சுடானி ஃப்ரம் நைஜீரியா – ஆசிப் மீரான்

நான் சமீபத்தில் பார்த்து வியந்த  ‘Sudani from Nigeria’ படத்திற்கு சகோதரர் ஆசிப் மீரானின் அருமையான விமர்சனம். ‘வாழ்க்கையும் ஒருவிதமான கால்பந்தாட்டம்தான்’ என்று சொல்பவர் அப்படியே , ‘வஹாபிகளாக இருந்திருந்தால் காஃபிரை வீட்டுக்குள் ஏற்றியதற்கு ஊர்விலக்கே செய்திருக்கக்கூடும். நல்லவேளையாக மஜீதின் உம்மாக்களே நம்மில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள் என்பதே மிகப் பெரும் ஆறுதல்’ என்று அடிக்கிறார். உதையுங்கள்! – AB

*

sudani from nigeria1

திருவனந்தபுரம் பொறியியற் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில் அங்கேயிருந்த கால்பந்தாட்ட ஆட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் மலபார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். மலப்புரத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு பதினைந்து மணி நேரம் பயணம் செய்து ஆட்டம் முடித்த உடனேயே ஞாயிறன்றே இரவோடிரவாகத் திரும்பி வரும் ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். கால்பந்தாட்டம் என்பது மலபார் பகுதிகளைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை பெரும்போதை என்பதை உணர்ந்த காலம் அது. பேசும்போது கூட உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரர்களைப் பற்றி மட்டுமில்லாமல் ஸ்பானிஸ் ஜெர்மன் இங்கிலிஸ் லீகுகளில் ஆடும் ஆட்டக்காரரகள் குறித்தும் விரல் நுனியில் தகவல் வைத்திருப்பார்கள் அவர்கள்.

அதிலும் பதினொருவர் ஆடும் ஆட்டத்தை வெட்டிச் சுருக்கி எழுவர் ஆடும் ஆட்டமாக மாற்றி, ‘செவன்ஸ்’ என்று நாமகரணம் சூட்டி மலபாரின் மூலைகளிலெல்லாம் பந்தயங்கள் நடத்தி, ‘ஆர்ப்பு விளி’யும், செண்ட மேளமுமாக பெரும் திரளாக அதைக் கண்டு ரசித்து, ‘டோ நாராயணன் குட்டி!பொறவிலு ஆளுண்டே!’ என்று ஆட்டக்காரர்களுக்கு காலரியிலிருந்து கொண்டே தகவல் சொல்லிக் கொண்டு.. மலபாரைப் பொறுத்தவரை அது பண்டிகைக் காலம். இந்தப் பண்டிகைக் கோலாகலங்களை, கால்பந்தாட்டத்தின் மீதான அவர்களது மையலை ஓர் எளிய கதை மூலம் வெளிப்படுத்த முடியுமா என்பது மிகப் பெரும் கேள்விக்குறி. ஆனால் மலபாரின் இந்த வித்தியாசமான இதயத்துடிப்புக்கு முழுமையான நியாயம் செய்திருக்கிறார் இயக்குனர் ஸக்கரியா..உலகப்படங்கள் பார்த்துக்கொண்டு, உலகப் படங்கள் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த ஸக்கரியாவுக்கு ஒரு கனவு இருந்திருக்கிறது. உலகளவில் பேசப்படாவிட்டாலும் உருப்படியான படம் செய்ய வேண்டுமென்ற கனவுதான் அதுவும் மலையாளத்தில் அறிமுகமான எந்த முகங்களும் இல்லாமல் தன் பெயர் சொல்லும் ஒரு படம் எடுத்து விட வேண்டுமென்பது. எல்லோருக்கும் கனவை மெய்ப்படுத்தும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. ஆனால் விஷப் பரிட்சைதானென்று தெரிந்தே களமிறங்கிய ஸக்கரியா முதல் முயற்சியிலேயே அதனை அற்புதமாகச் சாதித்திருக்கிறார். ஆஸம்ஷகள் மாஷே!!

