சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (10)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |

அத்தியாயம் 10

ஆபிதீன்

*

‘Cosmic Force! என்னா வேணும்ண்டாலும் பேரு வச்சிக்குங்க. பேரு மாறுவதனாலெ பெயரிடப்பட்ட பொருள் மாறிடாது. புரிஞ்சிக்கிறதுக்காக நாம இங்லீஷ்லெ சில வார்த்தை வச்சிக்குறோம். அரபிலெ ‘அல்லாஹூம்ம சல்லிவ சல்லி வபாரிக் அலைஹி’ண்டா ‘சலவாத்’ சொல்றாஹாண்டுடுவீங்க! தமிழ்லெ சொன்னா தமிழ்லெதானே சொல்றாஹாண்டு அர்த்தமாயிடும். அதனாலெ கொஞ்சம் modernise பண்ணி, கண்ணு மூக்கு வச்சி, பேச வேண்டியதா இக்கிது!’ – ‘S’

*

பயிற்சியில் (நம்பர் எண்ணுவது) எண்ணிக்கை மாறுகிறது. ஏழு நாளும் கடைசி batch-ல் கொடுத்ததுதான்.

1 to 50, 50 to 1 – மூன்று தடவை

பிறகு ஒவ்வொரு முறையும் கீழ்க்கண்டபடி :

50 to 14
50 to 13
50 to 12
50 to 11
50 to 10

‘இப்படி பண்ணும்போது Body உங்களுக்கு levitate ஆயிருக்கா? மேலேர்ந்து ‘டக்’குண்டு கீழே வுழுந்த மாதிரி நல்லா தெரியும். அப்படி ஏற்பட்டிருக்கா? வந்திச்சிண்டா என்னெட்டெ சொல்லுங்க’ – ‘S’

*

‘Bodyஐ விட்டு எத்தனை அடி தூரத்துலெ நிக்கிறீங்க?’ – ‘S’

‘ஆறு அடி’

‘உங்க Bodyஐ விட்டு நீங்க இன்னும் தள்ளிப் போவனும். ரிலாக்ஸ்டா உலாத்தனும். எவ்வளவு தூரத்துக்கு போனா உங்க Body சரிபாதியாகும்?’

‘நீங்களே சொல்லிடுங்க சர்க்கார்’

‘அதான் சொன்னேனே, இப்ப இந்த Air Cooler இருக்கு. இதைவிட முன்னாலெ போனா பெருசாவும் பின்னாலெ போனா சின்னதாவும் இக்கிது. எந்த proportionலெ அப்படி ஆவுது? அளவு கண்டுபுடிக்கிறது எப்படி? டைலர்ட்டெ போயி டேப் வாங்கிட்டு வரலாமா? இது ஆபிதீனுக்கு தெரிஞ்சிருக்கும்டு நெனைக்கிறேன் – அவர் ஆர்டிஸ்டா இக்கிறதுனாலே’

சீடர்கள் முழிப்பதைப் பார்த்து சர்க்கார் சொன்னார்கள்: ‘கஸ்டம்ஸ்லெ பாஸ்போர்ட் அப்பிக்கிட்டா மூஞ்சி எப்படி இக்கிமோ அப்படி இக்கிது!’

என் முகமும் அப்போது அப்படித்தானிருந்தது. எனக்குத் தெரியும் என்ற நினைப்பில் சர்க்கார் கவனிக்கவில்லை போலும். துபாயிலிருந்து ஊருக்குப் போய் அடுத்த நாள் அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன். வரும்போது நல்ல சிகரெட் லைட்டர் ஒன்று வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். எடுத்துக்கொண்டு போயிருந்தேன். உள்ளே கூட்டமாக இருக்கவே வாசலில் உட்கார்ந்திருந்தேன். சர்க்காரின் மருமகன் தாவுதுகுட்டி ‘ நானா ஒரு ஹெல்ப் பண்ணனும்’ என்றார்.  என்ன, அந்த சிகரெட் லைட்டர் அவருக்கு வேண்டுமா? அல்ல. ‘பயிற்சி பண்ணிக்கிட்டிக்கிறோம். அதுக்கு ஒரு scenery வரைஞ்சி கொடுக்கனும்’ என்றார்.

‘Artஆ? ஆளை வுடுங்க. அந்த முஸீபத்தை தொலைச்சி ரொம்ப நாளாவுது’

‘இல்ல நானா. மாமா கூட சொல்லிக்கிட்டிந்தாஹா, ஆபிதீன் வர்றாரு. அவர்ட்டெ சொல்லுவோம்டு’

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. பார்த்து நகலெடுப்பதில்தான் நான் கெட்டிக்காரன். பிக்காஸோவின் ‘குவர்னிகா’ ஓவியம் நான் வரைந்ததுதான்! கற்பனையாக ஒரு சீன் வரைவதை கற்பனை செய்தே பார்க்க முடியாது என்னால். ‘சரி சரி’ என்று கேட்டுக்கொண்டு உள்ளே போன பிறகு சர்க்கார் சொன்னார்கள் இலேசாக.

‘ஆமா சர்க்கார்.. வாசல்லெ கூட தாவுதுகுட்டி சொன்னாரு’ என்றேன்.

‘ஏம்ப்பா..அதுக்குள்ளெ சொல்லிட்டியா? அவர் பொண்டாட்டியையே சரியா பாத்திக்க மாட்டாரு – வந்து. இப்ப என்னா அவசரம்?’

‘ஆமா சர்க்கார்.. நான் கூட சொன்னேன் அவர்ட்டெ, நான் சும்மா காப்பி அடிக்கிறவண்டு’

‘எப்படி? எப்படி?! ‘ – கூடியிருந்த பெண்களைப் பார்த்து சர்க்கார் சொன்னார்கள் : ‘இவரு இந்தக் கதையை யார்ட்டெ சொல்றாரு பாத்திங்களா?’. பிறகு என்னைப் பார்த்து, ‘ஏங்க, என்னெட்டெயா சொல்றீங்க?! அப்புறம் ‘காப்பி மியான்’ண்டு பேர் வச்சிப்புடுவேன். யார்ட்டெ எது சொல்லுறதுண்டு எனக்குத் தெரியும். நீங்கதான் செஞ்சித் தர்ரீங்க!’. சொல்லிக்கொண்டே நான் கொடுத்த சிகரெட் லைட்டரை ரசித்துக்கொண்டே அதன் சுவாலையை பார்த்தார்கள், ஒரு பொருளை அதற்கு ஒரு அடி மேலே வைத்து!. நான் தலைகுனிந்தவாறு உட்கார்ந்துகொண்டு அதை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன். சுட்டது…

அவர்களின் உருவத்தை இரண்டு மூன்று மாதிரிகளில் வரைந்து அது அவர்களின் மதிப்பைப் பெற்றுவிட்ட பிறகு என் மேலுள்ள நம்பிக்கையை விட அவர்களுக்கு மனசில்லையோ என்னமோ.. துபாயிலும் வேலை கிடைக்காமல் ஒருவருடம் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் ஆர்டிஸ்டாக இருந்தேன்தான். சம்பளப் பிரச்சனையால் வெறுத்துப் போய் இந்த ஃபீல்டே வேண்டாம் என்றுதான் கம்ப்யூட்டருக்கு மாறினேன். ஒருவேளை, ஆர்டிஸ்டாகவே இருந்திருந்தால் அந்த துறையில் பிரகாசித்திருக்க முடியுமோ என்னவோ. அதனால் என்ன , கம்ப்யூட்டரிலேயே போட்டு விடலாம்.

