சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (07)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06

அத்தியாயம் 07

ஆபிதீன்

*

15.03.1996 வெள்ளி ‘செஷன்’

4-11.04.95 கேஸட்டிலிருந்து..

‘Secret Symbol’ பயிற்சி :

‘யாராச்சும் ஒரு ஆள் சொல்லுங்க.. எப்படி செஞ்சிக்கிட்டு வர்றீங்கண்டு..’ – ‘S’

சீடர் கவுஸ் மைதீன் சொல்ல ஆரம்பிக்கிறார் :

‘ரிலாக்ஸா முதல்லெ படுத்துக்கனும். படுத்தபிறகு ரெண்டு அடி உசரத்துக்கு Astral Body மேலே போவுது. அதுக்கு முன்னாடி ஜட்டி போட்டுக்குற மாதிரி கற்பனை பண்ணிக்கனும். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கலர் ஜட்டி’

‘சரி புதன்கிழமை என்னா கலரு?’

‘வந்து.. Golden Yellow!’

‘ச்!’

‘இல்லே.. Blue… புதன்கிழமைண்டு சொன்ன உடனே வியாழக்கிழமை ராவுண்டு பொய்ட்டேன்’

‘சரி அதென்னா, இன்னக்கி இந்தக்கலரு பேனா குத்தியிருக்கீங்க? Blueலெ குத்தனும் இன்னக்கி?’

”கரெண்ட்’ இல்லே..’

‘இல்லேண்டா டார்ச்லைட் அடிச்சிப் பாத்துல்லெ குத்தனும். ம், சரி மேலே சொல்லுங்க’ – ‘S’

‘ஜட்டி தொப்புளுக்கு கீழே இருக்கனும். மேலே போன Astral Body அப்படியே குப்புற பெரளுது. அப்ப Silver Cord Connection ஏற்படுது. இப்போ மறுபடி நாலுஅடிக்கு மேலே போவுது. அப்படியே திரும்பி ஒரு கால்வட்ட வளைவுலெ நிக்கிது. Physical Bodyலேர்ந்து ஆறு அடி தள்ளி..’

‘அது நிக்கிது, நீங்க படுத்து கிடக்குறீங்க?’ – ‘S’

‘இல்லே , நான் நிக்கிறேன். Body படுத்துக்கிடக்குது’

‘ஆங்..அப்படி சொல்லுங்க, இப்ப மேலே சொல்லுங்க’

‘Physical Bodyயோட தலையிலேர்ந்து கால்வரைக்கும் ஏதாச்சும்  மாற்றங்கள் இருக்காண்டு பாக்குறேன். அப்புறம் clockwise – anticlockwise சுற்றி வர்றேன். physical Bodyஐ. இப்ப physical Bodyயோட இடது பக்கம் ஒரு வெள்ளைத் திரை தெரியுது. இப்ப physical Bodyயோட இதயத்துலேர்ந்து ஒரு blue rays கலந்து போவுது. இப்ப நம்ம பார்வையும் அந்த rays கலந்து  symbolஐ வரையப்போவுது. வரைய ஆரம்பிக்கும்போது ‘கல்காயில்’ இஸ்மு ஓதுறோம். மேலே தெய்வத்தன்மை இறங்கி வரும்போது centreலெ உள்ள circleம் ஃபார்ம் ஆயிடுது. circle நடுவுலெ கோடும் வந்துடுது. இப்ப மறுபடி வரையிறோம். இந்த தடவை இன்னும் thickஆ. 3வது தடவை வரையும்போது full darkஆகவே எழுதிடுறோம். எழுதுன பிறகு triangleலோட 3 pointலேர்ந்தும் ஒரு milky white rays  புறப்பட்டு physical Bodyயோட பிட்யூட்டரி glandsக்குள்ளே நுழையுது. Astral Bodyயோட கண்ணுலேர்ந்து அதே சமயத்துலெ ஒரு blue rays புறப்பட்டு physical Bodyயோட heartலெ நுழையுது. அப்படி நுழையும்போது ‘அந மர்கஜ் உல் வஹி அந மர்கஜ் உல் இல்ஹாம்  அந மர்கஜ் உல் குல்லிசய்..’

‘கஜ்ஜூபுஜ்ஜுண்டு சொல்லாதீங்க. z… Markaz.. I am centre of…ண்டும் சொல்லலாம். ஆனா அரபிதான் நல்லது’ – ‘S’

‘இப்ப சொல்லும்போது இதயத்துலெ Gold Circle ஃபார்ம் ஆகுது. அடுத்த தடவை Scarlet Redலெ. Star ஃபார்ம் ஆகுது…அடுத்தவாட்டி starக்கு உள்ளே இலைப்பச்சை கலர்லெ ஒரு சதுரம் ஃபார்ம் ஆகுது’

‘சரி இப்ப மேலே குளிச்சிட்டு சட்டை போடும்போது ‘இது symbol வந்த இடமாச்சேண்டு தோணிச்சா?’

‘இல்லை’ என்றார் கவுஸ்மைதீன். ‘எனக்கு வந்து… உறுத்தல் இந்திச்சி..’ – இது சாலிமரைக்கான்.

‘அது எப்படீண்டா…விருந்துக்கு போய் சோறு உண்கும்போது சில பேருக்கு ‘சீனித்தொவை’ ஏப்பம் வரும். சில பேருக்கு ‘கலியா’ ஏப்பம் வரும். சில பேருக்கு எல்லாம் கலந்த ஏப்பம் வரும். விருந்து effect எல்லாத்துக்கும் ஒரேமாதிரிதான் (ஏப்பம்தாம் வித்யாசம்!)’ – ‘S’

இதயத்திற்கு பின்புறம் வரும் அரிப்பு natural என்கிறார்கள் சர்க்கார்

*

‘என்னெட்ட உள்ள ‘நெகடிவ்’வும் உங்களுக்கு வரும். அதை ‘கட்’ பண்ணுறதுக்குத்தான் இந்த பயிற்சி..என்னெட்டெ உள்ள ‘பாசிடிவ்’ மட்டும்தான் உங்களுக்கு வரனும்’ – ‘S’

*

கவுஸ்மைதீன் தொடர்ந்து சொல்கிறார் :

‘white rays-ம் Blue Rays-ம் நாம கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ளே cut ஆயிடுது. இப்ப மறுபடி மேலே கிளம்பி வந்து – திரும்பி மல்லாக்கப் படுத்து – கீழே physical Bodyயோட சேர வர்றோம்’

‘சரி இது பண்ணும்போது Erection ஏற்படுதா?’ – ‘S’

‘இல்லே..’

