சித்தி மா (சிறுகதை) – எஸ்.எல்.எம். ஹனீபா

நன்றி : காலச்சுவடு  & ஹனீபாக்கா

*

slmhan-by-naleem

சித்தி மா  – எஸ்.எல்.எம். ஹனீபா

ஆற்றின் மேற்குக் கரையின் கண்டல் காடுகளில் சூரியன் மிதந்து கொண்டிருந்தான். ஆற்றங்கரை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. சூரியனின் அந்திக் குளியல், கொள்ளை அழகில் குதூகலிக்கும் இரவைத் தழுவும் தாபம்.

கண்கள் சுட்டெரிந்தன. வாப்பாவின் கை பிடித்து ஆமையரப்பாட்ட ஆட்டுக் குட்டி வாங்கப் போன அன்றிலிருந்து இந்த ஆற்றங்கரையை இத்தனை காலமாக அவரும் பார்க்கிறார். எத்தனை அழகு, எத்தனை கோணம், எத்தனை சிலிர்ப்பு.

அவர் ஆற்றங்கரையைப் பார்த்துக் கொண்டிருக்க வீதியில் போவோரும் வருவோரும் அவரைப் பார்த்துக் கொண்டு போவார்கள். அவர் ஊருக்குப் புதினம். ஊர் அவருக்குப் புதினம். தீராத புதினம்.

அண்ணாவி சாச்சாவின் களி கம்பு…

நூகு சாச்சாவின் சிலம்பாட்டம்…

அலிக்குட்டி ஓடாவியாரின் தொட்டில் ஊஞ்சல். . .

ஓடக்கரை பூலாமீர்சா சாச்சாவின் கோடு கச்சேரி…

வெடிக்கார இபுறான்குட்டி மாமாவின் புலி வேட்டை…

அலியார் போடியாரின் குதிரை வண்டி…

உலக்க பாவாவின் வெட்டுக்குத்து…

நெடிய மையப்பாவின் களகம்பும் விரால் மீன் கூடையும்…

அபுசாலி மச்சானின் கரப்பந்தாட்டம்…

பட்டறையர் மாமாவின் கந்தூரியில் பசு நெய்யில் குழைந்துகிடக்கும் ஆட்டுக்கறித் துண்டங்கள்…

சித்திமாவின் பொங்கிப் பூரித்துக் கிடக்கும் பேரழகுத் துண்டங்கள்…

குண்டுமணி போலும் ஊருக்குள் எத்தனை புதினங்கள்.

ஹாஜியார் மக்காவுக்குப் போய்வந்த பதினைந்து நாட்கள் பதினைந்து மணித் துளிகள்போல் உம்மா இரண்டு நாட்கள் கண் கலங்க, உடல் குலுங்க, ஹாஜியாரை முத்தமிட்டுச் சென்றார்.

இன்று வியாழன் மாலை – உம்மாவைக் காணும் நாள். உம்மாவின் கையால் இஞ்சி பிளேன்டீ குடித்து விட்டு ‘மஃரிப்’ தொழப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நெஞ்சில் நிய்யத் உறுதியாகியது.

ஆற்றங்கரை வீதியில் மிதந்து சென்ற ஹாஜியாரின் புராதன காலத்து சைக்கிள் வண்டி திடீரென்று குறுக்கு வீதியால் அவரை அழைத்துச் சென்றது. முன்னால் வரும் சந்தியால் திரும்பினால் மூணு வீடு தள்ளி உம்மாவின் மண் குடிசை. வாசலில் பனி அவரைப் பந்தல். குருத்து மணலைக் கொட்டி நிறைத்திருந்த வாசல்.

எதிரே வரும் சந்தியைக் கண்டு சைக்கிளின் வேகம் மட்டாகியது. திடீரென்று கேற்றின் உள்ளிருந்து ஒரு ‘கை’ அவரின் சைக்கிளின் ஹெண்டலை அலாக்காகப் பிடித்து நிறுத்தியது.

