நட்சத்திர சிறுகதை – திலீப் குமாரின் ‘தீர்வு’

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நண்பர் திலீப் குமாரின் ‘கேணி’ கூட்டத்தில் கலந்து கொண்ட தம்பி கிருஷ்ணபிரபு அருமையான ஒரு பதிவு எழுதியிருந்தார். தன்னுடைய ’தீர்வு’ சிறுகதை உருவான விதத்தை திலீப் அதில் சொல்லியிருந்தார் இப்படி : ‘ஒய்வு நேரத்தில் சும்மா இல்லாமல் “தீர்வு” என்ற கதையை எழுதிக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த அண்ணன் கோவத்துடன் கதையைப் பிடுங்கி எங்கள் வீட்டின் பக்கத்திலுள்ள குழியில் போட்டுவிட்டார். அந்தக் குழி எங்கள் பகுதியிலுள்ள பெண்கள் மலம் கழிக்கும் இடம். இது நடந்தது மாலை 6 மணிக்கு என்பதால் அங்கு சென்று எடுத்துவரவும் முடியவில்லை. ஆகவே அதன் மீது யாரும் மலம் கழித்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பாருங்கள் கடவுளை எதற்கெல்லாம் கூப்பிடவேண்டியிருக்கிறது. நல்ல வேலை யாரும் அசம்பாவிதம் செய்யவில்லை. விடிந்தவுடன் அந்தத் தாள்களை எடுத்து கதையை வேறு பிரதியெடுத்து கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். கணையாழியில் அது பிரசுரம் காண ஒரு வருட காலத்திற்கும் மேலானது. ஒரு முறை நான் சென்னையிலிருந்த போது கணையாழி கஸ்தூரிரங்கனை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது “தீர்வு” கதையை ஞாபகப் படுத்தினேன். அது நல்ல கதையாச்சே அப்பவே போட சொல்லிட்டேனே! என்று அருகிலிருந்தவரிடம் கூறினார். அவர் தேடித் பார்த்து விட்டு கடைசி நாலு பக்கங்கள் தொலைந்துவிட்டது என்றார். அதன் பிறகு உட்கார்ந்து மீண்டும் எழுதிக் கொடுத்தேன். இன்று வரை அந்தக் கதை என்னை அடையாளப்படுத்துகிறது.’

எனக்கு மிகவும் பிடித்த ’தீர்வு’ சிறுகதை இருக்கும் ‘இலக்கியச் சிந்தனை’ புத்தகம் வீட்டில் இருக்கிறது. அஸ்மாவிடமோ பிள்ளைகளிடமோ கேட்க இயலாது. இலக்கியம்தான் காரணம். தன்னிடம் இருந்த வேறொரு தொகுப்பிலிருந்து தட்டச்சு செய்து அனுப்புவதாக தாஜ் சந்தோஷமாக ஒத்துக்கொண்டார் – ஃபேஸ்புக்கில் தத்துவங்கள் உதிர்ப்பது, வஹாபிகளுடன் மல்லுகட்டுவது போன்ற முக்கியமான வேலைகளுக்கு இடையிலும். இதற்கும் இலக்கியம்தான் காரணம். நல்லது, இணையவெளியில் இதுவரை தென்படாத ‘தீர்வு’ உங்களுக்காக வருகிறது. நன்றி கூற மறவாதீர்! –  ஆபிதீன்

***

“திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையானப் பரீட்சார்த்தப் படைப்பு. சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே, இவ்வளவு சிறப்பு அடையக்கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவரது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில்  மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.”

அசோகமித்திரன் (‘தீர்வு’ உள்ளடக்கிய திலீப் குமாரின், ‘மூங்கில் குருத்து’ சிறுகதை தொகுப்பிற்கு எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து..)

*
தன் எழுத்தில் அபாரமான தன்னம்பிக்கை கொண்ட ஒருவரால் தான் இப்படியான படைப்பைப் படைக்க முடியும். ‘காலத்தைக் கடந்தேனும் இந்த எழுத்து நிச்சயம் பேசப்படும்’ என்ற தீர்மானம் மனதில் பாய்ந்திருக்க வேண்டும் அவருக்கு.  1985-க்கு முன் எழுதப்பட்ட இந்தக் கதை, இன்றைக்கு, சுமார் 28- வருடம் கழித்து பேசப்படுகிறது என்றால், அது அவர் அன்றைக்கு கொண்ட தன்னம்பிக்கை தான். திலீப் குமாரை கொஞ்சம் அறிவேன். பேசி பழகியிருக்கிறேன். தமிழ் நவீனத்தில் மையல் கொண்ட வித்தியாசமும், எளிமை சாயலும்கொண்ட குஜராத்தி! இந்தக் கதையும் அவரை மாதிரியே எளிமையிலும் எளிமையாக இருக்கிறது. அடக்க முடியாத நகைச்சுவையைக் கூட, அவர்பாட்டுக்கு அவரது எளிமை மொழியில் சொல்லிக்கொண்டே போகிறார்.

தாஜ்

*

dileep-kumar

தீர்வு

திலீப் குமார்

இந்தக் கதையைச் சொல்வதற்காக, கோவையிலிருந்து சென்னைக்குத் தாமதமாக வந்து தொலைந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்து, எனது ஒற்றைப் பெட்டியுடன் போர்ட்டர்களின் வயிற்றெரிச்சல்களையும் சுமந்து, ஆர்வமாய் அருகில் வந்த ரிக்ஷாக்காரன்களை ஏமாற்றி, அவசரமாய் வால்டாக்ஸ் ரோட்டைக் கடந்து ஒரு சின்னச் சந்தில் நுழைந்து, தங்கசாலைத் தெருவை அடைந்து நடக்கிற என்னுடன் இந்த ஏப்ரல் மாதக் காலையில், மண்டையைப் பிளக்கிற வெயிலில் உங்களையும் அழைத்து வந்ததற்கு, மன்னிக்கவும்.

வால்டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டுச் சந்துகளில் இந்தத் தங்கச்சாலைத் தெரு மட்டும்தான் கொஞ்சம் அகலமாகவும், நடக்கச் சௌகரியமாகவும் இருப்பது. இது வடஇந்தியர்கள், குறிப்பாகக் குஜராத்திகள் அதிகமாக வாழ்கிற பகுதி. அதனால் இங்கே ஆடம்பரமும், அசிங்கமும் அளவுக்கு அதிகமாகவே தென்படும். ஆடம்பரம் என்று நான் குறிப்பிடுவது இவர்கள் அணிந்திருக்கும் உடைகளை. மற்றபடி அசிங்கம் என்றது, அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தெருவுக்கு இடம் மாற்றிய கசடுகளை. வீடுகளைச் சுத்தமாகவும் வாசல்களை அசுத்தமாகவும் வைத்துக்கொள்வதில் இந்தக் குஜராத்திகள் மிகவும் சிரத்தை உடையவர்கள். மேலும், அழுக்கான சூழ்நிலைகளுக்குத் தங்கள் மனத்தையும், மூக்குகளையும் பழக்கப்படுத்திக் கொள்வதில் இணையற்றவர்கள்.

மணி 8-45. கடைகளும் ஆபிஸ்களும் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பள்ளிக்கூடக் குழந்தைகள் விரைந்து கொண்டிருந்தனர். ஜனங்கள் ‘பளிச்’சென்று சுத்தமாகக் காட்சி அளித்தனர். காந்திக்குல்லாய் சேட்ஜிக்களும், நாகரீகமாக உடுத்திக்கொண்ட அவர்களது மக்குப் பிள்ளைகளும் நிறையவே குழுமத் தொடங்கிவிட்டனர். பரவலாக, வெளிநாட்டுக் கார்களும் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கிள்களும் அணிவகுத்து நின்றன.

நிச்சயமாக இந்தக் குஜராத்திகள் சம்பாதிக்கத் தெரிந்தவர்கள்!

புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில், இந்தத் தங்க சாலைத் தெருவில்தான் இருக்கிறது. தெப்பக்குளம் உள்ள பெரிய கோவில் இது. இந்தக் கோவிலின் பிரதானப் பிரகாரம் அளவில் மிகப் பிரமாண்டமானது. சிலைகளுடன், பெரிய பெரிய ஸ்தூபிகளுடனும், அவைகளில் அழகான சிற்பக் கலைகளுடனும் மிகக் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். நகரத்தில் உள்ள மற்ற எல்லாப் புகழ்பெற்ற கோவில்களைப்போல் இதுவும் வழக்கமாகப் போகிறவர்களுக்கு சுவாரஸ்யமற்றதாகவும், போகாதவர்களுக்குப் பேரழகாயும் காட்சியளிக்கும். கோவில் வாசலில், இடப்பக்கம் பலகாரம் விற்கிற ஒரு சேட்ஜிக்கும் வடப்பக்கம் தேங்காய் விற்கிற செட்டியாருக்கும், பூ விற்கிற பட்டிணத்துக் கவுண்டச்சிக்கும், வளையல் விற்கிற ஒரு சேட்டுக்கும், விற்றாலும் தீராத கொள்முதலாகிய வியாதிகளைக் கடை விரித்த சில பிச்சைக்காரர்களுக்கும் புகலிடம் கொடுத்திருந்த ஏகாம்பரேஸ்வரர் அமைதியாய் உள்ளே உட்கார்ந்தார். இந்தக் கோவிலைச் சுற்றிப் ‘ப’ வடிவில் நெளிகிற மூன்று சின்னச்சந்துகளின் ஒட்டுமொத்தமான பெயர்: ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம். என் மாமா வீடும், நான் சொல்லப்போகிற கதையின் களமும் இங்குதான்.

நான் இடது பக்கம் திரும்பி அந்தப் ‘ப’வில் நுழைந்தேன். இந்தச் சின்னச் சந்தின் மூலையில் இரண்டு பெரிய கட்டிடங்களுக்கிடையே திணறி, ஒளிந்துகொண்டிருக்கும் என் மாமா வீடு. ஒரு பக்கம் கோவில் சுவர். மறுபக்கம் வீடுகள்.

ஒன்றிரண்டதைத் தவிர எல்லாம் திண்ணைகளற்ற பெரிய வீடுகள். இங்கு ஒரு உயர்நிலைப்பள்ளியும் ஒரு ஆரம்பப்பள்ளியும் உண்டு. அதனால் தெருவில் இப்போது நிறையச் சிறுவர்கள் நிறைந்து வழிந்து கொண்டிருந்தனர். இன்றியமையாத ஐஸ்காரனுடன்.

