சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (23)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22 |

அத்தியாயம் 23

ஆபிதீன்

*

23.02.1996 கேஸட்டிலிருந்து ‘S’:

‘பல் இடுக்குல ஒரு துரும்பு மாட்டிக்கிட்டா பார்வை எங்கே அலைஞ்சாலும் கவனம் பூரா துரும்புலதான் இருக்கும். அப்படி நீங்க ரியாலத் பண்ணனும்’
*

‘இப்ப இருக்குற உலக வாழ்க்கையை விட்டு ஏதோ கீழே – debthக்கு போறோம்; இன்னொரு உலகத்தோட ‘டச்’ வைக்கிறோம்குற மாதிரி படுதா?’ – ‘S’

‘நம்மளை மறக்குறோம், அது தெரியுது’

‘நம்மளைண்டா? எல்லாத்தையும் மறந்துடுறோம்! மறந்தபிறகு, மறக்குற நாம Astralதானே? அது எங்கே இருக்கு? இந்த உலகத்தோட கட்டுப்பாட்டுலேர்ந்து விலகி நிக்கிது. Detatchment இருக்கும். வேற ஒரு planetக்கு போறதா நல்லா தெரியும். உத்துப்பாருங்க’

*

‘மூச்சை இழுத்து , அடிவவுத்தாலெ கண்ட்ரோல் பண்ணி , ஒருதரம் (மூச்சை) விட்ட உடனேயே நாம வேற நிலைக்கி மாறுறோம்டு தெரியுதா? எவ்வளவு ‘வீக்’கா செஞ்சாலும் சரி, இது செய்யும்போது, பழைய நிலையிலே நாம இல்லேண்டு தெரியும். அப்ப எங்கே இருக்கிறீங்க? இப்ப, இந்த உலகத்தோட இருக்குறதனாலே இங்கேயுள்ள வைப்ரேசன், இங்கேயுள்ள ‘alien force’லாம் கண்ணுக்கு தெரியாது. அங்கே போனா தெரிய ஆரம்பிக்கும். காட்சிகள்லாம் வரும். சில நேரங்கள்லெ ‘ரியாலத்’ பண்ணுறது கம்ப்ளீட்டா மறந்துபோயி எங்கேயோ இருக்குறமாதிரி தெரியும். சொல்லப்போனா , உலகத்திலேயே அல்ல. உலகத்துலேதான், உலகத்தைவிட ’டீப்’பான ஃபோர்ஸ்லெ நீங்க ஐக்கியமாகிட்டதா தெரியிறதோட.. அதுலெ நீங்க ஒரு பகுதி, இவ்வளவு நாளா யூஸ் பண்ணாம இருந்துறிக்கீங்க அந்த சக்தியைண்டு தெரியும்.’

’இதுலெ’ ‘alien being’ட ‘டச்’ ஏற்பட்டிருக்குதா யாருக்காவது? மேல் உலகத்து சக்திக்குதான் alienண்டு சொல்றது. Three Dimensionக்கு மேற்பட்டது. Four அல்லது Five Dimension கொண்டது. நம்மள்ட்டெ உள்ளதுதான் அது! தெரிஞ்சா சரி, தெரியலைண்டு சொன்னா ஏதாச்சும் காட்சி, உருவம் வந்து பயப்படுறமாதிரி தோணுதா? அப்படி வந்தா பயப்படமாட்டீங்கள்லெ?’டக்’குண்டு அப்ப ஒரு ஆளு வந்து நிண்டா அதிர்ச்சி வராது? பார்ப்பீங்க? ம்..

நாம ‘Sleeping Giant’ கூடத்தான் பேசிக்கிட்டிக்கிறோம், பழகிக்கிட்டிக்கிறோம் – மொழி இல்லாமல்.

ஒரு Bodyயோட இன்னொரு Body சேரும்போது உறவு – உடலுறவு – வைக்கிறமாதிரி தெரியும். ஆக்சுவலா தெரியும். ‘குப்பி’யடிக்கிற மாதிரி! ஒவ்வொரு ஆம்பளைக்குள்ளேயும் ‘அனிமா’ இருக்கு; ஒவ்வொரு பொம்பளைக்குள்ளேயும் ‘அனிமஸ்’ இருக்கு. ஒவ்வொரு ஆம்பிளைட்டேயும் ஒரு பெண்ணிருக்கு; ஒவ்வொரு பொம்பளையிட்டேயும் ஒரு ஆண் இருக்கு. இதை பிறகு சொல்கிறேன். செக்ஸுவல் இண்டர்கோர்ஸுங்குறது லேசான காரியமா நினைக்காதீங்க. உலகத்துலேயே அதைவிட சிறந்த ‘தஸவ்வுஃப்’, ‘ரூஹானியத்’ கிடையாது. இதைச் சரியா செய்யாத காரியத்தினாலே அந்த லாபத்தை நீங்க அடைய முடியாம பொய்டுது. உறவு வைக்கிற Bodyகள்லெ, ஸ்ட்ராங்கா இருக்குற bodyக்கு, ஒரு பொம்பளை, சுகத்தை எப்படி அனுபவிக்கிறாண்டு தெரியும். நாம Active. அவள் passiveலெ? சுத்தமா தெரியும். நான் சொல்றது உண்மை. அந்த உண்மை வெளிவரும். ‘பொம்பளை சுகம்’டு நீங்க இமேஜின் பண்ணிக்கிறது ,மழை பெய்யும்போது தெறிக்கிற துளி மாதிரி, ஆக்சுவல் மழை அல்ல. இந்த உண்மை நீங்க ‘ரியாலத்’, பண்ணிக்கிட்டிக்கிம்போதே வரும். இது அபூர்வமானதுமல்ல, எல்லாத்துக்கும் வரும். இதுக்கு முன்னாலெ.. செக்ஸை மட்டமானதாகவும் அசிங்கமானதாகவும் நினைக்கக்கூடாது. ரெண்டாவது ஷரத்து , அந்நியப் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. பொஞ்சாதி இல்லேண்டு சொன்னா பொம்பளை பத்தி நினைக்கக்கூடாது. நீ யாரோ, அவள் – அந்த படைப்பு – யாரோண்டு இருந்தாத்தான் அந்த அனுபவம் கிடைக்கும். கிடைச்சாகனும். எச்சியை துப்புற மாதிரி கனவு காணுறது, எச்சியை விழுங்குறமாதிரி காணுறது, விந்து சிதறுறமாதிரி காணுறது, இந்த எல்லாத்தையும் விட ‘டாப்’ இதுதான். நீங்கள்லாம் இண்டெல்லெக்சுவல். பொம்பளை Intutional. அவள் பேசுறது பூரா ‘இல்ஹாம்’. ‘ஏன் வழிகாட்ட மாட்டேங்குறா?’ண்டு கேட்டா , உணர்ச்சி வசப்பட்டுட்டா! உணர்ச்சி வசப்படாத நிலையிலே இருந்திருந்தா பொம்பளையிலே நபிமார்கள் வந்திருப்பாங்க. அதனாலெ, சின்னதுக்குலாம் அவ கவலைப்படுவா.. இதுக்கு மேலே இன்னும் மோசம், மத்தங்கள்ற அனுதாபத்தை எதிர்பார்ப்பா. பெண்ணை மட்டும் நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டீங்க.. வுடவே மாட்டீங்க பொஞ்சாதியை. பெரிய ‘பரக்கத்’ வேலை செய்யும். தொட்டதுலாம் துலங்கும். அவளுவ தலை தூக்க ஆரம்பிச்சா நாமள்லாம் தொலைஞ்சோம். காணாப்பொய்டுவோம்! அவ forceஐ மட்டும் யூஸ் பண்ணுனாண்டு வச்சிக்குவோம், உம்மாடி..! நம்ம ரூட்டுக்கு போன பிறகு சில உண்மைகள்லாம் வெளி வந்துதானே ஆவும்! சுகர்னோ (இந்தோனேசிய முன்னாள் அதிபர்) கண்ட ஃபர்ஸ்ட் கனவு – பயிற்சி பண்ணிக்கிட்டிக்கிம்போது – யாரைப்பத்தி செக்ஸா நினைக்ககூடாதோ, நினைப்பே வராதோ, அவளோட உறவு வச்சமாதிரி. அக்கா, தங்கச்சி, சின்னம்மாவை விட பெரிய உறவு, அந்த வார்த்தையை நான் சொல்ல விரும்பலே. இது தானா உங்க கனவுலே வரும். இதெல்லாம் என்னாண்டு கேட்டா… ஒண்ணுமில்லே… புள்ளை, புள்ளைங்கங்குறதுலாம் மாயை.. பெத்ததுக்காக கடமையைச் செய்ய வேண்டியதுதான். இந்த உண்மையை புரிஞ்சிக்கிட்டீங்கண்டா யார்ட்டெயும் எதிர்பார்க்க மாட்டீங்க.