இரு பச்சை மலை.. அடிவாரத்தில் ஒரு ஆறு..மலையின், ஆற்றின் பின்னணி மணல்வெளி. காலைப்பொழுது விடிகிறது. அந்த வெளிச்சம் வானில் இருக்க வேண்டும்.

உண்மையில் இது சர்க்கார் கண்ட கனவு. ஆற்றில் இறங்கி அவர்கள் குளிக்கிறார்கள். அதற்குப்பிறகுதான் ‘லெவைசாபு’ என்கிற அப்துல்வாஹிது, ‘சர்க்கார்’ ஆகிறார்கள். ‘Secret Symbol’ஐ பயிற்சி பண்ணும்போது நம் கற்பனை இந்தப் பின்னணியில்தான் இருக்க வேண்டும் – அவர்கள் குளிப்பதைத் தவிர!

*

16.04.1996

இன்று சேத்தபொண்ணின் கல்யாணப்பத்திரிக்கை வந்தது. ‘நிகழும் ஹிஜ்ரி 1416ம் ஆண்டு துல்கஃதா மாதம் பிறை 21 (10/4/1996) புதன்கிழமை பகல் 11:30 மணிக்கு சேத்தபொண்ணு என்கிற ராவியாகனி மணாளியை முஹம்மது காசிம் மணாளருக்கு….- கண்ணாடிசேட் மாமா அழைத்திருந்தார்கள். அவ்வண்ணமே கோருகிறவர்களில் ஆபிதீன் பேரும் இருந்தது. பகல் கல்யாணமா? என்னுடையதும் பகல் கல்யாணம்தான். இப்போது அஸ்ராவின் காதுகுத்து சடங்கு வேறு.. முத்துவாப்பாவும் வந்துவிட்டதில் வீடு குதூகலமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இப்போது இந்தப் பத்திரிக்கைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? சௌதிஅரேபியாவுக்கு அனுப்ப என்று இருபது! சேத்தபொண்ணுக்கு பிள்ளைப்பேறு வரும்போதுதான் அங்கே கிடைக்கும் அங்கு. UAEயில் இருக்கிற நாடுகளுக்கே 20 நாளாகிறது.. இருந்தாலும் அனுப்பி விடுவதுதான் நல்லது. சொந்தங்கள் கோபித்துக்கொள்ளும் – தாங்கள் கலந்துகொள்ள முடியாமல் போய்விடும் என்று. போகட்டும். இப்போதெல்லாம் கல்யாணத்திற்கு மாப்பிள்ளையைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் போய்விடுகிறார்கள். மாப்பிள்ளை , காண்ட்ராக்ட் முடிந்துதான் வருவார். ஃபோனிலேயே கல்யாணம் காயல்பட்டினத்தில் எல்லாம் சாதாரணமாக நடக்கிறது. ஃபோனிலேயே முதலிரவும் வந்துவிடலாம்! அது இருக்கட்டும், விருந்து மணமகள் இல்லத்தில். சியான் தெரு. பிரியாணியா, புலாவ்சோறா? அன்றைக்கு இங்கே பருப்பானும் பப்படமும்..! ‘சபராளி’ எனும் செவுனை என்று நீங்கும்? பத்திரிக்கையை பவுன்வாப்பாதான் அனுப்பியிருந்தார்கள். தம்பி ஹலால்தீனிடம்தான் கொடுத்துவிட வேண்டும். அவனை எப்போது பார்ப்பது? பகல் மஸ்தான் மரைக்கான் ரூமுக்கு அவன் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். பகல் ஹலால்தீன் வந்தான். அவன் வேறுவேலையாக வந்தானாம்!

கேஸட்டின் தொடர்ச்சி:

’34 அடி தள்ளிப்போகனும் (ஆறு அடியிலிருந்து). அங்கிருந்து மேலே போகனும் கற்பனையிலேயே. Bodyஐ பார்த்துக்கிட்டே போவனும். போவப்போவ Bodyயோட அமைப்பே மாறும். அங்கே இர்ந்துக்கிட்டு சுத்துங்க, ஏழு தரம். மலை, ஆறு, மணல்வெளி, சூரியன்..பாருங்க! மலைக்கு – ஆத்துக்கு பின்னாலே இக்கிற தோப்புகளைப் பாருங்க. பாத்துப்புட்டு மறுபடி கீழே இறங்கிடுங்க. ஆறு அடிக்கு வந்து அப்புறம் merge ஆயிடுங்க. மேலே போவும்போது proportionately எல்லாப் பொருளும் கீழே வந்தாவனும். சும்மா மேலே போறேண்டு நெனைச்சாப் பத்தாது. பாப்பனச்சேரி, அடர்த்தியா தெரிஞ்சது கொஞ்சம் விரிவா தெரியும். 40 அடிக்குப் பின்னாலே போனா தோப்பு தொரவுக்குப் பின்னாலெ உள்ள வீடு வாசல்லாம் தெரிய ஆரம்பிக்கும்’ – ‘S’

‘Astral Body, பின்னாலேயே நகர்ந்து போவுதா? எப்படி நகருது?’ – சர்க்காரின் மருமகன்

‘நீ போகனும். திரும்பிக்கிட்டு போகனும்’

‘அப்ப Silver Cord? ‘ – மருமகன் விடவில்லை.

‘அதும் திரும்பிக்கிம். ஆரம்பிச்சிட்டியா வாப்பா?! அல்லாஹுத்தாலா உன்னை படைக்கும்போது அபின் போட்டுத்தான் படைச்சிக்கிறான். அவ்வளவு பேரையும் குழப்பி வுட்டுடுவான்(இவன்). இதையெல்லாம் விட ரொம்ப முக்கியமானது, மேலே நிக்கிம்போது நம்ம நெனைச்ச இடத்துக்கு டிராவல் பண்ணலாம். நெனைச்சதை பார்க்கலாம், பார்க்க முடியும்டு தோணும். தோணும்டு சொல்றதை விட பார்க்க முடியும்ங்கிற உண்மை தெரியும். இதிலேயெ கொஞ்சம் நேரப்பட நிக்கலாமே.இன்னும் கொஞ்சம் சுவைக்கலாமேண்டு வரும். செய்யக்கூடாது! நான் சொன்ன எல்லையை மீறாமே திரும்பி வந்துடனும். இதுலெ ஜாக்கிரதையா இரிங்க!’

மலையின் எதிர்ப்பக்கம்தான் Astral Body நகர வேண்டும், ஒரு பட்டம் விடுவதுபோல silver cord இருக்கும் என்று விளக்குகிறார்கள். நல்லவேளையாகப் போயிற்று. எனக்கு நீச்சல் தெரியாது! நாற்பது அடி தூரம் நகர்ந்து நின்று அப்படியே சுற்றிலும் திரும்பிப்பார்க்க வேண்டும். ஒரு கட்டத்தில் கீழே கிடக்கும் physical bodyயும் தெரியும்.  அதற்குப்பிறகு அதன் வலது..இடது.. சுற்றி பார்வை வர வேண்டும். இதற்குப் பிறகு புறப்பட்ட ஆறு அடி தூரத்திற்குப் வந்துநின்று அப்படியே merge ஆக வேண்டும்.