‘சோர்ந்து போன மாதிரி தெரிய வருதா?’

‘ஆமா..’

‘very good’- ‘S’

*

‘வெறுமனே மொஹப்பத் வச்சாவே போதும் – நீங்க நானாக மாறுவீங்க’ – ‘S’

முதல் மூன்று நாளைக்கு :

யா அஹத் -1 , யா பாஷித் – 2, யா ஜமீல் – 3, யா தை(dh)யான் – 4, யா ஹாதி – 5, யா வாஜித் – 6, யா ஜா(z)கி – 7

மூன்று நாளைக்குப் பிறகு :

யா ஹமீது – 8, யா தாஹிர் – 9

Physical Bodyஐ சுற்றி வரும்போது சொல்ல வேண்டியது (ex. : முதல்தடவை சுற்றும்போது யா அஹத், யா அஹத்…etc, இரண்டாம் தடவை சுற்றும்போது யா பாஷித்..யா பாஷித்..)

*

‘பயிற்சி இன்னும் ஸ்ட்ராங்கா மாறுவதற்கு ஒரு requirement , எதையுமே அளந்து செய்யனும். ‘டக்’குண்டு செஞ்சிடக்கூடாது. ஒரு செகண்ட் ,  ‘செய்யப்போறோம்’டு உணர்ந்து செய்யனும். ராத்திரி படுக்கப்போறதுக்கு முந்தி இன்னக்கி என்னா தப்பு செஞ்சோம்டு யோசியுங்க. அதாவது எந்த வகையிலெ இம்ப்ரூவ்மெண்ட் பண்ணனும்? அப்புறம்… ஒரு தடவை சொல்லிப்புட்டு ‘அதுக்கு சொல்லலை, இதுக்கு சொல்லலேண்டு சொல்லாதீங்க. ‘மறந்து போச்சே’ண்ட வார்த்தையை சொல்லவே சொல்லாதீங்க’

‘ஏன் குறையை (தப்பை) மட்டும் நினைத்துப் பார்க்க வேண்டும்?’ –  ஒரு சீடருக்கு சந்தேகம்.

‘நன்மையை நினைக்க வேணாம்டு ஏன் சொல்றேன்? நன்மையை நினைச்சா என்ன விளைவு வரும் தெரியுமா? என்னமோ நன்மை செஞ்ச மாதிரி ஒரு மதமதப்பு கொடுக்கும். அடுத்த ஸ்டெப் போவமுடியாது. லைஃப் பூரா குறையை நீக்கவே முயற்சி பண்ணிக்கிட்டிக்கனும். சிறப்பு வந்தாலும் சரி, இன்னும் சிறப்பாக்க முயற்சி பண்ணனும். அப்ப அந்த சிறப்பிலுள்ள குறையை நீக்குறதாகத்தானே அர்த்தம் அதுக்கு?’ – ‘S’

*

ஒரு பயிற்சி : படுக்கப் போவதற்கு முன்னால் (‘மனசை நிலைப்படுத்துறதுக்குள்ள பயிற்சி இது’ – ‘S’). சர்க்காரின் பழைய வீட்டிலிருந்து நடந்து (வலது பக்கமுள்ள வீடுகளை மட்டும் பார்த்தவாறு),  தெருவின் நடுவில் தர்ஹாவைக் கடந்து , ‘எஜமான்’ வாசலில் ஒரு சலாம் சொல்லிவிட்டு சர்க்காரின் புதுவீடு செல்வது. அவர்கள் வாசலில் நிற்பதுபோல எண்ணம். ஒரு சலாம் சொல்லிவிட்டு, வந்த ரூட்டிலேயே திரும்புவது , எதிர்சாரியை பார்த்தவாறு (இடது பக்கம்). இப்போது (தர்ஹாவிலுள்ள) தங்கக்கலசத்தை பார்த்து ஒரு சலாம். இதற்கு ‘பெரியஎஜமானின்’ ‘இஸ்மு’ ஓதினால்தான் பலிக்கும்.

*

அன்றைய குறைகள் ஒவ்வொன்றாக இரவில் காட்டப்பட :

காலையில் விழிக்கும்போது – விழிப்பு வரும் நிலையில் நம்முடைய உடம்பின் பாகங்களையே அறியமுடியாத , தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைநேரத்தில் , ஒரு order போடுவது – ‘இரவில் என் குறைகளைக் காட்டு’ என்று. இரவில் நினைப்புக்கு வரும் விஷயம் ஒவ்வொன்றாக – ஒன்றன்பின் ஒன்றாக – காட்சி தருவதற்கு ஒரு ப்ராக்டிஸ் : பத்துபேரிடம் பேசும்போது ஒவ்வொருவரிடம் தனித்தனியாக பேசுவது (similarity).

*

‘பட்டை’க்குப் பட்டை?

‘சர்க்கார்.. மார்ச் ‘பட்டை’யையும் அக்டோபர் ‘பட்டை’யையும் சேர்த்து பண்ணும்போது டைம் ஆகி…’

சர்க்கார் இடைமறிக்கிறார்கள் : ‘இதோ பாருங்க, ‘அர்ஷ் ஆல’த்தில உள்ள  அல்லாஹ்வோட பறந்துகிட்டு இக்கிறீங்க. இதெல்லாம் நத்திங்! ஆனா நத்திங்ண்டு நீங்க நெனக்கக் கூடாது!’ – ‘S’

*

‘ஒரு நாளையில் 20 to 40 தடவை , நாலைந்து செகண்ட்ஸ் போதும் – மூச்சை ரிலாக்ஸ்டாக இழுத்து விட வேண்டும்’ – ‘S’

‘ஒத்தவங்கள்ட்டெ ஒரு குறை இக்கிது.. நாம ரெண்டு மூணு தரம் சொல்லியாச்சு, திருத்திங்குங்கண்டு..அவர் திருந்தலே..எப்படித்தான் சொல்றது அவர் குறையை நீக்குறதுக்கு?’ – சீடர்

‘சொந்தக்காரங்கதானே?! வேணுண்டே செய்றாங்க.. அவங்களாலெ திருந்த முடியாது’ –

‘இல்லே.. எப்படி சொல்றது? நமக்கு கோவம் வருது!’

