சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (26)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22அத்தியாயம் 23அத்தியாயம் 24அத்தியாயம் 25

அத்தியாயம் 26

ஆபிதீன்

1996diary - img0113.09.1996 வெள்ளி ‘செஷன்’ முடிந்து:

இந்த செஷனில் சர்க்காரின் 09-10.02.95 கேஸட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் கேட்கும்போது புதுசாகத்தான் இருக்கிறது. இதற்கு , ஏற்கனவே கேட்டது மனதில் பதியவில்லை என்று சொல்லலாமா? இந்த டைரியிலேயே அதை Feb 13 to 16 தேதி போட்ட பக்கத்தில் (அத்தியாயம் 03) குறித்திருக்கிறேன்தான் – முக்கியமானவைகளை. குறிக்காதது , சர்க்காரின் பிழைக்கத் தெரியாத தன்மையைச் சொல்லும் சம்பவம்.

சர்க்காரிடம் பெட்ரோமாக்ஸ் லைட் ஒருவர் வாங்கிப்போயிருக்கிறார். போனவர் உடனே திரும்பியிருக்கிறார், அதில் முக்கியமான ஒரு ‘ஸ்க்ரூ’ இல்லையென்று. வழியில்தான் விழுந்திருக்கும். சர்க்கார் , ஒரு எமெர்ஜென்ஸி லைட்டை அவர் கையில் கொடுத்துத் தேடுங்கள் என்று சொல்ல அந்த கந்தூரி கூட்டத்தில் கீழே கிடந்த ‘ஸ்க்ரூ’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அற்புதம்தான். ஆனால் அருமையான வாய்ப்பை சர்க்காரே வீணடித்துவிட்டார்கள். எமெர்ஜென்ஸி லைட்டைக் கொண்டுபோனதும் – ஊரில் கரண்ட் கட் ஏற்பட்டு இருளில் மூழ்க – அவர் அந்த லைட்டின் உதவியால் கண்டுபிடித்தார் என்றால் , ‘இருட்டை உணரும் கராமத்’ கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். சர்க்காரே ‘எவ்ளோ பெரிய முட்டாள்தனத்தை நானும் செஞ்சேன் பாரு! ஹந்திரி லைட்லெ ஊரே தகதகண்டு இக்கிம்போது எமெர்ஜென்ஸி லைட்டை கொடுத்து வுடுறேன் நான்!’ என்கிறார்கள். கேட்டுக்கொண்டிருந்துவிட்டு , ‘ஜம்’ செய்துவிட்டு, சாப்பிடுவதற்கு தந்துரொட்டியை வாங்கப்போனேன். திரும்ப அறைக்கு வந்து கதவைத் திறக்க சாவியைத் தேடினால் சாவியை ஹோட்டலில் விட்டு வந்திருக்கிறேன்! தவறை உணர்ந்து திரும்ப எடுக்கப்போகும்போது , ரொட்டி போடும் சாச்சா ரொட்டியை எடுத்துக்கொடுத்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டார், ‘இதெல்லாம் எங்கே பிழைக்கப்போகிறது?’ என்று. அவர் வலதுகையில் , மணிக்கட்டிலிருந்து புஜம் வரை , தீயில் எரிந்த தோல் காய்ந்து உரிந்து கொண்டிருந்தது. நாலு நாளைக்கு முன்பு ஏற்பட்டது அவருக்கு – கேஸ் சிலிண்டர் வெடித்து. குதா கா சுக்ர்!

கடவுளின் கவனக்குறைவு.. அல்லது கவனக்குறைவு இல்லாமல் மனிதனால் இருக்க முடியாதா?

*

அஸ்மாவுக்கு ஃபோன் பண்ணுவதற்காக இன்று அவீரிலேயே இருந்துவிட்டேன். மஸ்தான்மரைக்கான் ரூமில் இருந்த டெலிஃபோன் வேறு பெயரில் இருந்தது. தெரியாதவர்கள் வந்து உபயோகித்துவிட்டு காசுகொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்று அவன் கம்ப்யூட்டர் பூட்டு போட்டுவிட்டான் – வேறு எண்ணை உபயோகித்து. அனைவரும் கெஞ்சவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தான். கெஞ்சலாம்தான். ஆனால் ஒருமாதம் கழித்து கொடுக்கிற வசதி இருக்கிறது என்பதற்காக இப்படி பண்ணுவது தவறு என்று பட்டது. அந்தப் பணத்தை இப்போதே செலவு செய்தால்தான் ‘பரக்கத்’ என்றும் பட்டது. பரக்கத்திற்காகத்தான் Etisalat இருக்கிறது! டெலிஃபோன் கார்டு வாங்கினாலும் அங்கங்கே உள்ள பூத்-ல் நின்று நேரத்தை விரயம் செய்ய இயலாது. ஆஃபீஸில் ‘ஓசி’யில் பண்ணுவதெல்லாம் கனவாகிப் போய்விட்டது. புதிதாக வந்திருக்கிற ப்ரீபைட் கார்டு வாங்க நினைத்தேன் நான் . ‘0’ திறந்திருக்காவிட்டாலும் எந்த ஃபோனிலும் பேசுகிற நவீன வசதி. நவீனம் அவீருக்கு வரலாமோ? நகரத்திலேயே Etisalat ஆஃபீஸில்தான் கிடைக்கிறது இப்போது. வெளியில் விற்றால் அந்த ‘கோட்’ஐ சுரண்டி உபயோகித்துவிட்டு மறுபடியும் கோட்டிங் செய்துவிடுகிறார்களாம் துபாய் விஞ்ஞானிகள். குலாம்காக்கா, ‘வாங்கி வருகிறேன்’ என்று முந்தாநாள் சொன்னார். நேற்றுமாலை கேட்டேன். ‘அட மறந்துட்டேன் தம்பி..’. என்ன இது.. நாளை ஃபோன் பேசவேண்டுமே , உண்டியலில் அனுப்பிய பத்தாயிரம் ரூபாய் கிடைத்த செய்தி தெரிய.. அப்புறம்.. தௌஃபீக்கிடம் பிள்ளைகளுக்கு கடப்பாசியும், இங்கிலீஷ் டாஃபியும் கொடுத்தனுப்பியதைச் சொல்லவேண்டுமே.. மற்ற நாளிலோ கட்டணம் அதிகம்.. என்று கசங்கிய அடுத்த நொடியில் அவர், தான் உபயோகித்து வைத்திருந்த கார்டைக் கொடுத்தார். இன்று அந்த நம்பரை -அது தரும் குறிப்புகளுடன் அடிக்க – வரவேற்று , 48 திர்ஹம் இருக்கிறது என்றது. பிள்ளைகளிடமிருந்து முத்தங்கள் வாங்கித் தந்தது. கேட்டால் கிடைக்கும்! பிள்ளைகளின் குரலும் சர்க்காரின் குரலும் ரிலாக்சேஷன் கொடுக்க வல்லவை.

