சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (05)

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள்
அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04

அத்தியாயம் 05

ஆபிதீன்

*

15-18.12.95 கேஸட்டின் தொடர்ச்சி :

‘நீ நானாக மாறும்வரை நீ என்னைச் சேர்ந்தவனல்ல’ண்டு ஒரு ஷெய்கு (குரு) சொன்னாங்க. அப்ப நம்ம வேலை என்னா? தெய்வமாக மாறுவது. புரிஞ்சிச்சா?’ – ‘S’

‘புரிஞ்சிச்சி’

‘முட்டைப்பனியானியானுக்கு மேலெ உள்ள ஈயைப் பார்த்துட்டு ‘ஈப்பனியான்’ண்டு சொல்ற மாதிரி இக்கிது! இப்பவே புரிஞ்சிச்சிண்டு சொல்றீங்களே.. ப்ராக்டிஸ் பண்ணனும். எனக்கு வயசாவுது, தெம்பில்லே, என்னைப் போட்டு கஷ்டப்படுத்தாதீங்க. செய்யலேண்டா வுட்டுடுங்க; நான் பாட்டுக்கு படம் கிடம் பாத்துக்கிட்டு இப்படியே இருப்பேன். யாருக்கு பக்குவம் இருக்கோ அவங்கதான் மாறுவாங்க. நானாக மாறுவதுண்டா ஆசை இக்கினும். நான் சொல்லியிக்கிறேன், ஆசைதான் ‘துஆ’ண்டு’

ஒரு நாளைக்கு ஒரு கேஸட்டாக 3 மாதம் தொடர்ந்து பேசியிருக்கிறார்கள். அந்த கேஸட்கள் எங்கே? ‘இப்ப பேசுறதையாச்சும் காப்பாத்துங்க’ என்று சொல்கிற மாதிரி இருக்கிறது அந்தக் குரல்

‘மனுஷனை ஆண்டவன் பெர்ஃபெக்ட்டா படைச்சான். நீங்க படைக்கிற செயலை பெர்ஃபெக்ட்டா செய்யுங்க’

‘இன்ஷா அல்லாஹ் – நடக்க வேண்டிய காரியத்திற்கு சொல்வது. மாஷா அல்லாஹ் – நடந்து முடிந்த காரியத்துக்கு சொல்வது’

‘ஆண்டவன்ற கைக்கூலியா இந்துகிட்டு செய்ற வேலையில தோல்வி எப்படி வரும்? வருதுண்டு சொன்னா அல்லாட கூலியாக நீங்க இல்லே’

*

‘ஈமான்’ :

‘எப்ப வாசல் கதவை ‘ஈமான்’ தட்டுமோ அப்ப மனசுல உள்ள பயம் பொய்டும். எப்ப கொல்லைக்கதவை பயம் தட்டுமோ ‘ஈமான்’  வாசல் வழியா ஓடிடும். When theres is faith there is no fear. Where there is fear there is no faith. பயத்தை வெல்லக்கூடிய Best Medicine  ‘ஈமான்’. நம்பிக்கை. நம்பிக்கைண்டா என்னா? நமக்கு மேம்பட்ட ஒரு பொருள். அதுதான் ‘ஈமான்’ங்கிறது. இஸ்லாத்தோட அடிப்படை, தொழுகை கூட அல்ல, ‘ஈமான்’தான்’

*

‘பெருமை என் போர்வை; அதைப் பிடுங்க நான் விட மாட்டேன்’ – ‘ஹதீஸ் குத்ஸி’யில் இறைவன். ‘பெருமை அடிக்கிற தகுதி அல்லா ஒருவனுக்குத்தான் உண்டு. நாமளும் அடிக்கலாம், ‘நான் அல்லாட அடிமைண்டு’ அடிக்கலாம், அல்லாட நல்லடியாண்டு பெருமை அடிக்கலாம். பெருமிதம் மாறி கர்வமா போச்சுண்டா Circleல் பாதி கீழே இருக்க வேண்டிய நீங்க மேலே பொய்டுவீங்க (‘ஷைத்தானியத்’தில்)’ – ‘S’

*

Symbol பெயர் :

‘மொட்டையா Symbolண்டே வச்சுக்குவோம். ‘Current Symbol’… Currentண்டு ‘wiring’ பத்தி பேசிக்கிறாஹாண்டு நெனச்சா நெனைச்சிக்கிட்டு போகட்டும். நாம் புரிஞ்சிக்கிட்டா சரி!’ Instruction கொடுத்த பிறகு , இது இறங்குதுண்டு கற்பனை பண்ணுனாவே அந்த நெலைக்கி நீங்க வந்துடுவீங்க. தெய்வம் இறங்கி வந்து ‘டச்’ வைக்குது.. நினைக்க நினைக்க வர(நெருங்க) ஆரம்பிக்கும். ஏன்னா, தெய்வம் தூரத்துலெ இல்லே.. இங்கேதான் இருக்கு, நம்மள்ட்டதான் இருக்கு.. அதை கூப்பிடாதாதுனாலே அது தூங்கிக்கிட்டு இக்கிது. இது வெறும் ப்ராக்டீஸ் இல்லே..மேலே போற ராக்கெட் பயிற்சிண்டு புரிஞ்சிக்கனும் நீங்க’

செய்யும்போதுள்ள மனநிலை :

‘அமைதியா சத்தமில்லாத இருக்குற நிலையிலெ.. சூழல்லெ.. மனநிலையிலெ செய்யுங்க.. மனநிலை கட்டுப்படாது. அதை உண்டாக்குறதுக்கு வழி சொல்றேன். தொழுவுறதுக்கு முன்னாலெ ‘ஒலு’ செய்றமாதிரி, தொழுகையை எதிர்பார்த்துட்டு பள்ளியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி, ‘பாங்கு’ நேரத்தை எதிர்பார்க்கிற மாதிரி. இதை செய்யிறது எவ்வளவு முக்கியமோ அதே முக்கியம் மத்த நேரத்துல இதை நினைக்கக் கூடாததும்!’

‘எந்த உறுப்புக்கு வேலை இருக்கோ அந்த உறுப்பைத் தவிர மற்ற உறுப்புகள் totally relaxedஆக இருக்கனும். பேசும்போது வாய்தான் பேசனும். கையினாலே ‘கோரணி’ காட்டுறது, எழுதும்போது பேனா-மை-கை-காலாட்டிக்கிட்டு எழுதுறாலாம் தப்பு.’

Triangleல் உள்ள வட்டம் பற்றி :

‘வடிச்சி.. filter பண்ணப்பட்டதுதானே ‘ரூஹானியத்’ங்குறது.. சுத்தமான அறைக்கு வந்த மாதிரி இது. மேலேயே Completeஆ Pureஆ வச்சா என்னாண்டு கேட்டா.. அது கக்கூஸ் இல்லாத பங்களா மாதிரி. கக்கூஸ் இருக்கனும். அப்பத்தான் பங்களாண்டு அர்த்தம்’

பயிற்சியின் பலன் :

‘ஷைத்தானியத் அதிகமா இருக்கிறவங்களின் நட்புலாம் அறுந்து பொய்டும். எவன்லாம் நமக்கு Equalஆகவோ, நம்மிடமிருந்து ஹெல்ப் பெறுகிற அல்லது தூக்கி விடுகிற தகுதி உள்ளவனோ அவன்லாம் வருவான். Light attracts Lights. You can see the opportunity and opportunity can see you. நீங்க மேலே வளரனும். நீங்க உட்கார்ந்து பார்த்தா opportunity தெரியனும். இங்கேயுள்ள opportunity உங்களைப் பாக்கனும்’

இதை ப்ராக்டிஸில் கொண்டு வரவில்லையென்றால் இது ‘மூடி வைத்த கிதாபு’ என்கிறார்கள் சர்க்கார்

சர்க்கார் ரசித்துப் பார்த்த படம் : அரங்கேற்றம், சுமைதாங்கி, ஒரு பாட்டன் – தந்தை – மகன் , போலீஸ்காரன், S.P, I.Gயா உள்ள (ஏதோ) ஒரு படம்.

அந்தக் காலம் :

‘பயங்கரமா கஷ்டப்படுற நேரத்துல கூட ‘நான் ‘பாக்கவி’, சமுதாயத் தலைவன். ஜனங்க எப்படிப் பேசனும், பேலனும், கைலி உடுத்தனும், நடக்கனும்டு சொல்றவன்’ற பெருமை என்கிறார்கள். அவர்களின் கூட்டாளிகளைத் தன் பெண்டாட்டிக்கு மாப்பிள்ளையாக (மறு கல்யாணம் பண்ணி) இருக்கச் சொல்கிறார்கள்.

‘சர்க்கார்..என்ன சொல்றீங்க! அது தாய்!’

‘இருக்கலாம். ஒரு தாயை இன்னொரு எவனோ ஒருத்தன் ‘பப்பான்’ஐ புடிச்சி அழுத்துறதுக்கு நீ தேவலை, கட்டிக்கொள்!’ – சர்க்கார்.

சர்க்காரின் பொருளாதார கஷ்டம் அப்படி. அப்போதும் அவர்கள் விடாமல் செய்தது, படிப்பு. படித்துக் கொண்டே இருந்ததுதான். கோதுமை புராட்டாவும் பருப்பும்தான் , கிடைத்தால், சாப்பாடு.

*

எனக்கும் ஒரு பதில் வருகிறது:

‘சிலபேர் நெனைச்சா நடக்குது, சிலபேர் நெனைச்சி நெனைச்சி நெனைச்சா நடக்குது, சிலபேர் நெனைச்சி நெனைச்சி, அம்பது தரம் நெனைச்சி அப்புறம் நடக்குது. சிலபேருக்கு நடக்கலேண்டா நெனைச்சிக்கிட்டே இக்கிம்போது கீழே வுழுந்துடுறாங்க! வீச்சை வுட்டுப்புடுறாங்க.. வீச்சுண்டா ஆசைப்படுறது. ஆசைங்கிறது மத்தவன்ற மண்டையோட்டுல வூடு கட்டுற ஆசையா இக்கெக்கூடாது!’

ரசூலுல்லா :

‘எனக்குத் தெரிஞ்ச உண்மைகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதிகமாக அழுவீர்கள். குறைவாக சிரிப்பீர்கள்’ண்டாஹா. சிரிக்கக்கூடாதுண்டு அர்த்தம் அல்ல. சிரிப்பாகவே ஆயிடக்கூடாது, சிரிப்பா சிரிக்கக்கூடாது, அழுவுவீங்கண்டு அர்த்தம்.  இல்லே – குறைவாகத்தான் சிரிப்பீங்க, அப்புறம் சிரிக்கவே மாட்டீங்கண்டு அர்த்தம்’

மூணு பேர் :

‘சில பேர் சம்பாதிக்கிறதே இல்லே. அவங்க காரியத்தை அனுபவிச்சிட்டுப் போறாங்க. இது ரொம்ப அபூர்வம். அடுத்தவன், அப்பன்  சேர்த்து வச்சிருப்பான் புள்ள அனுபவிச்சுடுவான், மறுபடியும் சேர்க்க மாட்டான். நம்ம முஸ்லிம் வூட்டுலெ பெரும்பகுதி இப்படித்தான். இன்னொருத்தன்… சேர்த்துக்கிட்டேயிருப்பான் , சாகுறவரைக்கும். வாயிலெ ஈ மொய்க்கும். டீ கூட குடிக்க மாட்டான். இறந்து போனவுடனே மைய்யத் ‘சலாம்’ போட்டுக்கிட்டு நடக்கும் – ஃபக்கீர் ராவுத்தர் மாதிரி’

மறுபடியும் ரசூலுல்லா (அதிகமாகத்தான் இவர் இடம் பெறுகிறார்!):

‘ரசூலுல்லா இங்கேதான் வருவாஹா, நாக்கூருக்கு. ஒரு பைனாகுலர் வச்சிக்கிட்டு பெரிய மினாரா மேலே ஏறிப்பார்ப்பாஹா. ‘ஆமா..ஆயிரத்தி சொச்சம் வருஷத்துக்கு முந்தி இஸ்லாம்டு ஒண்ணை வுட்டு, முஸ்லிம்ங்குற communityஐ வுட்டேனே.. ஒத்தவன் கூட காணலையேம்பாஹா..’ . சர்க்கார் முன்பு சொன்னது நாக்கூரை. இப்போது கொஞ்சம் சேர்க்கிறார்கள். ‘ரசூலுல்லா பெரியமினரா உச்சிக்கு மேலே ஏறிடுவாஹா.. பாம்பரத்தட்டுல ஏறி நிண்டு பாப்பாஹா.. இங்கே மனுஷனே இல்லையா?’ண்டு கேப்பாஹா!’

சர்க்கார், மனுஷங்கள்லாம் துபாய் வந்துவிட்டார்கள், பண்டியாக மாற!.

‘கவலை வேறே பொறுப்பு வேறே.. நடந்துபோன ஒண்ணு நடக்காம இருந்திருக்கக்கூடாதாண்டு நெனைக்கிறதுதான் கவலை. அது முட்டாள்தனம். பொறுப்பு முக்கியம் வேணும்.’ – சொல்லிவிட்டு ஒரு ‘துஆ’வும் சொல்கிறார்கள். அரபி உச்சரிப்பு விளங்கவில்லை. இதை விளங்கிக்கொள்ள , துஆ கேட்பதை விட்டுவிட்டு தமிழில் அவர்கள் சொல்வதை எழுதுகிறேன் : ‘கஞ்சத்தனம், கோழைத்தனம் இவற்றிலிருந்து காப்பாற்று. கடன் தலைக்கு மேலே ஏறி மக்களெல்லாம் ‘த்தூ’ ‘த்தூ’ண்டு துப்புற நெலையிலேர்ந்து காப்பாத்து’ . complete life பூரா அடங்கிருச்சி..’ என்கிறார்கள்.