‘ரெண்டு பாயிண்ட் ஞாபகம் வச்சிக்குங்க. எதையும் பாக்கலாம், எங்கேயும் டிராவல் பண்ணலாம்டு ஞாபகம் வரும். வந்தா தட்டி வுட்டுடுங்க. அங்கேயிருந்து பார்க்க முயற்சி பண்ணாதீங்க. இது எப்படிண்டு கேட்டாக்கா விருந்தாளி வீட்டுக்கு வந்திக்கிது, சீக்கிரம் கருவாடு வாங்கிட்டு வாங்கண்டு சொல்லி அனுப்பும்போது மனாரடியிலெ வேடிக்கைப் பாத்துப்புட்டு வாயைப் பொளந்து நிக்கிற மாதிரி. கருவாடும் வாங்க முடியாது. விருந்தாளியும் ஜோட்டாலெ அடிப்பான்!’ – ‘S’

*

‘செக்ஸியான உறவு ரொம்ப வேகமா கனவுலெ வந்திச்சிண்டா நம்மள்ட்டெ பண்டிட குணம் இக்கிதுண்டு அர்த்தம். கத்துற மாதிரி, சண்டை போடுற மாதிரி வந்தா – நாம சொல்ல மாட்டோம்? நாய் மாதிரி ஏன் கத்துறா?’ண்டு – நாய் குணம் இக்கிதுண்டு அர்த்தம். கனவுல பெரும்பகுதி நாம பாக்குற , பார்க்கப்படுற பொருள், பாக்குற ஆளு எல்லாமே ஒரே பொருள்தான். ஒரு சில கட்டங்கள்லெதான் சில அறிவுப்புகள் வரும். அது totally டிஃபரெண்ட்டா இக்கிம். முளிச்ச உடனே இக்கிற உணர்ச்சி அப்போ வித்யாஸமா இக்கிம். பெரும்பகுதி மனசுல உள்ள குப்பைலாம் வெளிலெ வரும்’ – ‘S’

‘திரும்பி Bodyயை பாக்கும்போது முகம் யானையிட முகம் மாதிரி இருந்திச்சி, துதிக்கையோடே!’

‘அது Body. Motionless. Soulless. அது மாதிரிதான் இக்கிம். Soul-lessண்டு சொன்னா மரமா கூட இக்கெலாமுலெ? மரக்கட்டையா கூட இக்கெலாம்லெ? கைலி உடுத்துன மரக்கட்டை, ஜட்டி போட்ட மரக்கட்டை.., (இப்படி)!’ – ‘S’

*

‘இஸ்ராயில் அலைஹிஸ்ஸலாம், உயிரை வாங்க வரும்போது ஒரு சிற்பி தன்னை மாதிரியே சிலை செஞ்சிவச்சி தானும் கூடப் படுத்துக்கிட்டானாம். இஸ்ராயில் அலைஹிவஸ்ஸலாம் ‘பே..பே’ண்டு முழிக்கிறாஹா. அஹ ஏன் முழிக்கிறாஹா?ண்டு கேட்காதீங்க. கதை சொன்னா கதைக்குப் பின்னாலேலெ உள்ள பாயிண்ட்டை பாருங்க. அஹலுக்கு ஆச்சரியமா தாங்கலே, அதே சமயத்திலெ உயிரை கைப்பற்றியாவனும், அல்லாஹ்க்கு பதில் சொல்லியாகனும். ‘அடடா..அற்புதமான பய! கண்டு புடிக்கவே முடியலையே..’ அப்படிண்டாஹலாம். அந்த சிலையிலெ ஒண்ணுட முகம் கொஞ்சம் விரிஞ்சிச்சி. அவ்வளவுதான், ‘லபக்’ண்டு புடிச்சிக்கிட்டாஹா!. நான் எந்த ஆங்கிள்லெ சொல்றேண்டா, முகஸ்துதிக்கு உட்படாதவர் எவரும் இல்லை. சிலபேர் ஈஸியா உட்படுவாங்க. சிலபேர் லேசா உட்படுவாங்க..’- ‘S’

*

‘உடல்லெ இக்கிற சீக்கை நாம குணப்படுத்துறோம், அதை Incurableண்டு சொல்லிப்புடுறான் படிச்சவன். நாம எப்படி cure பண்ண முடியுது? உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? பிலிப்பைன்ஸ்ண்டு ஒரு ஊரு இக்கிது. அங்கே Psychic Surgeryண்டு ஒண்ணு இக்கிது. பஜாஜ் கம்பெனி முதலாளிக்கு கிட்னிலெ கல் இருந்தது. கோடி கோடியா செலவு பண்ணுனான். முடியலே. ஏன்னா, அன்றாடம் அது ‘ஃபார்ம்’ ஆயிக்கிட்டே இருந்திச்சி. ஃபிலிப்பைன்ஸ் போனான். Psychic Surgeryண்டா மேலே ஒரு கண்ணாடி. கீழே ஆளை படுக்க வச்சி, கண்ணாடிக்கு மேலே ரெண்டு இஞ்ச் தூரத்துலெ அப்படியே கையாலெ தடவி வுட்டு… Illustrated weeklyலெ ஃபோட்டோவோட போட்டிருந்தான். எட்டு மூவி கேமரா. 16 ஸ்டில் கேமரா. படம் போட்டிருந்தான். வயிறு பொளந்துடுது.. Gloves போட்டு கையெ உள்ளே வுட்டு, கிட்னியை கசக்கிவுட்டு, பிதுக்கிவுட்டு எடுத்துடுறான். பல்லுல உள்ள துரும்பை எடுக்குற மாதிரி! பிலிப்பைன்ஸ்லெ மட்டும்தான் இது இக்கிது.அட்லீஸ்ட் பிலிப்பைன்ஸ்லெ மட்டும்தான் அதிகம் இக்கிது. என்னா காரணம் தெரியுமா? அங்கே படிப்பறிவு ஜாஸ்தி இல்லே. இதனாலெதான் சொல்றேன். பெத்த அறிவை துறக்கனும். அதுக்கு என்னா அர்த்தம்? அறிவு என்று எதை நெனைக்கிறிங்களோ அது அறிவே அல்ல. இந்த அறிவுலெ கொஞ்சக்கோனு தெரிய ஆரம்பிச்சிங்கண்டா பெத்தது அறிவே அல்லண்டு உண்மை புரிஞ்சிடும். ம்…எதுக்கு சொல்றேன்? மரக்கட்டை மாதிரி தெரிஞ்சாலும் தப்பில்லே. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனா இதுலெ உள்ள கஷ்டமான reaction – செக்ஸ். பயங்கரமா இக்கிம். ரொம்ப மோசமா இக்கிம். அப்பத்தானே நீங்க கண்ட்ரோல் பண்ண முடியும்? பசியில்லாம எப்படி நோன்பு நோக்க முடியும்? பேச்சுலெ ஒரு கண்ட்ரோல் வரும். குரல் மென்மையா இருக்கும். நல்ல தெளிவா, பேசும்போது கூட, ‘இந்த வார்த்தை unnecessaryயா பேசிட்டோம்டு தோணும். மத்தவங்களை பாக்கும்போது இந்த செய்தியைகூட express பண்ணத் தெரியலே’ண்டு தோணும்’ – ‘S’