*

(70களின் ஆரம்பத்தில் ‘S’ பேசிய) ‘ரிலாக்சேஷன்’ கேஸட் :

‘பொம்பளைய பொறுத்தவரைக்கும் – வயசு எவ்வளவும் இருக்கலாம் – ஜெனரலா 40கூட இருக்கலாம். இஹலை எடுத்துக்குங்க.. இஹ வயசு என்னா? அல்லது, சரி, இஹ 25 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருப்பாஹா? நரை, சுருக்கம் இருந்திருக்காது. குரல்லேயும் குணத்துலேயும் மாறுதல் இருந்திருக்கும். அப்பொ உள்ள அறிவும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருக்கும். இஹலை படுக்க வச்சி, நாம வேலை செஞ்சி, மயக்க நிலையை உண்டாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கி கொண்டு போறோம்..! ‘இப்ப உங்களுக்கு வயசு அம்பது, நீங்க காலத்தை மறக்குறீங்க.. சூழலை மறக்குறீங்க, உங்க வயசை மறக்குறீங்க.. பெத்த அனுபவத்தை மறக்குறீங்க’ண்டு suggstion கொடுத்துட்டே வரும்போது தன்னையே மறந்து ஆஹாசமா பறக்குற மாதிரி உள்ள சூழ்நிலையிலே வருவாஹா.. ‘நீங்க வுடுற ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு வயசு குறையும்.. கரெக்டா 25 வயசு ஆனவுடனே நேச்சுரலா மூச்சு வுட்டுக்கிட்டே இரிப்பீங்க, வயசு குறையாது’. இப்படி சொல்லி 5 நிமிஷத்துக்குப் பிறகு நான் கூப்பிடுவேன் – இன்ஷா அல்லாஹ், நான் செஞ்சிகாட்டுறேன், அதுக்குள்ள சூழ்நிலை திரளட்டும், நான் ப்ரூஃப் பண்ணிக்காட்டுறேன் – அப்போ அஹட கற்பனையிலெ அஹல்ற வயசு இருபத்தஞ்சாச்சி.. அந்த கற்பனையை கலைக்கிற எந்த நெகடிவ் எண்ணமும் பூறவுடாத அளவுக்கு நான் தடுத்துடுறேன், completely under my control.. அஹல்ட்டெ , ‘இப்ப பேரு என்னா?’ண்டு கேட்டா ‘சாதிக்நிஷா’ண்டு 25 வருஷத்துக்கு முன்னாலெ பேசுன குரல்லெ பேசுவாஹா! அப்போ அஹ போடுற கையெழுத்தும் அந்த வருஷத்துலே போட்டதுதான்! இதுலெ ஆண்டவன்ற நியமத்தைப் பாருங்க..இங்கெதான் நாம பிரமிச்சிப்போயி – அது என்னான்னே தெரியமாட்டேங்குது – இவ்வளவு தூரம் அட்வான்ஸ சயின்ஸ் போயிருக்கு, ‘மார்க்கம்’ பிச்சிப் பிச்சி உதறித்தள்ளியிருக்குது, சூஃபிசம் அப்படியே கரைச்சுதான் ஊத்துது….- அந்த ரேங்குக்கு மனுஷனை கொண்டுபோன உடனேயே – அது என்னாண்டு விளக்க முடியாது, ஆனா இது நடக்குறது உண்மை , நான் நடத்திக்காட்டுறேன், ஆனா காரணம் கேட்காதீங்க. அது எப்படீண்டு மட்டும் கேட்காதீங்க. How? ‘கைஃப்?’ண்டு கேட்கக்கூடாது. மார்க்கத்தைப்பத்தி சொல்லுவாங்க, ‘பீ கைர ச்சூவ்வ ச்சரா, இத்திபா கர்னா’ம்பாஹா..’ ‘இத்திபா கர்னா’ண்டா பின்பற்றுவதுண்டு அர்த்தம். நம்மள்ற ‘இஸ்மாயில் தம்பி உருது’!..ஆடு ஓடுதாஹை! ஏன், எவிடென்ஸ் கேட்காம பின்பற்றனும்? அல்லாஹு மௌஜுதுன் பி கைரி கைஃபியத்தின். அல்லாஹு Kh)லிகுன் பி கைரி கைஃபியத்தின் – அல்லாஹுத்தாலா இருக்கிறான் , எப்படி என்று இல்லாமல்! ‘எப்படி’ என்ற விளக்கத்திற்கு அப்பாற்பட்ட ..without ‘கைஃப்’. ‘கைஃபியத்’துண்டா ‘எப்படி?’ங்குறது. விளக்க இயலாதது. ஆண்டவன் பாக்குறான், without eyes; கண்களில்லாமல்.

காரணம் என்னாண்டு கேட்டா.. இதுக்கு கேள்வி கேட்குறது ஈஸி, பதில் சொல்லப்பட்டா புரிய முடியாது நம்மளாலெ. பாலுலெ நெய் கலந்திருக்குண்டு சொன்னா ‘எப்படி?’ண்டு கேட்டா என்னா சொல்றது? நீங்க நெய்யை பார்த்ததே கிடையாது. குழந்தையிலேர்ந்தே பாலைத்தான் குடிச்சி அனுபவப்பட்டிருக்கீங்க. உங்களாலெ நெய்யை நம்ப முடியாது. ‘நெய்’ண்டு சொல்லித்தான் கேள்விப்பட்டிருப்பீங்க. இதுக்குத்தான் அறிவுலெ தரத்தைப் பிரிச்சாங்க. ஐனுல் யக்கீன், ஹக்குல் யக்கீன், இல்முல் யக்கீன்.. நான் ப்ரூவ் பண்ணிக்காட்டும்போது அது ‘நெய்’ண்டு நல்லா தெரியும். அற்புதம் நிகழுதுண்டு நல்லா தெரியும். எப்படிண்டு மட்டும் தயவு செஞ்சி கேட்காதீங்க. எப்படி நான் கணக்குபோடுறேண்டு கேட்டா நான் என்னா சொல்லுவேன்? கால்குலேட்டரைத் தட்டுறேன். என் உள்ளம் சொல்லுது. அதை நான் சொல்றேன். ‘எப்படி மாப்பிள்ளைட்டெ – எட்டணா கூட கேட்டதாலே – வந்த சண்டையை சொன்னீங்க?’ண்டு கேட்டா அதுக்கும் அதே பதில்தான்! எனக்கு சொல்லத் தெரியாது. எப்படியோ சொல்றேன். அந்த எப்படியோவைத்தான் உங்களுக்கு நான் உண்டாக்கப்போறேன். உங்களுக்கும் அது வரும். வந்தவுடனே , உங்களை ‘(இதெல்லாம்) எப்படி செய்யிறா?’ண்டு ஒத்தவன் கேட்டா நான் சொன்னமாதிரிதான் நீங்களும் சொல்வீங்க : ‘எப்படீண்டு தெரியாதுப்பா! I cannot explain it!’.