*

‘How to live our life? தவிர்க்க முடிவதை உயிரை வுட்டு தடுக்கனும். தவிர்க்க இயலாததை ok-ண்டு ஏத்துக்கனும். ஏன்? Acceptance of inevitable is the first result to conquire happiness. தவிர்க்க முடியாததை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்வது வெற்றியை வெற்றி கொள்வதற்குரிய first step. இதுல கஷ்டம், எது inevitable எது evitableண்டு கண்டுபிடிக்கிற அறிவு. ஏண்டா, பச்சை ‘ஹூதா'(Blue) வா தெரியும். பின்னால வர்ற வெள்ளை கருப்பா தெரியும்’

*

11.02.1996  10:30 pm

மகனார் அனீஸின் 3 வது பிறந்த நாளைக்கான (20th Feb) டிரெஸ் எடுத்து ஊர் போகும் ஒருவரிடம் கொடுக்கவேண்டி ‘தேரா’ (நகரம்) போனேன். அப்படியே மஸ்தான் மரைக்கான் ரூமில் நோன்பு திறந்துவிடுவோம், சஹருக்கு ஏதும் எடுத்து வரத் தேவையில்லை (தாழிச்சாதான் வருமே இன்னொரு நாலைந்து நாளைக்கு!). ‘ஒட்டக பஜார்’ போய் அழகான ஒரு டிரஸ் எடுத்துக் கொடுத்துவிட்டு இங்கு (அவீர்) வந்தாகிவிட்டது. ஆனால் அங்கு ரூமில் இருந்தபோது – அதுவும் ‘ஜம்’மில் இருந்த சமயத்தில் – எனக்கு வந்த வாய்க்கொழுப்பை – அத்தனை உணர்ந்து அடக்கியும் – நினைத்தால் வருத்தம். நோன்பு திறக்கும்போதே ‘கஞ்சி நல்லா போட்டிக்கிறான் மஸ்தான் மரைக்கான்’ என்றேன். ஃபரீது சொன்னார்: ‘ம்..இது என்னா கஞ்சி? மந்தவெளி பள்ளிலெ எங்க வாப்பா இக்கிம்போது கஞ்சிலெ முழு ஆட்டையும் இறக்குவாஹா!’ என்றார்.

‘உயிரோடவா?’ – நான்

அனைவரும் சிரித்ததில் என் பேய்க்கு குந்திரிக்கம் போட்டதுபோல் இருந்திருக்க வேண்டும். ‘ஏன் ஃபரீது.. உம்மட வாப்பா அங்கே மேனேஜ்மெண்ட்லெ ஒரு ஆளா இந்தாஹல்லெ?’ என்று கேட்டேன்.

‘ஆமாங்கனி’ என்று பெருமையாகச் சொன்னார்.

‘ஹூம், பள்ளி நல்லா வந்திருக்க வேண்டியது!’ என்றேன்.

அட கழிச்சல்ல போற என் பேயே..

நோன்பு திறந்துவிட்டு கீழே சிகரெட் வாங்கப்போனேன். Benson சிகரெட்.

‘எங்கே போறியும்? – ஃபரீது

சொன்னேன்.

ஃபரீது கண்ணைச் சுழற்றிக் காட்டினார். மஸ்தான் மரைக்கான் வைத்திருந்த Dorchester சிகரெட் பாக்கெட்டை. அது 2 திர்ஹம்தான்.

‘நான் சிகரெட் வாங்கப்போறேங்கனி’ – ‘சிகரெட்’ என்பதை அழுத்திச் சொன்னேன். மறுபடியும் அனைவரும் சிரித்தார்கள். மஸ்தான் மரைக்கான் முகம் சிவந்து போனது. இரண்டு நாளைக்கு முன் நான் நோன்பு திறக்க வருகிறேன், டிஃபன் கேரியரோடு என்று சொன்னதற்கு – நான் சஹருக்கு எடுத்துக் கொண்டு போவேன் என்று சற்று – கூடுதலாகவே இறைச்சி ஆணம் போட்டு வைத்திருந்தான். நான் Hotpack  கொண்டு போனதில் அவனுக்கு வருத்தம். அதில் இரண்டு மூன்று கிண்ணங்கள்தான் இருக்கும். போட்டது வேஸ்ட் ஆகிறதே என்று என்னிடம் முணுமுணுத்தான். ஆனால் அவன் என்னிடம் முணுமுணுத்ததோடு நின்றுவிடவில்லை. ஃபரீதிடம் தனியாக மேலும் சொல்லியிருக்கிறான் என்று நேற்று தெரிந்தது. ‘புண்ணியத்துக்கு புண்டையை காட்டினால் மயிரு இருக்குண்டு சொல்றான்’ என்றானாம். நான் ஃபரீதிடம் வருத்தப்பட்டு சொன்னேன், எந்த செய்கைக்கு எந்த வார்த்தையை உபயோகிப்பது என்ற தரம் அறியாமல், அதுவும் அண்ணன்காரனிடம் – இப்படிப் பேசுவது எவ்வளவு அருவருப்பானதும், அநாகரீகமானது என்று.. இதை பெரிதுபடுத்த வேண்டாம் அப்புறம் அவனுக்கும் எனக்கும் வித்யாஸமில்லை என்று தொடர்ந்து போகிறேன், அல்லது அவனுக்கு புண்டை இருக்கிற செய்தி எனக்கு பிடித்திருக்கலாம், அதுவும் காசு கொடுத்துத்தானே யூஸ் பண்ணப்போகிறோம் என்றும் நினைத்திருக்கலாம்! இன்று அவனை வெடைத்ததின் காரணம் இரண்டு நாளைய கோபத்தில் பேய் தன் விரல்களை விட்டு குடைந்ததனால் என்றால் , பகல் மூன்றரை வரை வேலைபார்த்துவிட்டு வந்து , மற்றவர்கள் போல் சஹரின் தூக்கக் கலக்கம் போக்க நோன்பு திறக்கும் வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்காமல், நோன்பு திறக்க வகைவகையாய் மாங்கு மாங்கென்று ,கண் எரிச்சலைக்கூட பொருட்படுத்தாமல் , நின்று செய்யும் அவனை – அவன் வாய் சறுக்கியதற்கு ‘நல்ல புத்தியை கொடுக்க துஆ செய்யாமல் நான் ஏன் இப்படி புண்படுத்த வேண்டும்? என் ‘ஷைத்தானியத்’ வேறெங்கும் இல்லை. நாக்கில்தான். மற்றவர்களின் குறைகளைப் பார்ப்பது நம்மைத் திருத்திக் கொள்ள’ என்பார்கள் சர்க்கார். சர்க்கார், என் நாவை அறுத்தெறியுங்கள்.

ஒரு சமயம் ஒரு நண்பர் கடிதம் எழுதியிருந்தார், ‘பெண்டாட்டியை துபாய்க்கு அழைத்துக் கொள்ள வேண்டியதுதானே?’ என்று. ‘யார் பெண்டாட்டியை?’ – எனது பதில். என் ‘வெடை’ எழுத்தார்வம் கொண்டவர்கள் சில பேரை ஈர்த்திருக்கிறது அதில் முன்பு எனக்கு பெருமிதமும் இருந்தது. இப்போது வருத்தமாக இருக்கிறது. இந்த தெனாவெட்டான பேச்சும் எழுத்தும் இல்லாமலிருந்தால் நான் முன்னேறியிருப்பேன். ஆனால் இந்த டைரியை இப்படி எழுதியிருக்க மாட்டேன்!. தப்பை உணர்வது ஒரு முன்னேற்றம்தான் – ஆரம்பக் கட்டத்திற்கு. இறக்கும்வரை உணர்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய தப்பு. என்னை சரி செய்யுங்கள் சர்க்கார்..நான் வாழ வேண்டும்..

*

12.02.1996

என் ‘வெடை’  என் உம்மாவிடமிருந்து வந்திருக்க வேண்டும். உம்மாவுக்கு எழுதவும் வரும். அதுவும் மருமகளைப் பற்றி என்றால் அனாயாசமாக வரும். எல்லா மாமியார்களுக்கும் அப்படித்தான் வரும் போலும். துபாய்க்கு வந்ததில் 80000 ரூபாய் மொத்தமாய் செலவு ஆகிவிட, வேலையும் கிடைக்காமலிருக்க, கிடைத்தபிறகு கடன் ஒழிக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தில் நான் இறங்கி விட, உம்மாவுக்கு கோபம்.. சரியாக காசு பணம் அனுப்பவில்லையென்று.. விசாவுக்கு 2 ரூபாய் 68 காசு கொடுத்த ஞாபகம் போலும். நான் ‘பொண்டாட்டி முந்தானை’யில் உள்ளவன் ஆனேன். அடுத்து பணம் அனுப்பும் சின்ன மகனுக்கு ‘நானா’ என்னைப் புகழ்ந்து எழுதியிருந்தார்கள் உம்மா – ‘ஆபிவாப்பா சரிவர பணம் அனுப்புவதில்லை.. இட்ட உணவு எட்டு நாளைக்கு நக்கிய உணவு நாலு நாளைக்கு..’ என்று. எதேச்சையாக , ஃபுஜைரா போய் செல்லாப்பாவைப் பார்க்கப் போனவன் அவன் படுக்கையில் கிடந்த உம்மாவின் கடிதத்தைப் பிரித்துப் பார்க்கும்போது  மெய் சிலிர்த்துப் போனேன். என்ன பாசம்..! இந்த வாசகம் எங்கிருந்து எடுத்ததாக இருக்கும்? ஒக்கூர் வாப்பாவை நாக்கூரிலேயே அடைத்துப் போட்டு வாப்பாவின் சொந்தங்களையெல்லாம் ஓரம் கட்டியதில் மனம் நொந்துபோய் வாப்பாவைப் பெற்ற என் பாட்டியா ஜூலைஹாம்மா ஒக்கூர் வானத்தில் புலம்பியதிலிருந்து எடுத்ததா? பரவாயில்லை. தாயின் ‘அடி’யில்தான் சொர்க்கம் இருக்கிறது. தந்தைக்கு மட்டுமல்ல, மகனுக்கும்தான்…. நக்கும் பரம்பரை.!

என் தாயின் பேச்சுகளின் வெதும்பும் என் துணைவி தன் மகன் அனீஸின் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ளப் போகிறாள்? அனீஸ் யார் உணவையும் தின்னாதவனாக இருந்தால் பழமொழிதான் என்னாகிறது? ‘அன்னையிட்ட தீ அடி வயிற்றிலே..யானும் இட்ட தீ மூள்க மூள்கவே..’ – வாரும் பட்டினத்தாரே.. நீர் எந்த உணவை உண்டீர்? எத்தனை நாள்?

*

உம்மாவுக்கு சர்க்காரைப் பிடிக்காது. சர்க்காரின் சொல்கேட்டு நிறைய பிள்ளைகள் கெட்டுப் போய்விட்டார்கள் என்று உம்மா நம்புவதில் அர்த்தமிருக்கிறது. ‘தாயோ பொண்டாட்டியோ மகனோ நண்பனோ.. உள்ளத்தைப் பார் முதலில்’ என்று சொல்கிற சர்க்கார் நல்ல சர்க்கார் இல்லை. அந்த வாக்கியத்தில் ‘தாய்’ என்ற வார்த்தை இடம் பெறாமல் இருந்திருக்க வேண்டும்! தங்கை ஹலீமாவுக்கு கட்டிக்கொடுத்த காரைக்கால் பையன் ‘பொன்னையன்’ என்று, பொறுக்க மாட்டாமல் ஹலீமா வாயினாலேயே வெளிப்பட்டுவிட,  துடித்துப்போன உம்மா ஒரு முடிவை எடுக்க ஒடியது நாவப்பட்டினத்திலுள்ள ஒரு பாவாவைப் பார்க்கத்தான். அரைக்கண் மூடிய ‘மாஷாஅல்லாஹ்’ பாவா.. ஆனால் பாவா சரியான முடிவைத்தான் சொன்னார்கள். யோசனை பண்ணுகிற எந்த பிறவியும் எடுக்கிற முடிவுதான். இதற்கு பாவா எதற்கு? எடுத்த முடிவை ‘சரி’ என்று சொல்ல ஒரு ஆள்…. இரண்டாம் கல்யாணம் (ஹலீமாவுக்கு) நடந்தது. நான் சர்க்கார் வீட்டிற்கு போய்க்கொண்டிருப்பதைக் கண்ட உம்மா ‘நாவப்பட்டினம் பாவாதான் மனுஷன்.. அஹலைப் பாத்தாலே ஒரு ‘ஜீமத்’ இக்கிம். சில பேர் இருக்குறாஹா.. கால்மேலே கால் போட்டுக்கிட்டு, பொம்பளையிலோட கூத்தடிச்சிக்கிட்டு… இவனுவளுக்கு இந்த முதேவிக சிகரெட் வேற பத்தி வுடுறாளுவ..- ஒங்கி ஒரு அறை வுடாம!’ என்றார்கள். அடுத்த நாள் நாவப்பட்டினம் பாவாவைப் பார்க்கப் போனார்கள்- இரண்டு சுருட்டு கட்டோடு. காரம் மணம் குணம் நிறைந்து சுருட்டுகள்.

*

18-23.02.95 கேஸட் :

‘நான் சொல்றதுல 50% follow பண்ணுனா போதும். அடுத்த 50%க்கு நான் பொறுப்பாளி. அந்த 50% நீங்க வாழுறீங்கண்டா என்னை விட மிக மிகப் பெருசா வாழுவீங்க’

‘அஸ்ஸலாமு அலைக்கும்’ண்டு சொல்லுவாஹா , என்னைப் பார்க்க வர்றஹ. நான் ‘என்னா செய்தி?’ண்டு கேப்பேன். ‘அலைக்கும் சலாம்’ங்குறது மறந்து பொய்டுச்சி!’ – சொல்லிவிட்டு, ஒரு கதை சொல்கிறார்கள். ஒருவர் இன்னொருவரிடம் ‘சலாம் அலைக்கும்’ என்றாராம். கேட்டவர் துடித்துப் போய் , ‘டக்’கென்று சொன்னவரின் கையைப் பிடித்து பரபரவென்று இழுத்துக் கொண்டுபோய், பல தெருவைக் கடந்து , ஒரு சந்தில் நுழைந்து, அங்குள்ள ஒரு வீட்டைத் திறந்து, அங்குள்ள அலமாரியிலிருந்து பல கிதாப்களைப் புரட்டி,’ம்..இப்ப தெரிஞ்சிடுச்சி…, அலைக்கும் சலாம்!’ என்றாராம். அலைக்கும் சலாம் சர்க்கார்!