நான் மனத்தில் எதையும் வாங்கிக்கொள்ளாமல், வேகமாக நடந்தேன். மாமா வீட்டுவாசல் தெரிந்தது. ஏனோ அவர் முகம் நினைவுக்கு வந்தது. தொடர்ந்து அவர் குடும்பத்தினர் முகங்கள் அனைத்தும் மனத்தில் தோன்றி மறைந்தன. வாசலில் சில குஜராத்தி இளம்பெண்கள் குழாயுடன் மல்லாடிக்கொண்டிருந்தார்கள். எனது வரவை அவர்கள் கடுமையான மௌனத்தை அனுஷ்டித்துக் கொண்டாடினார்கள். நான் அவர்கள் அனைவரையுமே பார்த்தேன். எல்லா முகங்களும் சுமாராகவே இருந்தன. இத்தனைக்கும், அந்தக் கட்டிடத்தில் மட்டுமே முப்பது குடும்பங்கள் இருந்தன. இருந்தும் மருந்துக்குக்கூட ஒரு அழகி இல்லை. மேல்மாடியில் வசிக்கிற ஊர்மிளாவைத்… நிற்க. முதலில் இந்தக் கட்டிடத்தின் பூகோள ரீதியான அமைப்பை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டிடத்தின் நடுவில் ஒரு பெரிய 18 X 18 முற்றம். இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்குமேல் இருக்கிற வானத்தைச் சதுரமாக வெட்டிக் காட்டும் இது. மாடிகளில் வசிக்கிறவர்கள் கல்கத்தா பீடாக்களைக் குதப்பி உமிழ்வதற்காகவும் மற்றபடி வருணனுக்காகவும், சூர்யனுக்காகவும் கட்டப்பட்டது! இந்த முற்றத்தைச் சுற்றி எதிரும் எதிருமாக, எதிரும் புதிருமாக, புதிரும் புதிருமாக ஆறு வீடுகள். முற்றத்தின் நடுவே நடந்தால் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சிறு முற்றங்கள். இடதுபக்க முற்றத்தின் கடைசியில் இரண்டு கழிவறைகள்; வலதுபக்க முற்றத்தின் மையத்தில் ஒரு கிணறு. அதை அடுத்து, இன்னும் இரண்டு வீடுகள். இன்னும் சற்று நகர்ந்தால், மேலே செல்லும் அழுக்கான மாடிப்படிகள். இதே மாதிரி மேல்மாடியிலும். மொத்தம் முப்பது குஜராத்தி குடும்பங்கள் வாழ்கின்ற அழுக்கான கட்டிடம் இது.

அந்த முற்றத்தையும், அந்த ஆறு வீடுகளையும் பிரித்து, 21 அடி அகலமுள்ள ஒரு நடைவெளி சுற்றி ஓடும். அநேகமாக இந்த நேரத்தில் அந்த ஆறு வீட்டுக் கதவருகேயும் பெண்கள் உட்கார்ந்துகொண்டு மும்முரமாக ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பார்கள். ஒரு பெண் எச்சில் பாத்திரங்களைத் தேய்த்துக்கொண்டிருப்பாள். இன்னொருத்தி துணிகளைத் துவைத்துகொண்டிருப்பாள். மற்றவர்கள் அரிசியையோ, கோதுமையையோ சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். வழக்கமாக, திருமணத்திற்குப் பின் ஊதிப்போகிற உடல்வாகு உடையவர்களாக இருந்தாலும், இந்தப் பெண்கள் நல்ல உழைப்பாளிகள். இவர்கள் அறிவற்றவர்களும் அடங்காப்பிடாரிகளும்கூட. எல்லாப் பெண்களையும்போல் இவர்களும் சண்டையிலும், ஊர் வம்பிலும் மிக நாட்டம் உடையவர்கள். மட்டமான இந்திப் படங்களிலும், இனிமையான இந்திப் பாடல்களிலும், உணவு வகைகளிலும், அழகிய உடைகளிலும் தங்கள் உலகை அடக்கிக்கொண்டவர்கள். இதைத் தவிர, பிரக்ஞையே இல்லாமல் இனத்தைப் பெருக்குகிற பழக்கமும் உண்டு. இந்தக் கட்டிடத்தில் உள்ள முப்பது குடும்பத் தலைவிகளுக்குத் தலா ஒவ்வொருத்திக்கும் குறைந்தபட்சம் ஐந்து வாரிசுகளாவது இருக்கும். (என் மாமாவுக்குக்கூட 5தான்.) முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வாழ்கிற இங்கே இந்த ஜனத்தொகைப் பெருக்கம் இயல்பான ஒன்று. தவிர்க்க முடியாததும்கூட.

இங்கு வாழ்கிற ஆண்கள், மிக சாதுவானவர்கள். மனைவிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்தச் சராசரி வாழ்க்கையில் நசிந்துகொண்டிருக்கும் தங்கள் நிலையை நாளெல்லாம் நொந்துகொள்கிறவர்கள். தங்கள் மனைவிகளுக்கு ஏதோ பெரிய துரோகத்தைக் கற்பித்துவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு, குற்ற உணர்வுடன் உலவி வருகிறவர்கள். மாதத்தில் 29 நாட்களும் சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள். சனிக்கிழமை தோறும் சினிமாவுக்குப் போக இயலாததால் மட்டுமே பஜனை பாடப்போகிறவர்கள். எப்போதாவது செய்தித்தாளை இரவல் வாங்கிப் படிப்பவர்கள். மற்றபடி, வாழ்க்கையை ரொம்பவும் சுமப்பவர்கள். இவர்கள் ஆண்கள் என்பதற்கு இவர்கள் பெற்ற குழந்தைகளைத் தவிர, நமது கண்களுக்குத் தெரிகிற, மனதுக்குப் புரிகிற வேறெந்த ஆதாரமும் கிடைப்பது சந்தேகமே!

பொதுவாக, இந்த குஜராத்திகள் தமிழர்களைப்பற்றி மிகவும் மோசமான அபிப்பிராயங்கள் உடையவர்கள்.

உள்ளே நுழைந்ததும் என்ன ஆச்சரியம்! முற்றம் வெறிச்சோடி அழுக்காய்க்கிடந்தது. நடைவெளியும் சுத்தமாக இருந்தது. ஓரங்களில் பிளாஸ்டிக் கம்பிகளில் நேற்று உலரப்போட்ட துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. ரொம்பவும் அமைதியாய் இருந்தது. நான் முற்றத்தைத் தாண்டி மாடிப்பக்கம் பார்த்தேன். கிணற்றைச் சுற்றி ஒரே கும்பல். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தனர். என் மாமா அந்தக் கும்பலின் நடுவில் நின்றபடி கிணற்றுக்குள் மிக சிரத்தையாக எதையோ தேடிக்கொண்டிருந்தார். நான் அவர்களை நெருங்கியதும் ஒரு கணம் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். மாமாவும் என்னைப் பார்த்து முதலில் ஒரு கணம் வியப்படைந்து பின் லேசாக முறுவலித்தார்.

“நீ மேலே போயிரு, நான் இதோ வந்துவிட்டேன்” என்று குஜராத்தியில் கூறினார்.

ஆவலை அடக்கியபடி மேலே போக மாடிப்படிகளை அடைந்தேன். எதிரில்ன் இறங்கி வந்த கோபால் பாயிடம் என்ன விஷயம் என்று கேட்டேன்.

“என்னத்தைச் சொல்ல திலீப் பாய்! தண்ணீரின் கதைதான் பெரிய கதையாகிவிட்டிருக்கிறது. வீட்டில் குடிப்பதற்கு ஒரு துளி தண்ணீர் இல்லை. இந்த லட்சணத்தில் கிணற்றில் எலி விழுந்து இறந்துவிட்டது. பாபு பாய் பாவம்! எட்டு மணியிலிருந்து அதை வெளியே எடுக்க முயல்கிறார். முடியவில்லை.” என்று குஜராத்தியில் சொல்லி வருத்தப்பட்டார், வழக்கமான முகஸ்துதிகளுக்குப் பின் நகர்ந்துபோய் கும்பலுடன் ஐக்கியமானார் அவர்.

நான் மேல்மாடியை அடைத்து வீட்டுக்குள் நுழைவதற்கும், சந்திரா, என் மாமாவின் மூத்த மகள், பெருக்கி முடித்து நிமிர்ந்து என்னைச் சந்திப்பதற்கும் சரியாக இருந்தது. அவள் மகிழ்ச்சியுடன் சிரித்து என்னை உபசரித்தாள். மாமி

சமையல்கட்டிலிருந்து வந்து, “வா, வீட்டாரின் ஷேம நலத்தை விசாரித்தாள். நான் பதில் கூறிவிட்டு, ரெயிலின் தாமதமான வரவைப் பொதுவாக முறையிட்டுக்கொண்டேன். எனக்காக அவள் ‘டீ’ போட உள்ளே சென்றாள். என் மாமா வீடு ரொம்பவும் கச்சிதமான, ஆனால் சிறிய வீடு. ஒரு பெரிய ஹால். அதன் கோடியில் இடப்பக்கம் ஒரு அறையும், வலப்பக்கம் ஒரு அறையும் இருக்கும். இடப்பக்க அறை சமையலறை. வலப்பக்க அறை, குளியலறை, சயன அறை, ஸ்டோர் ரூம், எல்லாம் அதுதான். ஆண் குழந்தைகள் விளையாடச் சென்றிருக்க வேண்டும். மாமாவுக்கு இரண்டு பெண்கள் (பூர்ணா சமையல்கட்டில் இருந்தாள்) மூன்று பையன்கள். கனு, வ்ரஜேஷ், தீபக். பாட்டி கோயிலுக்குப் போய்விட்டிருந்தாள். காலை ஐந்து மணிக்குப் போய் 10 1/2 அல்லது 11 மணிக்குத்தான் வருவாள். பாட்டி ரொம்பவும் மடி, ஆசாரம் ஆகியவற்றை அனுஷ்டிப்பவள். ஒவ்வொரு முறையும் நான் இங்கு வரும்போது எனது உயரத்தை உத்தேசித்து இவள் செய்கிற முதல் காரியம், மடிகோலால் மேலே உலர்த்தி இருக்கும் துணிகளை, ஓரங்களுக்கு நகர்த்துவதுதான். அப்படியும் தப்பித்தவறி, அவளது ஆடைகளை நான் தொட்டுவிட்டால் அவைகளை மீண்டும் துவைக்கச் சென்று விடுவாள். இந்தக் கட்டிடத்தில் எல்லோரையும்விடவும் வயதில் முதிர்ந்தவள் இவள். லெளகீக விவகாரங்களில் மிக மிக விவேகமுள்ளவலாகவும், ஆன்மீக விசாரங்கள் நிறைந்த ஒரு தெளிந்த சிந்தனாவாதியாகவும் கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்தாள்.

