பெருமையின் பிரிவுகள் – இமாம் கஜ்ஜாலி

அறிஞர் குழு அறிவை வைத்துப் பெருமையடிப்பது போல், பக்தர் குழு பக்தியை வைத்துப் பெருமையடிக்கிறது ! – இமாம் கஸ்ஸாலி (ரஹ்)

*

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் , Sufi Islam அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் (ஷரியத்,தரீக்கத்)
*

நூல் : சிந்தனையின் சிறப்பு
மூலம் : ‘ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்‘ ‘இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள்.
தமிழ் விரிவுரை : எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி

**
அறிஞர்களும் பக்தர்களும் தெரிந்தோ தெரியாமலோ பெருமையடிக்கிறார்கள் என்று நான் குறிப்பிட்டேன். இப்போது, அவர்களின் பெருமையுணர்வு எத்தனை பிரிவுகளாகப் பிரிகிறது என்று பார்ப்போம்.

முதற் பிரிவு: இந்தப் பிரிவிலுள்ளவர்கள் நீங்காத பெருமையுடையவர்கள். இந்த உணர்வு மனப்பரப்பில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. பெருமையான எண்ணமும்” சிந்தனையும் இவர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கின்றன. என்றாலும் இவர்கள் அவற்றை வெளியில் காட்டிக் கொள்வதில்லை. சில வேளைகளில் அவர்கள் பணிவுள்ளவர்கள் செய்யும் வேலைகளைச் செய்கிறார்கள்; பணிந்து நடப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். தம்மை விட மேலானவன் என்று கருதப்படும் ஒருவனைப் பின்பற்றுகிறார்கள்.
இவர்களின் உள்ளப் பரப்பில் பெருமை மரம் வேரூன்றி நிற்கிறது என்றாலும் அதன் கிளைகள் துண்டிக்கப் படுகின்றன. எனவே இவர்கள் பகிரங்கமாகப் பெருமையடிப்பதில்லை.

இரண்டாம் பிரிவு: இந்தப் பிரிவில் கட்டுப்பட்டவர்கள் தம்முடைய பெருமையுணர்வைச் செயலில் காட்டுகிறார்கள். எண்ணத்தில் மட்டுமின்றி, சொல்லிலும் செயலிலும் இந்தப் பெருமை பிரதிபலிக்கிறது. இவர்கள் நாலு பேருக்கு மத்தியில் அர்த்தமில்லாத பல வேலைகளைச் செய்கிறார்கள். புன்னகை பூப்பதும் இனிமையாகப் பேசுவதும் அவர்கள் வரவேற்காதவை. புன்னகை பூத்தால் தம் கண்ணியம் குறைந்து விடுமாம்! இனிமையாகப் பேசினால் தம் அந்தஸ்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமாம்! அறியாமை! பெருமானாரை விட அந்தஸ்திலும் அறிவிலும் பக்தியிலும் சிறந்தவர் யாரேனும் இருக்க முடியுமா? ஆனால் அவர்கள் இப்படி நடக்கவில்லையே! அவர்கள் புன்னகையோடு பழகினார்கள்; இனிமையோடு உரையாடினார்கள். எனவே இவர்கள் முதற் பிரிவினரை விடத் தாழ்ந்தவர்கள்.

அறிஞர்கள் பெருமைக்குரியவர்கள் தான்; இதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் பெற்றிருக்கும் அறிவைப் பொறுத்து அவர்களின் சிறப்பு பெருகுகிறது. அவர்கள் தம்மைப் பற்றி அதிகமாக எண்ணாமலிருந்தால் இறைவனிடம் அவர்களின் பெருமை உயரக்கூடும். ஆனால் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் உரையாடும் முறையையும் பார்க்கும் போது நம்மால் வேதனைப் படாமல் இருக்க முடியவில்லை. அறிவைச் சுமந்த அவர்கள் எதற்காக இந்த குப்பையைச் சுமக்க வேண்டும்?