மலப்புரத்தில் சிறு நகரமொன்றில் கால்பந்தாட்ட அணியொன்றின் மேலாளராக மஜீத். அவனது அணியில் ஆடுவதற்காக நைஜீரியாவிலிருந்து வந்திருக்கும் சாமுவேல். நைஜீரியாவும் சுடானும் மலபாரிகளுக்கு ஒனறுதான். எனவே சாமுவேலின் செல்லப்பெயராகிறது சுடு. மஜீதின் சொந்த வாழ்க்கைத் துயரங்கள் ஒருபுறம். உம்மாவின் இரண்டாம் கணவருடனான மூர்க்கமான கோபம் மறுபுறம்.. பிள்ளை கணவரை ஏற்காத மீளாத்துயரில் உம்மா. இதற்கிடையில் தனது உம்மாவின் இரண்டாம் கணவரை அப்பாவாக ஏற்றுக் கொள்ளாத மஜீதின் பிடிவாதம் மெல்ல மெல்லத் தளரும் கிளைக்கதை வேறு. கஷ்டப்பாடுகளுக்கிடையே அணியை நடத்துவதற்கிடையில் சாமுவேலுக்கு நிகழும் சிறுவிபத்தும் அதனைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும் என்று சிக்கல்களில்லாத எளிமையான கதை. இந்தக் கதையை இணைக்கும் இழையாகக் கால் பந்தாட்டம் இருந்தாலும் அதுவே பிரதானமில்லை. வாழ்க்கையும் ஒருவிதமான கால்பந்தாட்டம்தான். எவரெவர் கால்களுக்கிடையிலோ அல்லல்படும் வாழ்க்கை. இலக்கு மட்டுமே குறி. இலக்கை நோக்கிய ஓட்டமும் அதனைத் தடுக்க ஒரு கூட்டமும் இந்த ஓட்டங்களுக்கிடையில் பந்து படும் பாட்டை ரசிக்க வேறொரு உலகமும் இயங்குவதைத்தான் சொல்கிறது ‘சுடானி ஃப்ரம் நைஜீரியா’

எங்கோ நைஜீரியாவில் பிறந்து பிழைக்க வழியின்றி கேரளத்து சிறுநகரத்தில் பிழைக்க வருபவனின் புலம் பெயர் சோகத்தையும், உறவுகளுக்கிடையிலான எளிய சிடுக்குகளையும் சொல்லிச் செல்லும் படம் கூடவே இனம் மதம் மொழி இவைகளைத் தாண்டி வாழும் எளிய மனிதர்களின் பேரன்பில்தான் உலகம் இன்னமும் இயங்குகிறது என்பதையும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டி விடுகிறது. மாந்த நேயம் போல நெகிழ்வான விசயம் உலகிலில்லை என்பதைக் காட்சிகள் தோறும் நேர்த்தியான இழையாகப் பின்னிப்பின்னி கண்களின் ஓரம் நீர்த்துளியை வர வைத்து விடும் சாமர்த்தியம் ஸக்கரியாவுக்கு வாய்த்திருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் பிழியப் பிழிய மெலோடிராமாவாக மாறி விடக் கூடிய வாய்ப்பிருந்தும் அதனைக் கவனமாகத் தவிர்த்து விடுபவர்கள் மலையாளிகள். காட்சியைப் பேச விட்டு கதை மாந்தர்கள் உடல் மொழி வழியே உணர்வுகளைக் கடத்தி விடும் சாமர்த்தியம் எல்லோருக்கும் வாய்த்து விடாது திறமையான இயக்குனர்களைத் தவிர்த்து.. ஆனால் முதல் படத்திலேயே ஸக்கரியா இதைச் சாதித்திருப்பதுதான் பிரமிப்பாக இருக்கிறது.

“எனக்குப் பெனால்ட்டின்னாலே பயம்”
“உனக்கு மட்டுமில்லடா. மெஸ்ஸியோட ரசிகர்களெல்லாருக்குமே அதுதான் பயம்”டௌலக மகா ஆட்டக்காரனான மெஸ்ஸி தவற விட்ட பெனால்ட்டியை நினைவுபடுத்திக் கிண்டல் செய்யும் இதுபோன்ற வசனங்கள்தான் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. புரிந்தவர்கள் வெடித்துச் சிரிக்க இது போல படம் முழுக்க வசனங்கள் விரவிக் கிடக்கின்றன