‘ஆண்டவனே உண்மையை உண்மையாகக் காட்டு, தப்பை தப்பாகவே கட்டு (அதாவது நல்ல விளைவுகள் தரும் காரியத்தை நல்லதாகவே காட்டு, பண்ணும் முயற்சிகளெல்லாம் வீணாகப்போகும் காரியத்தை வீணாகப்போகும் என்று காட்டு) –  ‘புர்தாஷரீஃப்’-ல் சர்க்கார் ஓதும் இன்னொரு துஆ.

‘அளஹான அமைப்பு.. அளஹான முன்னேற்றம், புது தெம்பு..புது லைஃப்..இதுவரைக்கிம் கற்பனைக்கு எட்டாத ஒரு லைஃப் அமையப்போவுதுங்குறதுள்ள அறிகுறி எனக்கு நல்லா தெரியுது. அமைய ஆரம்பிச்சிடுச்சிண்டே எனக்குத் தெரியுது.. நீங்க வாங்கிக்கிட்டா போதும்’  – பயிற்சி பற்றி.

‘சாக்ரடீஸ் ஒரு போர்வீரன். அவனுக்கு எவ்வளவு அறிவு இருக்குண்டு அவனுக்கே தெரியலே..ஹிட்லர் ஒரு பெயிண்டர்.அப்ப்..பா எவ்வளவு பெரிய Dictaroship! எவ்வளவு பெரிய அறிவு! ஓபராய் ஒரு ordinary cook..- தற்காலிகமாக வேலை பாக்குறதுதான் ‘முஸீபத்’. அப்படியே வயித்தைக் கழுவி வாயைக் கழுவி உடலைக் கழுவி.. அப்படியே கிடந்துடுறானுவ.. திறமை பிற்காலத்துலெ வெளிவருது. வரவும் செய்யிது, வயசு இல்லாம போயி அழிஞ்சிம் பொய்டுது.. இப்ப இதுக்கு என்னா செய்யினும்? ஒரு வழிகாட்டி வேணும். எவ்வளவு முக்கியம்!’

‘எவன்லாம் கெட்டவண்டு சொல்லப்படுறானோ அவன்ட்டெ அசாத்தியமான திறமை இருக்கு. வாத்தியார் சூத்துல ஊசிய சொருவுறாண்டா என்னா அர்த்தம்? அவன்ற சக்திக்கு நீங்க வேலை கொடுக்கலே!’

*

துஆ,  ‘கபுல்’ஆகாத காரணம் :

‘மேலே உள்ள புள்ளி கீழே வந்து கலப்படமாவுது! நாம பயிற்சி மூலமா அந்த கலப்படத்தை நீக்குறோம். எவ்வளவு தூரம் வந்திச்சோ அவ்வளவு தூரம் போனபிறகு அங்கேயுள்ள ‘ரஹ்மானியத்’ தானாக கீழே வரும். கீழே வர ஆரம்பிக்கும்போது ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடனேயே உள்ளெ உள்ள circleன் அதனுடைய முதல் புள்ளி ஆரம்பிக்கும். இன்னும் கொஞ்சம் (ரஹ்மானியத்) கீழே வந்த உடனேயே (மேலேயுள்ள பாதி வட்டத்தின் இரண்டு பக்க) வளைவுகள் உருவாகும். இன்னும் கொஞ்சம் (ரஹ்மானியத்) கீழே வந்த உடனேயே (கீழுள்ள பாதிவட்டத்தின் இரண்டு பக்க) வளைவுகள் உருவாகும். போதிய அளவு (கீழுள்ள) கோட்டை வளர்க்காததுனாலெ துஆ ‘கபுல்’ஆக மாட்டேங்குது – கேட்டவுடனே’

‘குழந்தையிலுவ கேட்குற துஆ ‘கபுல்’ ஆவாது. ஏன்னா, அது தன்னை, ஆண்டவனை நம்புறதுக்கு பதிலா உம்மாவையும் வாப்பாவையும் நம்புது. ஸ்கூல் போவச் சொன்னா உம்மாவைத் திட்டும். துஆ கபுல் ஆனா என்னாவுறாது?!’

உணர்ச்சியாலதான் துஆ கபுல் ஆகாமல் போகிறது என்கிறார் ஒரு சீடர்.

‘ஷைத்தானைப் படைச்சது யாரு?’

‘அல்லாஹ்’

‘சரி, அனைத்துப் பொருட்களிலேயும் அல்லா இக்கிறாண்டு சொல்றப்போ ஷைத்தான்லெயும் இக்கிறான் தானே?! உணர்ச்சியாலெ துஆ ‘கபுல்’ ஆவமாட்டேங்குதுண்டு சொல்றீங்களே.. உணர்ச்சிதானே Main.. புடுக்கு வேணுங்க! பக்திங்குறது என்னா? உணர்ச்சிதானே?’

*

‘திருட்டுக் கொடுக்குறவங்க சூஃபிண்டு சொன்னா திருடுறவனும் சூஃபிதான். நியாயப்படி பார்த்தா அவனுக்கு concentration நூறு பங்கு கூட. எல்லார் கண்ணுலேயும் மண்ணைத் தூவிவிட்டு செய்யிற வேலையாச்சே..!’ – ஆண்டவன் எல்லாரிடமும் இருக்கிறான். (அத்தரில் இக்கிற மாதிரி நாத்தத்தேலேயும் இக்கிறான்).

*

முக்கோணத்தின் உள்ளேயுள்ள வட்டம் :

‘ஷைத்தானியத்’தை வடிகட்டி ‘ரஹ்மானியத்’தை கீழே இறக்கனும். Modern languageலே சொன்னாக்கா Negativityஐ cut பண்ணி Positiveஐ கொண்டு வர்றது. அதுதான் Circle நடுவுலே உள்ள கோடு. எந்த உணர்ச்சியும் கெட்டதல்ல. அந்த உணர்ச்சியை நாம use பண்ணுனா கெட்டதல்ல. உணர்ச்சி நம்பளை யூஸ் பண்ணுனிச்சிண்டா கெட்டது’

*

‘தனிமையின் நன்மைகள்’ புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோள் : அடக்கியாளப் பிறந்தவன் அடக்கியாளப்பட வேண்டிய உணர்ச்சிகளை அரியாசனத்தில் ஏற்றி வைத்துவிட்டு அடங்கிக் கிடப்பதால் ஏற்படும் விளைவுகள் எண்ணற்றவை.

‘அடக்குறதுண்டா நசுக்குறது அல்ல. controlலெ கொண்டு வர்றது. அடக்குறதுண்டா அழிக்கிறதல்ல. எந்த உறுப்பையும் , ‘நியமத்’தையும் அழிக்கிற உரிமை நமக்கு இல்லை’

‘உணர்ச்சியாலே முன்னேற்றம் தடைபடுதுண்டு சொல்றது தப்பு, சொல்லப்போனா போதிய அளவு உணர்ச்சி இல்லாமதான் முன்னேற்றம் தடைபடுது. at the same time அந்த உணர்ச்சி must be under our control’

‘ஊருக்கு கெட்டவண்டு கருதப்படக்கூடிய சிலர் ரொம்ப செழிப்பா வாழுறதையும் ஊருல நல்லவண்டு பேர் எடுத்தவன் ,பள்ளிவாசல்லேயே கெடந்து பொரள்றவன்,  நல்லா இல்லாம போறதுக்கும் காரணம் (உணர்ச்சி) அவனை கெட்டவண்டு எதை வச்சி சொல்றீங்களோ அதே உணர்ச்சியை தன்னை வளர்த்துக் கொள்ள பாதையா பயன்படுத்திக்கிறான். எதை நல்லதுண்டு நீங்க நெனைக்கிறீங்களோ அதை நீங்க உணர்ச்சி கலக்காம செய்றீங்க, அப்ப அவன் செய்யிற செயல் ‘இபாதத்’தாக மாறுது. நீங்க இபாதத்துண்டு செய்ற செயல் முட்டாள்தனமான ஒண்ணா போவுது’

*

ப்ராக்டீஸ் கொடுத்த பிறகு ஆரம்பத்தில் என்ன செய்ய வேண்டும்?

‘மேல்கோடு கீழே இறங்கி touch பண்றதை உணர்ந்துகிட்டே வரனும். வரும்போது சின்னச்சின்ன காரியத்துலேர்ந்து உங்க காரியம் சிறப்பா – கற்பனைக்கு எட்டாத வேகத்துலெ நடக்குறதைப் பாக்கலாம். பாக்கும்போது negative வரும். ‘இவ்வளவு நாளா வுட்டுட்டுமே’ண்டு வரும். ஒரு ஏக்கம் வரும். அப்ப நீங்க நெனைச்சிக்கனும், ‘போன வரைக்கும் சரி, atleast சரி, it is not too lateண்டு புரிஞ்சிக்கிட்டா போதும். அதாவது உங்களை நீங்க ஏமாத்திக்கனும். whole philosophy பூரா உங்களை நீங்க ஏமாத்திக்கிறதுலெதான் இக்கிது’

‘உங்க எதிரிகள்ளேயே மிகக்கொடிய எதிரி இரண்டு விலாவுக்கும் நடுவில் உள்ளவன்.. உங்க எண்ணம்தான். உங்க உணர்ச்சிதான் உங்களை கெடுக்குது. அதை பண்படுத்தனும். பண்படுத்தனும்டா என்ன அர்த்தம்? என் பேச்சைக் கேட்டு நடக்கனும். அவ்வளவுதான், மத்ததுலாம் தானா வரும்’

*

‘நாம நெனச்சா எதா இருந்தாலும் சரி, அடைய முடியும்டு தோணுதுல்லே?’ – ‘S’

சீடர்குழு பலமாகத் தலையாட்டுகிறது – ‘ம்’ சத்தத்தோடு.

‘அப்ப அதுக்கு என்னென்ன Quality தேவையோ அதை உண்டாக்கிடனும். நல்லா கேட்டுக்குங்க, எது negative qualityயோ அதை suppress பண்ணனும். Negative இருக்கத்தான் வேணும். இல்லாம எப்படி? சூத்துள்ள – அதுல பீ உள்ள – புள்ளையாத்தான் இக்கினும். அதுக்குப்பதிலா சூத்துல குலாப்ஜான் இந்திச்சிண்டா அது சரியல்ல. ஆங்… உங்க பயிற்சியால குலாப்ஜானாவும் பேலலாம்! சந்தனமாவே பேலலாம். ஒரு கூட்டமே வேடிக்கைப் பார்த்ததைப் பார்த்தேன்!’ – சர்க்கார் வேலூரில் படித்துக் கொண்டிருந்தபோது பைத்தியம்போல் இருந்த ஒருவன் சுவற்றில் தடவிய பீ அப்படி சந்தனமாய் மணத்ததை சொல்லியிருக்கிறார்கள்.

‘அமைதியா உட்கார்ந்துக்குங்க. உடம்பை ரிலாக்ஸ் பண்ணிக்கனும். எந்த எண்ணம் வந்தாலும் தட்டி வுடனும். ‘பளிச்’சுண்டு ஒரு வேகம் வரும் – யானை பலம் வரும். அப்ப நாம அல்லங்குற மாதிரி தெரியும்.  உங்களுக்கு முடியாதுண்டு தோணுனதெல்லாம் in our reach, we can reach, we can touch it,we can grip it அப்படீங்குற மாதிரி தோணும். அப்ப ஏக்கம் வரும். இவ்வளவு நாள் பொய்டுச்சேண்டு. போனவரைக்கிம் சரி, விட்டுத்தள்ளுங்க. சில அவுலியாக்கள் குத்புமார்கள் இன்னும் பிந்தியே பெத்திருக்காங்க. அந்த ஏக்கத்துக்கு இடம் கொடுத்தீங்கண்டா அடுத்த ஸ்டெப் சரியா வராது. உங்களுக்கு இந்த மாதிரி வந்திருக்கா?’.

ஒருவர் வந்திருக்கிறதென்கிறார். இன்னொருவர் இல்லை என்கிறார்.

‘வந்திருக்கு. ஆனா நீங்க அதை புரிஞ்சிக்கலே’ என்று சொல்லி ஒரு கதை சொல்கிறார்கள் சர்க்கார். தந்தையைப் பார்க்காத ஒருவன் தன் தாயாரிடம் ‘வாப்பா எங்கே?’ என்று கேட்க அவர் ஒரு யுத்தத்தில் காணாமல் போய்விட்டதாக சொல்கிறாள் அவள் . ஆனால் அடையாளம் சொல்கிறாள் – மார்பில் இந்தமாதிரி ஒரு அடையாளம் இருக்கும்’ என்று. மகன் ஒருநாள் குடித்துவிட்டு அலங்கோலமாகக் கிடந்த – தன்னை இத்தனை நாள் தூக்கிவளர்த்த – தோட்டக்காரனின் மார்பில் அந்த அடையாளத்தைக் காண்கிறான். ‘தோட்டக்காரன் அதேமாதிரிதான் இக்கிறான். இப்ப என்னா மாற்றம்? முதல்லெ தோட்டக்காரன்ற நெனைப்போட பாத்தீங்க. இப்ப ‘அப்பா’ண்ட நினைப்போட பாக்குறீங்க. இதே மாதிரி நாம…நெனைச்சமாதிரி ஆளல்ல. Actualஆ மனுஷனே அல்ல அப்படீண்டு தெரியும். எதையும் செய்யலாம், எதையும் முடிக்கலாம், அட்லீஸ்ட் , நீக்க ஒத்தி வச்சிருக்குற வேலையெல்லாம் செய்யச் சொல்லும் மனசு. எப்பவுமே அரைகுறையா சோறு உண்குறவர்களுக்கு நிம்மதியா சாப்பிடத் தோணும். பேசுறதுலெ கண்ட்ரோல் வரும். அட, கால்மணிநேரம் பண்ணிப்பாருங்களேன். இதுக்கு Maximum டைம் 20 நிமிஷம்.’