அகிலத்தை அளந்து பார்க்கும் திறன் படைத்த அவர்கள் யாருக்காக அருவருப்பை வாரிக் கட்டிக் கொள்ள வேண்டும்? “என்னைப் போல் இந்தத் துறையில் அல்லும் பகலும் ஈடுபடுகிறவர்கள் யார்?” என்று அவர்கள் கேட்கிறார்கள். “என் ஆயுளில் பெரும்பகுதியைக் கல்விக்கும் சிந்தனைக்கும் செலவிட்டு விட்டேன். மார்க்கத்தின் மர்மங்களையெல்லாம் நான் கரைத்துக் குடித்திருக்கிறேன்…” என்று வெட்கமின்றிக் கூறுகிறார்கள். இதுபோன்ற விவரங்களை வெளியிடும் போது உண்மையான அறிஞன் நிச்சயம் வெட்கப்படுவான்.

மற்றவர்களின் கருத்திலும் பேச்சிலும் தவறு கண்டு பிடித்து அதைப் பலருக்கு மத்தியில் அவர்கள் கூறுகிறார்கள். இதில் அவர்கள் காணும் இன்பம் எல்லையற்றது….

அவர்கள் ஒரு விவரத்தை நினைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். சிறிதளவு பெருமையுணர்வு கொண்டவனும் சுவனத்தின் வாடையை அனுபவிக்க முடியாது என்னும் பெருமானார் கருத்தை இவர்கள் உணர்ந்துதான் இருப்பார்கள். பெருமைக்கு மறுப்புத் தெரிவிக்கும் திருக்குர் ஆன்வசனங்களையும் இவர்கள் பார்த்துத்தான் இருப்பார்கள். அறவழி நடந்த முன்னோரின் பொன்னான வாழ்வையும் இவர்கள் உணர்ந்துதான் இருப்பார்கள். இவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு எதிர்திசையில் நடக்கும் இவர்கள் ஆத்மீக வெற்றியை எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் நமக்குத் தெரியவில்லை.

மூன்றாம் பிரிவு: குலத்தையும் கோத்திரத்தையும் வைத்துச் சிலர் பெருமையடிக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன் பெருமானார் அறுத்தெறிந்த குல வேற்று மையை இப்போது இவர்கள் புத்துயிர் கொடுத்து எழுப்புகிறார்கள். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உண்மையையும், கரிய நிறம் படைத்தவன் வெண்ணிறம் படைத்தவனுக்குத் தாழ்ந்தவனல்ல என்ற தத்துவத்தையும் இவர்கள் சுக்குநூறாக உடைத்தெறிகிறார்கள். கரிய நிறம் படைத்த பிலாலுடன் வெள்ளி நிறம் படைத்த பெருமானார் கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை இவர்கள் உணரவில்லையோ என்னவோ!

“அபூதர்! வெண்மேனி பெற்றவன் கரியமேனி பெற்றவனை விட உயர்ந்தவனல்ல!” என்று பெருமானார் குறிப்பிட்டிருக்கிறார்கள். இங்கு நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். நிறம் என்பது சூழலால் ஏற்படும் ஒன்று. அது எந்த விதத்திலும் சிறப்புக்குக் காரணமாகாது. உண்மையான சிறப்பு, அல்லது இழிவு மனத்திலிருக்கிறது. அதுவே மனிதனின் சிறப்பை உயர்த்துகிறது; அதுவே அவன் கண்ணியத்தைக் காற்றில் பறக்க விடுகிறது.

நான்காம் பிரிவு: இன்னும் சிலர் அழகை வைத்துப் பெருமையடிக்கிறார்கள். இந்தத் துறையில் ஆண்களை விடப் பெண்களே பெரிதும் முன்னேறியிருக்கிறார்கள் என்று நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன். இந்த அழகுணர்ச்சியின் அடிப்படையில் உருவாகும் உரையாடல்கள் மற்றவர்களின் மர்மங்களைச் சந்திக்குக் கொண்டு வருகின்றன.

இந்த ஆபத்தில் அன்னை ஆயிஷாவே சிக்கிக் கொண்டி ருக்கிறார். பெருமானாரிடம் ஒரு பெண் வந்தாள். அன்னை ஆயிஷா தம் கையால் ‘ அவள் குட்டையாக இருக்கிறாள்’ என்று சைகை செய்தார். உடனே பெருமானார் கண்டித்தார்கள். “நீ புறம் பேசி விட்டாய்!” என்று! இந்தச் சம்பவத் துணுக்கு ‘புறம் பேசாதே!’ எனும் நூலில் இடம் பெற்றிருக்கிறது.