க்ளப் மேனேஜர் என்று பேரும் பெயர் இருந்தாலும்‌ கூட பெண் கிடைப்பதில்லை‌ மஜீதுக்கு. சாமுவேல் சிகிச்சைக்காக நண்பன் தன் மனைவியின் நகையை அடகு வைக்கும் காட்சியில் ” இந்த ஊரில் அநேகமா 90% நகையும் இங்கதான் இருக்கு. எனக்குக் கல்யாணமானா உன்னைத் தொந்தரவு செய்யாம நானும் அடகு வைக்கலாம். ஆனா பொண்ணு கிடைக்கணுமே? ” வசனத்தை வெளிப்படுத்துவதில் மஜீதாக வரும் ஷௌபின் ஸஹீருடையது எவருக்குமில்லாத தனி பாணி. ஷௌபின் திரையில் தோன்றினாலே மலையாளிகள் சிரிக்கத் தயாராக இருந்தபோதும், தன்னை ஒரு சட்டத்துக்குள் அடைத்துக் கொள்ளாமல் படத்துக்குப் படம் வெவ்வேறு கதாபாத்திரங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஷௌபினின் திரை வாழ்க்கையில் இது நிச்சயம் மைல்கல். சாமுவேல் காசுக்காக விலை போய் விட்டதாக நினைத்து உடைந்த ஆங்கிலத்தில் குமுறும்போதும், தன் தவறை உணர்ந்து சாமுவேலில் ஆங்கிலத்தில் தொடங்கி பின்னர் மலையாளத்தில் தன் உணர்வுகளைக் கொட்டும்போதும்… தனக்கேயுரிய உடல் மொழியோடும், பாவங்களோடும் கிடைத்த ‘ஃப்ரீகிக்’கை அட்டகாசமான ‘கோலா’க மாற்றியிருக்கிறார்.

சாமுவேலாக சிறப்பாக நடித்திருக்கும் நைஜீரிய நடிகர் சாமுவேலின் பின்னணிக்காட்சிகள் உள்நாட்டுப்போர் நடக்கும்‌ நாடுகளில் மனிதர்களின் நிலைகுறித்த பார்வையைக் கோடி காட்டுகிறது. உளநாட்டுப் போர் என்பது எத்தனை கொடூரமானது என்பதை உலகம் முழுக்கக் கேட்டும் கண்டுமிருந்தாலும், ஓரிரு காட்சிகளில் அந்த வேதனையைப் பதிய வைக்க முடிகிறது இயக்குனரால். எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் நாம் வாழுமிடம் எத்தனை மகத்தானதென்பதை உணரும் வாய்ப்பு அது. குறிப்பாக தண்ணிர் விரயமாகும் காட்சியில் சாமுவேல் கடும்கோபம் கொள்ளும் காட்சி

ஷௌபின் தவிர்த்தால் சொல்லிக் கொள்ளும்படியான நட்சத்திரங்கள் யாருமில்லை. அதுதான் இயக்குனரின் ஆசையும் கூட. படத்தில் நடித்தவர்கள் அனைவருமே புதிய முகங்கள். பெரும்பாலும் இயக்குனர்களின் நண்பர்கள். ஆனால் ஷௌபினையே ‘அப்படி ஓரமாய் இரு தம்பி’ என்று ஓரம்‌ கட்டி விடுகிறார்கள் மஜீதின் உம்மாவாக வாழ்ந்திருக்கும் சாவித்ரி ஸ்ரீதரனும், பீயும்மாவாக அசத்தியிருக்கும் சரசா பாலுஸ்ஸேரி அம்மையாரும்.கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் நாடக உலகில் கோலோச்சியிருந்து கேரள அரசின் சிறந்த நடிகைகளுக்கான பரிசுகளைப் பெற்றிருந்தும் நாடகத்தன்மை சிறிதும் இல்லாமல் உடல் மொழியாலும் வசன உச்சரிப்புகளாலும் படத்தை நிறைப்பவர்கல் இவர்கள்தான்.

