சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (08)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07

அத்தியாயம் 08

ஆபிதீன்

*

29.03.1996 dxb. வெள்ளி ‘செஷன்’ முடிந்து (8-22.09.95 கேஸட்டைக் கேட்டுவிட்டு)

இன்று மிஸ்கினுக்கு சாப்பாடு கொடுக்கும் நாள். காலையில் , சேத்தபொண்ணு கல்யாண விஷயமாக மைத்துனர் முத்துவாப்பாவை (USA-இல் இருக்கிறார்) தொடர்புகொண்டு அவர் ஊர்வரும் செய்தியைத் தெரிந்துகொள்ள ஃபோன் பண்ணினேன். சர்க்காரின் பார்வையில் காரியங்கள் கற்பனைக்கு எட்டாத வேகத்துடன் நடப்பதை ஒருவகையான மலைப்புடன் நினைத்துக்கொண்டு (கல்யாணத்திற்கு வரவே இயலாது என்று சொல்லிய முத்துவாப்பாவின் மாற்றம், வேலையில்லாமல் லண்டனில் கஷ்டப்படுகிற பெரியமைத்துனர் லட்சரூபாய் அனுப்பியது, சேத்தபொண்ணின் பழைய காதல் விவகாரங்களை தூக்கியெறிந்துவிட்டு வருங்கால மாமனார் இந்தப் பெண்தான் தன் மருமகள் என்று அலைவது..) ஃபோன் பண்ணினால் கல்யாண தேதி நிச்சயமாகிவிட்டது என்கிறாள் அஸ்மா! 10.04.1996!. இன்னும் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. நான் மிஸ்கினுக்கு சோறு கொடு என்று சொல்ல மறந்துபோனேன்! ஊர் போவதற்காக வாங்கிய கம்பெனி லோனில் , வாங்கும் சம்பளத்தின் கால்பகுதி போய்க்கொண்டிருக்க , Hire Purchasல் எடுத்த ஸ்கூட்டர் தவணை, அஸ்மாவுக்கும் என் உம்மாவுக்கும் மாதப்பணம், ‘மெஸ்’ பில், அஸ்ரா-அனீஸ் இன்சூரன்ஸ், அஸ்ரா இன்சூரன்ஸில் எடுத்த லோனுக்கான வட்டி என்று கண்முழி பிதுங்கும்போது சேத்தபொண்ணு கல்யாணத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும். அஸ்மாவின் நகையை வைத்து பத்தாயிரம் திரட்டி மாமியிடம் கொடுக்கச் சொன்னேன். அஸ்மாவுக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட அரைவேலி நிலத்தை மாமியிடமே திருப்பிக் கொடுத்துவிடு என்றும் (அவர்கள் வாக்கு கொடுத்து, பிறகு கல்யாணம் முடிந்ததும் ‘கண்ணுக்குப் பொறவு’ என்று சொன்ன வீட்டின் அரைபாகம். உடன் எழுதிக்கொடுப்பதாக – உடன் என்றால் கல்யாணம் முடிந்ததும்தான்- அப்போது சொல்லியிருந்தார்கள்) சொன்னேன். அதை விற்று தோது பண்ணட்டும். இங்கிருந்து பத்தாயிரம் சட்டென்று எப்படி அனுப்புவது? நாளைக்கு ஏப்ரல் சம்பளத்தையும் சேர்த்து வாங்க வேண்டும். மானேஜரிடம் சொன்னால் கம்பெனி நிலைமை தலைகீழாக மாறிவிட்டதைச் சொல்லிப் புலம்புகிறார். அவர் கையில் என்ன cheque? அவர் தங்கியிருக்கும் ஃப்ளாட் வாடகை ரினீவலுக்கு முதலாளி கொடுத்த 25000 திர்ஹம். இதை கேஷ் ஆக்க – இரண்டு மில்லியன் எடுத்த O.Dயில் – கொஞ்சம் பணம் இருக்கலாம். அதற்குப்பிறகு? சௌதியிலிருந்து சரக்கு வரவிடாமல் முதலாளிகளில் ஒருவனே தகராறு செய்வதில் கிடங்குகளில் சுத்தமாக சரக்கு இல்லாமல் போய் , விற்பனையும் இல்லாமல் , இதை நிவர்த்திக்க எந்த நடவடிக்கையும் எடுக்கத் தெரியாத முதலாளிகளையும் அவர்களின் புலம்பல்களையும் பார்த்தால்… எனக்குத்தான் சோறு கொடுத்துக் கொள்ள வேண்டும்!

கம்பெனியின் இந்த நிலையிலும் மனதின் சக்தி குறையவில்லை…I am greater than anything else.!

19.03.1996 அன்று சர்க்காரை கனவில் கண்டேன். 20 ‘இஸ்மு’ என்னிடம் கொடுக்கிறார்கள். அதில் நான் ஒன்றைத் தவற விட்டுவிடுகிறேன். அது என்ன, எப்படி கிடைக்கும் மறுபடி என்று திகைத்து நிற்கிறேன். சர்க்கார் தோன்றி ஒரு கைக்குட்டையில் அதை (எழுதி?) வைத்து என்னிடம் வீசி எறிகிறார்கள். நல்ல கடுமையான காற்று வீசுகிறது. மடித்துவைத்ததுபோல் அழகாக என் கைக்கு கைக்குட்டை வந்து சேர்கிறது!. அடுத்த நாள் பட்டைக்கு உட்கார்ந்தேன்.

இரண்டு நாளைக்கு முன்பு அன்றைய கடைசி காரியமாக எழுதிவைத்தது , ‘சர்க்காரை கனவில் பார்க்க வேண்டும் என்ற நினைப்புடன் தூங்குவது’. ஒரு குளத்தில் இருந்து கொண்டு என்னிடம் ஏதோ எழுதிக் கொடுத்தார்கள் அரபியில் அன்று. முழித்ததும் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஊஹூம்..என்ன எழுதினார்கள்? ஃபோன் பண்ணவேண்டும் சர்க்காருக்கு…

9:10 pm

முத்துவாப்பாவிற்கு (USA)·போன் பண்ணினேன். ‘யாரும் வராத கல்யாணம் என்று மாமி வெம்பி அழுதார்கள் ஃபோன் பேசும்போது’ என்றேன்.’இல்ல மச்சான், நான் கண்டிப்பா போறேன் இங்கே ரொம்ப high சீசன். டிக்கெட் கிடைக்க மாட்டேங்குது’

‘ஆமா ..டிக்கெட் இல்லாம பிளேன் ஏறமுடியாதுதான்’

சிரித்தார். ஒருவாரத்திற்குள் கிளம்பிவிடுவேன் என்று சிரிக்க வைத்தார். நேற்று இரண்டுவாரம் என்று சொன்னவர் நான் திருமண தேதியை சொல்வதற்கு முன்னரே ஒருவாரம் என்று குறைத்துவிட்ட வேகத்தைப் பார்த்தால் அவர் அமெரிக்காவிலிருந்து புறப்படும் முன்பே ஊரில் இருப்பார்! அல்ஹம்துலில்லாஹ்…

8-22.09.95 கேஸட்:

கற்பனை :