ஐந்தாம் பிரிவு: பொருளை வைத்து வேறு சிலர் பெருமையடிக்கிறார்கள். அரசர்கள், வர்த்தகர்கள் முதலியோர் இந்தப் பிரிவில் சேருகிறார்கள். அரசர்கள் தம்மிடமுள்ள ‘கஜானா’வை வைத்துப் பெருமையடிக்கும் போது, வணிகர்கள் தம்மிடமுள்ள சரக்குகளை வைத்துப் பெருமையடிக் கிறார்கள். தாம் அணியும் துணிமணிகளை வைத்துப் பெருமையடிப்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் தனித்து விளங்கும் எண்ணம் படைத்தவர்கள். ஏழைகளையும் வழிப்போக்கர்களையும் கண்டால் இவர்களுக்குப் பிடிக்காது. ஏனெனில் அவர்களிடம் ‘கஜனா’வுமில்லை; சரக்குமில்லை; உயர்ந்த துணிமணிகளுமில்லை. கிழிந்த சட்டையும் குழிவிழுந்த கண்களும் காய்ந்து போன உதடுகளுமாகக் காட்சியளிக்கும் ஏழையை அவர்கள் இழிவுக்கண் கொண்டு பார்ப்பார்கள்; இரக்கம் காட்ட மாட்டார்கள். “பிச்சைக்காரப் பயல்! நான் எண்ணினால் உன்னைப் போன்ற மனிதனை விலை கொடுத்து வாங்கி விடுவேன்!” என்று அனல் தெறிக்கப்
பேசுவார்கள்.

ஆ! என்ன பேச்சு இது! மனிதனை மனிதன் விலை கொடுத்து வாங்குவதா? பெருமானார் ஒழித்துக் கட்டிய மனித விற்பனைக்கு உயிர் கொடுப்பதா? இல்லை. விலை கொடுத்து வாங்குவது அவர்களின் எண்ணமல்ல. தம்மை உயர்வாகவும் ஏழையைத் தாழ்வாகவும் மதிக்கும் போது இத்தகைய பேச்சு வெளிவந்து விடுகிறது. அவ்வளவுதான்!

இந்தப் பெருமைக்காரர்கள் சில பொன்மொழிகளை அடிக்கடி உலகில் இறைக்கிறார்கள். உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போமா?

“போ வெளியே! உன் கால்பட்ட இடத்தை ‘சல வாத்து’ சொல்லிக் கழுவ வேண்டும்!”

புனிதத்தன்மை என்பது செல்வர்களுக்கு மட்டுமே உரித்தானதா? ஏழை என்ற ஒரே காரணத்தால் அவனது புனிதத்தன்மை மறைந்து போய் விடுமா? உலகை மாற்றிய உத்தமர்களில் பெரும்பாலோர் ஏழைகளாகத் தானே தம் வாழ்வுப் பயணத்தைத் துவக்கினார்கள்? “ஏழைமை என்பது எனக்குப் பெருமை கொடுக்கிறது” என்று பெருமானாரே கூறியிருக்கிறார்களே!

இது இரண்டாம் பொன்மொழி: “உன்னை யார் மதிக்கிறார்கள்? நீ ஓர் ஆண்டு முழுவதும் சம்பாதிக்கும் தொகை, எனக்கு ஒரே ஒரு நாளைக்குப் போதாது!”

சிக்கனத்தின் சிறப்பை உணராததால் ஏற்படும் வேற்றுமை இது. விரயம் செய்கிறவர்களை மார்க்கம் எதிர்க்கிறது என்னும் உண்மை இவர்களுக்குத் தெரியாதா?

”நீ ஓர் ஏழை; பிச்சைக்காரன்; போதிய வருமானம் இல்லாதவன். என்னிடம் வந்து விவாதம் செய்கிறாயே, என்ன துணிச்சல் உனக்கு!”