இந்த நேரம் பார்த்து, இந்த வீதியால் நான் வருவேனென்று சித்திமாக்கு யார் சொன்னது? எத்தனை தருணங்களின் காத்திருப்பு… அவரின் எண்ணம் மடிந்து விழுந்த மறுகணம்,

“என்ன ஹாஜியார்! மக்காவுக்குப் போய் அன்று பிறந்த பாலகனா, சந்தனக் கட்டை ஆயிட்டீங்களாமே. எங்களக் கொத்திப் பிளந்த ‘கொறக் கொள்ளிக் கட்டைய’ நாங்க மறக்கல்ல. என்னையும் தொட்டுட்டுப் போயிருந்தா, என்ட பாவமும் அழிஞ்சிருக்குமே. நீங்க ஆம்பிளைக, லேசா மறந்திருப்பீங்க” சித்திமாவின் குரலில் ஏதோ ஒன்று இழையோடிக் கசிந்தது.

சித்திமா, தனக்கு முன்னால் வளைந்துகிடந்த வீதியை மேலும் கீழும் பார்த்தாள். மறு கணம், ஹாஜியாரின் தோள் பட்டையைப் பிடித்து, தலையைக் கவிழ்த்து, தொழுகையில் பூத்துக் கிடந்த நெற்றியிலும் அத்தர் மணக்கும் மோவாய்த் தாடியிலும் மூச்சுமுட்ட முத்தமிட்டாள். ஹாஜியாரின் சைக்கிள் ஆடிப் போனது.

அவரின் பாதங்கள் நிலத்தை அழுத்திப் பிடித்தன. ஹாஜியார் முன்னும் பின்னும் பார்த்தார். இடது பக்கப் புற வளவில் மாமரங்களும் தென்னைகளும் பூத்துக் குலுங்கும் முருங்கை மரங்களும் மஹ்ஷர் பெருவெளியில் கண் கண்ட சாட்சியங்களோ.

மரங்களெல்லாம் கொண்டல் காற்றில் அவருக்குப் பயங்காட்டிச் சிரிப்பதுபோல் கெக்கலித்தன. குளிர் தழுவிய மஃரிப் வேளையிலும் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பள்ளிவாசலிலிருந்து “அல்லாஹு அக்பர்”. அவரின் சைக்கிள் அவரிடமிருந்து விடை பெற்றது.

“மெய்தான்! நம்மடெ ரசீதாவுக்கு… உங்கட ரசீதாவுக்கு கவிதைப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாவது” அந்த வார்த்தையில் சந்தனத்தின் மணம் குழைந்து காற்றில் கலந்து அவரின் நாசித் துவாரங்களை நிறைத்தது.

“யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னித்து விடு.”

உம்மாவின் குடிலை மறந்து அவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

(end)

*

ஒவியம் : நளீம்

மக்கத்துச் சால்வை – மண்ணும் மணமும்

மதிப்பிற்குரிய SLM ஹனீபா அவர்களைப் பற்றிய ‘மக்கத்துச்சால்வை மண்ணும் மணமும்’ சிறப்பு மலரில் நான் எழுதியது:

***

‘… அடப்பாவி பதிலே தரமாட்டேன்கிறியே.. அப்படி பிசியா? உன்னுடைய பக்கங்களை படிப்பதற்காகவே ஒரு லெப்டெப் வாங்கி பாலர் பாடசாலைக்கு சிறுவர்கள் போவதுபோல் தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு ஒவ்வொரு கம்பியூட்டர் நிலையங்களுக்கும் இந்த அறுபத்தைந்து வயதில் படியேறி இறங்குகிறேன். இதற்கும் நீ பதில் தராவிட்டால் இங்குள்ள ஏதாவது ஒரு பத்திரிகையில் உன்னை வம்புக்கு இழுப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த வயதிலும் உன்னுடைய வாழைப்பழம் எனக்கு இனித்தது’ என்று இந்தப் பீத்த எழுத்தாளனுக்கு மின்னஞ்சலில் எழுதியிருந்தார் மரியாதைக்குரிய ஹனீபாக்கா – பத்து வருடங்களுக்கு முன்பு. நண்பர்கள் மூலம் முன்னரே அவரைப் பற்றி கேள்விப்பட்டு, ‘நூலகம்’ தளத்தில் ரசித்துப் படித்து, ’எத்தனை நாளைக்கு ‘மக்கத்து சால்வை’யையே போர்த்திக் கொண்டிருப்பது? அல்லது பக்கத்து ‘பஷீர்’-ன் சாதனையை பார்த்துக் கொண்டிருப்பது?’ என்றொரு வரியை ’இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்!’ கதையில் குறிப்பிட்டிருந்தேன். என்றாலும், மெயில் அனுப்பியது அவராக இருக்காது என்ற சந்தேகத்தில் இருந்தேன். சந்திக்கிற நண்பர்களிடத்தில் எல்லாம் இவனுடைய வாழைப்பழத்தை பிடித்துப் பாருங்கள் என்றே கிண்டலாக சிபாரிசு செய்பவர் இவரேதான் என்று அப்புறம்தான் தெரிந்தது, நண்பர் உமா வரதராஜனும் ’அவர் வம்பளப்புகள் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அதை கொஞ்சக் காலத்துக்கு சங்கிலியில் கட்டிப் போட்டு விட்டு எழுத்தில் தன்னை அமிழ்த்தியிருப்பாரேயானால் கி.ராஜநாராயணைனைத் தேடிப் பாண்டிச்சேரிக்குப் போகத் தேவையில்லை.’ என்று எழுதியிருந்தார். உண்மைதான்.

என்னுடைய ’ச்சோட்டா’ இணையதள வாசகர்களுக்காக இலங்கை எழுத்தாளர்கள் பலரை காக்கா அறிமுகப்படுத்தியிருக்கிறார். நானாக ‘உருவுஉருவுண்டு உருவி’ (சாதாரண அர்த்தம்தான்..) வாங்கிய கதைகளும் (உம்.: எஸ்.பொ அவர்களின் ’ஆண்மை’) உண்டு. காக்காவின் ’சிவப்புக்கல்லு மூக்குத்தி’ என்ற காதல் கதை வந்து தளத்தில் கண் சிமிட்டும். ’ஆமையரப்பாவும் ஆட்டுக்குட்டியும்’ , ’புலவர் மாமா’ என்று தொடர்கள் எழுதுவார் – நளீமின் ஓவியத்தோடு. தான் ரசித்த கட்டுரைகளை அவ்வப்போது அனுப்பிவைப்பார். என் பக்கங்களை எந்த வகையிலும் மலினப்படுத்தி விடக் கூடாது என்பதில் என்னைவிட அவருக்கு அக்கறை அதிகம் இருந்தது. அனார், அறபாத் , ஸபீர் ஆகியோரின் அன்பும் அவர் மூலம்தான் கிடைத்தது,

எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னைப் புத்தக விழாவுக்குச் சென்றபோது புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரை சந்தித்துவிட்டு (அவரைப்போன்ற உயிராற்றல் ஒவ்வொரு கணமும் பீரிடும் ஒரு மனிதரைப்பார்த்ததில்லை – ஜெயமோகன்) அப்படியே நாகூரும் சென்று என் மனைவி மக்களைப் பார்த்து வந்ததைக் குறிப்பிட வேண்டும். ’அரசரை (ஷாஹூல் ஹமீது பாதுஷா) காணாமல் அஸ்மாவை தரிசித்தேன்’ என்று என் ‘உயிர்த்தலம்’ தொகுப்பின் பின்னட்டையில் அவர் குறிப்பிட்டதற்கு நான் ஏழு ஜன்மம் தவம் செய்திருக்க வேண்டும்.

அஸ்மாவைக் கிண்டல் செய்து முகநூலில் பதிவு எழுதினால் மட்டும் இந்த மனுசனுக்குப் பிடிக்காது. ’ எண்ட தம்பிக்கு உங்கையாலேயே ஒரு சொட்டு பொலிடோல கொடுத்து இந்தக் கிழட கைகழுவி விடு.. கவனம் கை பத்திரம்’ என்று அவளுக்கு அறிவுரை போகும். வாட்ஸப்பில் எனக்கும் திட்டு வரும்! அவ்வளவு கரிசனம் என் உயிர் மேல்!