நான் கழிவறைப்பக்கம் பார்த்தேன். என்ன அதிசயம், காலியாகக் காத்திருந்தது. பொதுவாக, இந்த மேல்மாடியில் வாழ்கிற அறுபது ஜீவன்களின் உபயோகத்திற்காகக் கட்டப்பட்ட இரண்டே இரண்டு கழிவறைகள் இந்த ஒன்பதேகால் மணி உச்சகட்டத்தில் இப்படிக் காலியாய் இருப்பது ரொம்பவும் அரிது.

ஆசாரம் மிகுந்த என் மாமா வீட்டு நியதிப்படி இந்தக் கழிவறையை உபயோகிக்கச் சில கண்டிப்பான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கழிவறைப் பிரயாணம், வெகு நேர்த்தியான ஒரு அனுபவம்.

முதலில், தண்ணீரை ஒரு சிறிய பிளாஸ்டிக் செம்பில் உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து எடுத்து தண்ணீர் வராத ஒரு குழாயடியின் சின்னச் சுற்றுச் சுவர் மேல் வைத்துவிட வேண்டும். மாடியின் ஓரச் சுவரின் மூலையில் ஒரு நாலு கிலோ டால்டா டின் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். அதை இடது கையால் எடுத்துக் கொண்டு சென்று கழிவறைக்குப் போகிற ஒரு சின்ன நடைவெளியின் முகட்டில் வைத்துவிட்டு, வலது கையால் ஒரு பிளாஸ்டிக் வாளியில் மீண்டும், உடைந்துபோன சிமெண்ட் தொட்டியிலிருந்து நீரை மொண்டு அந்த டின்னை நிறைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அந்த டின்னை இடது கையால் சுமந்து அந்த நடைவெளியெங்கும் அந்த மேல்மாடிக் குழந்தைகள் கழித்து உண்டாக்கிய சிறுநீர்த் தீவுகளை லாவகமாகத் தாண்டி, முதலில் தென்படுகிற – கழிவால் நிறைந்து வழிகிற, ஒரு மாதத்திற்கு அருவருப்பு ஊட்டவல்ல – கழிவறையைத் தவிர்த்து, அடுத்ததில் வழுக்காமல் உட்கார்ந்து, (என்னை மாதிரி) ஜே.கிருஷ்ணமூர்த்தியையோ, டி.எஸ். எலியட்டையோ நினைத்து லயித்துவிட வேண்டும். அதாவது, அடுத்த வீட்டுப் பெண், தவிப்பும் வேதனையும் தொனிக்கிற குஜராத்தியில், “அந்தர் கோன் ச்சே? ஜல்தி நிக்ளோ!” (உள்ளே யார் இருக்கிறீர்கள்? சீக்கிரம் வெளியேறுங்கள்!) என்ரு கெஞ்சி எழுப்பிவிடுகிறவரை.

தலையைக் குனிந்து வெளியே வந்து நடைவெளியைக் கடந்து, காத்திருக்கிற பெண்ணைத் தவிர்த்து, நேரே சென்று டால்டா டின்னை இருந்த இடத்தில் இருந்த மாதிரி வைத்து, அதன் அருகில் இருக்கும் தேய்ந்துபோன 501ஐயோ, ரெக்ஸோனாவையோ, லைஃப்பாயையோ எடுத்து குழாயடி சுற்றுச் சுவரில் நிறைத்து வைத்த பிளாஸ்டிக் செம்பை இரண்டு மணிக்கட்டுகளினாலும் இறுக்கி, லேசாகக் கவிழ்த்து, கைகளைக் கழுவிக்கொண்டுவிட வேண்டும். பிறகு செம்பைச்  சாதாரணமாக எடுத்துச் சென்று கால்களைக் கழுவிக்கொள்ளலாம். நான் இந்தச் சடங்குகளை மிக அலட்சியமாகச் செய்து முடித்துவிட்டு வந்தேன். மாமி எனக்காக ‘டீ’ தயாராக வைத்திருந்தாள். அவள் வெளிறிப்போன நீலப் புடவை உடுத்தியிருந்தாள். மாமியின் சிவந்த மேனிக்குப் பிரகாசமான நிறங்கள் எடுப்பாக இருக்கும். ஆனால் அவளை நான் எப்பொழுது பார்த்தாலும் இந்த மாதிரி ஏதோ ஒரு வெளிறிப்போன நிறத்தில் உடுத்திக்கொண்டிருப்பாள். நான் மனதுக்குள் மாமாவின் புடவை ரசனையைச் சபித்துக்கொண்டேன்.

கிணற்றடியில் இப்போது கூட்டம் குறைந்து காணப்பட்டது. பெண்கள் போய்விட்டிருந்தனர். ஆண்களும் இரண்டு மூன்று இளைஞர்களும் ஒரு சில குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். ஆண்கள் அனைவரும் பாக்கெட் வைத்த, லாங்கிளாத் பனியன்களும், வெள்ளை பைஜாமாக்களையும் அணிந்திருந்தனர். மாமா மட்டும் ஒரு நைந்துபோன, கையில்லாத ஸ்வெட்டரும், வேட்டியும், அதைப் பிடித்து நிறுத்த ஒரு மட்டமான தோல் பெல்ட்டையும் அணிந்திருந்தார்.

மாமா எல்.ஐ.சி.யில் சுமார் இருபது ஆண்டுகளாக வேலை செய்கிறவர். இந்தக் கட்டிடத்தில் மிக அதிகமாகப் படித்தவர்கள் வரிசையில் முன்னனியில் நிற்பவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி.க்கு இருக்கிற கொஞ்சநஞ்ச மோகத்தில் தனது வண்டியை ஓட்டிக்கொண்டிருப்பவர். குறிப்பாக, இங்கே இவருடைய ஜம்பம் நூற்றுக்கு நூறு பலிக்கிறது.

இப்போது அவர் கிணற்றில் லயித்திருந்தார். கிணற்றுக்கு மேலே ஒரு தகரக் கூரை போடப்பட்டிருந்தது. அதனால் கிணற்றுக்கு வெளிச்சம் வராமல் மிக இருட்டாக இருந்தது. ஒரு இளைஞன் டார்ச் விளக்கால் கிணற்றுக்குள் ஒளியை ஏற்படுத்திக்கொண்டிருந்தான். கிணற்றில் கருப்பாக ஏதோ மிதந்துகொண்டிருந்தது. அதை எலி எண்று ஊர்ஜிதப்படுத்தினார்கள்.

இறந்துபோன எலியை எடுக்கத் தங்களுடைய வாளிகளைத் தர யாரும் சம்மதிக்கவில்லை. அதனால் ஒரு பழக்கூடையைக் கயிற்றில் கட்டி கீழே இறக்கியிருந்தார்கள். கூடையின் ஒரு பக்கத்தில் மட்டும் கட்டப்பட்டிருந்ததால், கூடை ஒரு பக்கமாக சாய்ந்துவிடப்பத்திருந்தது. நீரின் அழுத்தத்தால் அது மேலும் கதகதப்பாகிப்போனது. என்றாலும், எலியை எடுக்கும்போது தண்ணீர் கூடையில் இருந்தது, எலி மட்டும் சிக்கிவிடும். என்று இவர்கள் கூறினார்கள், இதில் இருக்கும்

சௌகரியத்திற்குப் பின்னால் ஒரு சாமார்த்தியமும் ஒளிந்துகொண்டிருந்தது. நிச்சயமாக இது மாமாவின் யோசனையாகத்தான் இருக்கவேண்டும். சுயநலத்திற்காக மனிதன் கையாளும் சாம்ர்த்தியம் சில சமயம் இந்த மாதிரி சுவாரஸ்யமாகவும் இருப்பது உண்டு.

எலி இப்போது கிணற்றின் ஓரத்தில் மிதந்துகொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரமாக இது அங்கேயே இருப்பதாகக் கூறினார்கள். இந்த விஷயத்தை மற்றவர்கள் என்னிடம் கூறும்போது மாமாவுக்குத் தனது திறமையை மற்றவர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்ற கற்பனை வந்து, கூடவே கோபமும் வந்தது. என்றாலும், அவர் மிகப் பொறுமையாகச் செயல்பட்டார். அந்த எலியை வெளியே எடுத்துப் போடுவதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டிருந்தார்.

காந்திலாலும் சந்திரகாந்தும் அண்டை வீட்டுக்காரர்கள். இடையிடையே இவர்கள் ஷு(த்) தயூ(ந்) பாபு பாய்? ஷு(த்) தயூ(ந்) என்று குஜராத்தியில் கேட்டுக்கொண்டிருந்தனர். இவர்கள் கேட்கிற ஒவ்வொரு முறையும் மாமா தனது கண்களையும் புருவங்களையும் சுருக்கி, தான் எல்லோராலும் கவனிக்கப்படுகிறோம் என்ற உண்மையை மனத்துக்குள் ரசித்து அசட்டுத்தனமாக ஆனந்தப்பட்டு முன்னைவிட, இன்னும் சற்று சிரத்தையுடன் தனது வேட்டையில் ஈடுபட்டார்.

போராட்டம் நீண்டது.

கடைசியில் அவர் பொறுமையை இழந்து ஆக்ரோஷமாக ஆனால் வெகு நேர்த்தியான சில சேஷ்டைகளைச் செய்தார். உலக்கையால் இடிக்கிற மாதிரியும், மாவை ஆட்டுகிற மாதிரியும், பட்டம் விடுகிற மாதிரியும், கடைசியாக ஒரு மாலுமியைப்போலவும் பல வித்தைகள் செய்தார்.

வித்தை பலித்தது.

எலி கிணற்றின் மையத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில் அதை வெளியே எடுப்பது சுலபம் என்று எல்லோருக்கும் பட்டது. எல்லோருக்கும் மனதுக்குள் உற்சாகம் பொங்கி வழிந்தது. மாமா ஒரு கப்பற்படை அதிகாரியைப் போல் விளக்கு பிடிப்பவனுக்கு ஆணைகள் பிறப்பித்தார். அலட்சியமாக அருகில் நின்றவர்களை விலகச் சொன்னார். பிறகு, கயிற்றைக் கீழே இறக்கினார், மிக நிதானமாக. பின் மெல்ல, மிக நயமாகக் கயிற்றைச் சரியாக எலிக்கு அருகே கொண்டு வந்தார். மறுகணம்! ஒரு அசாத்திய வேகத்துடன் கயிற்றை மேலே இழுத்தார்.

எல்லோரும் ஆர்வமாய்க் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து ஏமார்ந்தார்கள். கூடை காலியாகவே மேலே வந்திருந்தது. எலியோ மீண்டும் கிணற்றின் ஓரத்திற்கே போய்த் தேங்கிவிட்டது. மாமா அசடு வழிந்தார். எலியின் மேல் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.

