இதுக்கு காரணம் எனக்கு தெரியமாட்டேங்குது. மத்தபடி எல்லா கனவுகளும் மாறும் (ரியாலத் பண்ணுகிறவர்களுக்கு). ரியாலத் பண்ணுறவங்க கனவு பத்தி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும் சில instructions பொழுதுபோக்குல தோணுற கனவு மாதிரி தெரியும். அது actually, instructions.. அத என்னெட்டெ கேட்டுக்குங்க – நீங்களா அதுக்கு அர்த்தம் பன்ற தகுதியை பெறுகிற வரைக்கும். ஒரு கனவுல பத்துவார்த்தை வருதுண்டா First வார்த்தை Instructionஆ இக்கிம். First & Third , Informativeஆ இக்கிம். Fourth & Fifth Instructionஆ இக்கிம். 1,4,5ண்டு சேத்துப் பாக்கனும். அதேமாதிரி ஒரு ஆளின் கனவு இன்னொரு ஆளுக்குப் பொருந்தாது. இருந்தாலும் ஒரே ‘ரியாலத்’ பண்ணக்கூடிய பத்துபேரின் கனவு ஒரே மாதிரியாகத்தானிருக்கும். அதுபோல் கனவுலெ பத்துபேரை கண்டீங்கண்டா அந்த பத்துபேரும் ஏறக்குறைய அதே கனவை கண்டிருப்பாங்க. ‘ஏறக்குறைய’ண்டா என்னா அர்த்தம்ண்டா detailsலெ கொஞ்சம் வித்யாசம் இக்கிம்டு சொல்றேன். நீங்க பச்சை சட்டை போட்டவரை கனவுலெ கண்டீங்கண்டா இன்னொருத்தர் பச்சையில கோடுபோட்ட சட்டை போட்டவரை கண்டிருப்பார்.

‘அப்பப்ப mental levelஐ கீழே இறக்கி, I mean, Depthக்கு கொண்டுபோயி நாம ராத்திரிலெ என்னான்னா கண்டோம், என்னென்ன எண்ணங்கள் தோன்றி மறைஞ்சிச்சிண்fடு பார்க்க பழகிக்கிறது நல்லது. நல்லதல்ல, Very Important. கனவு கண்டே எத்தனையோ பேரு எவ்வளவோ சாதனைகள்லாம் பண்ணியிருக்காங்க. Famous கிதாபுலாம் கூட  Purely, Totally, Completely, Entirely கனவு கண்டே எழுதியிருக்காங்க. Mozard… அவன் பண்ணுன Musicஐ பூரா கனவுலெதான் கண்டான் (Compose பண்ணுனான்)

‘நானே கனவு கண்டு எத்தனையோ கதை எழுதியிக்கிறேன். எத்தனையோ ப்ராப்ளத்துக்கு கனவுலேயே – டிஸ்கஸ் பண்ணுறமாதிரியும், ஒரு புக்-ஐ நான் பாக்குறமாதிரியும், இல்லே, நானா யோசனை பண்றமாதிரியும் – கனவு கண்டிக்கிறேன். ‘கனவு’ண்டு சொல்றதை விட தூங்கும்போதே நான் mentally வேலை செஞ்சிருக்கேன்டு சொல்றதுதான் பொருத்தம். கனவு’ண்டா subconsciousலெ உள்ள குப்பைகள் எல்லாம் வெளிவருது, shadows அப்படீண்டு சொல்லி வர்றோம். Psychologyயும் அப்படித்தான் சொல்லுது. அப்படி அல்ல’

– பேச்சு தடைபடுகிறது, Recording கோளாறால். சர்க்கார் என்ன சொன்னார்கள்? கனவுதான் காண வேண்டும்!

*

01.03.1996 வெள்ளி ‘செஷன்’.

Secret Symbol (5) கேஸட்டிலிருந்து…

கேட்டுக்கொண்டே – பிறகு படிப்பதற்காகவும்- இந்த டைரியில் எழுதுவது சிரமமாக இருந்தபடியால் , ‘செஷன்’ஐ நினைத்துக் கொண்டு , எழுதாமல் வெறுமனே உள்வாங்கிக்கொண்டிருந்தேன் பேச்சை. 8 மணி. ஊர் டைம் ஒன்பதரை மணி. இப்போது ‘தப்ருக்’ஐ சீடர்கள் விளாசிக் கொடிருக்கிற நேரம். ‘செஷன்’. முடிந்து எழுதத் தொடங்குகிறேன். அதற்கு முன் இன்று ஒரு சம்பவம். ரவூஃபுக்கு என் Aiwa- Walkman மேல் ஒரு கண். துபாய் வந்து 2 மாதத்தில் ஒன்று அனுப்புவதாக அவனிடம் கூறியிருந்தேன். இம்மாத கடைசியில் ஊர்போகும் தம்பி ரஃபீக்கிடம் கொடுத்துவிடலாம் இதையே.. ரவூஃபும் அப்போதுதான் ‘செஷன்’. சம்பந்தமான தன் நோட்ஸையும் அனுப்புவான் என்று எண்ணம். கூடப்பிறந்த தம்பி செல்லாப்பா போனமாசம் போனார்தான். ஆனால் இதைக் கொடுத்தால் அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் கொடுக்க இயலவில்லை. இதைக் கொடுத்துவிட்டால் பின் எனக்கு? ஆசைப்பட்டுக்கொண்டிருந்த ஒரு ‘சிடி’ உள்ள ஆடியோ சிஸ்டத்தை வாங்கிவிடலாம் என்று அலசிப் பார்த்து – Budgetக்குத் தோதாக ஒரு Sansui Micro-2000 மேல் கண் வைத்தேன். Shopping Festivalல் ‘வரலாறு காணாத விலை குறைப்பு’ என்று அரசு அறிவித்து பொருட்களின் விலையை கூட்டியிருந்தாலும் சில பொருட்களின் கூட்டப்பட்ட விலை எல்லா ஷோரூம்களிலும் ஒரே மாதிரியாய் இருந்தது ஆச்சரியம். Sansui எங்குபார்த்தாலும் 850 திர்ஹம். காலையில் பஜாரில் – பஸ் ஸ்டாண்ட் பக்கமுள்ள எலக்ட்ரானிக் கடை ஒன்றில் 770 என்று போட்டிருந்தது. சொத்தையோ? 750க்கு வாங்கினேன். பில்லைப் போட்டு கொடுத்தான். திடீரென அந்த Systemத்தின் மேல் ஒட்டப்பட்டிருந்த விலையையும் பில்லில் மேலும் குறைக்கப்பட்டிருந்த விலையையும் எதேச்சையாகக் கண்ட Senior Salesman தன் price list ஐ ‘செக்’ பண்ணி தலையில் கை வைத்து விட்டான். போச்சு 870க்கு பதிலாக 770 என்று போட்டு அதிலும் 20 ரூபாய் டிஸ்கௌண்ட் வேறு!. ‘போச்சு..ஆபீஸில் நம் சம்பளத்தில் கை வைத்துவிடுவார்கள் ஹை..’ என்றான் ஹிந்தியில். நான் ஹிந்தி விளங்காதவன் மாதிரி நின்று கொண்டிருந்தேன். இதே Systemத்தை 850க்கு விற்கும் Jocky Electronicsல் வாங்கியிருந்தால் அவன் போடும் Toyata Car குலுக்கலில் ஆபிதீனுக்கு கார் கிடைத்திருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டாமோ?!

இனி கேஸட் :

‘கனவுங்குறது தூக்கத்துல வரனும்டு அவசியம் கிடையாது. Insructionஐ முழிச்சிக்கிட்டிருக்கும்போதும் பாக்கலாம். ஏண்டா, actualஆ தூங்குற நேரம் ஒரு பக்கம் இருக்க முழிச்சிக்கிட்டே ரொம்ப பேரு தூங்கிக்கிட்டிக்கிறோம், நமக்கே தெரியாம! அதனால்தான் தண்ணி குடிச்சிப்புட்டு , ‘தண்ணி கேட்டேனே..இன்னும் தரலையே’ண்டு சொல்றோம். அப்ப அந்த டைம்லெ தூங்கியிருக்கோம்! That means , இருக்கிற வேலையை விட்டுட்டு வேற எங்கேயோ போயிக்கிறோம்’

*

‘Mind, ‘ஜம்ப்’ ஆவுறது நல்லதா?’

