சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (13)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12

ஆபிதீன்

*

‘நம்புறதுக்கு ரெண்டுவழி இக்கிது. ஒரு வழி, திரும்பத் திரும்ப நெனைச்சிப்பார்த்து நெனைச்சிப்பார்த்து நம்புறது. மறுவழி, என் வார்த்தையைக் கேட்டு நடக்குறது. தானா நம்பிக்கை வந்துடும்! நம்பிக்கைண்டா என்னா அர்த்தம்? எது நடக்குமோ அது நடக்கும் என்று நம்புவது.. நடக்கத்தான் செய்யும் என்று தெரிஞ்சிக்கிறது. இதைத்தான் நான் நம்பிக்கைண்டு சொல்றேன்’ – ‘S’

*

‘நாம ரெண்டு வகையா பிரிச்சி பேசிக்கிட்டிக்கிறோம். ஒண்ணு ‘ரியாலத்’. அதுல ஒவ்வொண்ணும் must be filled up by the cosmic habit force. நான் ஒரு ஸ்டெப் மேலே போவும்போது அடுத்தது (ஏற்கனவே கொடுத்தது) cut ஆயிடும்டு சொன்னேன் இல்லையா? அப்படீண்டா நான் மேலே போவும்போது இதை தள்ளிவுட்டுப் போவமாட்டேன். இதுக்கு காமப்ளிமெண்டரியாதான் மேலே கொண்டு போவேன். எப்படி? இப்ப பேனா குத்திக்கிங்கண்டு சொல்றேன்ல ? அப்புறம் இதை தூக்கிப் போடுண்டு சொல்லமாட்டேன், இன்னொரு பேனா குத்தும்பேன். ஜோப்பை எடுக்கச் சொல்லுவேன். அப்ப பேனா எங்கே  குத்துறது? பனியன்லெ குத்திக்கம்பேன்; சட்டையை எடுக்க சொல்வேன். அப்ப பேனா? டேபிள் மேலே வச்சிக்கம்பேன்! சொல்ற செய்தி பூரா சேர்ந்துகிட்டே வரும். இந்த பிலாசஃபி இக்கிது பார்த்தீங்களா? அதை discard பண்ணிடுவேன். இது நத்திங், ஒண்ணுமில்லேண்டு ஆயிடும். உங்களுக்கே தெரியும். சரி, ஆரம்பத்துலே நான் என்னா வேணாம்டு சொன்னேன், எதை செய்யச் சொன்னேன்?’

‘கற்ற அறிவை துறந்துட்டு blankஆ…’ – பரமசிவம்

‘Blankness அப்படீங்குறது ரஜ்னீஸ் பிலாசஃபி. Stillnes.. ஆனா அவன் தெரிஞ்சி சொன்னானோ தெரியாம சொன்னானோ – அங்கெ உள்ளவங்களும் சரி, அந்த புஸ்தகம் படிச்சவங்களும் சரி – சரியா புரிஞ்சிக்கலே. பல்புலெ Vacumn இருக்குலெ? தண்ணிக்குள்ளே பல்பை உடைச்சிப் பார்த்து இக்கிறீங்களா? ஒண்ணுமே ஆவாது. மேலே காத்து வரும், பல்பு குசுவுட்ட மாதிரி! நம்ம குசு மாதிரி இல்லேல்லே?! சின்னதாத்தான் இக்கிம். என்னா அர்த்தமாச்சி? பல்புலெ Vacumn இல்லேண்டு அர்த்தமாவுதா?’

‘… ….. ‘

‘சொல்லித் தொலைங்களேன்.. எல்லாத்துக்கும் ஒரேமாதிரி உட்கார்ந்திருந்தா?’

‘குறைந்தபட்சமா இக்கிது. மினிமம்’

‘இல்லப்பா’

‘மாக்ஸிமம் இல்லே..’

‘கரெக்ட்! நாம நெனைக்கிற மாதிரி கம்ப்ளீட் vacumn அல்ல. இப்ப பல்பு, vacumnண்டு சொன்னா – ஏழு குதிரைகளால் இழுக்க முடியாத அளவு – இது factஓ, மிகைப்படுத்தப்பட்ட செய்தியோ – பவர் இக்கிதுண்டு சொன்னா இந்த காத்துனாலெ பல்பு நொறுங்கிடும். அப்ப இந்த air pressureலெ அந்த மெல்லிய பல்பு எப்படி உடையாம இக்கிது? அப்ப..vacumn பூரா இல்லை, இருக்குற காத்தை கொஞ்சம் எடுத்துக்கிது, அவ்வளவுதான். அதனாலெ , Mindஐ still பண்ணுறதுண்டா என்னா அர்த்தம்.. unnecssary அலைச்சல் இல்லாம நீக்குறது. எது unnecessaryயா ஓடுதோ அதை நீக்குறது. நாம unconsciousஆ பெரும்பகுதி வாழ்ந்த காரணத்துனாலே mindஐ blank பன்றதா நெனைச்சிக்கிட்டிக்கிறோம். இதுதான் stillness! Total relaxation means sleep….’ – ‘S’

*

சீடர் கவுஸ்மைதீனுக்கு கால்குலேட்டர் பிராக்டிஸ் கொடுத்திருக்கிறார்கள் சர்க்கார். நம்பர்களை கூட்டுவது, ஒருதரம் இரண்டுதரம் கழிப்பது, பிறகு கழித்த எண்ணை கூட்டுவது. பத்து நாளைக்குப் பிறகு நம்பர்களை சர்க்கார் சொல்வதாக நினைத்துக் கொள்ளச் சொன்னார்களாம். அவருக்கு சிலநேரங்களில் ‘பழையமாதிரி’ வந்து விடுகிறது.

‘நான் சொன்னமாதிரி வரமாட்டேங்குதுண்டு சொன்னா அதுக்கு பதில் வேறே. பழையமாதிரி வருதுண்டு சொன்னா அது பழக்கப்பட்டுப் பொய்டிச்சிண்டு அர்த்தம். என்னுடைய அட்வைஸை மீறிக்கிட்டு தாண்டிக்கிட்டு வருதுண்டு அர்த்தம். தெய்வீகக் காதல் போலக்கிது அதுலே! பொண்டாட்டி பக்கத்துலெ இக்கிம்போது குச்சுக்காரியை நெனைக்கிறமாதிரி! இது தப்பு. பெரிய Flaw. Mind கண்ட்ரோல் இல்லே. இதனாலே வரக்கூடிய ரிசல்ட் என்னா? Mind Wandering. நான் என்னா சொன்னேனோ அதை மட்டும் செஞ்சாதான் , in other words, உங்க அறிவையும் பழக்க வழக்கத்தையும் நுழைய விடாம கண்ட்ரோல் பண்ணுனாதான் உங்க வெற்றிக்கு நான் உத்தரவாதம் சொல்ல முடியும்’- ‘S’

*

‘கீழே உள்ளவன், ஏற்கனவே உங்ககிட்டே பழகுனவன், இப்ப உங்களைப்பார்த்து ‘ஹெட்வெயிட்’ங்குறான். அந்த வார்த்தைக்குப் பின்னாலே ஒளிஞ்சிருக்கிற உணர்ச்சி என்னா? பொறாமை இல்லை அவனுக்குண்டு வச்சிக்குங்க’

‘எரிச்சல்’

‘பொறாமை வேற, எரிச்சல் வேறேயா? இது எனக்குத் தெரியலையே!’