மாமா மீண்டும் மீண்டும் அசடு வழிந்தார்.

சுமார் முக்கால் மணி நேரம் எலி போக்குக் காட்டியது. கடைசியாக, பத்தே கால் மணிக்கு எலி வெளியே எடுக்கப்பட்டது. எலியின் பிணத்தைப் பார்க்கக் கூசி, குழந்தைகளும் பெரியவர்களும் நகர ஆரம்பித்தனர். தனது ஆண்மையையும், தைரியத்தையும் வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதிய யாரோ ஒரு இளைஞன் கூடையுடன் எலியை வெளியே எடுத்துச் சென்றான்.

மாமா, வெற்றி பெற்ற கஜினி முகம்மதாகவும், சீசராகவும், நெப்போலியனாகவும் உணர்ந்தார். தொடர்ந்து, அவர் தன்னைச் சுற்றியிருந்த ஏழெட்டு குஜராத்தி இளைஞர்களுக்குத்தான் அந்த எலியை வெளியே எடுத்த விதத்தைப் பற்றி, ஒரு அரசியல்வாதியின் சொல்லாடம்பரத்துடனும், ஒரு கட்டிட இயல் நிபுணரின் அபிநயங்களுடனும், பதினைந்து நிமிடங்களுக்கு விளக்கினார்.

மாமாவின் விரிவுரை முடிந்த பின், காந்திலாலும் ஜெயந்திலாலும் மற்ற சிலரும், இப்போது கிணற்று நீரைக் குடிக்க உபயோகிக்கலாமா?” என்ற ஒரு நியாயமான கேள்வியைக் கலக்கத்துடன் கேட்டார்கள். இதுவரை இதைப்பற்றிச் சிந்திக்காத மாமாவோ சற்று அதிர்ந்துபோனார். அவரது மனத்தின் பின்னணியில் வேகமாகப் பாய்ந்த பயங்கள் அவர் முகத்தில் நன்கு தெரிந்தன. என்றாலும், உடனே சமாளித்துக்கொண்டார். தனது தயக்கம் இந்த சிஷ்யர்களிடையே தனக்கிருக்கும் குரு ஸ்தானத்திற்கு ஊறு விளைவித்துவிடும் என்று கருதிய அவர் உடனே “இல்லை, இல்லை, அப்படியே உபயோகிக்கக் கூடாது. ஹெல்த் ஆபீஸில் போய்ச் சொன்னால் அவர்கள் ஏதாவது மருந்து தெளித்துவிடுவார்கள். அல்லது நாமாகவே சிறிது க்ளோரினைத் தூவிவிட்டுவிடவேண்டும்.” என்று கூறிவிட்டு நகர ஆரம்பித்தார். எல்லோரும் தலைகளை ஆட்டி அதை ஆமோதித்தாலும் அவர்கள் முகத்தில் கலவரமும் பீதியும் நிறைந்து காணப்பட்டன.

தஞ்சாவூர் குஜராத்தியான சந்திரகாந்த், மாமாவிடம், “ஹெல்த் பீஸ் மா தமே ஜஷோ? அம்நே கா(ந்)ய் ஆமா சமஜ் ஞ படே பாபு பாய் (ஹெல்த் ஆபீஸுக்கு நீங்கள் செல்வீர்களா? எங்களுக்கு இதில் ஒன்றும் புரியாது பாபு பாய்) என்று கெஞ்சல் குரலில் கேட்டார். மாமா அதில் தனக்குச் சிரமம் ஏதும் இல்லை என்றாலும் தனக்கு அந்த வட்டத்து ஹெல்த் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்றும், மேலும் தனக்கு ஆபீஸ் செல்ல ஏற்கனவே தாமதமாகிவிட்டிருந்ததாகவும் கூறி நழுவிவிட்டார். தனது வீட்டிலும் குடிக்கத் தண்ணீர் அரைக் குடம்தான் இருந்தது என்பதை அவர் உணர்ந்திருந்தாலும் இந்தக் காரியத்தை செய்யத் தனக்கு அவகாசம் இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டார். மாமா என்று மட்டும் இல்லை, இங்கே இருக்கிற எல்லோரும் இதே மாதிரி ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி ஹெல்த் ஆபீஸுக்குப் போவதையும், அங்கு இருக்கப்போகிற அதிகாரியை எதிர்கொள்வதையும் தவித்தார்கள்.

தங்களைத் தவிர யாராவது ஒருவர் கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று மட்டும் மிக மிக விரும்பினார்கள்.

இதர்கிடையில், மேலே இருந்து கீழே வந்த கோவிந்த்ஜி சேட் என்கிற பணக்கார, T.V.வைத்திருக்கிற கிழவர், மேலோட்டமாகக் கிணற்றிலிருந்து  பதினைந்து அல்லது இருபது குடங்கள் நீரை இறைத்துக் கீழே ஊற்றிவிட்ட பிறகு தண்ணீரை உபயோகிக்கலாம் என்று அரிய யோசனை கூறி, அதை மற்றவர்கள் மூலம் செயல்படுத்தவும் செய்தார். மூச்சிரைக்க இதைச் செய்து முடித்த பிறகும் எல்லோரும் கிணற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தனது பெரிய முதிர்ந்த சரீரத்தைச் சுமந்துகொண்டு, கைத்தடியுடன் பாட்டி வாசல் பக்கமாக வருவது தெரிந்தது. வெள்ளையில், சிறிய கருப்புப் பூக்கள் நெருக்கமாக அச்சிட்ட சேலையை உடுத்தியிருந்தாள். கழுத்தில் துளசி மாலையுடனும், முகத்தில் தெளிவோடும் வந்துகொண்டிருந்தாள். இந்த களோபரத்தில் யாரும் பாட்டியைக் கவனிக்கவில்லை. அருகில் வந்த பின், அவளாகவே விஷயத்தை விசாரித்தாள். விஷயமும் பிரச்சனையும் அவள் முன் வைக்கப்பட்டன. பாட்டி சிறிது யோசித்தாள். பிறகு ச்சாலோஹு(ந்) தம்னே ஏக் ரஸ்த்தோ பதாவூ(ந்) (வாருங்கள் நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன்) என்று கூறினாள். எல்லோரும் அவளைப் பிந்தொடர்ந்து, மேலே வந்தனர்.

ஹாலில் கனுவும் வ்ரஜேஷும் மல்யுத்தம் செய்து கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த பாட்டி சாதகமான கோணத்தில் இருந்த கனுவின் புட்டத்தில் லேசாக, ஆனால் வலிக்கிற மாதிரி கைத்தடியால் அடித்து ஏசிவிட்டு சமையலறைக் கதவருகே  இருந்த ஒரு தேக்குப் பீரோவின் முன் உட்கார்ந்துகொண்டாள். பிறகு அதை மெதுவாகவே திறக்க ஆரம்பித்தாள். பீரோவினுள் சின்னச் சின்ன விக்ரஹ்ங்கள் ஜரிகைத் துணிகள் அணிவிக்கப்பட்டு, குட்டிக் குட்டி மெத்தைகளின்
மேல் உட்கார்ந்திருந்தன. ஒரு மூளையில் காவித் துணியில் ஏதோ முடிந்துவைக்கப்பட்டிருந்தது. பாட்டி அதை நிதானமாக எடுத்து அவிழ்த்தாள். அதனுள் மிகச் சிறிய மண்குடம் இருந்தது. அதன் வாய் சுத்தமான ஒரு வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்தது. பாட்டி ‘பூர்னாவுக்கு குரல் கொடுத்து ஒரு கிண்ணத்தை வரவழைத்தாள். பின் குடத்தின் வாய் – துணியை அவிழ்த்து அதிலிருந்து சிறிது நீரைக் கிண்ணத்தில் ஊற்றினாள். அங்கு ஒரு நிசப்தம் நிலவியது. எல்லோரும் அவளையே பொறுமையின்றி பார்த்துக்கொண்டிருந்தனர். பாட்டியோ சிறிதும் அவசரமில்லாமல் அந்த பீரோவை நன்றாக மூடிவிட்டுத் திரும்பினாள்.

கதவருகேயும், கதவுக்கு வெளியேயும் குழுமி நின்றவர்களில் முன்னால் இருந்த பிரான்ஜிவன்லாலை சமிக்ஞையால் அழைத்தாள் பாட்டி. சிறிது நேரமாகத் தலையைக் குனிந்திருந்ததால் பாட்டியின் மூக்கு கண்ணாடி மூக்கின் மையத்திற்கு நழுவிவிட்டிருந்தது. அவள் கிண்ணத்தைச் சிறிது முன்னால் நகர்த்தி, தலையை லேசாக உயர்த்தி, விழிகளை இன்னும் சற்று உயர்த்தி மூக்குக் கண்ணாடிக்கப்பால் பார்வையைச் செலுத்திப் பேசினாள், “ஸ்யோ ஆ கங்கா ஜல் ச்சே. பிரபுனு நாம் லய் னே குவா மா நாக்கி த்யோ னே வாப்ரோ” (இந்தாருங்கள். இதில் கங்கா ஜலம் உள்ளது. கடவுளின் பெயரைச் சொல்லி கிணற்றில் ஊற்றிவிட்டு நீரை உபயோகியுங்கள்.) பிராஞிவன்லால் மிக பவ்யமாகத் தலையை ஆட்டிக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் கிணற்றடிக்குச் சென்றனர்.

சிறிது நேரத்தில் எல்லோர் வீட்டுப் பானைகளிலும் கிணற்று நீர் நிரம்பி வழிந்தது. கட்டிடத்தில் அமைதி கலைந்து, இயக்கம் துவங்கியது.

பாட்டி அமைதியாக ‘ஜன் கல்யானி’ல்* லயிக்கத் துவங்கினாள்.

***
*ஜன் கல்யான் – தெய்வீகமான விஷயங்கள் தாங்கி வருகிற குஜராத்தி மாத சஞ்சிகை.
***
நன்றி: திலீப் குமார் (மூங்கில் குருத்து/ க்ரியா), தாஜ்

அபாயம் : இங்கு சிரிக்கக் கூடாது!