உங்களை 25 வயசுக்கு முன்னாடி கூட்டிட்டு போன உடனே ஒரு பேப்பரைக் கொடுத்து கையெழுத்து போடச் சொன்னா 25 வருஷத்துக்கு முன்னாலெ போட்ட அதே கையெழுத்தை நீங்க போடுவீங்க! இப்ப ஆயிரம் ரூவா தர்றேன், அதே கையெழுத்தை இப்ப consciousஆ இங்கெ போடுங்க. முடியாது. சரி, உங்களுக்கு வயசு முப்பது. உங்களை முப்பத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாலெ கொண்டுபோனா என்னா இருக்கும் அங்கே? வாப்பாட துளிக்கு நான் உங்களை கொண்டுபோனா நீங்க எப்படி இருப்பீங்க அங்கே? அங்கே நீங்க இருக்குறீங்க அப்படீங்குறேன்! பொறக்குறதுக்கு முந்தி! நீங்க பொறக்குறதுக்கு முந்தி இருந்தீங்க! நீங்க ஆண்டவன்ட்டெ கேட்டு , நான் வர்றேண்டுதான் வந்திருக்கீங்க. ‘அவன்’ உங்களை அனுப்பலே.. புடிச்சி தள்ளிவுட்டுட்டாண்டு நெனைச்சுக்காதீங்க. உலகத்துக்கு போறேண்டு ஆசைப்பட்டு கேட்டு கெஞ்சிக் கதறுனீங்க அவன்ட்டெ.. அவன் சொன்னான், ‘வாணாம்ப்பா..ரொம்ப சிக்கல், responsibility அதிகம்’டு. ‘ம்ம்.. போவத்தான் செய்வேன்’டு வம்பு பண்ணுனீங்க. ‘இல்லாத உலகத்திலேயே நீ இரு..இல்லை என்ற பொருளுடைய உலகத்துலேயே இரு. இருக்கும்பொருள் – ஜடப்பொருள்லெ – மாறாதே கண்ணு’ண்டதுக்கு நீங்க காக்கா புடிச்சீங்க!. ‘சரி, தொலை. எங்கே போறா?’ ‘இந்தியாவுக்கு’ ‘மரமா போறியா மட்டையா போறியா தண்ணியா போறியா?’ ‘நான் உயிரினமா போறேன்’ ‘கழுதையா போறியா, மாடா போறியா, பண்டியா போறியா?’ ‘மனுஷனா போறேன்’, ‘மனுஷண்டா.. யார்ற மகனா போறா?’ ‘யஹ்யா மரைக்கார்ட மகனா போறேன்’டு கேட்டு வந்திருக்கீங்க. அது நெனைப்பு வந்துடும்! அது நெனைப்பு வந்தா நீங்க ஆண்டவனை பார்த்தது ஞாபகம் வரும். ஆண்டவண்ட்டெ கொடுத்த வாக்குறுதி நெனைப்பு வரும். நீங்க வாக்குறுதியை மீறும்போதெல்லாம் நாம மீறுறோம்டு தெரியும், அப்பத்தான் தெரியும் ,பொம்பளைட்ட படுக்குறது மூத்திரத்தை விட மட்டமானதுண்டு. அதெ (பேரின்பத்தை) சுவைச்சிப் பாக்கணும். எனக்கு நம்பிக்கை இருக்கு’ – ‘S’

‘மஃரிபத்’ ரேங்குக்குக்கு போன உடனேயா?’ – மீராமெய்தீன்

‘இப்ப நான் சொன்ன ரேங்க். அது மஹரிபத் ரேங்க்-ஓ கத்தரிக்காய் ரேங்க்-ஓ! அதைப்பற்றி உங்களுக்கு கவலை இல்லே. இதுக்கெல்லாம் ரிலாக்சேஷன் இல்லாம, கற்பனை இல்லாம , நடக்கவே நடக்காது. Impossible, Completely Impossible. சரி, அப்ப சரியா முப்பதாவது வயசுல உங்களை வைக்கிம்போது , தாயோட வயித்துலேர்ந்து வெளிவரும்போது அங்கே ஜனங்க கூடி நிண்டது, ஜனங்க உங்களை பார்த்து கொஞ்சுறது, நீங்க ‘வீல்’ண்டு கத்துறது, மேலே பட்ட ஜில்லாப்பு காத்து உட்பட உங்களுக்கு நெனைப்பு வரும்! ஏன் இப்ப நெனைப்பில்லேண்டு கேட்டா ‘போனவாரம் வண்ணான் கடையிலெ போட்ட சட்டை எத்தனைண்டே உங்களுக்கு ஞாபகம் இல்லே! பகல்லெ உண்ட கறி ஞாபகம் இருக்க மாட்டேங்குது..! நாமதான் கழுதை போறமாதிரி பாத்துக்கிட்டே போறோமே..! திரும்பிப்பாக்குறதே இல்லை! அல்லாஹுத்தாலா , முன்னாலே கண்ணு வச்சிட்டான்லெ?! சாதாரண மெட்டீரியல் லைஃப்… அது மறந்து போவுது. அப்ப, நீங்க வரம் கேட்டு வர்றீங்க! பல எல்லையைத்தாண்டி வரும்போது சில அறிவுகள்லாம் உங்களுக்கு கிடைக்கிது. உம்மாட்டெ பாலு குடிக்கிறது எப்படிண்டு யாரும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலே. சப்புறது, சூப்புறது, உறிஞ்சிறது வேற வேறயில்லெ? அப்ப குழந்தைக்கு யாரு சொல்லிக்கொடுத்தா? அது பழைய அறிவு. அவன் ஒரு சங்கத்தினுடைய மெம்பர். வந்த குழந்தை யஹ்யா மரைக்கார்ட குழந்தை அல்ல. துப்பறியும் இலாகாவுலேர்ந்து வந்திருக்கான் அந்த கள்ளப்பய – ‘குவாகுவா’ண்டு கத்திக்கிட்டு! பெரிய நிர்வாகம் அது. பெரிய சிஸ்டம், பெரிய சபை அது. அங்கேர்ந்து வேற ஆளா வெளிவந்து இந்த உலகக் காத்து பட்டவுடனே ‘எங்கேர்ந்து வந்தோம்’ங்குறது மறந்து பொய்டுது.. தன்னை மறக்குறான் அவன். எப்ப தன்னை மறக்குறானோ அப்ப mind, blankஆ ஆயிடுது. எப்போ blank ஆவுதோ உலகத்து அறிவுலாம் பூற ஆரம்பிக்கிது. இதனாலெதான் மனுஷக்குழந்தை நடக்குறதுக்கு பத்து மாசமா ஆவுது. இல்லை, பதினைஞ்சி வருஷம் கூட ஆவுது. மீன்குஞ்சு, முட்டையிலேர்ந்து வெளிவந்த உடனேயே நீஞ்சும். குருவியைப் பாருங்க.. தத்திதத்தி முட்டையிலேர்ந்து வெளியே வரும். ‘குப்’புண்டு பறக்கும். பறக்கும்போது fully developed குருவியா, தேனீயா பறக்கும். அதனுடைய சிஸ்டமும் பொறுப்பும் ரொம்ப சிம்பிள். நமக்கு.. ரொம்ப ரொம்ப complicated. அதனாலெ , இவன் அசைவுகள் உட்பட படிக்கனும். நடக்குற முறையைக்கூட படிச்சுக்கனும். இன்னும் சொல்லப்போனா சுவாசிக்கிறது உட்பட அவன் படிச்சுக்கனும்ங்குற வேலை இருக்கு. அந்த சூழ்நிலை வந்தவுடனே இந்த சூழ்நிலைக்கு அட்ஜஸ்ட் பண்ணுறான் பாருங்க அவன். நடக்க வேண்டியிருக்கு. காலை ஆட்டி ஆட்டி டிரைனிங் எடுத்துக்குறான் , இந்த பொடிப்பய. உம்மாக்காரஹ சொல்றாஹா, ‘நரி மிரட்டுது.. நாய் மிரட்டுது’ண்டு! வேற வேலை இல்லை பாருங்க, நரிக்கும் நாய்க்கும்!? அவன் சிரிக்கிறான் – தன் சக்ஸஸ்-ஐ பார்த்து. நரி மிரட்டுதாம்! ஒரு ‘ஷாக்’ வருது. பயந்து அழுவுறான். பேய் பிசாசுண்டு வாஹிதுசாபுட்ட ஓதிப்பாக்க வருவாஹா. காரணம் தெரியாது! இப்ப நம்ம உலகத்துலே தராதரம், repelling force, ஏற்றத்தாழ்வு, attracting force மாதிரி அந்த உலகத்துலேயும் உண்டு. அந்த பொடியன் நம்மளைப் பாக்குறான். ‘இவன் யாரு? நம்ம இனத்தவனா அல்லவா?’ண்டு. நம்ம இனத்தவண்டு தெரிஞ்சா பாசத்தோடு பார்ப்பான். இல்லேண்டா முகத்தை திருப்பிக்கிட்டு அழுவான், பகைவண்டு நெனைச்சிக்கிட்டு. அப்ப குழந்தைங்குறது நம்மள்ட்டெ உள்ள அறிவோட மிகப்பெரிய அறிவோடு வந்திக்கிது. அந்த அறிவை கெட்டுப்போகாம உலகத்துலெ யூஸ் பண்ணுற பாதைதான் ஞானம்ங்குறது. நாம என்னா செய்யிறோம்? அந்த அறிவை அப்படியே அழிச்சி மண்ணாக்கிட்டு, அந்த மெமரியை தரைமட்டமாக்கிப்புட்டு , ஷேக்ஸ்பியர் எடுத்த வாந்தி, பெர்னார்ட்ஷாவுடைய வாந்தி, ‘இஸ்மாயில் தம்பி’ எழுதின புத்தகம்.. ஹூம்ம்.. மூளை மண்ணாயிடுது!. இஞ்ஜினியர் ஆவுறான்! அட, இஞ்ஜினியர் Lineக்கே வித்து அங்கேதானப்பா இருக்கு! இஞ்ஜினியர் ஃபோர்ஸ் அங்கேர்ந்துதானேப்பா வருது! நீ மனம் வச்சா, Pastலெ போக உனக்கு துணிச்சல் இருந்தா, உலகத்துலே எத்தனை இஞ்ஜினியர் மூளை இருக்கோ எல்லா மூளையையும் காண்டாக்ட் பண்ண முடியுமே!