*

‘Precognition – பின்னாலெ நடக்குறதை முன்னாலெ வெளங்கிக்கிறது. Telekenting force – நெனைப்புனாலே பொருட்களை அசைக்கிறது. கண்ணில்லா விட்டாலும் இதைச் செய்யலாம். Clairvoyance – கண்ணுக்கு தெரியாத இடத்துலெ நடக்குறதைப் பாக்குறது. காலத்தையும் நேரத்தையும் கடந்தது. Thers is no time, There is no space. இதுலெ ஒரு தொந்தரவு என்னா, நடந்த முடிஞ்ச ஒண்ணு, நடந்து கொண்டிருக்கும் ஒண்ணு, நடக்கப்போகும் ஒண்ணு இந்த மூணும் ஒரே intensityலெ வரும், கொஞ்சம்தான் வித்யாஸம். Milky white, Snow white, கத்தரிக்கா whiteண்டு இக்கிதுலெ..அப்படி! இப்ப முயற்சி பண்ண வாணாம். நான் சொன்னபடி செஞ்சிக்கிட்டு வாங்க. தானா புரிய ஆரம்பிக்கும்.கேளுங்க. அதான் இதும்பேன். Clairvoyance – மத்தவங்க தூரத்துல பேசுறதை கேட்குறது. உணர்ந்துக்குறது. Generalஆ , Telepathic Force. ஒத்தவன் நெனைக்கிறதை கண்டுபுடிக்கிறது. நம்மோட எண்ணத்தை திணிக்கிறதும் Telepathic Forceதான் இதை(யெல்லாம்) நேரம் வரும்போது தெளிவா சொல்றேன். ஆனா உங்க மனசை சுத்தமா வச்சிக்கனும். சுத்தம்டா ‘தசுவமணி’யை உருட்டுற சுத்தம் இல்லே. உருட்டுறதுக்கும் ஒரு சுத்தம் வேணும், இல்லேண்டா தசுவமணிக்கு வேலை இல்லே. நாம யாரு, நாம எப்படி இருக்கனும்? அதுலெ எந்த வகையிலும் கோட்டை வுட்டுடக்கூடாது. ஆத்துலெ ஓடுற குப்பை மாதிரி இருக்கப்படாது. அது நீரோட்டத்துலெ ஓடும். எதிர் நீச்சல் போட முடியாது. நாம boatலெ போறோம். ஆறு இப்படி வந்தா நாம் அப்படி போலாம் எதிர்த்துக்கிட்டு, துடுப்பு போட்டுக்கிட்டு, இல்லே மோட்டார் போட்டுக்கிட்டு. இப்படித்தான் போவனும்!’ – ‘S’

*

17.04.1996

ஃபரீது இன்று பகல் 4000 திர்ஹம் கொடுத்தார். சவுதி கிளம்பினார் – Exitல். வியாபாரம் பண்ணவேண்டும் என்ற வெறியில் , முக்கியமாக சௌதியில் இழந்த மரியாதையைக் காப்பாற்றிய லண்டன் நானாவின் 20 லட்ச ரூபாய் கடனை அடைக்க, நல்ல வேலையைத் தூக்கியெறிந்தார். என்னை வசீகரித்தது இந்த துணிச்சல். நன்றாக அவரை உற்சாகப்படுத்தினேன். முதலில் எனது அறிவுரைகளால் நானும் சோர்ந்து மற்றவர்களையும் பாதாளத்தில் தள்ளுவேன். இப்போது அப்படியல்ல. நம்மால் எதுவும் முடியும். என்னாலும் முடியும் – பிரிட்டிஷ் பாஸ்போர்ட் கிடைத்தால்!. ‘கண்ணே நீ ஏழு வானத்திற்கப்பால் இருந்தாலும் ஒடி வருவேன் – மழை பெய்யாதிருந்தால்!’. இது முன்னர்போல விரக்தி கலந்த கிண்டல் அல்ல. ஒரு உற்சாகம். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு. இன்று சாதித்தது, ‘நம்ம பர்ஸுக்கு ‘பரக்கத்’ குறைச்சலா இக்கிதே..கூட்டனுமே..’ என்று யோசித்ததுதான். ஃபரீதின் பணம்! இரண்டு வாரத்தில் – இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கே அவரிடம் 60000 ரியால் ஏமாற்றிய அரபி உடனே கொடுத்தால் உடனே வந்து – வியாபாரம் தொடங்கப்போகிறார். வரும்வரை பாதுகாப்பாக வைத்திருக்க ஆபிதீன். ஆபீஸில் என் டேபிள் டிராயரில் ஒரு கவரில் இட்டு பூட்டி வைத்தேன். அப்போ பர்ஸின் பரக்கத்? அப்பப்போ அதை எடுத்து வைத்துக்கொள்ளலாமா செலவழிக்காமல்? இது ஒரு வருடத்திற்கு முன்பு கிடைத்தால் சேத்தபொண்ணின் கல்யாணத்திற்கு போயிருப்பேனோ? ஃபரீது ஜோட்டால் அடிப்பார், அவருடைய ஹஜ்ரத் உத்தரவோடு!

19.04.1996

நேற்று ‘தேரா’ போகவில்லை. வியாழக்கிழமை இரவு ‘தேரா’ போவது வியாழன் இரவு/வெள்ளி பகல்/வெள்ளி இரவுக்கான சாப்பாட்டு செலவை கட்டுப்படுத்தத்தான். தவிர வெள்ளியில்தான் நண்பர்களை பார்க்க முடிகிறது. முக்கியமாக ஜெப்பார் நானாவை. சர்க்காரின் கேஸட்டுகளுக்காக சந்திக்கலாம். அப்புறம் ஊரில் மௌத்தானவர்களுக்கு கண்டுகொள்ள. ‘குவைத்பள்ளி’யில் ஜும்ஆ முடிந்தபிறகு நடக்கும் . ஜூம்ஆவுக்கான ‘குத்பா’வில் இப்போதுள்ள முஸ்லீம் சமுதாயத்திற்கு மொளவுத்தண்ணியைப் பற்றிக்கூடத் தெரியவில்லையே என்று அந்த பொரவாச்சேரி இமாம் தாடி நனைய அழுவார். அதைப் பார்க்க. வெள்ளிக்கிழமை ‘தேரா’ சிறந்தது. நேற்று போகாததின் காரணம் மஸ்தான் மரைக்கான் ரூமில் ஒரு திருவிழா. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா. மூட்டைப்பூச்சிகளுக்கு மருந்து வைக்கும் (சந்தனம் பூசும்?) மகோன்னத ஹந்திரி. அப்போது அவர்கள் நேர்ந்துகொண்டு அவீரில் என் அறைக்கு வந்து படுப்பார்கள். நேற்று ஒரு நண்பர்/விருந்தாளி வந்தார் என்று மொயீன்சாஹிபிடம் சொன்னாலே ‘அவர்கள் ரூமில் மூட்டைப்பூச்சி மருந்து வைத்து விட்டார்களோ?’ என்று கேட்பார்! மருந்துக்கு சக்தி உண்டுதான். 20 கி.மீட்டரை ஒரே நிமிடமாக ஆக்கி வரவழைத்து விடுகிறதே..’ஓஸ்..ஸூண்டு கெடக்குற’ வெறுமையை ‘அமைதிப்பூங்கா’ என்று வர்ணித்துவிடச் சொல்கிறதே..! என் அறை மிகவும் ராயல்-ஆக இருக்கும்தான். ஆனால் கம்பெனி அத்தனை வசதிகளையும் கொடுத்திருந்தாலும் அந்த அறை உண்மையில் வாட்ச்மேனுக்காக இந்த கட்டிடத்தில் கட்டப்பட்ட ஒன்றென்பதால் நான் ‘நாத்துர்’ என்று நிறைய முறை தொந்தரவுகள் வரும். இந்த அறையைப் பார்த்து ஒரு பெரியவர் காறித் துப்பிவிட்டுப் போனார். இத்தனை வசதிகளுக்குப் பிறகு லட்சரூபாய் கொடுத்தாலும் தங்கமாட்டாராம். ஏன்? வெறுமையும் தனிமையுமாம். ரூமிற்கு வெளியே முன்னே பார்த்தால் நகரம் நிழலாகத் தெரிகிறது. விரிந்து பரந்து நிற்கிற ஆப்ரா தண்ணீரில் முடிந்த – எச்சங்கள் அடங்கிய மண்ணிற்கு அப்பால். 20 கி.மீ வெறுமை.. கொஞ்சமும் ஓய்வில்லாமல் ஹத்தாவிற்கு போகிற நெடுஞ்சாலையில் பெரும்பெரும் டிரக்குகள் போய்க்கொண்டேதான் இருக்கின்றன. மரவட்டைக் கால்களாய் டயர்கள்..ஆனால் இவைகளின் இரைச்சலையும் தாண்டி என் கண்கள் மறைத்து நிற்காத வெறுமையில்தான் நிலைக்கும். முன்பு எனக்கும் எப்படியோதான் இருந்தது. இப்போது பயிற்சிக்கு மிகவும் உதவுகிறது. அறையைப் பார்த்து அதிலுள்ள ஓவியங்கள் வசதிகளைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் அறை தரும் தனிமையை, நிம்மதியைக் கண்டு பொறாமைப்பட்டவர் ஒருவர்தான். மஞ்சனூர் ஜெப்பார்நானா. ‘நிறைய அற்புதங்கள்லாம் நடக்கும் பாருங்க இங்கே’ என்றே சொன்னார். சர்க்காரின் ஓவியத்தைப் பார்த்தபடி பெருமூச்செறிந்தவாறே.. உண்மையில் நகரத்தில் – அறையில் பத்துபேருடைய கூட்டத்திற்கும் கூச்சலுக்கும் இடையே அவர் செய்துவரும் பயிற்சிதான் அற்புதம். எப்படி பண்ணுவீங்க ‘SS’ அங்கே என்று அவரிடம் கேட்டேன். ‘எல்லா குரங்கையும் தூங்கப் போட்டுட்டுதான்’ என்றார். குரங்குகள் மோசமானவை. அவை இன்று வருகிறோம் என்கின்றன. வரவில்லையே, எங்கே போயின? மூட்டைப்பூச்சி மாத்திரைகளை வைத்துவிட்டு தாங்களும் கூடவே அறையில் உட்கார்ந்து கொண்டனவோ? நல்லது. அற்புதம்தான் இதுவும். தொடரட்டுமாக!