*

‘இறைவணக்கம்’ நூலிலிருந்து ஒரு மேற்கோள்:

‘லுஹருடைய Power ‘அஸர்’ வரைக்கிம். அஸருடைய Powe ‘மஹ்ரிப்’ வரைக்கிம். ஒரு ‘ஜூம்-ஆ’வுடைய Powe அடுத்த ஜூம்மா வரைக்கிம். ஒரு பெருநாளுடைய Power அடுத்த பெருநாள் வரைக்கிம்டு என்றைக்கு (Power) நிக்கிதோ அப்பத்தான் நீங்க ‘பக்கா’ முஸ்லீம்!’ (‘அப்பத்தான் ‘இபாதத்’ வேலை செய்யுதுண்டு அர்த்தம்’!)

*

‘இந்த Basic foundationலெதான் (Relaxation of Body & Mind)  இந்த ப்ராக்டிஸ் பண்ணனும். Relaxation of Body & Mind.. இத எப்படி உண்டாக்குறதுண்டு நான் சொல்றேன், அதை செய்யுங்க. உடம்பு டென்சனா இரிக்கெக்கூடாது. ரிலாக்ஸ்டா இக்கினும். மைண்ட்லெ எது வந்தாலும் தட்டி வுட்டுக்கிட்டே இக்கினும். கொஞ்ச நேரத்துக்கு தட்டத்தட்ட ‘டக்’குண்டு உறுப்புலாம் அசையும். அசையவுடக்கூடாது. அப்படியே உட்கார்ந்தாக்கா ‘டக்’குண்டு கீழே இறங்கிடும் எண்ண ஓட்டம். அப்ப எந்திரிச்சி முகத்தைப் பார்த்தா முகம் ஒருமாதிரியா ஒளிமயமா இருக்கும். அந்த நெலைய உட்கார்ந்து உண்டாக்கிட்டு ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பிங்க. அப்புறம் படுத்துக்கிட்டு செய்யலாம். படுக்கும்போது எப்பவும் தூங்கும்போது படுக்குற படுக்கை கூடாது. இது வித்யாஸமா இருக்கனும், பண்ணிக்கிட்டே கை மேலே (தானா) வரனும். நான் ஒரு ‘Fingering Word’ ஒண்ணு தர்றேன். அதைச் சொன்னா ‘டக்’குண்டு கை மேலே வந்துடும்!’

*

‘எதுத்தாப்புல உள்ளவன் மனசுலாம் தெரிய ஆரம்பிக்கும். பலப்பல அற்புதங்கள் தெரிய ஆரம்பிக்கும். சந்தோஷப்பட்டுடக்கூடாது. வெளிலெ சொல்லக் கூடாது. இது உங்களுக்கு வரலேண்டு சொன்னா வந்தவனைப்பாத்து எரிச்சல் படக்கூடாது. அவன் வளர்ந்தாண்டா அவன் பயிற்சியோட வேகம். நீங்க வளரலேண்டா உங்க பயிற்சியோட weakness. என்னெட்டெ கேட்டுக்கனும். ஸ்பீடா வர்றவங்க, ‘ஸ்பீடா வருது.ஸ்பீடா இன்னும் பண்ணலாமா, பண்ண முடியுமா, பண்ண வேணுமா?’ண்டு கேட்டுக்கனும். ஆக லைஃப் முழுக்க பயிற்சியின்போதே உங்க தேவைகள் எல்லாம் தேவைக்கு மேலேயே தானா முடிஞ்சிக்கிட்டு வரும். வெற்றி அடைஞ்சவனின் வெற்றி அவன் வெற்றியல்ல. வெற்றி தானாகவே வந்தது. அவனா கண்டுபுடிக்கலே, என்னவோ கண்டுபுடிக்கப்போயி என்னவோ கண்டுபுடிச்சான். இதுதான் உண்மை. லைஃப்லெ அப்படித்தான் நடக்குது’

‘இதுல ரிஸல்ட் நிச்சயமா வரும். அதை கெடுக்குறது பரபரப்பு. கண்ட்ரோல் இல்லாத மகிழ்ச்சி. இல்லே, கெடைக்கலையேண்ட ஏக்கம், எரிச்சல். இதை எப்படி கண்ட்ரோல் பண்ணுறது? சின்ன காரியத்துலெ மகிழ்ச்சி அடைந்தாலும் மகிழ்ச்சி கூடாது. சின்ன காரியத்துலெ எரிச்சல் வந்தாலும் படக்கூடாது. எவனையும் மதிக்கக்கூடாது. மதிக்கிறதுண்டா உங்களுக்கு மேலேண்டுல அர்த்தம்? உங்களை வுட மேலே யாரும் கிடையாது. நீங்கதான் மேலே. அதுக்கு மேலே பிச்சிக்கிட்டு வருதா அவன்ற நினைப்பு? ‘அவன் இந்த லைன்லெ மேலே..அவன் வயசுலெ நான் என்னென்னவோ பண்ணுவேன்’டு மனசை சமாதானப்படுத்திக்கிங்க. இது ரொம்ப முக்கியமான கட்டம்; வுட்டீங்க, அது வளந்துகிட்டே போவும்!.’

*

‘SS’ பயிற்சிக்கு பெயர் : ‘அரபிலெ இதுக்கு ‘ஜாமியா மானி’ண்டு பேரு. ஆனா இந்த பெயரை வைக்கக்கூடாது. மொளவுத்தண்ணி மாதிரி, மல்லாக்கொட்டை மாதிரி இக்கிது.. என்னா பேரு வைக்கலாம்? நானும் யோசனை பண்ணிக்கிட்டுத்தான் வர்றேன். சொன்னா ‘டக்’குண்டு புரியனும். சொன்ன உடனேயே Circle, முக்கோணம்லாம் மனசுல வந்துடனும். சீக்கிரம் கண்டுபுடிங்க. இதை ‘இஸ்மு’ஆகவே யூஸ் பண்ணி , தாயத்து உட்பட இதையே வச்சி கொடுக்கப்போறேன். இந்த ‘சிம்பல்’ உள்ளாற இக்கிம். அப்ப, இந்த ப்ராக்டிஸுக்கு என்ன பெயர் கொடுக்கலாம்? சும்மாக்காச்சிக்கும் நம்ம நாலுபேரு கூடிப் பேசுறதுக்கு ‘செஷன்’ண்டு வச்சிக்கிறோம். அத மாதிரி ஒரு பேரு இந்திச்சிண்டா பேச வசதியா இக்கிம்.’

‘பயிற்சிக்கு முன்னாலும் பின்னாலும் அரைமணிநேரம் Mind, அமைதியாக இருப்பது அவசியம்’ – ‘S’

*

‘வேலை செய்யுறதுக்கு எந்த உறுப்பு தேவையோ அந்த உறுப்பை மட்டும் யூஸ் பண்ணனும். உங்களுக்கு என்னா தேவை? நான் சொல்ற செய்தியை கேக்குறதுக்கு காது தேவை. புரியும்போது Mind blankஆ இரிக்கனும். அதுக்கு மேலே memory power ஸ்ட்ராங்கா இருக்கனும். அப்பத்தான் நான் சொல்லச்சொல்ல recall  பண்ண வசதியா இக்கிம். அதுக்கு மேலே நீங்க recall பண்ணி வர்ற செய்தியை என்னெட்டெ கேக்கக்கூடாது. என்னெட்டெ பேசுனீங்கண்டா ‘உன் பேச்சை நிப்பாட்டுடா பயலே’ண்டு அர்த்தம். அசையக் கூடாது. அரிச்சா கூட உணர்ந்துதான் சொறியனும். இந்த relaxationலெ அரைமணி நேரத்துக்கு முன்னாலெயும் பின்னாலெயும் இக்கினும். ஒண்ணேகால் மணி நேரம் ஆவும். முடியும்?’

‘செஞ்சித்தான் தீரனும்’ – சீடர்

‘இது வேற! செஞ்சித்தான் தீரனுங்குறது. அரண்மணையிலெ சமையல்காரன் அசந்து தூங்கிக்கிட்டிக்கும்போது ராஜா வந்து பிரியாணி ஆக்கித்தாண்டு கேட்டா சமையல்காரன் சொல்ற பதிலு! செய்வோம்டு சொல்லுங்க. உற்சாகம் வேணும் அதிலெ. நான் சொல்லிக்கிறேன், எந்த காரியம் பற்றி கற்பனை பண்ண முடியலையோ அந்த காரியம் பண்ணக்கூடாது. எதைப்பத்தி கற்பனை வருதோ அதை நிச்சயமா அடைஞ்சிட முடியும்டு.. இப்ப உங்களுக்கு memory power தேவை. முக்கியமான செல்வங்கள்லெ dependable memory ஒண்ணு. அதனாலே நீங்க என்னவோ நெனச்சேனே..சொல்ல வந்தேனே..மறந்து பொய்டுச்சேண்டு சொல்லக்கூடாது. அப்படி சொன்னாக்கூட தனியா உட்கார்ந்து recall பண்ணி எடுத்துடனும். எடுக்கலேண்டா subconsciousலெ இது ரிகார்டு ஆவுறதுனாலெ நெனைக்கிற சக்தி இல்லாம பொய்டும்..ம்..அரைமணி நேரம் ஆவுமா, முக்கால் மணி நேரம் ஆவுமா?’

‘செஞ்சிப் பார்த்தாத்தான் தெரியும்’

‘நான் கேக்குறது..ப்ராக்டிஸ் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ரிலாக்ஸ் பண்ணுறதும் பின்னாலே நிக்கிறதும். சோறு உண்குறதுக்கு முன்னாலெ சோடா குடிச்சிபுட்டு சோறு உண்ட பிறகு பாக்கு போடுற மாதிரி. முடியுமாண்டு சொல்லுங்க. ஆரம்பிச்சிட்டு லேட்ஆவுதுண்டு  பேச்சு வரக்கூடாது’

‘எவ்வளவு நாளைக்கி?’- ‘S’

‘பவலைக்கி நீங்க சாப்புடனும்டு சொல்லும்போது ‘எவ்வளவு நாளைக்கி’ண்டு கேக்குறதில்லையில்லெ? கரெக்டா குளிக்கனும்டா ‘எவ்வளவு நாளைக்கி’ண்டு கேக்குறதில்லையில்லே? எவ்வளவு மேலே போறீங்களோ பண்ணுங்க. வுட்டிங்கண்டா தூங்குங்க!. எவ்வளவு நாளைக்கிண்டுலாம் கேக்கக்கூடாது’

‘கொஞ்ச நாளக்கி இப்படி பண்ணிப்புட்டு அப்புறம் குறைக்க முடியுமா?’

‘அது பிறகு! நான் குறைப்பேனா கூட்டுவேணாங்குறது பிறகு. இப்ப நீங்க செய்ய ரெடியா? எவ்வளவு நாளைக்கிண்டு கேட்டாவே சட்டுபுட்டுணு முடிங்க…மத்த வேலைய பாக்கனும்டு அர்த்தம்’

‘இல்லே.. காலம் பூராவுமாண்டு கேட்டேன்!’

‘இந்த பேச்சை வுடுங்க இதோட ! நான் சொல்றேன், செய்யுங்க! எந்த பயிற்சியும் சரி, permanent அல்ல, நீங்க செய்யிற செயலை cosmic habit force பிக்அப் பண்ணனும்டு லட்சம்தரம் சொல்லியிக்கிறேன்ல.. பிக் அப் பண்ணிட்டா போதும். உங்க திறமையைக் காட்டுங்களேன், முடியுமா?’

பயிற்சி கால் , முன்னாலும் பின்னாலும் கால் மணி நேரம் என்று தீர்மானமாகிறது – சீடர் பிழைத்தார்!.

உள்வட்ட குழுவைச் சேர்ந்தவர்களை relax ஆக இருக்கச் சொல்லிவிட்டு நூறுக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, ’66 . யாரு இதை நெனைச்சா?’ என்கிறார்கள். ஒருவர் 64ஐ நினைத்ததாகச் சொல்கிறார்.

‘சரி மறுபடியும் நெனைங்க, ஸ்ட்ராங்ஆ’

இந்த முறை 55ஐ சரியாகச் சொல்கிறார்கள் ஒருவரைப்பார்த்து. அடுத்து வேறொரு பயிற்சி.

‘சரி, இப்ப நீங்க இந்த அஞ்சு மனாராலே ஒரு மனாராவை நெனைச்சிக்குங்க strongஆ. கண்ணை மூடிக்கிட்டு அந்த மனாராவையே பாருங்க. இது சேத்தான்பாவாட மனசுக்கு போவனும்டு நினைங்க. அந்த figureஐ நெனச்சி அவன்ற மனசுக்குப் போவனும்டு நெனங்க – கண்ணை மூடிக்கிட்டு’. Tranquility… Peace of Mind வந்தா இப்படி reflect  ஆவும். automaticஆ இங்கேயுள்ளது அங்கே போவும். அங்கே உள்ளது இங்கே வரும்!’

Peace of Mind :

‘எப்ப அரிக்கும்போது இப்படி சொறியக்கூடாது, இப்படி சொறிஞ்சா போதும்டு தோணுதோ, இந்த தேவையில்லாத அசைவு கூடாதுண்டு தோணுதோ, எப்ப எதையும் அடையமுடியும்டு தெளிவும், தைரியமும், நம்பிக்கையும் வருதோ எதைப்பத்தி கற்பனை வருதோ அதைத்தான் Peace of Mind ண்டு சொல்றேன். கையிலெ காசு வச்சிக்கிட்டு, பசியார்றதுக்கு காசு இக்கிதுண்டு அமைதியா உர்கார்றது அல்ல. அது கவலையில்லாத நெலமை. பொறுப்பு இல்லாத நெலைமை அது. நோன்பு திறக்குறதுக்கு முந்தின நிலைமை. (சாப்பாடு எதிரிலேயே இக்கிதே) கையிலெ காசு இல்லாட்டாலும் அப்படி இருக்கனும். இதுக்காக தனி ப்ராக்டீஸ் பண்ண வேண்டியதில்லே..’

