கணையாழியில் வந்த காதல் கதை!

‘நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது’

என்று ‘புத்தரின் படுகொலை’யை 1981-இல் எழுதிய கவிஞர் எம்.ஏ.நுஃமான் ஒரு காதல் கதையும் எழுதியிருக்கிறார், 1970-இல். நூலகம்தான் வேறு! கணையாழி பத்திரிகையின் முதல் 9 ஆண்டுகளில் வெளியான முக்கிய சிறுகதைகளுள் அதுவும் ஒன்று. தொகுப்பாசிரியர் அசோகமித்திரன்.  நம் ஹனீபாக்காவுக்கு அது கிடைக்க,  ‘என் அருமை ஆப்தீனுக்கு… இலக்கிய உலகம் நண்பர் நுஹ்மானை கவிஞனாக அறியும் அவர் கதைகளும் எழுதினார் என்பது பலருக்கும் தெரியாத சங்கதி 40 வருடங்களுக்கு முன் கணையாழியில் இந்தக் கதை பிரசுரமான போது நானடைந்த பரவசம் சொல்லி மாளாது இன்றும் அதே பரவசம். நவீன தமிழ் சிறுகதையின் மூலவர்களில் நுஹ்மானும் ஒருவரே. ஆபிதீன் பக்கங்களை அசத்துங்கள்’ என்று சொல்லி அனுப்பியும் வைத்தார். பதிவிடுகிறேன், காதலுடன்.

நுஃமான் அவர்களின் ‘தாத்தாமாரும் பேரர்களும் ‘ , ‘மழை நாட்கள் வரும்’ கவிதைத் தொகுதிகளை வாசித்துவிட்டு , கொஞ்சம் காதலும் செய்துவிட்டு, கீழேயுள்ள கதையை வாசியுங்கள்.

***

 சதுப்பு நிலம்

எம். ஏ. நுஃமான்

அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள்.

அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே பார்த்துக்… முகத்திற்கு அவளுடைய சிறிது தடித்த சிறிய உதடுகள் கவர்ச்சியாக இருந்தன. அவள் அடிக்கடி கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு எழுதினாள். அதனால் அவள் இதழ்கள் ஈரமாக இருந்தன. அந்த இதழ்களின் ஈரப் பொழுபொழுப்பு அவனைக் கவர்ந்தது. அவளுடைய இரு காதுகளின் மேற்பகுதிகளும் கூந்தலுள் மறைந்திருந்தன. அவள் பின்னல்களில் ஒன்று தோளில் இருந்து வழுவி முன்புறம் விழுந்து கொப்பியின் மீது பட்டும் படாமலும் ஆடியது. அவள் அதை இடது புறங்கையால் ஒதுக்கிவிட நிமிர்ந்தபோது அவளுடைய கண்கள் அவனைச் சந்தித்தன.

அவனுக்குச் ‘சுரீர்’ என்றது. தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்துவிட்டதைக் கண்டதும் அவன் கண்களை உயர்த்தி மேலே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு தனது மணிக்கூட்டையும் அத்னோடு ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னைப் பற்றி அவள் பிழையாக நினைக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அந்த நினைப்பு அவனைச் சுட்டது. அவள் அவ்வாறு நினையாமலும் இருக்கலாம். அவளுக்கும் என்னைப் பார்ப்பதில் ஒரு கவர்ச்சி உண்டாகி இருக்கலாம். நான் அவளைப் பார்த்ததனால் கவர்ச்சி கொண்டு அவள் மீண்டும் என்னைப் பார்க்கக்கூடும் என்றெல்லாம் அவன் நினைத்தான்.

எனினும் இனி அவளைப் பார்க்ககூடாது என்று அவன் உறுதி கொண்டான். தான் பார்க்காவிட்டாலும் அவன் தன்னைப் பார்ப்பாள் என்ற எண்ணத்தில் அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். கையில் இருந்த தமிழ்ப் பத்திரிக்கையைப் போட்டுவிட்டு ஓர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்க் கொண்டான். அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் சாதாரணமாக வாசிக்க முடியும். வாசிப்பது அரைகுறையாக விளங்கும். ஆயினும் அவன் அதை வாசிக்கத் தொடங்கினான். அடிக்கடி வாசித்ததை நிறுத்தி வாசித்ததை ஆழ்ந்து சிந்திப்பதுபோல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். எதையோ கண்டு மகிழ்ச்சியுற்றவன் போல முகத்தை மலர்ச்சி அடையச் செய்து கொண்டான்.

