அதான் குடும்பம்…! இதான் குடும்பம்…!

நாகூரில் எல்லோருமே ‘பெரும்பேச்சு’ பேசுவார்கள். எழுத்தாளர்கள் என்றாலோ இன்னும் வாய் கிழியும். எனக்குத்தான் மேடையென்றாலே பயம். பெரும் பயம். கழிந்து விடுவேன் கழிந்து. வாப்பா பேசுவார்களாம் தைரியமாக . அவர்களின் நிக்காஹ் மஜ்லீஸில் எழுந்துநின்று ஒரு சிறு உரையாற்றியதாக உம்மா வியந்து போய் இன்றும் சொல்வார்கள். அன்று பேசியதுதான்! சித்தி ஜூனைதா ஆச்சியின் சகோதரர் முனவ்வர் பெய்க் பேசியதைக் கேட்ட அறிஞர் அண்ணா , ‘இவர் இருக்க, என்னை ஏன் அழைத்தீர்கள்?’ என்று – முஸ்லிம் சங்கத்தில் நடந்த – கூட்டத்தில் சொன்னாராம். நீதியரசர் மு.மு இஸ்மாயில் பேசினால் கம்பன் வந்துவிடுவான் என்பார்கள். ஏன், நம்ம பேராசிரியர் நாகூர் ரூமி.. எப்படிப் பொய் சொல்வார் மேடையில்!

தமிழய்யா சண்முக வடிவேல் அவர்கள் பேசினால் பெரும் சிரிப்பலைகள் கிளம்பும். அமர்க்களப்படுத்துவார். தனி சி.டிக்களும் வெளிவந்திருக்கின்றன. அவருடைய மாணவரான ஜபருல்லாவிடம் இருக்கு. எனவே , தரமாட்டார். விடுங்கள், இந்தப் பட்டிமன்ற நகைச்சுவைகள் இருக்கிறதே.. அது ஒரு தனிரகம். ஒரே நகைச்சுவையையே ஒன்பதாயிரம் இடங்களில் சொல்வார்கள். இன்னும் ஓராயிரம் முறை சொன்னாலும் நான் கேட்டுச் சிரிப்பது திருக்குறள் முனுசாமி பேச்சையும் ஐயாவின் பேச்சையும்தான். சமயங்களில் , கேட்காமலேயே சிரிப்பேன்! இந்தப் பதிவிலுள்ளது ‘பொதிகை’ பட்டிமன்றம் ஒன்றில் ஐயா பேசியது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் ரிகார்ட் செய்தது. ‘நல்ல மனிதனை உருவாக்குவது நாடா ? வீடா?’ என்ற தலைப்பென்று ஞாபகம். வீட்டின் சார்பாக மோதினார் ஐயா.

‘இப்ப நான் சொல்றேன், அமெரிக்க ஜனாதிபதி இருக்காரே.. அவருக்கும் எனக்கும் ஒண்ணும் தகராறு கிடையாதுன்னா..?!’ என்று அட்டகாசமாக ஆரம்பிப்பார் இதில். இதை எனது ‘மீஜான்’ கதையின் தொடக்க வரியாக வைத்தேன். இவர் நடத்திய இலக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு தலைமை தாங்கச் சென்ற ஜபருல்லா நானாவுடன் தமிழய்யா சீனி சண்முக ஐயா அவர்களும் நானும் சென்றோம் – திருவாரூருக்கு. (சண்முக வடிவேல் சார் இப்போது திருவாரூரில்தான் வசிக்கிறார்.). அப்போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியை அப்புறம் சொல்கிறேன். எல்லாத்தையும் சொல்லிட்டா கதை எழுத முடியாதுல்ல!

ஐயாவை நினைக்கும்போது தனது நெருங்கிய நண்பரான ஜாஃபர் மெய்தீன்மாமாவின் இறப்புக்கு வந்து , முகத்தை கடைசியாகப் பார்த்துவிட்டு , அவர் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டே சென்றதுதான் ஞாபகம் வரும்.

இந்துவாவது முஸ்லிமாவது கிருத்துவராவது! மனுசனா இருங்க; சிரிங்க. சரியா?