*

கேஸட் தொடர்ச்சி :

‘ஆச்சிக்கனிமா வூட்டு கிச்சடா பாத்திஹாவுக்கு பதிலா கிச்சிக்கினிமா வீட்டு ஆச்சிடா பாத்திஹாக்கு போனேன்’டு எண்ணி எண்ணிப் பழகியாச்சி.. இது வார்த்தை. இதே மாதிரி எண்ணத்துலேயும் குழப்பம். இப்படி எண்ணங்கள் உள்ளவங்கள்ட்டெ பழகும்போது ஒண்ணு செய்யலாம். ‘ஆண்டவனே இவங்களுக்கு நல்லவழி காட்டு’ண்டு துஆ செய்யலாம். நம்ம துஆ மேலே பொற அளவுக்கு நம்மள்ட்டெ பவர் இக்கிற மாதிரி எனக்குத் தெரியலே! அதனாலே , அவங்க பேச்சைக் கேட்டு பேசாம வுட்டுடனும். நீங்க உங்களைப் பாருங்க. நீ ஏன் வாழலேண்டு ஆண்டவன் கேட்பான். அவங்க லைஃபுக்கு அவங்க ரெஸ்பான்ஸிபிள். அவங்களுக்கு பாதை வேணும்டு கேட்டா தெரிஞ்சவங்கள்ட்டெ போயி கேட்கட்டும், இல்லே, யோசனை பண்ணிப் பழகட்டும். அப்படி இல்லேண்டா பாதை கிடைக்காது. ஏண்டா, இது எழுதப்படாத அறிவு. சொல்லப்படாத அறிவு. எடுத்துக்காட்டப்படாத, மறைக்கப்பட்ட, மூடி வைக்கப்பட்ட அறிவு. வெளியே தெரியாது. இருக்கிறதாகவே தெரியாது.’

‘கண்ட்ரோல் பண்ண முடியலே சர்க்கார்’

‘செய்திதான் நான் சொல்லலாமே தவிர உங்ககிட்டெ இக்கிற கோளாறுக்கு தாயத்து நான் போட முடியாது. வேணும்டா தாயத்து போட்டு உடுறேன். செய்தி சொல்ல மாட்டேன்! பரவாயில்லையா?’ – சர்க்காருக்கு கோபம்,  குறுக்கீடு செய்ததற்கு.

*

ஃப தக்கிர் இன்ன ஃபஅதித் திக்ரா (எடுத்துக்கூறு – உன் கூற்று பயன்படுமென்று தெரிந்தால்)

*

‘ஒத்தவன் கீழே இக்கிறான். கஷ்டப்படுறான். பிறகு வளர்ந்துடுறான். வளர்ந்த உடனே ஏற்கனவே இருந்த பழைய ஃப்ரெண்ட்ஸையெல்லாம் வுட்டுடுறான். சலாம் சொன்னாக்கூட பதில் சொல்லுறதில்லே. நாம சொல்றொம், ‘பணம் வந்துடுச்சில்ல… பழசை மறந்துட்டாரு’ண்டு. அவன் செய்யிறது தப்பா ரைட்டா?’

ரவூஃப் மட்டும் ‘ரைட்’ என்கிறான்.

‘மேலே வந்தபிறகு அவன் Mental Vibration, Thought Force, அவன் Outlook எல்லாம் மாறிடும். எப்ப மாறிடுச்சோ பழைய ஃப்ரெண்ட்ஸை பார்த்தாக்கா ஃப்ரெண்ட்ஷிப்பே இருக்காது. Totally Different Personality இக்கிம். கீழே – நேரா- பாக்கும்போது முகத்தைப் பாக்குறோம். மேலேருந்து பார்த்தா மண்டையைத்தானே பார்க்க முடியும்? கட்டையாவுலெ தெரிவான் மனுஷன்? இவனை மறந்துப்புட்டு அவன் சும்மா இல்லே, மத்த பேருங்கள்ட்டெ பழகிக்கிட்டிக்கிறான்! அவன் Mental Vibration சமமா இக்கிதுண்டு அர்த்தம். அப்ப என்னா செய்யனும்? ஒண்ணு, அவன் கீழே வரனும். இல்லே, இவன் மேலே போவனும். மேலே போறதுக்கு , பணக்காரனா வாழுகிறவனை நெனைச்சா மேலே போவ முடியாது. அதேமாதிரி ஏழைங்களை அணைச்சி முச்சம் உட்டாக்கா நீங்க ஏழையா பொய்டமாட்டீங்க. ஏழைண்டா ஏழ்மை. தரத்தைச் சொல்றேன். பணத்தை வச்சி சொல்லலே. பணக்காரண்டா செல்வத்தன்மை. செல்வம்டா அறிவு, செல்வாக்கு எல்லாம் சேர்ந்ததுதான். இருந்தாலும் யார்மேலெ ‘மொஹப்பத்’ வைக்கிறோமோ அவன் குணம் நம்மள்ட்டெ ஒட்டும். நீங்க பெரிய பணக்காரனா ஆவனும்டா பணக்காரனை ஃபோகஸ் பண்ணலாம். அவன் உண்மையிலேயே பணக்காரனா இருக்கனும். எப்படி நான் சொல்லாம என்னெட்டெ உள்ள குறைகள்லாம் உங்கள்ட்டெ ஒட்டுதோ அவன்ட்டெ உள்ளெ நெகடிவ் ஃபோர்ஸும் உங்ககிட்டெ ஒட்டும். அப்ப நீங்க பணக்காரனா இருக்க மாட்டீங்க. அந்த நெகடிவ் ஃபோர்ஸை உட்டுப்புட்டு நீங்க ஃபோகஸ் பண்ணப்பண்ண புதுப்புது செயல்களெல்லாம் ஃபார்ம் ஆகும். கடைசிலெ பார்க்கப்போனா அவன்ற செயல் அது! அப்ப, உங்களுக்கே தெரியாம அவன் உங்களுக்கு Teach பண்ணிக்கிட்டிறாண்டு அர்த்தம்’
*

