சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (11)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10

அத்தியாயம் 11

ஆபிதீன்

*

20.04.1996

‘எந்திரிச்சி நின்னு மரியாதை செய்யிறது ஒரு வகை. அதைவிட பெரிய மரியாதை என்னாண்டா நான் பேசுறதை கேட்குறது – காது கொடுத்து. இதுக்கு என்னா அர்த்தம்ண்டா நான் பேசும்போதே உங்களுக்கு என்னென்ன நினைப்பு வருதோ அத பேசாதீங்க. இதுக்கு என்னா அர்த்தம்? அதப்பத்தி நெனைக்காதீங்கண்டு அர்த்தம். என் பின்னாலெதான் நீங்க வரனும். எப்படி வரனுமோ அப்படித்தான் வரனும், இல்லே, சைடுலெ வரனும். எப்படி நடக்கச் சொல்றேனோ அப்படி நடக்கனும். அதில்லாம மார்க்கெட்லெ ‘கோலாமீன்’ விக்கிமேண்டு போனீங்கண்டா நான் வெய்ட் பண்ண முடியாது. அப்படி வெய்ட் பண்ணனும்டு சொன்னாக்கா இங்கே வந்து (என் இடத்துலெ) உட்கார்ந்துக்கலாம். நான் கீழே இறங்கி உட்கார்ந்துக்குறேன்.!’

*

‘ஜம்’ :

‘நான் என்னா செய்வேண்டு பார்க்காதீங்க. என்னா செய்யச் சொல்லுவேண்டு நினைச்சீங்கண்டா நான் பேசுன ‘டாக்’ பூரா வர ஆரம்பிக்கிம். என்னா செய்வேண்டு பார்த்தாக்கா என் முகம்தான் ஞாபகம் வரும். நான் உட்கார்ந்திக்கிறது, பேசுறது மட்டும்தான் ஞாபகம் வரும். ஜம்மிலேயே முக்கியமான பாயிண்ட் இது, இதை மிஸ் பண்ணியிக்கிறீங்க. எல்லாரும் அப்படித்தானா?’ – ‘S’

‘சில சமயத்துலெ உங்கள்ட செய்கையை பார்க்குறோம்’ – ஆரிஃப்

‘எது, நான் கொட்டையை சொறிவேனே, அதையா?!’ – ‘S’

*

‘SS’ :

மேலிருந்து பார்க்கும்போது இப்போது Body (Physical) நீளமாக இல்லை. வட்டமாக இருக்கிறது. அதாவது வட்டத்தினுள் ஒரு கிண்ணத்தின் அடிப்பாகம் போன்று வட்டத்தின் அடியில் வளைந்திருக்கிறது. Defencive Wall ‘கில்லா’வில் இருக்கிறது என்கிறார்கள் சர்க்கார்.

‘கில்லா’ண்டா கோட்டை. உங்கள்ட்டெ திரள்ற சக்தி இக்கிது பாத்தீங்களா, Astral Bodyயிலதான் நீங்க இருக்கிறீங்க. அதுதான் நீங்க. ஆனா வாழுறது Physical Bodyதானே..அதுக்கு செலுத்தக்கூடிய சக்திகள் பூரா வெளிலே சிதறிப்போகாமலும், எந்த நெகடிவ் எஃபெக்ட்டும் பூராமலும் ஒரு Defencive Wall.. ஒரு உருண்டைக்குள்ளே – வட்டம் அல்ல- Body இக்கிறதாக. இந்த whole உருண்டையை (Astral Body) சுத்தனும். (Physical) Bodyஐ பாத்துக்கிட்டேதான் சுத்தனும். சுத்தும்போது நீங்க மனசுலெ நெனைச்சுக்கனும், ‘ நம்மட்ட வரக்கூடிய ஃபோர்ஸ் சிதைஞ்சி போவாது, வீணாப் போவாது..எந்த நெகடிவும் நம்மளை பாதிக்காது’ண்டு. மூணுதரம் சுத்தனும். இந்த கோட்டையின் (கில்லா) கலர் Light Blue’ – ‘S’

‘Blue Glassக்குள்ளே Body இக்கிறமாதிரியா?’ – பேராசிரியர்

‘Glass அல்ல. Blue Material.. என்னா materialண்டு சொல்ல முடியாது. light blueண்டா… sky blueண்டு வச்சிக்குங்களேன். merge ஆகும்போது – ஆகிறதுக்கிடையிலெ – இந்த கோட்டை பூரா merge ஆயிடுது, dissolve ஆயிடுது. கலைஞ்சி போனாலும் உள்ளே செலுத்தப்பட்ட ஆத்மிக சக்தி பூராவும் நிக்கிறதாகவும், வெளிலேயும் அந்த சக்தி நிறைஞ்சி நிக்கிறதாகவும் கற்பனை பண்ணிக்கனும்’

*

23.04.1996

மூட்டைப்பூச்சிகளால் சர்க்காரின் கேஸட்டை வாங்கமுடியாமல்போய் , சென்ற வெள்ளி செஷனின் போதுகூட அவர்களின் ‘Auto Suggestion’ கேஸட்டைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். நேற்று பகல் ஜெப்பார்நானாவிடம் கேஸட்டுகள் வாங்கினேன். முந்தாநாள் பகல் சாப்பாட்டுக்கு ‘தேரா’ போய்க்கொண்டிருக்கும்போது டிரேட் செண்டரின் கீழ் உருவாகும் மிகப்பெரிய பாலத்திற்கு – அந்த வெயிலிலும் – இடைவிடாமல் வேலை நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். ஹாங்காங் விரைவில் செத்துவிடும் என்று துபாய் தன்னை சகலத்திற்கும் தயாராக்கிக் கொள்கிறது. இதனால் ஒவ்வொன்றிலும் தாறுமாறாகக் கட்டணம். இனிமேல் ‘அக்காமா’ புதுப்பிக்கும்போது medical cardம் எடுத்தாக வேண்டும் -வருடம் 300 திர்ஹத்திற்கு. ஊர்போக டிக்கெட் பணத்தை யோசித்துக்கொண்டிருந்ததுபோய் ஊருக்கு அனுப்பித்தானாக வேண்டுமா என்று கம்பெனிகள் கேட்கிற காலத்தில் இந்தக் கட்டணத்திற்கு ஒத்துக்கொள்ளுமா? ‘பலுச்சி’யாக இருந்தால் எனது பலுச்சி முதலாளிகள் ஒத்துக்கொள்ளக்கூடும். பிரிட்டிஷ் பாஸ்போர்ட் முயற்சிகளுக்குப் பதிலாக இதையா யோசிக்க முடியும்? இது இருக்கட்டும். நான் அங்கே ஒரு Bedford Tipper மண்ணைச் சரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். தன்னைத் தாங்கும் தளத்திலிருந்து அந்த செவ்வக வடிவம் மேலேபோய் , கொட்டிவிட்டு கீழேவரும்போது இடையில் இருக்கிற – முன்பு வெளித்தெரியாமல் தன்னைக் காட்டிய- கோணத்தைப் பார்த்தேன். ஒரு படுக்கைக்கோட்டிலிருந்து கிளம்பி , பிறகு அதிலேயே அடங்குகிறது. ஒரு கோடு என்பது மடிக்கப்பட்ட விசிறி போன்று, கோளமாகும் நிலவுபோன்று பல கோணங்களை உள்ளடக்கியதா? அத்தனை கோணங்களும் இந்தக் கோட்டில் இருந்திருக்கின்றன முன்பே. கோடு என்பது புள்ளியில் அடங்கியதென்றால் புள்ளி எதனின் இருப்பு? புள்ளிக்கு மனம் உள்ளதா? இது ஒன்றும் பெரிய தத்துவமல்லதான், ஆனால், தோன்றிற்று. குழப்பம் வந்தது. இதுபோல் ஏன் முன்பு பார்க்காமல் இருந்தேன்? எதையும் ஏன் ஊன்றிப்பார்க்கச் சொல்கிறது மனது? இந்த மனமும் எந்தப் புள்ளியின் நிழல்? சர்க்காரிடம்தான் கேட்கவேண்டும். சமயத்தில், தெளிவான யோசனைகளும் உருவாகின்றனதான். வியாபாரம் இப்படி சுருண்டு படுத்துக்கொண்டிருக்கிற நிலையில் ,ஆஃபீஸுக்கு வருடத்திற்கு 1,10,000 திர்ஹம் வாடகை கொடுத்தாக வேண்டியிருக்கிறதே என்று முதலாளிகள் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கையில் ‘ஏன் ஒரு Van-னிலேயே ஆஃபீஸை வைத்துவிடக்கூடாது?’ என்று தோன்றிற்று. அப்படியே நாலைந்து புல்லுகட்டுகளையும், அதன் தரத்தை வெளிக்காட்டவும் வாடிக்கையாளரைக் கவரவும் இரண்டு ஒட்டகத்தையும் , கட்டிக்கொண்டு போனால் வாடகையையும் மிச்சப்படுத்தலாம். விற்பனையும் அதிகமாகும். மொயீன்சாஹிப் கையெடுத்துக் கும்பிட்டார். ‘தயவுசெய்து அலிமம்ஜாரிடம் சொல்லிவிடாதே’ என்று!. மனசு உற்சாகமாகத்தான் இருக்கிறது. தனது மூளையும் யோசிக்கிறதே என்ற சந்தோஷமோ என்னவோ!