பசுமையான மலை..விடியல் நேரம்..மலையின் அடிவாரத்தில் நீரோடை..- ‘SS’ல் ஓதும்போது , ஓதி முடித்த பின் கையில் ஊதி முகத்தில் தடவிக்கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் I am superior than anything else என்பது தோன்றும். ஞாபகத்திற்கு வர வேண்டும். ஓதுவது நமது whole personality (Astral+ Physical)

*

‘காசு பணம் செலவு பண்ணும்போது , ‘அஸ்ஸலாமு அலைக்க தால் கஸீரன் வ ஸரீஅ’ண்டு நெனைச்சுக்க சொன்னேனே..செய்யிறீங்களா? அதாவது காசுங்குறது நம்ம அடிமை..நாம அதை control பண்ணுறோம். கா….சு இல்லெ, காசு! மாஸ்டர் அல்ல அடிமை. அப்படி நம்ப முடியுதா? வருதா அப்படி (நெனைப்பு)? – ‘S’

‘ம்’ – ஈனஸ்வரம்

‘இது பத்தாது! இன்னும் ‘டெவலப்’ ஆவனும். ‘டெவலப்’ ஆக ஆக ‘இதுதாண்டா உண்மை! சமுதாய வாழ்க்கையும் மத்தவங்கள்ற தொடர்பும் இதெ பெருசாக்கி காட்டிடிச்சி.. i.e, நம்மளை சின்னதாக்கி வச்சிடிச்சி’ண்டு புரிய ஆரம்பிக்கிம். புரிஞ்சபிறகு என்னெட்ட சொல்லிக்கிங்க. இது பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல, எல்லாத்துக்கும்!’ – ‘S’

*

‘SS’ பயிற்சி சர்க்கார் சொல்வதுபோல்தான் செய்ய வேண்டும். ஒரு பைத்தியத்தின் கதை சொல்கிறார்கள். அவன் தான் ஏற்கனவே செத்துவிட்டதாகச் சொல்கிறான். பெரிய உளவியல் நிபுணர் அவனை மடக்குகிறார்.

‘உயிருள்ள ஆளிடம்தான் ரத்தம் இருக்கும் என்று நம்புகிறாயா?’

‘கண்டிப்பாக. என்னிடம் ரத்தம் இல்லை, சேலஞ்ச்’

டாக்டர் அவன் கையில் சற்று அறுத்துக் காட்டினார். ரத்தம் பீறிட்டது.

‘டாக்டர், இப்பத்தான் எனக்கு தெரியுது, செத்தவனுக்கும் ரத்தம் இருக்கும்!’ என்றதாம் பைத்தியம்.

‘இப்படி ஆயிடக்கூடாது. இது ரொம்ப மோசம். ‘சர்புன் நியமத்’ பற்றி சொல்லியிக்கிறேன். கொடுக்கப்பட்ட அருள் பறிக்கப்படுவது. ஜாக்கிரதையா இருங்க. என் defence உண்டு. இருந்தாலும் நீங்களும் கொஞ்சம் ஒத்துழைக்கனுமுல்லெ?’ இப்ப நீங்க என்னா செய்யனும்? சம்பாதிச்சி , சேர்த்துவச்சி அதை கண்ட்ரோல் பண்ணுறதை விட ஒண்ணும் செய்யாமலேயே அடையிற சக்தியை வளர்த்துக்கனும். at the same time, Budgeting time and money. Most Important’ – ‘S’

*

ரியாலத்திற்குப் பிறகு என்ன மாற்றம்?

‘முதல்லெ பெரிசா தெரிஞ்ச காரியம் இப்ப ரொம்ப எளிமையா தெரியுது’ – சீடர்

‘இதுக்கு முன்னாடி நீங்க முட்டாள்தனமா நடந்துக்கிட்டிருந்தீங்கண்டு அர்த்தம். அப்படித்தானா?’ – ‘S’

‘ஆமா..’

‘இப்ப புரிஞ்சிக்கிட்டோம்னு தோணுதா?’ – ‘S’

‘புரிஞ்சிக்கலேண்டு தோணுது.. புரிஞ்சிக்கிட்டபிறகு முட்டாள்தனமா தோணுது!’

‘ம்..புரிஞ்சிக்கிட்டோம்டா அறிவு, இல்லேண்டா அறியாமைண்டு அர்த்தம். அறியாமை வேறே முட்டாள்தனம் வேறே.. ஒரு பொருளை புரிஞ்சிக்கிடாம இக்கிறது அறியாமை. முட்டாள்தனம்ண்டா அந்தப்பொருளை misuse பண்ணுறது. பத்தை இருபதுண்டும் இருபதை பத்துண்டும் நெனைக்கிறது. இதுதான் முட்டாள்தனம். புரியாமைண்டா முட்டாள்தனம் இல்லை, அறியாமை. முட்டாள்- முட்டாள்தனம்ங்கிறது குற்றம். முட்டாளா ஒத்தவன் இக்கிறாண்டா அவன் குற்றவாளிண்டு அர்த்தம். அறியாதவன் குற்றவாளி அல்ல. சட்டம் சொல்லலாம். சட்டம் அறியாத காரணத்துனாலெ சட்டம் தண்டிக்காம ஒண்ணும் உட்டுடாது. இந்த ரூட்டுலெ அது பொருந்தாது. தெரியலைண்டு சொன்னா அவன் அப்பாவி. ஆனால் முட்டாள்தனம் அப்படியல்ல. எது உண்மையோ அதுக்கு நேர்மாத்தமான ஒண்ணை உண்மைண்டு நிரூபிக்கிறது முட்டாள்தனம்’ – ‘S’

*

‘ஒரே கருத்துக்கு நாலைஞ்சி வார்த்தை அல்ல; ஒரு கருத்துக்கு ஒரு வார்த்தைதான். வார்த்தை மாறினா கொஞ்சம் கொஞ்சம் கருத்தும் மாறிகிட்டு வருது. இதை கண்ட்ரோல் பண்ணும்போது ரிஸல்ட் மாறும்’

‘சமுதாய வாழ்க்கைக்கு அஸ்திவாரமானது பேச்சு. பேச்சை control பண்ண முடியாதவன் வாழ முடியாதுண்டு சொல்லியிக்கிறேன். அப்ப பெரும்பான்மையா வர்ற நல்ல, கெட்ட விளைவுகளுக்கு காரணம் பேசுற முறை. பேசுனபிறகுதான் குத்துறது, வெட்டுறது, அடிக்கிறது , அணைக்கிறது…ஏன், குடும்ப உறவுலெ கூட பேச்சு இக்கிதுலெ? கொஞ்சுறதுண்டு சொல்றது! நண்பனோட பேசுறதும் பேச்சுதான். இதுக்கு அரவணைப்புங்கிறது. பேர் மாறுவதனாலெ பெயரிடப்பட பொருள் மாறிடாது. ரோஜாப்புக்கு ரோஜாப்பூண்டு சொன்னாலும் சரிதான். ‘ஜும்பகஜூம்பா’ண்டு சொன்னாலும் சரிதான். ரோஜாப்பூ ரோஜாப்பூதான்’ – ‘S’

‘இந்த டிரையினிங் எவ்வளவு நாள்லெ முடியுது சர்க்கார்?’ – ஒரு சீடர் கேட்ட கேள்வி.