ஒரு Devine Rule ஒண்ணு இருக்கு. Natural Law. It is a law under the law which is controlling the whole world. We are totolly ignorant of these things. அதாவது , எதை நீங்க செய்யிறீங்களோ , அதுக்குப் பின்னாலெ உள்ள மனப்பான்மை, யாருக்கு செஞ்சீங்களோ அவங்கள்ட்டே எதிர்பார்க்காத மாதிரி இருந்திச்சிண்டு சொன்னா , நீங்க செஞ்சது பெர்ஃபெக்ட். செஞ்ச செயல் ஒண்ணுமே அதுக்குள்ள பலாபலனைத் தராம இருக்காது. ஆனா, இதுலெ என்னா தப்புங்குறேன், ஒரு ஆளுட்டெ சர்வீஸ் பண்ணிட்டு அவங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்காதேங்குறேன். அது இயற்கைக்கு மாறானது. காசு? அது தானா வரும்

இந்த compensatory rule இருக்கே.. ரொம்ப ரொம்ப பவர்ஃபுல். ஆனா அது தெரியாததுனாலே நாம தேவையில்லாம அவதிப்படுறோம். ஆனா இதுதான் எல்லா சிஸ்டத்தையும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டிக்கிது. இது ‘Alien Being’-ஓடு சம்பந்தமுள்ளது. பத்து நாளா ஓதும்போது வராத பலன் , பதினோராவது நாள்தான் வருது, அடைச்ச கதவு திறக்குதுண்டு சொன்னா அப்பதான் Alien Being வருது. நான் பலதரம் சொல்லியிக்கிறேன், ‘ஒரே இடத்துலே ஓதுங்க, ‘மலாயிகத்’து வந்து சுத்துவாஹா.. ஒருநாளு (நீங்க) இல்லேண்டு சொன்னா ஏமாந்து போயிடுவாஹா’ண்டு, இது சிம்பாலிக்கா சொல்றதுண்டு… உண்மை அதுவல்ல. சிம்பாலிக் அல்ல அது, Truth..!’

*

‘அல்லா..அல்லாண்டு கூப்புடுறீங்களே?’ – கலிஃபுல்லா கேட்டான் – ‘ஏன் சாபுநானா, ‘சாபுநானா’ண்டு உங்களை கூப்புடுறேன். ’சாபுநானா சாபுநானா சாபுநானா’ண்டு கூப்புட்டா எப்படி?’ண்டு. இதை சிங்கப்பூருலெ பேசியிக்கிறான். பெரிய அப்ளாஸ் கிடைச்சிருக்கு. அந்த கேஸட் இங்கே வந்திச்சி. நான் சொன்னேன். ‘சாபு நானா’ண்டு கூப்புட்டா, ‘ஏன்?’ண்டு கேட்டேன்லெ?’ – ‘S’

‘ம்’

‘அல்லா, ‘ஏன்?’டு கேட்டானா?’

‘இல்லெ’

‘கேட்குறவரைக்கும் கூப்புடு!’. இந்த பதில் ரொம்ப சிம்பிள். வாயை அடைக்கிறதுக்காக சொன்ன பதில். இதுக்கே பெரிய அப்ளாஸ் கிடைச்சிச்சிண்டு சொன்னா ஜனங்க எவ்வளவு பெரிய மக்கிப் பயலுவா இக்கிறானுவ! அப்ப.. ‘மலாயிக்கத்’து வருவாஹாங்குறது Fact!’ – ‘S’

*

26.08.1996

நேற்று மாலை ஜெப்பார்நானா ·போன் செய்து ‘ஆபிதீன்.. சர்க்கார்ட்டேர்ந்து புதுசா வந்திக்கிது’ என்றார்.

‘ஈரலா , குடலா?!’

