சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (25)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22அத்தியாயம் 23அத்தியாயம் 24|

அத்தியாயம் 25

ஆபிதீன்

*

06.09.1996 , வெள்ளி ‘செஷன்’ முடிந்து..

பேய்க்கு பயப்படும் வழக்கமெல்லாம் போயே போச்சு (எழுதும்போது தொடை நடுங்குகிறது?). இன்று பகல் தௌலத்காக்கா வீட்டு மீலாது சாப்பாடுக்குப் போனேன். தௌலத்காக்காவையும் நேராகப் பார்த்தேன். வியாழன் காலை ‘MKT’ ஆஃபீஸிலிருந்து ஒரு காக்கா ஃபோன் செய்து வெள்ளி மௌலூது & சாப்பாடுக்கு கூப்பிட்டபோது குழப்பமாகத்தான் இருந்தது. துபாயில் நாக்கூர்வாசிகள் சட்டரீதியாக கூடி பிஸாது பண்ண ‘MKT’ கொடுக்கும் மீலாது சாப்பாடும் கந்தூரி சாப்பாடும் முக்கியம். எவர்பிரைட் கம்பெனி ஆரம்பித்த வழக்கம். கம்பெனி முதலாளியின் மகன் ஆஸ்திரேலியாவில் MBA படித்துவிட்டு கம்பெனியை குழியில் மூடிக்கொண்டிருக்கிற நிலையில், இப்போது ‘MKT’ அழைப்பு பலபேருக்கு மிக முக்கியம். பழக்கத்தை நிறுத்தவும் முடியாது. அதற்கும் ஒரு பிஸாது வரும். ஆனால் தௌலத்காக்கா வியாபாரம் தெரிந்தவர். நபி பிறக்காவிட்டாலும் அதற்காக ஒரு மௌலூது ஓதக்கூடியவர். அநேகமாக இரண்டு மாதத்தில் வரும் கந்தூரி சாப்பாட்டில் , தன் ஃப்ளாட்டுக்கு முன், ஊரில் மறைந்துபோன ‘தொட்டிப்பந்தல்’ கூட வைத்து கவர்ந்திழுப்பார். அதை முதன்முதலாக சுற்றும் பாக்கியம் அல்லது இயக்கும் பாக்கியம் பெற ஷேக் முஹம்மது கூட வரக்கூடும். துபாய் எல்லா மதக்காரர்களுக்கும் , அவர்களின் எல்லா சடங்குகளுக்கும் ஆதரவு கொடுக்கக்கூடியது. சௌதியில் அரேபியன் பாலிஃபாப் கம்பெனியில் இருக்கும்போது நாக்கூரின் முதல் கும்பல் , விமரிசையாக மௌலூதுகள் நடத்தியதை கொரில்லா யுத்தத்தில் வெற்றிபெற்ற போராளிக் குழுக்கள் மாதிரிதான் சொல்லித் திரிவார்கள். மூடிய சட்டிக்குள் வேகுவதில் என்ன இருக்கு? துபாயில் , முத்தவாக்கள் ‘சீராணி’ எடுக்காமல் போனால்தான் தப்பு. சென்றவருடம், புதுக்கோட்டை செவுட்டு ஹஜ்ரத் ஒருவர் , தௌலத்காக்கா வீட்டுக்கு பக்கத்திலுள்ள பள்ளி ஜும்-ஆ முடிந்ததும் , ‘காக்கா வீட்டு விருந்திற்கு வந்து இருக்குகிற தமில் நண்பர்கள் ‘ என்றே குறிப்பிட்டார். பலபேருக்கு அப்போதுதான் ஜூம்ஆவில் கலந்துகொண்டமாதிரியே