ஆஸ்பத்திரியில் சுடுவைப் பார்க்க கூட்டம்‌ கூடி நிற்கையில் அறைக்குள் வரும் நர்ஸ் ‘இங்க என்ன சம்மேளனமா நடக்குது?’ என்று கோபப்படும்போது, அவரைப் பார்த்துக் கொண்டே, “எல்லோரும் கிளம்புங்க” என்று சொல்லி விட்டு, கடுப்பில் “கலெக்டர் ஆர்டர் போட்டிருக்கார்” என்று நர்ஸை நக்கலடித்துச் சொல்லுமிடம் அமர்க்களம். அதைப் போலவே சுடுவின் பாஸ்போர்ட் குறித்து அதிகாரிகள் விசாரிக்கையில் பாஸ்போர்ட் இல்லாமலேயே தன் கணவர் கராச்சியிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்ததைச் சொல்லும் காட்சியும் வெடிச்சிரிப்புதான்

பீயும்மாவின் தோழியான மஜீதின் உம்மா மஜீதிடம் மருத்துவமனையில் வைத்து “சுலு என் வீட்டில்தான் இருப்பான்” என்று சொல்லும்போதும் சரி, “ஒரு அம்மா இப்படி சொல்லக்கூடாதுதான். ஆனாலும் இப்படிக் ‘கிடப்பில்’ இருந்தாலாவது என் மகனுக்கு என் தேவை இருந்திருக்குமே?!” என்று உருகுகையிலும் சரி – நாடகத்தன்மைக்குள் அடங்காத அற்புத உடல்மொழி.

மஜீதின் தகப்பனாக சாந்தம் தழுவும் அந்த முகத்தோடு சாமுவேலிடம் ‘ஃபாதர்’ என்று சிரித்துக் கொண்டே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சியிலும் சரி, மகன் வீடு வந்ததறிந்து வீட்டை விட்டு இறங்குகையில் ‘ உனக்கு காசு ஏதாவது வேணுமா? என்று மனைவியைப் பார்த்துக் கேட்கும் காட்சியிலும் சரி.. கடைசியில் மகனோடு படியேறி வீடு வந்து மனைவியைக் காணும் பொழுதில் உதிர்க்கும் சிரிப்பிலும் சரி..அப்துல்லாக்கா அசத்துகிறார்..

மனிதர்களுக்குள் வேறுபாடு காட்டக்கூடாதென்ற மாபெரும் தத்துவத்தைத்தான் இஸ்லாம் போதிக்கிறது. அதனால்தான் மதத்தாலோ மொழியாலோ இனத்தாலோ எவ்வகையிலும் தொடர்பில்லாத சாமுவேலுக்காக மஜீதின் உம்மாவால் சொந்த மகனைப் போல அன்பைச் செலுத்த இயலுகிறது. சாமுவேலுக்காக தர்ஹாவில் சென்று ஓதி வருவதும், சாமுவேல் பாட்டி இறந்ததறிந்து வீட்டில் ஃபாத்திஹா ஓத ஏற்பாடு செய்து ‘யத்தீம்’களுக்கு உணவளிப்பதுமென்று மஜீதின் உம்மா பெறாத மகனுக்காக அன்பைப் பொழிகிறார். வஹாபிகளாக இருந்திருந்தால் காஃபிரை வீட்டுக்குள் ஏற்றியதற்கு ஊர்விலக்கே செய்திருக்கக்கூடும். நல்லவேளையாக மஜீதின் உம்மாக்களே நம்மில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள் என்பதே மிகப் பெரும் ஆறுதல்.

கால்பந்தாட்டத்தில் ஆட்டம்‌ முடிந்து விடைபெறுகையில் ஜெர்சியை மாற்றிக்‌கொள்வதென்பது நல்லெண்ணத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான குறியீடு. கால்‌ குணமாகி சாமுவேல் நாடு திரும்பும் நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து சாமுவேல் மஜீதை அரவணைக்கையில் சாமுவேலும் மஜீதும் தங்களது மேலாடைகளை மாற்றிக் கொள்ளும் காட்சியின் மூலமாக அவர்களுக்கிடையிலான நெருக்கமான உணர்வை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கும் ஸக்கரியாவின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதைப் போலவே அதிகாரத்தின் வெற்றுக்கூச்சலையும் மிரட்டலையும் கூட எளிதாகக் கடந்து போய் விடக்கூடிய நகைச்சுவைக் காட்சியாகக் காவல் நிலையத்தில் மஜீதை விசாரிக்கும் காட்சியை உருவாக்கியிருக்கும் சாமர்த்தியத்தையும்.