‘உங்க ‘ஹப’த்துணிக்கு எவ்வளவு ஆவும்?’ண்டு கேக்குறமாதிரிலெ இக்கிது! கடை நடந்துக்கிது, வியாபாரம் பெருகிட்டிருக்குது, லாபம் வந்துக்கிருக்குது… மக்களுக்கு சர்வீஸ் பண்ணிக்கிட்டே இக்கிறீங்கங்கும்போது எவ்வளவு நாளைக்குண்டு கேள்வி வர்றதில்லையில்லே? அப்படி கேட்கக்கூடாது. சாவுற வரைக்கும் கேட்கனும்’

.

‘Slip of Tongue வரக்கூடாது. ஏன் வருது? ‘அவன் சொன்னது’ண்டு வந்தா ‘அவன்’க்கு பிறகு ஏதோ வார்த்தை சொல்லி ‘தூ’ வரும் அங்கே! அந்த ‘தூ’வை இங்கே போட்டுட்டீங்க! எண்ண ஓட்டம், அந்த காலத்துலெ நாங்க ஓதுன ‘யாஸீன்’ மாதிரி ஒரு ஜம்ப்லெ எங்கேயோ பொய்டுது!’ – ‘S’

‘என் பேச்சு தானா flow ஆவும். அது வயித்தால போற பீ மாதிரி. பிச்சுக்கிட்டு ஊத்தும் தானா.. controlஆ பேசுறது முக்கிப் பேலுற பீ மாதிரி. சூத்துல ரத்தம் வரும். அசிங்கமா இக்கிதா? ஆமா, இஹல்லாம் பீ பேல மாட்டாஹா, நாங்க மட்டும்தான் பேலுறோம்!’ – ‘S’

*

பேச்சை கண்ட்ரோல் பண்ணும் பயிற்சி :

‘SS’ பயிற்சியின் முடிவில், Relaxation Periodல் – மணலில் படுத்திருக்கும் – நிலையில் ..

‘ஒண்ணிலிருந்து அம்பது வரைக்கும் எண்ணுங்க. பிறகு கை கால்லெ எந்த அசைவும் இல்லாம அம்பதிலிருந்து தலைகீழாக எண்ணுங்க. 50..49…48ண்டு.. இதுக்கு கீழே என்னா, மேலே என்னாண்டு நெனைக்கப்படாது. இது ரெண்டு நாளைக்கி செய்யுங்க. அடுத்த ரெண்டு நாள் ஒண்ணுலேர்ந்து அம்பது, அம்பதுலேந்து ஒண்ணு. பிறகு 25லேர்ந்து பத்து, பத்துலேர்ந்து அம்பது. அடுத்த மிச்ச நாளைக்கி – ஒரு வாரத்திற்கிடையிலே – ஒண்ணுலேர்ந்து அம்பது அம்பதுலேர்ந்து ஒண்ணு, ஒண்ணுலேர்ந்து அம்பது அம்பதுலேர்ந்து ஒண்ணு, ஒண்ணுலேர்ந்து அம்பது அம்பதுலேர்ந்து ஒண்ணு. அம்பதுலேர்ந்து பதினாலு, பதினாலுலேர்ந்து அம்பது, அப்புறம் 13லேர்ந்து அம்பது..12லேர்ந்து அம்பது, 11லேர்ந்து அம்பது, பத்துலேர்ந்து அம்பது… எல்லாம் முடிஞ்சி கடைசிலெ எந்திருக்கும்போது பண்ண வேண்டிய வேலை இது. ஏன் இப்படி சொல்றேண்டா நீங்க ‘ரியாலத்’ பண்ற பயிற்சி , எந்திரிக்கிறதுக்கு முன்னாடிதான்  full powerலெ நிக்கிம். எல்லாம் திரண்டு உச்சக்கட்டத்துலெ நிக்கிம். அந்த இடத்துலெ இதை மட்டும் செய்யுங்க. பேச்சுலெ கண்ட்ரோல் வந்துடும். எண்ணம் correctஆ இருக்க ஆரம்பிக்கும். எப்படிண்டு மட்டும் கேட்காதீங்க!’ – ‘S’

முதல் இரு நாட்கள் (1st Batch):

1 to 50 , 50 to 1

அடுத்த இரு நாட்கள் (2nd Batch)

1 to 50 , 50 to 1

1 to 50 , 50 to 10

கடைசி 3 நாட்கள் (Last Batch)

1 to 50, 50 to 1 – மூன்று தடவை

பிறகு ஒவ்வொரு முறை கீழ்க்கண்டவாறு :

1 to 50, 50 to 1

50 to 14

50 to 13

50 to 12

50 to 11

50 to 10

சீடர்கள் கலந்து பேசும்போது சர்க்காரின் சம்மதத்துடன் மேற்கண்ட எண்ணிக்கைதான் அமைகிறது. எப்படிண்டு மட்டும் கேட்காதீங்க!

‘மாமா இது ஓதுறமுலெ.. இது எதுக்குமே பத்தியம் கிடையாதா? – சர்க்காரின் மருமகன்

‘என்னா பத்தியம்?’

‘சாப்புடறதுலெ பத்தியம் கிடையாது?’

‘பண்டிக்கறி திங்கக்கூடாது, பூனைக்குருமா திங்கக்கூடாது!’ – ‘S’

*

‘சூஃபியாக்கள்லாம் ‘இஸ்மு’ ஓதுறதா இருந்தா ‘இந்த எண்ணிக்கைக்குப் பிறகு’ம்பாஹா..’துஆ’க்கு முந்தி’ம்பாஹா..அப்படீண்டா என்னா அர்த்தம்? அதே basement, அதே பக்குவத்தோட இதுக்குள்ள எறங்கிடுனும்டுதான்.. எல்லாமே சரி, நாம நெனைக்கிறதை unconsious, அல்லது  something…some entity..அதுக்குள்ளெ போறதுக்குள்ள முயற்சிதான்.. இத மனசுல வச்சுக்குங்க’ – ‘S’

‘ஜம்’ :

‘ஜம் செஞ்சா என்னை நெனைச்சா மட்டும் பத்தாது. அப்ப நீங்க உக்காந்திக்கிம்போது என்னான்னா செய்ய வருதோ, செய்ய வெண்டிய சூழல் வருதோ, எதுக்கு பதில் சொல்லவேண்டிய , கேட்கவேண்டிய, சூழ்நிலை எப்ப வருதோ அப்பவுலாம் நான் அதை எப்படி செய்யச் சொல்வேண்டு நெனைச்சிப் பாருங்க.. அப்பதான் ‘ஜம்’முக்கு உயிரே வரும். ஜம்முட நோக்கமே அதுதான்’ – ‘S’

‘செஷன்’ :

‘செஷன்’டு சொன்னாக்கா கோர்ட்லெ ஒரு கொலைகேசு நடக்குதுண்டு அர்த்தம். அது அங்கேயுள்ள டெக்னிகல் வார்த்தை. நாம யூஸ் பண்ணுறது , Hypnotic temrsலெ ‘செஷன்’டு சொல்வாங்க. அந்த வார்த்தையை எடுத்துப் போட்டேன். இதைவிட அழகான வார்த்தை எனக்கு கிடைக்கலே’ – ‘S’

*

Productivity & Spending :

‘Productivityண்டா நம்ம சக்தியை திரட்டுறது. கொட்டாவி எப்ப வருதுண்டா சக்தி விரயமாகி சேர்க்கவேண்டிய நிலை வரும்போதுதான். சக்தி ஒரு secondலே exhaust ஆயிடும். எப்போ? நமக்கு பிடிக்காத ஒரு ஆளு, பிடிக்காத செய்தியை பேசுற அதே நேரத்துலெ , நமக்கு முக்கியமான, சிந்திக்க வேண்டிய வேலை காத்துக்கிட்டிருக்கும்போது கொட்டாவி வரும். அந்த ஆளு எந்திரிச்சி போன உடனே கொட்டாவி கம்ப்ளீட்டா மாறி சுறுசுறுப்பு வந்துடும். Productivityஐ சேர்க்குறதுண்டா? ரிலாக்ஸ்டா பாக்குறது. இப்ப, இந்த ‘மடா’ (பானை). ‘இந்த கசங்கொண்ட தண்ணியை குடிச்சாவனுமேண்டு நெனைக்கிறது productivity அல்ல. சக்தி விரயம்.