‘அட, எப்படி கண்டு புடிச்சீங்க?!’ என்றார். தமாஷ்கூட இனி செய்யக்கூடாது! இது முள்ளில்லா மீனும் ஆட்டுத்தலையும்! நாளை இரவு சாப்பாட்டுக்குப் பிறகு , சஹருக்கு நோன்பு வைத்துவிட்டு , புதன்மாலை நோன்பு திறந்துவிட்டு , பிறகு அன்றைய இரவும் சாப்பிட வேண்டும். மூன்றுவேளை – முந்தைய நோன்பு போல. ஆனால் ‘இஸ்மு’, மிஸ்கினுக்கு சாப்பாடெல்லாம் கிடையாது. சிறாமீன் தவிர வேறு ஏதாவது முள்ளில்லா மீன் என்று எழுதப்பட்டிருக்கிறதாம். போத்தல், காக்கை, வவ்வால்.. பரவாயில்லை, எங்கும் கிடைப்பதுதான். தவிர முன்னதாகவே வேறு தெரிந்துவிட்டது. ஆட்டுத்தலையை இனி மார்க்கெட்டில் வாங்கி, வக்கி, வக்கணையாக செய்யமுடியாதென்றாலும் ‘தலைக்கறி’, பஜாரில் கிடைக்கும் – பெரும்பாலான தமிழ் ரெஸ்டாரண்ட்களில். இந்த நோன்பு யாருக்காக இருக்கும்? ஈரல் விரும்பிய ஆளுக்கு இன்னும் பசியோ? திடீரென்று சர்க்காருக்கு தனது உஸ்தாதுமார்களின் நினைப்பு வந்தால் , எந்த வீட்டையாவது கூப்பிட்டு , தன் உஸ்தாதுக்குப் பிடித்த பதார்த்தங்களையெல்லாம் சொல்லி ஆக்கச் சொல்வார்கள்தான் – மிஸ்கீனுக்கு கொடுக்க. அப்போது, அந்த வீட்டாரும் மிஸ்கீன்களில் ஒன்றாக மாறிக்கொள்வார்கள்! பெரியவர்களுக்கு செய்யும் விசேஷங்களில் பெரியவர்களுக்கு பிடித்தமானது இருந்தால்தான் பெரியவர்கள் ‘பார்த்து’ சந்தோஷப்படுவார்கள். ஒவ்வொரு அவுலியாக்களுக்கும் ஒவ்வொன்று. எளிமையான அவுலியா என்றால் மொய்தீன் பள்ளித்தெரு சாக்குமஸ்தானைச் சொல்லலாம். தோசையும், மிளகாய் சட்னியும். வெளியூர் ஆட்கள் நாக்கூரில் அன்றைய தினம் நுழைந்தால் ஊரே தோசை வாசத்தில் மணக்கும்தான். ‘தீனியில்லா’ தீன் (dheen) என்பது வீண்! எவர்களாலோ , மனசுக்கு சந்தோஷமாய் நாவுக்கு கிடைக்கிறது ஜாஃபர்சாதிக் அவுலியாவின் பூரியான் மாதிரி. அல்லது , நவீன யுகத்தில் முள்ளில்லா மீனும் ஆட்டுத்தலையும் மாதிரி. சிங்கப்பூர் சீனர்கள் இறந்தவர்களுக்கு படைக்கிற விசேஷம் மாதிரியா? அல்லது ரியாலத் பண்ணுபவர்களின் stamina சம்பந்தப்பட்டதா? எதுவோ, சர்க்கார் சொன்னார்கள், செய்ய வேண்டியது. பிறை 13. ஆவணி அவிட்டம் என்று போட்டிருக்கிறது. இதற்காகக்கூட இருக்கலாம்! இருந்தாலும் குழப்பத்திற்கு விடை நேற்று இரவே கிடைத்து விட்டது. கேஸட் கேட்கும்போது. 15-22.03.1996 கேஸட்டில் வருகிறது. நோன்பு சரி, இந்த ஈரல்+ பல்லுகுத்தி + கிட்னி & முள்ளில்லா மீன்+ ஆட்டுத்தலை என்கிற ‘ஷரத்து’? அதெப்படி சரியாக இந்த கேஸட் பதிலாக கிடைக்கிறது?

‘எடுத்ததுக்கெல்லாம் நான் ஷரத்து வைக்கிறதுக்கு என்னா காரணம்டு கேட்டா , ‘ஷரத்’துக்கு உட்பட்டு நடக்கிற மனப்பான்மை வந்துடும். மீறிக்கிடலாம்ங்கிற மனப்பான்மை வராது. பரவாயில்லை’ண்டு சொன்னா இதையும் மீறுவீங்க. எதை மீறக்கூடாதோ அதையும் மீறுவீங்க. கை கழுவிட்டு டவலால துடைச்சிக்கலாம். பீ பேண்டுட்டு டவலால துடைக்க முடியாதுலெ? துடைச்சீங்கண்டா சூத்து கழுவ எவ்வளவு தண்ணி தேவையோ அதைவிட அதிகமான தண்ணி தேவை – அதை கழுவுறதுக்கு. எதைக் கழுவனுமோ அதத்தான் கழுவலாம். எதை துடைக்கனுமோ அதத்தான் துடைக்கலாம். எது கழுவுறது, எது துடைக்கிறதுண்டு உங்களுக்குத் தெரியாது. அதனாலே மீறக்கூடாது (ஷரத்துக்களை). எப்பவாவது மீறுறமாதிரி வந்துட்டா என்னெட்ட கேட்டுக்கிடுங்க. இது மீறத் தகுந்ததுதானா , மீறக்கூடாதா, பாதிக்குமா, பாதிக்காதாண்டு சொல்லிடுறேன்’

இனி மீறமாட்டேன் சர்க்கார். ஆனால் இது யாருக்காக என்பதையாவது சொல்லக்கூடாதா? ஓதுகிற அறையில் நுழைந்து பார்க்கிற மலாயிக்கத்துகளுக்கா? இவைகள் அல்லது இவர்கள் வருவது உண்மை என்றால் இவர்கள் யார்? இறந்த அத்தனைபேரும் வருவார்களா? இந்த வாழ்க்கை கூட இறந்துபோன பிறகு வாழ்வது மாதிரிதான் இருக்கிறது, நான் கூட பிறர் அறையில் நுழைவேனா, நுழைந்திருக்கிறேனா? என் வாப்பா… அவர்களைப் பார்க்க முடியுமா இப்போது? இன்று பகல் ‘தேரா’வில் கேஸட் (29-03 to 05.04.1996) கேட்டுக்கொண்டிருக்கும்போது என் சார்பாக ரவூஃப் கேட்கிறான், இறந்து போனவர்களுடன் பேச முடியுமா என்பது சம்பந்தமாக. ஹம்பக்! பாவம் விக்கிரவாண்டி (ஆவி எழுத்தாளர்). ‘சும்மா! ரியல் ’ஃபேக்ட்’ அல்ல அது.. இறந்தவங்களைப் பத்தி இவங்கள்ற (மீடியேட்டர்) unconsciousலெ என்னா இக்கிதோ அதுதான் வெளிவரும். ஏன்னா, அதே ஆளை இன்னொரு மீடியேட்டர் தொடர்பு கொள்ளும்போது வேற மெட்டீரியல் வருது, வேற செய்தி வருதுண்டு prove பண்ணிட்டான்!’ என்று பதில் சொல்கிறார்கள் சர்க்கார்.

‘நான் அதைக் கேட்கலே..நீங்க சொன்னீங்களே. ஒரு குறிப்பிட்ட நேரத்துலே ஒரு குறிப்பிட்ட இடத்துலே ஒரு ஆளைப்பத்தி கற்பனை பண்ணுனோம்டா அந்த ஆளு வரும், பேசலாம்டு..’

‘ம்.. இது அட்வான்ஸ்டு ஸ்டேஜ்’

‘என் டவுட் என்னாண்டா , இறந்துபோன எல்லாருக்குமே திரும்ப கண்டினியூ ஆகிற கெபாசிடி இல்லேங்கும்போது நாம நினைக்கிறவங்க, அந்த கெபாசிடி உள்ளவங்களாண்டு எப்படி தெரியும்?’