அப்ப, முப்பது வயசான உங்களை முப்பத்திரெண்டு வருஷத்துக்கு முந்தி கூட்டிட்டிப்போவும்போது தெரியும், நீங்க துளியா வெறும் தண்ணியா இல்லே.. உயிரணுக்கள் கோடிகோடி அணுவுலெ நீங்க இல்லே.. அதுலெ ஒரு அணுதானே வெளி வந்திருக்கு? ஒரு அணுவுலேர்ந்து வந்த நீங்கதானே? அந்த ஒரு அணுவுக்கு உயிர் இருந்திச்சி.. இயக்கம் இருந்திச்சி..அது உங்க வாப்பாட்டெ உள்ளது. அப்ப இதெ அஹ வாப்பாக்கு கொண்டு போங்க, பாட்டனாக்கு போங்க. இப்படியே ஆதம் லைஹிவஸ்ஸலாத்துக்குப் போவுது.. அதுக்குப் பிறகு எங்கே போவுது அபுபக்கரே?’

‘… …. …. ‘

‘ஆனா.. அப்படி சொல்லக்கூடாது. தாடிக்காரனுவ இக்கிறானுவ, பயமாயிருக்குது! அப்ப என்னா அர்த்தமாச்சிண்டு கேட்டா மேலே போகப்போகப்போக இதனுடைய ஜடத்தன்மை மாறி Pure உயிர், Pure ரூஹானியத் வர ஆரம்பிக்கிம். தெய்வீகத்தோட சொட்டு நீங்க! மனுஷனா இங்கெ வந்து இருக்கீங்க. தெய்வச்சொட்டுதான் நீங்க. எனவே , நீங்க தோல்வியடைஞ்சீங்க… அரக்கன்டு அர்த்தம்! யூஸ் பண்ணி வளர்ந்துடனும். வளர்ந்து காட்டணும். வளர்ந்துதான் தீரனும். சங்கடப்பட்டு உதவி கேக்குறீங்களா? ‘வா..கண்ணே..’ண்டு ரெண்டு கையையும் நீட்டிக்கிட்டு கூப்புட்டுக்கிட்டிக்கிறான் ஆண்டவன். வெளிலேர்ந்தா கூப்புடுவான்? உள்ளேர்ந்து கூப்புடுவான். அப்ப நீங்க வேற அல்ல, நான் வேற அல்லண்டு புரிய ஆரம்பிக்கிம். கடல் வேறல்ல, தண்ணி வேறல்ல. தவக்களை வேறல்ல, பாம்பு வேறல்ல.. ஒரே வார்த்தையில சொன்னா.. ஆண் வேறல்ல, பெண் வேறல்லண்டு தெரிய ஆரம்பிக்கிம். ஒரு தாய் குழந்தையை தூக்கி முச்சம் வுடுறாவோ அதுக்கும் புருஷன் பொண்டாட்டி உறவுக்கும் ஒண்ணும் வித்யாசம் இல்லே. ரெண்டும் ஒண்ணுதான். இதுலே சில உணர்வுகள் ஏற்படுது, அதுலே இல்லே. அவ்வளவுதான். நான் ஒருதரம் ரமலான்லெ நோன்பு புடிச்சிக்கிட்டு பைத்தியம் புடிச்சி இருந்தேன், சிகரெட் குடிக்காம. (நோன்பு தொறந்ததும்) சிகரெட்டை முச்சம் வுட்டேன்! என் லாத்தா கேட்டாஹா ‘ , லெவை சாபு.. என்னா இது? நாம குடிக்கிற பொருளு..நாத்தப் பொருளு..!’. அஹலுக்கு நாத்தம். எனக்கு இது லைலா மஜ்னுலெ! நான் முச்சம் வுட்டது என்னாண்டு எனக்குலெ தெரியும்! வெளங்குதா? எதுக்கு நான் சொல்ல வர்றேன்? மெமரி பவர் டெவலப்மெண்ட்டுண்டு சொன்னா எந்த ரேங்க்குக்கு டெவலப் பண்ண நெனைக்கிறீங்களோ அந்த அளவுக்கு டெவலப் பண்ணலாம். பண்ணனும்.’ – ‘S’