*

இன்றுகாலை கனவு. சர்க்கார் இரண்டு ஃபோட்டோக்களைக் காட்டி வரையுமாறு சொல்கிறார்கள். பக்கத்தில் ஒருவர் ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கிறார். அதனுள் நாலைந்து கோட்டோவியங்கள் இருக்கின்றன. எல்லாம் தர்ஹாவின் வெவ்வேறு கோணங்கள். நான் உற்றுப்பார்க்கிறேன். என் பெயர் போட்டிருக்கிறது. நானா வரைந்தேன்? எனக்கு இத்தனை நன்றாகவும் வரைய வருமா என்று தோன்றுகிறது. முதல்நாள் அஸ்மாவுக்காக பெருநாள் வாழ்த்து தயார் செய்யப்போய் நான் எத்தனை தரம் முயற்சித்தும் அது அப்ஸ்ட்ராக்ட்டாக வந்தது. தூரிகை கையோடு ஒத்துழைக்க மறுத்தது. இதைப் பார்த்தால் ‘மச்சானுக்கு பாவம், ஏதோ மனக்கோளாறு போலக்கிது..’ என்றல்லவா அஸ்மா நினைப்பாள்? இந்த ‘திறமை’ மேல் நம்பிக்கை வைத்து சர்க்கார்வேறு ‘Secret Symbol’க்கான Scenary வரையச்சொல்கிறார்களே என்ற நினைப்போடு படுத்தது…

*

24.04.1996

இன்று அஸ்மாவின் 19.04.1996 கடிதம் கிடைத்தது. ஃபோன் லைன் இதுவரை கிடைக்காததற்கு ஆறுதல். கல்யாணத்திற்கு சர்க்கார் போகவில்லை. ஆனால் அதற்குமுன்பு – எத்தனை நாள் முன்பு என்று எழுதவில்லை – வந்தார்களாம்.

‘மாப்பிள்ளை வஹாபி; கழுத்தில் நூல் போடக்கூடாதாம். சர்க்கார், சேத்தபொண்ணு கழுத்தில் போட்டு இருந்த நூலை அறுத்து தூக்கிப்போட்டு விட்டார்கள். இப்படி இருக்கிறார் என்று சர்க்காரைப் பற்றி யாரும் அவரிடம் பேசுவது கிடையாது. சர்க்காரிடம் சொன்னேன். அவர் குணப்படியே சேத்தபொண்ணை நடந்துகொள்ளச் சொல், நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்னார்கள். தாயத்தை அறுத்துப் போட்டதற்காக ஒரு மோதிரம் ஓதிக்கொடுத்தார்கள். சேத்தபொண்ணு கையிலேயே போட்டுக்கொள்ளும்படி. கல்யாணத்தன்று அந்த கும்பகரத்தூர்காரன் இங்கேயே சுற்றிக்கொண்டு இருந்தானாம். நம் பிள்ளைகள் எல்லோரும் உஷாராக இருந்தார்கள். யாரோ ஒருவன் கையில் அவன் லெட்டர், சேத்தபொண்ணின் லெட்டர், சேத்தபொண்ணின் ஃபோட்டோ எல்லாம் ஒரு கவரில் போட்டு முத்துவாப்பாவுக்கு அனுப்பிவைத்து விட்டான். சர்க்காரிடம் சொன்னதற்கு லெட்டரைக் கிழித்துப் போட்டுவிடச் சொன்னார்கள். சேத்தபொண்ணின் ஃபோட்டோ ரெண்டு அவனிடம் இருந்திருக்கிறது. சர்க்காரிடம் காட்டினேன். ஒரு ஃபோட்டோவை அவர்கள் கையினாலேயே கிழித்துவிட்டு விட்டார்கள். ஒரு ஃபோட்டோவை வீட்டில் வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டார்கள்.

மகனார் அனீஸின் பயங்கரமான வாயையும் எழுதியிருந்தாள் : சேத்தபொண்ணுவை அவள் மாமியார் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடவும் அனீஸிடம் சித்திமா எங்கே என்று கேட்டேன். ‘எவனோ கூட்டிக்கிட்டு போய்ட்டான் என்கிறான்!

*

சர்க்காரின் மருமகன் தாவுதுகுட்டியின் கடிதமும் இன்றுதான் கிடைத்தது. அவர் சிங்கப்பூர் போகிறார் சம்பாதிக்க. மூச்சுக்கு நூறுதரம் ‘தாவுதுகுட்டி’ என்று உதவிக்கு கூப்பிடும் சர்க்காருக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். யூனுஸ் சாபு உதவுவார்தான். ஆனால் வெளியூரிலுள்ள ஹத்தம், பாத்திஹாக்களுக்கு ஓடிவிடுவார். அவைகளும் தினமும் நடக்காமலில்லை. ‘உங்களின் புதிய சஹலப்பாடி 8 ரக்காயத். இஸ்லாம் எனும் கடலில் இப்போதுதான் காலை வைத்துள்ளார். போகப்போக சரியாக வந்துவிடுவார். அதைப்பற்றி ஒன்றும் பிரச்சனையில்லை. மாமா, விதவிதமாக சில வேலைகள் செய்து கல்யாணம் நல்லபடி நடக்க ஏற்பாடு செய்தார்கள். மாமாவின் துஆ பரக்கத்தைக்கொண்டு எதுவும் நடைபெறவில்லை. எதுவும் பிரச்சனை வராது என்று மாமா சபதம் போட்டுச் சொன்னார்கள். உங்களின் மாமியார் வீடு உங்களுக்கும் மாமாவுக்கும் எப்படி நன்றிக்கடன் செலுத்துவார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்காகத்தான் இவ்வளவும் மாமா செய்தது கொடுத்தார்கள். இதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளவும்’

இவரும் அனீஸ் பற்றி எழுதியிருந்தார் – ‘உங்கள் மகன் அனீஸ் நல்லா பேசுகிறார். உங்களைப்போலவே ஒவ்வொரு வார்த்தையும் ஆணி அடித்தாற்போல பேசுகிறார்’.