– சர்க்கார், ‘right hand தானா மேலே வரனும் இப்ப’ என்று நம்பர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்- சீரான இடைவெளியில். ‘ஒண்ணு…ரெண்டு….. 33 வரை போகிறது. இரண்டு கைகளும் மேலேழும்பி வருகின்றன..

‘யாரோ உள்ளே பூந்து தூக்குன மாதிரி இந்திச்சில்லே?! ‘இந்த தூக்குன கையை இப்படியே வச்சிக்கிட்டு ப்ராக்டீஸ் பண்ணனும். அதனாலெ main pratice ஏழு நிமிஷத்துக்கு மேலே வாணாம். முன்னாலெ 15 நிமிஷம், பின்னால 15 நிமிஷம். (மொத்தம்) நாப்பத்தஞ்சி நிமிஷம். முக்கால் மணி நேரம்தான்!’ – 1+1 = 2…!

’37’ – சீடர் பாய்ந்து வந்து ‘தவறை’ கண்டுபிடிக்கிறார்.

‘ம்’ நாப்பதுண்டு வச்சிக்குங்களேன். (main ப்ராக்டீஸ்) பத்து நிமிஷம்’ – ‘S’

*

14.02.1996  8.05 pm

‘ஜம்’ முடிந்து கண்ணாடியில் எதேச்சையாக பார்த்தேன் முகத்தை. கண்ணாடி விழுந்து விட்டது! முகத்தின் ஒளிவெள்ளம் அப்படி! அட, பக்கத்திலிருந்த Bagன் காதுகள் கண்ணாடி ஸ்டாண்டில் பின்னியிருப்பதை கவனியாமல்… இந்த கவனம் எப்போது வரும்?

*

15.02.1996 பிறை 17 இரவு 9.30

13ஆம் தேதி faxல் வந்தது- லைலத்துல் கத்ரு இரவுக்கு ஓதவேண்டிய இஸ்மு. நாவப்பட்டினத்திலிருந்து நஸ்ருதீன் வாங்கி அனுப்பி வைத்திருந்தார். ஓதுவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் கொஞ்சம் எழுதலாம்.

ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிக்கும்போது (secret symbol) காரியங்கள் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் நடக்கும் என்று சர்க்கார் சொல்கிறார்கள். ‘பலப்பல அற்புதங்கள் தெரிய ஆரம்பிக்கும்’ – ‘S’

  1. இந்த முறை ஊர் போயிருக்கும்போது – பயிற்சி கிடைத்து பண்ணிக்கொண்டிருக்கும் கொஞ்சநாளைக்கெல்லாம் பார்க்கப்போகிறவர் எதிரில் வந்து கொண்டிருப்பார், அல்லது கதவைத் தட்டுவார், அல்லது எனக்கு முன்னே சட்டென்று போய்க்கொண்டிருப்பார். எத்தனை முறை காக்கா உட்கார பனம்பழம் விழும்? ஒருநாள் இரவு நாவப்பட்டினத்திலிருந்து ஸ்கூட்டரில் வந்துகொண்டிருக்கும்போது.. சர்க்கார் புதுவீட்டுக்கு வந்துவிட்டார்களே.. இப்போதைய ஃபோன் நம்பர் என்ன என்ற கேள்வி மனதில். சென்னையிலிருக்கும் சின்னமைத்துனர் முத்துவாப்பாவை சர்க்கார் வீட்டிற்கு தொடர்புகொள்ளச் சொல்ல வேண்டும் என்று. கொழுந்தியாள் சேத்தபொண்ணு விஷயமாக. பழைய நம்பர்தான் என்பது மறந்து போயிருக்க வேண்டும். அவ்வளவு அழகான என் பயிற்சி..! சர்க்கார் வீட்டிற்கு போய் கேட்டுவிடுவது என்று கஃபூர்ஷா தெரு போனால் கதவு சாத்தியிருக்கிறது. வாசலில் நிறைய பெண்களின் செருப்புகள். முக்கியமானவர்கள்தான் இந்த நேரத்தில் வர முடியும். நான் calling bell அழுத்தினேன் இரண்டு முறை. சர்க்கார் மருமகனாவது வரட்டுமே என்று. ஒரு சத்தமும் கேட்கவில்லை. சர்க்காரை தொந்தரவு பண்ணுகிறோமே என்று பயம். சரி, கடைத்தெருவில் சர்க்கார் சீடர் ஆரிஃப்-ன் உப்புரொட்டிகடை இருக்கிறது. அவரைப்பார்க்கலாம் என்று போனால் அவரும் இல்லை. ‘என்ன..இது..’ என்று யோசனை பண்ணிய மறுவினாடி யூனுஸ்சாபு எதிரில் வந்து கொண்டிருக்கிறார்! சொன்னார். இதை சர்க்கார் மருமகனிடம் சொல்ல அவர் சர்க்காரிடம் சொல்லியிருக்கிறார். சர்க்கார் சொன்னார்களாம்:’ ஆபிதீன் அவர் வூட்டுக்கே போய்ட்டாக்கூட யாராச்சும் வந்து கதவைத்தட்டி கேட்டதை சொல்லுவாஹா, இல்லே, கொடுப்பாஹா!’

‘இஸ்மு’ ஓதிவிட்டு – ஒரு ஊதுபத்தி எரிந்து முடிந்த நேரம் – எழுதுகிறேன். அலையெனும் தொட்டிலில் இன்னும் உடல் ஆடிக்கொண்டிருக்கிறது. புதுப்புது அலைகளை மனது உற்பத்தி பண்ணிக்கொண்டிருக்கிறது.,

துபாய் வந்ததிலிருந்து ‘லைலத்துல் கத்ரு’ இரவு பெரும்பாலும் ‘கோல்டு சூக்’ பக்கமுள்ள ‘குவைத்பள்ளி’யில்தான் கழிந்திருக்கிறது. அங்கு ஓதும் ‘அழுகை துஆ’ புகழ்பெற்றது. கீழக்கரைக்காரர்களின் ஆதிக்கத்தில் அழுகை உற்பத்தி ஆகிறது. விளக்கை அணைத்துவிட்டு இருளில் அழுவார்கள். சிரிப்பு தாங்க முடியாமல் போனவாரம் ‘நாசர்ஸ்கொயரில்’உள்ள ‘அல்லாபள்ளி’யில் (அல்லா என்னும் அரபி எழுத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதால் இந்த பெயர். குறைந்த பட்சம் எழுத்திலாவது ‘அல்லா’ இருக்கட்டுமே என்ற நினைப்பால் இருக்கலாம். ஆனால் அழகான பள்ளி) தொழுதேன். அங்குள்ள இமாமின் குரல் அற்புதமாக இருக்கும். இமாம் ஓதும்போதே அழுகை பெருக்கெடுக்கும். சில இமாம்கள் ஓதும்போது வரும் அழுகை வேறு. இவர் நிஜமாகவே உயிரின் அணுக்களில் புகுவார். இந்த வருடமோ அல்லாஹ் , அவீரில், என் ரூமில்தான்!. துபாயின் அரபி சேனல் பக்தியோடு கஃபாவையும் அதைச்சுற்றி மொய்க்கும் லட்சக்கணக்கான தேனீக்களையும் காட்டிக் கொண்டிருக்கிறது. கொடுக்கு மறந்த தேனீக்கள். சேனல் 33 வழக்கமான ஆசியத் தொழிலாளர் கூட்டத்துக்கு ஒரு ஹிந்திப்படத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கதாநாயகன் வில்லனை துவம்சம் பண்ணி கதாநாயகியின் காலில் விழவைக்கிறான். ‘மாஃபி மாங்!’. துபாயின் நகரமோ முதல் முதலான Shopping Festivalஐ Barகளில் நுரைபொங்க – ரஷ்யக்குட்டிகளின் தொடை இடுக்குகளில் – கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நான் இன்னொரு அற்புதத்தை எழுதுகிறேன் அதையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு.

  1. சர்க்காரின் பயிற்சிகளின் ஈடுபடும் முன்னாலேயே இரண்டு வருஷத்திற்கு கொழுந்துவிட்டெறிந்த ஆசையின் காரணமாக ஒரு Operator என்பதிலிருந்து பக்கா Programmerஆக மாறினேன் என்றாலும் – Novel Network அதன் Administration தவிர எனக்கென்று ஒரு தனி System வேண்டும் என்று கேட்டதற்கு வாங்கிக் கொடுத்த அர்பாப் அலிமுக்தார் இரண்டுவருடமாக அதை Upgrade பண்ண அடம்பிடித்துக்கொண்டிருந்தான். எனக்கு MS Office – முக்கியமாக accessஐ – உருட்டிப் பார்க்க ஆவல். Foxpro-windowsஐ லோட் பண்ணி அதையும் உருட்ட வேண்டும். Visual Basic வேறு வந்துவிட்டது. ஆஹா இந்த Corel Draw.. திடீரென்று Copy Right பிரச்சனை வேறு துபாயில் புகுந்து கொஞ்சநாளைக்கு விபச்சாரம் பண்ணாதே என்று சொல்லிவிட்டதில் மலிவான Pirated Programmes/Softwares கிடைக்க வழியில்லை. Originalஆ? ஆ..ஆ..என்கிறான் அலிமுக்தார். பயிற்சி ஆரம்பித்து துபாய் வந்து சேரும்போது Windows95 கொடிகட்டிப் பறக்கிறது. Chief Accountantன் நெற்றியைப் பார்த்து சொன்னேன் – சிஸ்டம் Upgrade பண்ணப்படவேண்டும். அலிமுக்தார் மறுத்ததற்கு காரணமான அவர் – லாபத்தை ஏழெட்டு மில்லியன்களாக கண்ட வருடத்தில் வேண்டாமென்று சொன்னவர் – நஷ்டத்தை நோக்கி நடக்கும் வருடத்தில் ஒத்துக்கொண்டார் உடனே இப்போது! அடுத்த நாளே 130 MB Harddisk 1 GB ஆகியது (நான் கேட்டது 540 MBதான்). 4 MB Memory 8 MB ஆகியது. ஆசைப்பட்ட அத்தனை Softwareகளும் Free ஆக சிஸ்டத்திற்கு கிடைத்தது! (நான் இப்போது சீஃப் அக்கவுண்டண்ட் ஆக ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறேன் சீ·ப் அக்கவுண்டண்ட் மொயீன்சாஹிப் அவர்களே, ஜாக்கிரதை!)

16.02.1996 வெள்ளி

இன்று ‘செஷன்’ நாள். துரதிர்ஷ்டவசமாக இன்று இழந்தேன். ‘தேரா’ போனால் எப்படியாவது அடித்துப்பிடித்து இங்கு 6 மணிக்கு வந்துவிடுவேன் – ஊரின் ஏழரை மணியை கணக்கு பண்ணி. Symbolன் தொடர்ச்சி கேஸட்களை ஜெப்பார் நானாவிடம் வாங்க வேண்டியிருந்தது. சஹருக்கு தயாராக வேண்டிய ஆணம் 4 மணிக்கு தயாராகவில்லை. இடையூறு நேரலாம் என்று கருதி தம்பி ஹலால்தீனின் ரூமில் அமர்வோம் என்று Walkmanஐ எடுத்துக் கொண்டு போயிருந்தேன் நான். கேஸட்கள் கிடைத்து விட்டது. நோன்பு திறந்துவிட்டு ஹலால்தீன் ரூம் போகலாம் என்று பார்த்தால் மழை! துபாய் கெட்டுவிட்டது வர வர! மஸ்தான் மரைக்கான் ரூம் ஒரு பழனியாப்பிள்ளை சத்திரம். வாடகை குறைக்க ஆட்களை சேர்த்து சேர்த்து ஒரு ஆளுக்கு மேல் ஒரு ஆள் படுக்கிற நெருக்கடி. சத்தமும் அப்படி. பக்கத்துப் பள்ளியில் அரைமணி நேரம் செஷனை நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன் மௌனமாக. Walkmanஐ அங்கே போட்டுக் கேட்டால் தர்ம அடி விழும் என்று பயம். ஜெப்பார்நானா தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரை விடுவதற்கு அவீருக்கு வரவேண்டியிருந்ததால் அவரின் காரில் தொற்றிக்கொண்டு வந்து சேர்ந்தேன். ரூமில் வரைந்திருந்த சர்க்காரின் ஓவியம் முறைத்துப் பார்க்கிற மாதிரி இருக்கிறது. மன்னித்து விடுங்கள் சர்க்கார்..

அவீர் வர காத்திருந்தபோது மஞ்சனூர் பாவா பற்றி பேச்சு வந்தது. ஜெப்பார்நானா மஞ்சனூர்க்காரர். ஹூப்லிபாவாவைப் பற்றி ஏதும் தெரியுமா என்று கேட்டதற்கு ‘அந்த ‘மஃரிபா’ ஸ்டேஜ் நம்மல்லாம் ரீச் பண்ண முடியாதது. அவங்களை பாத்திருக்கேன்..கால் புடிச்சி விட்டுருக்கேன். ஆனா அவங்கள்ட்டெ விஷயம் இருக்குண்டு தெரியுற வயசுல – நான் பக்குவப்பட்ட நேரத்துலெ – அவங்க வஃபாத் ஆயிட்டாங்க’ என்றார்.

