மாப்ளா கிளர்ச்சியிலும் செய்தி இருக்கு

பாக்தாத்-ஐ முந்தாநாள் ‘பார்வை’யிட்டுச் சென்ற பராக் ஒபாமாவுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.  ‘ஷெஹர்ஜாத் கதை சொல்வதை நிறுத்தி விட்டாள்’ என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘அட்சரத்தில்’ எழுதிய அருமையான தலையங்கத்தைத்தான் பதிய நினைத்தேன். கோப்பு காணோம்! தேடி எடுத்து பிறகு பதிகிறேன். இப்போது Conrad Wood ன் நூலை ‘மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்’  என்ற தலைப்பில் மொழி பெயர்த்த ஜனாப். இக்பால் அஹ்மதின் பேட்டி ( மக்கள் தொ.கா ,  31/3/2009 ).

‘மாப்ளா’வை மறுப்பவர்கள் மலர்மன்னனைப் பார்க்கலாம், கற்பக விநாயகத்தின் காட்டமான எதிர்வினையோடு.

***

malapar011கஜேந்திரன் : இந்த (மாப்ளா) போராட்டம் உருவானதற்கு , இந்த ‘முற்படு தேவைகள்’ண்டு சொல்வாங்களே , prerequisite.. , அது என்ன சூழ்நிலை? எதனால் அந்தப் போர் வந்தது, அதற்குப்பிறகு ஏற்பட்ட சமூக விளைவுகள் என்னவாக இருந்தது?