சென்ற மாதம் ‘க்ரியா’விலிருந்து வந்த மெயில் மூலமாக , அவர்களின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்புகளில் ஒன்றான ஜோஷ் வண்டேலூவின்  ‘அபாயம்’ நாவலின் மறு அச்சு பற்றி அறிந்தேன். முன்பே வாங்கியிருந்ததால் அபாயம் நீங்கியது!  ’தற்காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை ஒன்றை இந்த நாவல் கவனப்படுத்துகிறது. அறுபதுகளின் துவக்கத்தில் தீர்க்கதரிசனத்துடன் எழுதப்பட்ட இந்த ஃப்ளெமிஷ் மொழி நாவல் செர்னோபில் அணுஉலை விபத்து, அண்மையில் ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்து போன்ற அழிவுகளை எதிர்நோக்கி எழுதப்பட்டதாக இருக்கிறது.’ என்று ’க்ரியா’ சொல்லும் அந்த நாவலின் சிறுபகுதியை தட்டச்சு செய்து பதிவிடுகிறேன்.  அபாயம் நாவல் பற்றி சகோதரர் R.P. ராஜநாயஹம் எழுதிய பதிவின் சுட்டி கீழே இருக்கிறது. அவசியம் வாசியுங்கள். அபாயம் எப்போதுமே நம் அடியில்தான்! –  ஆபிதீன்

***

ஜோஷ் வண்டேலூவின் ’அபாயம்’ நாவலிலிருந்து..

அத்தியாயம் இரண்டு

இரவில் மின்னும் குகைப் பாதை

ஆறாவது நாள் மிக மெதுவாக நகர்கிறது. பகற்பொழுதைப் பின்னிக்கொண்டிருந்த அமைதி அவ்வப்போது ஒரு தையல் கண்ணியைத் தவற விடுகிறது.

‘துபோன், நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். ஷேக்ஸ்பியர் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா?’ என்று பென்ட்டிங் கேட்டான்.

’நிச்சயம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்றான் துபோன்.

‘ஹாம்லட் பற்றித் தெரிந்திருந்தால், பயங்கரமாக முற்றிவிட்ட நோய்கள் பயங்கரமான சிகிச்சையால் குணமாகலாம், ஆகாமலும் போகலாம் என்று ஷேக்ஸ்பியர் எழுதியிருப்பதும் தெரிந்திருக்கும்.’

பிறகு பல நிமிஷங்கள் மௌனம் ஆதிக்கம் செலுத்துகிறது. துபோனும் பென்ட்டிங்கும் அதிகம் பேசுவதில்லை. களைப்புடன் படுத்திருக்கிறார்கள், காத்திருக்கிறார்கள். அவர்கள் அதிகம் சாப்பிடவில்லை. மார்ட்டினைப் பற்றி நினைக்கிறார்கள். ஒருவரும் அவனைப் பற்றிப் பேசுவதில்லை. பேசத் தொடங்குவதற்குப் பயந்தார்கள். இருவரும் மற்றவர் நினைப்பதுபற்றி பயந்தனர். ஆனால் மார்ட்டின் இப்போது செத்துவிட்டான் என்று நினைத்தார்கள். தொற்றை முறிக்கும் மருந்துகள் அவன் உடலுக்குள் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டன. அப்புறம் அவன் உடம்பைப் கீறிப் பார்ப்பார்கள்.

கதிர்கள் அவன் உடலில் எவ்வாறு கலந்திருக்கின்றன என்று பார்க்க விரும்புவார்கள். அழிவு எப்படி நிகழ்ந்திருக்கிறதென்று ஊன்றிப் பார்க்க வேண்டும், இயற்கையாக ஏற்படும் பேரழிவுகளை நிபுணர்கள் ஆராய்வதுபோல், பரிசோதனைக்குப் பிறகு எஞ்சியிருப்பதை ஒரு பெட்டிக்குள் வைத்து ஈயத்தால் மூடிவிட்டு, அவன் உடலை ஒரு பாதுகாப்பான ஆழத்தில் உடனே புதைக்க ஏற்பாடு செய்துவிடுவார்கள். கதிரியக்கக் கழிவுகள் பற்றி மிகுந்த எச்சரிக்கையுடனிருக்க வேண்டும். மார்ட்டின் மோலினார் இப்போது கழிவுப் பொருள். நாம் எல்லோரும் கழிவுகளாகிறோம். நம்மில் பலர் தீங்கற்றவர்கள், நம்மால் எந்த ஆபத்தும் இல்லை. ஒரு சவத்தை உதைக்கலாம், ஒன்றும் நிகழ்வதில்லை. ஆனாலும் சில பிணங்கள் ஆபத்தானவை. ஆபத்தான பிணங்களை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். அவை பேய்கள் என்று அழைக்கப்பட்டதுண்டு. அது முன்பு. இப்போது அந்தக் காலமெல்லாம் மாறிவிட்டது. கோட்டைகளும் பேய்களும் கடந்த கால விஷயங்கள். நம்முடைய ஆபத்தான பிணங்களை நாம் ஈயப் பெட்டிகளில், அவசியமானால் கான்கிரீட் பெட்டகங்களில்கூட, அவை ஒருபோதும் வெளியில் வந்துவிட முடியாதவாறு வைக்கிறோம். அவை எளிதில் வெளியே நடமாட முடியாது. நாம் அவ்வளவு விஷயம் தெரியாதவர்களில்லை.

பேராசிரியர் வென்ஸ் அறைக்குள் வருகிறார். மிகுந்த முயற்சியின் பேரில் புன்னகையை வரவழைத்துக் கொள்கிறார். ‘உங்களுக்குத் தேவையான வைட்டமின்கள் கொண்டு வந்திருக்கிறேன்’ என்கிறார்.

‘இன்று எங்களுக்கு என்ன கிடைக்கும்?’ துபோன் கிண்டலாகக் கேட்கிறான்.

‘பி12’ என்கிறார் மருத்துவர்.

‘அப்படியானால் இன்றைக்கு இவ்வளவுதானா?’

‘இல்லை, போகப்போக உங்களுக்கு ஈரல் மற்றும் மால்ட் கிடைக்கும். அப்புறம் இன்னொரு ஊசி.’

‘எங்களை ரொம்பவும்தான் கவனித்துக்கொள்கிறீர்கள்’ என்று பென்ட்டிங் வறண்ட குரலில் கூறுகிறான்.

‘உங்களுக்காக நாங்கள் எல்லோரும் எவ்வளவு செய்கிறோம் என்பது மட்டும் உங்களுக்குத் தெரிந்தால்,’ என்கிறார் பேராசிரியர்.

பென்ட்டிங்கின் கிண்டல் அவருக்குப் புரியவில்லை. அவன் நல்ல மனநிலையில் இருக்கிறான், சிரிக்கிறான், அது இயற்கைக்குப் புறம்பானதாக இருக்கிறது. கொட்டை எழுத்துகளில், சுவரில் இவ்வாறு அறிவிக்க வேண்டும்.

இங்கு சிரிக்கக் கூடாது
சிரிப்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது.
மீறுபவர் கட்டாய உடலுழைப்புத் தண்டனைக்கு உள்ளாவார்கள்.

ஆல்ஃபிரட் பென்ட்டிங் தன்னுடைய இடது கையால் தலையைத் தேய்க்கையில் முடி கட்டையாக வெட்டப்பட்டிருப்பதால் கையில் குத்துகிறது. அவனுக்கும் துபோனுக்கும் தலை கிட்டத்தட்ட மழிக்கப்பட்டது போலிருக்கிறது, குற்றவாளிகளைப் போல. துபோன் இளைமையாக்த் தோற்றமளிக்கிறான். ஆனால் அவனது பழைய கடுமையான முரட்டுத்தனம் அப்படியே இருக்கிறது. இதையெல்லாம் பற்றி நினைக்கும்போது அவனுக்கு மிகவும் பற்றிக்கொண்டு வருகிறது. அணு உலையின் அருகில் நேர்ந்த விபத்து, நோய் மற்றும் துன்பம், ஊசிகள், முடி கொட்டுவது (அது இப்போது குறைவதுபோல் தெரிகிறது), ரத்தப் பரிசோதனைகள், களிம்புகள், வயிற்றுப்போக்கு, சிறைவாசம், நம்பிக்கையின்மை. உள்ளக் குமுறலுக்கு ஆட்பட்டுவிடுகிறான். துபோன் கலக மனோபாவத்துடன் கொதித்தெழுவதற்குத் தயாராக இருக்கிறான்.

**

மேலும்..:  ஜோஷ் வண்டேலூ எழுதிய ‘ அபாயம்’ –  R.P. ராஜநாயஹம்
**

நன்றி : க்ரியா
ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: 9444512885
creapublishers@gmail.com
http://www.crea.in/

எவ்வளவு பெரிய இழப்பு! – ஆசை

மவுலானா ரூமி (ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை,  “ரகசிய ரோஜா” என்ற பெயரில் பேரா. ரமீஸ் பிலாலி  தமிழில் தந்திருப்பதாக சகோதரர் நூருல்அமீனின் வலைப்பதிவிலிருந்து   அறிந்தேன். ஆசை வந்துவிட்டது, ஆசை பற்றி எழுத!

உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துவருகிறார் கவிஞர் ‘ஆசை’. ருபாய் என்பதன் பன்மை ருபாயியாத் (நமக்கு ரூபாய்தான் தெரியும்! – தாஜ்).  ‘தமிழில் வெண்பா, விருத்தம், சிந்து என்று இருப்பதுபோல ருபாயும் பாரஸீகப் பாவினங்களுள் ஒன்று. பல பாரஸீகக் கவிஞர்களும், உர்து கவிஞர்களும் ருபாயியாத்துப் பாடியிருக்கின்றனர். நாலடிகளான ருபாயில் முதல் இரண்டடிகளினுடையவும் கடைசி அடியினுடையவுமான கடை எதுகை ஒன்றுபோல் இணையவேண்டும். மூன்றாம் அடி சாதாரணமாகவும் இருக்கலாம்; மற்ற அடிகளின் கடை எதுகைபோலவும் இருக்கலாம்’ – ஆர்.பி.எம். கனி ( நூல் : பாரஸீகப் பெருங்கவிஞர்கள்).

இந்த ‘ஆசை’க்கு ஒரு ஆசை. இதென்ன ‘மேகத்துக்கு தாகம்’ என்பதுபோல என்கிறீர்களா? நான் என்ன செய்வது, ஆசைத்தம்பி என்கிற அழகான பெயரை ‘ஆசை’ என்று சுருக்கியிருக்கிறார் மனுசன். ஆசையை சுருக்கலாமோ? அரபியும் பார்ஸியும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று இப்போது பேராசை வந்துவிட்டது. ஆள் மன்னார்குடிக்காரர் (உமர்கய்யாம் அல்ல!). தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குள் ‘மேற்கண்ட மொழி இலக்கியங்களில் புலமையுள்ளவர்கள் யாராவது இருந்தால் எனக்குத் தகவல் கொடுத்து உதவுங்கள்’ என்று ஆசையோடு என்னைக் கேட்கிறார். அலாதியான பெயர்கள் தாங்கிய அரபி மத்றஸாக்களை பரிந்துரைக்கலாம். ஆனால், சகோதர மதத்தவரை அங்கே சேர்த்துக்கொள்வார்களா?  அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று ஹதீஸே இருக்கிறதாம். எண் தெரியவில்லை, ஆனால் நல்ல விஷயங்களை நம் ரசூல் (ஸல்) சொல்லாமலிருந்ததில்லை.