‘சொல்லாதீங்க. நெனைச்சிக்கிட்டே சும்மா இருங்க. இவர்ட்டெ இந்த குறை இக்கிது, இது மாறனும்டு நீங்க நெனைங்க. சுமுகமா மாறிடும். நெனைப்புக்கு வலிமை இக்கிதுண்டு சொல்லியிக்கிறேன்ல? நெனைங்க!’ – ‘S’

*

‘பொதுவா நீங்க உங்களை மட்டும்தான் பாக்கனும். இந்த ‘பவர்’ சுத்தியுள்ளவங்களுக்கும் பரவும். வெளியுலகத்தை பாக்கும்போது அவங்கள்ட்டே என்னா குறை இருக்கு, அது நம்மள்ட்டெ இருக்காண்டு ‘செக்’ பண்ணுங்க. கூட்டத்துலெ merge ஆயிடாதீங்க. கல்யாணம் காச்சிக்கு போகும்போது நடிங்க. இதே மாதிரி அறிவு வளக்குறது எந்த புத்தகமும் வளர்க்காது. அந்த வகையிலெ பார்த்தா சமுதாய வாழ்வு மிகமிக முக்கியமானது- இப்படி யூஸ் பண்ணினால்! நீங்க வெளிலே இக்கிம்போது உள்ள intensity ஐ விட உள்ளே (தனிமையில்) இக்கிம்போதுள்ள intensity அதிகமா இந்தாத்தான் merge ஆகாம நிக்கெ முடியும். ஏன்னா , ஒரு கட்சிக்கு நானே ‘ஜே’ போட்டிக்கிறேன். நா..னே! அப்ப mass force எவ்வளவு பாத்தீங்களா? personal ப்ராக்டிஸ் அப்ப ஸ்ட்ராங்கா இருக்கனும்’

*

‘நீங்க என்னமோ பண்ணுறீங்க உங்களுக்குத் தெரியாம, அதுதான் வெற்றியைக் கொடுக்குதே தவிர நீங்க கேட்டதனாலெ ‘அவன்’ கொண்டாந்து கொடுக்கலே. ‘அவனுக்கு’ ஆயிரம் வேலை இக்கிம். வேணுமென்றே சிரமத்தை உண்டாக்கிக்கிடுங்க; அப்புறம் வளரலாம்டு சொல்லியிக்கிறேன். அவமானப்பட்டா , பட்டவன் பூரா முன்னேறிடுவாண்டு சொல்லிட முடியாது. Wrong compensation வந்துடும், ஜனங்க மேலே வெறுப்பு வந்துடும், பணக்காரனைப் பார்த்த் எரிச்சல் வரும், ஆரோக்கியசாலியைப் பார்த்து எரிச்சல் வரும். இப்ப எவ்வளவுக்கெவ்வளவு ப்ராக்டிஸ் சிக்கலா வருதோ அவ்வளவுக்கவ்வளவு பலனுண்டு. இந்த் சிக்கலை அனுபவிச்சிட்டீங்கண்டா பல சிக்கல் படவேண்டிய அவசியமே இல்லை’

*

D.C…Destiny Control.. – ‘சீக்ரட் சிம்பலி’ன் Actual பெயர் (Fate is in our Hand). ‘D.Cண்டா விதியை வெல்றது. விதியை கண்ட்ரோல் பண்ணுறது. இந்த symbolக்கு Actual பெயர் அதுதான். இதுதான் கரெக்ட். விதியை மாத்துறது சீக்ரெட்தானே.. அதனாலே இப்போதைக்கு ‘Secret symbol’ண்டே இக்கெட்டும். உங்களுக்குப் புரிஞ்சபிறகு ‘D.C’ண்டு மாத்திப்புடலாம்’ – ‘S’

*

நம்மைக் காப்பாற்றும் சக்தி நாம்தான்!

‘நூத்துக்கு நூறு ‘முடிஞ்சிபோச்சி’ கதை, ஒரு செகண்ட் கூட இடைவெளி இல்லேண்டு ஆயி (அப்புறம்) தப்பிக்கும்போதுதான் தெரியும்! Encyclopedia வந்திருக்கு.. பாத்துக்கிட்டிக்கிறேன். யூனுஸ்சாபு சோறு வச்சிருந்தான். சூடு காட்டுண்டேன். ‘களறி’ சோறு..பொரிச்ச கறி இக்கிது’ண்டான். ‘களறி சோறா? இரிக்காதுடா’ ‘ இக்கிது’. நான் போய் பார்த்தேன். ‘சீனித்தொவை’யிலெ எறும்பு மொய்ச்சிக்கிது. களறி சோறுதான்! தூக்கிப் போடுண்டு சொல்லிப்புட்டு உட்கார வர்றேன்..உட்கார்ந்து இடுப்பை வளைக்கிறேன்..’டப்’புண்டு என்னமோ நழுவி விழுந்த மாதிரி. போட்ட பனியன் நழுவி விழுந்திருக்கலாம்டு மனசுல நெனைப்பு. டவல் நழுவி வுழுந்திருக்கலாம்டு சந்தேகம். இப்படியா சத்தம் கேட்கும்டு தோணுது. ஆயிரம் எண்ணங்கள்…சரிதான் பாப்போம்டு கீழே பார்த்தா கட்டுவிரியன் கெடக்குது! கொஞ்சம் பிந்தி போயிருந்தா என் தலையிலெ வுழுந்திருக்கும். பிந்தி உட்கார்ந்தா அது தலையிலெ நான் உட்காந்திருப்பேன். இதே மாதிரி எத்தனையோ சம்பவம்…உங்களுக்கு இப்படி நடக்கும்போதுதான் தெரியும்..’நம்ம பக்கத்துல இருந்து ஒரு சக்தி பாதுகாத்துக்கிட்டு வருதுண்டு. அந்த சக்தி யாருமல்ல, நாம்தான் அது’ண்டும் புரியும்’

*

‘தெய்வாதீனம், தற்செயல்,  Accidental. பயங்கரமான வார்த்தைகள்..! தற்செயலா நடந்தது! ஹ, எப்படிங்க நடக்கும் தற்செயலா? என்னா மாங்காலேர்ந்து தேங்காவா வரும்? தென்னங்கன்றுலேர்ந்து பனைமரமா முளைக்கும்? எப்படி தற்செயலா வரும்? எது புரியலையோ,’புரியலே’, ‘தெரியலே’ண்டு சொல்றதுக்குப் பதிலா ஒரு வார்த்தையை சொல்லிப்புடுறது – ‘தற்செயலா வந்திச்சி!’

‘மேலே வந்தா உங்களைப் பாராட்டுவேன், கீழே போனா உங்களை ஏசுவேன். மேலே போறதுக்கும் கீழே வர்றதுக்கும் நீங்கதான் பொறுப்பாளி. புரியாமா இருந்தீங்களா? ம்ஹூம்…புரிஞ்சாவனும். மத்த ஆயிரம் செய்தியை புரிஞ்சிக்கிறீங்கள்ளெ, இது ரொம்ப ரொம்ப useful  ஆயிடுச்சே, செஞ்சே ஆகனுமே… ஏன்? நீங்க வாழ்ந்தாகனும்!’

