நீதி – கலீல் கிப்ரான்

கலீல் கிப்ரான் என்று நேற்று தேடியபோது ஒரு சைத்தான் வந்தது! அங்கே , ‘Ghalil Gibran is a Christian Poet and Most of the Muslims believe that he is a Muslim, actualy he is a Labanese Christian following no releigion.’ என்ற ‘நல்ல குடிமகனின்’ பதட்டமான மறுமொழி கண்டதும் நண்பர் என். சொக்கன் மொழிபெயர்ப்பில் வெளியான அருமையான ‘மிட்டாய் கதைகள்’ நினைவு வந்தது. அதிலிருந்து – சம்பந்தமில்லையென்றாலும் – எனக்குப் பிடித்த ஒரு கதையைப் பகிர்கிறேன்,  கிழக்கு பதிப்பகத்தாருக்கு நன்றியுடன்…

**

mittaay kataikal chokkanஓர் அரசனின் சபைக்கு, புதிய மனிதன் ஒருவன் வந்தான். அவனுக்கு ஒரே ஒரு கண்தான் இருந்தது. இன்னொரு கண் இருந்திருக்கவேண்டிய இடத்தில் வெறுமையாக, ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது.

அரசன், அவனை அக்கறையோடு விசாரித்தான் – ‘என்னாச்சுப்பா உனக்கு? யார் உன் கண்ணைப் பிடுங்கினார்கள்?’

அந்த ஒற்றைக்கண் மனிதன், அரசனைப் பணிவாக வணங்கியபடியே சொன்னான் ; ‘அரசே, எனக்குப் பெரிய அநீதி நடந்திருக்கிறது. நீங்கள்தான் இதைக் கவனித்து, எனக்கு உரிய நியாயத்தை வழங்க வேண்டும்.’

இப்படிச் சொல்லிவிட்டு அவன் தன் கதையைத் தொடர்ந்து சொன்னான் – ‘அரசே, நான் ஒரு திருடன். நேற்று இரவு, அமாவாசை என்பதால் அந்த சேட்டுக் கடையில் பணம் திருடத் தீர்மானித்தேன் நான். ஆனால், சுவரில் ஊர்ந்து, ஜன்னல் வழியே கடைக்குள் குதித்தபோது, இருட்டில் வழி தவறி, துணி நெய்கிறவனின் கடைக்குள் போய்விட்டேன். அங்கும் ஒரே இருட்டு. தட்டுத் தடுமாறி நடந்தவன், அந்த நெசவாளியின் தறியில் சிக்கிக்கொண்டேன். அந்தத் தறி, என்னுடைய ஒரு கண்ணைப் பிடுங்கிவிட்டது.’

‘அடடா’ என்று உச்சுக்கொட்டினான் அரசன் – ‘இப்போது என்ன செய்யலாம் சொல்.’

‘என் கண்ணைப் பிடுங்கிய அந்த நெசவாளிக்கு, உரிய தண்டனை கொடுக்கவேண்டும் அரசே’ என்றான் வந்தவன்.

உடனடியாக, அந்த நெசவாளியை இழுத்துவருமாறு ஆணையிட்டான் அரசன். அவன் வந்ததும்,’இந்தத் திருடனின் கண்ணைப் பறித்துக்கொண்ட குற்றத்துக்காக, உன் கண்களில் ஒன்று பறிக்கப்படும்’ என்று தீர்ப்பளித்தான்.

இதைக் கேட்ட நெசவாளி, கொஞ்சமும் அதிர்ச்சி அடையாமல், ‘பேரரசே, இதுதான் சரியான தீர்ப்பு. அவனுடைய ஒரு கண் பறிபோனதற்குப் பதிலாக, என்னுடைய கண்ணும் போகவேண்டும் என்பதுதான் நியாயம்’ என்றான். ‘ஆனால் அரசே, நான் நெய்கிற துணியில் இரண்டு பக்கங்கள் இருக்கிறதே, அந்த இரண்டு பக்கங்களையும் பார்த்து வேலை செய்வதற்கு, எனக்கு இரண்டு கண்கள் தேவைப்படுமே.’

‘ஓஹோ’ – தாடையில் கை வைத்துக்கொண்டு யோசித்தான் அரசன். ‘அதுவும் நியாயம்தான், என்ன செய்வது?’

நெசவாளி தொடர்ந்து சொன்னான். ‘அரசே, என் பக்கத்து வீட்டுக்காரன், செருப்பு தைப்பவன். செருப்பில் ஒரு பக்கம்தானே எப்பவும் தைக்கப்படுகிறது. ஆகவே, அவனுக்கு ஒரு கண்ணே போதும்.’

‘ஆஹா, நல்ல செய்தி’ என்று உரக்கக் கூவிய அரசன், அந்த செருப்புத் தைப்பவனை இழுத்துவந்து,.அவனுடைய ஒரு கண்ணைப் பிடுங்கிவிட்டான்.

இப்படியாக, அந்த தேசத்தில் நீதி நிலைநாட்டப்பட்டது.

*

தொடர்புடைய ஒரு சுட்டி :
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – சி. ஜெயபாரதன்