ஒரு கவிதை :

‘நம் தலைவர்கள்
தொண்டர்களுக்கு ‘ரசூல்’ஐ காட்டுகிறார்கள்
தான் மட்டும்
வசூலில் வாழ்கிறார்கள்!’

வேறு யார் , நம் ஜபருல்லா நானா எழுதியதுதான். அது இருக்கட்டும், விஷயத்திற்கு வருகிறேன். ‘ஆசை’யை மதறஸாக்களில் சேர்த்துக் கொள்வார்களோ? சந்தேகம்தான். அரபிமொழியை பாடமாக சொல்லிக்கொடுக்கும் கல்லூரிகளில் சேரச்சொல்லலாமா?ஆசைக்கோ வயசு அதிகமாயிற்றே… என்ன செய்யலாம்? தெரியவில்லை. விபரமறிந்தவர்கள் ஆசையை தொடர்புகொள்ளுங்கள். ‘அத்தனைக்கும் ஆசைப்படும்’ ஆசையின் மின்னஞ்சல் முகவரி : asaidp@gmail.com

உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ மொழிபெயர்ப்பு பற்றி நான் முன்பு எழுதியதை எப்படியோ கண்டுபிடித்து, அந்த நேரடியான மொழிபெயர்ப்பு கிடைக்குமா என்று ஆவலுடன் விசாரித்து , ‘அது கிடைக்க வாய்ப்பில்லையே..’ என்று நான் சொன்னதும் ‘எவ்வளவு பெரிய இழப்பு!’ என்று ஆசை அதிர்ந்தது என்னையும் அதிரவைத்துவிட்டது. நண்பர் நாகூர்ரூமியை தொடர்புகொள்ளச் சொன்னேன். ”உங்களுக்குத் தெரிந்த விபரங்கள்கூட எனக்குத் தெரியாது என்பதுதான் உண்மை!’ என்று சொல்லிவிட்டாராம் பேராசிரியர்.

எவ்வளவு நாம் இழந்திருக்கிறோம்!

ஒரு விஷயம், தஞ்சை பெரியகோயில் சம்பந்தமான நண்பர் ஜாகீர்ராஜாவின் கட்டுரையில் (நன்றி : கீற்று) ஒரு பறவையைப் பற்றி இப்படி வருகிறது : ‘பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது’

இஸ்லாமிய இலக்கியங்கள் அத்தனையும் பெற்று நாம் பரவசப்பட இன்னொரு பறவை வரவேண்டும்! எங்கே இருக்கிறாய் சிட்டே?

‘தையல்சிட்டின் கனம்தான்
இருக்கும்
இந்தக் கணம்

அதிர்ந்துகொண்டிருக்கிறது
அது
தையல்சிட்டு பறந்து சென்ற பின்
அதிரும்
இலைக்காம்புபோல’ – ஆசை

**

கவிஞர் ‘ஆசை’யின் மின்மடல்களிலிருந்து…

அன்புள்ள ஆபிதீன் அவர்களுக்கு,

வணக்கம். என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துக்குப் பின் விஷயத்துக்கு வருகிறேன். என் பெயர் ஆசை (ஆசைத்தம்பி). ‘சித்து’, ‘கொண்டலாத்தி’ என்ற எனது இரண்டு கவிதைத் தொகுப்புகளும் க்ரியா வெளியீடாக‌ வ‌ந்திருக்கின்றன. நான் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பில் (2008) துணை ஆசிரியராகப் பணிபுரிந்தேன். என்னுடைய‌ பேராசிரிய‌ருட‌ன் சேர்ந்து நான் உம‌ர்க‌ய்யாமின் ருப‌யிய‌த்தை ஆங்கிலத்திலிருந்து மொழிபெய‌ர்த்துவ‌ருகிறேன் . இந்த மொழிபெயர்ப்பு க்ரியா வெளியீடாக வரவுள்ளது. ருபாயியத் குறித்து இணையத்தில் தமிழில் தேடிப்பார்த்தபோது உங்களுடைய வலைப்பூவையும் காண நேரிட்டது. அதில் உமர்கய்யாமின் ‘ருபாயியத்’ஐ நேரடியாக ·பார்ஸியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் நெய்னா மாமா என்று ‘சொல்லரசு’ ஜாபர் மெய்தீன் மாமா சொல்வார்கள் என்ற குறிப்பைக் கண்டேன். இது எனக்குப் புதிய தகவலாக இருந்தது. பாரசீக மொழியிலிருந்து தமிழில் ருபாயியத்தை யாரும் மொழிபெயர்க்கவில்லை என்றே நான் எண்ணியிருந்தேன். இந்த மொழிபெயர்ப்பு எங்கே கிடைக்கும் என்ற தகவலை நீங்கள் தெரிவித்தால் எனக்கு இந்த மொழிபெயர்ப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். பாரசீக மொழி எனக்குத் தெரியாவிட்டாலும் மூலத்துக்கு அருகில் இந்த மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்ற பேராசையில் நம்பகமான ஆறேழு ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் ஒப்பிட்டே இந்த மொழிபெயர்ப்பை நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். அதனால் தமிழில் வந்துள்ள மொழிபெயர்ப்புகளை குறித்த தகவல்களையோ அல்லது இந்தத் தகவல்கள் யாரிடம் கிடைக்கும் என்ற தகவலையோ நீங்கள் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.கூடவே, பாரசீகமும் தமிழும் இலக்கியமும் நன்றாகத் தெரிந்த யாராவது ஒருவரைத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்…

அதுமட்டுமல்லாமல் எனக்கு அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவல் எழுந்திருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குள் மேற்கண்ட மொழி இலக்கியங்களில் புலமையுள்ளவர்கள் யாராவது இருந்தாலும் எனக்குத் தகவல் கொடுத்து உதவுங்கள்.

அன்புடன்   

ஆசை

*

ஆசைக்கு உதவுங்கள் தயவுசெய்து , வேறு மாவட்டக்காரர்களாக இருந்தாலும் . ஆள் ஓடிவந்துவிடுவார். (சேர்ந்ததும் ஓடிவிடுவார், அதுவேறு!) – ஆபிதீன்

***

மேலும் பார்க்க :

நானும் என் கொண்டலாத்தியும் – ஆசை |

கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும் – ஆசை

விசிறிக்கொண்டை ஒய்யாரி  –  ஆபிதீன் பக்கங்கள்

உமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் –  அப்துல் கய்யூம்

**

Read : 

சார்வாகனின் கனவுக்கதை

ஹைட்ரசிலுடன் வந்த ‘அயோத்தி’ தராசு மாதிரி இந்தக் கதையில் ஒரு வினோதமான தராசு வருகிறது. ஒரு பக்கம் ஒரு தட்டும் மறு பக்கம் மூன்று தட்டுகளும்! ஆனால் கதை தராசு பற்றியதல்ல. நண்பர் பாவண்ணனின் விமர்சன சுட்டியை கீழே கொடுத்திருக்கிறேன். அவசியம் வாசியுங்கள், இந்தக்கதையை இங்கே பதிவிடுவதற்கு காரணம் , ‘பண்புடன்’ குழுமத்து தம்பி சென்ஷி.  சார்வாகனின் ‘எதுக்குச் சொல்றேன்னா’ கதைக்கான பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். இப்போதுதான் தாஜ் அனுப்பிய ஸ்கேன் கிடைத்ததால் உடனே டைப் செய்து பதிவிடுகிறேன். அதற்குள் யாராவது பதிவிட்டிருக்கக்கூடுமோ? தெரியவில்லை. சரி, காப்பி செய்பவர்கள் என் பக்கத்திற்கு இணைப்பு கொடுத்தால் நன்றி சொல்வேன் – ‘க்ரியா‘ கண்டிக்கும்வரை.

எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் கொடுத்த ‘100 சிறந்த சிறுகதைகள்‘ பட்டியலில் இந்தக்கதை இருக்கிறதாம். இந்தமாதிரி பட்டியல்களெல்லாம் வேடிக்கையாக இல்லையா? தன் படைப்புகள் ஓரிரண்டை சேர்த்துவிட்டுத்தான் பட்டியலே போட ஆரம்பிப்பார்கள் போலும்.  இம்மாதிரி அநாகரீகமான செயல்களில் நான் ஈடுபடவே மாட்டேன்பா. தமிழின் சிறந்த 10 கதைகள் என்று நான் பட்டியல் போட்டால் எல்லாமே என் கதைகளாக இருப்பது மாதிரிதான் பார்த்துக்கொள்வேன் (சரி, போனால் போகிறது, நண்பன் நாகூர் ரூமியின் ‘குட்டியப்பா‘வை சேர்த்துகொள்ளலாம்! ). சும்மா வேடிக்கைக்குச் சொல்றேன்ங்க, சீரியஸா எடுத்துக்காதீங்க.

எழுத்தாளர்களின் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர் எழுதிய படைப்பாவது இருக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. கதையாகிப் போய்விடுமோ?

இலக்கியத்தில் இடஒதுக்கீட்டிற்காக போராடவேண்டிய நேரம் வந்துவிட்டது. வாழ்க தமிழ்!

ஆபிதீன்

***

கனவுக்கதை – சார்வாகன்

நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குப் போனபோது அங்கே வாங்குவோர் கூட்டமே இல்லை.

நடேசன் கடையில் அது ஒரு சௌகரியம். அங்கே எப்பவும் கூட்டம் தெரியாது. கறுப்பு பச்சை சிவப்புப் பெப்பர்மிட்டுகள், ரப்பர் பந்துகள், விலை சரசமான பேனாக்கள், வர்ண வர்ண இங்கி புட்டியுடன், (புட்டியில்லாமல் அளந்து) சோப்பு, சீப்பு (நேஷனல் ஸ்டோரில் கண்ணாடி கிடையாது), க்ஷவரத்துக்கு முன்னும் பின்னும் முகத்தை அழகு பண்ணிக்கொள்ள, நரை மயிரைக் கறுப்பாக்க, ஒத்தை ஜோடி மூக்கை நந்நாலு என்று விதம்விதமாகக் கோடு போட்ட, கோடே போடாத, குறுக்கும் நெடுக்குமாய்க் கோடு போட்டுக் குவித்த நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள், இன்னும் எத்தனையோ சாமான்கள், எல்லாம் வாங்குவாரை எதிர்பார்த்துக் காத்திருக்கும், சாதாரணமாய் நாங்கள்தான் போய் நிற்போம்.