செல்வமும் வறுமையும் இரண்டு சூழல்கள். இவ்விரண்டிலும் நன்மையும் தீமையும் கலந்திருக்கின்றன. ஆத்மீகத்தில் முன்னேறிய ஏழைகளைப் போல், ஆத்மீகத்தில் முன்னேறிய பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஆத்மீகத்திற்கு ஒளி கொடுத்த பெருந்தகைகளில் எத்தனையோ செல்வர்கள் தோன்றியிருக்கிறார்கள். நபிமார்கள், நபித் தோழர்கள் சட்ட நிபுணர்கள், வேத வியாக்கியானிகள் முதலியோரில் எத்தனையோ செல்வர்கள் காணப் படுகிறார்கள்.

எனவே இவ்விரு சூழல்களில் நம்மால் எதையும் இழித்துக் கூற முடியாது. ஒன்றை ஒளி என்றால், மற்றொன்றை இருள் என்று சொல்ல வேண்டும். ஒளி மட்டுமின்றி, இருளும் மனித வாழ்வுக்குப் பயன்படத்தான் செய்கிறது.

செல்வம் பெற்றவர்கள் மட்டும் பெருமையடிப்பதற்கு என்ன இருக்கிறது? அவர்கள்தம் செல்வத்தை மார்க்கத்தின் கட்டளைப்படி புனித வழிக்கும் ஆக்க வேலைக்கும் செலவிட்டால் அவர்கள் பெருமைக்குரியவர்கள். மக்கள் அவர்களைப் பெருமைப்படுத்துவார்கள். தமக்குத் தாமாகப் பெருமையடித்துக் கொள்வதும் ஏழைகளை இழித்துரைப்பதும் அறிவுடைமையல்ல. ஏனெனில் இவ் விரண்டும் நீடித்து நிற்பவையல்ல. இந்த மண்ணகத்தில் ஏழைகள் பணக்காரர்களாகவதும் பணக்காரர்கள் ஏழைகளாவதும் சாதாரண சம்பவங்கள்.

எனவே, இப்போது பெருமையடிப்பவர்கள் நாளைக்கு முடிதுறக்கலாம்; அல்லது செல்வம் இழக்கலாம். இன்று வாடி வதங்கி நிற்கும் அந்த வறியவன் நாளை அரசனா கலாம்; அல்லது பணக்காரனாகலாம்; இதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இறைவனின் ஆற்றலைப் பற்றி நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை
என்று பொருள்.

ஆறாம் பிரிவு: இன்னும் சில வேளைகளில் வலிமையை வைத்துப் பெருமையடிக்கப் படுகிறது. பெரும்பான்மை இந்தப் பெருமை பலவீனர்களிடம் தான் காட்டப்படுகிறது.

இன்று மட்டுமின்றி, உலகம் தோன்றிய நாளிலிருந்து, அதில் மனிதன் வாழத் தொடுத்த நேரத்திலிருந்து இறைவன் எத்தனையோ செல்வங்களைக் கொடுத்திருக்கிறான். வற்றிப் போகாத அவனுடைய அருட் கொடைக்கு நம்மால் எப்படி வரம்பு காட்ட முடியும்! மலையைக் குடைந்து மனை அமைத்து வாழ்ந்த வலிமை வீரர்கள் பலர் இந்த மண்ணில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என்ன ஆனார்கள்? இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டார்கள். அவர்களின் வலிமை அழிந்து போய் விட்டது. பெருமைக்காரர்களே! தயவு செய்துஇதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். நீங்கள் பலவீனத்துடன் பிறந்தீர்கள். ஒரு காலத்தில் அந்தப் பலவீனத்துடனேயே இறப்பீர்கள் அந்தக் கடைசிக் கட்டத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

ஏழாம் பிரிவு: மாணவர்களின் எண்ணிக்கை, உறவினர்களின் எண்ணிக்கை முதலியவற்றைச் சிலர் பெருமையடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். படை பலத்தை வைத்துப் பெருமையடிக்கும் அரசர்களும் இருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால், இறைவனின் அருட் கொடைகளை வைத்துத்தான் அனைவரும் பெருமையடிக்கிறார்கள். சிறப்பம்சத்தை வைத்துப் பெருமையடிப்பது சாதாரணச் செயல். சிறப்பம்சம் என்று எண்ணிக் கொண்டு சிலர் எதை எதையோ வைத்துப் பெருமையடிக்கிறார்கள். குடிகாரர்கள் சிலர் தம்முடைய அனுபவம் பற்றி விரிவாகப் பேசுவதை நீங்கள் கேட்டதில்லையா?