‘ஏதுண்டடா கால் பந்தல்லாதே?’ பாடலும் இசையும்,. “பந்து கொண்டொரு நேர்ச்ச” என்ற பாடல் வரிகளும்…. மலபாரின் கால்பந்தாட்டத்தின் மீதான நேசக்கிறுக்கை வேறெப்படித்தான் சொல்ல முடியும்? . இதைப் போலவே ரெக்ஸ் விஜயன் இசை அமைத்துப் பாடியிருக்கும் ஹரிநாராயணன் வரிகளில் அமைந்த ‘செறுகத போல ஜென்மம் சுருள் அழியுன்னதெங்கோ‘ பாடல் இடம் பெறும் இடமும் காட்சிப்படுத்தலும்… அற்புதம். அன்வர் அலி, ஷாபாஸ் அமான் ஆகியோரின் வரிகளில் ரெக்ஸ் விஜயனின் இசை படத்தின் தன்மையறிந்து வெளிப்படுகிறது.. ஷைஜூ காலிதின் அற்புதமான ஒளிப்பதிவும், நௌஃபல் அப்துல்லாவின் கச்சிதமான எடிட்டிங்கும் ஸக்கரியாவுக்குப் பெரும் துணை

பொதுவாக மலப்புரம் அல்லது மலபார் தொடர்பான படங்களில் வரும் இசுலாமிய கதாபாத்திரங்கள் இசுலாமிய வாழ்க்கையை விமர்சித்தோ அல்லது ஏதேனும் ஹாஜியார் நான்காவது திருமணம் செய்யக் காத்திருப்பது குறித்தோ அல்லது இசுலாமியர்களின் தேசப்பற்று குறித்தோ இயல்பு வாழ்க்கை நிலையிலிருந்து சற்று அந்நியப்பட்ட கதைகளையே இயல்பானது போல பேசிக் கொன்டிருந்தன. இசுலாமிய வாழ்க்கை முறையே கூட எத்தனையோ படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் இத்தனை இயல்பான ஒரு இசுலாமியக் குடும்பத்தின் கதை சொல்லப்பட்டதில்லை. மலபார் பிரதேசத்தில் சிறிய நகரங்களில் இசுலாமியர்களே பெரும்பான்மையாக வசித்தபோதும் கூட மத வேறுபாடின்றி அவர்கள் பிற மதத்தவரோடு இயல்பு வாழ்க்கையில் ஒருங்கிணைந்து இருப்பதை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஸக்கரியா. மொழி, மதம், இனம் சார்ந்த கிறுக்குகள் தலையில் ஏறாத வரையில் மனிதர்களுக்குள் இருக்கும் நன்மை போற்றப்பட்ட வேண்டிய ஒன்றுதானே?!

மனிதத்தின் மேன்மையில் நம்பிக்கை இருப்பவர்கள் மறக்காமல் இந்த ‘சுடானி’யைப் பார்த்து விடுங்கள். மனநெகிழ்வுக்கு நான் காரண்டி!!

*

asif-gp-ab

நன்றி : ஆசிப் மீரான்

 

ஃபுட்பாலும் ‘இஜட்’-ன் குட்டிக்கதையும்

‘எங்க ‘K.R.C’ நடத்தும் ஃபுட்பால் மேட்ச் பற்றி எழுதுங்க நானா’ என்றார் ஷாஹாமாலிம். ’53வது தென்னிந்திய எழுவர் கால்பந்து தொடர்போட்டி’ பற்றி கொஞ்சம் எழுதலாம்தான்.  மூன்று நாட்களுக்கு முன் , நடக்கவிருந்த முக்கிய மேட்சை ரத்து செய்துவிட்டு, ‘ஆங்காங்கே அமர்ந்திருக்கும்’ நாகூர் ரசிகப் பெருமக்களுக்கு எவ்வித அறிவிப்பையும் முன்னரே வெளியிடாததை (அட, பள்ளிவாசல் மைக்’-ல் சொல்லலாம் இல்லையா, ‘இன்று நடைபெற வேண்டிய மேட்ச்.. ‘மவுத்’ என்று?) வெடைக்க வேண்டிவரும் என்றேன். ‘விமர்சனம் இல்லாமலா? தாராளமா செய்ங்க..’ .  நான்தான் இன்னும் செய்யவில்லை. உண்மையில் , அங்கே போனால் வீசியடிக்கும் காற்றும் கூத்துமாக ஜாலியாகத்தான் இருக்கும். SDPI கவனிக்கச் சொல்லும் பிரச்னைகளை சற்றே மறக்கலாம்…