*

ஒரு சீடருக்கு என்னமோ பயம். பயிற்சியால் ‘எதையோ இழந்த மாதிரி இருக்கிறதா?’ என்று சர்க்கார் கேட்கும்போது அவர் தன் பயத்தைச் சொல்கிறார். அவர் கம்பெனிக்கு வரும் complaints பற்றிய பயம் அது. சர்க்கார் ‘ஸ்கைலாப்’ உதாரணத்தைச் சொல்கிறார்கள். விழுவதற்கு முன்னாலும் கவலை, விழும்போதும் கவலை, விழுந்த பிறகும் கவலை, அல்லது பயம். மறுபடி விழுந்தால்?! இந்த பயம் நரம்புத் தளர்ச்சியால் வருவது என்கிறார்கள்.

‘Pure நரம்புத் தளர்ச்சி.. இதுக்கு என்னா காரணம்?’ – ‘S’

‘Mental weakness..’

‘ச்!..இப்படிலாம் இங்கிலீஷ் வார்த்தையை சொல்லாதீங்க! எப்ப சரியான பதில் இல்லையோ இங்கிலீஸ் வார்த்தையை சொல்றது வழக்கம். அந்நிய மொழியை யூஸ் பண்ணினாவே , பேச்சுல Strength இல்லே, Mindம் வார்த்தையும் கலக்காம வருதுண்டு அர்த்தம். தமிழ்லெயே சொல்லுங்க!’ – ‘S’

*

‘ஆலம் அல் பர்ஜூக்’ :

‘ஆலம் அல் பர்ஜூக்’ பத்தி சொல்லிக்கிறேனா ஏற்கனவே? ம்… மழை பேஞ்சா ஏன் போரடிக்குது?’ – ‘S’

‘வெளிலே போவ முடியலேண்டு’ – கவுஸ்மெய்தீன்

‘ஏன் , வெளிலெ போயி என்னா ஆகனும்? வெளிலே போனா அலங்கார வாசல்லெ உட்கார்ந்து அரட்டை அடிக்கலாம். குவளை டீயை பாபாபாய் கடையிலெ வாங்கி நாலு பேரு குடிக்கலாம். நாலு ‘ஊர்பிஸாது’ பண்ணலாம். பொழுது போவும். இப்ப பொழுது போக பாதை தெரியலே,அதான்.! பொஞ்சாதி மேலே ரொம்ப ‘மொஹப்பத்’ உள்ளவன் பொஞ்சாதி அவ உம்மா வூட்டுக்கு பொய்ட்டா ஏங்கிப் பொய்டுவான்.. ஏன் தெரியுமா? எதுக்கெடுத்தாலும் பொண்டாட்டியோட பேசிக்கிட்டு வெளையாடிக்கிட்டு இக்கிறவனுக்கு அது முடியாம பொய்டுச்சி!..அப்ப என்னா தெரியுது? ஏற்கனவே நடந்த நடைமுறை இப்ப மாறிவருது.. அதாவது முதல்லே லைஃப்லெ எதை எதை வச்சி சிரிச்சீங்களோ- மகிழ்ந்தீங்களோ – வேதனை கொடுத்தீங்களோ மனசுக்கு அது இப்ப ‘கட்’ ஆயிட்டு வருது. அந்த drive கெட்டுப்போயி , அடைச்சிப்போயி, புது drive ஃபார்ம் ஆகுது.. ஏற்கனவே , பொண்டாட்டி குழந்தையை கொஞ்சிக்கிட்டு , புள்ளை திங்கிற பம்பாய் முட்டாயை அப்பித் திண்டுக்கிட்டு , அடுத்த வீட்டுக்காரனை ‘பிஸாது’ பண்ணிக்கிட்டு, எதிர்த்த வூட்டுக்காரனை ரெண்டு ஏசு ஏசிப்புட்டு , சிரிச்சிட்டு வர்ற பழக்கம்.. இப்ப பம்பாய் முட்டாயும் இல்லே, குழந்தைட்ட அப்பவும் முடியலே.. குழந்தை ‘டக்’குண்டு வாயிலெ வேறெ போட்டுக்கிட்டா! மனசு ஏக்கமா இக்கிம். அதாவது அந்தரத்துலெ தொங்குற மாதிரி இருக்கும். இந்த பம்பாய் முட்டாய்க்கு பதிலா நீங்க தனியா வேலை செய்யனும். ஊர்பிஸாதுக்கு பதிலா ரெண்டு வரி எழுதனும், படிக்கனும்..இந்த அலங்கோலத்துக்கு காரணம் பழைய Drive. இந்த driveஐ உடைச்சிடனும். உடைக்கும்போது புதுசு திடீர்ண்டு ஃபார்ம் ஆகாது. கொஞ்சம் லேட்டாகும். அதுக்கும் இதுக்கும் நடுவால தொங்குற மாதிரி இருக்கும். இந்த இடைவெளிக்குப் பெயர்தான் ‘ஆலம் உல் பர்ஜூக்’ண்டு பேரு. தரமான உஸ்தாது கெடச்ச சீடப்புள்ளைங்கள்லாம் உஸ்தாத்-ஐ வெறுத்த காரணம் இந்த கட்டத்துலதான். அந்த கட்டம் வரும்போது ஏறக்குறைய பைத்தியம் புடிச்சாப்போல இருக்கும். பழைய பில்டிங்-ஐ இடிச்சி புது பில்டிங் கட்டுறதுக்கு இடையேயுள்ள இடைவெளி இக்கிதே.. அது ரொம்ப கஷ்டமா இருக்கிம். விரக்தி வரும். புதுசை இன்னும் நீங்க பார்த்ததில்லே. பழசு கெட்டதாயிருந்தாலும் சாக்கடையாயிருந்தாலும் அதுலெ பழகிட்டீங்க. புதுசு கண்டதும் ஆசைப்படுறது சில பேருக்கு சுபாவம். புதுசைக் கண்டு வெறுக்குறது சில பேருக்கு சுபாவம். மெட்ராஸ்லெ சேரில வாழுற ஜனங்களுக்குலாம் பில்டிங் கட்டிக் கொடுத்தான். அதை லீஸூக்கு விட்டுப்புட்டு மறுபடியும்  கீழேதான் உட்கார்ந்தாங்க. அழுக்குத் தொட்டியில தூங்குன புள்ள புதுத்தொட்டில படுத்தா தூங்காது. பொரிஞ்சிபோயி , பாக்கவே அசிங்கமா இக்கிற ரப்பர் சூப்புற புள்ளைக்கு புது ரப்பர் புடிக்காது. அந்த நாத்தம் அடிக்கனும், அதுலேயே பழகிட்டதனாலெ. நீங்க பண்டியை கொண்டாந்து சந்தனத்தைக் கொடுத்தா? சரி, பீயைக் கொடுக்கனும் அதுக்கு. பீ இல்லேண்டா வேற என்னமாச்சும் கொடுக்கனுமில்லே? என்னமாச்சும் கொடுக்கலேண்டா அது பீயும் இல்லே என்னமாச்சும் இல்லே. அப்ப என்னாங்க செய்யும்? அந்த நிலைமைதான் இந்த நிலைமை! உங்களுக்கு எண்ணத்தைக் கண்டுபுடிக்கத் தெரியாததுனாலே பயம், ‘சொலேர்ப்பு’ங்கிறீங்க!’ – ‘S’