குடிப்பது இகழப்படுகிறது; அது சிறப்பம்சமல்ல. என்றாலும் குடிக்கிறவர்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். போதையுடன் வந்திருக்கும் அவர்கள் தம் நிலையைப் பகிரங்கப்படுத்துவதில் இன்பமடைகிறார்கள். ஏனெனில் மதுபானம் உபயோகிப்பதை அவர்கள் ஒரு சாதனை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவனே! உன்னிடமிருந்து உதவியையும் அன்பையும் எதிர்பார்க்கிறோம். நீ அனைத்தையும் படைத்தவன்; அனைத்தையும் ஆள்பவன்; அனைத்தையும் அழிப்பவன். உன் சக்தி வரம்பிட முடியாதது. உன் படைப்புகள் அனைத்தையும் உன் ஆற்றலைப் பறை சாற்றுகின்றன. நீ சர்வ வலிமை யுள்ளவன்!

*

தொடர்புடைய பதிவு : ஆறுதல் தரும் ஆன்மீகப் பொக்கிஷம் (pdf)

துஆ (பிரார்த்தனை)

நன்றி : ஆசிப் மீரான்

*
Zainulahbudeen Hussain · Dua – Asif Meeran – Ramadan 2023

Moko Kahan – Sherdil: The Pilibhit Saga

Singer – Soumya Murshidabadi, Lyrics – Saint Kabir
Thanks : T-Series & SenShe

உளவியல் தெரிந்தவர் முல்லா – சஃபி

நண்பர் முஹம்மது சஃபியின் முகநூல் பதிவிலிருந்து, நன்றியுடன்…

**

கொஞ்சம் உளவியல் தெரிந்தவர் முல்லா – சஃபி

மனமானது தாங்கமுடியாத கனமான, கசப்பான, நெருக்கடியான சம்பவங்களைச் சந்திக்கும் போது, சில தற்காப்பு உத்திகளைப் பயன்படுத்தி, தனக்குத்தானே அமைதி தேடிக்கொள்ளும். சமநிலையில் வைத்துக் கொள்ளும். அந்தத் தற்காப்பு உத்திகள், உளவியலில் ‘Defense Mechanisms‘ என்ற கருத்தாக்கத்தின் கீழ் சொல்லித் தரப்படும். அந்த உத்திகளில்ஆரோக்கியமானவையும் உண்டு. ஆரோக்கியமற்றவைகளும் உண்டு.
நான் இளங்கலை உளவியல் படிக்கும்போது தனிமனித அளவில் உருவாகும் அந்தத் தற்காப்பு உத்திகளை, சமூக அளவில் எதிரியைச் சாமாளிப்பதற்காக ஒரு நாடு உருவாக்கி வைத்திருக்கும் பாதுகாப்புப் படைகளோடு சம்பந்தப்படுத்தி ஒரு பேராசிரியர் பேசுவார்.
‘ஒரு நாட்டுக்கான ‘எதிரி‘ உண்மையானதாக இருக்கலாம். அல்லது கற்பனையானதாக இருக்கலாம். பாதிநேரம் கற்பனையானதாகவே இருக்கும். மக்கள் நலனைக் கணக்கிலெடுக்காமல். ராணுவத் தளவாடங்களுக்காக அதிகச் செலவிட்டு குடிமக்களை வறுமைக்குள்ளாக்கி நாட்டைச் சீரழித்து குட்டிச்சுவராகுக்குவது சமூக அளவில் ஆரோக்கியமற்ற பாதுகாப்பு உத்தி. அதேபோல தனிமனித அளவில் அதீத சுயமோகமும், எதார்தத்தில் கால்பாவாமல் அதீத கனவில் கற்பனையில் சிக்கிக்கொள்ளுவதும் மனதை வறுமையாக்கிவிடும். தடம்புரட்டி பிறழ்வாக்கிவிடும். நகைச்சுவை மனதின் சுவாதீனத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஆரோக்கியமான முதிர்ச்சியான உத்தி‘ என்று தனிமனிதனையும் சமூகத்தையும் தொடர்புபடுத்தி அழகாக விளக்கி வகுப்பெடுப்பார் அப்பேராசிரியர்.