என்றாலும், ‘சே இது பெரிய கேவலம்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். சாதாரணமாக இருக்க முனைந்தான். காற்சட்டைப் பையில் இருந்த கைலேஞ்சியை எடுத்து முகத்தையும் கழுத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டான். பிறகு பத்திரைக்கையை வேகமாகப் புரட்டி அதில் உள்ள படங்களைப் பார்க்க முனைந்தான்.

ஆயினும், மனம் அலைபாய்ந்தது. அவள் இதற்கிடையில் தன்னைப் பார்த்திருக்கலாம் என்று அவன் கற்பனை பண்ணினான். இப்பொழுது அவள் என்ன செய்கிறாள்? உதட்டைக் கடித்துக் கொண்டிருக்கிறாளா இல்லையா? என்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. என்றாலும் அவன் பார்க்கவில்லை. தான் பார்ப்பதை அவள் பார்த்துவிட்டால் தன்னைப்பற்றி குறைவாக நினைப்பாள் என்று அவன் எண்ணினான். அது தனது ஆண்மைக்குப் பெரிய அவமானம் என்றும் அவன் கருதினான்.

அவள் யாராக இருக்ககூடும் என்றுகூட அவனுக்குத் தெரியாது. பல்ளி மாணவி என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது. பள்ளி விட்டதும் புத்தக் கட்டோடு வந்து ஏதோ குறிப்பு எடுக்கிறாள் என்பதும் தெரிந்தது. ஒருவேளை அவள், ‘அட்வான்ஸ் லெவல்’ படிக்கக்கூடும்; எங்கே படிக்கிறாளோ? வின்சன்தானே பக்கத்தில் இருக்கிறது. அங்கேதான் படிக்கக்கூடும் என்றெல்லாம் யோசித்தவாறே ஜன்னலூடு பார்வையைச் செலுத்தினான்.

பாலத்தின் ஊடாக ஒரு வைக்கோல் லொறி மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. சன்னல் நிலைப்படியில் ஒரு அடைக்கலக் குருவி வந்து நின்று ‘கீச்’ என்று இருமுறை கத்தியது. பிறகு எங்கோ வெளியே பறந்து சென்றது.

பக்கவாட்டில் கதிரைகள் இழுபடும் சத்தம் கேட்டது. அவர்கள் போவதற்காக எழுந்துவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். அவளைப் பார்க்கக்கூடாது என்ற உறுதியுடன் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினான். செருப்புச் சத்தங்கள் மெதுவாக ஒவ்வொரு அடியாகக் கேட்டன. தான் பார்ப்பதனாலோ பார்க்காமல் விடுவதனாலோ தனக்கோ அவளுக்கொ என்ன வந்துவிடப் போகின்றது என்று அவன் நினைத்தான். இது தனது பலஹீனம்தான் என்று யோசித்தபோது அவளைப் பார்க்கவேண்டும் இருந்தது.

அவள் கீழே குனிந்துகொண்டு ஒவ்வொரு அடியாக இறங்கிச் சென்றாள். கீழே செருப்புகளின் ஓசை கேட்டு மறைந்தது. அவனுக்கு நெஞ்சில் சிறிது உறுத்தலாகவும் பாரமாகவும் இருந்தது.  இது வெறும் அர்த்தமில்லாத உணர்ச்சி என்று அவன் நினைத்தாலும், அது அப்படித்தான் இருந்தது. அவள் பின்னலைத் தள்ளிவிடுவதற்காக நிமிர்ந்த அந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வாங்காது அவளுடைய கண்களை உற்றுப் பார்த்திருக்கலாம் என்று அவன் எண்ணினான். தான் பார்த்திருந்தால் அவளும் கண் கொடுத்திருக்கக் கூடும் என்று அவ ன் நினைத்தான். அவளுடைய பொழுப்பான கன்னங்களும் ஈரமான உதடும் எண்ணெய் பூசாத கூந்தலும் அவன் கண்ணுக்குள் நின்றன.