‘முட்டையிலேர்ந்து குஞ்சு வெளிவந்த உடனே ஓடுது. சினையிலேர்ந்து மீன் வந்த உடனேயே நீஞ்சுது. மனுஷன், பொறந்த உடனேயே அப்படி செய்யிறதில்லே. நடக்கவும், அசையவும், அசைக்கவும் கூட படிச்சிக்கனும். மனுஷன் நாக்காலெ பேசுறான்ங்குறது பச்சைப்பொய். கண்ணாலெ பேசுறான். கையாலெ பேசுறான். எல்லாத்துனாலேயும் பேசுறான். எல்லாத்தையும் பாசிடிவ் ஃபோர்ஸ்லெ கொண்டு வரனும். இதேமாதிரி கண்ணாலெயும்தான் சாப்புடுறோம். அதனாலெதான் சாப்பாட்டுக்கு அழகு வேண்டி இக்கிது. இருட்டுலெ சாப்புட்டுப் பாருங்க. வெளிச்சத்துலெ சாப்புடுற டேஸ்ட் அதுலெ இருக்காது. இப்படி நாம minuteஆ கவனிக்கனும். கவனிக்க வேண்டியதில்லே, தானாப் பூறும். அதை மிஸ் பண்ணிடாதீங்க..’

‘ஜனங்க பைத்தியமாக்கப்பட்டதுக்கு காரணம் , ஒண்ணு, சிரிச்சி ஏமாந்தான்,இல்லெ, பயந்து ஏமாந்தான். சிரிப்பைக் காமிச்சி, பொம்பளையக் கொடுத்து, தண்ணியைக் கொடுத்து, இல்லே,’குத்துவேன், வெட்டுவேன், போலீஸ்லெ புடிச்சிக் கொடுத்துடுவேன்’ண்டு கேட்டு ஏமாந்தான். Alert Positivityயோட அமைதியா நீங்க இருந்தீங்கண்டா யாரும் உங்களை ஏமாத்த முடியாது. அதேமாதிரி நீங்களும் யாரையும் ஏமாத்தக்கூடாது. அது வேற Reaction கொடுத்துடும். Cosmic Force உதவாது.’

‘ஒரு செய்தி தேவைண்டா அதெ கொடுக்குறதுக்கு பல சக்திகள் முயற்சி பண்ணிக்கிட்டிக்குது. Help us to Help You.. இதுக்கு ரொம்ப அர்த்தம் இக்கிது. ‘எங்களுக்கு உதவு – உங்களுக்கு உதவ’. Let me Help youண்டு அர்த்தம். ஆசைதான் துஆ. எந்த அளவுக்கு ஆசையிலெ Burning Desire கலந்திருக்குமோ அந்த அளவு அது பிரார்த்தனையா மாறிடும். நீங்க துஆ கேட்குறதுக்கு முன்னாலே எண்ணத்துலெ வலிமை இருக்கனும். துக்கம் வரக்கூடாது. அது வந்தாதான் உலகம். அது இல்லேண்டா ஒண்ணுமேயில்லைங்கிற மாதிரி இருக்கனும். அப்ப ‘படபடண்டு காரியம் முடிய ஆரம்பிக்கிம்’

**

‘SS’ பற்றி : ‘இது Short Cut. என்னா அர்த்தம்? வாழ்ந்துகிட்டு, வேலை செஞ்சிக்கிட்டு, புரோட்டா மேசைமேலெ புரோட்டா போட்டுக்கிட்டே பயிற்சி பண்ணனும். புடிக்கிற முறை, புரோட்டாவ பொரட்டி போடும்போது உள்ள ஸ்டைல், relaxation… நடக்கும்போது பண்ணலாம். ஏன், (வீராங்கணை) அஸ்வினிகூட ஓடிக்கிட்டே பண்ணலாம். அப்ப ஏன் படுத்துக்கிட்டு செய்யச் சொல்றீங்கண்டா இப்போதைக்கு அப்படித்தான் செய்ய முடியும். இத கரெக்டா செஞ்சி வந்தீங்கண்டா ரொம்ப சிம்பிளா ஆக்கிடுவேன். ஆனா நிச்சயமா தெரியும், எல்லா வகையிலேயும் மாறுபட்ட நீங்க அப்படீங்குற மாதிரி தெரியும். அப்ப ஜனங்க உங்களைச் சொல்லுவாங்க, ‘லக்கி.. கொக்கி…. பிக்கி’ண்டு. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. செய்யிற செயலுக்கு விளைவு தானா வருது..’ –
‘S’

*

வெள்ளி செஷன் (19.04.1996) முடிந்து.
29-09 to 06.10.95 கேஸட்டிலிருந்து..

‘ஒரு பைக் வாங்கனும்டு வச்சிக்குவோம்..எதைப் பார்த்தாலும் – இப்ப ஆபிதீனைப் பார்க்கலாம் – பைக் இருந்தா குளிக்கப்போலாமே பைக் எடுத்துக்கிட்டுண்டு நெனைப்பு வந்துக்கிட்டேயிக்கிம். அப்படியே மனசு திரண்டு வரும்போது மனசு தெளிவாயிடும் – Burning Desire வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சிண்டு. அப்போ பேச்சு வரும். ‘நான் நெனைச்சா முடிச்சுப்புடுவேண்டு சொல்லக்கூடாது. முடிச்ச உடனே சொல்லு. (அதுக்கு முன்னாலே) சொன்னா burning desire குறையும்’ – ‘S’