இப்பொதைய பயிற்சி பீயில அத்தர் ஊற்றுவது , pure அத்தராக மாறுவதற்கு என்கிறார்கள் சர்க்கார்.

‘உப்பளத்துல விழுந்த கழுதை இக்கிதே.. ம், உப்பளம் பாத்திருக்கீங்களா?” – ‘S’

‘… … ‘

‘உப்பிக்கிட்டிக்கிமோ?!’

உதாரணம் சொல்லவரும்போதே கிண்டல்.’ஆக்கபூர்வமான சக்தி வருகிறது’ என்று ஒருமுறை  சீடர் சொன்னபோது ‘சோறாக்குறதா?’ என்று கேட்ட சர்க்காரின் பாணி அது.

***

17.03.1996 10:30 pm

தம்பி செல்லாப்பா சென்ற வியாழன் இரவு வந்தார். ‘ஏர்போர்ட் போகலாமா அழைக்க?’ என்று கேட்ட ஃபரீது,’ நமக்கு ஆஃபீஸ் முடியுற நேரம் தெரியல்லையே.. எப்படி போறது?’ என்று பதிலையும் சொல்லிக் கொண்டார். சின்னம்மா மகன் தௌஃபீக் – ‘விசிட்’டில் வந்து ரூமில் இருந்தவனை – போகச் சொல்லியிருந்தோம்.  வியாழன் இரவு ‘தேரா’வுக்கு, மஸ்தான் மரைக்கான் ரூமுக்குப் போனால் அங்கே தௌஃபீக் இல்லை. அறை பூட்டிக் கிடந்தது. வெளியில் நின்று கொண்டிருந்தேன். ‘இப்படி எவ்வளவு நேரம் நிற்பது..சேத்தப்பா இப்போது வந்துவிட்டால் பரவாயில்லை’ என்று நினைத்த அடுத்த நொடி சேத்தப்பா வந்து நின்றார்! அதைவிட ஆச்சரியம் அவர் சொன்ன செய்தி. பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுக்கான C1 ஃபார்மின் 7th Columnத்தில் நாவப்பட்டினம் நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியிருக்க, ‘ஆள் இல்லை’ என்று நோட்டரி முறுக்கிக் கொண்டதால் ,’ பேங்க் மானேஜர்கூட கையெழுத்து போடலாம்’ என்று சுப்பையாபிள்ளை வழி கூறியதால் – கையெழுத்து வாங்கியிருக்கிறார். யாரிடம்? நாவப்பட்டினம் யூனியன் பேங்க் மானேஜரிடம்.  செல்லாப்பாவை அழைத்துச் சென்று அவரிடம் கையெழுத்து வாங்கித் தந்தது காலித் மாமா! வாழைப்பழத்திற்காக அரிவாள் சண்டை போட்டுக்கொண்ட புகழ்பெற்ற எனது குடும்பத்தின் தற்போதைய தளபதி. ‘ஆப்பத்தில்’ வந்தாலும் தினம் வட்டலப்பம் தின்கிற வசதியோடு அரபுநாட்டிலிருந்து வந்ததால் குடும்பம் முழுக்க அவர் பேச்சே சரி என்று சொல்லும். கடனும் தாராளமாகக் கொடுப்பதால் அம்மாமார்கள், அவருடன் படுக்காததுதான் பாக்கி! அந்த காலித் மாமாவா? ஏன், இப்போது மறுபடியும் இதயவலி தொந்தரவு தருகிறதா? அட, ஒரு சொத்து வாங்கிப் போடுறது! அதைவிட்டு ஆபிதீனுக்கு உதவ…சர்க்கார், என்மேல் எந்த ஒளியை திணித்தீர்கள்? பீயில் அத்தரா?

*

22.03.1996 வெள்ளி ‘செஷன்’ முடிந்து,

8-22.09.95 கேஸட்டிலிருந்து :

அரிக்கிறது, எப்படி சொறிய வேண்டும்?

சீடர் ஒருவர் சொல்கிறார் : ‘ எந்த இடத்தில் அரிக்கிறதோ அந்த இடத்துல மட்டும் சொறியனும்’

சர்க்கார் : ‘ ஏங்க, கால்லெ அரிச்சா மண்டையிலா சொறிவான் மனுஷன்?’

‘அரிக்கலேண்டு நெனைச்சிக்கிட்டு மனசை மாத்தனும்’ – இன்னொரு சீடர்.

‘நீங்க பெரிய அவுலியா, குத்பு நாயகம்!’- ‘S’

*

‘பெரும்பாலான சாமான் காணாப்போறது உட்கார்ந்த இடத்துலதான். அதனாலெ எந்திரிச்ச உடனே திரும்பிப்பாக்கும் பழக்கம் வரனும்’ – ‘S’

*

பேச்சில் கண்ட்ரோல் வருவதற்கு similarity : ‘ஸ்மோக் பண்ணும்போது, பார்த்து நிதானமாக, ஸ்மோக் பண்ணுறது’ – ‘S’

*

‘காலையில முளிச்சவுடனே, நீங்க எப்ப முளிக்கிறீங்களோ அதுதான் காலை; ரெண்டு மணிக்கு முளிச்சாலும் சரி, பத்துமணிக்கு முளிச்சாலும் சரி, முளிச்சதுலேர்ந்து ஒரு 3 Hours.. Perfect கண்ட்ரோலோடு – with peace of mind – mental control & mental clarityயோட இருந்துட்டா இந்த 3 மணி நேரம் அடுத்த 8 மணி நேரத்தை கண்ட்ரோல் பண்ணும். அப்ப.. பயிற்சியோட beginning பொழுது விடியும்போதுதான் இக்கினும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பழைய குணங்கள்லாம் வரும். இதெ படுக்கும்போது கண்ட்ரோல் பண்ணுனா தூக்கம் முழுக்க கண்ட்ரோல் ஆவும். அதுக்காகத்தான் சொன்னேன், படுக்கும்போது இக்கிற நெனைப்பு முளிக்கும்போதும் இக்கினும், முளிக்கிறதுக்கு முந்தி கண்ணை தொறந்துடக்கூடாதுண்டு’