‘ஒரு subjectஐ விட்டு மாறலாம். மாறுன உடனே ‘பட்’டுண்டு எவ்வளவு Quickஆ திரும்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடனும். அட, ஒண்ணுமில்லேப்பா.. நான் சொல்றதை கரெக்டா கேளு. கரெக்டா ஃபாலோ பண்ணு. Total லைஃப் அப்படியே, கம்ப்ளீட்டா பெரண்டுடும் – Towards Positive Side.  அதுதான் முக்கியம்.

‘கண்ணை போட்டு வைக்க படிச்சிக்கனும். இதுவும் ஈஸிதான். தண்ணிகுடிக்கிறது எவ்வளவு ஈஸியோ , சோத்த உண்டு பசிய அடக்குறது எவ்வளவு ஈஸியோ அவ்வளவு ஈஸி.

‘ஒரு பொருளை அடையிறதுக்கு வழி ரெண்டு. ஒண்ணு, தேடி அடையிறது உட்கார்ந்துக்கிட்டே எண்ணத்தைக் கூர்மையாக்கி அது நம்மளை தேட வைக்கிறது இன்னொண்னு. நீங்க நெனைக்கிற மாதிரி இது ஒண்ணும் கஷ்டமல்ல, ரொம்ப ஈஸி’

*

‘ஆடு ஓடுது.. ‘நல்லாயிக்கிதே, குருமா வைக்கலாமே’ண்டு நெனைச்சா முடிஞ்சிபோச்சி. இது Production அல்ல, Spending. இதுக்கு என்னா பதிலு?’ – ‘S’

‘சக்தியை சேக்குறது Productivity, செலவு செய்யிறது Spending’. – சீடர்

‘சும்மா கண்ணாலே பாக்கனும். அது productivityஆ இக்கினும். spendingஆ இக்கெக்கூடாது. அதுக்கு என்னா வழி?’

‘அரைக்கண்ணாலெ லேசா, ரிலாக்ஸ்டா பாக்கனும். ‘எதையும் Insist பண்ணாம சாதாரணமா பார்த்..’

‘ச்! இதோ பாருங்க, அந்நியமொழி வார்த்தையை யூஸ் பண்ணுறது ரெண்டு கட்டம். சொந்தமொழிலெ விளக்க முடியாத காரியத்தை அந்நியமொழியை யூஸ் பண்ணி விளக்கலாம். இன்னொரு கட்டம், கடன் கேட்கும்போது யூஸ் பண்ணலாம்! அந்நியமொழியை யூஸ் பண்ணினாலே வீக்னஸ் இக்கிதுண்டு அர்த்தம்! Insistண்டா சொன்னீங்க? வலியுறுத்தல்? வலியுறுத்தல்ண்டு வந்தாவே அங்கே spending வந்துடுமே!

‘கண்ணை போட்டுவச்ச மாதிரி பாக்கனும்’

‘எப்படிப்பா போட்டு வைக்கிறது?’

‘…. ….. …. ‘

‘ஆடு ஓடுறதை அப்படியே ரிலாக்ஸ்டா பாக்கனும். ஆட்டுக்குப் பினாலே பார்வை ஓடக்கூடாது. ஆட்டை ரசிக்கலாம், பிரியாணி பத்தி பிளான் போடக்கூடாது. இன்னும் தெளிவா சொல்றதா இருந்தா கார்லெ, பஸ்லெ போகும்போது குறிப்பிட்ட கண்ணாடியை – ஜன்னலை- உங்க ஜன்னல்ண்டு நெனைச்சிக்குங்க. அதுலெ என்னான்னா காட்சி வருதோ, Including பஸ்லெ உள்ளவங்க தலையால மறைக்கிற பகுதியையும் சேர்த்துதான் சொல்றேன்’. (கண்ணாடியில் தூசியைப் பார்ப்பது looking at it. நம் முகத்தைப் பார்ப்பது looking into it என்று சீடர்கள் , அறிவெனும் கண்ணாடியைக் காட்டுகிறார்கள். முகம் முழுக்க தூசி, ஓரிருவர் தவிர!). ‘ Photographyலெ Depth of Fieldண்டு ஒண்ணு இக்கிது. உன்னை ஃபோட்டோ பிடிச்சா உன் முன்னாலெயும் பின்னாலெயும் clarity இல்லாம பொய்டும். apertureஐ பெருசாக்கிடறது! எதை ஃபோகஸ் பண்ணுறோமோ அது pin-pointஆ தெரியும். முன்னாலெயும் பின்னாலெயும் ஒண்ணும் இரிக்காது. Depth of Field கொடுக்க apertureஐ சின்னதாக்கனும். proper light கொடுக்கனும், sunlightஓ அல்லது ஃப்ளாஷோ.. கொடுத்தா, நீ எவ்வளவு சுத்தமா இக்கிறியோ அதே மாதிரி முன்னாலும் பின்னாலும் சுத்தமா (sharpஆ) இக்கிம்’

– கேஸட் முடிகிறது, ஆட்டை அப்படியே விட்டுவிட்டு.

நான் கலந்துகொண்ட முதல் வெள்ளி Session 22.09.95. கோர்ட் செஷன் மாதிரிதான் இருந்தது! ரவூஃப்தான் இழுத்துக்கொண்டு போயிருந்தான். ‘எதுவுமே கேட்காமல் சும்மா உட்கார்ந்திரி..’ என்று சொல்லி அழைத்துப் போயிருந்தான். ‘செஷன்’ முடிந்த பிறகு சர்க்கார் என்னைப் பார்த்துக் கேட்டார்கள் ‘புரிஞ்சிச்சா’ என்று. உற்சாகமாக தலையாட்டினேன். அடுத்த செஷன் போகவில்லை! ஒரு திடீர் வேலை. எதிர்பார்த்தார்கள் சர்க்கார் என்றான் ரவூஃப். அதற்கப்புறம் நான் ஆடுதான்…