‘பார்க்க முடியாது. கெபாசிடி இல்லேங்குற மாதிரி ரிஸல்ட் வந்துடும். பார்க்கலாம், அந்த பழைய ரிகார்டு வந்தால் பார்க்கலாம். presentலெ எப்படி இக்கிறாங்கண்டு பார்க்க முடியாது. நடந்து முடிஞ்சதை பார்க்கலாம்’

‘கடந்த வாழ்க்கையை பார்க்கலாமா? புரியலே மாமா..’

‘அட, அவங்க உதாரணமா 50 வருஷம் வாழுறாங்கப்பா. அந்த 50 வருஷம் வரைக்கிம் எப்படி எப்படி வாழ்ந்தாங்கண்டு எடுக்கலாம். இறந்துபோனபிறகுதான் அழிஞ்சி பொய்டுவாங்களே.. அதுக்குப் பிறகு ரிகார்டு இருக்காது.’

‘ஓஹோ! அந்த 50 வருஷ ரிகார்டை அவங்கள்ட்டேர்ந்துதான் வாங்கனுமா?’

‘இல்லெ, அந்த ரிகார்டு இருக்கும். எடுத்துக்கலாம்’

‘நமக்குத் தெரிஞ்சிடும்?’

‘ம்..’ – ‘S’

**

இன்று இரவு ’மச்சி மார்க்கெட்’ போகச் சொன்னேன், மஸ்தான் மரைக்கானை- காலையில். முதல்நாளே சொன்னால்தான் செய்யமுடியும் என்று முன்பு சொன்னானே அவன்.. இப்போது, ‘இதெல்லாம் ஒருவாரத்துக்கு முன்னாலெ சொல்லனும்ப்பா’ என்றான். சொல்லலாம்தான். அப்போது சர்க்காரே இதைச் சொல்லியிருக்கவில்லையே. ஒருவேளை அதனால்தான் அப்படி சொல்லச் சொல்கிறானோ? இன்று இரவு, பெட்டி கட்ட கராமா போகவேண்டும் என்றான், ஃபாத்திமா இடத்திற்கு. மச்சான் அலாவுதீன் இன்று இரவுதான் வரச்சொன்னாராம். கேட்ட எனக்கு எப்படியோ இருந்தது. தனியாக காசுகொடுத்து செய்யச்சொன்னாலும் மறுக்கிறானே என்று. ஒவ்வொரு முறையும் நோன்பில் பஜாருக்குப் போய் அலைந்துதான் கடையில் வாங்கிக்கொண்டு அவீருக்கு வரவேண்டுமா? என்ன இது? புழுங்கிற்று மனது. அடுத்த 10 நிமிடத்தில் மஸ்தான் மரைக்கான் ஃபோன் செய்தான். அலாவுதீன் ஃபோன் செய்தாராம், பெட்டி கட்ட நாளை இரவு வந்தால் போதும் என்று! மீன் வாசம் மணக்கிறது..
*

27.08.1996

அருள்மீனும் ஆட்டுத்தலையும் (1/3) சாப்பிட்டுவிட்டு!

நன்றாகத்தான் இருக்கிறது இந்த காம்பினேஷன். பி.யூ.சி எழுதிவிட்டு ரிஸல்ட்டுக்கு காத்திருந்த நேரத்தில் , கீழக்கரையிலுள்ள சொந்தக்கார கல்யாணத்திற்கு போயிருந்தபோதுதான் இம்மாதிரி விசேஷமான காம்பினேசனை முதன்முதலாக ருசி பார்த்தேன். இடியாப்பத்தில் மோர் ஊற்றி , மாசி சம்பாலை தூவிப்பிணைந்து , அனைவரும் சுழாட்டினார்கள். அதுமாதிரி இப்போது. அடுத்த நோன்புக்கு என்ன, பிரியாணியில் மொளவுத்தண்ணியை ஊற்றிக்கொண்டு திங்க வேண்டுமா? ரெடி! ஆனால் ‘தலைக்கறி’ கிடைத்தது அதிர்ஷ்டம்தான். இல்லையேல் இன்று இரவு ‘தேரா’ போய் வாங்கி வந்திருக்க வேண்டும் நான்.

தேராவில் நேற்று கடுமையான லேபர் செக்கிங். ஆட்களை அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்து தௌஃபீக் தலைதெறிக்க ஓடிவந்திருக்கிறான்.

நானும் ஃபுஜைராவில் முதன்முதலாக காலடி எடுத்துவைத்ததிலிருந்து துபாயில் விசா மாற்றும் வரை திருடனாக ஓடிதான் ஒளிந்திருக்கிறேன் என்றாலும் இப்போது திடீரென்று சட்டம் கடுமையாகி விட்டது. வரும் செப்டம்பர் இறுதிக்குள் illegal workers அத்தனைபேருக்கும் கெடு. விசா இல்லாதவர்கள், பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்குள் வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் அதற்குமேல் பிடிபடுபவர்கள் 30,000 திர்ஹம் கட்டிவிட்டு மூன்று வருடம் ஜெயிலில் இருக்கவேண்டும். இவர்களுக்கு உதவுபவர்களுக்கு 15 வருட சிறைத்தண்டனையும் 15000த்திலிருந்து 100000 திர்ஹம் வரையும் அபராதமும். போலீஸ் ரிகார்டுகள், கள்ளத்தனமாக கடந்த 20 வருடத்தில் 25000 பேர் நாட்டில் நுழைந்ததாக கூறுகின்றன. இதற்கும் பத்துமடங்கு அதிகமான ஆட்கள் நுழைந்திருந்தும் அவர்கள் கள்ளத்தனமாக போலீஸ் ரிகார்டை எடுத்துவிடுவார்கள். அதிகமான ஊடுருவல் என்று பார்த்தால் அரபுநாட்டில் சௌதிதான். புனித ஹஜ்ஜூக்கு புறப்படும்போதே பாதிப்பேருக்கு திரும்பக்கூடாதென்றுதான் சங்கற்பம்! அல்லாஹ்வின் நாட்டம். துபாயில் புனிதம் கம்மிதான். ஆனாலும் இவர்களை ‘சுத்தப்படுத்த’த்தான் வேண்டும்.

தௌஃபீக்கிற்கு விசா validity இருக்கிறதுதான். ஆனால் வேலை தனியாக பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி விசாக்களை – தன்னிடம் வேலையில்லாமல் – விற்கிற அரபிகளுக்கு ஏதும் தண்டனை உண்டா? முதலில் அவர்கள் அரபிகள்தானா? ஆட்களைப் பிடிக்கிற ஆட்களுக்கு முதலில் உருப்படியான பாஸ்போர்ட் இருக்கிறதா? பயந்துபோகிற ஆட்கள் ஆயிரமாயிரமாய் இந்திய பாகிஸ்தானிய தூதரகத்தில் கூடி நிற்கிறார்கள் – வெளியேற. Consulate facing problems as queues get longer என்கிறது பத்திரிக்கை. இந்தியத் தூதுவர் திரு. பிரபுதயால் , தூதரகம் மாலை 5 மணிவரை வேலை பார்த்தும் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுக்காமல் இருந்தும் ஒரு நாளைக்கு 500 பேர்களைத்தான் பார்க்க முடிகிறது என்று அலுத்துக்கொள்கிறார். 501வது நபர் அவராகக் கூட இருக்கலாம்!