எனக்குத் தெரிந்ததுதான் அந்த ஊர்க்காரர்களுக்கும் தெரிந்திருக்கிறது! வித்யாசம், நான் பாவாவை பார்த்ததில்லை. வீட்டில் பார்த்திருக்கிறார்கள். எங்கோ பார்த்தமாதிரி வசவுடன் பதிலை அவரவர்களுக்கு சொல்வார்களாம். நமக்குள்ள பதில் என்பது கேட்டவர்களுக்கு தெரியும். பாவா சுவரில் கிறுக்கிய வீடுகள் திடீர் செழுமையை அடைந்திருக்கிறது. ‘இந்தா..கொஞ்சம் நகர்ந்து உட்காரு’ என்று ரோட்டு மரத்தடியில் உட்கார்ந்திருந்த பெண்மணி ஒருத்தியிடம் அவர்கள் சொல்லிவிட்டுப் போன பத்துநிமிடத்தில் மரம் வேரோடு விழுந்திருக்கிறது. ‘எந்தப் பையனை தன் பெண்ணுக்கு கட்டுவது?’ என்று கேட்டவர்களுக்கு அவர்கள் காட்டிய குதிரை வண்டிக்காரன் மகன் – பரம தரித்திரன் – வெளிநாடுபோய் திடீர் செல்வந்தனானான். பாவா வஃபாத்தானவுடன் அவர்கள் தன் உடம்பில் புகுந்து விட்டதாக கூறி நாக்கூர் ஜோலனாப்பள்ளி ஹஜ்ரத்தின் மகன் ஊரிலுள்ள கனியாப் பெண்கள் சிலரைக் கனிய வைத்தான். ஒரு பெண் அவனால் கர்ப்பவதியாகி இறந்துவிட வெளிநாட்டிலுள்ள அந்த பெண்ணின் தகப்பனுக்கு தெரியப்படுத்தாமல் , அண்டை வீட்டார் ஊருக்கு கூட தெரியப்படுத்தாமல் , ஜோலனா ஹஜ்ரத்தின் மகன் உயிர் உண்டுபண்ணுவான் என்று வைத்திருந்து ஒரு வாரம் கழித்துதான் ஊருக்குத் தெரிந்தது. ஜோலனா ஹஜ்ரத்தின் மகன் , பறித்த நகைகளுடன் ஓடிவிட பிறகு மையத்தை அடக்கம் பண்ணியிருக்கிறார்கள். ஹூப்லிபாவா எனும் பெயர் அத்தனை சக்தி படைத்தது! இவர்களைப் பற்றி சர்க்கார் என்ன சொன்னார்கள் என்று ஜெப்பார்நானாவிடம் கேட்டேன்..’அஹலுக்கு கெடைச்சது கிஃப்ட். அல்லாட்டேர்ந்து செய்தி வந்துகிட்டே இக்கிம்.. திணிக்கிறது வேற, அன்பளிப்பா கிடைக்கிறது வேற’ என்றார்களாம். அவ்வளவுதான் சொன்னார்களாம்.

சில ஹிந்து நண்பர்கள் அவர்களின் தெய்வங்களையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு ‘யா ஹூப்லி’ என்றுதான் பிள்ளையார் சுழி மாதிரி போட்டு ஆரம்பிக்கும் எங்கள் ஊரில். ‘நாய்பாவா’வை பிடிக்கிற ஆளாக இருந்தால் ‘யா நாய்..’ என்று ஆரம்பிப்பார்களோ? இவர்களுக்கு என் சர்க்கார் வெறும் பந்தா பண்ணும் ஆள். ஏனெனில் ‘இந்த வாழ்க்கை’யை சிறப்பாக வாழ்வதற்கு வழி சொல்கிறார்கள்! விஞ்ஞானத்தின் துணையுடன் மனோதத்துவ விளக்கம் யாருக்கு வேண்டும்? முக்கியமாக , தாடி இல்லை. அரைக்கண் மூடிய பார்வை இல்லை. தாடியுள்ள ஆட்டுக்கு கள்ளைக் கொடுத்து காட்டினால் ‘யா ஆடு’ என்று ஆரம்பிப்பார்களோ என்னவோ.. சர்க்கார் பந்தா பண்ணும் ஆள்? அவர்களுக்கு இந்த நடிப்புகளில் நம்பிக்கையில்லை. அவர்களின் பேச்சைப் புரியவும் அவர்களின் வழிகாட்டலை ஏற்று நடக்கவும் இருக்கிற குறைந்த பேர்களே போதும். முக்கியமாக சஹரின் ஆனத்துக்காக வெள்ளி Sessionஐ இழக்கிற ஆபிதீன் போன்ற ஆட்கள்..

இனி இந்த தவறு புரியமாட்டேன் சர்க்கார்..

அற்புதம் 3 : ‘நாம சொல்லாமலேயே நம் மனைவி நம் தேவையை பூர்த்தி செய்வாள் – புரிந்து கொண்டு’ என்பார்கள் சர்க்கார், பயிற்சியின் பலன்களில் ஒன்றாக. துணைவி அஸ்மா , என் உடைகளை இஸ்திரிபோட்டு வைக்க ஆரம்பித்ததைச் சொல்லலாம்! இஸ்திரிப்பெட்டி என்பது முதலில் சமைப்பது, தொழுவது மாதிரி இருந்தது அவளுக்கு!

  1. கேட்கும் கடன் கிடைத்து விடுதல். தங்கை ஹலீமாவின் கல்யாணத்திற்கு தம்பி இஷாக்கிடம் கடன் வாங்கியிருந்தேன். திரும்பி வந்து , நோன்பு சமயத்தில் அரபாப்கள் கொடுக்கும் ஜக்காத்தில் திருப்பிவிடலாம் என்று எண்ணம். திடீரென்று சௌதியிலிருந்து ஒருவாரத்திற்கு முன் ஃபோன் – இஷாக்கிடமிருந்து.

‘நானா..உண்டியல் வியாபாரத்துலெ பெரிய அடி நானா. அஞ்சு லட்ச ரூவா மாட்டிக்கிடிச்சி. ‘தொப்பி’யப் போட்டு ஓடிட்டான்..எனக்கு பணம் பயங்கரமா தேவைப்படுது உடனேயே..’

முதலில் இஷாக்கிற்கு கடிதம் எழுதியிருந்தேன். ‘உனக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால் உடன் எனக்கு கடிதம் எழுது; நான் இரண்டு மாதம் கழித்துத் தருவதாக பதில் எழுதுகிறேன்!’ என்று. இப்போது எழுதமுடியாது!

‘ஜக்காத்’துக்குண்டு வெயிட் பண்ணிக்கிட்டிக்கிறேன்ப்பா.. ஆனா கம்பெனி நிலைமை, அரபாப்களுக்கு நாங்க ‘ஜக்காத்’ கொடுக்குற நெலைமையிலெ இக்கிது’

‘தமாஷ் பண்ணாதீங்க நானா..எனக்கு உடனே வேணும். மெட்ராஸ் செல்லமரைக்காருக்கு உடனே அனுப்பிவுடுங்க’

அன்று இரவு சற்று குழப்பம். கம்பெனியில் திடீரென்று லோன் வாங்க முடியாது. ஏற்கனெவே வாங்கியதை அடைத்திருக்க வேண்டும் அதற்கு! சர்க்கார் சொல்கிற முறைப்படி ஒரு நபரை முயற்சித்தேன். அவர் முதல்நாள்தான் என் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர். இப்போது ‘அதுக்கென்ன..உங்களுக்கு இல்லாமலா?’ என்று உடனே உதவினார். அடுத்த இரண்டு நாட்களில் ஜக்காத் பணம் கிடைத்து இவரின் கடனை அடைத்தேன். எவ்வளவு சுலபம் பணம் தோதுவது!

கடன் தொல்லைகள் நீங்க (3 முறை ஓதவேண்டும். கடன் வாங்கும்போது ஓதாமலிருப்பீர்களாக!)

‘குலில்லாஹூம்ம மாலிக்கல் முல்கி

துஃத்தில் முல்க்க மன்த்தஹா

வ தன்ஜூஉல் முல்க்க மின் மன்த்தஹா

வத்து இஜ்ஜு மன்த்தஹா

வத்து தில்லு மன்த்தஹா

பி யதிகல் ஹைர்

இன்னக அல்லா குல்லி ஷையின் கதிர்’ –  ( சூரா ஆல இம்ரான் 3 : 26)

*

  1. O.T…  இந்த முக்தார் அப்பாஸ் கம்பெனியில் கனவில் வரும் தடித்த புத்தகத்திலுள்ள ஒரு வார்த்தை. யாருக்குமே அர்த்தம் புரியாது. அது என்னமோ நான் வேலை பார்க்கிற கம்பெனிகளில் இம்மாதிரி கனவுப்புத்தகங்களும் அர்த்தம் தெரியாத வார்த்தைகளும் (Bonus.. Graduity..) இருந்து வருகின்றன. சௌதியின் கொடுமையான அவமானப்படுத்தலுக்கும் குறைந்த சம்பளத்திற்கும் துபாய் பரவாயில்லைதான். ஆனாலும் மூட்டைப்பூச்சிகளின் சொர்க்கமான துபாயிலும் அதே தரித்திரியம். அல்கோபர் அப்துல்லா-அல்-கால்தியிலிருந்து துபாயின் ‘MKT’ தௌலத்காக்கா,  அவர் காட்டிய முக்தார் அப்பாஸின் பலுச்சி முதலாளிகள் அத்தனை பேருக்கும் என் தரித்திரியத்தின் மேல் அமோகப் பிரியம். சம்பளத்தைத் தவிர கண்ணில் எதையும் காட்ட மாட்டார்கள். துபாய் வந்த புதிதில் வேலை எதுவும் கிடைக்காமல் NAG Advertising என்ற கம்பெனியில் ஆர்ட்டிஸ்ட் வேலை பார்த்தேன். ஆழியூர் ராமசாமியின் ஓவியப் புத்தகத்திற்கு மூன்று ரூபாய் செலவழித்தால்தான் யார் வேண்டுமானாலும் ஆர்ட்டிஸ்ட் ஆகிவிடலாமே.. முக்கியமாக, வரைய வேண்டிய உருவத்திற்கு பின்னால் பென்சிலைத் தீட்டி பிறகு முன்பக்கமுள்ள உருவத்தின் மேல் பென்சிலால் அழுத்துவது – கலை மின்னும் கார்பன்! இது இருக்கட்டும், அந்த விளம்பரக் கம்பெனியில்தான் O.T என்ற வார்த்தையே கேள்விப்பட்டேன். அதுபோலவே ஒர் நொடி அதிகமாக வேலைபார்த்தாலும் O.T கிடைத்து விடும். ஒரே ஒரு பிரச்சனை அங்கு, சம்பளம் கிடைக்காது! இவர்களையெல்லாம் தாண்டி வந்து இங்கு விசா மாற்றி , பேங்க்-ல் வேலை பார்ப்பவர்களையும் , O.T கிடைப்பவர்களையும், வருடாவருடம் ஊர் போகிறவர்களையும் பொசுங்குவதுபோல் பார்த்துக் கொண்டிருப்பதும் என் System-in-Charge பதவியில் அடக்கம். இங்கு போனவாரம் O.T கிடைத்தது – ஒரு நாளைக்கு! பெரிய முதலாளி முஹம்மது முக்தார், தான் அபுதாபி Defenceலிருந்து எடுத்த ஓட்டை உடைசலை (scrap) ஒரு லிஸ்ட் போடச் சொன்னார். இது அவருடைய தனிக்கம்பெனிக்கு. நான் மறுக்கவே ‘சரி,அவனுக்கு ஏதாவது கொடுக்குறேன்..ஓ..இந்த இந்திகள்..’ என்று புலம்பி சரி சொன்னார். உடனேயும் கிடைத்தது. ‘O.T’ என்றால் இதுதானா? அட.! இதுவும் அற்புதம் – கம்பெனி மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும்போது. இதைவிட அற்புதம் , இதைப் படிக்கிறவர்கள் யார் என்று எனக்குத் தெரிந்திருப்பது!

***

23.02.1996 வெள்ளி ‘செஷன்’

7-19.03.95 கேஸட் :

‘ஆண்டவன் தண்டிக்கிறவண்டு நெனைச்சா அந்த (தண்டிக்கிற) ஆண்டவன்தான் நீங்க கூப்புட்டா வருவான். நான் அல்லாஹ்வைப்பத்தி எப்படி நெனைக்கிறேனோ அந்த நினைப்புக்கும் உங்க நெனைப்புக்கும் வித்யாஸம் இக்கிம். நான் வாயினாலே சொல்லமாட்டேனே தவிர என் நெனைப்பு வேறே. நீங்க என்கிட்டே வரவரவர எனக்கு செய்த அல்லா உங்களுக்கு செய்ய ஆரம்பிப்பான். என்னோட ஒட்டிக்கிட்டீங்கண்டா ரெண்டு பேருக்கும் சேர்த்து செய்வான்!’

சர்க்கார் தன் கல்யாண இன்விடேஷன் கொடுத்தபோது அவர்களின் உஸ்தாதுமார்கள் ஒரேமாதிரியாக சொன்னது. அரபியில் அதைச் சொல்லி, ‘அது ‘துஆ’வா ‘பதுவா’வாண்டு பாருங்க.. இப்ப சொல்றேன்’ என்று தமிழில் சொல்கிறார்கள் சர்க்கார் : ‘உனக்கு கொஞ்சம் கூட என்றைக்கும் பொருத்தமில்லாத ஒருத்தியை கல்யாணம் பண்ணிவிட்டாய்.. பேராசானும் பெரும் கொடை வள்ளலுமாகிய இறைவனின் கிருபையினால் கூடிய சீக்கிரம் ‘தலாக்’ கொடுத்து விடுவாய். அதற்குப்பிறகு அல்லாஹூத்தஆலா உன் எண்ணங்களிலும் செயல்களிலும் பரக்கத்தைக் கொடுப்பானாக!’.