பேசுவான்தான். போனமுறை அவனுடன் ·போனில் பேசும்போது ‘வாப்பவ கண்ணு தேடுதா?’ என்று பாசத்துடன் கேட்டேன். ‘தேடலே. கண்ணு நல்லா இக்கிது’ என்றானே பார்க்கலாம். சுள்ளாணி!

*

Astral Body பற்றிய Xerox-ம் அனுப்பியிருந்தார். சர்க்காரிடமுள்ள பல பொக்கிஷங்களில் ஒன்றிலிருந்து பத்து பக்கம். OD HAMS PRESS வெளியிட்டது. PSYCHOLOGY – The Study of Man’s Mind என்கிற புத்தகம். An introduction to the study of the Natue, Structure and function of the mind and or the Influence of Environment on behavior, together with a brief survey of…

*

06-13.10.95 கேஸட்டிலிருந்து :

‘பெரிய மனராலேர்ந்து சாய்மனாரா வரைக்கும் (உச்சிகளை இணைத்து) ஒரு பலகை போட்டுத்தர்றேன். காத்து அடிக்காத அளவுக்கு டிஃபென்ஸ் பண்ணித் தர்றேன். ஆனா திறந்த வெளி.. ‘ஜாலிலோ ஜிம்கானா’ண்டு பாட்டு படிச்சிக்கிட்டு நடக்கனும் அதுலெ. நடக்க முடியுமா? ‘ சர்க்காரின் கேள்வி.

‘பைத்தியமா எங்களுக்கு?!’ – ரவூஃப். அவன் புத்திசாலிதான். அவன் ஏற்கனவே – இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சர்க்கார் பேசிய – கேஸட்டில் இதைக் கேட்டிருக்கிறான். ஆனாலும் இப்படிச் சொல்வதில் ஒரு கண்ணியமான விளையாட்டு இருக்கிறது. சர்க்காரும் விளையாடுகிறார்கள் கொஞ்சம்..

‘பைத்தியமா! ஏன்?’

‘வுளுந்துடுவோமே..’

‘அல்ல. நம்மளை கெடுக்குறது பூரா இந்த எண்ணம்தான்’ . விளையாட்டு முடிகிறது. இப்போது சர்க்கார் ‘இதுக்கு similarity’ சொல்லு பாப்போம்’ என்று கேட்கிறார்கள். ‘பேசுறது பூரா லைஃபுக்கு சம்பந்தப்பட்டதா இருக்கனும். வேதாந்தம்லாம் பேசக்கூடாது. இதே மாதிரிதான் இதுண்டு சொல்லு ஒண்ணு..’

ஒரு சீடரின் பதில் : ‘நெகடிவிட்டி பூந்துடுது’

‘இப்படி சொன்னாக்கா.. ‘மாவுலெ பல சாமான் செய்யலாம்’டு சொல்றமாதிரி! என்ன சாமான் செய்யப்போறீங்க? முட்டைப்பனியானா, இஞ்சிக்கொத்தா, தம்ருட்டா? என்னாங்க சொல்றீங்க?’

சில similarities சொல்கிறார்கள் சீடர்கள். மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடித்துவிடும் என்பது..இரவில் தனியே போனால் பேய் பிடித்துவிடும் என்பது. சர்க்காருக்கு ஒரு பதில் பிடிக்கிறது: ‘பிசினஸ் பண்ணினால் நஷ்டம் வரும்டு நெனைக்கிறது’. ‘Very Good’. சீடருக்கு நல்ல பனியான் கிடைத்த திருப்தி. ‘இன்னும் கொஞ்சம் ‘டீப்’பா போங்க’ – ‘S’

‘Businessலெ கடன் வாங்குனா திருப்பிக் கொடுக்க முடியாதோங்கிற பயம் வர்றது’

‘அட, ரொம்ப நல்லா சொல்றீங்களே.. இதுக்கு என்னா கொடுக்குறது.ம்… டைகர்பாம் இக்கிது. நாக்குல தடவி வுட்டுடவா?! Very Goodண்டு!’

*

கடன் வாங்கும்போது உள்ள மனப்பான்மை:

‘சொந்தப்பணத்தை பேங்க்லெ எடுக்குற மாதிரி கடன் வாங்கனும். கடன் கேட்குறதும் அப்படித்தான். அப்படி கேட்குறதுக்கு ஆளில்லையா? கேட்காதீங்க. பணம் வாங்கிட்டோமேண்டு சங்கடப்படக்கூடாது. அதனாலெ ,கடன் வாங்கச் சொல்லலே! இந்த மனப்பான்மை இருந்தா திருப்பிக் கொடுத்துடலாம். Once நாம கொடுத்த பொறவு கடன் வராது, வரவே வராது’

*

‘சுவத்துலெ விழுற நிழல் பல அமைப்புல இருக்கலாம். வட்டையா, நீட்டமா, உருண்டையா.. ஈச்சங்கொட்டை பனியான் மாதிரி..ஆனால் லைட்டை அணைச்சிட்டா எல்லா நிழலும் பொய்டும். (இந்த உதாரணங்கள்) ஒண்ணுக்கொண்ணு சம்பந்தப்படாததா தோணும் , பாக்குறதுக்கு. மனுசன்ற டைப்பும் அப்படித்தான். நீங்க ஒரு individual Personality. கொஞ்சம் ‘டீப்’-ஆ இறங்குனீங்கண்டு சொன்னாக்கா allied mind பூரா ஒரே mindஆ ஆயிடும். இன்னும் ‘டீப்’பா இறங்குனாக்கா ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்யாஸம் தெரியாது. பாம்புக்கும் தவளைக்கும் வித்யாஸம் தெரியாது. மரத்துக்கும் மனுசனுக்கும் வித்யாஸம் தெரியாது – எறங்கிப் பார்த்தா!’

‘நீங்க ரியாலத் பண்ணுங்க, எல்லாம் சரியா வரும்டு சொல்லியிக்கிறேன். நீங்களும் ஒத்துழைக்கனும்.. நீங்கதான் உண்மையைச் சொல்லனும், நான் பொய்தான் சொல்வேன்! எது செரிக்கிமோ அதுதான் கொடுப்பேன். மாட்டுக்கறி நீங்க கேட்டா கொடுக்க மாட்டேன். மூணு வயசுதான் உங்களுக்கு. அமுல்ஸ்ப்ரேதான் கொடுப்பேன். நான் திம்பேன் , அது வேற! கொடுக்கலையே மாமாண்டு நீங்க கேக்கக்கூடாது. எனக்குத் தெரியும் எப்ப கொடுக்கனும்டு. கடல்லெ உள்ள மீனு சொன்னிச்சாம், ‘கடலாவது கத்தரிக்காயாவது! எல்லாம் இந்த மனுசப்பயலுவ பண்ணுற வேலை- நம்மளை புடிக்கிறதுக்காக. நாம காலம்பூராவும் இங்கெதானே இக்கிறோம், கேள்விப்பட்டதேயில்லையே ‘கடல்’ண்டு!’