‘கெட்டதுதான். எப்போ? அது ‘ஜம்ப்’ ஆவுறதுக்கு தனி டைம் கொடுத்து அதுக்கு வாய்ப்பை நீங்க கொடுத்தீங்கண்டா Mind  சிதறாது. இதுக்காகத்தான் ‘நாடி சுத்தம்’ங்கிற பயிற்சியைக் கொடுத்தேன். மனசை அலையவுடுங்க முதல்லெண்டு சொன்னேன், மனசை ‘still’ ஆக்குறதுக்கல்ல. அலைச்சல்ங்குறது மனசோட ப்ராக்டிஸ்லெ ஒண்ணு. அதுட naturalityலெ ஒண்ணு. அதுக்கு சான்ஸ் கொடுக்கனும். அதாவது ‘அல்லாஹ்வுக்கு பயந்தவன் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லே.. அல்லாஹ்வுக்கு எவன் பயப்படலையோ அவனுக்கு எல்லாம் பயப்படும்’ங்குறதுக்கு என்னா பொருள்? Sex மாதிரி பயம்ங்குறதும் ஒரு உணர்ச்சி. ஒரு Emotion. அதுக்கு Proper Diet கொடுக்கனும். பயத்தை என்னத்துலெயாச்சும் வச்சாகனும். வைக்கிறதிலேயே சிறந்ததுதான் மேலிடம். வைக்கலேண்டு சொன்னா அந்த பயம் பொங்கிக்கிட்டு வரும். எப்படி? குடும்பத்துலெ சரியா உறவு வைக்காதவன் தெருவுலெ போற பொம்பளையிலுவளை பாத்து ‘சைட்’ அடிக்கிற மாதிரி, பெருமூச்சு விடுறமாதிரிண்டு சொல்லலாம். இதைவிட லைட்டா சொல்லலாம்டாக்கா வூட்டுலெ சரியா சோறு உண்காதவன் கடையிலெ உள்ள காய்ஞ்ச புராட்டாவுக்கு ஆசைப்படுறமாதிரி. அப்ப பசிக்கு எதாச்சும் கொடுத்தாகனும். நோன்பு புடிக்கிறது கண்ட்ரோல் பன்னுறதுக்காகத்தானே தவிர பசியை அடக்குறது அல்ல. நிறைய திங்கிறதுனாலே ஏற்படுற விளவுகளெ ‘கட்’ பன்றதுக்காக. ‘சீக்கு’லெ பெரும்பகுதி வயித்தைப்போட்டு ரொப்புறதனாலெதாண்’டு ஹதீஸ் இக்கிது’ – ‘S’

*

‘அமெரிக்காவுலெ என்னா நடக்குது, ஆஸ்திரேலியாவுலெ என்னா நடக்குதுண்டு ஒரு Areaவை நெனச்சா அப்படியே வந்தாவனும் மனசுலெ. Actual Fact வரனும். இதுதான் Mind உடைய Power. வரத்தான் செய்யிது. எங்கே வருது? Subconscious or Unconsiousக்கு வருது. அது Conscious levelக்கு வர்றதுக்கு முன்னாலேயே distort பண்ணப்பட்டுடுது. குழப்பம்…சந்தேகம்..அப்படிலாம் உட்கார்ந்த இடத்துலெ இருந்து எப்படி தெரிஞ்சிக்க முடியும்ங்குற அவநம்பிக்கை..! இதெல்லாம் சேர்ந்து distorted pictureஐ கொடுக்குது. இப்ப இங்கெ ஒரு சத்தம் கேக்குது. நான் பாக்குறேன். பாக்குறதுக்கு முன்னாலெ என் மனசுலெ என்னா நெனப்பிருக்கு?’

‘Alert ஆவுறதுக்கு..’

‘ச்.. Philosophyலாம் பேசாதீங்க, Actual Lifeக்கு வாங்க’

‘சத்தம் வந்து மனசுலெ ரிகார்ட் ஆவுது’ – சீடர்2

‘அட, நான் என்னவோ கேக்குறேன், நீங்க என்னவோ சொல்றீங்களே.. ஏன் திரும்புறோம்?’

‘கவனம் அவ்வளவு பூரா நம்ம செயல்லெ..’ – ரவூஃப்

‘நீயும்தான் உளர்றா! அட, என்னாண்டு தெரிஞ்சிகொள்ளுறதுக்காகத்தானே? அதாவது திரும்பினால் பார்க்கமுடியும், தெரிஞ்சு கொள்ள முடியும்ங்குற beliefதானே அது? Total Darkness..அங்கே சத்தம் கேட்டாலும் அது condition reflex. திரும்பித் திரும்பி பழக்கம்! இத சேர்க்க முடியாது. நான் என்னா சொல்ல வர்றேன். திரும்புனா பார்க்க முடியும், கேட்க முடியும் என்று நம்பினால், i.e அந்த practice இருந்தால்,  எங்கே எது நடந்தாலும் தெரியும்!’

எங்கே எது நடந்தாலும் தெரிவது :

‘இது தேவையில்லெங்குறது இரிக்கட்டும். lifeலெ சில காரியங்கள்லாம் தேவைதானே? இதுக்காக லைஃப்லாங்கா 25 வருஷம் 30 வருஷம்டு பிராக்டிஸ் பண்ணனும்கிற அவசியம் இல்லே. சிம்பிளா ஓரிரு வாரம் அல்லது அன்றாடம் அஞ்சு நிமிஷம்..வாசல்லெ யாரோ வர்றமாதிரி தெரிஞ்சி , 50 தரம் போயி ஏமாந்துட்டு வர்றோம். யார்ண்டு தெரியாததனாலதானே? நாம Instruction கொடுத்துப்புடனும். ‘தட்டுனா யார்ண்டு சொல்லிப்புடு’ண்டு. ‘கீழே’ ஒத்தவன் இக்கிறான்லெ, அவன்ட்டெ சொல்லிப்புடனும். அவன் சொல்லிடுவான்! முதல்லெ இவரா இருக்கலாமோண்டு வரும். அப்புறம் பிராக்டிஸ் பண்ணப்பண்ண பண்ண ‘இவராத்தான் இருக்கும்’டு வரும். possibility மாறி probability எற்பட்டுவிடும். அப்புறம் 100% கரெட்க்டா இருக்கும். குர்ஆன் ஷரீபு ஒரு சபையிலெ ஓதிக்கிட்டிக்கிம்போது ஒருத்தன் வந்து உட்காருவான். குர்ஆனை எடுத்து ஒரு திருப்பு திருப்புவான். எந்த இடத்துலே ஒதிக்கிட்டிக்கிறாங்களோ அந்த இடம் கரெக்டா வரும். பார்வையும் அங்கே வுழும். இதெல்லாம் accidentண்டு சொல்லி இந்த பவர்-ஐ நாம கெடுத்துக்குறோம். Nothing is accidental. இந்த வார்த்தையை கரெக்டா வச்சிக்குங்க. எல்லாமே has a reason’ – ‘S’

*

‘Distortion வர்றதுக்கு காரணம் ‘தசாவதானி’ ‘சதாவதானி’ண்டு இக்கிறதுதான். இந்த நினைப்பே தப்பு. இதே மாதிரி பேசுறது இன்னும் தப்பு. Preciseஆ ஒரு வேலையை செய்ய ஆரம்பிச்சாக்கா இது குறைய ஆரம்பிக்கிம். Mind ‘ஜம்ப்’ ஆனாவே என்னா அர்த்தம்ண்டா வெளிப் பொருட்கள் இழுக்குதுண்டு . இந்த வீக்னஸ், Mindக்கு வரக்கூடாது. இப்படி உள்ளவங்க லைஃலெ நடமாட முடியாது’ – ‘S’

*

‘ஈஸா அலைஹிஸ்ஸலாம்ட ‘பைபிள்’லெ , ஈஸா அலைஹிஸ்ஸலாம் சொன்னதையும் வேத வாக்குகளையும் ஒண்ணா எழுதி வச்சி , எது ஈஸா அலைஹிஸ்ஸலாம் சொன்னது எது ஆண்டவன்ற கருத்துகள்ண்டு தெரியாம பொய்டுச்சி. இதனாலெதான் ரசூலுல்லா சொன்னாங்க,’ நான் சொன்னதை, என் நடைமுறைய மனப்பாடம் பண்ணுங்க. ‘வஹி’ ‘ஆயத்து’களை எழுதி வையுங்க’ண்டு’ – ‘S’