இக்பால் : நான் இப்ப மாப்ளாக்களப் பத்தி சொன்னேன், முஸ்லிம் மதத்தவர்கள்ண்டு. இப்ப நம்ம பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு வருவோம் , கேரளாவப் பத்தி ஒரு விஷயத்தை விவேகானந்தர் சொல்லியிருக்கார். அவர் சொன்ன கோட்பாட்டை இப்போது பொருத்திப் பார்க்க முடியாது, ஆனால் பத்தொன்பதாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கேரளா எப்படியிருந்தது பற்றி விவேகானந்தர் சரியாக ஒரேவார்த்தையில் சொல்லியிருக்கிறார், ஒரே வரியில். ‘கேரளா என்பது ஜாதிவெறியர்களின் ஜாதிப் பிடிமானத்திலுள்ள பைத்தியக்காரர்களின் சிறைக்கூடம்’ என்று சொல்லியிருக்கிறார், அப்போ! அப்படியென்று சொன்னால் நாம் சாதாரணமாக உயர்சாதியினர் என்று சொல்கின்றோமே பிராமண சமூகத்தினர், நாம இப்போ ஒரு சமூகத்தினரைப் பற்றி பேசவில்லை. இருக்கின்ற நிலைமையைப் பற்றிப் பேசுவதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நம்பூதிரிகள் எனப்படுபவர்கள் அங்கே கேரளாவிலே மிக உயர்ந்த , இந்துமதத்தினுடைய மேல் அடுக்கிலே இருப்பவர்கள். இந்துமதத்திலே பிராமணர்கள், சத்திரியர், வைசியர் , சூத்திரர் அதற்கு மேல் பஞ்சமர் என்றுகூட உண்டு. இந்த ஜாதி pyramidலே மேல் அடுக்கில் இருப்பவர்கள் பிராமணர்கள், அவர்களிலும் உயர்ந்தவர்கள் நம்பூதிரிகள். இந்த மலபார் பகுதியிலே என்ன விசேஷமான சூழ்நிலை என்று சொன்னால் 1921க்கு முற்பட்டு – அதாவது 1850களுக்குப் பிறகும் கூட , மூன்றில் இரண்டு பகுதியினர் இந்து மக்கள் – மலபார் பகுதியில். மூன்றில் ஒருபகுதியினர் மாப்ளா மக்கள். 30 லட்சம் பேர் மலபாருடைய மக்கள் தொகை அப்ப 1921லெ. அதற்கு முற்பட்ட காலத்திலே குறைய கொஞ்சம் இருந்திருக்கலாம். எப்போதுமே அந்த விகிதாச்சாரம் இருந்திக்கிட்டு இருக்கு. இரண்டு பகுதி மக்கள் இந்துக்களாகவும் ஒரு பகுதி மக்கள் மாப்ளாக்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு பகுதியினர் கிருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள்.  ஏன் இதை சொல்கிறேன் என்று சொன்னால் நம்பூதிரிகள், நாயர்கள் இவர்களுடைய பெரும்பகுதியினரின் கட்டுப்பாட்டில்தான் கேரளா மலபாருடைய மொத்த நிலப்பரப்பும் இருந்திருக்கிறது. மாப்ளாக்களிலும் , ஓரிரண்டு பேர் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவர்களுக்கு , நிலம் இருந்தது. அது வந்து  ஒண்ணு, ரெண்டு.. அத ஒதுக்கிவிடலாம்டு சொல்லக்கூடிய அளவுக்குத்தான் அதனோட விகிதாச்சாரம் இருந்தது. இந்த நம்பூதிரிகளும் நாயர்களும் தங்களுடைய நிலத்தை குத்தகைக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த குத்தகையில் ஈடுபட்ட வகுப்பினர்தான் மாப்ளாக்கள். ஏனென்றால் இயற்கையாகவே மூன்றில் ஒரு பகுதியினராக அவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அந்த உழைப்பு சக்தியை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். குத்தகை விவசாயிகளாக , நாயர்களுடைய நம்பூதிரிகளுடைய நிலத்தை – ஒரு விஷயத்தையும் சேர்த்து சொல்ல வேண்டும் – கோயில் நிலங்கள்  ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அந்த நேரத்தில் இருந்தது. அந்த நேரத்தில் மன்னர்களாக கருதப்பட்டவர்கள் – சாமுத்திரிபாடு என்று நாம சொல்கிறோம் அவர்களை. உதாரணமாக திருவாங்கூர் பகுதி கோழிக்கோட்டு பகுதி ராஜாவ கோழிக்கோடு சாமுத்திரிபாடு என்கிறோம். நம்பூதிரிகளை விட ஒருபகுதி உயர்ந்து மன்னர் மாதிரியான ஆட்சியைப் புரிகின்றவர்கள். இவர்களுடைய மொத்தமான நிலங்களிலும் பாடுபட்டு செல்வத்தை வளர்த்துக் கொடுத்த மாப்ளாக்கள் – அவர்களுக்கும் இவர்களுக்கு இடையே காலப்போக்கிலே அந்த நிலம் சம்பந்தமான உறவுகளில் ஏற்பட்ட விஷயம்தான் கடைசியிலே மாப்ளா கிளர்ச்சியாக வந்து நின்றது. என்ன உரசல்கள் அப்படீண்டு சொன்னா அவர்களுக்கான நிலத்தில் ஈடுபட்டு உழைத்ததிற்கான சரியான ஒரு இழப்பீடு கொடுப்பதில்லை – கூலியாகவோ நெல்லாகவோ – அல்லது தேவைப்பட்ட நேரங்களில் ஒன்றிரண்டு எதிர்ப்புகள் தலைதூக்கும்போது  அவர்களை நிலத்திலிருந்து வெளியேற்றி விடுவது, அல்லது அவர்களை கட்டி வைத்து அடிப்பது போன்ற பலவிதமான கொடுமைகள் நடந்திருக்கின்றன. இதனுடைய ஒரு தொடர்ச்சியாக எப்ப பார்க்கலாம்டு சொன்னா 1836…அப்பதான் முதல் ஒரு கலகக் குரல், கலகம் என்று சொல்லக்கூடிய பட்டியல்படுத்தனும் என்று சொன்னால் 1836ல்தான் நடந்திருக்கு. மொத்தம் 1921 வரையான காலகட்டம் வரைக்கும் 30 கலகங்கள் நடந்திருக்கின்றன. இந்த 30 கலகங்க்ளில் ஏன் 1921 கலகத்தை மிகப்பிரமாதமாக அல்லது மிகப் பெரிதாகப் பேசுகிறார்கள் என்று சொன்னால் அதுதான் ஒரு முத்தாய்ப்பாக அமைந்தது. கேரளாவில் இருக்கக்கூடிய , அவர்களுக்கும் இவர்களுக்குமான அந்த உறவில் ஒரு பெரிய – ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம் என்று சொல்வோமே.. – அந்த அளவுக்கு. நான் சொல்லக்கூடிய 1921 காலகட்டம் பிரிட்டிஷார் நம்மை ஆளுகின்ற காலகட்டம் 1836 என்று சொல்லும்போது – அதுவும் பிரிட்டிஷார்தான் – அதுக்கு முந்திய காலகட்டத்தை கிழக்கிந்திய கம்பெனிண்டு சொல்ல வேண்டியிருக்கு. இந்த 1921 என்று நம்ம சொல்லும்போது அது மிகப்பெரிய, ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டிய நிகழ்வா , ஒரு கலகமாக அமைந்தது. அந்த கலகத்தைப் பற்றி பேசனும்டு சொன்னா ரொம்ப அது இதயத்தைப் பிழியக்கூடிய நம்மை நெகிழ வைக்ககூடிய மிகப்பெரிய நிகழ்வாக அமைந்தது. ஏனென்றால் அந்த கலகத்தில் மட்டும் – 1836ல் முதல் கலகம்டு நான் சொன்னேன், 1921ல் நடப்பது முப்பதாதாவது கலகம். 27ஆவது கலகத்துலெ 97 பேர் உயிரிழந்தார்கள் . நான் சொல்லும்போது உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும் . ஒரு 70, 80 வருட காலமாக ஒரு சரவெடி வச்சோம்டு சொன்னா எப்படி வெடிக்கும்? அதே மாதிரி அந்த இடைவெளிகளில் அந்த கலகங்கள் நடந்து கொண்டே வந்தது.