03.04.1996

சர்க்கார் கேஸட்களை ரவூஃப்தான் ஊரில் கொண்டுவந்து கொடுத்து கேட்கச் சொன்னான். வெகுநாளாக எதிர்பார்த்திருந்த கேஸட்கள். பிரமித்துப்போய் கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்தவாரம் , ‘எப்படியிந்திச்சி?’ என்று ரவூஃப் கேட்டபோது ‘நாலு காலு முளைச்சமாதிரி இக்கிதுப்பா..’ என்றேன். என்னை ஒரு மிருகமாய் ஃபீல் செய்துதான் சொன்னேன். திமிரெல்லாம் அடங்கி சர்க்காரின் முன்னால் தலைகுனிந்த ஆடு மாதிரியான கற்பனையில்தான் சொன்னேன். சர்க்காரிடம் அதை சொல்லியிருக்கிறான் ரவூஃப். ‘அட..!’ என்றார்களாம். ‘நல்லா சொல்லியிக்கிறாரே..!’ என்றார்களாம். உற்சாகத்திற்கென்று இன்னொரு இரண்டு கால்கள் என்று புரிந்து சிலாகித்தார்களோ என்று ஒரு சந்தேகம். இப்போது நான் மிருகம் அல்ல. முளைத்த புதிய கால்களும் தெம்புடன் ஓடுவதற்காகத்தான். நாலு கால்களுடன் ஓடுவது சிக்கலல்லவோ? சூம்பிப்போன கால்களை வெட்டியெறிந்து விட்டால் சிக்கல் எங்கே இருக்கப் போகிறது? முதல் செஷன், ‘Astral Body…அது தனியாக உடம்பிலிருந்து பிரிந்து…’ என்றெல்லாம் அங்கே நடந்த சம்பாஷனைகளில் குழம்பிப்போய் , அடுத்த நாள் என்னைப் பார்க்க வந்த ரவூஃபிடம் பயந்தவாறே சொன்னேன்..’ரவூஃப்..இப்ப நீ physical Bodyயோட வந்திக்கிறியா இல்லெ Astral Bodyயோடவா?’ . ரவூஃப் சிரித்தான்.

‘கற்பனையில்தான்’ என்றான்.

‘வெறும் கற்பனையா?!’

‘இப்ப உனக்கு டீ வேணும். முதல்லெ டீ வேணும்டுதானே நெனைக்கிறே. இது கற்பனைதானே?’

‘அஸ்மா, ரெண்டு டீ போடு!’

*

திடீர் திடீரென்று சில யோசனைகளுக்கு தீர்வு வருகிறது. மூன்று வருடமாக , Clipperல் டெவலப் செய்த Accounting Packageஐ பார்த்துக் கொண்டிருக்கிறேன். Reportகளை Screenல் பார்க்க நான் எழுதும் programmeகளில் பெரும்பாலும் Norton Editorதான் யூஸ் பண்ணுவேன். இந்த Accountig Package, Browse.com என்ற viewerஐக் கொண்டிருந்தது. Read Onlyதான் இது. Norton Editorபோல தேட, தேவையான பகுதிகளை மட்டும் பிரிண்ட் எடுக்க வசதி கிடையாது. Staff Advanceல் – – Summary மட்டும் எடுக்க வேணுமென்றால் Trial Balance அல்லது Chart of Accountsஐ முழுக்க எடுத்தாக வேண்டும்.  இரண்டு நாளைக்கு முன் ‘பளிச்’சென்று உதித்தது சர்க்காரை நினைத்துக் கொண்டிருந்தபோது. மிகவும் சுலபமான தீர்வு. ஆனால் இது எப்படி எனக்கு தெரியாமல் போயிருந்தது! Norton Editorஐ ஏன் Browse.com ஆக பெயர் மாற்றக் கூடாது? Fileன் size மாறியிருப்பதில் உஷாராகி இயங்க மறுக்கிற புத்திசாலித்தனமான software அல்ல கம்பெனியில் உபயோகிப்பது. மாற்று! இப்போது பார்ட் பார்ட்-ஆக ரிப்போர்ட் எடுக்கலாம். மேனேஜர் அசந்து போனார். தப்பான ரிபோர்ட்களையும் மாற்றி எடுத்துக் கொடுக்கலாமே! இதனால் பலனுண்டு. ‘எல்லாருக்கும் சம்பளத்தை குறைக்கப் போகிறார்கள். கண்டிப்பாக உனக்கு இருக்காது’ என்றார்.

‘சம்பளமா, வேலையா?!’

*

சேத்தபொண்ணு கல்யாணத்திற்கு நான் கேட்ட salary advanceக்கான Cheque இன்று தயாராக இருந்தது. இதற்கு முன்பு எப்போதுமே ‘இல்லை’ பல்லவி பாடும் மஸ்தான் மரைக்கான், ‘எனக்கு சீட்டுல காசு வருது, தர்றேன்’ என்றான். ஃபரீது, ‘என்னெட்ட இல்லே..யார்ட்டெயாச்சும் தோது பண்ணி தந்துடுறேனே..’ என்றார். என் கால்கள்…

—-

06.04.1996 Dxb

நேற்று வெள்ளி செஷனில், 22.09.95 கேஸட்டைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு , வியாழன் காலை ஃபோன் செய்த ஒரு பரங்கிப்பேட்டை நானாவிடம் – வாக்குக்கொடுத்தபடி – சந்திக்கப்போனதில் எழுத இயலாமல் போய்விட்டது. ஜெயலலிதாவை யாருமே போட்டுத்தள்ள மாட்டேன்ங்கிறாங்களே என்று புலம்பிக் கொண்டிருந்தார். தேர்தலைத்தான் சொல்கிறார் என்று புரிந்துகொண்டேன். நாக்கூரில் சிக்கந்தரைத் தெரியுமா என்று கேட்டார். ‘ எந்த சிக்கந்தர்?’. ‘சிராஜ் ஸ்டோர்ஸ்ண்டு கூட வச்சிக்கிறாரு ஊருலெ..ஜித்தாவுலெ இருக்கும்போது எனக்கு நல்ல பழக்கம்’ ‘அவர் என் தாய்மாமாதான்’. அவர் இன்னும் நெருங்கி உட்கார்ந்து ஜீ.டி.வி புகழ் பாட ஆரம்பித்தார். ஜெயலலிதாவை போட்டு முடித்தாகிவிட்டது போலும். இனி எக்காரணம் கொண்டும், குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமையிலாவது சைத்தான்களிடமிருந்து விலக வேண்டும், என் சைத்தான்களிடமிருந்து..

கேஸட்டின் தொடர்ச்சி :

‘கண்ணாடியில் பாக்குற சூரியன் உனக்கும் சூரியனுக்கும் எவ்வளவு தூரமோ, i mean,  கண்ணாடிக்கும் சூரியனுக்கும் எவ்வளவு தூரமோ அதே தூரம். கண்ணாடிலெ உன் முகத்தைப் பாரு, அதுக்குப் பின்னாலெ உள்ள அலமாரியைப் பார்த்தா முகம் மங்கிடும். இதே மாதிரி பஸ்லெ போய்க்கிட்டிருக்கும்போது ஒரு ஜன்னல், உன் ஜன்னல், அந்த ஜன்னலிலெ ஒரு பொம்பளை தலை மறைக்கிது. டக்குண்டு நீ திரும்பிப் பாக்கக்கூடாது. பார்த்தா ஃபோகஸ் குறையும். ஜன்னலையும் பார்க்கக்கூடாது. ஜன்னலுக்கு வெளிலே பாரு, எந்த மரம் ஓடுதுண்டு..மரம் ஓடிக்கிட்டேயிக்கிம். திரும்பிப பார்க்ககூடாது. இது  Production. Productivity. புரிஞ்சிச்சா?’

‘புரிஞ்சிச்சி’ – சீடர்

‘என்னா புரிஞ்சிச்சி?’