‘தாழ்வு மனப்பான்மை’

‘அதுவும் இல்லேண்டு வச்சிக்குங்களேன். அப்ப என்னா? சரி, தாழ்வு மனப்பான்மை. inferiority feelingsஆ complexஆ? complexண்டா பைத்தியம். feelingண்டா காலு பின்னுறது. சரி, அதுவும் இல்லே..’

‘ஏக்கம்’

‘அதுதான் தாழ்வு மனப்பான்மை. நட்டி வச்சி காமிச்சாதான் சிகரெட், சாய்ச்சி காமிச்சா சிகரெட் அல்லண்டு சொல்லிடுவீங்களோ? சரியான ஆளு வாப்பா! வெள்ளை சட்டி, வெள்ளை கைலி போட்டாத்தான் வாஹிது சாபு? அதேமாதிரி வேற வேற வார்த்தை போடாதீங்க. சரி, அப்ப வேறு என்னா குறை? அவனைத் திருத்த முயற்சி பண்ணுறீங்க.. என்ன சொல்லித் திருத்துவீங்க? ‘போனால் போகட்டும் போடா’ண்டு பாட்டு படிப்பீங்களா?’

‘தன்னை உத்துப்பார்க்கச் சொல்லனும்’

‘அதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே! இது சரி!’ – ‘S’

*

‘தன்னை உத்துப்பாருடா’ண்டு சொன்னா நம்மள்ட்டதான் வீக்னஸ் இக்கிது, அவன் வளர்ந்ததனாலே நமமாலதான் அவன்ட்டெ ஒட்ட முடியமாட்டேங்குது, நம்மளும் வளர்ந்தா தானா ‘லிங்க்’ ஆயிடுவோம். இது புரியாத அறியாமைதான் தாழ்வு மனப்பான்மையா வரும், ‘ஹெட்வெயிட்’ண்டு பட்டமாவும் வரும். பல உருவத்துலே வரும் அது. அப்ப நம்ம சைட்லெ என்னா? நாம வளர்ந்திக்கிறோம்டு உணர்ந்திக்கிறோம். அந்த உணர்வு நம்மளை தூக்கி வுடுது.. புரியுதா? வேற ஒரு உதாரணம் சொல்லுங்களேன்’ – ‘S’

‘எங்கே உணர்ச்சியை வைக்கனுமோ அங்கே வைக்கனும்’ என்று ஒரு சீடரைப்பார்த்து எதற்காகவோ (?) சொல்லிவிட்டு உதாரணத்திற்கு வருகிறார்கள், வளராதவனின் தாழ்வு மனப்பான்மை குறித்து. சீடர்களுக்கும் தாழ்வு மனப்பான்மை அதிகம்தான். பதில் கனத்த மவுனமாக உட்காருகிறது ஹாலில்.

‘இதுலேர்ந்து..உங்களுக்கு assimilating force ரொம்ப வீக்குண்டு தெரியுது. கோர்த்துப் பிரிச்சி , எதோட எதை சேர்க்கனும்ங்கிறது..’ என்கிறார்கள்.

‘நான் சொல்லவா?’ – ஆரிஃப் சொல்கிறார். ‘திருச்சி ஹத்தத்துக்குப் போயி 5 படம் பாக்குறது. மறுவருஷம் வந்த உடனே அதுக்கு ஆள் கூப்புட்டு, வராதவனை ஏசுறது’

தப்லே ஆலம் பாதுஷா… நானிலம் போற்றும்…!

சர்க்கார், ஆரிஃபின் பதில் பரவாயில்லை என்கிறார்கள். இன்னொரு சீடர் பட்டென்று ஒரு உதாரணம் சொல்கிறார். அது என்ன உதாரணமோ, ‘பட்’டும் தப்பு!

‘பட் பட்டுண்டு பதில் சொல்றீங்களே.. லைஃபோட ‘string’ பத்தி பேசிக்கிட்டிக்கிறோம், ‘பட்’ ‘பட்’டுண்டு..(பதில் சொல்லிக்கிட்டு)! அப்ப நான் சந்தேகப்படவேண்டி இக்கிது, ‘பேச்சை வுடுறா’ண்டு சொல்ற மாதிரில இக்கிது’ -‘S’

*

‘உள்ளதுலேயே ரெண்டு பேருதான் சிறந்தவன். ஒத்தவன் வேலை செய்யிறவன், இன்னொருத்தன் வேலை வாங்குறவன். சொல்லிக் கொடுக்குறவன் ஒருத்தன், புரிஞ்சிக்கிடுறவன் ஒருத்தன்’ – ‘S’

*

‘என்னை நீங்க மதிக்கத்தான் வேணும். நான் என்னா சொன்னாலும் கேட்கனும். அதேசமயம் நான் அனலைஸ் பண்ணுண்டு சொல்லிட்டா நான் சொன்ன செய்தியை வச்சி எல்லாத்தையும் அனலைஸ் பண்ணனும். அப்படி சொல்லும்போது ‘அல்ஜரஅ பேஜரபா’ சொல்லிக்கொடுத்தவங்க, abcd சொல்லிக்கொடுத்த உஸ்தாதையும் அனலைஸ் பண்ணலாம்’- ‘S’

*

சர்க்காருக்கு ‘லெவைசாபு’ என்று பெயர்:

‘எனக்கு 6 மாசத்துலே சின்னபுள்ளைல ‘இசுவு’ வந்திச்சாம். அப்பவே சேர்ந்திருக்கலாம், இப்படிலாம் அனுபவிக்க வேண்டியிக்கிதே! ‘லெவைசாபு’ண்டு பேர்வச்சி கூப்புட்டாஹலாம். என் பெயர் சையது அப்துல் வாஹிது. லெவைசாவு மாமாண்டு ஒரு ஆளு நீண்டநாள் வாழ்ந்தாஹலாம், அதனாலெ!.