பாருங்கள், சரிந்துவிழும் நிலையில் சதா இருக்கிற ‘கேலரி’யில் உட்கார பயந்துகொண்டு தரையில் அமர்ந்து ‘மேட்ச்’ பார்த்துக்கொண்டிருந்த நண்பன் பாக்கர்சாபுவை ‘பால்’ தாக்கிவிட்டது நேற்று. ‘எங்கேடா அடி?’ என்றதற்கு ‘பாலு’லதான்’ என்கிறான் அவன்!

முட்டை போண்டாக்களுக்காக வரும்  பையன்களின் கமெண்ட்களும் பிரமாதம். முந்தாநாள் சென்னை சிட்டி போலீஸ் டீமும் நீரோடி (இது எங்கே இருக்கு?) டீமும் மோதியது. படு சுமாரான ஆட்டம். ‘டாய்… போலீஸ் டீம் போலீஸ் டீம் மாதிரியே தெரியலையே.’ என்று கத்திய பையனிடம். ‘ஏன்?’ என்று கேட்டதற்கு ‘வெறி புடிச்ச மாதிரில ஆடுவானுவ அவனுவ..’ என்றான். விவரம் தெரிந்த பையன் போல.

‘என்னாப்பா டீம் இதெல்லாம்..  எங்க ஊருக்கு வந்து பாரு. சூடான் , நைஜீரியால்லாம் வந்து ஆடுது..’ என்று பக்கத்து கூத்தாநல்லூர் இக்பால் கடுப்பேத்துகிறானே என்று விசாரித்தால் கல்லூரிகளில் படிக்கவரும் பையன்களைப் பிடித்து டீம் செட் செய்து விடுகிறார்களாம்! விரைவில் பிரேஜிலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே கூட நடக்கலாம் அங்கே.

எப்பேர்ப்பட்ட கால்பந்தாட்ட வீரனாக இருக்கட்டும், காலிகட் டீமில் , கட்டையாக, காதில் கடுக்கண் மாட்டிக்கொண்டு. வரும் ‘ஷ்யாம்’தான் என் ஃபேவரைட்.. சரியான வாய்ப்பு இருந்தால் மெஸ்ஸி அளவுக்கு வரவேண்டியவன். இம்முறை அவனைப் பார்க்க இயலாது. ஓரிரு நாளில் துபாய் போகனும், அரபி என்னை உதைக்க.

சரி, ஃபுட்பாலுக்கும் ஜபருல்லாவின் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்?

அவர் வசிக்கும் புதுமனைத்தெரு வீட்டைத் தாண்டிக்கொண்டுதான் ‘K.R.C’ கிரவுண்ட் செல்கிறேன்!

“முகவரி –
சரியில்லாத கடிதம்
அனுப்பிய இடத்துக்கே
திரும்பிவிடும்”
———————
(தொழுகையும் அப்படித்தான்.!’)

என்று இடித்துரைக்கும் நானாவின் குட்டிக்கதையை இத்துடன் இணைக்கிறேன். கட்டுக் கட்டாக அவர் வைத்திருக்கும் சின்னச் சின்ன டைரிகளிலிருந்து உருவியது இது, எங்கே போவேன் என்று தெரியாமலேயே.. – ஆபிதீன்

***

சொர்க்க மரியாதை – ‘இஜட்’-ன் குட்டிக்கதை

சொர்க்கத்தில், நன்மைகள் நிறைய செய்த ஒரு ஏழை வர தேவதைகள் அழைத்துச் சென்றனர்.

மறுநாள் ஒரு செல்வந்தன் வந்தான், தாரை/தப்பட்டையுடன் , பூச்சொரிந்து சீரும் சிறப்புமாக வரவேற்கப்பட்டபின் தேவதைகள் வரிசையாக நின்று பாடினர் போற்றி.