**

ஹஜ்ஜுப்பெருநாள் விடுமுறையில் ‘தேரா’வில் வாங்கிய அழுக்குகளைக் களைய விடுமுறையின் கடைசி தினமான இன்று அறையில் உட்காருகிறேன். ‘தேரா’வில் அழுக்குகள் மட்டும் கிடைக்கவில்லை, சுத்தப்படுத்தும் அருள்நிறைந்த பொருட்களும் , விஷயங்களும் கிடைத்தனதான். 28ஆம் தேதி இரவு சர்க்காருக்கு ஃபோன் செய்தேன். லைன் கிடைத்தது. மணி அடித்துக்கொண்டேயிருந்தது. யாரும் எடுக்கவில்லை. சரியான எண்தானா? மீண்டும் இரண்டு முறை முயற்சித்தேன். அதே மணியோசை. சர்க்காருக்கு உடல்நிலை சரியில்லையா? மருமகன் தாவுதுகுட்டி சிங்கப்பூர் போய்விட்டதால் உதவிக்கும் யாருமில்லையா? யாரேனும் இருப்பார்களே… அடுத்து அஸ்மாவுக்கு முயற்சித்தேன். ‘என்னா புள்ளே..சர்க்கார் வீட்டுலெ யாருமில்லையா? மணி அடிச்சிக்கிட்டே இக்கிது..யாரும் எடுக்கலையே’

‘இன்னக்கி புர்தாஷரீஃப் மச்சான்!’

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. (ஒவ்வொரு வாரமும்) ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கும் புர்தாஷரீஃபில் நான் இதுவரை கலந்துகொள்ளவில்லையென்றாலும் செஷனுக்கு இணையாக – வெளிவட்ட சீடர்களுக்காக – நடக்கும் ஒன்றான அதை, அதன் ஒழுங்குகளை அறிந்திருக்கிறேன். அஸ்மாவும்கூட அந்த சமயத்தில் டேப்பை ஓடவிட்டு வீட்டில் அமைதியாக அரைமணிநேரம் உட்கார்ந்திருப்பாள்தான்.

‘ஒங்ககிட்டேர்ந்து ஃபோன் வந்திச்சிண்டுதான் வுட்டுட்டு பாதியிலெ வந்தேன்’ என்றாள்

நான் சமாளித்தேன். ‘அதான் எட்டரைக்குள்ளே முடிஞ்சிடுமே’

‘நீங்க ஊர்லெ இக்கிம்போதுதான் டைம்-ஐ மாத்திப்புட்டாஹலே சர்க்கார். எட்டரையிலேர்ந்து ஒன்பது வரைக்கும் இப்போ. தெரியுதா?’

எனக்கு முகத்தில் அறைந்தாற்போல இருந்தது. ஊர் டைம் ஒன்பதரை மணிக்கு மறுபடியும் சர்க்காரைத் தொடர்பு கொண்டேன். ‘இன்னக்கி தப்பு பண்ணிட்டேன் சர்க்கார். புர்தாஷரீஃப் நடக்குற நேரத்துலெ ரெண்டுதடவை ஃபோன் பண்ணிட்டேன்’

‘நீங்கதானா அது?’ – சர்க்கார் கோபப்படுகிறார்களோ?

‘மன்னிச்சுக்குங்க சர்க்கார். எட்டரை மணிக்கு முடிஞ்சிருக்குமேண்டு பண்ணிட்டேன்’

‘பரவாயில்லெ. என்னா செய்தி?’

‘இன்னக்கி இங்கெ பெருநாள். ஆசி வாங்கலாம்டுதான் ஃபோன் பண்ணினேன்’

‘அப்படியா? பரக்கத்தா இரிங்க. பயிற்சிலாம் பண்ணிக்கிட்டே வர்றீங்கள்ளே?’

‘பண்ணிட்டு வர்றென் சர்க்கார். அப்புறம், எனக்கு அடுத்த ஸ்டேஜ் கொடுக்கனும். திரும்பி வந்து கலக்கும்போது 40 அடி மேல் போய் கில்லாவில் உள்ள physical Bodyஐ பாத்துக்கிட்டே சுற்றி கீழே பாக்குறதுக்கு உங்க உத்தரவு வேணும்’

‘பண்ணுங்க. ஆனா உணர்ந்து பண்ணுங்க’

உத்தரவு கிடைத்த சந்தோஷம். கல்யாணம் அவர்களால்தான் நடந்தேறியது என்று நன்றி சொன்னேன், மேலும் அவர்களை பார்த்துக்கொள்ளச் சொன்னேன். மாப்பிள்ளை ‘எட்டு’ஆக இருப்பதால் வீட்டில் சர்க்காரின் புர்தாஷரீப் கேஸட்கூட வேணாம் என்று சொல்லிவிடப்போகிறார்! கைக்கூலி வேண்டாம், கலர் டிவி வேண்டாம், நகைகள் வேண்டாம் என்று சொல்லவில்லையென்றாலும் இதை மட்டும் ‘நஜாத்’ மாப்பிள்ளை சொல்வாரே.. ஓ, இதெல்லாம் பெற்றோர்களின் ஹிக்மத் !

மாப்பிள்ளை , சர்க்கார் கேஸட்டை வீட்டில் போடக்கூடாது என்று இப்போது சொல்ல முடியாததுதான். கூடத்தில் டேப்ரிகார்டு போடலாம்! கூடம் இப்போது அவருக்கு சொந்தமில்லை. பூவூர்மாமா கடைசி நேரத்தில் வீடு விஷயம் ‘கடிதப்பத்திர’த்தில் எழுதப்பட்டேயாக வேண்டும் என்று – என் பெற்றோர்கள் போல் முட்டாள்களாக இல்லாமல் ? – நின்று சாதித்து விட்டார். சிதைத்தும் விட்டார். மொத்த வீட்டையும் கிழக்கு பார்த்தவாறு சரிபாதியாக – வாசல் பாதையை வாகாக விட்டுவிட்டு – இரண்டாகப் பிரித்திருந்தால் தனியாக இரு வீடுகட்டும் சாத்தியம் இருந்தது. அப்படித்தான் முடிவு பண்ணும் நாளன்று முத்துவாப்பா சொன்னபோது சரிகண்டார். இப்போது என்னாயிற்று? ஒற்றுமையைக் கட்டிக்காக்கலாம் என்றா? யாரின் ஒற்றுமை? இப்போதும்கூட அஸ்மாவின் பங்கு எழுதப்படவில்லை. வெற்றிகரமான 8வது வருட நாமம். சேத்தபொண்ணுக்கு எழுதப்பட்டது போக மீதமுள்ளது மூத்த மகளான அஸ்மாவுக்காகத்தான் இருக்கும் என்று ஒரு ஹேஸ்யம். அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் நாக்கூர் பிடித்துப்போனால அப்புறம் வம்பு. சே..சே.. அதெல்லாம் அண்ணன்கள் செய்யமாட்டார்கள். நாகரீக தேவதைகள் பிறந்த மண்ணில் இருக்கிறார்களாக்கும் அவர்கள்..