***

20.05.1996 , 01: 30 நள்ளிரவு

முன்னேற்றம் வந்துதான் இருக்கிறது. நாலு முதலாளிகளில் அதிக மூளையுள்ள – அதனாலேயே வில்லங்கம் பிடித்த ! – அலிமுக்தார் நேற்று வந்தான். நீண்ட நாளைக்கப்புறம் ஆஃபீஸ் வருகிறான். இங்கிருந்து சுரண்டிய பணத்தில் அவன் ஆரம்பித்த ரியல் எஸ்டேட் வியாபாரம் கொழிக்க ஆரம்பித்துவிட்டது. தனது சகோதரர்களின் பங்கு மட்டுமல்ல. ஒரு பண்டல் தயாரித்தால் இத்தனைக் காசு ஒரு கூலிக்கு என்று இருந்ததை பாதியாகக் குறைத்து , கிடங்கிலுள்ள முப்பது நாற்பது கூலிகளின் வயிற்றில் அடித்தவன் அவன்தான். 500 பண்டல் அனுப்பிவிட்டு 5000 பண்டல் அனுப்பியதாக சொல்லி ஷேக் முஹம்மதிடமிருந்து ஏழெட்டு வருடங்களாக அடித்த கொள்ளையில் , அங்குள்ள நாலைந்து பிரிட்டிஷ்காரர்களும் ஏழெட்டு அரபிகளும் வளர்ந்தது போக , கம்பெனியும் மில்லியன்களில் சாதாரணமாக புரண்ட காலத்திலேயே அப்படி அடித்தவன். இப்போதைய சூழலில் கண்டிப்பாக எல்லோர் சம்பளத்தையும் குறைப்பான். என்றைக்கு என்பதுதான் தெரியவில்லை. சகோதரர்கள் ஒற்றுமையானவுடன் செயல்படுத்தத் திட்டமோ என்னவோ. அதுவரை முகத்தில் அலாதியான சாந்தமோ? பார்க்க வேடிக்கையாக இருந்தது. கன்னங்கரேரென்ற அவனுடைய தாடி எங்கே? இப்போதைய வெண்தாடி இருபது வருடத்தை கூட்டிக் காட்டுகிறது. இவன் வயது உண்மையில் இதுதான் போலும். ஆனால் பார்க்க கண்ணியமாகத்தான் இருக்கிறது. சொன்னேன் அவனிடம். ‘அலி, இந்த தாடி உண்மையில் உங்களுக்கு கண்ணியமாகத்தான் இருக்கிறது’. அவனது மயிர் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பானது! அளந்துவிட்டு, ‘சஹி..! தாடிக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டு உட்கார்ந்தால் பார்ப்பவன் – வருபவனெல்லாம் பெரும் பெரும் ஆட்கள் – இவன் நம்மையும் பெயிண்ட் அடித்துவிடுவான் என்று நினைப்பார்கள்’ என்றான். சஹி! ஒரு நொடிதான். ‘இதுவரை எங்களை பெயிண்ட் அடித்ததாக அர்த்தம் கொள்ளலாமா?’ என்று முட்டாள்தனமாகக் கேட்டு அதன் விளைவுகளைச் சந்தித்திருக்க வேண்டியது.. அவன் நெற்றியை உற்றுப்பார்த்து அளந்து பேசிக்கொண்டிருந்ததில் வந்த நிதானம், அவன் பணத்தில் மட்டுமே செல்வந்தன் என்ற உண்மையை அவனது வளவள பேச்சு காட்டிக் கொடுத்தமையால் ஏற்பட்ட புரிதல் , என் சைத்தானை அடக்கிற்று. இதுபோன்று முன்னர் நான் பலநேரங்களில் அடக்கியிருந்தால் என் வாழ்க்கை திசைமாறியிருக்கும் – towards positive side!

ஆனால் முட்டாள்தனங்களும் ஒரேயடியாக குறைந்துவிடவில்லைதான். நேற்றுபகல் ‘தேரா’வுக்கு ஹாட்பேக்கைஎடுத்துக்கொண்டு போனேன், இரவுக்கான ஆணம் கொண்டுவர. அங்கே போய் ஆணத்தை சட்டியிலிருந்து இதற்கு மாற்ற . ஹாட்பேக்கை திறந்தபோதுதான் தெரிந்தது, உள்ளே கிண்ணங்களே இல்லை! கழுவி வைத்ததை எடுத்து வரவில்லை! இத்தனை பயிற்சிகள் இருக்கும்போதே இப்படி! இதுவும் இல்லாது போனால் ‘தேரா’ போய் , சாப்பிட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு பசியின் காரணம் புரியாமல் ரூமிலேயே உட்கார்ந்திருப்பேனோ? ஏன் பசிக்கவும் வேண்டும்? உண்மையாக கற்பனை செய்தால் ஏன் பசி வருகிறது? இந்த டைரியைக் கூட நான் (இவ்வளவு) எழுதி முடித்துவிட்டேன்! ‘அநா மர்கஜ் உல் வஹி’தான்! மூலமும் நான்தான்! முதுகுத்தண்டும் நான்தான்..! அப்படியா? கற்பனையையே உண்மையாக ஆக்கி விடுவதின் குறிக்கோள்தான் என்ன? பெயர்களை மாற்றுவதா? குழப்பம்.. குழப்பம் தீர்க்கிறமாதிரி கேட்டு பதில்பெற டெலிஃபோனுக்கு அழ முடியாது. ரவூஃபோ எதுவும் அனுப்ப மாட்டேன் என்கிறான். வாக்மேனை அனுப்பிவிட்டு ஒரு கடிதம் எழுதினேன் சுருக்கமாக அவனுக்கு. ‘கிடைத்தது குறித்து உடன் எழுதினால் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்!’. ரவூஃப் என்னை இருக்கவைக்கவில்லை ஒருமாதம். ‘கொன்றன்ன  இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும்..!’. பத்துநாளைக்கு முன்பு நாக்கூருக்கு அவனுக்கு கடிதம் எழுதினேன். கவுஸ் மெய்தீனுக்கு அத்தர் கேட்டு (சர்க்கார் சொன்ன மகிழம்பூ அத்தர் இங்கு கிடைக்கவில்லை; மற்ற செண்ட்கள் போட்டால் முகர்ந்து பார்க்க ஒட்டகங்கள் வந்துவிடும்) எழுதிய கடிதத்தில் வைத்திருந்தேன். என் சந்தேகங்களையும் வைத்திருந்தேன் கூடவே.

‘மூத்த Astral Bodyக்கு..

ஆபிதீன். நலம். நீ கேட்ட வாக்மேன் என் உம்மாவிடம் இருக்கிறது. கேட்டு வாங்கிக்கொண்டு உடன் பதில் எழுது. அத்துடன் என் சில சந்தேகங்களையும் தீர்.

1. ‘SS’ஐ எந்த சமயத்தில் செய்வது? 24 மணி நேரத்திற்கு அப்புறமா?!

2. ஒரு ‘key word’ கொடுப்பதாக ‘S’ சொல்கிறார்கள் ஒரு கேஸட்டில் – கை தானாக மேலே வருவதற்கு. கொடுத்தார்களா?

3. ‘அஸ்ஸலாமு அலைக்க தால் கசீரன் வ சரீஅ’வா? ‘அஸ்ஸலாமு அலைக்க தால் சரீஅவ்ன் வ கசீரா’வா? தெரிந்தபிறகுதான் அஸ்மாவுக்கு பணம் அனுப்புவதாக உத்தேசம்!

4. முக்கோணத்திற்கு கீழுள்ள வட்டம் கொடுக்கப்பட்டுவிட்டதா உங்களுக்கெல்லாம்? அல்லது நமக்கு முழு ‘ரஹ்மனியத்’தும் தேவையில்லை என்று விட்டுவிட்டார்களா?

5. மதம், spiritual ஃபோர்ஸ் என்பதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு தனது வீட்டின், அடுத்த வீட்டின், அடுத்த நாட்டின், உலகத்தின் பசிக்காகப் போராடும் போராளிகளைப்பற்றிய ‘S’-ன் பார்வை என்ன தேவையில்லாத சங்கடம் கொடுப்பவர்களென்றா அல்லது தனித்து – Distinctஆக – வாழ்வதால் சிறப்பானவர்கள் என்றா? எனக்கு எழுதிக் கேட்க பயமாக இருக்கிறது. காரணம் அறியாமல் செத்துப்போன ஈராக் ஜனங்களைப் பற்றிக் கேட்டு metaphysicsஐ வாங்கியமாதிரி இதற்கும் கேட்டு வாங்கு. நீ இதில் கில்லாடி – கேட்டுப் பெறுவதில்!