*

உடலின் Structure :

‘அடடா, என்ன அளஹா போட்டிக்கிறான் அல்லா! ஒரு விரலை எடுத்து யோசனை பண்ணுனாவே நம்ம மூளைலாம் நிண்டுக்கும்! ஆண்டவன் உள்ளே பூந்து கொத்து வேலை செஞ்ச மாதிரியும் மரத்துலெ நகாசுவேலை செஞ்சமாதிரியும்தான் தெரியுது. இதெல்லாம் ஒரு கண்ட்ரோலோடுதான் வருது. வேணும்டே இந்த கண்ட்ரோல் பத்தி தெரியிறதுக்கு மத்தமத்த படைப்புகளையும் ஆண்டவன் படைச்சிக்கிறான். நெத்தியிலெ கண் உள்ள ஒரு ஆளை நான் என் கண்ணாலெ பார்த்திருக்கேன். நல்ல காலம் யாருக்குமே கொட்டை முகத்துலெ மொளைக்கலே! எப்படி, கற்பனை பண்ணிப்பாருங்க, எப்படி இக்கிம்டு! எப்படி அவன் பழகுவான்?! இல்லே, கண்ணு இடுப்புக்கு கீழே இந்தா என்னாவும்?!’ – ‘S’

Cosmic Force :

‘நாங்க விளையாடிக்கிட்டிக்கிறோம். நீங்கதான் கருவி, உங்களை வச்சித்தானே வெளையாடுறோம், நீங்களும் பங்கெடுத்துக்குங்க, எங்களை புரிஞ்சிக்குங்க நீங்க’ அப்படீங்குறது தெய்வ வாக்கு. இதுதான் Natural Law. Cosmic force. இது புரியாம நாம வாழவே முடியாது. நல்லா சட்டைய போட்டு மினுக்கலாம், அது வாழ்வு அல்ல!’ – ‘S’

*

‘அப்பப்ப mindஐ ரிலாக்ஸ் பண்ணிக்கிடவும் what is what அப்படீங்குறதை புரிஞ்சிக்கிறதுக்கும் நமக்கு கொஞ்சம் ரிலாக்சேஷன் தேவை. இல்லேண்டா நமக்கு self confidence போயிடும், நாம நல்லா வாழுறோங்குற நிலை மாறிடும். எப்போ நீங்க நிலை மாறுனீங்களோ  – அதாவது, எப்ப Astral Body இந்த (இப்போ இருக்கிற Physical) Body சரியில்லேண்டு நம்பிடிச்சோ அது அப்படித்தான் வரும்’

**

Self Image Psychology :

‘மாக்ஸ்வெல் மார்ட்’-ஆல் (Millionaire Maltz) கண்டுபிடிக்கப்பட்டது. இவனது Surgeryயில் , முக விகாரங்கள் நீங்கி ,  நீங்கியதாலேயே வாழ்வில் முன்னுக்கு வந்தவர்கள் பலராம். இவனிடம் வந்த ஒரு பெண்மணிக்கு முகத்தில் ஒரு தழும்பு.  அது அறவே தெரியாதவாறு நீக்கி கண்ணாடியைக் காட்டி, ‘பார்’ என்றால் அவள் தன் முகம் அப்படியேதானிருக்கிறது , தழும்புடன் என்றாளாம். அதிலிருந்து பிறந்தது இது (வெளி உருவம் மாறிவிட்டாலும் தன்னைப்பற்றி அவள் நினைத்துக் கொண்டிருக்கும் உருவம் மாறவில்லை’)

**

‘Astral Body இந்த (Physical) Bodyஐ தன்னுடையதாக, தன்னுடைய இருப்பிடமாக air-condition பண்ணிக்கனும், Fan போட்டுக்கிடனும், ‘மொசைக்’ போட்டு வச்சிக்கனும், ஈச்சமரம் வைக்கனும், தென்னை மரம் வைக்கனும். அப்பதான் அது குடியிருக்க முடியும்’ – ‘S’

*

தான் ஒரு நண்பருடன் ஒரு வீட்டிற்கு போனபோது , தனக்கு தண்ணீர் குடிக்கவேண்டும்போல் இருந்ததாகவும் அடுத்த நொடியில் கூட வந்திருந்த நண்பர் ‘கொஞ்சம் தண்ணீர் குடிங்க’ என்று கேட்டதாகவும் ஒரு சீடர் வியந்து சொல்ல சர்க்கார் சொல்கிறார்கள் :

‘இது ஒண்ணு அல்ல, இத மாதிரி லட்சக்கணக்கா எத்தனையோ சம்பவம் நடக்குது.. நாம மூளைகெட்டதனமா இதயெல்லாம் பார்க்காம எதெதையோ பாத்துகிட்டு அலையிறோம். ‘இப்படி பாக்குறது முட்டாள்தனம்’ங்குற கருத்து ஜனங்கள்ட்டெ பரவிக்கிட்டு வருது. ‘இது வேதாந்தம் , லைஃபுக்கு சூட்டபிள் இல்லாதது.. பொருந்தாதது.’ண்டு!. ஆனா, actual lifeஏ இந்த basisலெதான் நடந்துக்கிட்டு வருது. மேலே வந்தவன்ட்டெ ‘எப்படி வந்தா?’ண்டு கேட்டா சொல்லமாட்டான், சொல்லத் தெரியாது! இந்த படத்தை மாட்டி வச்சேம்பான். அது சரி, படத்தை மாட்டி வச்சபிறகு வந்திருக்கலாம். படம் மாட்டுனதுதான் காரணமா இந்த விளைவுக்கு? ஆமாம்டு வச்சிக்கோவோமே.. அந்த படம் மாட்டுனபிறகு உன் mindலெ change ஏற்பட்டிருக்கு. ‘TuneUp’ ஆயிருக்கு. உண்டாக்குற விளைவு மனசுல இருக்கு. இந்த மனசை பதப்படுத்துறது படம், chair…இப்படி புரிஞ்சிக்கனும். அப்ப உங்க மகனுக்கு வாழ்க்கையை கொடுக்கனும்டு நெனைக்கிம்போது படத்தை மாட்டி வைக்கச் சொல்லுவீங்க – ஒண்ணும் புரியலேண்டா. உண்மை புரிஞ்சா அந்த படத்துனலே எந்த மனநிலை உண்டாவுனிச்சோ அந்த மனநிலையை உண்டாக்குறதுக்கு – அவன்ற வயசுக்கு – என்னா கொடுக்கனுமோ அதை நீங்க கொடுப்பீங்க!’ – ‘S’

*

பிரச்சனைகளை நிவர்த்திக்க செய்யும் பயிற்சி – ஃபோகஸ் – பற்றி ஒரு சீடர் :

‘ஒவ்வொரு பிரச்னைக்கும் எவ்வளவு நேரம் எடுத்துக்கலாம்?’

‘அது பிரச்னையோட strengthஐப் பொறுத்தது. அதைவிட , இந்த பிரச்சனையை solve பண்ணுறது எவ்வளவு கஷ்டம்டு நீங்க நெனைக்கிற எண்ணத்தைப் பொருத்தது. எதையுமே easyஆ ஃபோகஸ் பண்ணமுடியும்டு நீங்க நம்பிட்டீங்கண்டா ப்ராப்ளமே ஈஸியாத்தான் வரும்’.

ஒரு ப்ராப்ளம் : கேஸட்டின் B Sideல் கடைசி கால்பகுதி ஒலிதரா ஊமை நாடா!