அஸ்மாவின் 19.04.1996 கடிதம்:

‘வீடு பிரிக்கும் விசயத்தில் ரொம்ப தகராறு செய்துவிட்டார்கள் மாப்பிள்ளை வீட்டில். மூத்தபெண்ணுக்குத்தான் வீடு எழுதவில்லையே, எங்களுக்கு கூடம், கூடத்து அறை என்று முன் பக்கத்தை எழுதிவிடுங்கள், மற்ற பாகத்தை உங்கள் மூத்த பெண்ணுக்கு எழுதிவிடுங்கள் என்று. ஆனால் முத்துவாப்பா விட்டுக்கொடுக்கவில்லை. நான் மச்சானுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். மச்சானுக்கு ரொம்ப பிடித்தமானது கூடத்து ரூம். அதனால் கூடத்து ரூம், கூடம், கூடத்தைச் சேர்ந்த தாழ்வாரம், வாசல் சிட்-அவுட் நமக்கு என்று சொல்லிவிட்டது. மற்றபடி வாசல் நடைபாதை, முற்றம், பாத்ரூம், சமையற்கட்டு, கொல்லை, மரங்கள், கிணறு பொது என்று எழுதிவிட்டது. சேத்தபொண்ணுவிற்கு தாழ்வார ரூம், கூடத்து சின்னரூம், இருபக்கத் தாழ்வாரம், ஸ்டோர்ரூம் என்று எழுதிவிட்டது. மற்றபடி எல்லாம் பொது. இந்த விஷயத்தில் சேத்தப்பாவுக்கு ரொம்ப கஷ்டம். உங்களுக்கு எல்லாம் விபரமாக எழுதும்’

*

அஸ்மா தன்னிடமுள்ள நகைகளின் பட்டியலையும் எழுதியிருந்தாள். நான் ரொம்பநாளாக கேட்டுக் கொண்டேயிருக்கிறேன், நம்மிடம் என்னதான் இருக்கிறது, ஒன்றுக்கும் உதவாத அரைவேலி நிலம் அயலூரில் இருக்கிறது. அப்புறம் என் வாப்பாவின் தோட்டத்திலிருந்து சொத்தில் ஒரு பங்கு கிடைக்கும். பிள்ளைகளின் இன்சூரன்ஸ் பணம் போட்டுக்கொண்டு வருகிறோம். IB, IOB, UBI பேங்குகளில் மொத்தமாக 7ரூ 48 காசு இருக்கிறது. அப்புறம்? அவள் நேரமில்லை என்று எழுத நழுவிக்கொண்டே வந்தாள். 527 பவுன் பவுன்களை ரகவாரியாக பிரிப்பதென்றால் சும்மாவா?! 8 வருடத்திற்குப் பிறகு கணக்கு இப்போது வருகிறது.

‘எனக்கு வீட்டில் போட்ட நகைகள் 25 பவுன். நெக்லஸ் 5 பவுன் (கல் உள்ளது). தொங்கல், மாட்டல் 5 பவுன் (கல்), கைப்பட்டை 5 பவுன். வளையல் 6 பவுன். மோதிரம் முக்கால் பவுன் (கல்), நெற்றிச்சுட்டி 2 பவுன் (கல்), கருகமணி 2 பவுன். உங்கள் வீட்டில் தாலிகட்டியது 10 பவுன் டாலர். கட்டிலேறும் பவுன் – உங்கள் வீட்டில் கொடுத்தது ஒரு பவுன் (தலைப்பில் கல் உள்ளது), மோதிரம் அரை பவுன் (கல்). நீங்கள் கொண்டுவந்தது கைச்செயின் 2 பவுன். அஸ்ரா கைச்செயின் 1 பவுன். நெற்றிச்சுட்டி ஒரு பவுன். கழுத்து செயின் ஒன்றரை பவுன். காசு ஒரு பவுன். அவ்வளவுதான். திருப்திதானே?’

பத்துவருட சம்பாத்தியத்தில் ஆறரை பவுன் கொண்டுபோயிருக்கிறேன். கண்டிப்பாக நான் வீடு கட்ட முடியும். யாராவது அந்த தென்னை ஓலைகளைக் கொண்டு வாருங்கள்!

*

30.04.1996

கேஸட் தொடர்ச்சி.

‘எண்ண ஒட்டம் எப்படி ஓடுதோ அந்த எண்ண ஓட்டத்தை மாறுபட்டமாதிரி ஓட்டப் பழகனும். அப்படீண்டா உட்கார்ந்து உட்கார்ந்து ஓட்டி ஓட்டிப் பழகனும். இத ‘ஜம்’லெ யூஸ் பண்ணிக்கலாம். ஒரு சாமானை எடுத்துக்குங்க. உதாரணமா இந்த லைட்டர். இத ஒரு வருஷமா வச்சிரிக்கீங்க நீங்க..இன்னக்கி புதுசா அதுல எதையாவது ஒண்ணை கண்டுபிடிக்கனும். தீக்குச்சியிலேயே கண்டு புடிக்கலாம். சரி, நெருப்புக்குச்சியை கொளுத்தியிருக்கீங்களா? அது எப்படி எரியும்?’

‘light blueவா’

‘மத்தாப்பைச் சொல்லலே, நெருப்புக்குச்சியைச் சொல்றேன்!. blueவாகவும் வரும், பச்சையாகவும் வரும். பச்சை, லைட்புளூ அப்புறம் சிவப்பு ஆரம்பிக்கும். இத எப்படிக் கவனிச்சீங்க?!’

‘சொல்லியிக்கிறீங்க ஏற்கனவே’

‘சொன்னதுதானா! அதான்.. ஒண்ணாச்சும் நீங்க (புதுசா) சொல்லிடாதீங்க, எல்லாம் நானே சொல்றேன்! நான் சொல்லியிக்கிறேன், மக்-அப் பண்ணி பாஸ் பண்ணுறது பாஸ் பண்ணுறதல்லண்டு. கருத்தை எடுத்து வச்சி நீங்க சொல்லனும்’ – ‘S’

*

‘மனசை ‘ரியாலத்’துதான் பண்ணுறோமேண்டு (சும்மா) வுட்டீங்கண்டு சொன்னா வெத்து மனசுல விஷ வித்துகள்லாம் வளர ஆரம்பிச்சிடும். எனவே ரியாலத் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மத்த நேரங்கள்லெ அதை மறக்குறது. எவ்வளவு ரியாலத் முக்கியமோ அதே முக்கியம் இந்த சிந்தனையை உங்களுக்குள்ளே தோண்டிப்பாக்குறது. ‘·பிக்ரு க ஃபீக் யக் ஃபிக்’. உன்னை உற்றுப்பார், அது உனக்குப் போதும். உற்றுப்பார்த்தீங்கண்டு சொன்னா Minute Things எல்லாம் தானாகவே புரியும். நீங்களா தேடவேண்டிய அவசியம் இல்லை. எப்படி? அடுத்தவூட்டு பேச்சு, எதிர்த்தவூட்டு பேச்சு டேப் ரிகார்டர்லெ கேட்குறமாதிரி பதியும். அது பதிஞ்சதோடு மட்டுமில்லாம லைஃப் பூரா link பண்ணிக்கிட்டே போய்க்கிட்டிருக்கும். Life & Knowledge must be organized, not to be static, கோர்க்கப்பட்டதா இக்கினும். Walking encyclopediaவா இக்கிறதனாலே எந்த லாபமும் கிடையாது. பேர் பெத்துக்கலாம், அறிவாளிண்டு. ஆனா நாக்கு ஒட்டும் பிசுபிசுப்புல – டீ இல்லாம. யாருக்கும் லாபம் கிடையாது. சில நேரங்கள்லெ கோர்வை உங்களுக்குப் புரியாது. link தெரியாது. அது வேற இது வேறேண்டு நெனைச்சிக்கிட்டீப்பீங்க. ரெண்டும் சேர்ந்துதான் இக்கிது. அதுதான் உதாரணம் சொன்னேன் – நிழல் உண்டாறது பத்தி. வெளங்கிட்டிங்களா?’