**

‘உங்க Body, அமைப்பு, constituion… அதுவே அல்லாஹ்தாண்டு நான் சொல்றேன். அதாவது , இவன் இப்ப ப்யூர் ரஹ்மானியத்தா இப்ப இல்லே. காரணம் காட்ட முடியுமா? அழகா சொல்லப்போனா , வெளி அறிவை பெத்ததுதான் ஆபத்துக்குக்கு காரணம். அப்ப நீங்க மறுபடியும் குழந்தையா மாறுங்க. இப்ப தெரியும் உங்களுக்கு, ‘மீர் குத்பி’னுடைய Author , ‘பையத்’ வாங்கும்போது, (அவர்) அறிவு புகைமூட்டமா வெளிலே போனதை இப்ப நெனைச்சிப் பார்த்தா காரணம் உங்களுக்கு இப்ப புரியும். பெத்த அறிவை இழக்கனும்டு நான் சொல்றதும் , எந்த அறிவையும் பெறாதே நான் சொல்றதைத்தான் கேட்கனும்டு சொல்றதும், குர்-ஆனைக்கூட நீ தொடாதேண்டு சொல்றதுக்கும் பொருள் என்னாண்டு இப்பதான் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். இந்த அறிவு அனுபவ ஓட்டத்துலேதான் வரும். நாம வச்சிக்கிட்டிக்கிற லாஜிக், லைஃப் இல்லைண்டு எப்ப தெரியும்? இந்த லாஜிக்-ஐ வச்சி மோதி , லைஃப் வீணாப்போன உடனேதான் தெரியும். நான் ஷரீஅத்-துதான் லைஃபுண்டு நெனைச்சிக்கிட்டிருந்தது , லைஃப்லெ தோத்தபிறகுதான் புரிஞ்சிச்சி. ஷரீஅத்-ங்குறது வெறும் திரை. துத்திப்புக்கு மேலே போர்த்துன வெறும் போர்வை. போர்வைகூட அல்ல, போர்வைக்கு மேலே உள்ள பூப்பின்னல்தான் அது. தோத்தபிறகுதான் புரிஞ்சிச்சி. முன்னாடியே புரிஞ்சிரிந்தா என் லைஃப் வேறேயா இருந்திருக்கும். அதை நெனைச்சி நான் வேதனைப்படலே. ஆண்டவன் ஒவ்வொரு ஆளுக்கும் அறிவை ஒவ்வொரு பக்கத்துலே கொடுப்பான். அட, கொலைகாரனுக்கு – செயலை செஞ்சிட்டு ஒளிஞ்சிக்கிட்டிருந்த காரணத்துனாலேயே – ஞானம் பொறந்திருக்கு! ‘தஹியாகலிபியா’ எத்தனையோ கொலை செஞ்சாஹலாம். கடைசி கொலை செய்யும்போது ஒரு வார்த்தை எதிரி சொல்ல, ‘டக்’குண்டு ஞானம் பொறந்துடிச்சி!’ – ‘S’

*

‘அலம் யஃனீலில்லதீன ஆமனூ அன் தஹ்ஷஅ குலூபுஹூம் லி திக்ரில்லாஹ்..’ . ஈமான் கொண்டவர்களுக்கு, ஆண்டவனை நம்பினவர்களுக்கு, அவங்க இதயம் பயப்படுறதுக்கு இன்னுமா நேரம் வரலை? நேரம் இன்னும் வரலை?..(1) – குர்-ஆன் ஓதிக்கொண்டிருந்த பெண்ணின் குரலில் உள்ள ரஹ்மானியத், ஒரு திருடரின் ‘மசாலா’வைத் தட்டிவிட , திருடர் வந்தபக்கம் பார்த்து திரும்பி ஓடினாராம் காட்டுக்கு. இந்த பழைய வரலாற்றைச் சொன்ன சர்க்கார் புதுசும் சொல்கிறார்கள். கோயம்புத்தூர் ‘அமீன் ஆட்டோ’வில் ஒரு பிராமணர். ‘ஆர்மிச்சர்’ஐ தவறாகப் போட்டிருக்கிறார். ‘ஐயா , கூடப்போட்டிருக்கீங்களே’ என்று வந்தவன் சொன்னானாம்.

‘அப்படிலாம் சொல்லாதீங்க. கடவுள் இங்கே இருக்கிறார்!’ – தன் நெஞ்சைத்தொட்டு சொன்னார் பிராமணர். கடவுளுக்கு நெருக்கமானவர்.

‘ஆமா..சரிதான். அங்கே இருக்காரு. இங்கேயும் இருக்காரு கடவுள். அந்த கடவுள், இந்த கடவுளை ஏமாத்தக்கூடாது’ என்றானாம் வியாபாரி.

*

‘Human Bodyங்குறது இறைவனுடைய ஒரு பகுதி. இதை ‘ஷரிஅத்’ ஒத்துக்கொள்ளூமோ ஒத்துக்கொள்ளாதோ.. உடல்லெ நாத்தம் வருதா, அதுக்கெல்லாம் காரணங்கள் வேறே. ‘பாக்கியத்சாலிஹாத்’துலெ நான் படிக்கும்போது ஒரு சம்பவம் நடந்திச்சி. இதெல்லாம் rareஆ இருக்குற காரணத்துனாலேயும் , விசித்திரமா இருக்கிற காரணத்துனாலேயும் , லைஃப்லெ அன்றாடம் நடக்குற காரியமா இல்லாததுனாலேயும் – நான் சொல்லும்போது – ‘சர்க்கார் சித்தரிச்சிப் பேசுறாஹா’ங்குற மாதிரி நீங்க நெனைக்க வாய்ப்பிருக்கு. இருந்தும்கூட நான் சொல்றேன்..