இருந்தது. மேல்மாடியில் நடக்கும் ‘தர்ஜுமா’க்குத்தான் அவர் அழைத்தார் அப்படி. நண்பர்கள் விருந்துக்கு போகுமுன்பே ‘தர்ஜுமா’வில் கலந்த நாக்கூர்வாசிகள் அமர்ந்திருந்தார்கள் – முதல் ‘சப்’பில். செஃப்-அல்-கலீஜ்’ன் பிரியாணி அப்படி. ஆம்பூர் பண்டாரிகள். தமிழ் மசாலா கலக்கத் தெரிந்தவர்கள். பிஸாது பண்ணமுடியாதது அது ஒன்றுதான். ஆனால் இம்முறை பிஸாதும் கூட்டத்தைப் போலவே கம்மியாகத்தான் இருந்தது. அல்-ஐய்ன், அபுதாபியிலிருந்து நிறைய பேர்கள் வரவில்லை. லேபர் செக்கிங் கடுமையாக இருப்பதாக சொல்லிக்கொண்டார்கள். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கம்பெனி வியாபாரம்கூட அதலபாதாளத்தில் போகிறது. புல்கட்டு வாங்க வருகிற பட்டான்கள் தன் ‘கல்லிவல்லி’ விசாக்களுக்கு பயந்து அமுங்கிக் கொண்டார்கள். ஆனால் சாப்பாடு என்னவோ வேகமாகத்தான் காணாமல் போகிறது. நவம்பர் தேர்தலில் ஜெயிப்பதற்காக கிளிண்டன் தன்னை பலமான ஆளாகக் காட்ட ஈராக்கில் 27 missilesகளை ஏவியிருந்ததில் இந்தப்பகுதி ஸ்திரத்தன்மை குலைந்துவிடும் பயமாகக்கூட இருக்கலாம். சதாம் பொன்முட்டைகளை வாங்கிக்கொடுக்கும் வாத்து, துபாய்வாழ் நாக்கூர் தமிழர்கள் போல். நான் இலேசாக இருந்தேன். நான் வந்திருப்பதைப் பார்த்த தௌலத்காக்காவுக்கு முகத்தில் ஒருவிதப் பெருமிதம் தெரிந்தது. மறைத்துக்கொண்டார். எனக்கு (இறைச்சி) முள்ளைத் தூக்கிப் போட்ட உணர்ச்சி இல்லை. இது எனக்கு பயிற்சி. வெறுப்படைந்திருக்கும் ஒருவரை மாற்ற அல்லது நேரடியாகப் பார்க்க. பயமில்லை, விசா மாற்றுவதில் தொந்தரவு செய்வார் என்று. இவரைப்பற்றிய என் டென்சனைக் கழற்றிப்போட இந்த சடங்கு உதவட்டுமே.. ஆனால் சலாம் சொல்லவில்லை. இது எச்சரிக்கையோ அலட்சியமோ, ஆனால், வரும்போது மறக்காமல் அவர் பக்கத்தில் இருந்த அவருடைய அண்ணன் ஒலிகாக்காவிடம் ‘பொய்ட்டு வர்றேன்’ என்றேன்! குர்துகளுடனுள்ள ஈராக்கின் உள்நாட்டு சண்டையில் கிளிண்டன் தலையிட்டது தப்பு என்று தௌலத் காக்கா, ‘PBCo.’ காக்காவிடம் பேசிக்கொண்டிருந்தார் – என்னைப்பார்க்காத மாதிரி. ‘ Arabs must draw a lesson from what has happened and take warnings against over-dependance on the u.s., especially when its leaders show no respect for principles’ என்றார் அவர் பதிலாக. அட, Gulf News தலையங்கத்தில் வந்தது, இரண்டு நாளைக்கு முன்பு!