அவள் இருந்த கதிரையை வெறித்துப் பார்த்தான். இப்போது யாரைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஏனென்றால், அவன் பார்க்கும் இடத்தில் அந்தப் பெண்கள் இல்லை. கதிரைகள் காலியாகத்தான் இருந்தன. எழுந்து அவள் பின்னாலேயே சென்று பார்ப்போமா என்று யோசித்தான். கூடவே, உடனே சென்றான். நான் அந்தப் பெட்டைகளைப் பார்ப்பதற்காகத்தான் அவர்கள் பின்னால் எழுந்து செல்கிறேன் என்று மற்றவர்கள் நினைக்க்கூடும் என்ற எண்ணம் எழுந்தது.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். நாலரை மணி. ஐந்து மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் நிற்கவேண்டும். அவனுடைய சகோதரிக்கு நேற்று ஒப்பரேஷன் நடந்தது. அவளைப் பார்ப்பதற்காகத்தான் கல்முனையில் இருந்து காலையில் வந்தான். ஆறேகால் கல்லோயா எக்ஸ்பிரசில் திருப்பிப் போகவேண்டும். அவன் எழுந்து கீழே சென்றான். அவளும் தோழிகளும் பள்ளி வாசல் வாகையின்கீழ் நின்று கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நிற்கும்போது அவன் அவர்களைக் கடந்து போக விரும்பவில்லை. இப்போது போனால், ‘தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இவன் வருகிறான்’ என்று ஒருவேளை அந்தப் பெட்டைகள் நினைக்கக்கூடும் என்று அவன் எண்ணினான்.

வாசிகசாலைக்கு வெளியே நாட்டி இருந்த விளம்பரப் பலகையை வாசிக்கத் தொடங்கினான்.

பொது நூல் நிலையம்
மட்டக் களப்பு
திறந்திருக்கும் நேரம்…
மூடும் நேரம்…

என்று ஒவ்வொன்றாக வாசித்தான். அது அலுத்தபின் வெறுமையாகக் கிடந்து கோட்டடியையும் தூரத்தெரிந்த கச்சேரி மதிலையும் நகரசபைக் கட்டிடத்தையும் பார்த்துக்கொண்டு நின்றான். விளையாட்டு மைதானத்தில் ஏழெட்டுப் பெண் பிள்ளைகள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவளும் தோழிகளும் தபால் கந்தோரடியால் நடந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் சிறிது தூரம் நடந்து பள்ளிவாசலடிக்கு வந்தான். அவர்கள் நெடுக நடந்து கொண்டிருந்தார்கள்.

‘நெடுகப் போனால் அவளுகளைப் பின்தொடர்ந்து போவது போல இருக்கும். நாம் சென்றால் கொலிச்சால போவம்’ என்று அவன் குறுக்கு வீதியால் திரும்பி நடக்கத் தொடங்கினான். நெடுகவும் போய் இருக்கலாம் என்றும் ஒரு மனம் சொல்லியது. அவளுடைய இடை அசைந்து செல்லுவது மிகவும் அழகாக இருப்பதாக அப்போது அவன் நினைத்தன. ஆயினும் அவன் குறுக்கு வீதியால் நடந்து கொண்டிருந்தான். ‘இவளுகளப் பாத்தாத்தான் என்ன? பாக்காட்டித்தான் எனக்கென்ன? என்று நினைத்தவாறே அவன் தன்பாட்டில் நடந்தான்.

‘சே! எப்பவும் இப்படித்தான். நான் ஒரு மடையன்’ என்று அவன் வாய் முணுமுணுத்தது.

*

(கணையாழி / அக்டோபர்-நவம்பர் 1970)

*

நன்றி : எம்.ஏ. நுஃமான் , எஸ்.எல்.எம். ஹனிபா ,  கணையாழி

மௌனியுடன் ஒரு சந்திப்பு – எம்.ஏ. நுஃமான்

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் திறனாய்வுக் கட்டுரைகளிலிருந்து… (வெளியீடு : அன்னம் / முதற்பதிப்பு டிசம்பர் 1985). மௌனியின் சிறுகதைகள் பற்றிய தாஜின் கட்டுரை விரைவில் இங்கே வெளியாகும். அதற்கு முன்னோட்டமாக  இந்த சந்திப்பு. நன்றி : எம்.ஏ. நுஃமான் , நூலகம்