ஒரே மைய சரடு அதில்?

ஒரே மைய சரடு வந்து நிலத்தின் மீதான் அவர்களுக்கும் இவர்களுக்குமான உறவு..அந்த 1896லெ 99 மாப்ளாக்கள் மடிந்த பிறகு 1921லெ மடிந்த மாப்ளாக்களின் எண்ணிக்கையை நான் சொன்னேண்டு சொன்னா நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். 10000 மாப்ளா மக்கள் மடிந்தார்கள் – அந்த 1921ல் மட்டும். அவர்களில் 3000 பேர் அந்தமான் சிறைகளில் உயிரை இழந்தார்கள். 22 வட்டாரங்களில் அந்த போராட்டம் நடந்தது. பத்து லட்சம் மாப்ளா மக்கள் பங்கு பெற்றார்கள். கூடவே அவர்களுடன் நியாய சிந்தனை உள்ள நாயர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படக்கூடிய தீயர்கள் பங்கு பெற்றார்கள். மேனன் என்று சொல்லக்கூடிய பிரிவினர் பங்கு பெற்றார்கள். இதுபோன்று ஒரு சிலர் பங்கு பெற்றார்கள். பெரும்பகுதி மக்கள் , மாப்ளாக்கள், உயிரை இழந்தார்கள்.

இது ஒருபுறம் வரலாறு. இந்த வரலாற்றை பதிவு செய்கிற – எழுதியல் , historiography –  அதை எழுதுகிற Conrad Wood உடைய புத்தகத்தைத்தான் நீங்க மொழி பெயர்த்திருக்கீங்க. இன்றைக்கு மொழிபெயர்ப்புங்குறது வெறும் இலக்கியச் செயல்பாடோ, கலைச்செயல்பாடோ அல்ல. அதுவே ஒரு அரசியல் செயல்பாடுதான். இந்தப் பிரதியை தமிழுக்கு கொண்டுவருவதன் மூலமாக நீங்கள் என்ன அரசியல் மாற்றத்தை, அல்லது என்ன அரசியல் புரிதலை இந்த சமூகத்துக்கு கொண்டு வர வேண்டும் , நல்க வேண்டும் என்று நினைக்கிறீங்க?

ஏற்கனவே நான் தொடக்கத்துலெ நான் சொன்னமாதிரி இப்போதும், எப்போதும் கடந்த காலத்திலும்… நிலம். அதுதான் மனிதனோட மையமான பிடிமானமாக அவன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்வதற்கு – தனிமனிதனாக இருந்தாலும் . இப்போ தனிமனிதனாக இருந்து கொண்டு நான் பிளாட்ஃபாரத்தில் வசிக்கிறேன் என்று சொல்பவன் வீடு வேண்டும் என்கிறான். ஆனால் அரசாங்கங்கள் எடுத்துக் கொண்டால் அந்தந்த அரசாங்கங்கள் எந்தெந்ந கொள்கையை கடைப்பிடிக்கின்றார்களோ அதற்கு ஏற்றவாறு அந்தந்த நிலங்களை , தாங்கள் வசப்படுத்திய நிலங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லலாம். இதற்கு பல்வேறு உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். இப்ப உதாரணமாக, தனது நிலத்தில் – அமெரிக்காவில் – எண்ணெய், எரிபொருள் தீர்ந்து விட்டது என்ற ஒரு கண்டுபிடிப்புக்கு வந்தபிறகு அமெரிக்க அரசாங்கம் , அது யாராக இருந்தாலும் சரி, குடியரசு கட்சியாக இருந்தாலும் சரி ஜனநாயக கட்சியாக இருந்தாலும் சரி, அமெரிக்க குடியரசுத் தலைவர் யாராக இருந்தாலும் இந்த ஒரு கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள். நாடுகளைப் பிடிப்பது, அங்கே இருக்கின்ற எண்ணெய் வளங்களைச் சுரண்டுவது என்ற போக்கு இப்போ இருந்துகிட்டு இருக்கு. அதனுடைய ஒரு பகுதியாகத்தான் இப்போ நாம ஈராக்கைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