‘எண்ணுறதுதான் நடக்குது.. எண்ணி நடக்கலேண்டா எண்ணுன முறையிலே ஏதோ தப்பு இக்கிது. எண்ணாதது நடக்குதுண்டு சொன்னாக்கா நமக்குத் தெரியாமல் fraction of second நாம எண்ணிட்டோம். எண்ணிட்டோம்டு சொன்னாவே பவர்-ஐ சப்ளை பண்ணியாச்சுண்டு அர்த்தம்

EEG (Electroencephalogram) : நாலு மாதிரியான waves இருக்கு. நாம வாழுறது betaலெதான் வாழ்ந்துக்கிட்டிக்கிறோம். betaண்டா தலைப்பாகை அல்ல. பி.இ.டி.ஏ! ஆனா நியாயப்படி அல்ஃபாதான் ஃபர்ஸ்ட் வரனும். அலீஃப், பெ, தே (அரபு அட்சர வரிசை) இல்லையா?! என்னமோ தெரியலே, மாத்தி வச்சிக்கிறானுவ. இதைவிட superior(Alphaவை விட) தேட்டா. அப்புறம் டெல்டா. அதாவது Normal Lifeலெ வாழுறது 16 frequency உள்ளது. 7லெ Alpha ஃபார்ம் ஆகும். 4லெ தேட்டா ஃபார்ம் ஆகும். டெல்டாக்கு principleஏ கிடையாது. டெல்டா வேவ்லெ நீங்க இருந்தீங்கண்டு சொன்னா, இரும்பை கண்ணாலெ பார்த்து வளைண்டு சொன்னா வளைஞ்சிடும்!’ – ‘S’

*

Magician ஒருவனைப்பற்றிச் சொல்கிறார்கள். P.C. Sarkkaar? அவன் செய்த சில காரியங்கள் delta waveலெ செய்த காரியங்கள் என்கிறார்கள். ‘நீங்க வேடிக்கை காமிச்சிக்கிட்டு கொட்டடிச்சிக்கிட்டு எல்லாரும் கைதட்டுங்கண்டு சொல்லுங்கண்டு சொல்லலே. உங்க பவர்-ஐ புரிஞ்சிக்குங்க. எப்பவுமே நீங்க alpha waveலெதான் இருக்கனும். Thetaவும் Deltaவும் தானா வந்து போவும். ‘வஹி’ வர்ற ஸ்டேஜ் : Delta’ – ‘S’

‘நெருப்போட சூடு 600 டிகிரி. இது 6000க்கு மேலேபோனா ஒரு sound வரும் – ஸ்ஸ்ஸ்ண்டு. 80000த்திலேர்ந்து ஒருலட்சத்துக்குள்ளெ frequency இருந்தா அது கண்ணுக்கே புரியாது. radioலாம் இதுதான். ஒன்றரை லட்சத்துலேர்ந்து மூணு லட்சத்துக்குள்ளே இக்கிற frequency இக்கிது பாத்தீங்களா? இதுதான் ‘வஹி’ வர்றது. இதுலேர்ந்து ஒரு கோடிக்குள்ளே என்னென்னமோ இக்கிது. இந்த அளவுக்கு உங்களை டெவலப் பண்ண முடிஞ்சா விரலை அசைச்சா அண்ட சராசரமே அசையுதுங்கிற உண்மை புரியும். ஒத்தவன் சொன்னான். ‘எனக்கு ஆத்திரம். இங்கே ஒரே குத்து. சிங்கப்பூர்லெ உள்ளவன் வுழுவனும்டு. அல்லது இங்கே வுடுற குத்து சிங்கப்பூர்லெ இறங்கனும்டு. அது செய்யலாம். இது செய்யனுமா?! அது ரெண்டாவது. இவ்வளவு பெரிய ஃபோர்ஸ் உள்ள நீங்க நெகடிவ் auto suggestionஐ ஃபார்ம் பண்ணிக்கிட்டு அவதிப்படனும்ங்கிற அவசியம் இல்லே. நெகடிவ் auto suggestionண்டா என்னாண்டு கேட்டாக்கா நீங்க நெனைக்கிறதுதான். நினைக்காதது நடக்குதேண்டு கேட்ட நீங்க நெனைச்சதை மறந்துடுறீங்க. அதனாலே.. Memory Power டெவலப் ஆகனும். இப்ப இது ஆபிதீனுக்கு உபயோகமா இக்கிம். மெமரி பவர் டெவலப் பண்ணுறது ரொம்ப ஈஸி…’

*

03.05.1996 வெள்ளி செஷன் முடிந்து,
06-13.10.95 கேஸட்டின் தொடர்ச்சி:

‘மெமரி பவர் ரொம்ப வீக்கா இக்கிதுப்பா’ என்று ரவூஃபிடம் அன்று காலை சொல்லியிருந்தேன். அவன் மறக்காமல் சர்க்காரிடம் சொல்லியிருப்பான் போலும். ஆபிதீனுக்கு மெமரி பவர் டெவலப் ஆக:

‘முதல்லெ நம்ம மெமரி பவர் ‘வீக்’குண்டு யார்ட்டெயும் சொல்லக்கூடாது! எண்ணம் வரும்போதுலாம் தட்டிவிடனும். we can develop it-ண்டு நம்பனும். இல்லே, சொல்லனும் வாயாலெ. நைட்லெ படுக்கும்போது காலையிலேர்ந்து ராவு வரைக்கிம் என்னான்னா பண்ணுனோம் – with associated emotions & feelings – நெனைச்சிப் பாக்கனும். பிரஷ் பண்ணும்போது ஞாபகம் வந்தது, தோசை திங்கிம்போது எண்ணுனது, நடந்தது..ண்டு gradualஆ ஒவ்வொண்ணா நெனைச்சிக்கிட்டே வாங்க. இப்படி எண்ணிப் பார்த்தீங்கண்டா காலையிலே எட்டுலேர்ந்து பத்து மணி வரைக்கிம் மெதுவா ஞாபகப்படுத்தும்போதே தூக்கம் வந்துடும். தூங்கிடுவீங்க. தூங்கும்போது நெனைச்ச நெனைப்பு முழிக்கும்போது என்னக்கி வருதோ ஃபோட்டோக்ராஃபிக் மெமரி வந்துடுச்சீண்டு அர்த்தம். இத முதல்லெ செய்யுங்க. அடுத்த ஸ்டேஜ் அப்புறம் சொல்றேன்!’
**

நினைத்த இடத்தில் அரிப்பை ஏற்படுத்தச் சொல்கிறார்கள். ‘மலத்துவாரத்துக்கும் கொட்டைக்கும் இடையிலெ அரிக்கிதா? ‘வேணாம். நெஞ்சிலே அரிண்டு சொல்லுங்க அரிக்கும்!. இப்ப 3 எண்ணுவேன், நின்னுடு’ண்டு சொன்னா நிண்டுடும். அந்த capacity வந்தா மேப்-ஐ வச்சிப் பார்த்து மேப்-ஐயே ஸ்கேன் பண்ணிடலாம்’.