‘பிறகுங்குறது ‘தலாக்’ கொடுத்த அடுத்த நாளேண்டு அல்ல, அதுக்கு பத்து வருஷமாச்சு!’  ‘S’

*

‘விளக்கு என்பது ஒரு பொருள்தான். நான் பார்த்தேண்டா காஃ·பி போட உதவும் கருவிம்பேன். இன்னொருத்தன் ‘நல்ல நேரத்துல கெடச்சிடுச்சி, சுருட்டு பத்தவைக்கலாம்’பான். ஒரு குழந்தை பார்த்தா விளையாடுற கருவிண்டு நெனச்சி தொட்டுப்பார்த்து கையை எடுக்கும். நெருப்பை வணங்குறவனாயிருந்தா வணங்குவான். ஆக அவனவனுக்கு நெருப்பு வெவ்வேறு பொருளா இக்கிது, ஆனா நெருப்பு மாறலே. அது ஒரேமாதிரியாத்தான் இக்கிது. (அதே மாதிரி அபுஜஹில் பார்த்தது முஹம்மது ரசூலுல்லாஹ் அல்ல, அப்துல்லாவின் மகனான முஹம்மது)’

*

எதிரி :

‘பேசும்போது எதிரி எப்படி இக்கிறாண்டு பார்க்கனும். அது ரொம்ப முக்கியம்’

எரிச்சல் :

‘எரிச்சல் மட்டும் படவே கூடாது. எரிச்சல் வரும்போது அவனவன் செஞ்ச செயலுக்கு கூலி வருது, நம்ம இதுல கமெண்ட் அடிக்கிறதுக்கும் எரிச்சல் படுறதுக்கும் என்னா இக்கிதுண்டு நெனச்சிப் பாருங்க. எரிச்சல் மகா கெட்டது. எந்த அளவுக்கு எரிச்சலை நீங்க துடைப்பீங்களோ அந்த அளவுக்கு நீங்க தானா வளருவீங்க’

ப்ராக்டீஸ் :

‘நீங்க கத்தியை கூராக்கிக்கிடே வாங்க. அத வச்சி சீவுறதுக்குள்ள வாய்ப்பு தானா வரும்’

‘ஒரு குறிப்பிட்ட கணக்கை ‘ரமல்’லெ கண்டுபுடிச்சேன். இதை கண்டுபுடிச்சி ஃபோகஸ் பண்ண உடனே – கணக்கை  ஃபோகஸ் பண்ண உடனே – இந்த கணக்கு தேவைப்படுற ஜனங்களா வந்து குவிஞ்சிச்சி. அப்ப நீங்க செய்யவேண்டிய வேலை என்னா.. ‘ஃபோகஸ்’ பண்ணுங்க. சங்கடமில்லாம சலிப்பில்லாம ‘ஃபோகஸ்’ மட்டும் பண்ணுங்க. எப்படி காரியம் கூடிவருதுண்டு பாருங்க. நான் என்னென்ன சொல்றேனோ அதை மட்டும் செய்யுங்க. வர்றதை அனுபவிச்சிக்குங்க. ஆனா என்னெட்டெ சொல்லுங்க. சொன்னா நான் சந்தோஷப்படுவேன், அவ்வளவுதான்’

*

‘நோட்டிஸ் ஒட்டுற எல்லாரும் கருணாநிதி ஆயிடமுடியாது’

*

‘தொப்புளாலெதான் புள்ளை பெறுவாஹாண்டு நம்புற கொள்கை எவ்வளவோ சிறந்தது. தேவையில்லாத மன உளைச்சல் இல்லை. இது முட்டாள்தனம்தான். ஆனாலும் சிறந்தது. யாருக்கும் தொந்தரவு வராது. தெரியாதவன் ‘ஆமாம்’பான். தெரிஞ்சவன், ‘ஓஹோ..சொன்னவனுக்கு புரியலே போலக்கிது’ண்டு நெனச்சிக்குவான். அதோட முடிஞ்சிச்சி!’

*

Astral Body, Physical Bodyஐ பார்க்கும்போது :

‘பார்க்கும்போது சில சில உறுப்புகள் ரிலாக்ஸ்டா இல்லைண்டு தெரியும். அப்ப நீங்க bodyஐ adjust பண்ணுனீங்கண்டா astral body இங்கெ (physical)க்கு வந்துடும். ப்ராக்டீஸ்ஐ ஆரம்பத்துலேர்ந்து செய்ற மாதிரி வரும். அது கோணிக்கிட்டிந்தா கோணிக்கிட்டிக்கட்டும், பரவாயில்லா. இயன்ற வரைக்கும் ரிலாக்ஸ் பண்ணுங்க. வெளிலே இருந்து பார்க்கும்போது குறை தெரியும், அத மனசுல வச்சுக்குங்க. அடுத்த தடவை rectify பண்ணிக்கம்டு. அடுத்த தடவை சரியா பண்ண வரும். பண்ணுங்க’

*

‘கனவுல நீங்க பறக்குற மாதிரி கண்டுக்கிறீங்களா?’ – ‘S’

‘… …. …  ‘

‘சரி, ஆஹாசமா போறமாதிரி கண்டிக்கிறிங்களா?’

‘ம்..’ – ஒரு சீடர்

‘அது பறக்குறதுதானே! அப்ப பறக்குறதுண்டு எதுக்கு சொல்றது? பட்டம் மாதிரி ஆவுறதுக்கா?’

‘இல்லெ..நான் பொறுக்குற மாதிரிண்டு நெனைச்சேன் சர்க்கார்’

‘பொறுக்குறதுக்கா?! ம்.. Astral Body , Your Actual Bodyஐ பார்க்கும்போது என்னா தோணுது?”

‘ஜடம் படுத்துக்கிடக்குற மாதிரி’

‘வேற என்ன தோணிச்சி? நான் சொல்றது ஏதும் தோணிச்சா?’

குழப்பம் நிலவுகிறது.

‘ஒண்ணும் தோணலியா?ம்…இந்த (Physical) Bodyஐ நாம் எப்படி வேண்டுமானாலும் mould பண்ணலாம்டு தோணலியா?’

*

Symbol எழுதப்பட வேண்டிய material : ‘திரைண்டா துணி அல்ல. நான் screen-ண்டு சொன்னேன். கறுப்பு எழுத்து எழுதக்கூடிய Plasticஆ கூட இருக்கலாமுல்லெ? White Board. துணி அல்ல’

‘கோடு மூணுமுறை வரையப்படவேண்டும். Light Gray, Dark, Black (பென்சில், பேனா, மார்க்கர்). முதல்லெ போடுறது பேனாவுலெ எழுதுற மாதிரி. மறுபடியும் போடும்போது அதே கோட்டுல மறுபடி எழுதுற மாதிரி. மூணாவது தரம் போடும்போது மூணாவது தடவை எழுதுறமாதிரி. அப்ப கோடு டார்க் ஆயிடுமுல்லெ?

*

ஏதோ ஒரு பயிற்சி செய்யவேண்டி சர்க்கார் சீடர் ஒருவரைக் கேட்கிறார்கள் : ‘இப்ப Relaxationலெ இக்கிறீங்களா?’

‘இல்லெ..பாதியளவுதான் இக்கிது’

‘இந்த ‘பாதி’லாம் கெடையாது நம்மள்ட்டெ. இருந்தா முழுசா , அப்படியில்லேண்டா இல்லே. அவ்வளவுதான்’

*

‘Silver cord’ன் தொடர்பு : ‘அண்ட சராசரம் பூராவும் சுத்துனாலும் (silver cord) இக்கிம். cord என்றைக்கும் கட் ஆவாது. cord கட் ஆணிச்சிண்டா மௌத்துண்டு அர்த்தம்’

*

‘சரி இந்த பயிற்சி பண்ணி முடிச்சவுடனே மனசுல இருக்குறது மகிழ்ச்சியா, தைரியமா, ஊக்கமா? உற்சாகமா? ஏதோ தவற வுட்டுட்டோம்..இப்பதான் பாதை தெரிஞ்சிருக்குங்குற உணர்வா? என்னா தெரிய வருது உங்களுக்கு?’ – ‘S’

ஒரு சீடர் உணர்ச்சிப் பிரவாகத்தில் சுகமாய் சொல்கிறார் : ‘எனக்கு இதுவரைக்கிம் அனுபவிக்காத சுகம் மாதிரி..’

‘குப்பியடிச்ச மாதிரி இருந்திச்சா?!’ – சர்க்கார் வெடைக்கிறார்கள் சிரித்துக் கொண்டே. சூத்தப் பொத்துங்கள் சீடர்காள்!

*

பயிற்சியின்போது ‘பவர்’ திரள்வதை உணர்வதையும் Bodyயின் கவலைகள் சிறிதுமில்லா மன அமைதியையும் எதிர்பார்க்கிறார்கள் சர்க்கார். அத்துடன் தொப்புளில் அரிப்பும் அல்லது இலேசான வலியும்…கூடவே சுன்னியும்!

‘இப்ப நீங்க (Astral Body), Pysical Bodyஐ பாக்குறீங்கள்லெ, அப்ப சுன்னி எழும்புனிச்சா?’

‘அதெல்லாமில்லெ..’

‘அதெல்லாம் இல்லேண்டா என்னா, ‘அது’லாம் கெட்டதா? இல்லேண்டு சொல்லுங்களேன்! ஆட்டம் இல்லே, இது சில நேரத்துல அப்படி வரலாம்’

‘எனக்கு Feeling இந்திச்சி.. Sexual Feeling’

‘Sexதான் வருமே இதிலெ! கடுமையா வரும். எப்படி இந்தாலும் சரி, சுன்னி பெரியமினாரா மாதிரி நிண்டாலும் சரி, நீங்க செய்யத்தான் வேணும்’

*

கற்பனை (Bodyயின் உடை – அந்தந்த நாளின் வர்ணத்தில்). ‘ஜட்டி போடும்போது தொப்புளை மறைச்சி போடக்கூடாது. தொப்புள் தெரியிறமாதிரிதான் போடனும்’ – ‘S’

*

Physical Bodyஐ Astral Body பாக்கும்போது Physicalன் வலது கையில் சில அசைவுகள் அல்லது ஒரு நாலு இஞ்ச் அது மேலெழும்புவதுபோல (‘அதாவது அந்த கையை தூக்குறதா நெனைங்க. Spiritualஆ தூக்குறதா நெனைங்க. அப்ப அந்த கை மேலே வரும் – Actual Lifeலேயும். சில சமயம் முழிச்சபிறகும் அந்த கை மேலே நிக்கிம்’). – கடைசியில் physical bodyயோடு கலப்பதற்கு முன் கற்பனை.

*

வெண்ணெய் தின்றுவிட்டு பயிற்சி செய்வது சூட்டை குறைக்கும்.

*

‘Bodyலெ கலக்கும்போது புழுங்குது சர்க்கார்’

‘ம்…புழுங்கும்;உதறும்; சில பேருக்கு காய்ச்சல் கூட வந்துடும். ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம் கட்டியணைச்சி ஒரு முச்சம் வுட்டாஹா. அவ்வளவுதான். உடம்புலாம் உதறி..’போர்த்திவுடு புள்ளே..போர்த்திவுடு  ஹைஜா.. .ஹைஜா.. ஹைஜபி..’ண்டு வெலவெலத்துப் போனாஹா ரசூலுல்லாஹ். ‘ஹைஜபி’ங்குறது யாருண்டு தெரியுமா?’

‘ஆயிஷா நாயகம்!’

‘அஹ அப்ப எங்கே இந்தாஹா? ‘நஜாத்’காரன் பூர்றதுக்கு காரணம் நீங்களுவதான். மார்க்கம் அவ்வளவு அளஹா தெரிஞ்சி வச்சிக்கிறீங்க. ஆயிஷா அப்ப பொறக்கவே இல்லையே!’ – ‘S’

சீடருக்கு ‘ஜூலைஹா’ என்று தெரிந்துதான் இருக்கவேண்டும், அவர் சும்மாக்காச்சுக்கும் சொன்னார் – ஆபிதீனின் மார்க்க ‘அறிவு’! சர்க்கார், ‘மார்க்கம்’ இதுதான் என்று உங்களால்லவா அறிந்து கொள்கிறேன். நோன்புப் பெருநாள் லீவில் (4 நாள்) ‘தேரா’விற்கு போய் சாக்கடையில் புரண்டு விட்டு அன்றைய பயிற்சிகள் கூட செய்ய இயலாமல் இங்கு வந்து , இந்த கேஸட் கேட்கும்போதுதான் எத்தனை அழுக்கு வண்டி வண்டியாய் களைகிறது…

‘இப்ப நீங்க வெளிலே போனீங்கண்டா கண்ட கண்ட இடத்துலெ பார்வையை அலைய உடுறீங்க. எந்த நோக்கத்துல போறீங்களோ அந்த நோக்கத்தோடேயே போங்க. பக்கத்து பக்கத்து கடையிலெ இக்கிற சாமானை பாக்காதீங்க. ஒரு டிரைவர் – ரஷ்ஷான நேரத்துலெ – எவ்வளவு சிறப்பா கார் ஓட்டுவானோ அதே மாதிரி வெளிலே போங்க’. பேசும்போது தவறில்லாம – ‘ஆனால்’, ‘என்றாலும்’, ‘அதுக்கு சொல்லலே’, ‘இதுக்கு சொல்லலே’ண்டுலாம் இல்லாம சுத்தமா பேச முயற்சி பண்ணனும். ஒரு செய்தி சொல்லும்போது இதை இப்படித்தான் சொல்லனுமா, மாத்தி சொல்லலாமாண்டு பாருங்க. இதுக்கு best method, இன்னிக்கு காலையிலேர்ந்து யாரு யாருட்டெ எப்படி எப்படி பேசுனீங்கண்டு – Nightலெ படுக்குறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலெ யோசிச்சிப் பாக்குறது. நம் தவறு தெரியும். அத rectify பண்ணுங்க. தானா rectify ஆகும். ஆனா லேட்டாவும்..ம்… சாப்புடும்போது பேசாதீங்க’

*

‘தூங்கி முழிக்கும்போது முழிப்பு வந்துடிச்சிண்டு தெரிஞ்சி முழிச்சிங்களா?’