haz1996diary - img13 - dec10-11a-diary-b

*

10.09.1996

இரண்டு நாளைக்கு முன்பு ஊரிலிருந்து ஃபரீது ஃபோன் பண்ணினார் , விசிட்விசா எடுக்கச் சொல்லி. நானா மகள் கல்யாணத்திற்காக போய் 15 நாளில் திரும்பிவிடுவேன் என்று சொல்லிவிட்டுப் போனவர் – இன்னொரு 20 நாள் கூட இருந்து – தான் ‘தொதல்’ என்று அழைக்கபடுவதை நிரூபித்தார். துபாயில் இருந்திருந்தும் அதன் அடிக்கடி மாறும் சட்டங்களை யூகிக்காமல் சுறுசுறுப்பாக இல்லாமலிருந்தால் எப்படி? இப்போது துபாயில் விசிட்விசா புதுப்பிக்கப்படுவதில்லை. தவிர வந்தும் உடன் வேறு கம்பெனி மாற்றுவதும் கஷ்டம். சட்டம் நிஜமாகவே கடுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவர் வரத்தான் வேண்டும். துபாயில் புதுப்பிக்க முடியாவிட்டால் என்ன, ஷார்ஜாவில் எடுக்கலாம். ஹலால்தீன், மஸ்தான் மரைக்கான் மூலமாக அவர்கள் கம்பெனியில் முயற்சிக்கலாம் அநியாயமாக காசு விரயமாவதைத் தடுக்கலாம் என்று பார்த்தால் அவர்கள் நழுவி விட்டார்கள். இன்று மாலை குடவுன் கணக்கைக் கொண்டுவரும் குலாம்காக்காவிடம் எடுக்கச்சொல்லிவிட வேண்டியதுதான். ஆனால் பண விஷயமாக அவரிடம் ஃபரீது ஃபோனில் பேசிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் நேற்று. இன்று குலாம்காக்கா வரும்போதே ஃபரீதுட்டேர்ந்து ஃபோன் வந்திச்சி என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவர் வருவதற்கு சரியாக ஒருநிமிடம் முன்பு நானும் ஃபரீதின் பாஸ்போர்ட் காப்பியை என் டிராயரில் இருந்து எடுத்தேன். அந்த ஜெராக்ஸை ஃபரீது தங்கியிருந்த ரூமில் இருந்து நான் எடுத்துவந்த அன்றுதான் ஃபரீதும் ·போன் பண்ணினார்!

*

காலையில் என் மேஜையில் இருந்த பைலட் பேனாவுக்கு ஆயுள் முடிந்துவிட்டது. நான் கப்பமரைக்காரிடம் கேட்டேன். ‘வேறு பேனா இக்கிதா நானா?’ என்று.

‘செகப்பு இக்கிது, ஹூதா இக்கிது, கறுப்பு இக்கிது.. எதுவேணும் உங்களுக்கு?’

‘ஏன் ஒவ்வொன்றிலும் ஒன்று கொடுத்தால் என்ன என்று நினைப்பு ஓடியது ஒருகணம். அடுத்த நிமிடத்தில் அவர் மூன்றையும் கொண்டுவந்து வைத்தார். செகப்பு இக்கிது, ஹூதா இக்கிது, கறுப்பு இக்கிது! துபாய் ஆஃபீஸில் ‘இக்கிது’ சொல்வதும் கேட்பதும் சுகம்தான். இது தெரியாமல் ஷார்ஜா தமிழ் சங்க நண்பர் ஒருவர் ஒருமுறை ‘வணக்கம் , வாழ்க! ஆபிதீனுடன் பேசமுடியுமா?’ என்று கேட்க , கப்பமரைக்கார் ‘இக்கிறாஹா.. தர்றேன்’ என்று சொல்லியதில் மயக்கமுற்றது தப்புதான். நினைப்பது நடக்கிறது என்றால் ‘இக்கிது’வைக்கூட மாற்றலாம். வேண்டாம், இக்கிட்டும்.