மௌனியுடன் ஒரு சந்திப்பு –  எம்.ஏ. நுஃமான்

30-12-1984 மாலை 5 மணி அளவில் மௌனியைப் பார்க்கப் போனேன். சென்னையில் க்ரியாவுக்குப் போயிருந்த போது தான் மௌனியும் சிதம்பரத்தில் இருப்பதாக அறிந்தேன். திலீப்குமார் அரைகுறையாகச் சொன்ன ஒரு விலாசத்தை இன்னும் அரைகுறையாகக் குறித்து வைத்திருந்தேன். வடக்கு வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் மூலையில் பிரியும் ஒரு தெரு. இலக்கம் 4. ஒரு மாடிவீடு என்ற குறிப்பு எனது டயரியில் இருந்தது. வீட்டைத் தேடிச் சென்ற போதுதான் வடக்கு வீதியும் தெற்கு வீதியும் சந்திக்காகவே என்ற உண்மை உறைத்தது. முதலில் கீழவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்துக்குப் போனேன். இரண்டொருவரிடம் விசாரித்தேன். அவர்கள் மௌனி பெயரைக் கேள்விப்பட்டதில்லை. தி.மு.க. அலுவலகத்தில் போய் விசாரித்தேன். அவரின் சொந்தப் பெயர் மணி, பழைய எழுத்தாளர் என்று சொல்லியும் அவர்களுக்கும் தெரியவில்லை. கிழக்கு வீதி தெற்கு வீதிச் சந்தியிலும் நிரந்தர வாசிகள் சிலரை விசாரித்தேன். அவர்களுக்கும் தெரியவில்லை. தெற்கு வீதி மேலை வீதிச் சந்தியிலும் அதன் முடுக்குகளிலும் சற்றுப்படித்தவர்கள் போல் தெரிந்த சில முதியவர்களைக் கேட்டுப் பார்த்தேன். நாலாம் இலக்க வீடு ஒன்றைத் தட்டி விசாரித்துப் பார்த்தேன். அவர்களுக்கும் மௌனியைத் தெரியவில்லை. கடைசியாக மேலவீதி வடக்கு வீதிச் சந்தியில் பிரியும் தெருவில் இறங்கினேன். எப்படியும் இங்கு மௌனியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தெருவில் சிறிது தூரம் போய் அது கிளை பிரியும் ஒரு சந்தியில் ஒரு வீட்டுக்காரரிடம் விசாரித்தேன். அவரும் மணி, மௌனி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கவில்லை. அங்கிலருந்து ஒரு மூன்று நான்கு வீடு தள்ளிச் சென்றேன். 4ஆம் இலக்கத்தில் ஒரு மாடி வீடு இருந்தது. கேற்றைத் திறந்து கொண்டு போனேன். ஒரு வயதான அம்மா வந்தார். மௌனி இருக்கிறார் என்று விசாரித்தேன். ‘உள்ளே வாங்க’ என்றார். மௌனி சிதம்பரத்தில் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கிறார் என்று நினைக்கின்றேன். அந்தச் சிறு நகரத்தில் அவரை, அவரது இருப்பிடத்தை அறிந்த ஒருவர் எனக்குச் சுலபத்தில் அகப்படவில்லை. மில் மணிஐயர் என்று விசாரித்திருந்தால் சில வேளை தெரிந்திருப்பார்கள் என்று பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது.

மௌனிக்கு ஒரு அறுபது வயது இருக்கலாம் என்பதாக எனக்குள் ஒரு எண்ணம். முப்பதுகளில் எழுதத் தொடங்கயவருக்கு அதைவிட அதிகம் இருக்கும் என்ற உண்மை மௌனியைக் காணும்வரை எனக்கு ஏனோ தோன்றவே இல்லை. மௌனி முதுமையின் அரவணைப்பில் இருந்தார். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவகைப் பார்க்கும் இயல்பான திகைப்போடு என்னைப் பார்த்ததும் இருக்கையில் இருந்து மெல்ல எழும்பினார். வயிறு ஒட்டி உடல் தளர்ந்து போய் இருந்தது. இலங்கையன் என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சிக்காக வந்திருப்பதாகச் சொன்னேன். தன்னுடைய படிப்பறைக்குள் என்னைக் கூட்டிச் சென்றார். அடிமேல் அடிவைத்து மெல்ல ஊர்ந்து நடந்து வந்தார். வயது எண்பதாகி விட்டது. ஒரு கண் பார்வை முற்றிலும் போயிற்று. மறு கண்ணும் பெரிதும் மங்கிவிட்டது என்றார். அடங்கிய குரலில் அவர் கூறுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டி இருந்தது.