என் உஸ்தாது கறி வாங்கிக் கொடுத்தாஹா. அஹ வூட்டுலெ கொடுக்க போய்க்கிட்டிக்கிறேன். வழிலெ ஒரு பைத்தியம் வழிச்சிக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு வெளிக்கிருந்துக்கிட்டிக்கிது. நான் மனசுக்குள்ளேயே அவனை ஏசிக்கிட்டுப்போய் திரும்பிப் பாக்குறேன். பேண்ட பீயை எடுத்து சுவத்துலெ தடவிக்கிட்டிக்கிறான் அந்த ஆளு! அந்த ஆளை – இங்கிலீஷ்லெ ‘He’ண்டு சொல்லி தப்பிச்சிக்கிட்டு போய்டலாம் – தமிழ்லெ ‘அவன்’டு சொல்றதா ‘அவர்’ண்டு சொல்றதா ‘அவங்க’ண்டு சொல்றதாண்டு புரியலே.. திரும்பி வரும்போது பாக்குறேன், ஒரு கூட்டமே நிக்கிது அந்த இடத்துலெ. எல்லோரும் மோந்து மோந்து பாக்குறாங்க. நானும் போயி மோந்து பாத்தேன். சந்தனவாசம் அடிக்கிது! இதெல்லாம் உங்க உங்களுக்கு அனுபவம் ஏற்பட்டாத்தான் நம்பிக்கை வரும். இல்லேண்டா (நாகூர் ஆண்டவர் சம்பந்தமான) ‘கன்ஜுல் கறாமத்’ மாதிரியிருக்கும்! நான் உஸ்தாதுகளைக் கேட்டேன். புக்ஹாக்கள், சட்ட நிபுணர்கள்ட்டெ கேட்டேன். ‘ஹதா மஹாருன் ஜித்தன்!’ண்டாஹா. அப்படீண்டா , Definitely impossible. ‘என்னா ஹஜ்ரத் Impossible? பேளுறது Impossibleஆ? பேண்டதை தடவுறது Impossibleஆ? சந்தனவாசம் அடிச்சது Impossibleஆ? இல்லெ, நான் மோந்து பாத்தது Impossibleஆ?’ அப்படீண்டு கேட்டேன். ‘அதெல்லாம் இல்லேப்பா.. அவன் தடவுனது வேற இடமா இருந்திருக்கும். சந்தனம் வேற ஆளு தடவுனதா இருக்கும்; அந்த இடத்தை நீ மோந்து பாத்திருப்பா’ ‘என்னா ஹஜ்ரத்.. இல்லவே இல்லை.. நான் accurateஆ பார்த்தேன். சரி, நான் தப்பா மோந்தேன்,. மத்தவங்கள்லாம் மோந்தாங்களே..?!’ ‘ஆயிரம் பேரு தப்பு செய்யிறதுனாலே ஒரு தப்பு உண்மையா மாறிடாதுப்பா. பொய் உண்மையாகாது’ண்டுட்டாஹா’

*

‘மதரஸால இருந்த பிள்ளையிலுவல்லெ என்ன மாதிரி இந்த மாதிரி டேஸ்ட் உள்ள புள்ளையிலுவ ரொம்ப rare.. மங்கலம் ஹஜ்ரத்துண்டு ஒரு ஆளு இருந்தாஹா. கெட்டிக்கார ஆளு. ஆனா கிளாஸ் நடக்கும்போது என்னெ பார்க்கவே மாட்டாஹா. எனக்கோ அழுகையும் ஆத்திரமும் அடைச்சிக்கிட்டு வருது, நம்ம திறமையை காட்ட முடியலையேண்டு! ஒரு வாட்டி அஹள்ட்டெ கெட்டேன். ‘என்னா ஹஜ்ரத்.. என்னய பாக்கவே மாட்டீங்களா?’

‘ஏன், சலாம் சொல்றா வரும்போதும் போவும்போதும். பதில் சலாம் நானும் சொல்றேனே?’

‘அதுசரி.. பாடம் நடத்தும்போது..’

‘பார்த்து உன்னட்ட சொல்லவேண்டிய அவசியமே இல்லப்பா. ‘ஜத்து’ உன்னெட்ட இருக்கு’

‘எந்த ‘ஜத்து’? ‘ஜத்து’ண்டா ‘பாட்டன்’டுலெ அர்த்தம்?’

‘அதுவும் அர்த்தம். ‘மணி’ண்டும் ஒரு அர்த்தம் இருக்கு. ‘மணி’ண்டா விந்து. விலாயத்தோட ‘ஜத்து’ உன்னெட்ட இருக்கு’

‘நான் ஹராமுலெ பொறந்திருந்தா இருக்குமா அது சர்க்கார்?’

‘இருக்காது’

‘நான் ஹராமுல பொறக்கலேண்டு உங்களுக்கு எப்படி தெரியும்?’

‘நான் மதிப்பு கொடுக்கும்போது ‘வாணாம்’டுட்டு நீ இப்படி கேக்குறே பாத்தியா? இதே ‘ஜத்து’ண்டு ப்ரூவ் பண்ணுது!’

கேஸட் தொடர்ச்சி, இன்ஷா அல்லாஹ், அடுத்த டைரியில்!

**

21.09.1996

நேற்று வெள்ளி Sessionல் 31-05 to 07.06.1996 பேசிய கேஸட் கேட்டுக் கொண்டிருந்தேன். அன்று காலையில்தான் ஜெப்பார்நானா புதிய கேஸட்கள் என்று இரண்டு கேஸட்களைக் கொடுத்தார். இது ஒன்று. இன்னொன்று, 07.06 to 06.09.1996 பேசிய பேச்சு. மூன்று மாதத்தில் ஒரே கேஸட்! சர்க்கார் வாயை மூடிக்கொண்டு விட்டார்கள். சீடர்களின் வளர்ச்சியினால் இருக்கலாமா? அப்படி இருக்காது. முந்தைய கேஸட்டில் ஏகமாய் திட்டு. சுன்னி, புண்டை அதிகமாய் இடம்பெற்ற கேஸட் அதுவாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கோ, சீடர்களை ஏசுவதற்கோ.. ஒருகட்டத்தில் அலுப்பும்தான் வந்துவிடுகிறது..

‘உலகத்துல அட்வைஸ்-ஐ யாரும் கேட்கமாட்டாங்க.. நாம சொல்ற அட்வைஸ்-ஐ அவங்க அட்வைஸ்-ஆ மாத்தி அவங்க அறிவாக மாத்துனாதான் பிராக்டிகலா வரும். அதனாலெ , அட்வைஸ் பன்ற மாதிரி முட்டாள்தனம் உலகத்துலே எதுவும் கிடையாது. வேலைமெனக் கெட்டவன் செய்யிற வேலை. இல்லே, அவுலியாக்கள் செய்யிற வேலை. உதைபடுறதுக்கு பெஸ்ட் வழி அதுதான்!’ – ‘S’

உடல் சரியில்லாத உறவினரை பார்க்கச்சென்று அட்வைஸ் பண்ணிய ரவூஃபுக்கு கொடுக்கிற அட்வைஸ் மட்டும்தானா இது?

‘SS’ பயிற்சியின்போது அவனது Astral Body , சினிமாப்பாட்டை ஒரு நொடி – ஒரு நொடிதான் – கேட்கிறது. ‘இருட்டு நேரத்துலெ ஊசியைக் கீழே போட்டுட்டு தேடுண்டு சொன்னா தேடிக்கிட்டிக்கிம்போதே ஒரு பாட்டு சத்தம் கேட்குது. கவனம் பொய்டுமா?’ – சுளீர்!