நாகூர் சென்றுவிட்டு அவர் அனுப்பிய மெயில் இது :

நாகூர் நகரத்தையும் அந்த வீடுகளின் அமைப்பையும் எந்நாள் மறக்க முடியவில்லை. அத்தனை வீடுகளிலும் நமது மூதாதையர்களின் இரத்தமும் வீரமும் பாரம்பரியமும் ஊடுருவியிருப்பது போல் உணர்கிறேன். ஐம்பதுகளின் இறுதியில் எனது வாப்பாவுக்கு நாகூரிலிருந்து கொடியேற்றத்திற்கான அழைப்பிதழ் தபாலில் வரும். வாப்பா, எங்களின் தலையைச் சுற்றி விட்டு, எப்பாடுபட்டாவது ஐந்து ரூபா பணத்தை காணிக்கையாக தபால் மூலம் நாகூருக்கு அனுப்பி வைப்பார். அப்படியானவொரு காலம் இருந்தது. வாழைச்சேனை ரயில்வே நிலையத்திலிருந்து நாகூருக்குச் செல்வதற்கான டிக்கட்டைப் பெற்றுக் கொள்ளலாம். பாஸ் போர்ட் வீசா என்ற பிரச்சினையெல்லாம் மனிதன் மனிதனாக வாழ்ந்த போது இருக்கவில்லை. நான் நம்புகிறேன். இன்னும் 25 வருடங்களில் அந்தக் காலம் திரும்பி வரும். அந்த நாளில் நாங்கள் இருக்க மாட்டோம்.

இடையிடையே, ’உன்னைப் பயம் காட்ட விரும்பவில்லை; என் உடல்நலம் சரியில்லை’ என்று சமயத்தில் அவர் குண்டு போடும்போதுதான் பகீர் என்கிறது. அந்த நிலையிலும், ’உன் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன், நமது பிரார்த்தனைகள்தான் படச்ச ரெப்புவின் காதுக்கு எட்டுவதில்லையடா!’ என்றுதான் எழுதுவார்.

நிச்சயமாக எட்டும். காக்காவின் நலத்திற்கு – இந்த நினைவுக் கொறிப்புகளுடன் – துவா செய்கிறேன்.

அவருடைய ஆசிகளுக்கு ஏங்கும்,

ஆபிதீன்
*.
மலரின் பிரதிகளுக்கு:
மக்கத்து சால்வை வாசகர் வட்டம்

No. 159, MPCS Front Road, Mavadichenai, Valaichenai – 30400,
Sri lanka.
arafathzua@gmail.com

***

தொடர்புடைய பதிவுகள் :

மனங்கொண்ட படைப்பாக வந்திருக்கும் மக்கத்துச் சால்வை – மண்ணும் மணமும்
மல்லியப்புசந்தி திலகர்

படித்தோம் சொல்கின்றோம் : மக்கத்துச்சால்வை மண்ணும் மக்களும் சௌந்தர்ய உபாசகரின் எளிமையான வாழ்வை பேசும் சிறப்பு மலர்
முருகபூபதி

இஸ்தான்புல்லில் ஒரு மகன் – S.L.M. ஹனீபா

அன்பிற்குரிய ஹனீபாக்காவின் பழைய முகநூல் பதிவு, நன்றியுடன்..

*

2017ஜனவரி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. அதிகாலை தொழுகைகளை முடித்துக் கொண்டவனாக பனி படர்ந்த மதின மாநகரின் எங்கள் நெஞ்சில் நிறைந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு முன்பாக அமர்ந்திருந்து அவர்களின் பெயரில் சோபனங்கள் சொல்லிக் கொண்டிருந்தேன்.

எனக்கருகே 50 மீற்றர் தூரத்தில் ஒரு இளம் தம்பதியினர் என்னைப் போல் முன்னோக்கி அமர்ந்திருந்தனர். நான் அவர்களின் அருகே சென்றேன். எனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது நான் முதல் நாள் சந்தித்து உரையாடிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் வந்து கொண்டிருந்தார்.

-நீங்கள் எவடம்?