ஈழத்து இலக்கிய முயற்சிகள், எழுத்தாளர்கள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம் ஆகியோர் உங்கள் காலத்தில் எழுதினார்களே, அவர்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். அவருக்கு அவர்கரளத் தெரிந்திருக்கவில்லை. போர் முரசோ ஏதோ ஒரு புத்தகம் தனக்கு அனுப்பப்பட்டதாகவும். ஒரே உணர்ச்சி மயம், அங்கு அப்படித்தான் எல்லோரும் எழுதுவார்களோ என்று கேட்டார். அவர் குறிப்பிட்டது தளைய சிங்கத்தின் ‘போர்ப்பறை’ நூலை என்று புரிந்து கொண்டேன். அவர் சொல்வதுபோல் அப்படி ஒன்றும் உணர்ச்சிமயமான புத்தகம் அல்ல அது.

ஆங்கிலம்தான் அவர் படித்ததெல்லாம். கல்லூரியில் தமிழ் முறையாகப் படித்ததில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். அவருடைய மேசையிலும் ஷெல்பிலும் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. ஊசநயவழைn யனெ னளைஉழஎநசல என்று நினைக்கிறேன். ஒரு இலக்கியத் திறனாய்வுப் புத்தகத்தைக் காட்டினார். அது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமானது. நெடுங்காலமாக அவருடைய உடமையாக இருந்து வருவதாகத் தோன்றியது. அந்தப் புத்தகத்தை நான் படித்ததில்லை. அதுபற்றி அவருக்கு மிக உயர்ந்த எண்ணம் இருப்பது தெரிந்தது. அந்தப் புத்தகத்தை அடியொற்றி விமர்சகனும் ஒரு படைப்பாளிதான் என்ற கருத்தை வலியுறுத்திச் சொன்னார். உசநயவiஎந றசவைவநச என்பது போல் உசநயவiஎந உசவைiஉ என்று சொன்னார். ஒரு படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வு இல்லாத ஒருவன் ஒரு சிறந்த விமர்சகனாக முடியாது என்ற பொருளிலேயே அவர் அந்தப் பதத்தைக் கையாண்டார் என்று நினைக்கின்றேன்.

இலக்கியம் மட்டுமன்றி, தத்துவம், பண்பாடு, நாகரீகம் என்றெல்லாம் அவரது படிப்பார்வம் விரிவானது என்று தெரிந்தது. தென் அமெரிக்க அஸ்ரேக் (யுணவநஉ) நாகரீகம் எகிப்திய பிரமிட்டுக்கள் பற்றிய புத்தகங்களைக் காட்டினார். அதில் இருந்து சில பகுதிகளை எனக்குப் படித்துக் காட்டுவதற்குச் சிரமப்பட்டார்.

தனது குடும்ப நிலை பற்றிக் கொஞ்சம் சொன்னார். ஒரு உள்ளாந்த சோகம் அவரைக் கவிந்து கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டு மகன்கள் அகாலமாக விபத்தில் இறந்து விட்டார்கள். இன்னொருவர் தத்துவத்தில் எம்.ஏ. படித்து விட்டு மனக்கோளாறோடு வீட்டில் இருக்கிறார். இன்னொரு மகன் எம். எஸ். சி., பி. எச். டி. அமெரிக்காவில் இருக்கிறார்.

பிச்சமூர்த்தி, கு.ப.ரா. பற்றியும் சில செய்திகள் சொன்னார். பிச்சமூர்த்தி ஒரு சமயம், ஏதோ ஒரு பத்திரிகையில் தான் ஏன் தாடி வளர்க்கிறேன் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தாராம். அதைப் படித்தாயா என்று மௌனியைக் கேட்டிருக்கிறார். பார்த்தேன். படிக்கவில்லை. தாடி ஏன் வளர்கிறது என்று எழுதியிருந்தாயானால் படித்திருப்பேன் என்று மௌனி பதில் சொன்னாராம். அதற்குப் பிறகு அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பிச்சமூர்த்தி தன்னுடன் பேசுவதில்லை என்றார்.

மௌனி இப்போது எதுவுமே படிப்பதில்லை. முதுமையும் பார்வைக் குறைவும் அதற்கு அனுமதிப்பதில்லை. அடிக்கடி இலக்கிய நண்பர்கள் யாரும் வருவதில்லை. சமகாலத்தில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவருக்கு எதுவும் டிதரியாது அவர் தனக்குள் தன்னுடைய கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். தன்னைப் பற்றி தனது படைப்புக்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நிகழ்காலம் இல்லாது போய்விட்டதை உணர வருத்தமாக இருந்தது.