6. நீ பேராசிரியன்தானா?

– ஆபிதீன் / துபாய் –

*

ரவூஃப் பேராசிரியன்தான். கடிதம் எழுதியிருக்கிறான், ஆனால் ஓட்டுப்பெட்டியில் போட்டுவிட்டான்! அதையெடுத்து போஸ்ட் பண்ணி , இங்கு அது கிடைக்க மறு ஒரு மாதம் ஆகிவிட்டது. இரண்டு நாளைக்கு முன்புதான் கிடைத்தது, முஹர்ரம் விடுமுறைக்கு முன்பு. ‘உன் தாயாரிடமிருந்து வாக்மேன் சென்ற வெள்ளியன்று (05.04.1996) வாங்கிக் கொண்டேன். தெரிவித்துவிட்டேன். நீ எழுதியபடியே நன்றியுடையவனாக இருப்பாய் என்று நம்புகிறேன்!’.

ரவூஃபின் பயிற்சியில் ஏதோ குறை இருக்கிறது. அவனுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது தூக்கலாக! ஜமால் முஹம்மது கல்லூரியில் பி.யூ.சியில் நான் சேரக் காரணமாக இருந்த அவன் அதற்கு பிராயச்சித்தமாகத்தான் சர்க்காரின் அருளைப் பெற்றுக்கொடுத்தான் போலும். அவனுடைய இந்தக் கடிதம் ‘SS’ன் சமீபத்தைய மாற்றங்களைச் சொல்கிறது. கூடவே, செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை, நினைவில் கொள்ளவேண்டியவை என்பதையும் சொல்கிறது. அவன் குறித்துவைத்த டைரிகளிலிருந்து இதைக் கோர்த்திருக்கிறான். இதை சர்க்காரிடமும் படித்துக் காண்பித்து ‘ஓகே’ பண்ணிவிட்டானாம். இப்போது செய்யவேண்டியவைகள் மட்டும்தான் அனுப்பியிருந்தான். செய்யக்கூடாதவற்றை செய்யவில்லை! DO’S.. ரியாலத்தைப் பொறுத்தவரை மூன்று மாற்றங்கள் முதலில். 1. ‘SS’க்கு முன்னும் பின்னும் மூச்சுப் பயிற்சி. 2. physical Bodyஐ Astral Body (ab) மூன்றாகப் பிரித்து அதாவது eb, ib என ஒவ்வொன்றாக அழித்துவிட்டு மீண்டும் உருவாக்குகிறது. pb, eb, ib மூன்றும் முறைப்படி பேலன்ஸாகவும் எது எது எந்த அளவு இருக்க வேண்டுமோ அந்தந்த அளவு மட்டும் இருக்கவுமான மாற்றம். 3. Triangle கீழே circle உருவாக்கி அதன் உள்ளேயிருந்து கோட்டை பாதி அளவுகீழே இறக்குவது.

‘சந்தேகங்களை ‘S’-இடம் ·போன் பண்ணி கேட்டுக் கொள். மூச்சுப் பயிற்சியை மட்டும் விவரித்து விடுகிறேன்..’

மூச்சுப் பயிற்சி :

1. படுத்து, ‘ரியாலத்’தைத் தொடங்குமுன் (2) நிதானமாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

3. ஒன்று, இரண்டு, மூன்று , நான்கு என நான்கு வரை மனதால் எண்ணி முடிக்கும்வரை 2ஐச் செய்ய வேண்டும்.

4. 3ஐ முடித்தவுடன் உள்ளிழுத்த மூச்சை ஒன்று, இரண்டு என இரண்டு வரை மனதால் எண்ணி, முடிக்கும்வரை அடிவயிற்றைக் கொண்டு இழுத்துப்பிடித்து, உள்ளேயே வைத்திருக்க வேண்டும். strain இல்லாமல் அதாவது naturalஆக, ரிலாக்ஸ்டாக.

5. 4ஐ முடித்தவுடன் நான்குவரை மனதால் எண்ணி முடிக்கும்வரை, மூச்சை வெளியே விட வேண்டும்.

6. 1 to 5 வரை ஒரு மூச்சுக் கணக்கு. இதேபோல பதினோரு தடவை செய்ய வேண்டும்.

7. ரியாலத் முடித்து எழுவதற்கு முன் repeat 1 to 6

*

DO’S :

* 1. Tension வரும்போது – உதாரணமாக கோபம், துக்கம், எரிச்சல், கெட்டசெய்தி etc.. – அது வருவதற்குமுன் Body எந்த postureல் இருந்ததோ அதையே பத்து வினாடிகளுக்கு maintain பண்ண வேண்டும்.

2. இருபது நிமிஷங்களுக்கு, நேராக ரிலாக்ஸ்டாக அமர்ந்து, வரும் எண்ணங்களையெல்லாம் தட்டிவிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இதற்கு ‘Instant Enlightment’ என்ற பெயரும் உண்டு.

* 3. எப்போதும் Quick Decision எடுக்கவும், அது தவறாக அமைந்தாலும் சரி.

* 4. விழித்ததும் கண்ணைத் திறந்து விடாமல் உடலின் அங்கங்களையெல்லாம் எங்கெங்கு உள்ளன என்று ‘செக்’ பண்ணிவிட்டு லேசாக கண்களைக் கசக்கிவிட்டு பிறகு திறக்கவும்.

* 5. ஒரு பொருளைக்கொடுக்க ஒருவர் கையை நீட்டிய உடனேயே வாங்கிவிட வேண்டும். அதாவது , கொஞ்சம்கூட தாமதப்படுத்தாமல்.

* 6. தீர்மானித்துவிட்ட சின்னசின்னக் காரியங்களைக் கண்டிப்பாக முடித்துப் பழக வேண்டும்.

* 7. ‘ரியாலத்’தை நமது பழக்கமாக, second natureஆக மாற்றிவிட வேண்டும்.

8. ஒரு காரியம் தோல்வியுற்றால் அதை உடனே மறுபடி முயற்சி செய்யாமல் கொஞ்சம் gap கொடுத்து முயற்சி பண்ணவும். (மறுபடி முயற்சி பண்ணுமுன் ரிலாக்ஸ்டாக அமர்ந்து மனதை மாற்றிக்கொள்ளவும்.)

* 9. நமக்கு சம்பந்தமில்லாத – உணர்ச்சி கலக்காத பொருள்களை / விஷயங்களைப் பற்றி (eg. குப்பை, கல் etc..) concentrationஉடன் தினம் பத்து நிமிடமாவது சிந்திக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நம்முடைய நாட்டங்கள் தானாகவே நிறைவேற இந்தப்பயிற்சி அவசியம்.

* 10. எந்தெந்த காரியம் நாமாகச் செய்தது, எவையெவை தானகவே – நம் முயற்சியின்றி – நடந்தது என்று குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்

* 11. கற்பனை செய்யும்போது இல்லாத பொருளை இருப்பதாகவே செய்யவேண்டும். (நம் ரியாலத்தே கற்பனைதான் என்றாலும் அதுதான் உண்மைஎன்றும் நம் வாழ்க்கைதான் கற்பனை என்றும் நினைக்க வேண்டும்)

12. ஒரு பிரச்சனை வந்தால் குளித்துவிட்டு (ரிலாக்ஸ் செய்து) அந்த பிரச்சனையை மறந்துவிடவும். தீர்வு தானக வரும்.