அந்தந்த கம்பெனி விசாவோடு அந்தந்த கம்பெனிகளில் வேலைபார்ப்பவர்களுக்கு நல்லதுதான். எடுத்ததெற்கெல்லாம் ‘உன்னைவிட பாதி சம்பளத்தில் வெளியில் ஆயிரம் பேர் அலைகிறார்கள்’ என்று அரபி சொல்லமாட்டான் – சம்பளம் கூட்டாவிட்டாலும். ஆனால் குறைந்த காசுக்கு வேலைபார்க்கிற கூலித்தொழிலாளர்கள் இல்லாமல் கம்பெனி ஏது? இனி அம்மாதிரி வேலைக்கு வருபவர்களுக்கு விசாவோடு மற்ற சட்டதிட்டங்களுக்கு உட்படவேண்டும் என்றால் கம்பெனிதான் தாங்குமா? லீவ் சம்பளம், கிராஜுவடி என்கிற கெட்டவார்த்தைகளையெல்லாம் கேட்கவேண்டி வரும். அரபிகளுக்கு சிரமம்தான். ஆனாலும் வழி வரத்தான் போகிறது. இது துபாய். ‘விச்சா’ மந்திரத்தை 24 மணி நேரமும் ஜபிக்கும் நகரம். அபுதாபிக்கும் ஷார்ஜாவுக்கும் என்ன, ஆயில் கிடைக்கிறது. துபாயின் ஜீவமரணம் வியாபாரத்தில் இருக்கிறது. சமயத்தில் தன்னை விற்றுக்கொள்வதும் கூட வியாபாரத்தில் ஒரு தந்திரம்தான். அத்தனை illegal workersஐ வெளியேற்றிவிட்டு ’லீகல்’ஆக இனி குறைந்த சம்பளக்காரர்களை கொண்டுவரும் அது. ஆப்ரா தண்ணீரின் லாவகம்.

ஆனாலும் , ஈராக் யுத்தத்திற்கே பயப்படாதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்தான். அதுவும் தமிழர்கள் புலிப்பால் குடித்தவர்கள். சிங்கப்பூர் பிரம்படியை விடவா இது? 30,000 திர்ஹம் ஃபைன்? போடு, காசில்லே! சிறையில் அடைக்கிறாயா, சந்தோஷம். சாப்பாட்டுக்காசு மிச்சம்! ஆனால் அங்கும் ‘கந்தூரா’ உடுத்தக்கூடாது என்று சட்டம் அமுலாகுமா? இரண்டு நாளாக இது ஒரு வதந்தி. 500 திர்ஹம் fine..நாட்டுக் குடிமக்கள், அரபுக்காரர்கள் தவிர வேறு எவரும் ‘கந்துரா’ அணியக்கூடாது என்று. பர்துபாயில் ‘கந்துரா’ அணிந்துகொண்டுபோன மலையாளி ஒருவனை போலீஸ் (?) பிடித்து உடைகளை வெட்டி விட்டது. இப்போது நாட்டில் அதிகரித்திருக்கிற கொள்ளை, கொலைகளை கந்துரா அணிந்த வெளிநாட்டுக்காரர்கள் செய்கிறார்களாம். பார்த்தால் ‘பைத்தியக்காரன்’ என்று விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்களா? உண்மை தெரியவில்லை. உண்மையாக இருந்தால் அரபி வேஷம் போடும் அரபுக்காரர்களின் அமெரிக்க ஆடைகளுக்கு என்ன சட்டம்?

‘இதெல்லாம் என்னாப்பா! சட்டம் போடும்போது என்னெட்ட கேட்டுட்டு செய்ய மாட்டேங்குறானுவ இப்பவுலாம்’ என்கிறான் மஸ்தான் மரைக்கான்.

‘சரி, நீதான் ஷேக் ஜாயித் அல்லது ஷேக் மக்தூம். நம்ம ஆளுவளுக்கு உபயோகமா ஒரு சட்டம் போடு இப்ப!’

‘எல்லாரும் ஊருக்கு போய் பொண்டாட்டி புள்ளையோட சந்தோஷமா இரி..!’

‘நீ?’ என்று கேட்டேன்.

‘நான் போகமாட்டேன்பா’

‘ஏன், பொண்டாட்டி புள்ள சந்தோஷமா இக்கினும்டுதானே?!’ – செல்லாப்பா வெடைத்தான்.

*

அபுதாபியில் அதிரடி நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது என்று பத்திரிக்கை செய்தி. முதல் அதிரடி : நகர சுத்தம். ரூமுக்கு 20 பேர் இனி இருக்கக்கூடாது. நகரத்தில் ரூமுக்கு இரண்டு பேர்தான். என்ன செய்வோம்? ‘முஸாஃபா’வுக்கு போ, இன்னும் தூரத்திற்கு போ’ மீறி இருந்த கட்டிடங்கள் சிலவற்றில் தண்ணீர் மின்சாரத்தை நிறுத்திவிட்ட அரசு அதை பத்திரிக்கைகளிலும் போட்டது. இவ்வளவு சாந்தமாக தெருவிலும் பூங்காவின் நடைபாதைகளிலும் உட்கார்ந்திருக்கிற நூற்றுக்கணக்கானவர்கள் தென்னிந்தியவர்களைத் தவிர யாராக இருக்க முடியும்? ஃபோட்டோவை நன்றாக உற்றுப்பார்த்தேன். இப்ராஹீம் தென்படவில்லை. துபாய்க்கு ஓடி வந்துவிட்டாரோ? வரும்போது ‘கந்துரா’ அணிந்திருந்தாரா? அல்லது அத்தனை துன்பத்திலும் தங்குமிடம் கொடுக்கிற சவுதியே பரவாயில்லை என்று அல்-கர்ஜூக்கு போய்விட்டாரா? அங்கு கந்துரா அணியலாமா? அல்லது வெளிநாட்டவர்கள் கோவணம் மட்டும் கட்ட வேண்டுமா? அதுகூட வெள்ளை வண்ணத்தில் இருக்கலாமா இல்லையா? இப்போதெல்லாம் கோவணம் அணிந்தவர்கள்தான் கொள்ளைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் கோவணத்தைக் காப்பாற்றிக்கொள்ள கொள்ளை தேவையல்லவா?