நகைச்சுவைக்கு தனிமனித அளவிலும், சமூக அளவிலும் பயன்பாடுண்டு. நகைக்சுவையின் பிரதிநிதியாக கதைகளில் முல்லா நஸ்ருத்தீன் நிற்கிறார். லேசில் அணுகமுடியாத கடும் கர்வியாக நடந்து கொள்ளும் முல்லா, பெரும்பாலான கதைகளில் மனிதனுக்கு சுலபத்தில் வாய்க்காத அரிதான சுய எள்ளலுக்கு தன்னையே உட்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். சிலகதைகளில் இறுகிப்போன மதிப்பீடுகளுக்கு எதிராக நிற்கிறார்.
இக்கதைகளில் முல்லா எப்படியெல்லாம் பல்டி அடித்து சேட்டைகள் செய்து தனது ‘சுயத்தைக்‘ காப்பாற்றிக் கொள்கிறார் பாருங்கள்.
முதல் கதையில் முல்லா கற்றதை இடம் பொருள் ஏவல் அறிந்து, அவ்வப்போது கழற்றி வைக்கத் தெரியாமல் அவதிப்படுகிறார். முதல் முட்டைக்கதையில் முல்லா கூமுட்டையாக இருக்கிறார். இரண்டாவது முட்டைக் கதையில் வெற்றியைக் கொக்கரிக்கும் சேவலாக இருக்கிறார். கம்பியை கடன்கொடுக்க விரும்பாத கதையில் முல்லா முல்லாவாக நிற்கிறார். வெள்ளிக்கிழமையில், வெள்ளி அல்லாத நாட்களில் முல்லா என்ன செய்து கொண்டிருப்பார் என நம்மை யோசிக்க வைக்கிறார். கடைசித் துணுக்கில் முல்லாவின் கற்பனை எதிரி புலி..

1.கற்றதைக் கைவிடு
சுல்தான் தங்கள் பகுதிக்கு விஜயம் செய்திருப்பதை அறிந்த முக்கியஸ்தர்கள் பலர் அவரைப் பார்க்க தகுந்த பரிசுகளுடன் சென்றனர்.
அந்தக் கூட்டத்தில் முல்லா நஸ்ருத்தீனும் இருந்தார். அவருக்கு அரசவை நடைமுறைகள் எதுவும் சரிவரப் புரிபடவில்லை. ஒரு பிரதானி அவசரம் அவசரமாக முல்லாவுக்கு சுல்தான் வழமையாக என்னவெல்லாம் விசாரிப்பார் என்று சுருக்கமாகச் சொல்லிக்கொடுத்தார்
‘எவ்வளவு நாள் இங்கிருக்கிறீர்கள்? முல்லாவாக எவ்வளவு நாள் படித்தீர்கள்? போடப்படும் வரிகள் சம்பந்தப்பட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்? பொதுவாக மக்கள் திருப்தியாக உள்ளார்களா? என்ற கேள்விகளைச் சுல்தான் கேட்பார் என்று முல்லாவுக்குச் சொல்லப்பட்டது.
முல்லாவும் கேள்விகளுக்கான பதில்களை நன்றாகக் குருட்டு மனனம் செய்து கொண்டார்.
ஆனால் கேள்விகள் முறைமை மாறி வேறாரு வரிசைப்படி கேட்கப்பட்டன.
‘எவ்வளவு காலம் படித்தீர்கள்?‘
‘முப்பத்தைந்து வருஷம்“
அப்படியானால் உங்களது வயது என்ன?“
‘பன்னிரண்டு வருடம்’‘
‘அப்படி இருக்கவே முடியாது ! நம்மில் யார் பைத்தியம்?‘ என்று சுல்தான் கோபத்தில் கர்ஜித்தார்.
‘நாமிருவரும்தான்…மேன்மை தங்கிய சுல்தானே‘ என்றார் முல்லா.
‘என்னைப் பைத்தியம் என்று சொல்கிறாயா? உன்னை மாதிரியே?‘ என்று கோபம் குறையாமல் சுல்தான் தொடர்ந்தார்.
‘நிச்சயமாக நாம் பைத்தியங்கள்தான். ஆனால், வேறொரு வரிசையில் மேன்மை தங்கிய மாண்புமிகு சுல்தானே !‘ என்று மரியாதை குறையாமல் சொன்னார் முல்லா.