‘பஸ்லெ தலை தெரிஞ்சாலும் பார்க்கக்கூடாது!’

‘அட அதல்லங்க, ஜன்னலை பார்க்கனும்டா ஜன்னல்லேர்ந்து வெளிலே பாக்கனும். உள்ளேயிருந்த உங்க பார்வையை கவர்ற மாதிரி ஏதும் வந்தா அத பார்க்கக்கூடாதுங்கறேன். இதே மாதிரி ஒரு ஆட்டைப் பாப்பீங்களா?’ – ‘S’

*

‘முழிக்கிறதுக்கு முன்னாடி முழிப்பு வரப்போவுதுண்டு feeling ஏற்பட்டவுடனே கண்ணைத் தொறக்காம, மூடிக்கிட்டே, எந்தெந்த parts of the Body…’ – ரவூஃப்

சர்க்கார் இடைமறிக்கிறார்கள். ‘அங்கே ஒரு சின்ன flaw இருக்கு. சாவியாலெ கதவைத் தொறக்குறோம். சாவி அசைஞ்சிச்சா கை அசைஞ்சிச்சா?’

‘Simultaneousதான்’ – ரவூஃப்

‘அதாவது, கொடி அசைந்ததால் காற்று வந்ததா காற்று வந்ததால் கொடி அசைந்ததா? சூரியன் உதயமானதாலெ பொழுது விடிஞ்சிச்சா இல்லெ பொழுது விடிந்ததனாலே சூரியன் உதயமானிச்சா? இது simplified form. ஆனா typical example.  கையும் சாவியும் ஒரே நேரத்துலெ அசையுது . உண்மை. ஆனா கையோட அசைவுதான் காரணம் சாவியோட அசைவுக்கு’

ஃபேன் சுற்றும் உதாரணமும் ஒன்று சொல்கிறார்கள். ஃபேனின் நாலு விளிம்பு வளைவுகளும் ஒன்றாகத்தான் சுற்றுமா என்று கேள்வி.’ ஒரே மாதிரி சுத்துனாத்தானே காத்து வரும்?!’ என்று சீடர் ஒருவர் சிரிப்புக்காற்றை விசிறியடிக்கிறார். சர்க்காருக்கு வீசும் ஃபேன் காற்று அவருக்கு விழவில்லை.

‘Observatory force அதிகமா இருக்கனும். அதே நேரத்துலெ observation பண்ணுறதுக்கு Time எடுத்துக்ககூடாது. இப்ப ஆபிதீன் வந்தாரு, பாத்தீங்கள்ளெ?’ – ‘S’

‘ம்.’

‘என்னா சட்டை போட்டிக்கிறாரு?’

‘வெள்ளை சட்டை’

‘திரும்பிப் பாருங்க கொஞ்சம்’

‘light Blue சர்க்கார்..’

‘Dark Blue போட்டாக்கூட வெள்ளைண்டுதான் சொல்வீங்க! Observation குறைச்சல்..பொம்பளை அப்படியல்ல. முகத்தை அப்படிண்டு ஒரு திருப்பு திருப்புவா..போட்டிக்கிற சட்டை, மீசையிலெ ஒரு பக்கம் சின்னதா இக்கிறது, குடிக்கிற தம், உடுற புகை, புகையிலெ எத்தனை வளைவு..ஒரு செகண்ட்லெ கண்டுபுடிச்சிடுவா. அவங்களுக்கு இயற்கையிலேயே அந்த ஃபோர்ஸ் இக்கிது. நம்ம டெவலப் பண்ணிக்கனும். நம்மள்ட்டெ இருந்திச்சி, வுட்டாச்சு!

கலரைச் சரியாகச் சொன்னாலும் சீடர் மாட்டித்தான் இருப்பார். ‘என் பேச்சை கேட்டுக்கிட்டிக்கிறங்களா இல்லெ ‘மினாரடி’லெ உட்காந்திக்கிறீங்களா?’ என்று ஒரு அம்பு வரும். நாம் நிராயுதபாணிகளாக இருப்பதில் ஒரு சுகமும் இருக்கிறதுதான்.

‘வண்டி ஓடிக்கிட்டிக்கிது..அதுட சக்கரம் இக்கிதுலெ..அதுட மேல் விட்டமும் கீழ் விட்டமும் ஒரே மாதிரியாத்தான் சுத்துமா?’ அடுத்த கேள்வி வருகிறது. சக்கரத்தை விட சீடர்களின் தலைதான் அதிகமாக சுற்றுகிறது. ‘இதுலாம் எப்படி வரும் – ஒரு செகண்ட்லெ பார்த்த உடனேயே – உள்ளது உள்ளபடி, நம்ப சர்க்கார்மார்கள் சொல்ற மாதிரி ‘உள்ளாற உள்ளபடி’!. ‘சின்னஞ்சிறிய’.. ஒத்தவன் போட்டான், ‘பென்னம்பெரிய!’. அது மாதிரி.. ‘உள்ளாற உள்ளபடி’ நீங்க விளங்கிக்கிறதா இருந்தா இந்த Oservation இக்கினும். Centreலேர்ந்து…Radius..ஒரே மாதிரிதான் சுத்துமா?’

ரவூஃப் சுத்தாது என்கிறான். பலரும் ரீல் சுற்றுவதை பார்த்து பொறுக்க முடியாமல் Friction என்கிறான்.

‘Correctதான். முழு உண்மை அல்ல ஆனா! குருடன் யானையைப் பாத்த மாதிரி’ – ‘S’

‘கீழே அழுத்தம்’ என்பவருக்கு ‘அழுத்தமாயிருந்தா வண்டி ஓடாதே’ என்றும் வெடைக்கிறார்கள்.

வரைந்து விளக்குகிறார்கள். ஒரே மாதிரியாக சுற்றவில்லைதான்! சுற்றிக்கொண்டே இருந்தால் பரவாயில்லே, நகர்கிறதே..

‘நீங்க Physics, Chemistryலாம் சொன்னா எங்களுக்கு எப்படிப் புரியும்?’ – ரவூஃ·புக்கு தைரியம் அதிகம்.

‘Physicsஓ மண்ணாங்கட்டியோ , நான் பார்த்ததைச் சொல்றேன். இப்ப ஃபேன் சுத்துதுலெ? ஓரம் சுத்துறமாதிரி centreம் சுத்துமுலெ?’

‘அதைவிட அதிகமா சுத்தும்’ – சீடர்

‘டபார்ண்டு உடைச்சாரு! ஒரு பந்தை நீங்க சுத்துனீங்கண்டா- உருட்டுனீங்கண்டா – மேல் பகுதி வேகமா சுத்தும். அப்படியே குறைஞ்சிக்கிட்டே வந்து அந்த centre point இக்கிதுலெ – அந்தப் புள்ளி – அது சுத்தாது. அங்கேயுள்ள atom, அணு இக்கிதுலெ, அது சுத்தவே சுத்தாது. சரி, இது சம்பந்தமில்லாத விஷயம். இதே மாதிரி தெருவுலெ ஒரு பொருள் அசைஞ்சிச்சிண்டு சொன்னா பாக்குற நோக்கத்துலெ பாக்கனும். தானா தோண்றி மறையக் கூடாது. இது spending அல்ல productivity. ஆனா அது உங்களுக்கு தெரியாத எண்ணங்களை மனசுல உண்டு பண்ணுறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனாலெ , வேணுண்டே ஒரு இடத்துக்குப் போவனும். என்னா  காட்சி வந்தாலும் சரி, பேசாம பாத்துக்கிட்டே இக்கினும். இது alert positivity!. Spendingஐ Productionஆக மாற்றுவதெப்படி?..ஒரு ஆட்டைப் பார்த்தால் இதை ‘சம்மா’ வைத்து திங்கலாமா அல்லது சும்மா திங்கலாமா என்று வருகிறதே..Productionஆக இந்த spendingஐ எப்படி மாற்றுவது?’