சென்ற (30.08.1996) வெள்ளி இரவு, என்னிடம் கொடுத்த புது இஸ்முக்களில் தான் குறித்துக்கொள்ளாதது ஒன்று இருக்கிறது என்று ஜெப்பார்நானா வந்தார். அவர் அணிந்திருந்த போலோ டி.ஷர்ட் மயக்கியது. அவர் சொன்ன விலை அதைவிட மயக்கியது. ஓடிப்போன யாஸ்மின் டெக்ஸ்டைல் கடையில் இருந்த சாமான்களை , கடன் கொடுத்த ஏமாந்தவர்கள் பட்டத்திற்குப் பாதியாக விற்றுக்கொண்டிருக்கும்போது வாங்கினாராம். இப்போது தீர்ந்துவிட்டது கடையும் அந்த ஸ்டாக்கும் என்றார். இந்த வெள்ளி காலை அந்த கடைக்குப் போனேன். கட்டிடத்தை இடித்துக்கொண்டிருந்தார்கள். பக்கத்திலுள்ள கோல்டன்கோஸ்ட்-ல் ஒரு நண்பர் வேலைபார்க்கிறார். அவரிடம் பக்கத்து கடையில் வந்த டி.ஷர்ட்டைப் பற்றிக் கேட்டேன். ‘எல்லாம் அள்ளிட்டானுவடா’ என்றார். ஆனால் ஒன்றே ஒன்று அவர் கடையில் இருக்கிறதாம். இடிந்த கடையில் இருந்து எடுத்ததுதான். காட்டினார். அச்சாய் ஜெப்பார்நானா போட்டிருந்த டி.ஷர்ட். விலை? எனக்காக போனால் போகிறதென்று அதே விலை என்றார். பக்கத்திலிருந்த இன்னொரு சேல்ஸ்மேன், ‘உங்க கூட்டாளிதானேங்க..பத்துரூவா வாங்கிக்குங்க, போதும்’ என்றார். அவர் சீனியர் சேல்ஸ்மேன். என் கூட்டாளி அல்ல! ஆனால் ஜெப்பார்நானாவின் எதிரி இப்போது. எவ்வளவு வேகமாகக் கையில் வீழ்கிறது! ஆனால்.. தௌஃபீக்-ஐ அவன் அரபி கேன்சல் பண்ணக்கூடாது என்று நினைத்தது மட்டும் ஏன் பலிக்கவில்லை? முந்தாநாள்தான் one-wayல் போனான். வந்து மூன்று மாதம் கூட முழுதாக ஆகவில்லை.

சட்டம், விசா கொடுப்பவர்களையே பயமுறுத்துகிறது.

அந்த அரபி நல்லவனாக இருந்ததால்தான் விசாவுக்கு வாங்கிய பணத்தில் கால்வாசியை திருப்பித்தர ஒத்துக்கொண்டான். தௌஃபீக் முகத்தில் வருத்தம் ஏதுமில்லை. வியாபாரம் பண்ணுபவர்களுக்கு ஒருவிதத் துணிச்சல் இருக்கத்தான் செய்கிறது. ‘கசிகாஜி’ பிரச்னையில் இரண்டுமுறை புருனேயிலிருந்து பரிதாபமாக ஓடிவந்த சிறுவன் அல்ல அவன். வாப்பாவின் கீழக்கரை மூளை காட்டிய வழியில் சிங்கப்பூர் சென்று , கம்ப்யூட்டர் பாகங்களை கடத்திக் கடத்தி தைரியம் வந்துவிட்டது போலும் அவனுக்கு. ‘அட..வுடுங்க நானா..அடுத்ததடவை பாத்துக்கலாம்..எது எப்படியும் போவட்டும். ஆனால் ஊருக்கு போவும்போது அதுவும் நாவப்பட்டினம் பீச் ஸ்டேசன்லேர்ந்து கடற்கரையைப் பார்த்துக்கிட்டே சுபுஹு நேரத்துலெ அப்படியே ஊருக்குள்ளே நுழையிற சுகமே தனி’ என்றான்.

சுகம்தான். திரும்பிவரும் தைரியம் உள்ளவர்களுக்கு சுகம். திரும்பவே முடியாதவர்களுக்கும் சுகமாகத்தான் இருக்கும். வேறு வழியில்லை. ஆனால் தௌஃபீக் முகத்தில் தெரிந்த தைரியம் ஏர்போர்ட்டில் இருந்த கடுமையான கூட்டத்தில் முக்கால்வாசிப் பேருக்கு இல்லை. எத்தனை கேன்சலேசன் கேசுகள்! ஷேக் முஹம்மதுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு இவர்களின் பதுவாக்கள்தான் காரணம் என்று , ஏற்றிவிடவந்த கும்பல் பேசிக்கொண்டிருந்தது. அவர், அடுத்த மன்னனாக முன்பு அறிவிக்கப்பட்டதும்கூட, அதற்கும் முன்பு ஷேக் ரசீதிற்கு மகனாகப் பிறந்ததும் கூட , பதுவாக்கள்தான் காரணமா?