இடையில் மனைவியை அழைத்து கோப்பி வரவழைத்துத் தந்தார். குடித்துக் கொண்டிருக்கும் போதே ஷெல்பைத் திறந்து அழியாச்சுடர், மௌனிகதைகள் ஆகிய தொகுதிகளை எடுத்து வந்தார். அவருடைய கதைகள் பற்றி எங்களுடைய பேச்சுத் திரும்பியது. தன்னுடைய கதைகள் எதற்கும் தான் தலைப்பு வைத்ததில்லை என்றும் எல்லாம் பத்திரிகைக்காரர்களே வைத்த தலைப்புக்கள் என்றும் சொன்னார். தீபத்தில் வெளிவந்த பேட்டியிலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஞாபகம். அவருடைய பெரும்பாலான கதைகளுக்குப் பி. எஸ். ராமையாவே தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்ததாக பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.

தனது கதைகளைத் தான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுவதாகச் சொன்னார். ஒரே இருப்பில் முடியாவிட்டால முடிந்த அவ்வளவும்தான் கதை என்றார். டால்ஸ்டாய் போன்ற பெரிய எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைப் பலமுறை திருத்தித் திருத்தி எழுதுவார்களாமே, டால்ஸ்டாய் தனது புத்துயிர் நாவலை ஏழுமுறை திருப்பி எழுதியதாகச் சொல்கிறார்களே, நீங்கள் அப்படிச் செய்வதில்லையா என்று கேட்டேன். இல்லை என்றார். செப்பனிடும் பழக்கம் இல்லை என்றும் ஒரே முறையீல் எழுதுவதுதான் என்றும், எழுத்துப் பிழைகள் இருந்தால் அதைத் திருத்திக் கொள்வார் என்றும் சொன்னார். ஒரு பத்திரிக்கைக்காகத் தான் எழுதிய ஒரு கதையில் அதன் கதாநாயகன் இறந்து விடுவதாக எழுதியதாகவும் அந்தப் பத்திரிகை ஆசிரிய நண்பர் அதை மாற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று அதை மாற்றி எழுதும்படி கேட்டதாகவும் முடியாது என்று தான் அதைக் கிழித்துப் போடப் போனதாகவும், வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி அவர் அதை வாங்கிப் போனதாகவும் மௌனி கூறினார். அது எந்தக் கதை, பத்திரிகாசிரியர் யார் என்று அவர் கூறவில்லை நானும் அதைக் கேட்கவில்லை.

மௌனியின் மொழியில் விசேட வழக்குகள் பல இருப்பதைக் குறிப்பிட்டு உங்கள் மொழி நடையைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து என்று சொன்னார். எனினும் காதல் கொண்டான் அல்ல, காதல் கண்டான் என்றுதான் நான் எழுதுவேன் என்றார். மௌனி கதைகள் நூலில் சில பக்கங்களைப் புரட்டி அப்படிப்பட்ட சில இடங்களைக் காட்டினார். ‘பிரக்ஞை வெளியில்’ கதை இப்படி முடிகிறர். “அப்பிடியாயின் ஒரு வகையில் காதல் கண்டபெண் கலியாணமாகாத கைம்பெண் என்ற அபத்தம் தானே” காதல் சாலையின் முடிவையும் எடுத்துக் காட்டினார். அது இப்படி முடிகிறது. “நேருக்கு நேரே காதலைக் கண்டதே போறும், கண்டதன் கதிபோறும். கண்டவரின் கதிபோலும்”.