இதைப் பார்த்த ஏழை, ‘சொர்க்கத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு என் அறியாமல் போனேனே..!’ என வருந்தினான்.

அதைக் கேட்ட தேவதை ஒன்று, ‘இங்கு ஏற்றத் தாழ்வு கிடையாது. உன்னைப் போல ஏழைகள் சொர்க்கத்திற்கு அடிக்கடி வருவார்கள். அவனைப் போன்ற செல்வர்கள் எப்போதாவதுதான் வருவார்கள். அதனால்தான் அத்தனை வரவேற்பு’ என்றது.

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ் | Tel : 0091 9842394119

மெஸ்மரைஸ் செய்த மெஸ்ஸி

Messi seals status as best of his generation  – Gulf News . சந்தோஷத்தில் என்னை உதைக்க ஆரம்பித்துவிட்டார் சாதிக் – நேற்றிரவு மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தபோது! மேலும் நான் உதைபட மெஸ்ஸியை வேண்டுகிறேன் 🙂

கிரிக்கெட்டை முன்வைத்து கிருஷ்ணன் சொல்லியது

‘1996ஆம் ஆண்டின் உலகக் கோப்பைக்கான பெங்களூர் ஆட்டத்தில் உலகக் கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜாவேத் மியான்தாத் கடைசி முறையாக ஆடினார். குஹா கூறுகிறார் : When he walked out of the ground I stood up to applaud him. “Why are you clapping?” asked an abnoximous fellow from a row behind..”He is a truly great player, and this is the last time any of us see him bat.” “Thank God. I shall never see the bastard again” came the reply.

ஆனால் 1999ல் சென்னையில் பாகிஸ்தான் முதல் டெஸ்டில் வெற்றிகண்டபோது  சென்னைப் பார்வையாளர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பிப் பாகிஸ்தான் குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அரங்கத்தைச் சுற்றி நின்ற பாகிஸ்தான் ஆட்டக்காரர்களின் கண்களில் குறிப்பாகக் குழு மேனேஜராக வந்த மியான்தாத் கண்களில் – கண்ணீரைப் பார்த்ததாக எனக்கு ஞாபகம்.’ – பி.ஏ. கிருஷ்ணன்

**

சீட்டாட்டம் போலவே கிரிக்கெட் ஆட்டமும் எனக்கு ரொம்ப தூரம். இன்றுவரை இந்த இரண்டுமே எனக்கு சற்றும் புரியாததால் மகாஜனங்களுடன் ஒன்றமுடியாத மனநிலை. மகனை விடுங்கள், இதற்காக மனைவியே என்னை வெறுக்கிறாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆனாலும் அதைவைத்து நண்பர் மணிக்கு ஒரு செய்தி சொல்லலாம் என்றுதான் மேலே ஆடினேன். அதன் பெயர் என்ன, ‘டக்’ஆ? நீங்களே மேய்த்துக் கொள்ளுங்கள். பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் ‘தமிழர்களும் வெகுதூரம் வந்துவிட்டார்கள்’ கட்டுரையில் கண்டதுதான் மேலேயுள்ள பத்தி. அவர் சந்தேகத்தோடுதான் முடிப்பார் கடைசியில். வேண்டுமென்றுதான் அதை நான் இங்கே சேர்க்கவில்லை. எனக்கு சந்தேகமுமில்லை. நீங்கள் புத்தகத்தை வாங்கிப் பார்த்துக்கொள்ளுங்களேன்.  நூல் : அக்கிரகாரத்தில் பெரியார். காலச்சுவடு வெளியீடு. படு சுவாரஸ்யமான புத்தகம். மதிப்பிற்குரிய இராம.கி ஐயா அவர்களுடன் அவர் நடத்திய விவாதத்தையும் ரசித்துப் படித்தேன். மெய்ப்பொருள் காண்பது அறிவு! நூலிலுள்ள ‘வடிவியலின் கதை’ மட்டும் கொஞ்சமும் புரியவில்லை. மூச்சு நின்றுவிட்டது! ‘கணிதம் என்பது பாவப்பட்ட மனிதர்களின்மீது செலுத்தப்படும் பயங்கரவாதம்’ என்பதை கிருஷ்ணன் மறுக்கலாம்; நான் மறுக்கமாட்டேன். பட்டபாடு அப்படி சார்!