*

‘கடன் எது மாதிரி? ஒரு உதாரணம் சொல்லுங்க பார்ப்போம். similarity சொல்லுங்க, நான் சொல்றேன்’ – ‘S’

‘என்னுடைய வருவாய்க்கு அதிக…’

‘கடன் என்றால் என்னாண்டு கேட்டா அதுக்கு உதாரணம் காட்டனும். வரவுக்கு முந்தி செலவுண்டா கடன் வாங்குற நிலை; கடன் உண்டாவதற்கான காரணம். என் கேள்விக்கு symbolicஆ ஒரு  example காட்டுங்க’

‘…  ….. ….’

‘எனக்கு அரிக்கும்போது உங்களை சொறியச் சொல்றதுண்டு சொல்லலாமா? ‘

‘நம்ம வேலை செய்யிறதுக்கு பதிலா இன்னொரு ஆளை வேலை செய்யச் சொல்றது’ – சீடர்

‘விளக்கமா?! ம்.. அறிவுக் கொழுந்து! அப்ப நாமே வேலை செய்ற காரணத்துனாலே நமக்கு அழகான பண்புகள் எல்லாம் டெவலப் ஆகும். நாம மத்தவங்களை வேலை ஏவுறதுனாலே இது எல்லாமே அவுட்! சரிதானா?’

‘ஒரு example வருது, சொல்லவா? லெட்டர் எழுதும்போது எவ்வளவு எழுதனுமோ அவ்வளவு மட்டும் எழுதுறது’ – ரவூஃப்

‘கரெக்ட்தான். அதே மாதிரி பீ பேலும்போது எப்படிப் பேலனுமோ அப்படித்தான் ,’குழா’ மாதிரி , அளஹா பேலனும்!’ – ‘S’

*

துபாய் சிரபுஞ்சியா? இன்னும் மழை பெய்கிறது. 1978க்குப் பிறகு இப்படி மழை பெய்கிறது என்று ஒரு அரபி சொன்னதாக ஒருவர் சொன்னார். இந்த இடைக்காலத்தில் மழையைப் பார்ப்பதற்கென்று அரபிகள் பம்பாய்க்குப் போவார்களாம். இப்போது பம்பாயில் உள்ளவர்கள் துபாய்க்கு வரலாம்! இடைக்காலத்தில் என்னென்னமோ நடந்து வருகிறது. 11..04.95 கேஸட்டிலிருந்து இந்த 8-22.09.95 கேஸட்டிற்குப் பாய்ந்திருக்கிறேன். இடையில் செஷன் நடக்கவில்லையோ என்று ஜெப்பார்நானாவிடம் கேட்டதற்கு சரியான காரணம் சொன்னார் அவர். நாக்கூர் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் மனைவி ஒரு அதி தீவிர இஸ்லாமிய வெறி கொண்ட இளைஞனால் குண்டு வைக்கப்பட்டு (தவறாக!) சிதறிவிட , ஊரின் அமைதியும் சிதறியதில் ‘செஷன்’ நடக்காமலிருந்திருக்கும் என்று சொன்னார். உண்மையாகத்தான் இருக்க வேண்டும். நான் 1995ன் இறுதியில் ஊரில் இருக்கும்போது விடிகடையாக வியாழக்கிழமை திறந்துவைத்திருக்கிற டீக்கடைகள் இரவு 11 மணிக்கே ‘ஆணம், புரோட்டா முடிஞ்சிபோச்சி நானா’ சொல்ல ஆரம்பித்து மூடப்பட்டுவிட்டதை நினைத்தால் சரிதான். அப்போது ஊரின் இளைஞர்கள் பெரும்பாலும் திருச்சி சிறைச்சாலையில் இருந்தார்கள். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு இலக்கணமாக இருந்த ஊரின் இளைஞர்கள். பழனிபாபாவைக் கேட்பதில் ஆயிரத்தில் ஒரு பங்கு சர்க்காரின் கேஸட்டைக் கேட்டிருந்திருக்கலாம்…சக்தி , தன்னை மேம்படுத்துவதில் செலவாகியிருந்திருக்கும். ஆ, சமுதாய மேன்மையல்லாவா முக்கியம்?! ‘ஹிந்துக்களைப் போல இன்னொரு மதத்தலங்களை வழிபடும் போக்கின் வாசனை கூட நமக்கு இல்லை, எந்த மதத்திற்கும் இல்லை’ என்று கந்தூரியில் வந்த ஹிந்துக்களின் கூட்டத்தைப் பார்த்து நான் சொன்னபோது ‘மாவு’க்கெல்லாம் அறிவு கிடையாது’ என்று ஒருவர் இடையில் பாய்ந்தார்! என் புத்தியை செருப்பால் அடிக்க! சர்க்கார் வீட்டிற்கும் எத்தனை ஹிந்து அன்பர்கள்..! சென்ற அக்டோபர் ‘பட்டை’க்கு உட்கார்ந்திருந்தபோது எத்தனை பேர்! அவர்களும் அரபியில் ‘இஸ்மு’ ஓத வேண்டும். நெடுநாளாக ஓதி வந்திருக்கிறார்கள். இந்த மார்ச் ‘பட்டை’ சென்ற 20ஆம் தேதி. இஸ்மு ஃபேக்ஸில் வரும் என்று பளவூட்டுத்தம்பி சொன்னான். வரவில்லை.’அப்போ என்னா செய்யிறது?’ என்று கேட்டேன். ‘வேற யார்ட்டெயாச்சும் அனுப்பி வைப்பாஹா..நாம அந்த நேரத்துலெ இங்கெ உட்கார்ந்துடனும்’ என்றான். துபாய் டைம் 11: 45 to 12: 20. கலர் பச்சை. திசை : கிழக்கு. அன்று காலையில் ஃபோன் பண்ணினான் பளவூட்டுத்தம்பி. ‘சொல்ல மறந்துட்டேன்பா.. உட்கார்ந்து (சும்மா அங்கே, சர்க்கார் வீட்டில் நாம் இருப்பதாக நினைத்துக்கொண்டு) எந்திரிக்கும்போது ‘முஸல்லா’வை மடக்கக்கூடாது. அப்படியே விரிச்சி வச்சிட்டு வந்துடனும். அப்புறம் ஒருமணிக்குப் பிறகுதான் மடக்கி வைக்கனும்.. இதுதான் பழக்கம்’ என்றான். ‘நான் ஒரு மணிக்குலாம் ‘தேரா’வுக்கு கிளம்பிவிடுவேனே’ ‘பரவால்லே..திரும்பி நாலரை மணிக்கு வருவீயில்லெ? அப்ப மடக்கி வை!’. இது புதுஸாக தெரிந்தது எனக்கு. புதியவர்களுக்கு எல்லாம் புதிதாகத்தான் தெரியும் போலும்…