என் Astral Body கூட ஒரு நாள் பாட்டு பாடியது..! (‘காமோஸ் க்யூங் கடேஹோ..?’ – ஹரிஹரன்)

*

‘ஒரு காரியத்தினுடைய பெரிய நஷ்டத்தை நினைச்சி , லாபத்தை அதிகமா நெனைச்சா (நல்ல) ரிஸல்ட் தானா வரும். ரியாலத், ஒரு ரொடீன் வொர்க் ஆகக்கூடாது. எமோஷனல் உணர்ச்சி கலந்துதான் செய்யனும்’ – ‘S”

*

புதிய இஸ்முகள் : (30.08.1996 கொடுத்தது)

சுபுஹானல் அஜீஜூல் கரீம் சுபுஹானல் ஃபத்தாஹில் மத்தீன்
சுபுஹானல் ஹன்னானில் மன்னான் சுபுஹானல் வதூதில் ஹக்
சுபுஹானல் மலிக்கில் மாலிக் சுபுஹானர் ரஜ்ஜாக்கில் முபீன்
யக் ஃபிர்ளி வர்ஹம்னி யா முஜீபத்தஃவாத்
யா முனீரல் ஆலமீன் யாஹக் யா முபீன் ( 31 Times / ‘ரியாலத்’ அதே)

*

‘நான் தூங்கினேன், நான் கனவு கண்டேன், நான் வழுக்கி வுழுந்துட்டேன், நான் காசை தவறவுட்டுட்டேன்..! இது நமக்கு சம்பந்தம் இல்லே. நாம தூங்கலே. தூக்கம் தானா நம்மை ஆட்கொள்ளுது. கனவு தானா வருது. தானா வழுக்குறதுனாலே வுழுவுறமாதிரி வருது. கைய வுட்டு காசு தானா தவறுது. அதையெல்லாம் நாம நாமண்டு சொல்றதுனாலே நாம எதையெல்லாம் செய்யலையோ அதையெல்லாம் நாம செய்யிறதா சொல்லிக்கிட்டிக்கிறோம். நாம சொல்றோமோ, ‘நான் வேர்த்துப்புட்டேன்’டு?!’ – ‘S’

*

‘புதிய இஸ்மு (30.08.1996) கொடுத்ததுதான் 06.09.1996 அன்றும். ஆனால் பயிற்சியில் மாற்றம். எண்ணிக்கை 41.

பயிற்சி : சென்ற Stageகளில் PBயுடன் , EB, IB merge ஆனது. இப்போது இல்லை. அதற்குப்பதிலாக PB கற்பனையில் இஸ்மு ஓதிவிட்டு படுத்ததும் AB 10 அடிக்கு உயரே நிற்பதாக கற்பனை பண்ண வேண்டும். AB, PBயின் நெற்றியிலிருந்து கால்வரை பார்த்து வரவர milky white colorல் இருக்கும் PB, Scarlet Redல் மாறிவரும் (Mixing white with scarlet Red). பிறகு மீண்டும் AB, PBயின் நெற்றியிலிருந்து பார்த்து கால்வரை வரும்போது PB, skyblue colorஆக மாறும். பிறகு PB, dark blueஆக மாறும். இங்கு ABயிலிருந்து PBக்கு Silver Chord Form ஆகும். பிறகு AB, தன் எதிரே உருவான Triangleஐ (Symbol) இஸ்மு ஓதிக்கொண்டே பார்த்து வந்தபிறகு PBயுடன் mergeஆகிறது. இப்போது PB மீண்டும் Milky white colorஆக மாறி இஸ்மு ஓதும் , பழையபடி உட்கார்ந்து. மற்றவை வழக்கம்போல’ . – கவுஸ்மெய்தீனின் கடிதம். 13.09.1996ல் கொடுத்த இஸ்முவையும் சேர்த்து எழுதியிருந்தார் ஜெப்பார்நானாவுக்கு.

சுபுஹானல் அஜீஜூல் கரீம் சுபுஹானல் ஃபத்தாஹில் மத்தீன்
சுபுஹானல் ஹன்னானில் மன்னான் சுபுஹானல் வதூதில் ஹக்
சுபுஹானல் மலிக்கில் மாலிக் சுபுஹானர் ரஜ்ஜாக்கில் முபீன்
சுபுஹானர் ரஹ்மானிர் ரஹீம்
இர்ஹம்னி யாமுஜீபத்தஃவாத் யா முனீரல் ஆலமீன் யாஹக் யா முபீன் ( 31 Times)

ஆனால் , இந்த இஸ்மு, பயிற்சிகளெல்லாம் அவருக்கு பத்தாது போலிருக்கிறது. David Copper Fieldன் மேஜிக் வீடியோ கேஸட்களும், Hypnotism, Mesmerism சம்பந்தப்பட்ட கேஸட்களும் – எத்தனை இருந்தாலும் – ஜெப்பார் நானாவை வாங்கிவரச் சொல்லியிருந்தார். பார்க்கவா, வித்தை காட்டவா? வரும் வித்தைகள் போதவில்லையா? இடையில் நான் அஸ்மாவுக்கு ஃ·போன் பண்ணும்போது அனீஸுக்கு அனலாகக் கொதிக்கிறது என்றாள். அதையே நினைத்துக்கொண்டு தூங்கும்போது எனக்கு ஜுரம் கடுமையாக வந்தது. இதுமாதிரி ஜுரம் வந்தால் நாலைந்துநாள் வாட்டும். ஒருவருடமாய் ஜுரமும் வரவில்லை. இன்று என்ன திடீரென்று? அடுத்தநாள் காலை அனீஸுக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டால் அன்று இரவே அவனுக்கு தேவலையாம். நான் தாங்கக்கூடியவன். அன்று பகலுக்குள் என் காய்ச்சலும் ஓடிவிட்டது.

நான் வேர்த்துப்புட்டேன்…!

*

‘இவங்கள்லாம் புத்திசாலியா பொய்ட்டாக்கா நமக்கு ஒரு வேலையும் இருக்காது. நம்ம பொழைப்பும் நடக்காது. இதுங்க பாரபைத்தியமா இருக்குற வரைக்கும் நல்லதுதான். ஆனால் சில நேரத்துலெ புடிச்சி பிறாண்டி வுட்டுடுது! அதான் கஷ்டமா இருக்கு. ஆண்டவன் மனுஷனை படைச்சாங்குறதை விட பாரபைத்தியத்தை நிறைய படைச்சி மனுஷன் தலையிலெ போட்டுட்டான்ண்டு சொல்றதுதான் சரி. அதுகூட அல்ல, உண்மை என்னாண்டு கேட்டா, இவன் என்னா செய்யினும்டு தெரியாத காரணத்துனாலே எது எதுலாம் கண்ணுக்கு தெரியுதோ, எது எதுலாம் காதுக்குப் படுதோ, எது எதுலாம் இன்பமா தெரியுதோ எல்லாத்தையும்
தன்னுடையதாக்க அலையிறான்’ – ‘S’ ( 31-05 to 07.06.1996 கேஸட்)

*

‘Concentrationண்டா என்னா?’ – ‘S’

‘மனசை ஒண்ணுலேயே வச்சி சிதறாம நெனைக்கிறது’ – சீடர்

‘இது பண்டிக்கும் நாய்க்கும் கூடத்தான் இக்கிது. எந்த பயனுமில்லாத பொருளைப்பத்தி சிரத்தையாக நினைக்கிற குணம் வேணும். இது முடிஞ்சா ப்ராப்ளத்தை அனலைஸ் பண்ற Capacity வந்துடும்’ – ‘S’ ( 15-22.03.1996)