நடேசன் சிரிச்சபடி ‘வாங்க வாங்க’ என்பான். வெத்திலைக் காவி படிந்த பல்லைக் காண்பிக்கமாட்டான். அவன் பல் வெளேரென்று இருக்கும். அவனுக்கு வெத்திலைப் பழக்கம் கிடையாது. சிகரெட்டுத்தான். அதுவும் கடைக்குள் இல்லை. குடி கூத்தி ரங்காட்டம் ரேஸ் வில்வாதி லேகியம் அரசியல் கலை மொழி மதம் என்று எந்தவிதமான பழக்கமும் கிடையாது. அவனுண்டு அவன் கடையுண்டு. யார் வேணுமானாலும்  அவன் கடையில் என்ன வேணுமானாலும் (மளிகை சாமான்கள் மருந்து சாமான்கள் பால் பவுடர் தவிர) வாங்கிக்கொள்ளலாம். ரொக்கந்தான். ரொம்பத் தெரிஞ்ச ஆளானால் கடனுக்குக்கூடக்கிடைக்கும். நாங்கள் போனால் ‘வாங்க வாங்க’ என்று வரவேற்பானே தவிர எங்களை ‘என்ன வேணும்’ என்று கேட்கமாட்டான். வாங்குவதற்கு எங்களிடம் சாதாரணமாய்க் காசு இருக்காது என்பது அவனுக்குத் தெரியும். ஏதாவது வேணுமானால் நாங்களே கேட்டுக்கொள்வோம் என்பதும் அவனுக்குத் தெரியும். பைபிள் படிக்காத போனாலும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வாசகம் அவனுக்குத் தெரியும்.

அன்றைக்கு நாங்கள் போனபோது நடேசன் கண்களில் குறும்பு தாண்டவமாடிக்கொண்டிருந்தது. முகத்தில் ஒரு விஷமப் புன்னகை. தண்ணீர்மேல் எண்ணெய் சிந்தினால் நிற அலைகள் பரவுகிற மாதிரி. நாங்கள் கடைக்குள்ளே  நுழைந்தோம். சிவப்பிரகாசம் மாத்திரம் எச்சிலைச் சாக்கடையில் துப்பிவிட்டு வந்தான். கடைக்குள்ளே துப்பினால் நடேசனுக்குப் பிடிக்காது. எங்களைப் பார்த்தவுடன் சிரிச்சபடி ‘வாங்க வாங்க’ என்று வழக்கப்படி வரவேற்றுவிட்டு நடேசன் குனிந்து மந்திரவாதிபோல மேசைக்கடியிலிருந்து ஒரு பொருளை எடுத்துக்காட்டி ‘இது என்ன சொல்லுங்க பார்ப்பம்’ என்றான். பெருமிதத்தோடு எங்களைப் பார்த்தான்.

அவனுடைய இந்த அசாதரணமான நடவடிக்கையினால் ஒரு கணம் சிந்தனை தடுமாறிப்போன நான் சமாளித்துக்கொண்டு ‘என்ன அது’ என்று கேட்பதற்குள் ரெங்கன் அப்பொருளைக் கை நீட்டி எடுத்தான்.

முதலில் அதில் ஒன்றும் விசேஷமாகத் தெரியவில்லை. சாதரணக் கடைத் தராசென்றுதான் நினைத்தேன். ரெங்கன் அதை எடுத்துத் தூக்கி ‘நிறுத்துப்’ பார்த்ததுந்தான் அது சாதாரணத் தராசல்ல என்பது தெரிந்தது. அதில் ஒரு பக்கம் ஒரு தட்டும் மறு பக்கம் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று தட்டுகளும் இருந்தன. எனக்கு ஒண்ணும் புரியவில்லை.

‘இது என்னன்னு சொல்லிட்டா ஆளுக்கு ரெண்டு ஸ்வீட் தர்ரேன்’ என்று சொல்லி மீண்டும் ஒரு பெருமிதப் புன்னகையை உதிர்த்தான் நடேசன். நானும் சிவப்பிரகாசமும் தெரியவில்லை என்று சொல்லித் தோல்வியை ஒத்துக்கொண்டு விட்டோம். ரெங்கன் மாத்திரம் சிறிது நேரம் அந்த மூணு தட்டுத் தராசைத் திருப்பித்திருப்பிப் பார்த்தபடி யோசனை செய்தான். வயது நாற்பதானாலும் அவனுக்கு இன்னும் ‘ஸ்வீட்’ என்றால் ஆசையோ என்னமோ, கடைசியில் அவனும் ‘என்னா இது, படா ஆச்சரியாமாயிருக்குதே’ என்று பொதுவாக உலகுக்கு அறிவித்துவிட்டுத் தோற்றதுக்கு அடையாளமாகத் தராசைத் திருப்பித் தந்துவிட்டான்.

நடேசனுக்கு ஒரே சந்தோஷம். ‘பரவாயில்லை, தெரியாவிட்டாலும் பரவாயில்லை, எடுத்துக்குங்க’ என்று சொல்லி அருகிலிருந்த பெப்பர்மிட்டு பாட்டிலுக்குள் கைவிட்டுச் சில மிட்டாய்கள் அள்ளி எங்களிடம் நீட்டினான். ரெங்கன் ரெண்டு எடுத்துக்கொள்ள, நானும் ஒண்ணு எடுத்துக்கொண்டேன், மரியாதைக்காக.

சிவப்பிரகாசம் வேண்டாமென்று மறுத்துவிட்டான். அவனுக்கு டயபிடீஸ். சர்க்கரைவியாதி. ஸ்வீட்டும் சாப்பிட மாட்டான், அரிசிச் சாதமும் சாப்பிடமாட்டான்.

‘சும்மா எடுத்துக்கப்பா, இந்த ஸ்வீட்லேயெல்லாம் சர்க்கரையே கிடையாது’ என்று நடேசன் வற்புறுத்தவே ‘என் பங்கை நீயே எடுத்துக்க’ என்று சிவப்பிரகாசம் பிடிவாதமாய் மறுத்துவிட்டான். நடேசன் தன் பங்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. சிவப்பிரகாசத்தின் பங்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. சர்க்கரை இல்லாத ஸ்வீட் பிடிக்காதோ அல்லது ரெண்டு பைசாவைத்தான் வீணடிப்பானேன் என்று சிக்கன புத்தியோ.

மிட்டாய்களை பாட்டிலுக்குள் போட்டபின் நாங்கள் வேண்டிக் கேட்டதன் பேரில் மூணுதட்டுத் தராசின் மர்மத்தை விளக்கினான் நடேசன். ஒரே சமயத்தில் மூணு பேர் கடைக்கு வந்து ஒரே சாமானைக் கேட்டு நெருக்கினால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முறையாக நிறுத்துக் கொடுப்பதற்குப் பதிலாக ஒரே முறையில் நிறுத்து நேரச் செலவையும் சக்திச்செலவையும் குறைக்கும் சாதனமாம் அது. ‘எப்படி நம்ம யோசனை’ என்று பெருமிதத்தோடு கேட்டான்.

நடேசன் கடைவைத்த நாள் முதலாகப் பார்த்திருக்கிறேன். ஒரே சமயத்தில் மூணுபேர் கூடிச் சாமான் உடனே வேணுமென்று ரகளை செய்ததை ஒரு நாள்கூடப் பார்த்ததில்லை. இருந்தாலும் அவனுடைய உற்சாகத்தைக் கெடுப்பானேன் என்று சும்மாவிருந்துவிட்டேன். ரெங்கனுக்குத்தான் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ‘நம்ம நடேசனுக்கா, இவ்வளவு முன்யோசனையா’ என்று தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான். அந்தச் சமயத்தில்தான் அந்த ஆள் கடைக்கு வந்தது.

வந்த ஆசாமி சாமியார் போலவுமில்லை. குடும்பி போலவும் இல்லை. நாற்பது வயசிருக்கும். கரளைகரளையாகக் கட்டுமஸ்தான தேகம். தலைமயிர் கருப்பாக நீண்டு வளர்ந்து பிடரிமேல் புரண்டுகொண்டிருந்தது. அடர்த்தியான புருவம். நெற்றி மேல் கம்பளிப் பூச்சுபோல ஒட்டிக் கொண்டிருந்தது. கண்கள் கருப்பு வைரங்கள் போல ஜ்வலித்தன. முகத்தில் ரெண்டு வாரச் சேமிப்பு. வெறும் உடம்பு. இடுப்பில் ஒரு நாலுமுழத் தட்டுச் சுற்று வேட்டி முழங்கால் தெரிய அள்ளிச் சொருக்கி கட்டியிருந்தது. வேட்டி காவியாயிருந்து வர்ணம் போனதோ அல்லது வெள்ளையாயிருந்து பழுப்பாக மாறிக் கொண்டிருந்ததோ ஆண்டவனுக்கே தெரியும். புஜத்தில் தோளிலிருந்து முழங்கை வரை சுண்ணம்புக் கறை. நெற்றியில் அரை ரூபாய் அளவுக்குக் குங்குமப் பொட்டு.

மத்தாப்பு போலப் பொறி பறக்கும் கண்களுடன் வந்த அந்த ஆள் ‘ஒரு கிலோ பெப்பர்மிட்டுக் குடுங்க, சீக்கிரம்’ என்று அதட்டினான். அவன் குரல் கண்டாமணி மாதிரி ஒலித்தது.

நடேசன் நிதானமாக ‘கிலோ அஞ்சு ரூபாய்’ என்று சொல்லி இருந்தவிடம் விட்டு அசையாமல் நின்று, வந்த ஆளை ஏற இறங்கப் பார்த்தான்.

‘சரி சரி குடுங்க, சீக்கிரம்’ என்று சொன்னபடியே அந்த ஆள் இடுப்பைத் தடவி ஒரு முடிச்சை அவிழ்த்து எட்டாக மடித்து வைத்திருந்த அழுக்கேறிய அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்து மடிப்புக் கலையாமல் நீட்டினான்.

நடேசன் சாவதானமாக நோட்டை வாங்கி மேசை மேல் வைத்துவிட்டு, தராசை எடுத்து மூணுதட்டுகளில் ரெண்டைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு கிலோ படிக்கலைப் போட்டு இன்னொரு தட்டில் பெப்பர்மிட்டுகளை அள்ளிப் போட்டுத் தங்கம் நிறுப்பது மாதிரி நிறுத்துப் பின் பெப்பர்மிட்டுகளைக் காகிதப் பையில்போடப் போகும்போது, ‘பையிலே போடவாணாம், சும்மா அப்படியே காயிதத்துலே வச்சுக் குடுங்க’ என்று சீறினான் அந்த ஆள்.. அவன் கண் பாம்பின் நாக்கு மாதிரி இருந்தது. ஒரு தமிழ்த் தினசரித் துண்டில் அளிக்கப்பட்ட மிட்டாய்களை வாங்கிக்கொண்டு அந்த ஆள் மணிக்கூண்டின் பக்கமாக விடுவிடென்று நடந்தான்.