**

28.08.1996

நோன்பு முடிந்துவிட்டது. ‘தலைக்கறி’ மட்டும் ஊசிப்போய்விட்டது. நேற்றிரவே ஒருவகை வாசம்தான் , சஹருக்கு. காலையில் கடுமையான வயிற்றுவலி வந்தது. நோன்பை விட்டுவிடலாமா என்று வந்தது. ஆனாலும் 5 நிமிடம் வலியையே பார்த்துக்கொண்டிருந்தேன். வலி ஊசிப்போய்விட்டது! இதெல்லாம் சர்க்காரிடம் சொல்லவேண்டும். மஸ்கட் ஹம்தான் டிரேடிங்கிற்கு ஓட்ஸ் அனுப்புவது சம்பந்தமாக கப்பமரைக்கார் பழைய proformaவை தேடிக் கொண்டிருந்தார். மொயீன்ஷாஹிப், முஹம்மது மம்ஜாரின் சொந்தவேலைக்கு (‘கந்துரா’ வாங்கவோ?) கராமா போயிருந்தார். ஃபைல்களைப் பொறுத்தவரை கப்பமரைக்காருக்குத் தெரியாத இடம் இல்லை. நான் சாதாரணமாக் மொயீன்சாஹிபின் மேசைக்குப் பின்புறமுள்ள சிறிய சாம்பல் கலர் பெட்டியிலுள்ள தொங்கும் ஃபைல்களை பார்க்கச் சொன்னேன். கப்பமரைக்கார் ஒரு மணி நேரமாக தேடியது அங்குதான் இருந்தது. உங்களுக்கு எப்படித்தெரியும் என்றார் சர்க்காருக்கு தெரியுமே! என்னின் எதைத் தூண்டி இப்படி சொல்ல வைக்கிறார்கள்? பார்த்துக்கொண்டே இருக்கிறார்களோ?

இரண்டு மாதமாக என்னை யாரோ உற்றுப்பார்க்கும் உணர்ச்சி இருக்கிறது. அது நானாகத்தான் இருக்க வேண்டும். சர்க்கார் ஏற்படுத்திய நான். ஆனால் பார்க்க பயம். இதுதான் எனது Astral bodyயா? அதை ஒரு புனிதமாகவும் பார்க்கவேண்டாம்தான். ‘ரியாலத்’தில் பிரிந்து சேரும் Astral bodyயின் postureஐ ஒரு சீடர்தான் கேட்டார். ‘அது பின்பக்கமாக திரும்பி போய் அப்புறம் சேரும்போது முன்பக்கமாக வரும்தானே சர்க்கார்?’ என்று.

‘ஆமா போகும்போது சூத்தைக் காமிச்சிட்டே போகும். வரும்போது சுன்னியைக் காட்டிக்கிட்டு வரும்!’ என்றார்கள் ‘S’.

ஒருவேளை , பார்த்து, அவைகள் இல்லாமலிருந்தால் ‘திகீர்’ப்பாயிருக்குமே என்ற பயத்தில் பார்க்கவில்லை நான்?

ஆனால் Astral travel சாத்தியம். 29-03 to 05.04.1996 கேஸட்டில் ரவூஃபின் ’Astral டிராவல் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு அவர்களின் பதில்:

‘Body ஒரு இடத்தை விட்டு ஒரு இடத்திற்கு பிரயாணம் பண்ணுறதுதான் Astral டிராவல்’

‘Physical’ஆவா?’ – பரமசிவம்

‘ஒரு ஆளைப்பார்த்தா physicalஆ தெரியும். ஆனா தொடமுடியாது. தொட்டா புரியாது. அவர்களுக்கு நம்மளை தெரியும். ஆனா அவங்க தெரிஞ்சிக்கிறதுக்காக, what is whatண்டு கண்டுபுடிக்கிறதுக்காகத்தான் Astral டிராவலை யூஸ் பன்றதே தவிர பொழுதுபோக்குக்காக, யார்ட்டெயும் பேசிக்கிட்டிக்கிறதுக்காக அல்ல. பேசிக்கிட்டிருக்கனும்டு சொன்னா நம்மள்ட்டெயே எவ்வளவோ ஃபோர்ஸ்கள் இருக்கு. அதோட தொடர்பு ஏற்படுத்தி ,கூப்புட்டு வச்சி , பேசிக்கிட்டு உட்கார்ந்திருக்கலாம். அதுக்காக வெளியூர்லெ போய்த்தான் பேசனும்டு என்னா இருக்கு? இது graphicஆ ஃபோட்டோ எடுக்குறமாதிரிதான் . ஆனா இதுலெ ஒரு பெரிய தொல்லை இருக்கு. எங்கெயாச்சும் நாம டிராவல் பன்றதா வச்சுக்குவோம். அங்கே ஒரு ஆக்ஸிடெண்ட், கொலை நடந்திருக்குண்டா அங்கே நம்மளை எல்லோரும் பார்த்திருப்பாங்க. அவன்ட்டெ போயி விளக்க முடியாதுலெ – நான் Astral டிராவல்லெ போயி அங்கே மயிர் புடுங்கிக்கிட்டு இருந்தேண்டு!’

‘நம்முடைய பெர்ஸனல் காரியங்களுக்காக வேற இடத்துக்கு போக முடியாதா?’ – ரவூஃப்

‘போகலாம்ப்பா.. அந்த நிலைக்கி வந்தபிறகு அதெல்லாம் தேவைப்படாது. பேசுறதுங்குறது கருத்துப் பரிமாற்றம்தானே? அதை telepathically சொல்லிடலாம். அல்லது ரிஸீவ் பண்ணிக்கிடலாம். டிராவல் பண்ணி பேசனும்டு என்னா இக்கிது?’

‘(ஜனங்களுக்கு) சர்வீஸ் பண்ணுறதுக்கு போவலாமுல்லெ?’

‘நீங்க உங்க சக்தியை வளர்த்துக்கிட்டாலே அது பெரிய சர்வீஸ்தான். யார்யார் கூடவுலாம் தொடர்பு வச்சிருக்கீங்களோ அவங்களுக்குலாம் நன்மை கிடைக்கும். இதுக்காக அமெரிக்கா போகவேண்டியதில்லே. இது மாதிரி பண்ணுற அமெரிக்கன் அங்கே எத்தனையோ பேர் இருப்பானுவ’ – ‘S’-ன் சர்வீஸ்.

**

23.02.1996 கேஸட்டின் தொடர்ச்சி :

‘நீங்க பயப்படுவீங்களா?’ண்டு ஏன் கேட்டேன்டா சில நேரத்துலெ ‘அது’ உருவமா தெரியும். பத்து நாளு வராதது பதினோராவது நாளு வரும். வர்றதுக்குள்ள பாதை – மெயின்-ஆன பாதை, மனிதத்தன்மையை அழிச்சிட்டு நீங்க தெய்வத்தன்மையோட நெருங்கனும் .மலாயிக்கத்தோட வாழ்க்கையை வாழ முயற்சி பண்ணிக்கிட்டிக்கும்போது நீ இங்கே அழுக்கு சட்டையை போட்டுக்கிட்டு, தலைக்கு எண்ணெய் தடவாம, பொண்டாட்டி புள்ளைய நடுரோட்டுலெ உட்டுட்டு போவனும்டு அவசியமில்லே..ரொம்ப செழிப்பா வாழலாம். ஆனா வெளியே தெரியக்கூடாது. அதுக்கு முதல்லெ தைரியம் வேணும். நானிருக்கும்போது உங்களுக்கு என்னா பயம்?