*

21-04.04.95 கேஸட் :

‘இப்ப நாம செய்யிற Method என்னா? பீ மேலே கொஞ்சக்கோனு அத்தரை ஊத்துறோம். இன்னும் ஊத்துவோம். அப்ப அது அத்தர் கலந்த பீயாப்போவும். அப்புறம் இது பாதி அது பாதி ஆனவுடனே அத்தரும் பீயும்.. அத்தர் லேசா கலக்கலே இப்ப, பாதி கலந்துடுச்சி! அத்தர் (இன்னும்) கூட கலந்த உடனே பீ கலந்த அத்தரா மாறும். இன்னும் இந்த – பயிற்சிங்குற அத்தர் – கலக்க கலக்க இந்த பீயே அத்தரா மாறிடும்! அசிங்கமா இக்கிதா? அதாவது , தீமையை அழிச்சிப்புட்டு இடைவெளி விட்டு நன்மையை உண்டாக்குறதுக்குப் பதிலா தீமைக்கு மேலேயே நன்மையைப் போடுறோம். இருந்தாலும் போடுற நன்மை வேலை செய்யனுமில்லே? – ஆனா, அதுக்காக அதுக்கு மேலே நீங்க பீயைப் பேலக் கூடாது! – அத்தர்ட quantity குறையுமில்லே.. – நாலு கிராம் பீ ஒரு கிராம் அத்தர்..- ஒவ்வொரு நாளா ஒருகிராம் அத்தருண்டு அஞ்சாவது நாளு அஞ்சு கிராமா ஆயிடும். இப்ப நாலு கிராம் பீயிலெ இன்னும் ஒரு கிராம் பீ பேண்டீங்கண்டா என்னாவும்? இந்த negative வரக்கூடாதுண்டுதான் அப்பப்ப கண்டிக்கிறேன்’ – ‘S’

*

Hope of Achievement – First, Health – Second, Last but most important : Financial Security

*

‘உங்களுக்கு யாருக்காச்சும் ப்ராப்ளம் இருக்கா?’ – ‘S’

‘இல்லே சர்க்கார்’

ஒரு சீடர் சொல்கிறார்..’இப்ப நம்பிக்கை நிறைய இக்கிது. எதை வந்தாலும் பாத்துக்கலாம்!டு’ . அவருடைய மாற்றம். சர்க்காரிடம் மாட்டிக் கொள்கிறது இந்த ‘மாற்றம்’. கிண்டல் பிறக்கிறது.

‘எத வந்தாலும் பாத்துக்கலாம்ங்குறது, ரெண்டு பேரு பேசுவாங்க அப்படி.  Total Confidence உள்ளவங்க. Total Confidence இல்லாம பக்தி வளராது. தெய்வநம்பிக்கை இல்லாம தன்னம்பிக்கை வளராது. இவன் சொல்லுவான் அப்படி. சரி, விரக்தி புடிச்ச, பாரபைத்தியம் புடிச்ச பைத்தியக்காரன் இக்கிறான்லெ, அவனும் இப்படித்தான் சொல்லுவான்! ‘வந்தா வரட்டுமே..போனாப் போவட்டுமே..’ண்டு. நீங்க எந்த நம்பிக்கையை சொல்றீங்க?’

‘…. ….’

‘வந்தாவரட்டும், ஒப்பாரி வச்சு அழுவுவோம், அப்படீண்டா?’

‘பாத்துக்கலாம், நல்லா போயிடும்டு..’

‘நல்லா போயிடுங்குறீங்களா, நல்லாக்கிட முடியும்ங்கிறீங்களா?’

‘நல்லாக்கிட முடியும்டு’

‘அப்படி வாங்க! தானா எதுவும் நடக்காது. அல்லா பக்கத்துல இந்தாக்கூட வரக்கூடிய ‘முஸீபத்’ வந்துக்கிட்டுத்தான் இக்கிம்; அல்லா பாத்து சிரிச்சிக்கிட்டிருப்பான். உங்களுக்கு தைரியம் வரனும், அப்ப அல்லாஹ்வைக் கூப்புட்டுக்கனும்’

‘SS’ பயிற்சியின்போது வரும் இடைஞ்சலை நீக்க ஒரு சீடருக்கு சர்க்கார் சொல்வது :

‘நீங்க படுத்துக்கிட்டே என்னா செய்யனும்? நான் நாலு பொருள் கொண்டவன்..Double+ Double. நான் ஜெனரலா வாழுற வாழ்க்கை பூரா Physical Bodyயின் தேட்டத்தை நிறைவேற்றத்தான். இல்லே, Emotional bodyயோட controlக்கு உட்பட்டு நான் ஆடுறேன். நூத்துல ஒரு பங்கு Intellectual Body – மூளையை வச்சி யூஸ் பண்ணுறேன். Astral Bodyக்கு இன்னும் நான் வேலையே கொடுக்கலே.. இனிதான் கொடுக்கப்போறேன்.. எனவே நான் வளர்ந்தாகனும்.. வளர்றதுக்கு உள்ள பயிற்சிதான் இதுண்டு சொல்லிக்கிங்க… Everyday and in everyway I am growing better & better … ‘ஒவ்வொருநாளும் எல்லா வகைகளிலும் நான் முன்னேறிக்கிட்டே இருக்கிறேன்’ . சொல்லுறது அல்ல இது, நெனைக்கனும், பயிற்சி ஆரம்பிக்கும்போது. தற்காலிகமாக 11 தடவ இதை சொல்லுங்க (நெனைங்க). ‘எங்கே வளர்றா?!’ண்டு மனசு கேட்டா . ‘போடா’ண்டு சொல்லிப்புட்டு உணருங்க. சொல்லிக்கிட்டே பிறகு மேலே வாங்க. நான் ‘better and betterஆக grow ஆகுறதுக்கு உள்ள training இது’ண்டு மனசார நெனைச்சிக்கிட்டே மேலே வாங்க.. ‘நான் வளர்ந்தா கீழே இக்கிற physical bodyயும்  Emotional & Intellectual Bodyயும் வளரும். எனவேதான் இந்த வேலையை நான் செய்யிறேன்’டு நெனைக்கனும். மேலே வரும்போதும் புரளும்போதும் திரும்பும்போதும் வந்து நிற்கும்போதும்’ – ‘S’ (‘அநா மர்கஜ் உல் வஹி ‘ சொல்ல ஆரம்பிக்கும்வரை இதைச்சொல்லி வரவேண்டும். ‘அந மர்கஜ் உல் வஹி அந மர்கஜ் உல் இல்ஹாம்..அந மர்கஜ் உல் குல்லிசய்’ என்று சொல்லும்போதும் இந்த நினைப்பு இருக்க வேண்டும் என்கிறார்கள் சர்க்கார்)

‘எல்லாத்துக்கும் மேலே Astral Force இக்கிது. அது இருந்தாத்தான் மூளையும் வேலை செய்யும். மூளைக்கும் உணர்ச்சிக்கும் உடம்புக்கும் உயிரோட்டமே வரும்’ – ‘S’

*

‘அல்லாஹ்ட ஒரு ‘பிட்’தான் Astral Forceங்குறது. இதை விட பச்சையா சொல்ல முடியாது’ – ‘S’

*

‘எல்லாத்துக்கும் அழிவு உண்டு. ஆனால் Totalஆ எதுவும் அழியாது. அழிவே கிடையாது. ஒரு பேப்பரை எரிச்சிவுட்டா அது கரியாப் போவும். தண்ணிலெ கரைச்சிவுட்டா பேப்பர்கரைசலா போவும். காத்துல ஊதி விட்டியா? அணுக்களா இருக்கும்; அழியாது. அழிக்க முடியாது. Impossible.  இந்த அழிவுக்கு கூட இடம் கொடுக்காததுதான் Astral body. Atomic Bomb வெடிக்கும்போதே அது நிக்கிம். உணர்ச்சிக்கு மனுஷன் அடிமையில்லாம மூளைக்கு அடிமையா இருந்தாக்கா உணர்ச்சியோட limitationஐ விட கூட நிக்க முடியும். Astral Body சூரியன்லெ குடியிருக்க முடியும். அந்த அளவுக்கு வளர்ந்தாக்கா நெருப்பு சுட்டா சுடாது. அந்த பயிற்சிலாம் பிறகு இருக்கட்டும். லைஃபுக்கு உள்ளதை முதல்லெ பாருங்க’ – ‘S’

*

‘அந யன்மு அஃப்லல் வ அஃலல் குல்லியும் மின் குல்லி தரீக்’ – அரபியில். ‘I am grwoing better & better’க்கு ஃபரீதிடம் கேட்டபோது அவர் சொன்னது. அரபி ‘குத்பா’வை கேட்டுக்கொண்டு அவர் தலையாட்டுவதுபோல இல்லாமல் இது சரியான மொழிபெயர்ப்பாக இருக்கட்டுமாக!