எனக்கு  சிரிப்பு வந்தது. முடிவுகளை ஷேக்குகள் எடுக்கிறார்கள். ஷேக்குகளை யார் முடிவு செய்கிறார்கள்? சதாம்களை முடிவு செய்கிறவர்களா? அவசர அவசரமாக பெட்டிகளை கட்டிக்கொண்டு தாயகம் திரும்புகிற இத்தனை பேர்களின் முடிவுகள் எப்படி அமையும்? திரும்பவும் அவர்கள் ஊரில் பணம் அழுது இங்கேயே வருவார்கள். இவர்களை யார் முடிவு செய்கிறார்கள்? தௌஃபீக்கின் ஒரு பெட்டி கூட ஒரு ஊதிப்போன தொழுநோயாளியின் வயிறு போல் இருந்தது. அவசரத்தில் ‘ஜம்ஜம்’ உள்ள மஸாஃபி பாட்டில்கள் இரண்டை வேறு உள்ளே திணித்து , அவைகள் உடைந்து, அடியில் சொதசொதவென்றிருந்தது அந்த அட்டைப்பெட்டி . சாதாரணமாகவே சென்னை விமானநிலையத்தில் , அட்டைபெட்டியில் வரும் சாமான்களில் பாதி பிளேடுபக்கிரிகளால் பதம்பார்க்கப்பட்டிருக்கும். இந்த அட்டைப்பெட்டி இன்னும் வசதி. உள்ளே கைவிட்டு குடையும்போது ‘ஜம்ஜம்’ பட்டால் புனிதமும் கூட.

தௌஃபீக்கை அனுப்பிவிட்டு ஹலால்தீன் இடத்திற்கு வந்து படுக்கப்போகும்போது அந்த காக்கா ஊருக்கு ஃபோனில் சொல்லிக்கொண்டிருந்தார். digestive பிஸ்கட்களும் ‘ஜம்ஜம்’ தண்ணீரும் அனுப்பி வைத்திருக்கிறாராம். நன்றாகத்தானிருக்கும்! தௌஃபீக், நாங்கள் கொடுத்த கடிதங்களைக்கூட அந்த பாட்டில்கள் பக்கத்தில்தானே வைத்திருந்தாய்? அந்த விமானத்தில் போகிறவர்களில் எத்தனை பேரை நாடு தன் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிடும் என்று தெரியவில்லை. ஏழெட்டு நாட்களுக்கு முன்பு பம்பாயில் இறங்கியவர்கள் பங்காளிகள் என்று ஒரு விமானமே திரும்பி விட்டதாக செய்தி. பங்களாதேஷ், தன் நாட்டு பாஸ்போர்ட் இல்லாதவர்களை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டதாம். ஆனால் பாகிஸ்தான் மூன்று கப்பல்களை அனுப்பியிருக்கிறதாம், எந்த முஸ்லீமாக இருந்தாலும் வரட்டும் என்று. உண்மையா? தெரியவில்லை. ஆளாளுக்கு தன் கற்பனைத்திறனைக் காட்டினார்கள். இம்மிக்ரேசன் ஆஃபீஸில் முந்தாநாள் , போலீஸ்காரர்கள் மூன்றுபேரை அடித்துக்கொன்றுவிட்டார்கள் என்று டிரைவர் ரஜப் சொன்னான்.

‘மர்கஜ் அல் பலுச்’ என்று கப்பமரைக்கார் கிண்டல் செய்கிற , கிடங்கிலுள்ள பலுச்சி தொழிலாளிகளுக்கான அறையிலிருந்து அந்த செய்தி வந்தது. விசாரித்துப்பார்த்ததில் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன் காட்டுத்தனத்தைக் காட்டிய போலீஸை ஒரு பட்டான் கும்பல்தான் கொன்றுவிட்டது அடித்தே என்று தெரிந்தது. ஆனால் பத்திரிக்கையில் வரவில்லை. மக்கள் வீறுகொள்வது ‘மம்னு’. ‘செப்டம்பர் இறுதிக்குள்’ என்கிற கெடுவில் மாற்றமில்லை என்ற அரசாங்கச் செய்தி மட்டும் திரும்பித் திரும்பி வந்தது. விமான டிக்கெட்டிற்கு வழியில்லாதவர்கள் Boat-ல் போய்க்கொள்ளலாமாம். Boat-ல் இடம் கிடைக்காதவர்கள் நீந்திப்போகலாம். நீந்தத் தெரியாதவர்களுக்கு அக்டோபர் முதல்வாரம் நீச்சல் பயிற்சி அரசாங்கம் கொடுக்கும். பயிற்சியாளர்கள் அரபிகளாக மாற அந்த அவகாசம் போதும்.