13. உடம்பு சரியில்லாதபோது ஒரு ஆழமான, அமைதியான, அலைகளற்ற கடலை கற்பனை செய்துகொண்டு ரிலாக்ஸ்டாக படுத்திருக்கவும்.

14. நோயில் இருக்கும்போது அது இல்லாத மாதிரி நடக்க ஆரம்பித்தால் – நடிக்க அல்ல – நோய் தானாக குறையத் தொடங்கும். (அதாவது நோய் இல்லாவிட்டால் அந்த நேரத்தில் என்ன செய்வோமோ அதை full concentrationஉடன் செய்ய வேண்டும்)

15. தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் அல்லது விழிப்பிற்கும் தூக்கத்திற்கும் இடையேயுள்ள gapஐ – அதாவது midway -1 ஐ – capture பண்ணிப் பழக வேண்டும்

16. புற உலகத் தூண்டுதலுக்கும் அதையொட்டிய நமது செயல்பாட்டுக்கும் இடையேயுள்ள gapஐப் புரிந்துகொள்ள வேண்டும். the gap between external stimules and our reaction to it). இதை டென்சனுக்கும் ரிலாக்சேஷனுக்கும் இடையேயுள்ள gap என்றும் புரிந்து கொள்ளவும்.

17. தெளிவாகவும் சுருக்கமாகவும் நிதானமாகவும் பேசவேண்டும்

* 18. சிந்தனைக்கு நடுவில் ஒரு சின்ன பாசிடிவ் (அ) நெகடிவ் எண்ணம் வரும். அதாவது, வந்தால், அது உடம்பில் புதிய அசைவை உண்டாக்க முயலும். அப்போது 10 வினாடிகளுக்கு எந்த புதிய அசைவையும் ஏற்படுத்தாமல் பழைய postureஐயே maintain பண்ணவும். (Refer No. 1 also)

19. மல்லாந்து, தலையணையில்லாத evenஆன மெத்தையில் ரிலாக்ஸ்டாக (கை மேல் கை, கால் மேல் கால் பட்டு டென்சன் உண்டாக்காமல்) படுப்பதுதான் முறை.

20. மேலே 19ல் சொன்னபடி படுத்து, மூடிய விழிகளுக்குள் தெரிவதையே பார்த்துக்கொண்டிருந்தால் அது நம்மை midway-1ல் கொண்டுபோய்விடும். (It will also be a compensation for loss of sleep).

21. Midway-1க்குப் போக நாம் அல்ஃபா waveல் இருப்பது அவசியம். எனவே 10 தடவை ஆழமாக மூச்சிழுத்துவிட்டுக் கொள்ளவும்.

* 22. நெகடிவான எண்ணங்கள் வரும்போது முதல் எண்ணத்தையே தடுத்து நிறுத்திவிடவேண்டும். (Resist the first temptation).

* 23. தலைக்கு வைக்கும் தலையணை மெல்லியதாக அதாவது softஆக , அதை வைத்ததும் வைக்காததும் ஒன்றுதான் என்பதைப்போல , இருக்க வேண்டும்.

* 24. பணம் வரும்போது ஏற்கனவே போட்ட திட்டப்படிதான் செலவு செய்யவேண்டும்.

* 25. ‘ஜம்’மின்போது ‘S’ பேச்சு, குறிப்பு உள்ள டைரியை படிக்க வேண்டும். நேராக அமர்ந்து, இபாதத் செய்வதைப்போல.

* 26. பணம் காசு கொடுக்கும்போதும் வாங்கும்போதும் ‘அஸ்ஸலாமு அலைக்க தால் சரீஅவ்ன் வ கசீரா’ என்று மனதிற்குள் சொல்ல வேண்டும்

* 27. நாளைய செயல்பாடுகளை இன்றைய இரவு மனதிலோ தாளிலோ குறித்துவைக்க வேண்டும். மறுநாள் செய்தோமோ என்றும் தானகவே குறித்துவைத்தது நினைவுக்கு வந்ததா என்றும் செக் பண்ணிக்கொள்ள வேண்டும்.

28. வருகின்ற உதிப்புகளை – flashகளை – தவறவிடாமலிருக்க எப்போதும் பேனாவும் நோட்புக்கும் வைத்திருக்க வேண்டும்.

29. நாம் பேசும்போது நம் கண்களை அங்குமிங்கும் அலையவிடாமல் எதிராளியின் – எதிரியல்ல – கண்களைப் பார்த்தே பேசவேண்டும்.

30. தவறுதலாக வாழ்ந்துவிட்ட கடந்த காலத்தை சரியாக வாழ்ந்ததாக மறுபடியும் கற்பனையில் வாழ்ந்து (நினைத்து) பார்ப்பது தன்னம்பிக்கையை வளர்க்கும்.

*

அவ்வளவுதான். இதில் ‘*’ குறி போட்டதெல்லாம் கட்டாயம் என்றிருந்தான். இந்த DO’Sஐ நீ படிக்கும்போதும் மரியாதையுடன்தான் படிக்கவேண்டும். Ravoof எழுதியதுதானே என்று படிக்கக்கூடாது என்று DO’S No. 25ஐ குறிப்பிட்டிருந்தான். மறக்காமல் இதற்கு ‘*’ போட்டிருந்தான்! (‘உன்னைப் பழிவாங்க எனக்கும் இதைவிட்டால் சிறந்த வழி ஏது’ – ரவூஃப்)

சந்தேகங்களை சர்க்காரிடமே கேட்டுவிடலாம் என்று 17.05.1996 அன்று இரவு ஃபோன் செய்தேன். கிடைத்தார்கள்.

முக்கிய சந்தேகமாக PBஐ AB மூன்றாகப் பிரித்து (PB, EB, IB என) அவற்றைப் பிறகு அழித்து மீண்டும் உருவாக்குதைக் கேட்டேன்.

‘ரவூஃப் கடிதம் கிடைச்சிச்சி சர்க்கார்… DO’Sலாம் எழுதியிருந்தான். அதுல இது வருது’

‘இதையே கண்டினியூ பண்ணுங்க’

எதை? நான் பண்ணிக்கொண்டிருப்பதையா அல்லது ரவூஃப் எழுதியதையா? திரும்பக் கேட்கலாம் என்றால் சர்க்காரின் குரலில் உற்சாகமும் இல்லை. வெள்ளி செஷன் முடிந்திருக்குமே.. என்ன காரணம்?

முக்கோணத்திற்கு கீழே circle வருவதையும் கேட்டேன், எந்த ஸ்டேஜில் இதை இணைக்கவேண்டும் என்று.

‘அவன் என்னா எழுதியிக்கிறாண்டு தெரியலையே..அவன் வரட்டும், கேட்டு சொல்றேன்’

‘ரவூஃப் அங்கேயில்லையா சர்க்கார்?’

‘ச்… வெளிலே போயிருக்காங்க.’ – அலுத்துக்கொண்டார்கள். இந்த எரிச்சலான அலுப்பு புதிதாக இருந்தது.

சர்க்காருக்கு உடம்பு சரியில்லையா? சனிக்கிழமை காலை ரவூஃபைத் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்கிறேன் என்று சலாம் சொல்லி வைத்துவிட்டேன்.