நூலின் பல இடங்களிலும் , (உச்சாணிக்கொம்பிலிருந்து இறங்க மறுக்கிற) ‘பாப்பனத்திமிர்’ என்று துணிச்சலாகச் சொல்கிற இந்தப் ‘பார்ப்பன’ எழுத்தாளரின் நடிப்பற்ற கோபத்தை நன்றாக நான் உணர்ந்தேன். பாகிஸ்தான் பாடப் புத்தகங்களில் காணப்படும் மதவெறியைச் சொல்லும்போதும் (The Subtle Subversion – The State of Curricula and Textbook in Pakistan – compiled by Nayyar and Ahmed Salim), தாரிக் அலியின் புத்தகத்தின் ( The Clash of Fundamentalism) முக்கியமான பகுதியாக அன்வர்ஷேக்-ஐ சொல்லும்போதும் (கூடவே , அபு அல் ஆலா அல் மாரியின் கவிதை வேறு!  ‘The Prophets, too, among us come to teach, Are one with those who from the pulpit preach; They pray, and slay, and pass away, and yet Our ills are as the pebbles on the beach..’)  கிருஷ்ணன் மேல் எனக்கு எரிச்சல் வந்ததுதான். சொல்ல இயலாத முஸ்லிமாயிற்றே! ஆனால் , பெரியார் பற்றிய கட்டுரையில், தன் கீழ் வேலை பார்க்கும் ஒரு தலித் அதிகாரியை சக (பிராமண) அதிகாரி ஒருவர் கடுமையாக அவதூறு செய்ததை, ‘எனக்கு மலத்தை மிதித்த உணர்வு ஏற்பட்டது. அந்த மலம் தோய்ந்த செருப்பாலேயே அவரை அடிக்கவேண்டும் என்று தோன்றியது’ என்று அவர் எழுதும்போதும், ‘மனுஷ்ய வித்யா‘ கட்டுரையில் ‘நான் மார்க்ஸ் சொன்ன De Ominbus Dubitandum (எல்லாமே சந்தேகப் படத் தக்கது) என்ற கூற்றை நம்புபவன். ஆனால் ஒரு கிறித்துவத் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து சுற்றிப் பார்க்கும் போது என்னை அறியாமல் கண்களில் நீர் வந்து விட்டது’ என்று எழுதும்போதும் என் கண்களில் நீர் நிறைந்து விட்டது.

போதும் சீரியஸ் மேட்டர்.

என்னைபோலவே பி.ஏ கிருஷ்ணனுக்கும் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ (மலர்ச்சி) கதை பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. சு.ராவோடு கிருஷ்ணன் பேசும்போது ஒரு தமாஷ். யாருடைய வீட்டைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

‘பெருசோ?”

‘தொலைஞ்சு போயிடலாம் கிருஷ்ணன்”

சு.ராவை தோற்கடிக்கிறார் கிருஷ்ணன் , தன்னுடைய ‘ஆசிரியப்பணி‘ குறித்த ஒரு கட்டுரையில் (இது நூலில் இல்லை). நண்பர் நாகூர் ரூமி கவனிக்க வேண்டிய பகுதி இது! :

‘நான் ஆசிரியப் பணியைவிட்டு வெளிவரத் தீர்மானித்த ஆண்டில் தான் மதுரையில் கல்லூரி ஆசிரியர்களுக்காக ஒரு அமைப்பு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது. அதன் செயல்பாடுகளின் விளைவாகக் கல்லூரி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று எனது நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகள் குறைந்துவிட்டதாக எனக்குத் தெரியவில்லை’

*

நன்றி : காலச்சுவடு , பி.ஏ. கிருஷ்ணன்

*

சில சுட்டிகள் :

 ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள் – பி.ஏ. கிருஷ்ணன்

‘புலிநகக் கொன்றை நாவலை’ முன்வைத்து, திரு. பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுக்கு ஓர் திறந்த மடல். – – தாஜ்

அடிப்படைவாத மோதல்கள் – தாரிக் அலி பற்றிய குறிப்புகள்  : எச். பீர்முஹம்மது