*

‘Secret Symbolங்குறது பொருத்தமான பேரு. ‘D.C’ண்டு கூட வச்சிக்கலாம் . Destiny Control’

‘அல்லாஹ்வை பாக்குறது பெருசல்ல. அல்லாஹ்வோட கலக்கனும். அதுக்கு நீங்க வெற்றிகரமா வாழனும்’

‘பொறந்த தேதி நல்லாயிருக்கலாம், கெட்டுப் போயிருக்கலாம். அத மாத்த முடியும். Forceனாலே மாத்த முடியும். ஒரு சிலதுதான் மாத்த முடியாதது. பாக்கி 99% மாத்தலாம். அதனாலெ இந்த பிராக்டிஸ¤க்கு Secret Symbolங்குறதை விட Destiny Control (DC) ங்குறதுதான் Proper Name’ – ‘S’

‘ஜனங்கள்ட்டெ வெளையாடாதீங்க, விஷப்பரீட்சை! அவுலியாவையே குழப்பி வுட்டுப்புடுவானுவ!’

*

‘இதுல (பயிற்சியில்) improvement தெரியத்தெரிய நீங்க பழைய நடைமுறையெல்லாம் மாத்தக்கூடாது. எப்படி? என்னா அர்த்தம்? காசில்லாதவனுக்கு காசு வந்தவுடனே உற்சாகம் வருதுல்ல? அது வரக்கூடாது. ஆச்சரியப்படக்கூடாது. அவசரப்படக்கூடாது. எரிச்சல் படக்கூடாது. அது வந்திச்சி….reject ஆயிடும்! அதனாலெ கவனம் முழுசையும் completeஆ பயிற்சியில்தான் வச்சிக்கினுமே தவிர வரக்கூடிய ரிஸல்ட்-ஐ பாக்கக்கூடாது. வந்துக்கிட்டிக்கும். வந்தாலும் இதே மாதிரியேதான் இக்கினும். இதே மாதிரிதாண்டா என்னா அர்த்தம்? கரெக்டா பிராக்டிஸ் பண்ணனும். Fully consciousஆ இக்கினும். வரக்கூடிய நன்மையை சுவைக்கிற interestஐ விட பலமடங்கு அதிகமா பிராக்டிஸ் பன்ற interest அதிகமா இருக்கனும். அது ரொம்ப முக்கியமான பாயிண்ட். அது இல்லேண்டா என்னா ஆவுண்டா reject ஆகலாம். இல்லே, பிராக்டிஸ்ட power இறங்கினாலும் இறங்கலாம். அதனாலெ check பண்ணிக்குங்க. இதுக்கு best method என்னா? நாம ஓதும்போது, I mean, ‘ரியாலத்’ பண்ணும்போது எந்த mentality இருந்திச்சோ அதே mentalityஐ கொண்டு வரனும். அடிக்கடி ஒரு நாளைக்கு நாலுதரம் பத்துதரம் பயிற்சி பன்ற டைம் வருது.. இவ்வளவு நேரம் இக்கிதுண்டு நெனைச்சுக்கனும். எப்படி திங்கட்கிழமை காலையிலெ புர்தாஷரீ·புக்கு ஒரு வாரம் இருக்குண்டு நெனைக்கச் சொல்றேனோ அதே மாதிரி,,,இதுவும் practiceலெ சேர்ந்ததுதான்’ – ‘S’

***

08.03.1996 வெள்ளி செஷன்

4-11.04.95 கேஸட்டிலிருந்து..

‘Main  குறை , எங்கிருக்கு? Lifeலெ main part எது?’ – ‘S’

‘எண்ணத்துலெ’

‘செயலைக் கொண்டுவாங்க முதல்லெ’

‘செயல்லெ….பேச்சு!’

‘அப்ப ஒரு பக்கம் ஷேவ் பண்ணிக்கிட்டு இன்னொருபக்கம் ஷேவ் பண்ணாம இருந்தா இந்த குறை நீங்கிடும்?!’

‘… …’

‘ஒரு கையை மடக்கிவுட்டுட்டு மறுகையை நீட்டிவுட்டுக்கிட்டுப் போவலாம். கைலியை வழிச்சிக்கிட்டும் நடக்கலாம்? அப்ப எது மெயின்? நாக்கு முக்கியம்தான், இல்லேண்டு சொல்லலே. நாக்குதான்..ங்குறீங்களே! அப்ப நாக்குல மட்டும்தான் குறை இக்கிது, அதை கண்ட்ரோல் பண்ணனும். அப்படியா? அல்லது, உங்க மேஜர் குறை நாக்குல இக்கிதுண்டு அர்த்தமா?’

‘நாக்கும்தான். அப்புறம் கை.. அ..’

‘நாக்கும்தான்’டா? எத்தனை percentage மத்ததுலாம்? மத்த அசைவுகள்லெ, செயல்கள்லெ குறை இக்கிறமாதிரி தெரியலை?’

‘அசைவுகள்ளெதான் குறை இக்கிது’

‘சரி, மத்த அசைவுகள்ளெ குறைச்சலா இருக்கு, நாக்குல கூடவா இக்கிதோ? கேக்குறதை வெளங்கி பதில் சொல்லு. ‘பேபே’ண்டு முழிக்காதே, குறைபாடு எங்கிருக்கு?’

‘நல்லதா இக்கிறது கெட்டதா தெரியறதுலெ’

‘நாளைக்கி அது மறுபடியும் நல்லதா தெரிஞ்சா? ஆசையோட கல்யாணம் பண்ணுறான், வேணாண்டு தெரிஞ்சிடுச்சி. ‘தலாக்’ கொடுத்துடுறான் அப்புறம் அதே பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்கிறானே! அப்படி வந்துட்டா? அப்ப, நல்லதா இக்கிறது கெட்டதா தெரிஞ்சா மட்டும் முன்னேற்றமல்லங்குறேன். அது உங்களை நீங்க ஏமாத்திக்கிற முறையாக்கூட இருக்கலாம். மாத்தம் எந்தெந்த வகையிலெ ஏற்பட்டிருக்குண்டு சொல்லுங்க இப்ப’ – ‘S’

‘எனக்கு அவசரம் குறைஞ்சிருக்கு’

‘அவசரம் குறைஞ்சி அமைதி ஏற்பட்டிருக்கா?’

‘ஆமா’

‘அது சோம்பேறித்தனமா இருந்தா? அமைதிக்கும் சோம்பேறித்தனத்துக்கும் வித்யாசம் தெரியுமா?’

– சீடர் அவசரமாக அமைதியை விளக்குவதை எழுத எனக்கு சோம்பலாக இருக்கிறது!

‘எனக்கு ஒத்திப்போடுற குணம் முதல்லெ. இப்ப ‘செய்டா’ண்டு உடனே செஞ்சிப்புடுறது’ – இன்னொரு சீடர்.

‘செய்யிடா’ண்டும் சொல்லலாம், ‘செய் கண்ணு’ண்டும் சொல்லலாம். ஏன் ஏசுறீங்க? குறைபாடை உங்ககிட்டெ வச்சிக்கிட்டு ‘அவனை’ப்போயி ஏன் ஏசுறீங்க? நீங்க ‘அவனை’ வீணாக்கிப்புட்டீங்க, இப்ப ‘அவன்’ உங்களை கெடுத்துட்ட மாதிரி ‘அவனை’ப்போயி ஏசுறீங்களே?!’

‘அப்புறம்.. இன்னொன்னு சர்க்கார்.. ‘டக்’குண்டு கோவம் வந்துடுது எனக்கு!’