ரவூஃபும் அவன் பங்குக்குக் குழப்பினான். அவன் மகள் ‘பெரிய புள்ள’ ஆகிவிட்டாளாம். இதனாலோ? என் கடிதமும் அவனுக்கு கிடைக்கவில்லையாம். கிடைத்தபிறகு அவன் பதில் எழுதுவான். இந்த DO’Sஐப்பார்த்து நான் கேட்கும் சந்தேகங்களுக்கும் உடனே பதில் எழுதுவான். ‘அது இருக்கட்டும், செஷன் எல்லாம் இப்போது எப்படி இக்கிதுப்பா?

‘அதை ஏன் கேக்குறே, நேத்துதான் (சர்க்கார்) பேசுனாஹா. போன 5 செஷனும் சுத்தமா ஒண்ணும் பேசலே’

‘ஏன்?’

‘நீங்கள்லாம் உருப்படமாட்டிங்கண்டு சொல்லிட்டாஹா.. முதல்லெ, கொடுத்ததை ஒழுங்கா பண்ணிப்புட்டு வர்றதை பாருங்கண்டாஹா. நேத்தும் பேசினாஹாண்டு சொல்ல முடியாது, ஒரே திட்டுதான் எல்லாருக்கும்’

‘அப்ப பேசுனாஹாதான். ஏன் தனியா பிரிக்கிறே?’

ரவூஃப் சிரித்தான். ‘நீ உருப்படமாட்டாய்!’ என்றான்.

*

ரவூஃபுக்கு 19.05.1996 அன்று எழுதிய கடிதம் :

அன்புள்ள குமராளிக்கு (யாரோ திட்டுகிற மாதிரி இல்லை?!)

பசுமையான மலை, ஓடை. அதன் அருகே விரிந்திருக்கும் புல்வெளியில் படுத்திருக்கிறேன் ரிலாக்ஸ்டாக உடம்பை, மூச்சை வைத்துக்கொண்டு. ‘Everyday in Everyway I am growing better and better’ என்று பதினோரு முறை சொல்லிக்கொள்கிறேன். இந்த பயிற்சி, நானும் எனது Astral Bodyயும் மேலேபோக சர்க்கார் கொடுத்தது என்ற நினைப்புடன் மேலே கிளம்புகிறேன், என் Astral bodyயுடன். 6 அடி உயரம்வரை மல்லாந்தபடி போனவன் குப்புறப் படுத்து அரைவட்டமாகச் சுற்றி , கீழே இறங்குகிறேன். PB, ABயின் தொப்புளை Silver Cord இணைத்திருக்கிறது. இரண்டின் உடலிலும் அன்றைய வண்ணத்தின் ஜட்டி மட்டும். இப்போது ஒரு கருப்புப் பலகையில் வெள்ளைக் கோட்டால் ‘SS’ சிம்பலை வரைகிறேன் – ‘அநா மர்கஜ் உல் வஹி..அநா மர்கஜ் உல் இல்ஹாம் அநா மர்கஜ் உல் குல்லிசய்’ சொல்லியவாறு. அதன் உள்ளே வட்டம் உருவாகிறது – ‘ஷைத்தானியத்’, ‘ரஹ்மானியத்’துடன். இதன் முடிவில் வானம் சிவக்கிறது. ஒளி வருவதைப் பார்த்துக்கொண்டே மறுபடி மேலெழும்பி பழைய நிலை-உயரத்திற்குச் சென்று மெல்ல கீழிறங்கி PBயுடன் கலக்கிறேன். ‘SS’ல் எனக்கு சர்க்கார் சொன்னது இதுதான். இதில் அடுக்குகள், emotional, intellectural என்பது கிடையாது. பழைய கேஸட்டுகளைக் கேட்டு இதில் நானாக சேர்த்துக்கொண்டது , முக்கோணம் வரைந்து முடித்ததும் அதனின்று வெண்ணிற ஒளி கிளம்பி PBயின் பிட்யூட்டரிக்கு போவதும் அதே சமயத்தில் ABயின் கண்ணிலிருந்து நீலஒளி கிளம்பி PBயின் இதயத்திற்கு போவதும். ஒரு மாதத்திற்கு முன்பு Astral Travelஐ சர்க்காரிடம் கேட்டு வாங்கினேன். இவ்வளவுதான். இது தவிர ‘ஜம்’மில் செய்ய எனக்காக சில பயிற்சிகள் தந்தார்கள். அது இப்போது தேவையில்லை. ‘SS’ஐப் பொறுத்தவரை உனது கடிதம் கண்டதிலிருந்து – ”S’இடமும் அனுமதி பெற்று – மூச்சுப்பயிற்சியை தொடர்கிறேன். (‘SS’ன் முடிவில் எண்கள் எண்ணுவதைச் செய்கிறேன் – முதலில் இருந்தே.  சொல்ல மறந்துவிட்டேன். இது இப்போதும் தொடர்கிறதா?) ‘கில்லா’வும் உருவாக்கிக் கலைக்கிறேன் கடைசியில். இதுவும் இருக்கிறதா இப்போது? எனது இப்போதைய சந்தேகம் , முக்கோணத்தின் கீழுள்ள வட்டத்தை எந்த சமயத்தில் எப்படி உருவாக்குவது என்பது. ஃபோனில், உள்வட்டத்தை ஃபார்ம் செய்யும்போதே இதையும் சேர்த்து பண்ணச் சொன்னாய். அதாவது , மூன்றுமுறை இந்த கீழுள்ள வட்டத்தையும் இலேசான, அழுத்தமான, ஆழமான அடர்த்தியில் வரையவேண்டும். அப்படித்தானே? சரி, வட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்குவதா அல்லது ஒரே சமயத்தில் இரண்டும் உருவாகிற மாதிரி எண்ணுவதா? அப்புறம்… PBஐ AB மூன்றாகப் பிரிப்பது எனக்குப் புரியவில்லை. 6 மாதமாக நேராக சிரமமில்லாமல் கிளம்பிப் போய்விட்டு இப்போது ‘அடுக்குக் குப்பி’ அடிப்பது கஷ்டமாக இருக்கிறது! ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து அழிகிறதா கடைசியில்? அழிகிறதா அல்லது கலக்கிறதா? எழுது விரிவாக.

செய்யக்கூடாதவைகளையும் நினைவில் கொள்ளவேண்டியவைகளையும் எனக்கு உடனே அனுப்புவதை நினைவில்கொண்டு செய்.

கேஸட்கள் அனுப்பிவைப்பதாகச் சொன்னாய். இதை மறக்காமல் நான் ‘ஆப்பத்தில்’ ஊர்வரும் வரை சொல்லவும். அப்படியே அனுப்பினாலும் சர்க்கார் சுத்தமாக மௌனத்தில் இருந்த 5 செஷனையும் அனுப்ப வேண்டாம். ஆனால் பத்திரமாக வைத்திரு. உலகம் கடைசியில் இந்த காலி கேஸட்டில்தான் இறைத்தத்துவத்தைக் காணும்.

இதுபோல் காலி வீடியோ கேஸட்டையும் தயாரிக்கவும்!

இந்த கன்றாவி கிறுக்கல் எழுத்துக்கு மன்னித்துக்கொள். இந்த எழுத்து முன்னேற்றத்தின் அறிகுறி!