2. என்னவென்று யூகி?
ஒரு கோமாளி முல்லாவைப் பார்த்தான். அவன் பையில் ஒரு முட்டையை வைத்திருந்தான். அப்போது கோமாளி இருந்த பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார்.
கோமாளி முல்லாவிடம்‘ முல்லா, நீங்கள் யூகிப்பதில் வல்லவரா?‘ என்றான்.
‘ரொம்ப மோசமில்லை“ என்று கேள்விக்குப் பதில் சொன்னார் முல்லா.
‘அப்படியானால் என் பையில் என்ன இருக்கிறது என்று சொல்லுங்கள்?“ என்றான் கோமாளி.
‘ஒரு துப்புக் கொடுங்களேன். சொல்கிறேன்‘ என்று கேட்டார் முல்லா.
‘முட்டை வடிவத்திலிருக்கும். அதனுள்ளே மஞ்சளும் வெள்ளையும் இருக்கும். முட்டை மாதிரி இருக்கும்‘ என்று கிட்டத்தட்ட முட்டையின் எல்லா அடையாளங்களையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டான் கோமாளி.
‘அப்படியானால் அது நன்றாகக் கடித்துத் தின்னக்கூடிய, இனிப்பான தின்பண்டமாகத்தான் இருக்கும்‘ என்று கேள்வி வந்த வேகத்தியே பதில் சொன்னார் முல்லா.

3.முட்டைகள்
முல்லா நஸ்ருத்தீன் தனது தேஜஸைக் கூட்டிக் கொள்ள துருக்கி பாணியிலைமைந்த ஒரு குளிப்பிடத்திற்கு அடிக்கடிச் செல்வார். ஒரு நாள் முல்லா குளிக்க போனபோது, அங்கே சில விடலைப் பையன்கள் முட்டைகளுடன் இருந்தனர்.
இளைஞர்கள் இருந்த நீராவிக் குளியலறைக்கு முல்லா வந்தவுடன் அவரைச் சீண்டிப் பார்க்கும் நோக்கத்துடன் ,‘ நம்மை கோழியாகக் கற்பனை பண்ணிக் கொள்வோம். நம்மால் முட்டை இட முடியுமா?‘ என்று முயற்சித்துப் பார்ப்போம். அப்படி முட்டை போட முடியாதவர்கள் யாரோ குளியலுக்கான காசை அவர் எல்லோர்க்கும் மொத்தமாகச் சேர்த்து தரவேண்டும்‘ என்று அந்த இளைஞர்கள் சொன்னார்கள்.
முல்லாவும் அதற்கு ஓத்துக் கொண்டார்.
அந்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் முக்கிமுக்கி, சிறு முனகல் சத்தத்திற்குப் பிறகு, தன் பின்னாலிருந்து ஒரு முட்டையை எடுத்து அது நன்றாகத் தெரியும்படி உயர்த்திக் காண்பித்தார்கள்.
இளைஞர்கள் குறும்புடன் நஸ்ருத்தீன் பக்கமாகத் திரும்பி அவருடைய முட்டையைக் கேட்டனர்.
‘பல கோழிகளுக்கு மத்தியில், ஒரு சேவல் கூட இருக்காதா, என்ன?‘ என்று அவர்களிடம் பதில் கேள்வி கேட்டார் முல்லா.