பார்வையாளனாக உட்கார்ந்திருந்த இந்த செஷனில் இது ஆச்சரியமாக இருந்தது. துபாயிலிருந்து சென்னையில் இறங்கிய அன்றே பணம் கொடுக்க ஏற்பாடு செய்தது. எனது நீண்டநாளைய ஆசை. அஸ்மாவும் ஆசைப்பட்டாள்தான். எல்லா சபராளிகளும் ஊர் வந்தவுடன் ஒரு பைக் வாங்குகிறார்கள். உபயோகித்துவிட்டு போகும்போது விற்றுவிடுகிறார்கள். அதுபோல பண்ணலாமே என்று போன சபர் கூட சொன்னாள். பணம் என்னும் சக்கரமில்லாமல் எப்படி ஓட்டுவது? இந்த முறை சற்று சாத்தியமானது – கம்பெனியிலிருந்து வாங்கிய ‘லோன்’-ஆல். அஸ்மாவும் ஒத்துழைத்தாள். உனக்கு 10 பவுன் நகை கிடையாது. இன்ஷா அல்லாஹ், அடுத்த முறைதான்! பணம் வாங்கிய தம்பி தௌஃபீக் இழுத்தடித்தான். காரைக்காலில் வாங்கியிருக்கலாம் பேசாமல். ஆனால் முழுப்பணத்தையும் அல்லவா கேட்பான்? எனக்கோ ஊரில் எங்கும் போக வர சிரமம். துபாய் வந்தபிறகு பைக் கிடைப்பதில் அர்த்தமென்ன இருக்கிறது. எங்கு போனாலும் அலுத்துக்கொள்வேன் ‘சே..பைக் இல்லாமல் சிரமம். நாளை வந்துவிடும்’ என்று. பேச்சு! சர்க்காரிடம் பைக் வருவது, அதன் தாமதம் பற்றிச் சொல்லவுமில்லை. அவர்களோ தாமதத்தின் காரணத்தை எனக்கு நாசூக்காக விளக்குகிறார்கள். அடுத்த இருநாள் பைக் வரும் என்று யாரிடமும் சொல்லவில்லை. பைக் வாசலில் வந்து நின்றது. Bajaj Chetak.. ஓ, இது ஸ்கூட்டரோ?! வந்தவுடன் சொன்னேன். செஷனில் எப்படி அவர்களால் மிகச்சரியாக நான் நினைத்த நினைப்பை, ஆசையை தாமதத்தின் காரணத்தை கோடுகாட்ட முடிந்ததென்றும் ஆச்சரியப்பட்டு – அவர்களைக் கோபப்படுத்தாமல் – கேட்டேன். ஒன்றும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டார்கள். ‘நம்பர் என்னா?’ என்றார்கள். சொன்னேன். கலரைக் கேட்டார்கள். Metal Grey. ‘அப்போ ரொம்ப அளஹா இக்கிமே’ என்றார்கள். அவ்வளவுதான். இதையும் நான் சொல்லித்தான் அவர்கள் தெரியவேண்டுமென்பதில்லை.

பயிற்சி :

‘Life is too short. நமக்கு ஆவரேஜே 65தானே.. உங்களுக்கு இப்ப வாழுறதுக்கு span of time அதிகம் இக்கிது. இப்பவே நீங்க பயிற்சி எடுத்தீங்கண்டா எங்க வயசுலேயிலாம் ரொம்ப நல்லா இப்பீங்க. அதனாலெ நீங்க (பயிற்சியை) உயிர் மாதிரி மதிக்கனும். இன்னும் சொல்லப்போனா உயிர்தான் இது. இதை miss பண்ணுற ஒவ்வொரு செகண்டும் லைஃபை படுக்கவச்சி முகச்சதையை வெட்டுற மாதிரி’

ஜம் :

‘மூன்று மணி நேரத்துக்குப் பிறகும் (ஜம்மில்) இருக்கச் சொல்லுது’ – சீடர்

‘இருக்கக்கூடாது, இதை மீறுனீங்க…நான் போகும்போது எனக்கு முன்னாலெ போறமாதிரி அர்த்தம். நான் கூட இருந்தா பவர் இக்கிம். எனக்கு முன்னாலெ போனா? பவர் இருக்காது. முட்டுவீங்க! உங்க சூத்துல வந்து நான் முட்டுவேன். இப்படியும் சொல்லலாம், பேஷிமாம் ‘சுக்ரு’ செய்றதுக்கு முன்னாலே நீங்க ‘சுக்ரு’ செய்ற மாதிரிண்டும் சொல்லலாம். அவரு என்னா செய்வாரு, திரும்பிப்பார்த்து? ‘வாப்பா..நீ இங்கெ வா வாப்பா. நான் கீழே இறங்கிடுறேன்’ம்பாரு!’

மூச்சு :

சந்திரகலை, சூரியகலை, வளர்பிறை, தேய்பிறை என்று மூச்சு முட்டுகிறது எழுத. வேறு ஒன்று சொல்கிறார்கள். ‘சாப்பிடும்போது, வெளிக்கிருக்கும்போது வலதுபக்க மூச்சு. தண்ணீர் குடிக்கும்போது, மூத்திரம் பெய்யும்போது இடதுபக்க மூச்சு. வளர்பிறை, தேய்பிறையிலே – காலையிலெ 14 நாளைக்கு ஓடுறது Right Sideல் ஓடும். 2 மணி 24 நிமிஷம் ஓடும். அப்புறம் left, right, leftண்டு மாறிக்கிட்டே வரும். இது அப்படியே மாறி, தேய்பிறையிலெ தலைகீழா வரும் (வளர்பிறையில் 5, தேய்பிறையில் 16). 16க்கு பிறகு 28 வரைக்கும் முதல்பிறையிலெ எது ஓடுதோ அது பகல்லெ ஓடும்..’ ஐயோ…இது மூளையை முட்டுகிறது. நேரில்தான் மறுபடியும் கேட்டு மூச்சை சரி செய்ய வேண்டும்.

‘நினைக்கிறதுலெ நீங்கிப்போறது, நிலைச்சி நிக்கிறதுண்டு ரெண்டு காரியம் இக்கிது. கடன், சீக்கு, இதப்பத்தி நினைக்கிறது right sideலெ. நிரந்தரமா நிலைச்சி நிக்கிறது left sideலெ. வீடு கட்டுறது, கிணறு தோண்டுறது, வியாபாரம் பண்ணுறது, துணிமணி வாங்குறது, கல்யாண காரியம் முடிக்கிறது, அதைப் பத்தி பேசுறது.. இத நீங்க நல்லா பார்க்கலாம். வியாபாரம் நடக்கும்போது ஒரு சரக்கு ஓடலேண்டா சரக்கையே நினைச்சிக்கிட்டு – சாய்ஞ்சிகிட்டு – right sideலெ மூச்சை வுட்டுப் பாருங்க. ஓடாத சரக்கும் ஓடிடும்!. ‘Rightலெ ஓடுறது Leftலேயோ, leftலெ ஓடுறது rightலேயோ ஓடுதுண்டா அன்னக்கி ஏதோ நடக்கப்போவுதுண்டு அர்த்தம். Bodyலெ கோளாறு இக்கிதுண்டு அர்த்தம். Bodyண்டு சொல்லும்போது நான் மட்டும் அல்ல. நான், என் பொஞ்சாதி, புள்ளை, அண்ணன், தம்பி, கூட்டாளி, அவங்களுக்குஏதோ கோளாறு நடக்கப்போவுதுண்டு அர்த்தம்’ – ‘S’

*

ஒரு சீடர் , சர்க்கார் எறிந்த சிகரெட் துண்டை கால்விரல்களால் இடுக்கி அலட்சியமாக சாக்கடையில் வீசுகிறார். வசவு பிறக்கிறது.

‘நான் கழட்டிப்போட்ட ஜட்டிய அணைச்சிக்கிட்டிப்பா ஒருத்தி. என்னா காரணம்? நானாக அவள் நினைக்கிறாள்ண்டு அர்த்தம். ம்? உஸ்தாது வீட்டு பூனைக்குட்டியைக் கூட ‘ச்சீ’ண்டு வெரட்டப்படாது.. உங்களுக்குலாம் தெரியும். இதுலெயிலாம் நீங்க பெர்ஃபெக்ட்டா இக்கிறீங்களா?’

‘ம்’ என்று முதலில் சொன்னவர்தான் சிகரெட் துண்டை அலட்சியம் செய்தவர். நன்றாக மாட்டிக்கொள்கிறார்.