ஆஃபீஸில் கிளெர்க் கப்பமரைக்காரிடம் சொல்லிக்கொண்டு கீழேயுள்ள ரூமுக்கு வந்தேன். ‘என்னா இப்ப தீடீர்ண்டு ஓத? ஓ! வாஹிதுசாபு சமாச்சாரமா? ம்…இப்ப ரொம்ப தீவிர பக்தரா பொய்ட்டீங்க போலக்கிது!’ என்று அவர் வெடைத்தார். மானேஜர் ஒன்றும் சொல்லவில்லை. நான் அவரிடம் சொல்லவில்லை! அறையில் வரைந்து வைத்திருக்கிற சர்க்காரின் பெரிய ஓவியத்தைப் பார்த்துவிட்டு ‘தாடி இல்லாத ஹஜ்ரத்தா?!’ என்று ஆச்சரியப்பட்டவர் அந்த வெண்தாடி பாகிஸ்தானி.. என்னத்தைச் சொல்வது? ஆனால் நல்ல மனிதர். நான் ஆஃபீஸிலுள்ள கம்ப்ப்யூட்டர்களை on  செய்ததும் அதில் சர்க்காரின் star-உம் ‘ What a human mind can conceive and believe it can surely achieve’ம் திரைமுழுக்க வருமாறு GraphicWorkshopல் ஒரு  Exe Fileஆக அழகாக தயார் செய்திருந்தேன். ‘அச்சா ஹை’ மட்டும்தான் சொன்னார். பயிற்சிகள் செய்ய இடைஞ்சலில்லாத இந்த அறை அமைந்ததே அவர் உதவிதான். இந்திய பாகிஸ்தான் ஒற்றுமை ஓங்குக! அவர் தாடியும் வளர்க!

அதிசயமான சம்பவங்களின் உச்சத்தை மொயீன்சாஹிப்தான் காட்டினார். மனிதருக்கு உலகமகா அலுப்பு. எல்லா வேலைகளையும் ஆஃபீஸ் ஸ்டாஃப்களின் தலையில் போட்டுவிட்டு எங்கேயாச்சும் சுற்றப் போய்விடுவார். அவர் வேலைபார்க்காமல் பேப்பர் படிக்கிறார் என்ற காரணத்தினாலேயே ஆஃபீஸூக்கு பேப்பர் வருவதில்லை. ‘அர்பாப்’ஐ இப்படி உத்தரவு போடவைத்தது தான்தான் என்று அவருக்கு முன்பாக மேனேஜராக இருந்து ஒரு கிறுக்கு சொல்லிக் கொண்டிருக்கும். கிறுக்கு சொல்வதைக் கேட்கும் கிறுக்கு அர்பாப்கள்.. அநேகமாக பேப்பர் வராத ஒரே ஆபீஸ் இதுவாகத்தான் இருக்கும். பேப்பர் வராவிட்டால் என்ன? நல்லதாகப் போயிற்று. ஆபீஸுக்கு வந்துவிட்டு, பேப்பர் படிக்கப்போகிறேன் என்று வெளியில் போய்விடலாம்! ஆஃபீஸ் முடிகிற சமயத்தில் ஒரு ஃபோன். ‘நான் வீட்டிற்கு வந்து விட்டேன், நாளை வருகிறேன்’! நாளையும் ஆஃபீஸூக்கு பேப்பர் வராது! மற்றபடி யாருக்கும் எந்த தொந்தரவு தராத ரகம்தான். அவர் உண்டு, அவரை நம்பும் பஞ்சாபிகள் உண்டு. ஆனால் ஆஃபீஸை ஒரு சித்திரவதைக் கூடமாக மாற்றும் மேனேஜர் அவர் இல்லை என்பதால் தொந்தரவு இல்லை. முன்னேற்றம்தான் இல்லை, பரவாயில்லை! வயது கம்மிதான். ஆனால் தாடி நரைத்து விட்டது என்பார். வயதென்ன? அதைச் சொல்ல மாட்டார். இளம் வயதுதான் . ‘மொயீன்சாஹிப் சாப்…உங்கள் கார் நம்பரை ஒரு பேப்பரில் குறியுங்கள். அதை இரண்டால் பெருக்குங்கள். அத்துடன் 5ஐக் கூட்டுங்கள். வரும் எண்ணை 50ஆல் பெருக்குங்கள். இத்துடன் வருடத்தின் மொத்த நாட்களாகிய 365ஐக் கூட்டுங்கள். இத்துடன் உங்கள் வயதையும் கூட்டுங்கள் – உண்மையான வயதை. இதை என்னிடம் சொல்ல வேண்டாம்’. மொயீன்சாஹிப் தயங்கித் தயங்கிச் செய்தார். இறுதியாக வந்த எண்ணை அவர் சொன்னதும் நான் சடாரென்று அவர் ‘இளம்’ வயதைச் சொன்னேன். 58! மொயீன்சாஹிப் பிரமித்துப் போனார். வழுத்தூர் சாஹூல் ஹமீதின் மின்னல்வேகக் கணிதப் புத்தகம் சொல்லும் ‘ரகசிய எண் 615ஐக் கழிக்க’ வாழ்க! வரும் எண்ணில் கடைசி இரு இலக்கங்கள் அவர் வயது. மீதமுள்ளது அவர் கார் அல்லது ஃபோன் நம்பர்.. அந்த வெண்தாடிக்கு நேர்விரோதமாய் லெவிஸ் ஜீன்ஸூம் ஒரு டி-ஷர்ட்டும் போடும் அவர் நம்மையும் வியக்க வைப்பார் தன் ஜோக்குகளால்.

ஒரு பாகிஸ்தானி பெண் பழக்கடைக்குப் போனாள். ஒரு வாழைப்பழம் வாங்கினாள். கடைக்காரன் சொன்னானாம்: ‘சாப்பிட ஒன்றும் வாங்கிக்கொள்ளடி பெண்ணே!’