**

12.09.1996

Relaxation (III Cassette). வருடம் 1975ஆக இருக்கலாம். சர்க்காரின் வேறு புதிய கேஸட்கள் இல்லை. இப்போதெல்லாம் செஷனில் பத்து நிமிடம் அவர்கள் பேசுவதே அரிதாம். புது இஸ்முக்கள் மட்டும் தேவைப்படும்போது கொடுக்கிறார்கள். சென்ற வெள்ளியில் இந்த கேஸட்டைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். என்ன அழகான ரிகார்டிங்.! ஹும்.. இந்தக் கால சீடர்களும் இருக்கிறார்களே.. நிச்சயமாக இவர்கள் அடுத்த பிறவியில் கொல்லன் உலையில்தான் இரும்பை அடித்துக்கொண்டிருப்பார்கள். கேட்டுக்கொண்டிருக்கும்போதே பளாரென்று அறை விழும். அப்புறம் குரல்வளையை பூட்ஸ்காலால் ஒருவர் மிதிப்பார். முழி பிதுங்கும்போதே தலையில் ஒரு குட்டு. இதை ஜெப்பார்நானாவிடம் சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டே, ‘ஆமா.. இன்னமே சர்க்கார் பேச்சைக் கேப்பியா கேப்பியா’ண்டுதானே?’ என்றார். கடைசியாகக் கேட்ட கேஸட் மட்டும் பரவாயில்லை. தொடையில் அழுத்தித் திருவித்திருவி எடுக்கிற மாதிரி மட்டும் இருந்தது. மற்றபடி சத்தம் இல்லை. இவைகளைக் கேட்டுக் குறிப்பு எடுத்ததே பெரிய பயிற்சிதான். இமேஜினேசன்தான் உதவிற்று!

இனி ரிலாக்சேஷன்…

ரவூஃப் அப்படித்தான் கேஸட்டில் எழுதிக்கொடுத்தான். ஆனால் எல்லாமே வருகிறது. இப்போது எல்லாம் அவசியம்தான். ஈராக்கின் அமெரிக்க தளத்திற்கு F117- STEALTH Fighter Bombers வந்து கொண்டிருக்கின்றன – குவைத் வழியாக. ஓடிவரும் குர்து மக்களுக்கு ஈரான் 39000 தற்காலிக தங்குமிடங்களை அமைத்திருக்கிறது. 160000 தற்காலிகங்கள் இன்னும் அமைக்கப்பட இருக்கின்றன. எல்லாம் எதற்கு? அமெரிக்க பாதுகாப்பு செக்ரட்டரி வில்லியம் பெர்ரி, வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கருதி கொடுத்த எச்சரிக்கைக்காக. ‘Iraq would very soon learn that we are not playing games’..