உருப்பட ஆசைப்படும்,

ஆபிதீன்

*

24.05.966 வெள்ளி செஷன் முடிந்து.

ரவூஃபுக்கு எழுதிய கடிதத்தை இன்றிரவு ஊர்போன ஆஜாத் என்பவரிடம் அனுப்பிவைத்தேன். எப்போதும் வழக்கமாக ஊர்போகும்போது என்னிடம் சாமான் கேட்டிராத அவர், ‘அஸ்ரா ஜிகினா செருப்பு கேட்டாளே.. அனீஸுக்கு ஷூ வேண்டுமே.. யாரிடம் அனுப்புவது..இவரிடம் கொடுத்தனுப்பலாமா’ என்று நினைக்கும்போது ‘ஏதாச்சும் சாமான் இந்தா கொடுங்களேன்!’ என்றார். கொடுத்தனுப்பினேன், உடன் கடன் வாங்கி. பகல் 1 1/2 மணிக்கு ஏர் இந்தியா. ஏர் இந்தியா ஆயிற்றே..ஏதாச்சும் டெக்னிகல் ஃபால்ட் இக்கிதாண்டு முன்னாலேயே கேட்டுக்க’ என்றான் மஸ்தான் மரைக்கான். ‘ஆமாமா.. கிரௌண்டிலேயே டெக்னிகல் ஃபால்ட் இந்தா பரவாயில்லே.. மேலே போனப்புறம் சொல்லிடப்போறான்’ என்றார் அவர். அட, அப்படி ஆனால்தான் என்ன? கீழே விழுந்துகொண்டிருக்கும்போதே (துபாயில்) வாங்கிய புடவைகளின் விலையெல்லாம் மனசில் வரும். அதோடு அந்த புடவைகள் நாவப்பட்டினம் மோகன் ஜவுளி ஸ்டோர்ஸில் 300, 400 ரூபாய்க்கு கிடைப்பதும் ஞாபகம் வரும். பிறகு புடவைகளும் ஞாபகங்களும் மட்டுமே இருக்கும். ஆனால் ரவூஃப் கடிதம் முக்கியம் ஆஜாத்..!

ரவூஃபிடம் இன்னொரு முக்கிய சந்தேகமும் கேட்டிருந்தேன். ‘SS’ன்போது இடையூறு ஏற்பட்டால் அதே நாளின் பிறிதொரு நேரத்தில் செய்வதா அல்லது அடுத்த நாளைக்கு பண்ணுவதா என்பது. சர்க்காரிடம் கேட்டு பதில் எழுதச் சொல்லியிருந்தேன். துபாயில் யாருக்கும் கிடைக்காத தனியறை கிடைத்தாலும் , இத்தனைக்கும் நான் அதிகாலையில் ‘SS’ பண்ணினாலும் , ரூம் கதவை உடைக்காத குறையாகத் தட்டி என்னை உதறவைத்த சம்பவங்கள் இந்த மாதத்தில் மூன்றுமுறை நடந்துவிட்டது. மூத்த முதலாளியின் ஸ்க்ரேப் டிவிசன் சாமான்களை , உபயோகப்படாமல் இருந்த ஆஃபீஸின் இன்னொரு பக்கத்தில் முழுதாக மேலும் கீழும் அடைத்ததால், அதை ஏற்ற/இறக்க வரும் கூலிப்பட்டான்கள், அவர்களை அந்த நேரத்தில் அனுப்பும் பஞ்சாபி சர்தார் அலி…

ஜெப்பார்நானாவிடம் இன்று காலை கேஸட்கள் வாங்கப்போகும்போது இந்த பிரச்சனையைச் சொன்னேன்.

‘கதவைத் தொறக்காதீங்க’ என்றார்.

‘முடியலே நானா. பத்து நிமிஷம் தொடர்ந்து தட்டுறானுவ.. ரூம் வாசல்ல என் செருப்பு கெடக்குது. ஏசி ஓடுறது தெரியுது. ஆள் உள்ளெதாண்டு தெரிஞ்சிக்கிறானுவ’

‘வெளிகேட்டை பூட்டி வச்சிடவேண்டியதுதானே.. ‘SS’ முடிஞ்சபொறவு தொறந்துக்குறது’

‘பில்டிங் ரைட் சைடுலெ நிஸ்ஸான் கார் குடவுனோட வாசல் இக்கிது. அது எப்பவும் திறந்துதானே இக்கிது. அந்தப்பக்கமா வந்துருவானுவ’

‘வந்தானா அப்படி?’

‘இல்லெ. ஆனா..நம்ம பக்கத்து வெளி கேட்டுக்கும் பூட்டு கெடையாது. ரெண்டு மூணு தடவைபோட்டு காத்துல  பிச்சிக்கிட்டு பொய்டிச்சி’

‘அதுக்கு முதல்லெ ஏற்பாடு பண்ணுங்க. ரியாலத் மட்டும் இடையிலே கட் பண்ணாதீங்க’

‘ஆமா நானா..அன்னக்கி பூராவும் upset ஆயிடுறேன் நான்’

நான் upset ஆவதுபோல் ஜெப்பார்நானா இன்னொரு விஷயமும் சொன்னார், சர்க்கார் மருமகன் தாவுதுகுட்டி சிங்கப்பூர் போய்விட்டான்தானே? என்று கேட்டதற்கு.

‘இப்பதாங்க விடிவுகாலம்…அந்த ஹராமுல பொறந்தவன் இருந்ததாலத்தான் சர்க்காரோட பழையசெட் ஆளுங்கள்லாம் வராம பொய்ட்டாஹா. ஒவ்வொரு ஆளைப்பத்தியும் ஒண்ணுகெடக்க ஒண்ணு சொல்லி சர்க்கார் மூளையை குழப்பிடுவான். புட்டுச்சேரி , நெரவியூர்லேர்ந்து ரெண்டுபேரு வருவாஹா அப்ப. சர்க்கார் மேலே உசுரு அஹலுக்கு. அஹ பொண்டாட்டியை.. வேணாம், நானா இருந்தா வெட்டிப்போட்டிருப்பேன் அவனை. பெரிய திருடன் வேறேங்க! பாருங்களேன் இப்பவும் சர்க்கார்ட காசுலெதான் சுத்திக்கிட்டிக்கிறான்.. சர்க்கார் போன உடனேயே தட்டுப்பிச்சைதான் பழையபடி இவனுக்குலாம்..’ – பொரிந்து தள்ளினார்.