‘கோபம் தவிர்க்க முடியாதது. அது என் குணம். அத சமாளிச்சித்தான் ஆகனும், கோவம் வரத்தான் செய்யும். கோவம் இல்லேண்டா என்னெ விட்டு பிரிஞ்சி போயிடுறீங்க. அதே மாதிரி ஸ்மோக் பண்ணவும் சொல்லும். கொந்தளிச்சிக்கிட்டு வரும். என்னாலேயே முடியலே அது. நீங்கதான் அதை கண்ட்ரோல் பண்ணிக்கிடனும். என்னெட்ட உள்ள குணம் பூரா வரும். என்னோட மெயின் குணம் கோவம். அதே மாதிரி நல்ல குணமும் என்னெட்ட இருக்கு. நான் நல்லவன். எந்த தீங்கும் யாருக்கும் செய்தவனல்ல. ஆனா பயங்கரமான முன்கோபி. நியாயமில்லாம கோவமும் வராது எனக்கு. ஆன அந்த செகண்ட்ல ‘கொல்லுகொல்லு’ண்டு பண்டியடிக்கிற மாதிரி அடிப்பேன். அடிச்சி தூங்கப்போட்டு , பக்கத்துலெ உட்கார்ந்து பார்த்துக்கிட்டிருப்பேன். கோபம் வர்றது பெரிய ‘நியமத்’து. கோவம் என்பது அடக்குறதுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்குது. அது இருக்கப்போயிதானே அடக்க முடியும்? கோவம் இல்லாதவன் கழுதைலெ! ரசூலுல்லாவுக்கு கோவம் வந்து மீசை துடிச்சிருக்கு, புருவம் துடிச்சிருக்கு..முகம் கண் சிவந்திருக்கு. ஆனா பேச்சு நிதானமா வந்திச்சி.. ‘தூக்கிப்போட்டு மிதிச்சிடுவேன், குச்சுக்காரி மவனே’ண்டு சொல்ல வருது.. அதை மாத்தி , லேசா, ‘ஏம்ப்பா கோவப்படுற மாதிரி நடக்குறா? தெரியுமுலெ? ‘ இப்படி சொல்லிப்பாருங்க. அப்ப கோவத்தை mastery பண்ணுற capacity டெவலப் ஆகும். கோவம் இருக்கனும். கோவம்டா வஞ்சம் தீர்க்குறதை சொல்லலை.. கோவப்படுறது மனுஷன்ற இயற்கை. அது செக்ஸ் மாதிரி ஒரு ஃபங்சன். அதை கண்ட்ரோல் பண்ணனும். அது இல்லேண்டு சொன்னா கண்ட்ரோல் பண்ண வாய்ப்பில்லாம போயிடும், அதுக்காக நீங்க சந்தோஷப்படனும்!’

– வாய்க்கொழுப்பையும் கோபத்தையும் பேசிய அன்று இந்த கேஸட் தானாக வந்து பதில் சொல்லியது ஆச்சரியம். செஷனுக்கு ‘தேரா’விலிருந்து மூன்றரை மணிக்கு புறப்படுவதற்கு முன்னால் ஃபரீதிடம் என் கோபம் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தேன். தன் மச்சியிடம் உள்ள கடுப்பின் காரணமாக தன் முகத்தில் மலத்தைப் பூசிக் கொண்டிருக்கிற என் தங்கை என்னை நோன்புப் பெருநாளைக்கு கூப்பிடாததால் – நானும் போகாமலிருக்க – நண்பன் கண்ணுவாப்பாவின் வற்புறுத்தலுக்கிணங்கியும் ஃபரீதின் ‘அல் புகுலு லில்லா வல் ஹப்பு லில்லா’விலும் கனிந்து, யோசித்து, அன்று பகல் ‘கராமா’ போய் , தங்கையிடம் பாசமலர் சினிமாவை ஓட்டிக் காட்டிவிட்டு , இந்த முறை நூறுநாள் ஓடும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். முஸ்லீமுக்கு முஸ்லீம் மூன்று நாளைக்கு மேல் விரோதமாக இருப்பது பாவம் என்று ரசூலுல்லா சொன்னதாக தன் மனைவி சொன்னாள் என்று கண்ணுவாப்பா கூட சொன்னான். ஒரு வருடமாக பகையாக இருக்கிற ஊர்க்கார கப்பமரைக்கார் பொண்டாட்டியிடம் ‘ஈத் முபாரக்’ சொல்லாத அவன் மனைவியை நான் கிண்டல் செய்தால் கண்ணுவாப்பா கோபப்படுவான். முஸ்லீம்! அறிவுரை கூறுவதுதான் எவ்வளவு சுலபமானது! கோபம் கூடாது என்று ஃபரீது சொல்லிக் கொண்டிருக்கும்போதே நண்பன் ரஹ்மத்துல்லா பற்றி பேச்சு வந்தது. ‘ஏங்கனி இப்ப அவருக்கு ரொம்ப கஷ்டமா இக்கிமே’ என்றார். ஏன் என்றேன். ‘பொன்னையன் சேத்தகனிதான் இப்போ இல்லையே!’

புரிந்தது. கடைக்கு – ஊரில் – திடீரென ரஹமத்துல்லா லேட்டாக வருவான். முகமெல்லாம் வெலவெலத்துப் போயிருக்கும். இருந்தாலும் பேச்சில் உற்சாகம். அப்போதுதான் கல்லுக்கடைத்தெரு பக்கமாக , ஒரு காருக்குப் பின்னால் இருந்து சேத்தகனி ‘வாய் போட்டதால்’வந்த வெலவெலப்பு!

‘சில பேருக்கு சில சில வீக்னஸ். ‘வாய்’ போடுறதும்தான்… என்னமோ முடமசிரு முளைச்சிருக்கு, சுன்னியை ஊம்புனாதான் கொஞ்சநாள் சரியாவுதுங்குறங்க. ஆமா, இப்ப உமக்கு குணமாயிடுச்சா ஃபரீது?’ என்றேன்.

ஃபரீது அதற்கப்புறம் இரண்டுநாள் பேசவில்லை. கோபம்!

கேஸட்டின் தொடர்ச்சி :

‘நீ நானாக மாறும்வரை நீ என்னைச் சேர்ந்தவனல்ல’ண்டு சூஃபியாக்கள் சொல்லியிருக்காங்கண்டு சொல்வேனே…அது ஞாபகம் வந்து, ‘கரெக்ட்தான், இப்பதான் மாறிக்கிட்டு வர்றோம்’ட நெனப்பு வந்திச்சா?’ – ‘S’

*

எண்ணத்தின் வேகம் :

‘ஜமாலியா’வுலெ நான் இக்கிம்போது…. அப்ப நான் சின்னபுள்ளே… உம்மாவைத் தேடும். தங்கச்சியைத் தேடும். கூட்டாளிமார்களையெல்லாம் தேடும். நான் ரொம்ப கலகலப்பா இருப்பேன். ஆனா காசு பணம்டா எப்படிண்டா – தர்ஹா சம்பாத்தியம்தான் வாப்பாவுக்கு. ஆனா பின்னாலெ சொல்லுவாஹாலுவ.. ‘நீ ஜமாலியாவுலெ ஓதிக்கிட்டிக்கிம்போது நெறய காசு வரும்!’டு. காசு வந்தா சோறாக்குறதுக்கு மட்டும் காசை வச்சிக்கிட்டு மிச்சத்தை எனக்கு அனுப்பி வுட்டுவாஹா.. சரி, அது இருக்கட்டும், அதுக்கு முந்தி நான் அங்கே என்னா பண்ணுவேன் தெரியுமா? எனக்கு காசு தேவைண்டா யார்கிட்டேயும் கேட்கமாட்டேன். சிரிக்க மாட்டேன். கலகலப்பா இருக்கமாட்டேன். அப்படியே நடப்பேன், செய்வேன். அப்பவே எனக்குத் தெரியும், கரெக்டா பார்த்தா அடுத்தநாள் ரெஜிஸ்டர்லெ பணம் அனுப்பி வச்சிருப்பாஹா..அப்பதான் ‘எண்ணுற எண்ணத்துடைய வேகம் எவ்வளவு அதிகமா இக்கிதோ சக்சஸ் அவ்வளவுக்கவ்வளவு quickஆ வரும்’டு கண்டுபுடிச்சது! அப்பல்லாம் நான் ‘ஷெய்கு’ட ‘பைய்யத்’ வாங்கலே. அதனாலே,  நாம தன்ன மறந்து சிரிக்கிறதும் அரட்டை அடிக்கிறதும் நம்ம சக்ஸஸ் தலையில கல்லைத் தூக்கிப் போடுறதா அர்த்தம். அதான் மொதல்லெ சொல்லியிக்கிறேன், ‘சபைக்கு போங்க, சிரிச்சிக் காட்டிக்குங்க. மைய்யத் வூட்டுக்குப் போங்க, அழுது காட்டிக்குங்க. உங்களை மறந்து அழுவாதீங்க, சிரிக்காதீங்கண்டு. இதையும் சொல்லியிக்கிறேன், ‘நீங்கதான் மத்தவனை சிரிக்க வைக்கனுமே தவிர மத்தவன் சிரிப்பு காட்டினா வாய் சுருங்கிடனும்’ண்டும் சொல்லியிக்கிறேன்’ – ‘S’