-நாங்கள் துருக்கி இஸ்தான்புல்.

இஸ்மாயிலுக்கு துருக்கி மொழியும் தண்ணிபட்டபாடு. எனக்கு வசதியாக போய்விட்டது.

முதல்நாள் இரவு எனது உறவினர் மதீனாவின் புறநகர்ப் பகுதியிலுள்ள துருக்கி தேசத்தின் ரெயில்வே நிலையத்தைக் காண்பித்து வந்தார். துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சிக்குள் இருந்த 19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் கட்டப்பட்ட ஒரு கலைக்கூடம்தான் அந்த ரெயில்வே ஸ்டேசன். சுற்றிவளைத்து பாதுகாப்பு வேலி அமைத்திருந்தனர்.

இந்த பத்தியைப் பதிவு செய்யும்போது மிகவும் பதற்றப்படுகிறேன்.

துருக்கியைச் சேர்ந்த அந்த சகோதரனிடம் நான் உரையாடுகிறேன். நாங்கள் மூவரும் அந்த பட்டுத் தரையில் ஒரு பக்கமாகப் போகிறோம்.

துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் அந்த மகோன்னதமான நாட்களை அவன் நினைவுகளில் படர விடுகிறேன். எனது உரையாடலை இஸ்மாயில் மொழிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார். எங்களை விட்டும் சற்றுத் தொலைவில் எங்களின் உரையாடலை கேட்டவராக அந்த சகோதரனின் துணைவியார் அமர்ந்திருக்கிறார். அந்த முகத்தின் தேஜஷூம் அழகும் என் நெஞ்சில் இப்பொழுதும் சுடர் விடுகிறது. நான் பேச்சை முடிவுக்கு கொண்டுவருகிறேன்.

-ஷபீக், நோபல் பரிசு பெற்ற உங்கள் தேசத்தவரான ஒரான் பாமுக் இனை தெரியுமா? எனக்கேட்டேன். அவரின் புகழ் பெற்ற நாவல்களின் பெயர்களை எல்லாம் சொல்லி அது தமிழ் மொழியில் மாற்றம் பெற்ற வரலாற்றையும் சொன்னேன். எனது பேச்சை மிகவும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.

நாங்கள் இருவரும் நிறைய உரையாடினோம். அவற்றைப் பதிவு செய்ய இது களமல்ல.

-ஷபீக், எனது பயணம் ஆரம்பமாகப் போகிறது. இந்த புனித பூமியிலிருந்து நான் விடைபெறப்போகிறேன். இஸ்தான்புல்லில் இருந்து மீண்டும் அந்த ரயில் மதீனா நகரத்தை நோக்கி வரும் காட்சி என் கண்களில் மிதக்கிறது. அந்த நாளில் நீங்களும் நானும் இருப்பது நிச்சயமில்லை. நமக்கு விதிக்கப்பட்ட மறுமைநாளில் நானும் நீங்களும் துருக்கியிலிருந்து மதீனாவிற்கு பயணிப்போமாக.

எழுந்த ஷபீக் என்னைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு மாய்ந்துபோனார். 50 மீற்றர் தூரத்தில் ஷபீக்கின் வருகையை அவரின் மனைவி பார்த்துக் கொண்டிருந்தார்.

எனது கரங்களிலிருந்து காம்பிலிருந்து பூ தழுக்கென்று கழன்று விழுவதுபோல் ஷபீக்கின் கரங்கள் நழுவியது. மனைவியின் அருகே சென்ற ஷபீக் என்னைக் கூவி அழைத்தார்.

“Sir, Oran Famuk Problem Muslim.”

*

Thanks : Slm Hanifa

என்னையும் அவர்கள் சிலுவையில் அறைந்தார்

‘பதிவுகள்’ ஆசிரியர் நண்பர் வ.ந. கிரிதரனின் முகநூலில் ஹனீபாக்காவின் இந்த வரிகளைக் கண்டேன். பகிர்கிறேன்.

நன்றி : எஸ்.எல்.எம்.ஹனீபா, வ.ந. கிரிதரன், தமயந்தி

« Older entries