எது எப்ப நடந்தாலும் சரி. அதிர்ச்சியடையாம இருக்கனும். இதுக்கு பெஸ்ட் வழி என்னா? ரியாலத்துலெ கொசு கடிக்குதா? கடிக்கட்டும்டு கொசுவை மறந்துடனும். டீ குடிக்கும்போது சிந்திடுதா? ஒண்ணு கழுவனும், இல்லெ உட்டுடனும். சிகரெட் குடிக்கும்போது சாம்பல் மேலே வுழுதா? வுழுந்துட்டு போவட்டும்டு இருக்கனும். அப்பத்தான் வலிமை வரும். நீங்க இதெல்லாம் செய்ய வேண்டியதில்லே. ரியாலத்-ஐ மட்டும் கரெக்டா செய்யுங்க. நீங்க நினைக்கிறமாதிரி சாதாரண ஹிப்னாடிக் பயிற்சி அல்ல இது’ – ‘S’

‘கிட்டத்தட்ட 15 வருடத்துக்கு முன்னாடி இந்தமாதிரி பயிற்சிலாம் எனக்கு தராமலே மேலிடத்து தொடர்புகள்லாம் கிடைக்கிறமாதிரி, பவர் வந்தமாதிரிலாம் இருந்திச்சே.. கனவுலெ.. அப்ப என்னா மனநிலை?’ – மீராமெய்தீன்.

‘சரி, ரசூலுல்லாவை பார்க்க கூட்டிட்டு போகும்போது திரையை நீக்குறதுக்கு முன்னாடி விந்து வந்திடுச்சி உங்களுக்கு. ஏன் நீங்க முழிச்சீங்க? விந்து எவ்வளவு உசத்தி தெரியுமா? என்னா பொருள் அது..!’

‘அப்ப சிம்பிளா கூட்டிட்டுப் போனீங்களே..இப்ப இவ்வளவு பயிற்சி..’ – இழுக்கிறார்.

‘ஆமா அப்ப சிம்பிளா கூட்டிட்டு போனேன். நான் கூட வந்தேன் அப்ப. இப்ப உங்களையில்ல போகச் சொல்றேன்? முதல்லெ டார்ச்லைட்டை நான் கையிலெ வச்சிருந்தேன். இங்கே பார்த்துவாங்க , இங்கே பார்த்துவாங்கண்டு கையைப் புடிச்சிட்டு போனேன். இப்ப நான் இருக்க மாட்டேன். நீங்களே பார்த்துக்குங்க. சொல்லிக்கொடுப்பேன். நான் இறந்து பொய்ட்டா யார் கூட்டிட்டி போவாங்க? ‘அம்போ’ண்டு நிப்பீங்க நடுரோட்டுலெ. அப்படி நிக்கக் கூடாதுண்டுதான் பாக்குறேன்’ இல்லை, அப்படி உட்டுடுவா?’ – ‘S’

*

‘இப்ப இம்ப்ரூவ்மெண்ட் வருதுண்டு சொன்னா, இவ்வளவு நாளா என்னென்னமோ பண்ணிப் பார்த்தீங்களெ..இந்த மலச்சிக்கல் நீங்குறதுக்கு. பீ கட்டியாத்தானே போனிச்சி? இப்ப மட்டும் சாதாரணா ஏன் வருது? கோபத்தை அடக்கனும்டு சொல்லி எத்தனை தரம் மண்டையிலெ அடிச்சிக்கிட்டீங்க? இப்ப அது எப்படி கண்ட்ரோல் ஆவுது தானாகவே? நீங்க, இன்னொன்னு கண்ட்ரோல் பண்ணும் நிலைக்கி வளர்றீங்க. அது உங்களை கண்ட்ரோல் பண்ணுது. நான் அதைத்தான் Alien Beingண்டு சொல்றேன். அப்படீண்டா ‘மலக்கு’ண்டுதான் அர்த்தம். அப்ப முதல்லெ ‘மலக்கு’ங்குறது ஒரு சக்திக்கு பேருண்டு சொன்னதுலாம்? பச்சைப் பொய்! யார் சொன்னது? நான் சொன்னது! பச்சைப் பொய்யல்ல, அப்போதைக்கு அப்படித்தான் சொல்ல முடியும். அதுக்கு மேலே சொல்லனும்டா சயின்ஸ் ஆதாரம் காட்டுங்க, எவிடென்ஸை புரூவ் பண்ணுங்கம்பீங்க நீங்க’ – ‘S’

**

30.08.1996. வெள்ளி ’செஷன்’ முடிந்து..

இன்று பகல் ஜெப்பார்நானாவை சந்தித்து புதிய இஸ்முகளை வாங்கி வந்தேன். கவுஸ்மைதீன் எழுதியிருந்த கடிதத்தில் ஆட்டுத்தலை, முள் இல்லாத மீனுடன் அவைகள் இருந்தன. அந்த லெட்டர்ஹெட்-ஐ பார்த்தவுடன் வித்யாசம் தெரிந்தது. சர்க்காரின் Star இப்போது பச்சைக் கலரில் அச்சிடப்பட்டிருந்தது. முதலில் நல்ல சிவப்பில் இருக்கும். இப்போது ரஹ்மானியத்தின் வண்ணம். நான் பார்த்துச் சொன்னவுடன் ஜெப்பார்நானாவுக்கும் தெரிந்தது. ‘அட,ஆமா..!’ என்றார். இது கறுப்பு வட்டத்தின் விளிம்பை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் பயிற்சியின் விளைவால் உண்டான பார்வையால் அல்லது ரியாலத்தின் ஊடுருவிப்பார்க்கும் குணமா? ஆனால் பார்வையில் வித்யாசம் இருக்கிறதுதான்.

நேற்றுபகல் , சேத்தபொண்ணின் கல்யாண கேஸட்டில் மீதமிருந்த டேப்பில் , அஸ்ரா – அனீஸின் பழைய வீடியோ கேஸட்டை ரிகார்டு செய்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பிருந்த அனீஸின் சிரிப்பில் , அதன் பேரழகில் , என்னை மறந்து சொக்கி அவனை மானசீகமாக முத்தமிட்டேன். இன்று காலை அஸ்மாவுக்கு ஃபோன் பண்ணும்போது சொன்னாள்.

‘நேத்து உங்க மகன் உங்களை ரொம்ப தேடுனான், திடீர்ண்டு. அவன் உங்களை பார்த்தானாம். வாப்பா வந்தாஹலே.. எங்கேண்டு கேட்டான்.. புள்ளக்கி ரொம்ப நெனைப்பு போலக்கிது..’