குவைத் மீட்பும் அதனோடு தொடர்பு உடையதுதான்

ஆம். சரியா சொன்னீங்க நீங்க. ஏனென்றால் நீங்க சொன்ன பிறகு எனக்கு இன்னொன்றையும் சேர்த்து சொல்லனும் போல இருக்கு. தனக்கு தேவைப்படும்போது மாடுகளை கொம்பு சீவி விடுவதும் அதே மாடுகள் தங்களை முட்ட வரும்போது ‘பயங்கரவாதிகள்’ என்று அறிவிப்பதும் அமெரிக்காவின் கொள்கையாக எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. பின்லேடனையும் சதாம் உசேனையும் அப்படித்தான் சொல்ல வேண்டும். என்ன, பின்லேடனை பிடிக்கவில்லை, சதாம் உசேனை தூக்கிலிட்டுவிட்டார்கள். இரண்டுக்கும் ஒன்றும் பெரிய வேறுபாடில்லை. ஈராக்கில் அவர்கள் ஐ.நாவின் அனுமதியின் பேரில் ‘பேரழிவு ஆயுதங்களை அங்கே வைத்திருக்கிறார்கள் , ரசாயண ஆயுதங்கள், உயிர்கொல்லி ஆயுதங்கள் அங்கே நிறைய இருக்கு , அங்கே போயி நாங்க எடுக்கப்போறோம்’டு சொல்லிட்டு – ‘ஐக்கிய நாடுகளோட சபையோட ஒப்புதலோடு நாங்க போறோம்’டு சொல்லி ஒரு ஆக்கிரமிப்பை நடத்தினார்கள். வருடங்கள் நான்கு போன பிறகும் இன்னும் அங்கே ஒரு சின்ன பென்சிலைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை! பென்சில் என்று ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் உலக நாடுகள் ஈராக் குழந்தைகளுக்கு பென்சிலை ஏற்றுமதி செய்து பரிசாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! பென்சிலில் இருக்கிற கார்பைடில் கூட அந்த அரசாங்கம் அணுகுண்டு செய்துவிடும் என்று சொல்லி அமெரிக்க அரசு இதை தடை செய்து வைத்திருக்கிறது

குளோரின் கூட தடை செய்யப்பட்டிருக்கு!

அப்ப ஏன் ஈராக்கிற்கு போனாங்க? பேரழிவு ஆயுதங்கள் இருக்கு என்று ஏன் பொய் சொன்னாங்கன்னா ஈராக்கில் ஏராளமான எண்ணெய் வளம் உள்ளது. அதைப் பிடிக்க வேண்டும். அதனுடைய அடுத்த காய் நகர்த்தலாகத்தான் ஈரானை குறி வைத்திருக்கிறார்கள். ஈரானிடம் அளப்பரிய எண்ணெய் வளம் உண்டு. அமெரிக்காவின் எண்ணெய் வளங்கள் தீரத்தீர அதனுடைய நாடுபிடிக்கும் போக்கு , வெறி , இன்னும் அதிகமாகும் என்று ஒரு வரியில் கூட சொல்லிவிடலாம்.

இதைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படை அலகாக இந்த மாப்பிளா கிளர்ச்சியிலும் ஒரு செய்தி இருக்கு.

iqbal_makkaltv02ஒரு செய்தி இருக்கு! நிலம்! நிலத்தில் உணவும் பயிரிடலாம் , அதே நிலத்தில் நிலக்கரியும் தோண்டி எடுக்கலாம். அதே நிலத்தில் எண்ணெய் எடுக்கலாம். இயற்கை வளங்கள்! நான் முதலிலே சொன்னதைத்தான் மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். ஏனென்றால் நிலத்தை மனிதனால் மீண்டும் உருவாக்க முடியாது, நிலத்தின் மீது அவன் எதை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம். இதுதான் அடிப்படைக் கோட்பாடா இருக்கு!

***

நன்றி : மக்கள் தொ.கா, இக்பால் அஹ்மது, கஜேந்திரன்