*

‘ஏதாவது எக்குத்தப்பா, முட்டாள்தனமா கற்பனை பண்ணுங்க, இப்படி கற்பனை பண்ணுனதாலெதான் பெரும்பெரும் சாதனைகள்லாம் வந்திருக்கு. ‘முட்டாள்தனமா’ண்டா என்னா அர்த்தம்? சாதாரண மனுஷன் செய்யாத, செய்ய முடியாத அளவுக்கு. கற்பனையில்லாம ஒண்ணுமே செய்ய முடியாது. இருக்குற பொருளை இல்லாததாகவும் இல்லாத பொருளை இருக்குறதாகவும் கற்பனை பண்ண முடியும். once கற்பனை பண்ண வந்திடுச்சிண்டா , நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், What a human mind can conceive & believe it can surely achieve’. கருத்து கொள்றது… சிந்தனைக்கு இடமே இல்லை இங்கே, சிந்தனையே கிடையாது. சிந்தனை எதுக்குண்டா இந்த உடம்பை தாங்குன பிறகு உலகத்துல வாழுறதுக்கு , நிறைய ஏமாத்துக்காரர்களுக்கு மத்தியில் வாழவேண்டி இருப்பதனாலெ அதை தவிர்க்கறதுக்காகவும்..பால் எது, சுண்ணாம்பு எதுண்டு கண்டு புடிக்கறதுக்காகவும், சோறு எது, அரிசி எதுண்டு பாக்குறதுக்காகவும், பொஞ்சாதி யாரு தங்கச்சி யாருண்டு பாக்குறதுக்காகவும்தான் அது..அங்கே மூளைக்கு இடமே கிடையாது. வெறும் உணர்ச்சிதான். உணர்ச்சிலெ highest உணர்ச்சி பக்தி. இதுக்கு அடுத்து செக்ஸ். (பயிற்சி) ரெண்டுக்கும் inter related. பக்திலெ உள்ளவங்களுக்கு செக்ஸ் உணர்ச்சி அதிகமா இக்கிம். அவங்களுக்கு ஆண்மைக்கோளாறு இக்கிறதா சரித்திரமே கிடையாது. அதனாலெ.. , ‘தம்பி’ கூத்தாடுறானா, ஆடட்டும்!. கூத்தாடுறானேண்டு நெனைச்சிக்கிட்டு கற்பனை பண்ணாதீங்க. இப்ப அப்பப்ப உங்களை வெவ்வேறு Angleலெ பாருங்க. உங்களை நீங்க ஓட்டு மேலேர்ந்து பாருங்க. முடியலேண்டா மத்தவங்க உக்காத்திருக்கிறதை பாருங்க. அப்ப அவங்க குறையை கண்டுபுடிக்க வரும், உங்க குறையும் தெரிய வரும்’

தூக்கத்தின்போது ‘நேரா படேன்’ என்று Bodyக்கு நாம் கொடுக்கும் Order ‘உளறலா’க போகும் நிலை விரைவில் ஏற்படும் என்கிறார்கள் சர்க்கார். (‘அப்ப நீங்க Distinctஆ உணருவீங்க. நீங்க யாரு, உங்க Body எதுண்டு உணர்றீங்கண்டு அர்த்தம்’)

‘அதிகப்பிரசங்கித்தனமா (என் உத்தரவில்லாம) இது ‘இபாதத்’, இது power சேர்க்கும்டு (நீங்களா) பண்ணுறது Whole processஐயும் அழிச்சிடும். சுவத்துக் கட்டையில ஒரே ஒரு கறையான்தானே, இருந்துட்டுப் போவட்டுமே’ண்டு வுட்டுடுற மாதிரி, மெத்தையிலெ ஒரே ஒரு மூட்டைப்பூச்சி விடுற மாதிரி… எதெது மூட்டைப்பூச்சி, எதெது கறையாண்டு எனக்குத்தான் தெரியும். அதனாலே நான் சொல்றதை மட்டும் கேளுங்க. உங்க புத்தியை இங்கெ காட்டவே காட்டாதீங்க. இங்கே மூளைக்கு வேலையே இல்லை’ – ‘S’

*

‘மனசை ஒருமைப்படுத்துறது ரெண்டு. ஒண்ணு, Sex. இன்னொன்று , அவமானம். அதனாலெதான் மேலே போவனும்டா அவமானப்படனும். அவமானப்படனும், இல்லே, அவமானப்பட்டா என்னா concentration வருமோ அத நீங்க (கற்பனையிலெ) உண்டாக்கிக்கனும். அதாவது எண்ணங்கள் தானா பூறக்கூடாது. நீங்களா இழுக்கனும். concentrationபன்றதுலெ weakness இக்கிதுங்குறதுனாலெ சில அவுலியாக்கள், குத்புமார்கள் வேணுண்டே அவமானத்தை தேடிக்கிட்டாங்க. எப்படி? பாங்கு சொல்ற நேரத்துலெ பள்ளிவாசல்லெ உட்கார்ந்து பீடி குடிச்சாங்க. போட்டு மொத்துவான்லெ?!

இப்படி ஒரு அவுலியாவை , மோதினார் தரதரவென்று பள்ளியிலிருந்து 25 படி இழுத்துப் போட்டாராம். ஒவ்வொரு படியும் மண்டையில் அடிக்க அடிக்க , ரத்தம் வழிய வழிய , அந்த அவுலியா , ‘ஹையா.. ஹையா..”ண்டு ஆனந்தத்தில் குதித்தார்களாம். அவமானம் மனதில் நிற்க சர்க்கார் சொன்னது. நல்லவேளையாக சர்க்காரின் கஃபூர்ஷா தெரு வீடு இரண்டு மூன்று படிகளோடு இருக்கிறது!

*

‘நீங்க Voluntaryயா கற்பனை பண்ணிக்கிறீங்களா, எதைப்பத்தியாவது? ‘ – ‘S’

‘Hotelலெ Rceiptionistடா வேலை செய்யிறமாதிரி கற்பனை பண்ணியிருக்கேன்’ – ஒரு சீடர்.

‘Receiotionist! அளஹான கற்பனை! Hotel வைக்கனும்டு வரலியா? சரி, இந்த கற்பனை நீங்களா Plan போட்டு நெனைச்சிங்களா இல்லெ அப்பப்ப தோன்றி மறையுமா?’

மௌனம்.

‘ரெண்டாவதுதான். ம்? அது கற்பனை அல்ல. அது வரக்கூடாது. அப்பப்ப Current வந்துட்டு இப்ப Current போனீச்சிண்டா அது current அல்ல, Current Cut!. நெனச்ச உடனேயே Current வரனும். அதுக்கு நீங்க என்னா செஞ்சிருக்கனும்? ஒரு டைம் போட்டுக்கிட்டு இன்ன கிழமையில இந்த நேரத்துல இத்தனை மணி நேரம்டு கற்பனை பன்றதுண்டு நெனைச்சிக்கிட்டு கற்பனை பண்ணிக்கிட்டிருக்கனும். சும்மா உட்கார்ந்துக்கிட்டு கற்பனை பண்ணிக்கிட்டிக்கனும். கற்பனைதான் உசுரு, lifeக்கு உசுருங்கறேன். மனுஷனை உருவாக்குறதெ கற்பனைதான்’

*

‘சிந்தனை, ஆராய்ச்சி, குழப்பம், வேதனை, அவமானம், பக்தி…எல்லாமெ Mental Pocessதான்’ – ‘S’

**

‘சில’ :

‘சில நேரங்கள்லெ , படுத்திருக்கிற நமக்கு Astral Body தெரியுது!’ – ஆரிஃப் (உப்புரொட்டி கடை)

‘ச், அது வந்தாவே முடிஞ்சிபோச்சி!’ – ‘S’

‘இல்லெ, சில நேரத்துல தெரியுது’

‘சிலநேரம் தெரிஞ்சா பரவாயில்லே..ஆனா ‘சில’ங்குற வார்த்தைக்கு அர்த்தம் என்னாண்டு தெரிஞ்சா பரவாயில்லெ! ஒருத்திக்கு கருவவ்வா மீன் பத்தியம் வச்சேன் அந்த ‘சில’வா?’ – ‘S’

அதென்ன பத்தியம்? ஓதிப்பார்க்க வந்த ஒரு பெண்ணிடம் கருவவ்வா மீன் தின்னக்கூடாது என்று சர்க்கார் சொல்லியிருக்கிறார்கள். அது ‘கொஞ்சக்கோனு’ என்று கெஞ்சவே ‘சரி, கொஞ்சக்கோனு..’ என்று அனுமதி அளித்திருக்கிறார்கள். ‘டீக்கடை இப்ராஹீம்ட பொண்டாட்டி.. ஒரு நாளு சுத்திக்கிட்டே போயி அவ வூட்டுலெ பூந்தேன். அஞ்சு முள்ளு – இவ்ளோ பெரிய அகலமான முள்ளு – மூணு முள்ளு பொறிச்சதுலெ உள்ளது. ரெண்டு முள்ளு ஆக்குன மீனுலெ உள்ளது கெடக்குது. தட்டையிலெ வேற அகலம் அகலமா ரெண்டு மூணு மீனு மேஞ்சிக்கிட்டிக்கிது..எனக்கு கருவவ்வா மீனுண்டா ரொம்ப ஆசை. நான் ஒரு துண்டை எடுத்துக்கிட்டு தொட்டியிலெ உட்காந்துக்கிட்டு கூப்பிடும்போது ‘டக்’குண்டு ஞாபகம் வந்திச்சி.. ‘ஆமா..உனக்கு பத்தியம் வச்சேனே’ண்டேன். ‘நான் கேட்டேன்லெ, கொஞ்சக்கோனு சாப்பிடுவா?’ண்டுங்குறா! அவளுக்கு கொஞ்சம் அதுதான். அந்த ‘கொஞ்ச’ நேரமா?!’ – ‘S’

*

‘ஒரு சங்கடமான விஷயத்தை கற்பனை பண்ணும்போது மனசுல சங்கடமும் ஒரு ஹாஸ்யமான சம்பவத்தை கற்பனை பண்ணும்போது சிரிப்பும் வருதா, சிரிச்சதுண்டா?- ‘S’

‘இப்ப கிடையாது..முன்னாடி அப்படி இருந்திச்சி’ – சீடரின் சங்கடம்

‘அதை ஏன் இழந்தீங்க? வெறும் கற்பனைண்டா?!’ – ‘S’

*

‘Mindஐ வச்சா வச்ச இடத்துலெ நிக்க மாட்டேங்குது, அலைபாயுதுங்குறீங்க..அப்படித்தானே?’ – ‘S’

‘அதுதான் சர்க்கார்! ‘ – கவுஸ் மைதீன்

”ஆங்..நான் உங்களையெல்லாம் குத்புநாயகம்டா சொன்னேன்? ஏங்க நேரத்தைப்போட்டு waste பண்ணுறீங்க? உங்களையெல்லாம் குத்புநாயகம், ஜதீதுரசூலு, ஹாஜாமெய்தீன் சிஷ்தி ரஹ்மத்துல்லாஹிண்டா சொன்னேன்?’

‘இல்லே… சொல்லனும்டு…’

‘ஹாஜா மெய்தீன் சிஷ்திண்டா?!’

‘இல்லெல்லே…அதுலெ உள்ள Up & Downஐ சொல்லிடனும்டு..’

இன்னொரு சீடர் , பயிற்சியை தான் செய்யும் விதம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். ‘சர்க்கார்…படுக்குறதுக்கு முன்னாடி ஒரு பதினஞ்சி நிமிஷம் அதையே Focus பண்ணிக்கிட்டு அப்புற…’

‘சாமானையா?’ – சர்க்கார் இடைமறிக்கிறார்கள். தாழ்வாரம் சிரிக்கிறது ‘தம்பி’களுடன்.

‘உண்ண சோறு, சுவைக்க நாக்கு, தின்ன பசி, எடுக்க கை, உண்ணுவதற்கு Rights எல்லாம் இக்கிம்போது பசி..பசி.. பசிண்டா அவனை கொத்துப்புரோட்டா போடாம என்னா பண்ணுறது? அப்ப நாம வாழலைண்டு சொன்னா நம்ம weakness.. ஏன்? எவனும் எப்பவும் வாழலாம். ஆனா போட்ட எல்லை சின்னதா போட வேணாம். சின்னதா போட்டா நாளைக்கி நிறைவேறிடும்..அப்புறம் பெக்கே பெக்கேண்டு முழிச்சிக்கிட்டு நிப்பீங்க..பெருசா..Impossible Targetஆ வைங்க. அரைவாசி கிடைக்கும். அது மத்தவன் அடைஞ்சதை விட ஆயிரம் பங்கு பெருசா இக்கிம்’ – ‘S’

(தொடரும்)

குறிப்புகள் :

ஹதீஸ் குத்ஸி – புனித ஹதீஸ். குர்-ஆனில் இடம்பெறாத அல்லாஹ்வின் வசனங்கள்.
ஒலு – உடலை சுத்தப்படுத்திக் கொள்ளுதல்
பாங்கு – தொழுகைக்கான அழைப்பு
‘கோரணி’ – வழுப்பம்
ரூஹானியத் – ஆன்மீகசக்தி
கிதாபு – புத்தகம்
பாக்கவி – அரபி மத்றஸாவில் கொடுக்கும் ஒரு பட்டம்
மைய்யத் – இறந்த உடல்
சஹர் – நோன்பு வைக்கும் இரவு நேரம்
‘ஜம்’ – ஒரு பயிற்சி
ஆணம் – குழம்பு
ஷைத்தானியத்’- தீயசக்தி
வெடை – கிண்டல்
நானா – அண்ணன்
‘ஜீமத்’ – பிரகாசம்
புர்தாஷரீஃப் – பூஷரி இமாம் இயற்றிய பாடல்களை ஓதுதல்
துஆ – பிரார்த்தனை
முஸீபத் – பீடை
கபுல் – சம்மதித்தல்
ரஹ்மானியத் – நல்ல சக்தி
நியமத் – அருட்கொடை
அவுலியாக்கள் , குத்புமார்கள் – இறைஞானிகள்
லுஹர், அஸர் – தொழுகை நேரங்கள்
ஜூம்-ஆ- வெள்ளியன்று நடக்கும் கூட்டுத்தொழுகை
இபாதத் – இறைச்சிந்தனை
இஸ்மு – மந்திரம்
லைலத்துல் கத்ரு – குர்-ஆன் இறங்கிய நாள்
மஃரிபா – ஒரு மெய்ஞான நிலை
வஃபாத் – இறப்பு
ஜக்காத் – வருமானத்தில் மிஞ்சியதில் ரெண்டரை சதவீதம் ஏழைகளுக்கு கொடுப்பது
‘இந்தி’ – இந்தியன்
பதுவா – சாபம்
தலாக்’ – விவாகரத்து
அபுஜஹீல் – நபி(ஸல்)-ன் எதிரிகளில் ஒருவன்
ரமல் – அரபு முறையிலான எண்கணிதம்
குப்பி – ஓரினப்புணர்ச்சி
ஹைஜபி – நபி(ஸல்)ன் முதல் மனைவியான கதீஜா
நஜாத் – மார்க்கத்தின் ‘தூய்மை’வாதிகள்
ஜதீதுரசூலு – புதுநபி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s