haz1996diary - img13 - dec10-11b-diary-b

எல்லா நாடுகளுக்கும் கற்றுக்கொடுப்பதுகூட ஆட்டம்தான். ஆட்டத்தின் சூட்சுமத்தை அலசிப்பார்க்கும் குணம் , நாம் கருவிகளில் ஒன்றாக இருக்கும் அந்தக் கட்டத்தில் வருமா? சென்ற யுத்தத்தின்போது ஓடிவந்து கொண்டிருந்தவர்களிடம் ரிலாக்சேஷன் கேஸட்டைக்கொடுத்து கேட்கச் சொன்னால் எப்படி இருந்திருக்கும்? அல்லது ‘SS’ பயிற்சியை ஒரு ரொட்டிக்கு ஆளாய்ப் பறக்கிற தருணங்களில் செய்யச் சொன்னால் எப்படி இருந்திருக்கும்? ஆனால் உலகின் போராட்டம் சரியான செய்திகளை சரியான நேரத்தில் கேட்காமல், கேட்டும் செய்யாமல் இருப்பதினால் அல்லவா வருகிறது? அது ஷைத்தானியத் என்றால் அது இல்லாமல்தான் ரஹ்மானியத் ஏது? இத்தனைக் குறைகளை வைத்துக்கொண்டு ஷைத்தானின் மலமாய் அலைவதால்தான் குளித்தல் தேவைப்படுகிறது. ஆனால் குளிக்கும் நோக்கம் மலத்தைக் களைவது மட்டுமா? இதுநாள் வராத புத்துணர்ச்சியை எல்லா குளியல்களும் கொடுப்பதில்லைதான். சர்க்கார் பேச்சு குற்றாலம். முப்பது வருடங்களுக்கு மேலாக கொட்டிக்கொண்டிருக்கிறது. அப்போதிருந்து குளித்து வந்திருந்தால் இன்றைய நான் எப்படி இருந்திருப்பேன்? ஏன், அப்போதைய சீடர்கள் இன்னும் அப்படியே கேட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். காரணம் என்ன? குளிக்கப்போன இடத்தில் ‘குப்பி’ அடிப்பது தப்பு! இதைச் சொன்னால் , ‘அப்போ மத்த நேரத்துல அடிக்கலாம்தானே?’ என்று கேட்பார்கள். இப்படி கேட்டுக்கொண்டே அடித்துக்கொண்டிருந்தால் எப்போது குளிப்பது? சர்க்காரின் சீடர்களில் சிலபேர் குப்பிக்கு புகழ் பெற்றவர்களாக இருந்த காரணத்தினாலேயே அந்த காலத்தில் சர்க்காரை வெறுக்கும் பழக்கம் அதிகமாகி இருந்தது எனக்கு. ‘கப்பியும் கயிறும் போல இணைந்தாலும் குப்பி கொடுக்காதவன் கூட்டாளியா?’ என்று பழமொழி உண்டாக்கிய ஊர். இப்போது குப்பி மேல் அனுதாபமே உண்டு, மூன்று Bodyகளும் சேரும்போது அப்படி தோன்றிற்று. ஒருநாள் துணுக்குற்றேன். இது என்ன அசிங்கம்? ரியாலத் செய்கிற நேரத்தில் இந்த எண்ணம் வருகிறதே என்று. என் இரண்டு வட்டங்களின் வண்ணமும் சிவப்புதானா? சர்க்காரிடம் கேட்க பயமாகவும் இருந்தது. ஆனால் அவர்களின் 23.02.1996 கேஸட் தெளிவு படுத்திவிட்டது. நான் நனைந்தது மழையில், மழையில் தெறிக்கிற துளியில் அல்ல. இரண்டும் ஒன்றல்ல. ஆனால் உடல்கள் ஒன்று. ஆணுமில்லை, பெண்ணுமில்லை.

பரமஹம்சரின் முலை எனக்கு முளைக்குமா? நானே அதில் பாலும் குடிப்பேனா? பாலும் நான்தானோ?

(தொடரும்)

குறிப்புகள்

மவுலூது – அவுலியா, நபி(ஸல்) மீது புகழ் பாடுதல்
பிஸாது – அவதூறு
முத்தவா – மார்க்க போலீஸ்!
சீராணி – பிரார்த்தனைக்குப் பின் பகிர்ந்தளிக்கப்படும் இனிப்பு
தர்ஜுமா – மொழிபெயர்ப்பு
சப் – வரிசை
கல்லிவல்லி – விட்டுத்தொலை, சட்டத்திற்கு புறம்பான , காலவதியான விசா வைத்திருப்பவரக்ள்
ஹூதா – நீலம்
கசிகாஜி – புருனேயில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை
சுபுஹு – அதிகாலை நேரம்
பதுவா – சாபம்
ஜம்ஜம் – மக்காவிலுள்ள புனிதக் கிணறு/ அதன் நீர்
மர்கஜ் அல் பலுச் – பலுச்சிகளின் மையம்
மம்னு – தடை
இஸ்மு – மந்திரம்
ஷைத்தானியத் – தீயசக்தி
ரஹ்மானியத் – நல்ல சக்தி
குப்பி – ஓரினப்புணர்ச்சி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s