நினைப்பா? நான் அவன் பார்த்த, தேடிய நேரம் கேட்டேன். சரியாக நான் அவனை இங்கே முத்தமிட்ட நேரம் – வீடியோவில் பார்த்துக்கொண்டே! பார்வை கூர்மை பட்டிருக்கிறதுதான். ‘உங்க வேலை உங்களை வளர்க்குறதுதானே தவிர பவர் வேலை செய்யுதாண்டு பார்க்குறதல்ல’ என்ற சர்க்காரின் குரல் கேட்கிறது. It is quite natural – துபாய் தண்ணிக்கு தலைமுடி கொட்டுவது போல!

ஜெப்பார்நானா அறையில் உட்கார்ந்திருந்த தஸ்தகீர்நானாவுக்கு , வந்த ஒரு மாதத்திலேயே தலைமுடி பாதியாகப் போயிருந்தது. ‘சே.. இந்த துபாய் தண்ணி’ என்று அந்த மார்க்கண்டேயர் வெறுத்துப்போய் சொன்னார். பாலையில் இத்தனை வசதியான தண்ணியை வரவழைக்க அரசு படும் பாட்டையும் தண்ணீராய் மில்லியன்களை செலவழிப்பதையும் அவர் அறிந்திருக்க நியாயமில்லை. இவரை குளிக்கவிட்டதே தப்பு! தண்ணியின் அருமை உணர்ந்துதான் பெரும்பாலான பட்டான்கள் குளிப்பதில்லை! தஸ்தகீர்நானா காவிரிமைந்தன். அதன் காற்றே போதும் ; குளித்துவிட்டாற்போலத்தான். அவருக்கு வந்த எரிச்சலை இன்னொரு காவிரிமைந்தனான ஜெப்பார்நானா விசிறினார் : ‘ஒண்ணு பண்ணுங்களேன், மஸாஃபி தண்ணி பாட்டில் வாங்கி குளிங்களேன்!’

‘ஏன் தண்ணி பாட்டில்? குளிச்சிட்டதா, குளிக்கிறா கற்பனை பண்ணிக்கிட்டா முடிஞ்சிபோச்சி!’ – நானும் காரியக்காரன்தான்.

‘இது ரியாலத்தை வெடைக்கிற மாதிரில இருக்கு’ என்று தஸ்தகீர் வெறுப்போடு என்னை சந்தேகப்பட்டார்.

நகைச்சுவையே கலக்காமல் கற்பனையில் குளிக்க ஆசைப்படுகிறார் போலும்! மகனார் அனீஸுக்கும்கூட கற்பனை இருக்கிறது. அவன் சிறுவயதில் தன் ஜட்டியைக் களைந்து ஆர்ட் பிரஷ்ஷால் சுத்தம் செய்தவன். ‘நான் ஆர்டிஸ்ட்டோ இல்லையோ, இவன் பெரிய ஆர்டிஸ்ட்’ என்று சர்க்காரிடமும் இதை சொல்லியிருக்கிறேன். இப்போது அனீஸ் படமெடுக்கிறானாம். நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு , தன் லாத்தா அஸ்ராவை , ‘டீ விசிறிவிடு எனக்கு… நான் படமெடுக்கப்போறேன்’ என்றானாம் டைரக்டராக. அஸ்மா சொன்னாள்.

‘நல்லவேளை, படமெடுக்குறேண்ட்டு உன் புள்ள ஜட்டியை களைஞ்சி காமிக்காம இருந்தானே!’ என்றேன்.

‘அது நீங்க செய்யிற வேலை!’

அவள் ஏப்பம் விடும் சத்தத்தை ஒருமுறை வெடைத்ததற்கு , ‘பேசாத உங்க சூத்தே இவ்வளவு பெரிய சத்தத்தை வுடும்போது பேசுற என் வாயிலேர்ந்து சத்தம் வந்தா என்னாவாம்?’ என்று என்னை வாயடைத்தவள் அவள். இப்போது ஃபோன் வேறு வந்துவிட்ட பெருமை! அடுத்த மாதத்திலேர்ந்து – அட, நாளைன்னையிலிருந்து – Etisalat மேலும் ஒரு திர்ஹத்தை குறைத்துவிட்டது. நேரத்தை அதிகப்படுத்தி , அதிக ஃபோன் செலவில் வந்து நிற்கலாம். அதன் கொடூரமான லாபக்கணக்கை அதிகப்படுத்த. ‘தண்ணி call’க்கு சமமாக வந்துவிட்டால் நல்லதுதான். சர்க்காரிடம் கொஞ்சநேரம் பேசலாம். இன்று குரல்கேட்டு வைத்தது போலில்லாமல். நோன்பு வைத்ததைச் சொன்னேன்.

‘சரி’.

‘வேறு செய்தி சர்க்கார்?’.

‘ஒண்ணுமில்லே’.

சரி!

(தொடரும்)

குறிப்புகள் :

‘S’ – சர்க்கார்
ரியாலத் – ‘SS’ பயிற்சி
தஸவ்வுஃப் – ஆன்மீகப் பயிற்சி
ரூஹானியத் – இறைசக்தி
இல்ஹாம் – உதிப்பு
பரக்கத் – அருள்
மலாயிகத் – வானவர்
சஹர் – நோன்பு பிடிக்கும் இரவு நேரம்
இஸ்மு – மந்திரம்
மிஸ்கின் – பிச்சைக்காரன்
அவுலியா – இறைநேசர்
தீன் – மார்க்கம்
ஆப்ரா – கால்வாய் / படகு
கந்தூரா – அரபிகள் அணியும் உடை
ரசூலுல்லா – ரசூலின் நபி. அல்லாஹ்வின் நபி . முஹம்மது நபி (ஸல்)
ரஹ்மானியத் – நல்லசக்தி
வெடை – கிண்டல்
Etisalat – டெலிஃபோன் கம்பெனி
தண்ணி call – ஊரிலிருந்து டெலிஃபோன் அழைப்பை பெறும் முறை

2 பின்னூட்டங்கள்

 1. தாஜ்... said,

  01/12/2017 இல் 18:03

  நான் விரும்பி வாசிக்கிறேன். என் ஆர்வமோ, என்னை முந்திக் கொண்டு வாசிக்க நிற்கிறது. வாசிப்பினூடே பல கேள்விகள் எழுவது ஒருபுறமென்றால் சரளமாக கிட்டும் பல தெளிவுகள் வியப்பைத் தருகிறது.

  பொதுவில், ஆன்மிக வாசிப்பே என்றாலும் ஓர் திரிலரை வாசிக்கும் நிலை. கிளைமாக்ஸை தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் பிடுங்கி தின்கிறது! சாதித்திருக்கிற ஆபிதீனுக்கு வாழ்த்துக்கள்.

  • 03/12/2017 இல் 11:48

   நன்றி தாஜ். பெயர்களை மட்டும் மாற்றி , அந்த டைரியில் உள்ளதை அப்படியே பகிர்கிறேன். த்ரில்லராகிவிட்டது 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s