*

‘Pastலெ உள்ள எண்ணம், செயல், presentஐ control பண்ணுது – First Golden Time; Presentலெ உள்ளது நாளைய…’- சீடர்

‘ஆமா நேத்து உள்ளது இன்னைக்கி கண்ட்ரோல் ஆனிச்சிண்டு சொன்னா இன்னக்கி உள்ளது நாளைக்கு வருமுல்லே? நாளைண்டு சொல்லாதீங்க. Futureண்டு சொல்லுங்க. நாளைக்காகவும் இருக்கலாம், அடுத்த அரைமணி நேரத்திற்கு பிறகாவும் இருக்கலாம். சில காரியம் நெனைச்ச உடனே நடக்கும்!’ – ‘S’

‘நெனச்ச உடனே நடக்குறது எனக்கு நெறயா ஏற்பட்டிருக்கு’ – சீடர்

‘ரூட்லெ கரெக்டா வரணும். இது கடைசி முயற்சி. இதுலெ நான் கோட்டை வுட்டேண்டு சொன்னாக்கா யார் பேர்லேயும் எனக்கு பற்று ஏற்படாது. நான் உண்டு என் வேலை உண்டுண்டு எங்கேயாவது பொய்டுவேன். திரும்பத்திரும்ப சொல்லிக்கிட்டிக்கிறேன், இது கடைசி முயற்சி’ – ‘S’

*

‘Pastலெ நீங்க செஞ்ச செயல் விளைவை உண்டாக்குனிச்சிண்டா…எண்ணுன எண்ணம் செயலை உண்டாக்குனீச்சா?’- ‘S’

‘எண்ணம்தான்’

‘அப்ப செயலாலெ ஒண்ணும் வரலே?’

‘எண்ணம் ஃபர்ஸ்ட்’

‘அப்படி சொல்லாதீங்க. செயலாலேயும் வந்திருக்குது, ஆனா செயலுக்கு காரணம் எண்ணம்தானே? அப்ப எண்ணம்தான் பின்னாலே லைஃபை மாத்துது. இதை உணருங்க’ – ‘S’

*

‘யாரை எதிர்பாக்குறோமோ , நெனைக்கிறோமோ..அவங்க எதிர்லெ வர்றாங்க’ – சீடர்

‘வராம இருக்க முடியாது. Impossible’

‘எனக்கும்தான் சர்க்கார்.. நான் நெனைச்ச உடனே அவரு கடைக்கு வந்தாரு’ – தாஹா

‘நீங்க நெனச்சதாலெ வந்தாரா, அல்லது உங்க கடைக்கு போவனும்டு வந்தாரே, அந்த நெனைப்பு அங்கே வந்திச்சா?!’

‘அவரை பாக்கனும்டு..’

‘நான் கேட்ட கேள்விய வெளங்கிங்க. நீங்க நெனைச்சிங்க. வந்தாருலெ? வந்துக்கிட்டிக்கும்போதே உங்க கடையை கற்பனை பண்ணிக்கிட்டுத்தானே வர்றாரு?’

‘நான்..’ – இழுப்பு

‘இல்லெ! சாவப் போவனும்டு மைய்யத்தாங்கொல்லைக்குப் போனாரு!?’

‘நான் நெனைச்சிக்கிட்டிக்கிறேன், கடையிலெ வந்து நுழையிறாரு’

‘நீங்க சொல்லிட்டிங்கள்ளெ? நான் என்னா சொல்றேண்டு புரிஞ்சிக்கிட்டிங்களா?’

‘இல்லே சர்க்கார்.. அவரு வூட்டுக்குப் போயிக்கிட்டிந்தாரு..போற வழியிலே திடீர்னு என் நெனைப்பு வந்து கடையிலெ..’

‘அற்புதமா , ஆச்சரியமா தெரியுதோ?’

‘அது. .உங்க விளைவுண்டு தெரியுது’ – தாஹா

‘கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க, பின்னாதீங்க வார்த்தையை. நெனைச்ச உடனே நடக்குறது, முடியாதது-ஆச்சரியம்டு தோணுதா?’

‘ஏதோ நம்ம உள்ளாற ஒரு சக்தி இருந்து நம்மை இயக்குறமாதிரி…’

‘உள்ளேண்டா எங்கே? கொட்டையிலேயா?’ – ‘S’

சிரிப்பு அலைகிறது தாழ்வாரத்தில்.

*

இறப்பு :

‘நான் இறந்த பிறகும் இருந்துகிட்டே இருப்பேன். அதுக்காக, குலை அடிச்சி பேய்ண்டு வெரட்டி வுட்டுடாதீங்க! இறந்து போன பிறகும் நான் பேசுவேன். என்னை contact வைக்கலாம். ஏன், நாங்க contact வச்சிருக்கோமுல்லெ? இருந்தாலும் நேர்ல சொல்ற ‘பவர்’ இருக்காது. ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தை வரும். ‘அதைச் செய்டா..’ தூக்கிப்போடு’.. இப்படித்தான் இக்கிம்’ – ‘S’

ஒரு சின்ன பயிற்சி :

‘நீங்க இப்ப ஒரு நிமிஷம் கண்ணை மூடி வட்டம், முக்கோணம், நாற்கோணம்…  இதெல்லாம் ஒண்ணு பச்சையாக இக்கிம், ஒண்ணு ஹூதா(Blue), இன்னொன்னு சிவப்பா.. – சுவத்துலெ, இல்லே, white screenலெ – கற்பனை பண்ணுங்க. ஏதாவது! ஒரு கோடு, வளைவான கோடு.. இப்படி கற்பனை பண்ணுங்க. மீன் ஓடுது, மீன் ஓடும்போதே ஒரு கோடு போட்டுக்கிட்டு ஓடுறதா நெனைச்சுக்குங்க. மூணு கலரு.. உங்களுக்குப் புடிச்ச கலரு.. மூணும் merge ஆவுதுலெ..அதேதான். firstலெ வர்றது Golden Circle.. மூணு தடவை ‘இஸ்மு’ சொல்லும்போது. பிறகு circleஐ வுட்டு வெளிலே வராம – நம்ம symbolலெ இக்கிதுலெ Star – அது circleலெ உள்ளே இக்கிற மாதிரி. circleன் ஓரம் ஒரு நூலளவுக்கு இடைவெளி இக்கினும், முனையிலெ ஒட்டாம. கை, கொடி, muscleக்கு பதிலா circle, star ஒரு square… circleஐ உங்க நெஞ்சுலெ form  பண்ணனும். இதை பண்ணிக்கிட்டிக்கும்போது Heart நகரும். தண்ணி குடிச்சிப்பாருங்க, தெரியும்’ – ‘S’

‘Golden Circle – Scarlet Red Star – Leaf Green Square… இந்த மூணும் மூணு State of Minds. Hope of Achievement, Health, Financial Security’. – ‘S’.  இந்த Symbolஐ நெஞ்சில் இறக்கும்போது கோடு போட்டாற்போல் ஒரு உறுத்தல் இருக்கிறதா என்று கேட்கிறார்கள் சர்க்கார்.