சிரித்து மாய்வதற்குள் அடுத்த கேள்வி வரும். ‘ஆபிதீன், சைக்கிள் – பெண், இரண்டையும் ஒப்பிடு.  முடியுமா?’

‘முன்னதில் பெடல் பண்ணிவிட்டு ஏறி உட்கார வேண்டும். பின்னதில் ஏறி உட்கார்ந்துவிட்டு பெடல் பண்ண வேண்டும்!’ – மொயீன்சாபின் விளக்கம்தான்!

எப்போதும் ‘பெடல்’ பண்ணிக்கொண்டிருக்கிருக்கிற அந்த ஆள் , நான் ஊரில் இருந்த 3 மாதத்தில் கம்பெனியின்  accounting softwareல் எல்லாவற்றையும் முடிக்க இயலுமா? அந்தந்த மாதத்தை முடித்துவிட்டு , எல்லா ரிப்போர்ட்களையும் எடுத்து , ஃபைல் செய்து, பேக்-அப் எடுத்து (daily Back-up, Monthly Back-up) வைப்பாரா? அப்புறம் Fixed Asset Schedule வேலை செய்யவில்லையே, அந்த softwareல் அதற்காக ஒரு தனி ஃப்ரோக்ராம் பண்ணியிருந்தேன். அதை வெளியில் வந்து இயக்கி – இயக்குவதற்குமுன் மறக்காமல் unprotect பண்ணி dbf ஃபைலை சரியாக கொண்டு வரவேண்டும் etc… மாதாமாதம் இதையெல்லாம் செய்வாரா?

டிசம்பரில் திரும்பி வந்தால் என் pending work பயத்தை முழுதாக நிவர்த்தி செய்து வைத்திருந்தார். Updated! கண்வலியும் தலைநோவும் இருக்காது இனி. சென்ற இருமுறை ஊர் போனபோது (Visit Visa  பிரச்சனையில்) அப்படியே தேக்கிவைத்து பளுவைக் கூட்டியவர் இப்போது எப்படி சாதித்தார் என் சேவகனாய்? எப்போதும் பிரச்சனைகள் பண்ணும், வெளியில் வாங்கிய – clipperல் டெவலப் செய்யப்பட்டிருந்த – அந்த Financial Management Accounting ஸாஃப்ட்வேரும் எப்படி அவ்வளவு சுமுகமாக ஒத்துழைத்தது?! ‘D.C’…!

25.03.1996

 

மார்ச் ‘பட்டை’ இன்று கிடைத்தது. அஸ்மா அனுப்பியிருந்தாள். நாளையிலிருந்து ஓத ஆரம்பிக்க வேண்டும் ‘இஸ்மு’வை. நாலாம் நாள் ஒரு மிஸ்கினுக்கு சாப்பாடு. அர்பாபுக்கு கொடுத்துவிட வேண்டியதுதான்!

3+95+79+3

சலவாத் – 3

அக்டோபர்95  ‘பட்டை’ இஸ்மு – 95

மார்ச்96  இஸ்மு – 7

சலவாத் – 3

மார்ச் 1996 இஸ்மு (79 தடவை ஓத வேண்டும்):

யா அலிய்யு யா அழீமு யா ஹலீமு யா அலீம்

பி ரஹ்மத்திக யா மன்னான் யா மத்தீன்

பி அழமத்திக யா கா·பி யா ரஜ்ஜாக்

பி ·பயழானில் பரக்கத்தி வரஹ்மத்தி

யா ஹக் யா முபீன்

*

20ஆம் தேதி இரவு அஸ்மாவுக்கு கடிதம் எழுதி அனுப்பினேன் சேத்தபொண்ணு கல்யாணம் சம்பந்தமாக. அதே 20ஆம் தேதி அவள் கடிதம் எனக்கு எழுதியிருக்கிறாள். எழுதிய நேரம் கூட ஒன்றாகத்தானிருக்கும்..

*

8-22.09.95 கேஸட்டின் தொடர்ச்சி :

‘நீங்க ஆராய்ச்சி பண்ணாம,  கண்டுபுடிக்காம , அதுக்காக முயற்சி பண்ணாம , ‘டக்’குண்டு ஃப்ளாஷ் வருதா, ‘இதெ செஞ்சா பெட்டர்’ண்டு? மசால் தோசை திங்கிறதை சொல்லலை!  வருதா தானாகவே? திடீரென்று வரும். ‘நடக்கும்போது மெஜஸ்டிக்கா straightஆ நடக்கனும்’ அப்படீங்குறமாதிரி.. அதை தனியா குறிச்சி வையுங்க. நான் சொல்லக்கூடிய செய்தியை விட முக்கியமான செய்தி அங்கே வரும். அதாவது , என்னைவிட மேலிடத்திலிருந்து வரக்கூடிய செய்தி அது.. நீங்க ரிலாக்ஸ்டா அல்லது டென்சனா இக்கிம்போது சம்பந்தப்படாம ஒரு செய்தி வரும். அது லைஃபுக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இக்கிம். அதெத்தான் குறிச்சி வையுங்கண்டேன். அதுக்காக ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு பேனாவும் ஒரு நோட்புக்கும் கண்டிப்பா ஜோப்புல இக்கினும்’ – ‘S’

‘அது சின்ன சம்பவமா கூட இக்கெலாம்?’ – சீடர்

‘சின்னாதாத்தான் இக்கிம். ரொம்ப சிம்பிளா இக்கிம். உதாரணமா , ‘பேசும்போது ‘வந்து…போயி..’ண்டு சொல்லக்கூடாது’ண்டு வரும். ‘எடுத்த பேச்ச முடிச்சிடனும்’டு வரும். அதைவிட , சர்க்கார் பேசும்போது குறுக்கே பேசக்கூடாதுண்டு வரும்!’ – ‘S’

(தொடரும்)

 

குறிப்புகள் :

மொஹப்பத் – அன்பு/காதல்

எஜமான், பெரிய எஜமான் – ஷாஹூல் ஹமீது பாதுஷா (அவுலியா)

இஸ்மு – மந்திரம்

பட்டை – மந்திரிக்கப்பட்ட யந்திரம்

அர்ஷ் ஆலம் – மேலுலகின் சிம்மாசனம்

களறி சோறு – கல்யாண சாப்பாடு

சீனித்தொவை – ஒருவகை இனிப்பு

பிஸாது – அவதூறு

அவுலியா, குத்பு நாயகம் – இறைஞானிகள்

முஸல்லா – தொழுகை விரிப்பு

அர்பாப் – அரபி முதலாளி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s