காசு.. எல்லாவற்றையும் அது தீர்மானித்துவிடுகிறதா? வியாழன் இரவு ‘தேரா’ புறப்படுமுன் ஆஃபீஸை விட்டுக் கீழிறங்கும்போது தௌலத்காக்காவை பார்த்தேன். இது எத்தனையாவது மெர்ஸிடிஸ்? சமீபத்தில்கூட அவருக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது. ‘மொளஹா கொத்தமல்லி’ என்று அவரைக் கிண்டல் செய்யும் விரோதிகளை அழவைக்க அவர் மீண்டுவிட்டார், சென்னை ஆஸ்பத்திரியிலிருந்து. போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்தான். ஆனால் ரியாலத், ஜம், பயிற்சிகள், ஆஃபீஸ் வேலை, இந்த டைரி என்று இப்போது நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. காசைத்தவிர வேறெதையும் பேசத் தெரியாதவர். (அரசியல் பேசுவார். உபைதுல்லா, கருணாநிதி அரசியல். இது வேறுதான்!) ஆனாலும் இந்த முக்தார்அப்பாஸ் கம்பெனியில் நான் குப்பைகொட்ட காரணமாக இருந்திருப்பவர். அவரது கம்பெனியிலும் 1 1/2 வருடம் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருக்கிறேன். வேறிடத்தில் வேலை கிடைத்து, இவர் சிபாரிசு செய்தால்தான் வேலை என்று அல்-அய்ன் ‘குண்டாசோறு’ காக்கா சொல்லிவிட, இவரோ தன்னிடம் வந்துவிடுங்கள் என்று என்னை பிரியாணி போட்டார். பிறகு என்னைக் கலந்தாலோசிக்காமலேயே இங்கு என்னை வீசினார். ஆனாலும் ஊரில் வீசி எறியவில்லையே இவர் என்று மரியாதை காட்டவேண்டியிருந்தது. இவருக்கு காட்டினால்தான் பெரிய முதலாளிக்கு மரியாதை காட்டியமாதிரி. உயிர் பார்ட்னர். Wheat Bran ஐ ஒரு பை 38 திர்ஹம் கணக்கில் டன் டன்னாக ‘MKT’யிலிருந்து முக்தார் அப்பாஸ் வாங்கும். பிறகு 28 திர்ஹத்திற்கு ‘MKT’யிடம் விற்றுவிடும்..! மூளை : தௌலத்காக்கா. தன் பெண்டாட்டியைச் செய்யவே இவரிடம் என் பெரிய முதலாளி முஹம்மது முக்தார் உத்தரவு கேட்க வேண்டும். நானும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று தௌலத்முக்தார் (!) எதிர்பார்த்தாரோ என்னவோ.. பார்த்ததும் ‘அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா’ என்று கிட்டே போனதைக் கண்டு ‘விசுக்’கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். சரியாக காதில் விழவில்லை போலும் என்று suggestion கொடுத்துக்கொண்டு (!) ‘அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா, சௌக்கியமா இக்கிறீங்களா?’ என்று கேட்டேன். என்னை ஒரு நொடி வெறுப்புடன் பார்த்துவிட்டு , மறுபடி ‘விசுக்’. முகத்தில் காறித்துப்பியமாதிரி இருந்தது. பதிலுக்கு நிஜத்தையே துப்பியிருப்பேன். அடுத்தநொடியில் சர்க்காரின் முகம் வந்து மறைந்தது. ‘அட, இது ஒரு புது வ அலைக்கும் ஸலாம்’ என்று மனதிற்குள் சிரிப்பாய் நினைத்துக்கொண்டு கொஞ்சமும் பதட்டப்படாமல் ரூமுக்கு வந்துவிட்டேன். நிதானமாக அலசினேன். நான் போய் அவரைப் பார்க்கவில்லை.. ஃபோனும் பேசவில்லை என்ற வருத்தம் அவருக்கு. பாவம் , பிச்சை போட்டிருக்கலாம்தான்., வாப்பாவின் மௌத்திற்கு என்னை அவர் கண்டுகொள்ளாமல் இருந்தால் என்ன? அவர் மாமனாருக்கு இவர் ஆயிரம் மடங்கு உசத்தியாயிற்றே..! ‘MKT’-இல் வேலைபார்க்கும்போது வெகேசன் போன என்னிடம் – தன் எல்லா ஆஃபீஸ் ஸ்டாஃப்களிடமும் கொடுத்தனுப்புவது போல – 5 கிலோ சாமான் (லக்கேஜுக்கு தனியாக பணம் கொடுக்காமல்… அதான் டிக்கெட் கொடுத்தாயிற்றே!) கொடுத்தார் தௌலத்காக்கா. அதை ஊரில் வாங்கும்போது லேசாகச் சிரித்த அவரது மாமனார் நான் பயணம் சொல்லப்போகும்போது நாயாய் மாறினார்.

‘இன்னக்கி நைட் புறப்படுறியும்.. இப்ப காலையிலே வந்து பயணம் சொன்னா என்னா மயிர் புடுங்குறது?’ – மேலத்தெரு முழுதும் அவர் குரல் கேட்டிருக்கும். நான் கூனிக் குறுகினேன். விரல் பட்டாலே சுருண்டுவிடும் கிழவன் அவன். நோய் வேறு. ‘இல்லே காக்கா.. டிக்கெட் பிராப்ளம்.. peak சீசன்.. இப்பதான் கன்ஃபர்ம் ஆனிச்சி. உடனே வந்தேன் இங்கெ.’ என்றேன்.

‘தடார்’ – கதவை அறைந்து சாத்திவிட்டுப் போனார் அந்தக் கிழவன்.

என் முகமெங்கும் ஒரு மலக்கூடை கவிழ்ந்த மாதிரி இருந்தது. திரும்பக் கதவைத் தட்டிக் கூப்பிட்டு , எட்டி உதைத்துவிடலாமா இந்த திடீர் பணக்காரக் கொழுப்பை என்று உடல் முழுதும் பதறிற்று. என் பிள்ளைகள் ஞாபகம் வந்தார்கள். விசா வேறு முடியப் போகிறது..இன்னும் மாற்றவில்லை. பழைய ‘ஆப்பத்தில்’ உம்மா போட்ட அழுகிய முட்டையின் நாற்றம் மூக்கைத் துளைத்தது. பொத்திக்கொண்டு வந்துவிட்டேன் மௌனமாக. ஆனால் தௌலத்காக்காவிடம் சொல்லவில்லை அவர் மாமனார் பற்றி. இருந்தாலும் பொரிச்ச உல்லான்களை கொண்டுவராமல்போன என்னிடம் ஒருவாரம் கோபமாகத்தான் இருந்தார் அப்போது. பிறகு தணிந்துவிட்டது . வேறு ஆள் கொண்டுவந்திருப்பான்! இப்போதைய கோபம் நிச்சயமாக பொரிச்ச உல்லான் அல்ல! கோலாக் கருவாடும் அல்ல. தட்டுப்பிச்சை கிடைக்காதது..!

இப்போதுள்ள ஆபிதீனின் மனசுக்குத்தான் என்ன தைரியம்! அந மர்கஜ் உல் வஹி.. அந மர்கஜ் உல் இல்ஹாம்…!

(தொடரும்)

குறிப்புகள் :

‘S’ – சர்க்கார்
ரியாலத் – பயிற்சி
அல்ஜரஅ பேஜரபா – அரபி அட்சங்களை சொல்லிக்கொடுக்கும் முறை
இசுவு – வலிப்பு
சஹி – சரி
ஆணம் – குழம்பு
அநா மர்கஜ் உல் வஹி – நான்தான் வஹியின் மையம்
ரஹ்மானியத் – நல்லசக்தி
இஸ்மு – மந்திரம்
ஜம்’ – ஒரு பயிற்சி
குமராளி – கல்யாணமாகாத மகளுள்ள தந்தை
ஷைத்தானியத் – தீயசக்தி
கில்லா – கோட்டை
அடுக்குக் குப்பி – பலர் சேர்ந்து ஒன்றாகச் செய்யும் ஓரினப்புணர்ச்சி
ஆப்பத்தில் – OneWay (Exit)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s