‘அந்த நெனைப்பே இல்லாம பாக்குறது’ – சீடர்

‘Mindஐ Blankஆகப் பாக்குறீங்களோ? அப்ப கண்ணாலே பார்க்கவே முடியாதே!’ – ‘S’

‘அதோட கலர், புள்ளி இதெல்லாம் பாக்கனும்’ – இன்னொரு சீடர்

‘அப்ப இப்படி வருமே..ஷோக்கான சிவப்பு கலர். அறுத்து சமைச்சா ஷோக்கான brown கலரா வரும்டு வருமே, அது spendingலெ?’

‘S’, சீடர்கள் ‘ஜம்’ பண்ணுவதைக் குறை சொல்கிறார்கள். ‘நீங்க இன்னும் மாறவில்லை’. வழியும் வருகிறது Productionக்கு. ‘Mindஐ ரிலாக்ஸ் பண்ணுறதுக்கு best method , வர்ற எண்ணங்களையெல்லாம் தட்டிக்கிட்டே இக்கிறது. It is so simple. You can’t see it. ஏன்? It is so simple. பிரியாணி, சூப்பையெல்லாம் தட்டிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும், ரிலாக்ஸ்டா பாத்துக்கொண்டு. அதுக்காக அபின் போட்ட காடை மாதிரி உக்காந்துக்கிட்டே இருக்காதீங்க’ என்றும் சர்க்கார் எச்சரிக்கிறார்கள். ‘கிட்டே இக்கிற பொருளைப் பார்த்தா கண்ணு muscles எல்லாம் strain கொடுக்கும். தூரமா இக்கிறத பார்த்தா ரிலாக்ஸ்டா இக்கிம். அதனாலே மாடிமேலே உட்கார்ந்துக்கிட்டு தூரமா பாக்கனும். ம்..கடற்கரைக்குப் போறது பெட்டர்’.

‘spendingஐ தட்டிவுட்டுடுறோம், Productionஐ எப்படி கொண்டு வர்றது?’ – சீடர் தட்டுகிறார் இலேசாக.

‘தட்டிவிட்டாவே Productionதான். எப்ப spendingஐ control பண்ணுறீங்களோ தானாகவே production வரும்!’- ‘S’

வேறொரு உதாரணம் சொல்லச் சொல்கிறார்கள். சிகரெட் குடிப்பது. இதில் productionஐ எப்படி கொண்டு வருவது?’

‘நான் சிகரெட் குடிக்கிறதில்லை, அதனாலெ சொல்லத் தெரியலே..’ என்றார் தஸ்தகீர் நானா. ‘ஹை..ஹை..!’ – சர்க்கார்.

‘இந்தப் பாருங்க. நாம எடுத்திருக்கிற project ரொம்ப ரொம்ப ரொம்ப – இன்னும் ஏழெட்டு ‘ரொம்ப’ போட்டு – உள்ள project. அதுக்கு சில தகுதிகளை வளர்த்துக்கனும். இருக்கிற தகுதிகளை நீங்க உணர்ந்துக்கிடாம நீங்க மங்கிக்கிட்டே போறீங்க. சொந்த சிந்தனையை டெவலப் பண்ண மாட்டேங்கிறீங்க.. நீங்க ‘ஜம்’ பண்ணவே இல்லை. ‘ஜம்’ பண்ணுனீங்களா?’

‘ம்’

‘நான் சொன்ன செய்திலாம் ஞாபகம் வரனுமே’

‘consciousஆ அனுபவிச்சி…’ – ரவூஃப்

‘அப்படி வா!. வேணுண்டே உணர்ந்து குடிக்கனும். ஒவ்வொரு ‘தம்’மையும் நாக்குல பட்டு மூக்குல பட்டு சுவைச்சி, புகை கண்ணுல படாம, இழுத்து… – குடிக்கிறதுக்காக இதை சொல்லிக் கொடுக்கலே! – இப்படி குடிச்சா சிகரெட் குறைஞ்சிடும். நான் பேசும்போது நிமிர்ந்து உட்கார்ந்துக்கிட்டு குடிக்கிறேன்ல? அப்ப எப்படி குடிக்கிறேன் பாருங்க. இப்ப நான் இன்னும் சிகரெட்டே குடிக்கலை தெரியுமா?’

‘ஆமா சர்க்கார்’

‘கவனிச்சிங்களா? இதை கவனிச்சீங்களா, இல்லெ, என் பேச்சை கவனிச்சீங்களா?’ – சிகரெட் சூடு.

**

07.04.1996

நேற்றே அக்கவுண்டண்டும் கிளெர்க்கும் சொல்லிவிட்டார்கள், காலை பத்தரை மணிக்கு இன்று (லேட்டாக) வருவதாக. இருக்கிற தொந்தரவுகளெல்லாம் காலையில்தான் ஆஃபீஸில் வரும். இருவரில் ஒருவர் வழக்கமான நேரத்தில் வந்தால் நாம் நம் வேலையை பார்த்துக்கொண்டு தொந்தரவில்லாமல் இருக்கலாமே என்று நினைத்தேன், காலையில் ‘இஸ்மு’ ஓதி முடித்ததும் – ஆஃபீஸ் போவதற்கு முன்பு. கிளெர்க் கப்பமரைக்கார் வந்துவிட்டார் , சரியாக 8.30க்கு. என்னவாம்? டிரைவிங் டெஸ்ட் கொடுக்க ‘முரூர்’ போயிருந்தாராம். எல்லோருக்கும் டெஸ்ட் கொடுத்த அரபி இவரைப்பார்த்ததும் ஒண்ணும் பேசாமல் கார்ட்-ஐ வாங்கி , 10 நாள் கழித்து ஒரு தேதியைப் போட்டுக் கொடுத்து அனுப்பி விட்டானாம், முறைப்புடன். பத்துநாள் கழித்து மறுபடியும் நினைக்க வேண்டும்!

கேஸட் தொடர்ச்சி :

‘இப்ப நான் ஒரு கேள்வி கேக்குறேன்.. Frankஆ , அல்லா ரசூலுக்கு பயந்து – ஊஹூம் , அல்லா ரசூலுக்கு பயப்படவேண்டிய அவசியம் இல்லை, எனக்குப் பயந்து, அல்லாதான் கேள்வி கேட்க மாட்டானே சும்மாவுல இருப்பான் –  சொல்லுங்க. ‘what we are today is the result of what we were in the past’ அப்படிங்குற உண்மை தெளிவா தெரியுதா? ஒத்துக்கிறீங்களா?’

‘ம்..’

‘இது Second Hand Experience. நான் சொல்றேண்டு, First Natureஆ நீங்களா உணர்ந்தீங்களா எதையாவது?’

‘நல்லா புரியுது..’

‘அப்ப இது புரிஞ்சாக்கா what we are today is the main cause of our futureண்டு புரிஞ்சிக்கனுமே!’