4.ரொம்பக் கஷ்டமில்லை.
பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் துணி காயப்போடும் கம்பியை இரவல் கேட்டார்.
‘மன்னிக்கவும். நான் அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதில் மாவு உலர்த்திக் கொண்டிருக்கிறேன்‘ என்றார் முல்லா.
‘உலகத்தில் யாராவது கொடிக்கம்பியில் மாவைக் காயப்போடுவார்களா?‘ என்று இரவல் கேட்டவர் திருப்பிக்கேட்டார்.
‘ஓசியில் கொடுக்க வேண்டாமென்று நினைக்கும் போது, துணி உலர்த்தும் கம்பியில் மாவை உலர்த்துவதென்பது ரொம்பக் கஷ்டமான காரியமாக இருக்காது‘ என்று பதில் சொன்னார் முல்லா.

5. வெள்ளிக்கிழமை
முல்லா நஸ்ருத்தீனும் அவர் மனைவியும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவுதோறும் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதெனத் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர். முல்லாவின் மனைவிக்கு அந்த உடன்பாடு பெரிதும் திருப்தியளித்தது.
முல்லா தன் மனைவியைப் பார்த்து, ‘அந்த உடன்பாட்டைக் குறிப்பதற்கு நமக்கிடையில் ஒரு சமிக்ஞையை உருவாக்கிக் கொள்வோம். அந்த சமிக்ஞையைப் பார்க்கும்போது என் கடமையைச் செய்ய நேரம் நெருங்குகிறது என்பதை அது எனக்கு நினைவு படுத்தும்“ என்றார்.
அதைக்கேட்டுவிட்டு,“ ஒவ்வொரு வெள்ளி இரவு வரும்போதும் உங்களை தலைப்பாகையை படுக்கையறையின் மேலிருக்கும் கம்பியின் மீது தொங்கவிடுகிறேன். அதைப் பார்த்து வெள்ளி வந்துவிட்டது எனப் புரிந்து கொள்ளுங்கள்‘ என்று முல்லாவிடம் அவர் மனைவி சொன்னார்.
‘நல்லதாகப் போய்விட்டது. அந்த ஏற்பாடு நல்ல விஷயம். எனக்குக் கூட தோணாமல் போய்விட்டது‘ என்று பலமாக ஆமாதித்து தலையாட்டினார் முல்லா.
ஒரு நாளிரவு – அது வெள்ளி இரவு அல்ல- தாம்பத்தியத்துகாக ஏங்கிய முல்லாவின் மனைவி தான் படுக்கைக்குப் போகு முன்பு தலைப்பாகையைக் கம்பியில் தொங்கவிட்டு உள்ளே போனார்.
அதைக்கண்டு, “ மரியாதைக்குரிய மனைவியே, இன்று வெள்ளி இரவு அல்ல‘ என்று சத்தம் போட்டுக் கத்தினார் முல்லா.
‘இன்று வெள்ளி இரவுதான்“ என்று மனைவி விடாமல் பதிலுக்குக் கத்தினார்.
அதைக்கேட்டு,‘ மனைவியே, இவ்வீட்டின் போக்கை ஒன்று வெள்ளி இரவு தீர்மானிக்கட்டும். அல்லது நான் தீர்மானிக்கிறேன்‘ என்று முனகினார் முல்லா.

6. மனம்
நஸ்ருத்தீன் தன் வீட்டைச் சுற்றி ரொட்டித் துண்டுகளை வேகமாக வீசியடித்துக் கொண்டிருந்தார்.
‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? முல்லா“ என்று அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த ஒருவர் கேட்டார்.
‘புலிகளை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறேன்“ என்று சொன்னார் முல்லா.
“ இங்குதான் புலிகளே இல்லையே?. அவை வந்து போன தடயங்களையும் காண முடியவில்லையே?“ என்றார் கேள்வி கேட்டவர்.
“ ஆஹா ! அப்படியா ! எனது செயலால் புலிகள் பயந்து ஓடி விட்டன போலிருக்கிறது. எனது செயல்முறை சிறப்பாகச் செயல்படுகிறது, இல்லையா, நண்பரே?‘ என்றார் முல்லா.

*


Thanks to : Mohamed Safi
*

Related Links :
Inimitable Mulla Nasrudin – Idries Shah

சூஃபியின் மிதியடி – சஃபி

« Older entries