ஊசி ஒன்றால் மேப்-ஐ தடவிக்கொண்டே வந்து , விரும்பிய இடத்தில் (இன்னது நடக்கவேண்டும் என்ற நினைப்புடன்) ஒரு குத்து; பூகம்பமோ புரட்சியோ..! எனக்கு கேட்கவே பயமாக இருந்தது. இந்தமாதிரி பயிற்சிகள் எல்லாம் இல்லாமல் எல்லா சீடர்களையும் நினைத்து ஊசியால் ஒரு குத்து சர்க்கார் குத்தினால் வேலை சுலபமாகிவிடுமே! ‘இதெல்லாம் நீங்க (மத்தஹலுக்கு) ஓதிப்பாக்குற காலத்துலெ பாத்துக்கலாம். இப்ப லைஃபுக்கு தேவையான சாமான் எது? உங்கள்ட்டெ எவ்வளவு சக்தி இக்கிது, அத யூஸ் பண்ணாம இக்கிறீங்கண்டு சொல்ல வர்றேன். ஆனா auto suggestion இல்லாம யாரும் கரை சேர முடியாது. சிலபேர் அந்த suggestionஐ பெற்றோர்கள் மூலமா பெத்து வந்திருக்காங்க. அவங்களுக்கு பெயர் தெரியாது. நாம வச்சதுதானே அது? இப்படி வைக்கலாம்- Auto Hypnosis, Self Hypnosis, Self Suggestion, தனக்குத்தானே பேசுறது, கருத்தேற்றம்… , அதே அர்த்தம்தான்! Auto Suggestionஐ படுத்துக்கிட்டுத்தான் செய்யனும்டு இல்லே. உட்கார்ந்த நிலையிலேயே எந்த second வேண்டுமானாலும் உண்டு பண்ணிடலாம் – Alpha Waveஐ உண்டாக்கத் தெரிஞ்சிக்கிட்டா’ – ‘S’

சிகரெட்டை நிறுத்துவதற்கு Auto suggestion :

‘சிகரெட்டுக்கு மாறானது எதுவோ – இப்ப சிகரெட் குடிக்கும்போது என்னா செய்யிறோம்? இன்னொருவேலையை உட்டுப்புட்டு செய்யிறோம்.. அதுக்குப் பதிலா எது செஞ்சா சிகரெட் குடிக்க முடியாதோ அத செய்யனும்’ – ‘S’

‘ஸ்விங்கம் சாப்புடலாமா சர்க்கார்?’

‘ஆமா.. அப்புறம் அது பழக்கமான பிறகு அதுக்கு ஒரு Suggestion கொடுத்துக்கலாம்!’ – ‘S’

*

‘கெட்டவார்த்தை பேசுறதுக்குப் பதிலா வெத்தலையை போட்டுக்கண்டு சொன்னா என்னா அர்த்தம்? கெட்டவார்த்தை பேசுற பழக்கம் அழிஞ்சி போகனும்டுதான் நோக்கம். அதுக்காக கெட்டதே இல்லேண்டு சொல்றதல்ல. அதை ஃபோர்ஸ் பண்ண வாணாங்குறேன். நீங்க வெத்தலையை ஃபோகஸ் பண்ணுங்க. கெட்ட வார்த்தை பேசுறதுக்கு பதிலா வெத்தலையை நினைச்சீங்கண்டு சொன்னா ஹமீதுக்கா கதையாயிடும். ஹமீதுக்கா என் கூட்டாளி. அவர் வெத்தலைப்பாக்கு நிறையா போடுவாரு. ஏங்க, வெத்தலைபாக்கு போடுறீங்க, வேணும்டா ஸ்மோக் பண்ணிக்கிங்கண்டு ஒரு நாள் சொன்னேன். ‘வுட்டுட்டேன்’டாரு. எனக்கு சந்தோஷம். ஒருநாள் அவரைப் பார்க்கப் போனேன். வெத்தலைபாக்கு போட்டுக்கிட்டே சிகரெட் குடிச்சிக்கிட்டிக்கிறாரு! வெத்தலைபாக்கோட குடிச்சா எப்படி இக்கிதுண்டு பார்த்தாராம்! அதனாலெதான் இந்த லைன்லெ ஈடுபடுறது ரொம்ப ஜாக்கிரதை. இன்ஸ்ட்ரக்டர் இல்லாம செய்யக் கூடாதுங்குறது.’

Instructorக்கு மரியாதையும் கொடுக்க வேண்டும். சீடர் தாஹா தன் கால்விரலால் தூக்கி எறிந்த சர்க்காரின் சிகரெட் மறுபடியும் சுடுகிறது.. ‘எவ்வளவு பெரிய தப்பு இது! எனக்கு ஒண்ணும் இல்லே, உங்க மரியாதைய கொஞ்சங்கூட நான் எதிர்பார்க்கலே. எனக்கு அது பிடிக்கவும் செய்யாது. ஆனா எனக்கு நீங்க மரியாதை கொடுத்தாத்தான் நான் சொல்றது இறங்கும். இல்லேண்டா உங்க நெஞ்சிலே என் வார்த்தை இறங்குறதுக்கு நான் ‘செவுனை’தான் பண்ணனும். அதுக்கு உங்க அனுமதி எனக்கு தேவையில்லே’

*

மெமரி பவர் :

‘ஞாபகமில்லேண்டா ஞாபகப்படுத்தியாகனும். ஒரு சமயம்… சாவன்னாசாபுட்டெ ஒரு உதாரணம் , ‘ஹிப்பி’ பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். ஹிப்பி மாதிரி இன்னொரு க்ரூப் இருப்பானே….வெத்தலை ஞாபகம் வருது. யாருக்கும் சொல்லத் தெரியலே..ஒரு மணிநேரம் யோசனை பண்ணி ‘Beatles’ண்டு கண்டுபிடிச்சிட்டு, அப்புறம்தான் பேசினேன். கண்டுபுடிச்சிடனும். இல்லே, mind சொல்ல ஆரம்பிக்கும். மத்த பேச்சைவிட mindடோட பேச்சுதான் கெட்டது, நல்லது. ஒரு காசோட பூ, தலை மாதிரி. தலையையே யூஸ் பண்ணுங்க – தலை பாசிடிவா இருந்தா. இல்லே பூவையே யூஸ் பண்ணுங்க. பூ தலையை விட பாஸிடிவ்!

‘நாம பேசுற பேச்சு Hypnotised. வாழுற வாழ்க்கை Hypnotism. ஒவ்வொருத்தரும் வாழுற வாழ்க்கை பூரா… காலேஜ்ல படிக்கிறவங்க காலேஜ் atmosphere பத்தி பேசிக்கிட்டிப்பாங்க. சமையல் கட்டுலெ உள்ள பொம்பளை காய்கறியை பத்தி பேசுற மாதிரி மத்ரஸாவுல ஓதுனவங்க என்ன செய்வாங்க? ‘நரகம், சொர்க்கம், அல்லா, ரசூல்’ம்பாஹா. இந்த நாலையும் பத்தி உண்மையான அர்த்தம் அஹலுக்குத் தெரியாது! மனமோட்டு பரச்சிட்டெ நீங்க பழகுனீங்கண்டு சொன்னா அவமாதிரியே நீங்க பேசுவீங்க. நீங்க காலேஜாலெ, அவர் மதத்தாலெ hypnotise பண்ணப்பட்டிருக்கீங்க. புரியுதா ரவூஃப்? அன்னக்கி என்னா சொன்னேன்? நம்மட கொழுப்பு.. பாகவி, MA MLittண்டு கொழுப்பு.. இதே வார்த்தை சொன்னேன், ஞாபகமிருக்கா? ‘

ரவூஃப் மௌனமாக தலைகுனிந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான். ‘அதனால எந்த பொருளும் நம்மளை hypnotise பண்ண விடக்கூடாது. அழகனைப் பார்த்து , அழகியைப் பார்த்து நெளியக்கூடாது. செல்வந்தனைப் பார்த்து மயங்கிடக்கூடாது. அதனாலே வழிச்சிக்கிட்டு காட்டுங்கண்டு சொல்லவரலே. நீங்க நார்மலா இரிங்க. இது என் குணம், நான் யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டேன். அன்பா இருப்பேன், பிரியமா இருப்பேன், மொத்தத்துலே mediocritic. அதாவது நூறுபேருலெ ஒரு ஆளா நீங்க இருக்கக்கூடாது. Distinctஆ இரிக்கனும். தனித்திரு! கடற்கரையில போயி தனியா உட்காருண்டு அர்த்தம் இல்லே. மனமும் தனியா இருக்கனும். மனசுல பக்குவத்தை உண்டாக்கிட்டீங்கண்டு சொன்னாக்கா ஹத்தத்து ராத்திரி மனாரடிலெ உட்கார்ந்துக்கிட்டு தூங்கலாம். எப்ப தனிமை தேவை, எப்ப சமுதாய வாழ்க்கை தேவை? அதுக்கு என் புஸ்தகம் படிக்காதீங்க! அது (சாதாரண) ஜனங்களுக்கு எழுதுனது!