‘இதும் புரியுது’

‘அப்ப உங்க லைஃபை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளமுடியும்டு நம்ப முடியுதா? சும்மாக்காச்சுக்கும் தலையாட்டக்கூடாது. நூத்துக்கு நூறு.. கையை வச்சா ஷாக் அடிக்கும்ங்குறமாதிரி. Dynamic Belief. நம்புறீங்களா?’

யாருக்கும் சந்தேகம் இல்லை – ஒன்பதரை மணிக்கு ‘செஷன்’  முடிந்துவிடும் என்பதில்!

*

இடைப்பட்ட காலத்தில் Secret Symbolல் முக்கோணத்தின் கீழ் ஒரு Circle உருவாகியிருக்கிறது. ஆனால் கோடு இறக்கப்படவில்லை. மேலுள்ள வட்டத்தின் மேல்பாகம் ஏன் ‘ஷைத்தானியத்’ என்று அழைக்கப்படுகிறது? ‘ஷைத்தான் என் தலையில உட்கார்ந்திக்கிறாண்டு சொல்றோமுலெ (அதனால்தான்)?’ என்கிறார்கள் சர்க்கார். ரஹ்மானியத்தை அமுக்க முயற்சி பண்ணுகிற ஷைத்தானியத்.

பேச்சை control பண்ணும் நம்பர் பயிற்சியில் இப்போது எண்ணிக்கை மாறுகிறது. 1st Batch கிடையாது. 2nd Batch  மூன்று நாளைக்கு. 3rd & Last Batch  நான்கு நாளைக்கு.

முதல் மூன்று நாட்கள் (ஒரு தடவை):

1 to 50, 50 to 1

10 to 50 , 50 to 10

கடைசி நான்கு நாட்கள்:

1 t 50, 50 to 1 (மூன்று தடவை)

50 to 14

50 to 13

50 to 12

50 to 11

50 to 10

*

‘ஜம்’மை ஸ்ட்ராங்கா செய்யனும். அதாவது நான் நெனைக்கிறென், ‘சர்க்கார் நம்ம கூட இக்கிறாஹாண்டு (மட்டும்தான்) நெனைக்கிறீங்க. அதல்ல ‘ஜம்’. ‘ஜம்’முண்டு சொன்னா அரவணைக்கிறது. ‘ஜமாஅத்’ண்டு கேள்விப்பட்டதில்லே? நான் கேள்விப்பட்டு ரொம்ப நாளாயிடிச்சி! ஹொத்துவாப்பள்ளியிலெ ஜமாஅத் தொழுவுறாஹலே! சேனாமூனா சையது பத்தி ஒத்தவன் கமெண்ட் அடிச்சான்: ‘இப்ப முந்தி மாதிரிலாம் இல்லே சையது..! தொழுவிட்டு..வணங்கிகிட்டு’ண்டு. இதுக்கு என்னா பதில் சொல்லலாம்?’- ‘S’

‘எதுலெயே மாட்டிக்கிட்டாஹா போலக்கிதுண்டு சொல்லலாம்!’ – ஒரு சீடர்

‘ஏன் தொழுவ ஆரம்பிச்சாருங்குறதுக்குள்ள பதிலு இது . அந்த கமெண்ட்டுக்கு பதில் கமெண்ட்டை சொல்லுங்க!. இது நடந்தது. நான் பேசுறது பூரா நடந்ததுதான். நீங்களுவ பாக்கத் தவறுறீங்க. நான் பார்த்தேன்’. அவ்வளவுதான், வேற வித்யாஸம் இல்லை.

‘அது ஒண்ணும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லே..கல்யாணம் பண்ணினா திருந்திடுவாரு!’ – இதுதான் கேட்டவன் சொன்ன கமெண்ட்டாம். சீடர்களுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது. கல்யாணமானவர்கள் அல்லவா?!

*

‘ஜம்’மில் சர்க்கார் கண்டுபிடிக்கும் குறை :

‘பேச்சைக் கேட்குறது ஒரு நேரம். நீங்க என்னெட்ட திருப்பிச் சொல்லுறது இன்னொரு நேரம். நீங்க ரெண்டையும் லைஃப்லெ போட்டு பின்னுறீங்க. நான் சொல்றதை நெனைச்சிப் பாக்குறது ஒரு நேரம். இதுக்கு காரணம் கற்பிக்கிறதும் விளக்கம் கேட்கிறதும் அதை இன்னொரு ஆளுட்டெ சொல்றதும் இன்னொரு நேரம். ரெண்டையும் ஒண்ணா பிண்ணிக்கிறீங்கண்டு தெரியுது.. ‘ஜம்’ பண்ணுறது அப்படி அல்ல. நான் பக்கத்துலெ இருந்தா எதை எதை செய்வீங்களக் கண்ட்ரோலா செய்யுங்கண்டு மட்டும் சொல்லலை- அதை செய்யும்போது நான் சொன்ன கருத்துக்கள்ளாம் மனசுல வரும், வரணும்’

*

‘இது ஸ்கூல்தான். நான் சாகுறவரைக்கும் நடக்கும். நான் செத்த உடனே இது நிண்டுபோயிடும். யாரும் சொல்லமாட்டாங்க. இதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒரு காரணம், கொடுக்கக்கூடாதுங்கிற எரிச்சல். இன்னொன்னு..பாவம்..அவங்கள்ட்டெ இல்லே. வச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுறாஹா? அதனாலே.. அங்கேயிருந்துலாம் எதிர்பார்க்காதீங்க. காற்றுள்ளபோதே தூத்திக்கிங்க. Timeஐ வேஸ்ட் பண்ணாதீங்க’ – ‘S’

(தொடரும்)

குறிப்புகள் :

இஸ்மு : மந்திரம்

SS – Secret Symbol (பயிற்சி)-ன் சுருக்கம்

ரியாலத் – பயிற்சி

‘ஹப’த்துணி – இறந்த உடலில் போர்த்தப்படும் துணி

யாஸீன் – குர்-ஆனின் 36ஆம் அத்தியாயம்

துஆ – பிரார்த்தனை

ஜம் – ஒரு பயிற்சி

முரூர் – போக்குவரத்து அலுவலகம்

ரஹ்மானியத் – நல்ல சக்தி

ஷைத்தானியத் – தீய சக்தி

ஹொத்துவாப்பள்ளி – தொழுகைப்பள்ளி

ஜமாஅத் – சபை / கூட்டம்

2 பின்னூட்டங்கள்

  1. 21/08/2017 இல் 16:12

    நானா, உங்கள் குருநாதர் பல்வேறு ஞானங்கள் வாய்க்க பெற்றவர்கள் என்பதை மறைந்த டி.கே.எம்.காதர் நானா சொல்ல கேட்டேன். உங்கள் டயரியை படிக்கும் போது மிகவும் மகிழ்சியாக இருந்தது. நல்ல குருநாதரின் சகவாசம் ஒரு கொடுப்பினை.

    நீங்களும் ஜெஹபர் நானாவும் இன்ஷா அல்லாஹ் என் வீட்டுக்கு வாருங்கள்.(அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். முடியவில்லை.) உங்கள் குருநாதரைப் பற்றி தெரிந்து மேலும் கொள்ள ஆசை.

    தொடர்ந்து எழுதுங்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s