*

‘ஒரு காரியம் அடையிறதுக்கு முன்னாலே – அந்த காரியம் நாம அடையிறதுனாலே – கொடுக்குறவங்களுக்கு என்னா நன்மைண்டு பார்க்கனும். இல்லே, நாம அடையாம மத்தவங்க அடைஞ்சா -கொடுக்குற அவங்களுக்கு – நன்மை கிடைக்காதுண்டு ப்ரூஃப் பண்ணிக் காட்டனும். அப்ப அவங்கள்ட்டெ எவ்வளவு பெரிய நெகடிவ் ஃபோர்ஸ் இருந்தாலும் உடைஞ்சிடும்’

‘எதிர்காலத்தை நோக்கிக்கிட்டு presentஐ கோட்டை வுட்டுடாதீங்க’

(29.03 to 05.04.1996 கேஸட்)

*

‘ரியாலத்தை கரெக்டா செய்யிங்க. வேற ஒண்ணும் வேணாம். எது எது எப்ப எப்ப வரணுமோ அது அது அப்பப்ப வரும்.’

‘நான் எப்படி நினைக்கிறேனோ அப்படி இருந்தாத்தான் நான் எப்படி தூக்கமுடியுமோ அப்படி உங்களை தூக்க முடியும். இல்லே, நான் தூக்குறதா நெனைச்சிக்கிட்டிப்பேனே தவிர தூக்கியிருக்கமாட்டேன்’ – ‘S’ (05-24.05.1996 கேஸட்)

*

‘குண்டூசி கண்டுபுடிச்சவன் யாருண்டு தெரியுமா உங்களுக்கு? ஆணி, குந்தானி கண்டுபுடிச்சவன்? தெரியாது! ஆனா கடல்தண்ணி ‘ஹூதா'(நீலம்)ண்டு சொன்னவனுக்கு மட்டும் ‘டாக்டர்’ பட்டம் கொடுத்துடுவீங்க!’ – ‘S’

‘காலம்பூரா எல்லாத்தையும் பத்தி சொல்லிக்கிட்டிருந்திருக்கிறேன், எனக்குத் தெரிஞ்சதை பூரா, இல்லே , தெரிஞ்சதுண்டு நான் நினைச்சது. இத்தனை வருஷம் கழிச்சி அனலைஸ் பண்ணிப்பாக்கும்போது , தெரிஞ்சதுண்டு நான் நெனைச்சது மாறலே. அதனாலெ, நிச்சயம் தெரிஞ்சதுதான் அது. எத்தனையோ டெஸ்ட் வச்சிப்பாத்தும் மாறலே. ஆனா… யாருமே ஃபாலோ பண்ணலே!’ – ‘S’ (31/05 to 07.06.1996 கேஸட்)

ஏன் பண்ணவில்லை?

சர்க்காரே ஒருமுறை சொன்னதுபோல ‘பப்பானை’ அமுக்கிப் பார்த்துட்டு கார் வாங்குன சந்தோசத்தில்’ சும்மா இருந்து விடுகிறார்களா? காரை கண்டிப்பாக வாங்குகிறவர்களாகப் பார்த்து கையில் ‘பப்பானை’க் கொடுத்திருந்தால் அந்த ஏக்கம் வருமா? இப்போதுள்ள ‘உள்வட்டம்’தான் சர்க்கார் கடைசியாக உருவாக்கியது. சீடர்கள் கிட்டத்தட்ட இரண்டு வருட பயிற்சி எடுத்திருக்கிறார்கள். அவர்களால் ‘பப்பானை’க்கூட தொடமுடியவில்லை. தவறு அவர்கள் மேல் மட்டும்தானா? இதற்கு முன்பு சேர்ந்த சீடர்களின் நிலைதான் என்ன? அவர்கள்தான் எங்கே இப்போது? ஏன்? சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் கூட்டம் சர்க்காரின் காலடியில் விழுகிறது. எத்தனை உயர் அதிகாரிகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள்! சர்க்கார் அவர்களை லட்சியம் பண்ணியது கிடையாது. ஆனால் அவர்கள் உழைத்து உருவாக்கும் கூட்டம் மட்டும் பெயர் சொல்லும்படியாக உருவாவதில்லை, உருவானதில்லை. பெரிய மினாராவைத் தூக்கி சின்னமினாரா பக்கத்தில் வைத்துவிடுவேன் என்ற வெறும் கற்பனையில் உருவானவர்கள்.

மினாரடி ஸ்னானம்?

(தொடரும்)

குறிப்புகள் : 

(1) – திருக்குர்ஆன். சூரா அல்ஹதீத், 16ஆம் வசனம் (57:16)

‘S’ – சர்க்கார்
கராமத் – அற்புதம்
கந்தூரி , ஹந்திரி – அவுலியாவின் நினைவு விழா
ஜம் – ஒரு பயிற்சி
குதா கா சுக்ர்! – கடவுளுக்கு நன்றி
பரக்கத் – வளம்
நியமத் – அருட்கொடை
மஃரிபத் – ஞானநிலையின் ஒரு படித்தரம்
ஆதம் அலைஹிவஸ்ஸலாம் – முதல் நபி/மனிதர்
ரூஹானியத் – இறைச்சக்தி
ரமலான் – நோன்பு பிடிக்கும் மாதம்
லாத்தா – அக்கா
ரஹ்மானியத் – நல்லசகதி
பையத் – குருவிடம் அனுமதி வாங்குதல்
ஷரீஅத் – மார்க்கச் சட்டம்
கன்ஜுல் கறாமத் – (கதைகள் சேர்க்கப்பட்டிருக்கும்) நாகூர் ஆண்டவர் வாழ்க்கை வரலாறு
மதரஸா – அரபிப் பாடங்கள் கற்ப்பிக்க்ப்படும் பள்ளி
விலாயத் – அவுலியாக்களின் சக்தி
ஹராம் – விலக்கப்பட்டது
அவுலியா – இறைநேசர்
‘SS’ – Secret Symbol பயிற்சி
ரியாலத் – (‘SS’ ) பயிற்சி
இஸ்மு – மந்திரம்

 

1 பின்னூட்டம்

  1. அனாமதேய said,

    23/12/2017 இல் 18:28

    // நான் ஒருதரம் ரமலான்லெ நோன்பு புடிச்சிக்கிட்டு பைத்தியம் புடிச்சி இருந்தேன், சிகரெட் குடிக்காம. (நோன்பு தொறந்ததும்) சிகரெட்டை முச்சம் வுட்டேன்! என் லாத்தா கேட்டாஹா, ‘லெவை சாபு.. என்னா இது? நாம குடிக்கிற பொருளு..நாத்தப் பொருளு..!’. அஹலுக்கு நாத்தம். எனக்கு இது லைலா மஜ்னுலெ! நான் முச்சம் வுட்டது என்னாண்டு எனக்குலெ தெரியும்! வெளங்குதா? //

    # Class


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s