அவன் என்ன செய்யப் போகிறான் என்ற ஆவலினால் ஈர்க்கப்பட்டு நானும் ரெங்கனும் சிவப்பிரகாசமும் அவனுக்குச் சற்றுப் பின்னால் அவனைத் தொடர்ந்தோம்.

நடேசன் கடையிலிருந்து சுமார் நூற்றைம்பதடி தொலையில் நகராட்சி மணிக்கூண்டு இருக்கிறது. அது வருஷம் தேதி காட்டுவதில்லை. ஆகவே அது நின்று எவ்வளவு நாள் ஆச்சுதென்று தெரியாது. எப்போதும் பனிரெண்டு மணி காட்டிக்கொண்டிருக்கும். விளக்கு வைக்கும் அந்த நேரத்திலும் அது மணி பணிரெண்டு எனக் காட்டிக்கொண்டிருந்தது. எங்கள் ஊர் பஜாரின் நடுநாயகமான மணிக்கூண்டச் சுற்றித்தான் சிறிது வெற்றிடம் இருக்கிறது. சாதாரணமாக நாலுநாலு பேராய்க் கூடிக்கூடிப் பேச வசதியான இடம். சற்றுத் தள்ளிப் போனால் பறவைகளின் எச்ச வீச்சுகளுக்குப் பலியாக நேரும். மணிக்கூடருகே அப்படியில்லை.

மணிக்கூண்டினடியில் இருந்த சிறு மேடையருகில் நின்றுகொண்டு அந்தப் பெப்பர்மிட்டுக்கார ஆள் அருகில் இருந்தவர்கள் கையில் ஓரிரு பெப்பர்மிட்டுகளைத் திணித்தான். அவர்கள் திகைத்தார்கள். ‘சாப்பிடுங்க சாப்பிடுங்க  ஆண்டவன் பிரசாதம்’ என்று சொல்லிக்கொண்டே இன்னும் சில பேர்களுக்கும் நடேசன் கடை மிட்டாய்களை அளித்தான்.

யாரோ ஓர் ஆசாமி மணிக்கூண்டருகே சும்மா ஸ்வீட் விநியோகம் செய்கிறான் என்ற செய்தி எப்படியோ அரை நிமிஷத்துக்குள் பஜார் முழுதும் பரவிவிட்டது. ‘பள்ளத்துட் பாயும் வெள்ளம் போல’ ஜனக்கூட்டம் மணிக்கூண்ட நோக்கிப் பாய்ந்தது. மணிக்கூண்டின் அருகே வந்துவிட்ட நானும் ரெங்கனும் சிவப்பிரகாசமும் முழங்கையாலும், பிருஷ்டத்தாலும் இடித்து உந்தித் தள்ளி நகர்த்தப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டத்தின் வெளிப்புறத்துக்கு வந்துவிட்டோம். சுற்றிலும் மேலே இருந்து கூச்சலிடும் பக்ஷிகளின் சப்தத்தை அமுக்கிக்கொண்டு ‘ஸார் ஸார் மிட்டா ஸார்’ என்ற சப்தந்தான் கேட்டது.

எங்கள் ஊர்வாசிகளுக்கு பெப்பெர்மிட்டு மிட்டாய் என்றால் அவ்வளவு பிரேமை என்று எனக்குத் அது நாள்வரை தெரியவே தெரியாது. கூட்டமே சேராத நடேசன் கடையில்கூடப் பெப்பர்மிட்டு வாங்க ஏதாவது குழந்தைகள்தான் எப்போதாவது வருமேயொழிய இங்கேபோல விழுந்தடித்து ஓடிவந்த பெரியவர்களைக் கண்டதில்லை. வெள்ளைச் சட்டைக்காரர்கள், கம்பிக்கைரை வேட்டிக்காரர்கள், சட்டையேயின்றிச் சாயவேட்டி கட்டினவர்கள், டெரிலின் பனியன்கள், மணிக்கட்டில் கடியாரம் கட்டினவர்கள், கயிறு கட்டினவர்கள், வெள்ளிக் காப்புப் போட்டவர்கள், நரை மீசைகள், வழுக்கைத் தலைகள், முறுக்கு விற்றுக்கொண்டிருத பல்லேயில்லாத கிழவி, அவளது ஏஜண்டான அவள் பேரன், பளபள நைலான் ஜரிகை மினுக்கும் ரவிக்கையுடன் பஜாருக்கு வந்திருந்த கைக்குழந்தைக்காரிகள், குருவிக்காரிகள், பெட்டிகடையில் பீடி சிகரெட் சோடா கலர் வெற்றிலை வாழைப்பழம் புகையிலை வாங்க வந்தவர்கள், இவர்கள் கால்களுக்கிடையே குனிந்து வளைந்து ஓடின நிர்வாணச் சிறுவர் சிறுமியர். கண்ணை மூடித் திறப்பதற்குள் பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது. தேன் கூடுபோல ‘ஞொய்’யென்ற சப்தம்.

பெப்பர்மிட்டுக்காரன் மிட்டாய்கள் தேங்கி நின்ற காகிதத்தை அநுமார்போலத் தலை மட்டத்துக்கு ஏந்திப் பிடித்து மேடைமேல் ஒரே தாவாக ஏறி நின்றான். இவ்வளவு தூரத்திலும் அவன் கண்கள் தணல்போலத் தெரிந்தன. ‘சத்தம் போடக் கூடாது, நான் சொல்றபடி கேட்டால் எல்லாருக்கும் கிடைக்கும்’ என்று உரத்த குரலில் கூவினான். ‘மொல்’லென்று ஒலியெழுப்பிக்கொண்டிருந்த கூட்டம் ஒரு கணத்தில் மௌனமானது. முனிசிபல் விளக்கின் நீல வெளிச்சத்தில் கூட்டத்தின் ஓராயிரம் முகங்களும் மூச்சுவிடுவதைக்கூட நிறுத்தி மோவாயை நிமிர்த்தி அண்ணாந்து அவனை ஆவலுடன் நோகின. அம்முகங்கள் அவ்வொளியில் பச்சையாய் இருந்தன.

‘எல்லாரும் மணிக்கூண்டுப் பெருமாளுக்கு ஒரு பெரிய நமஸ்காரம் போடுங்க’ என்று பெப்பர்மிட்டுச் சாமியாரிடமிருந்து ஆணை பிறந்தது.

ஒரு கணம் உயிரிழந்து பிணமாய் நின்றிருந்த கூட்டம் உலுக்கலுடன் உயிர்பெற்றது. சடசடவெனச் சாய்ந்தது. முன்னாலிருப்பவர்கள் கால் மேல் தலையும் பின்னாலிருப்பவன் முகத்தின் மேலே காலையும் வைத்துக் கூட்டம் சீட்டுக்கட்டு சாய்வது மாதிரி சாய்ந்தது. நான் பன்றி மாடு குதிரைச் சாணத்தின்மீது, எச்சில் மூத்திரக் கறைகளின்மீது, வாழைப்பழத்தோல் காலி சிகரெட் பெட்டி பீடித் துண்டுகள்மீது, தெருப்புழுதிமீது, மல்லாக் கொட்டைத் தோல்மீது, எண்ணற்ற காலடித் தடங்கள்மீது, கண்ணை மூடியபடி, கையைக் கூப்பியபடி, ஆண் பெண் சின்னவன் பெரியவன் காளை கிழவன் பேதமின்றிச் சமதருமமாக, சாஷ்டாங்கமாகத் தன் மீதே ஒருவர் மேல் ஒருவராக விழுந்தது.

‘ஹரிஓம்’ என்று ஒரு கோஷமெழுப்பியபடி அந்தச் சாமியாரல்லாத சாமியார் பெப்பர்மிட்டுக் காகிதத்தைக் கூட்டத்தின் முதுகின்மேல் உதறினான். ஜனக் கூட்டத்தின் மேல் மிட்டாய் மழை.

தரையில் விழுந்து கிடந்த கூட்டம் கலைக்கப்பட்ட தேனடை போலக் கலகலத்துத் தனக்குள்ளேயே பாய்ந்தது. பெருமூச்சும் ஏப்பமும் கலந்த சப்தத்துடன் தன்னை உலுக்கி உதறிக்கொண்டது. சிறுவர்களும் பெரியவர்களும் குமரிகளும் கிழவிகளும் தமிழர்களும் தெலுங்கர்களும் இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் நாஸ்திகர்களும் எல்லாரும் சில்வண்டு போலத் தரையைத் துளைத்தனர். மற்றவர்களை இடித்துத் தள்ளிச் சுரண்டினர். அம்மண்மேல் சிதறிக்கிடந்த மிட்டாய்களை ஆத்திரத்துடன் பொறுக்கினர். பிடுங்கினர் சுவைத்தனர் பிரிந்தனர். மிட்டாய் வீசியவனை நோக்கினர். ஆனால் அவனைக் காணோம். மிட்டாய்க் காகிதத்தை உதறியவுடன் மேடைமீதிருந்து குதித்து மணிக்கூண்டின் பின்னாலாக ஓடிவிட்டிருக்கவேண்டும்.

ஐந்து நிமிஷ நேரத்துக்குள் கூட்டம் சேர்ந்ததுபோலவே கரைந்துவிட்டது. நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குத் திரும்பினோம். வேடிக்கை பார்க்கக் கடைக்கு வெளியே வந்திருந்த நடேசன் கடைக்குள் நுழைந்து எங்களைப் பார்த்துச் சிரித்தான். ‘பார்த்தீங்களா பைத்தியம் போல இருக்குதில்லே, ஆனாலும் அதாலே ஒருத்தருக்கும் நஷ்டமில்லை’ என்று சொல்லிப் பெப்பர்மிட்டு வாங்கியவன் விட்டுப் போயிருந்த ஐந்து ரூபாய்நோட்டின் மடிப்புகளைப் பத்திரமாகப் பிரித்து அதை ஆள்காட்டி விரலாக் ஒருதரம் சுண்டித் தட்டிவிட்டு மேசைக்குள் போட்டான். நாங்கள் ‘ஆமாம் ஆமாம்’ என்றோம். சிவப்பிரகாசம் எச்சில் துப்ப எழுந்து கடைக்கு வெளியே போனான்.

**

சுட்டி : இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘) – பாவண்ணன்

*

நன்றி : க்ரியா, சார்வாகன், சென்ஷி, தாஜ்

சார்வாகன் புகைப்படம் தந்த ‘அழியாச்சுடர்கள்‘ ராமுக்கும் நன்றி

« Older entries