நானும், செஷனில், புர்தா ஷரீஃபில் உட்கார்ந்து பழகியவனல்ல. முந்தைய வார செஷனில், சர்க்கார் பாத்ரூம் போக எழுந்தபோது எல்லா சீடர்களும் எழுந்து நின்றார்கள். உட்கார்ந்திருந்த என்னை ரவூஃப் அதட்டினான். ‘சர்க்கார் instruction. எந்திரிச்சி நில்லு’ என்றான். நானும் சேர்ந்து ‘யாநபி’யில் சேர்ந்து கொண்டேன். அதுபற்றியும் சர்க்கார் கோபமாக சொன்னார்கள் : ‘மரியாதை எனக்குத் தேவையில்லை. நானாக சொல்லலே, எந்திரிச்சி நிக்கச் சொல்லி. நீங்களா உண்டாக்கிட்டீங்க. நான் அப்படி சொன்னதே கிடையாது. அடியக்கமங்கலம் ஜனங்க, இங்கே வந்தவங்க , ஆரம்பிச்சி வச்சாங்க.. அதுக்காக, நீங்க கால்மேலே காலைத்தூக்கிக்கிட்டு உட்கார்றதும் தப்பு. நான் பத்துதரம் எந்திரிப்பேன். பத்துதரமும் நீங்க எந்திரிச்சிங்கண்டு சொன்னாக்கா அது வடிகட்டின முட்டாள்தனம், கிறுக்குத்தனம். அது Possessiveness. Aggressiveness. அது தேவையில்லை எனக்கு. ஆனா டிசிப்ளின் வேணும்’. ஜம் சரியாக பண்ணவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறார்கள்.

ஜோல்பேட் ஹஜ்ரத்தின் அணுகுமுறை பற்றி – செத்துப்போன தெய்வத்தை தேடும் மிகப்பழைய முயற்சியாக – கிண்டல் செய்தாலும் அவர்களின் சீடர்கள் அவருக்கு கொடுக்கும் மிக உயர்ந்த பவ்யத்தை, மரியாதையை பாராட்டவே செய்வார்கள் சர்க்கார். உஸ்தாதின் பிரியத்தைச் சம்பாதிப்பதும் அருளைப் பெறுவதின் வழிதான். அதற்காக சர்க்காரை வெறும் வார்த்தைகளால் புகழத் தேவையில்லை. கவிஞர் ஹலீம், ‘ஞானத்தந்தை’ என்று குறிப்பிடுவதையே வெடைப்பார்கள் அவர்கள். இன்று ஒரு புத்தகம் படித்தேன். ஜோல்பேட் ஹஜ்ரத்தின் ‘முரீது’ எழுதியிருக்கிறார். தனது உஸ்தாதைப் பற்றிக் குறிப்பிடும்போது வார்த்தைகடலில் நீந்தி களைத்துப் போகிறார். ‘ஜோல்பேட் மாநகரில் ஆன்மீக ஆட்சி புரியும் ஞானக்கடல், தென்னாட்டுத் திருவிளக்கு, தென் திசையின் திருப்புகழ், ஜாமிஉஷ் ஷரீஅத், வத்தரீகத், ஷம்சுல் ஆரிபீன் அல்லாமா, ஆரிஃபில்லாஹ், அல்ஹாஜ் பைஜிஷாஹ் நூரி சிஷ்தியுல் காதிரி, தாமத் பரகாதுஹூம்…. சரி, ஆசியுரை கொடுக்கும் அவர்கள் தன் உஸ்தாதை எப்படிக் குறிப்பிடுகிறார்கள்? ‘எனது இதய வேந்தர் சர்கார் கிப்லா ஸைய்யிது நூரிஷாஹ் கத்தஸல்லாஹூ சிர்ரஹூல் அஜீஸ்..! ஆனால் , ‘சுவைக்கும் முன் சிலவரிகள்’ உண்மையானதுதான். ‘ஷைகு அவர்களை தாய் தந்தையை விட உயர்வாக மதிக்க வேண்டும். அவர்களின் வீட்டுநாயைக் கூட கேவலமாகக் கருதக்கூடாது. ஷைகு அவர்களின் வீட்டு சுவற்றை கோணலாக இருப்பதாக ஒருவன் கருதுவானேயானால் அவனுடையை ஈமான் கோணலாகிவிடும்’. ஹாபிஜ் ஷீராஜூ(ரஹ்) அவர்களின் பாரசீகக் கவிதை ஒன்றும் மேற்கோள் காட்டப்படுகிறது. ‘ஷைகு அவர்கள் முஸல்லாவை மூத்திரத்தில் நனைக்கும்படி சொன்னாலும் ஒரு சாலிக் அவ்வாறே செய்யவேண்டும்’.

‘நீ நாடு; நாடமாட்டேன் என்பதை நாடு!’ – ஜமாலி ஷாஹ் நூரி.

சர்க்கார் , வேலூரில் (பாக்கியத்துஸ் ஸாலிஹா மதறஸாவில்) படிக்கும்போது ஒரு மேடைப்பேச்சில் முக்கால்மணி நேரம் அல்லா ரசூலைப் பற்றி மூச்சிறைக்கப் பேசிவிட்டு உட்கார்ந்தார்களாம். அவர்களின் உஸ்தாது , ‘உன்னுடைய ஐந்து நிமிடப்பேச்சு நன்றாக இருந்தது’ என்று பாராட்டியிருக்கிறார்கள். ஐந்து நிமிடமா?! சர்க்கார் தன் சந்தேகத்தைக் கேட்க, ‘ஆமா.. அஞ்சு நிமிஷம்தான். இந்த ‘அல்லாஹ் ஜல்லஜலாலஹூ’, ‘எம்பெருமானார் ரசூலே கரீம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்’… இதெல்லாம் நீக்கிட்டா அஞ்சு நிமிசம்தான் உன் பேச்சு வரும்’ – சர்க்காரின் உஸ்தாதுக்கு சர்க்காரை விட வால் அதிகம்தான்.

*

இன்று காலை பக்கத்திலுள்ள பரங்கிப்பேட்டை நானாவை பார்க்கப்போனேன். அவர் அப்படியேதான் இருந்தார். ஜெயலலிதாவைப் போடவேண்டும்! எனக்கு என்னவோ சசிகலா மேல்தான் ஆசை என்று சொல்லிக்கொண்டே ‘மார்ச்’சிலேயெ இருந்த காலண்டரை ஏப்ரலுக்கு மாற்றினேன். ‘அட, மார்ச்சிலா இருந்திச்சி1’ என்றார். ஒரேயடியாக அவளைப் போட்டால் அப்படித்தான்! ‘Star’ல் இந்தியா-சௌத் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. பாகிஸ்தானாக இருந்தால் பற்றி எரிந்திருக்கும் துபாய். அப்படியே இருந்தாலும் பத்து நிமிடத்தில் – இன்றுபோல்தான் – திரும்பிதான் வந்திருப்பேன்.

(தொடரும்)

குறிப்புகள் :

முஸீபத் – துன்பம்
இஸ்ராயில் அலைஹிஸ்ஸலாம் – உயிரைப் பறிக்கும் மலக்கு (மலக்கு – வானவர், ஜின்)
தசுவமணி – தஸ்பீஹ் மாலை
பரக்கத் – சுபிட்சம்
குத்பா – பிரசங்கம்
ஹந்திரி – கந்தூரி
மொஹப்பத் – அன்பு, பிரியம்
சபர் – பிரயாணம்
சுக்ரு – தொழுகையில் ஒரு நிலை
புர்தா ஷரீஃப் – பூசரி இமாம் எழுதிய நபிப்புகழ்மாலை
யாநபி – நபிப்புகழ் மாலை. எழுந்துநின்று ஓதுவார்கள்
ஷைகு – செய்கு, குரு
முஸல்லா – தொழுகைவிரிப்பு
சாலிக்’கான – நல்ல சிஷ்யன்

2 பின்னூட்டங்கள்

  1. தாஜ்... said,

    05/09/2017 இல் 11:33

    எழுத்தா இது? அபீன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s