‘தொவந்து’ உடுத்துனமாதிரி இருந்திச்சி – பெல்பாட்டம். ஏன் அழகா தெரிஞ்சிச்சி? அளஹா உள்ளவன், அளஹா இக்கிறதா காட்டிக்கிட்ட நடிகனுவ, இல்லெ , பணக்காரண்டு காட்டுனவனுவ போட்டுக்கிட்டு அலைஞ்சிக்கிறான். இது wealth hypnosis..beauty hypnosis. நாம எங்கே மடக்கப்படுறோம்டு நாம உணர்ந்துக்கனும். இப்படி இருந்தா, நம்மள்ட்டெ உள்ள முக்கால்வாசி முட்டாள்தனம் பொய்டும். சிரிக்காதீங்க, பயப்படாதீங்க! பம்பாய் முட்டாய் கொடுத்து , விலாவுல குத்தி , பொம்பளைய காமிச்சி சிரிக்க வச்சான். இல்லெ, துப்பாக்கி முனைய வச்சி பயமுறுத்துனான். ரெண்டும் இல்லே, control-ண்டு சொன்னாக்கா நீங்க ஏமாற மாட்டீங்க. ஆனா நீங்க ஏமாத்தக்கூடாது. ஏமாத்துனா cosmic habit force தண்டிக்கும். இத ஞாபகம் வச்சிக்குங்க. இந்த ரூட்லெ உடனே தண்டிக்கும்.’

*

‘உழைப்பு’ண்டா அர்த்தம் என்னா? மெண்டல் உழைப்பு! எந்த வேலையும் physicalஆ செய்யாமலே வளரலாம். சட்டையிலெ அழுக்குண்டு மூணு நாளைக்கி கவலைப்படுறீங்க, மனசுல அழுக்கு!. ‘மெமரி பவர் வீக்னஸ்’, ‘Ascimilating Force’ போதாது.. இதப்பத்தி கவலைப்படுறதே இல்லை. எவனாச்சும் சொல்லியிக்கிறானா? ‘இந்தாப்பா எனக்கு மெமரி பவர் வீக்கா இக்கிது’ண்டு? டெவலப் பண்ணு! அப்ப, உலகத்துலெ பயப்படுறது அல்லாஹ்வுக்கு அல்ல; மக்கள்! அவர்கள்!’ – ‘S’ .

ஐயோ, என்னைத்தான்!

‘இந்த சொஸைடிலெ என்னாத்தெ பழகி என்ன செய்ய? விருந்துக்கு போவ வேண்டியது. ‘பிஸாது’ பண்ணாம – அது நம்ம தனித்தன்மை- வர்றது. மைய்யத்துவூட்டுக்கு போவ வேண்டியது. அரசியல பேசாம, கண்டும் காணாதது மாதிரி உட்கார்ந்துப்புட்டு வரவேண்டியது.. அதோட வச்சிக்கனும். அதில்லாம நெருங்கிப் பழகுனோம் (தொலைந்தது). ஒண்ணு சமுதாயத்த மாத்தனும். அது impossible. நாம மாறிடுவோம்! பண்ணுன பயிற்சி பூரா வீணாயிடும். இதுல என்னா பியூட்டிண்டா வீணாப்போயிடிச்சி, போய்க்கிட்டிக்கிதுண்டுகூட தெரியாதுங்க, நான் உடுத்துற கைலி மாதிரி!’ – ‘S’

*

‘நாம யாராக இல்லையோ அவங்களா தெரியாம weak creatures, மண்புழு, நாக்காம்பூச்சி மாதிரி தெரியலாம். உடம்பு ரிலாக்ஸ்டா இல்லே, டென்சனா இக்கிதுண்டு அர்த்தம். அப்படி சிந்திச்சாக்கா இந்த நெனைப்பு பாசிடிவ் எண்ணங்களைத் தாக்கும். கொஞ்ச நாளைக்கி கண்ட்ரோலா இருந்துட்டா அப்புறம் பழக்கமாயிடும்’ – ‘S’. காஃப்கா?

*

‘ஆசைக்கு பெண்ணும், ஆஸ்திக்கு ஆணும்டு சொல்றாங்களே..என்னா அர்த்தம்?’ – ‘S’

‘நம்ப ஆசைக்கு ஒரு பொம்பளப் புள்ளய பெத்துக்கனும். சொத்தை காப்பாத்துறதுக்கு ஆம்புளப் புள்ளய…’

‘ஆசைண்டா முச்சம் உடுறதுக்கா? குறிப்பிட்ட லெவெலுக்கு மேலே முச்சம் உடமுடியாதே! அதல்லப்பா… ஆசைப்படுறது பெண். (‘கப்பல் கப்பலா கொடுத்தாலும் ‘ஹும்.. எட்டு கப்பதானே கொடுத்தீங்க’ம்பா’ – தன் மனைவியைப் பற்றி சர்க்காரின் ஒரு நண்பர்!). இத ஆஸ்தியாக மாத்துறதுக்கு ஒரு ஆண். இதுதான் ஆக்சுவல் meaning’ – ‘S’.

ஆசையில்லாத பெண்ணை முருங்கைமரம் என்கிறார்கள் சர்க்கார். பேய் இருப்பதாலா என்று தெரியவில்லை. ‘அந்த ஆசையினாலே துன்பம் தொல்லை வருதே… நாமதான் நாசூக்கு பண்ணி, தாஜா பண்ணி, கண்ட்ரோல் பண்ணனும். ஆசையில்லேண்டு சொன்னா வாழ முடியாதுங்க. நாம உழைப்போம். ட்ரைவிங் ஃபோர்ஸ் பொம்பளதான். எந்த பொம்பளயாவும் இருக்கலாம். மகள், பெண்டாட்டி, உம்மா, காதலி.. ஆனா காதலி ஒண்ணுதான் இருக்கனும்! இதுக்கு லவ் பண்ணுறதுக்கு நான் பெர்மிசன் கொடுக்குறதா அர்த்தம் இல்லே!’ – ‘S’

(தொடரும்)

குறிப்புகள் :

வஹாபி – திராவியா தொழுகையில் எட்டு ரக்-அத் தொழும் ‘நஜாத்’ பிரிவினர்
ரியாலத் – பயிற்சி
புர்தாஷரீஃப் – பூஷரி இமாம் பாடல்களை ஓதும் சடங்கு
பரக்கத் – சுபிட்சம்
ஹிக்மத் – சூழ்ச்சி
ஜம் – ஒரு பயிற்சி
ஹத்தம் – பெரியோர்களின் இறந்த தின சடங்கு/விழா
பிஸாது – அவதூறு

1 பின்னூட்டம்

  1. BARAKATHULLAH. A said,

    16/11/2017 இல் 13:33

    சேத்தபொண்ணு என்றால் தங்கை என்று அர்த்தமா?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s