*

‘ரொம்ப காரியம் அப்படி அல்லது இப்படித்தான். ரெண்டே ரெண்டுதான். சில காரியம் இக்கிது பாத்திங்களா , ரெண்டுக்கும் மேலே இருக்கும். பச்சை, பச்சை அல்லாததுண்டு சொன்னா அல்லாததுங்குற வார்த்தையிலெ வெள்ளையைத் தவிர எல்லாம் அடங்கும்.வெள்ளை , கலரல்ல. வெண்ணிற ஆடைண்டு போட்டிருக்கான்லெ? colourlessness! பச்சையோ சிவப்போண்டு சொன்னா சிவப்பும் பச்சையும் அல்லாத எத்தனையோ கலர் இக்கிது. அதே மாதிரி வெற்றிக்கு எது காரணமோ, பெரும்பாலான நேரத்துலெ, அத தலைகீழா பெரட்டிப்போட்டா தோல்விக்கு காரணமா இக்கிம். சில கட்டத்துலெ – 25% – தோல்விட காரணத்தை திருப்பி வைக்கிறதோட வெற்றிக்குரிய காரணத்தையும் சேர்க்குறதுங்குற மாதிரி வரும். ‘ -‘S’

*

‘Hope of Achievement உள்ளவனின் மிக முக்கிய குணம், தனக்கு தேவைப்படாத, தன்னை அண்டிவரும் மக்களுக்கு தேவைப்படாத, தன்னுடைய குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு தேவைப்படாத , எதைப்பத்தியும் நினைக்க மாட்டான், இது lifeஆ வேதாந்தமா அல்லது மார்க்கமா?’

‘மார்க்கமும் லைஃபும்’ – சீடர்

‘ஆதாரம் காட்ட முடியுமா இதுக்கு, குர்ஆன்லேர்ந்து?’

‘… …. … ‘

‘மூமின் என்பவன் தனக்கு தேவைப்படாத எந்த காரியத்திலும் அக்கறை காட்டமாட்டான்!’ – ‘S’ (குரான் ஆதாரம்)

*

இறைச்சியும் கீரையும் :

Symbolஐ கற்பனை பண்ணுவதில் ஒரு சீடருக்கு சிரமம். கற்பனை வருகிறது, ஆனால் Symbol வரவில்லை என்கிறார்.

‘அது சரி, ப்ராக்டிஸ் செய்ய வருதா இல்லையா?’ – ‘S’

‘ம்…வருது’

‘இப்ப நமக்கு சிலேட்டுப் பலகையிலெ எழுதுனமாதிரி பென்சிலாலெ எழுதவரலேண்டு சொன்னா, சிலேட்டுலெ பழகிட்டீங்க. symbolic science தெரியலே. அதுலெ ஈடுபாடு இல்லே, அவ்வளவுதான். symbolஐ ஜோப்புலெ வச்சிருக்கீங்க தவிர அதோட மகிமை என்னாண்டு தெரியலே..ப்ராக்டிஸ் கரெக்டா வந்தாப்போதும் இப்ப. ஏன்னா, சில உயர்வான சாமான் இக்கிது பாத்தியா? இறைச்சியை விட உயர்வானது கீரை. இறைச்சிதான் நல்லா இக்கிம்! இப்படி ஒரு காரணமாகவும் இருக்கலாம். ப்ராக்டிஸ் செய்யிற நேரம் வந்தவுடனே செய்யனுமேண்டு உற்சாகம் வருதா?’

‘கடமை மாதிரி செய்யிறேன் சர்க்கார்’

‘கடமையா?! அப்படி சொல்லாதீங்க. கடமையை ரொம்ப பேரு (வெறும்) கடனாகத்தான் கழிக்கிறாங்க. ஹொத்துவாப்பள்ளிலெ தொழுவுறாங்களே.. அதே மாதிரி. அந்த மீனிங்லெ சொன்னா தப்பு. அதாவது ‘செய்யனும்’. ‘செய்யனுமே….’ண்டு தோணுதா?’

‘ஆமா..’

‘செய்யனுமெ..செய்யவேண்டி இக்கிதே..இது ஒரு தொல்லையா பொய்டுச்சே.. அப்படியா?’

தாஹாவின் தலை மறுக்கிறது பலமாக.

‘ம்..அப்படி நெனைச்சீங்கண்டா புரயோஜனப்படாது. மேலே போவமுடியாது. தோத்துட்டீங்கண்டு அர்த்தம்! – ‘S’

**

13.03.1996

ஆபிதீன் பூமிக்கு வந்த தேதி 13.03.1958. 13ஆம் தேதி காலத்தின் குறியை விட்டு வெளிவரும்போது சர்க்காரின் கேஸட்டைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். துபாயின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய மழை வந்தது கிடையாது. புல் நனைந்தால் மழை என்று சொல்கிற காலம் மலையேறிவிட்டது. மில்லியன்களை முழுங்கும் உரங்களும் மரங்களும் தன் சக்தியை காட்ட ஆரம்பித்துவிட்டன. இதன் சக்தி இருக்கட்டும், என் சக்தி ‘தேரா’வோடு நின்று விட்டது. சாயங்காலம் வரும் கம்பெனி Vanக்கு காத்துக் கொண்டிருந்தால் அந்த பட்டான் டிரைவர் நிறுத்தவே இல்லை.’ஆஜ்..சுட்டி ஹை..’ என்று என்னைப் பார்த்து கத்திக்கொண்டே மறைந்தான் குஷியில். டாக்ஸி கிடைக்க வழியில்லை. கடைசி பஸ்ஸில் புறப்பட்டு வந்தாலும் அவீரில் என் அறையில் நுழைய முடியாத அளவு தண்ணி இருக்கும். இரவு தம்பி ஹலால்தீன் ரூமிலேயே தங்கினேன். 12 மணிக்கு சர்க்காரை நினைத்துக்கொண்டு.. காலையில் ஆஃபிஸுக்கு வந்துவிட்டு பகல் ‘தேரா’ போகும்போது அங்கே முயற்சித்தேன் டெலிஃபோனில். கடைசிமுறையாக லைன் கிடைத்தது. சர்க்கார் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்! இரவு ஆஃபீஸ் முடிந்து அனைவரும் போனவுடன் ஆஃபீஸ் ஃபேக்ஸ் ஃபோனை உபயோகித்து அந்த குரலை அடைந்தேன்.

‘சர்க்கார்.. நல்லாயிருக்கீங்களா, உடம்புலாம் தேவலையா?’

‘ம்.. நீங்க எப்படி இருக்கிங்க?’

‘நல்லாயிருக்கேன் சர்க்கார். இன்னக்கி எனக்கு பொறந்த நாளு, கல்யாண நாளும்தான். ஆசி வேணும்டுதான்’

‘பரக்கத்தா இரிங்க’

‘சந்தோஷம் சர்க்கார்.. உங்க குரல் கேட்காம தேட்டமா இந்திச்சி வேற. சரி, அப்புறமா நான் ஃபோன் பண்ணுறேன்’

‘ம்’

பிறந்தேன்.

(தொடரும்)

 

குறிப்புகள் :

ரியாலத் – பயிற்சி

தப்ரூக் – பிரார்த்தனைக்கு பின் பகிர்ந்தளிக்கப்படும் இனிப்பு

வஹி – (நபிகளுக்கு வரும்) இறைச்செய்தி

ஆயத் – இறை வசனம்

முஸீபத் – பீடை, சங்கடம்

தலாக் – விவாகரத்து

நியமத் – அருள்

ஜமாலியா – வேலூர் மத்ரஸாவின் பெயர்

பைய்யத் – குருவிடமிருந்து அனுமதி

இஸ்மு – மந்திரம்

ஹொத்துவாப்பள்ளி – தொழுகைப் பள்ளி (மஸ்ஜித்)

பரக்கத் -சுபிட்சம்

2 பின்னூட்டங்கள்

 1. தாஜ்... said,

  05/08/2017 இல் 20:33

  சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள்:

  # சொல்லி மாளாது.
  அத்தனைக்கு
  ரசித்து – கிரகித்துக் கொண்டிருக்கிறேன்.

  # நிஜம் ஆள்வதுதான் எழுத்தின் ரசனை என்பார்கள்.
  இங்கே அது கங்கையென விசாலமாய் பாய்கிறது.

  • 06/08/2017 இல் 09:15

   நன்றி தாஜ்.. மவுத் ஞாபகம் நிறைய வருவதாலும், டைரிய போடுங்க நாநா என்று சாதிக் பலதடவை சொன்னதாலும்தான் இத்தனைநாள் பாதுகாத்த டைரியை வெளிக்கொண்டுவருகிறேன். எல்லாருக்கும் இது பயன்படாது என்று தெரியும், இருந்தாலும் இதுவும் என் வாழ்க்கை. எல்லாப் புகழும் ஹஜ்ரத்துக்கே.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s