இப்போது அவரால் எழுதவோ வாசிக்கவோ முடிவதில்லை என்றார். எழுத வேண்டும் போல் இருந்தால் யாரையும் கொண்டு சொல்லச் சொல்ல எழுதுவிக்கலாமே என்றேன். அப்படி டிக்டேட் பண்ணுவது எழுத்தல்ல என்றார். மௌனி கதைகள் முதல் தொகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இரவலாகப் படித்ததுதான். இப்போது அது கிடைப்பதில்லை. மேலதிகப் பிரதிகள் இருந்தால் ஒன்று தர முடியுமா என்று கேட்டேன். தன்னுடைய புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை என்றும் யார் விரும்பினாலும் அவற்றை மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னார். அவரிடம் மௌனி கதைகள் இரண்டு மூன்று மேலதிகப் பிரதிகள் இருந்தன. அது நிறையப் பிழைகளுடன் அச்சாகி இருக்கின்றது என்றார். தன் கைப் பிரதியில் பல இடங்களில் வெட்டித் திருத்தி இருந்தார். ஒரு பிரதியில் நடங்கும் கரத்தினால் கோணல் மாணலான ஆங்கிலத்தில் றiவா வாந டிநளவ ழக றiளாநள வழ ஆ. யு. ரோஅயn என்று எழுதி கையெழுத்திட்டுத் தந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவருடன் இருந்திருப்பேன். மீண்டும் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றேன். ஆனால் மீண்டும் சந்திக்க முடியாமலே போகும் என்று அப்போது தோன்றவில்லை.

2
அன்று இரவு மௌனி கதைகளுக்கு தருமு சிவராமு எழுதியிருந்த முன்னுரையை வாசித்தேன். ஒரு செய்தி முக்கியமாகப்பட்டது. அவர் அதில் இப்படி எழுதியுள்ளார்.

மௌனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின் அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில் ஏற்கிறார்: “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” (அழியாச்சுடர்) என்ற வரியில் ‘எவற்றின்’ என்ற சொல் தவறு, ‘எவைகளின்’ என்பதே சரி என ஒருவர் மௌனியிடம் சொன்னாராம். மௌனி அச் சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுமான சப்தமே அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது எனக் காணலாம். தம் கதைகளில் பலவற்றை பல தடவைகள் வேறு வேறு சொற்பிரயோகங்களுடன் திரும்பத் திரும்ப எழுதி, முக்கியமான இடங்களைச் சீராக்கும் மௌனியைப் பற்றி ‘சரி – தப்பு’ பார்ப்பவர்கள் கொஞ்சம் நிதானித்து தங்கள் அபிப்ராயங்களைச் சொல்வது நல்லது” (அடிக்கோடு என்னுடையது). இங்கு மௌனி தனது கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிச் செப்பனிடுபவர் என்ற கருத்தே முக்கியமானது. மௌனி தனது கலைமுறை பற்றி என்னிடம் நேரில் சொன்னதற்கும் தருமு சிவராமு இங்கு எழுதியிருப்பதற்கும் இடையே பெரிய முரண்பாடு இருப்பதைக் கண்டேன். அடுத்த முறை சந்திக்கும்போது இதுபற்றி மௌனியுடன் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். இதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு வெங்கட் சாமிநாதனின் என் பார்வையில் படிக்கக் கிடைத்தது. ‘மௌன உலகின் வெளிப்பாடு’ என்ற தலைப்பில் மௌனி பற்றி ஒரு நீண்ட கட்டுரை அதில் இடம் பெற்றுள்ளது. தருமு சிவராமு போல், இன்னும் சற்று அழுத்தமாக அதில் அவர் இப்படி எழுதியுள்ளார்:

‘மௌனி எழுத உட்கார்ந்தால் கடுமையாக உழைப்பவர். பலமுறை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவார். ஏனெனில் பேனாவை எடுத்து எழுத உட்கார்ந்தால் அவர் தனது வேலையில் மிகத் தீவிரமான சிரத்தை கொள்பவர். ஏதோ ஒன்றை ஒருமுறை எழுதி, அத்துடன் அவர் திருப்தி அடைந்தார் என் ஒருமுறை கூட நிகழ்ந்ததில்லை. கடைசித்தேறி நெருங்கும் வரை, அது அனுமதிக்கும் வரை, பிரசுர கர்த்தரின் பொறுமை எல்லை கடந்து சோதிக்கப்படும் வரை திருத்தம் செய்துகொண்டே இருப்பார்.

சாமிநாதன் சொல்வதன் உண்மை பொய் எவ்வாறு இருப்பினும் அவர் விஷயத்தை நன்கு மிகைப்படுத்திச் சொல்கிறார் என்றே தோன்றுகின்றது. மௌனி ஏராளமாக எழுதிக்குவித்தவர் அல்ல. மொத்தமாக 23கதைகள் தான் எழுதியிருக்கிறார். 1936, 37ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. மற்றவையெல்லாம் நீண்ட இடைவெளிகளில் எழுதியவை. 60க்குப் பிறகு நாலோ ஐந்து கதைகள் தான் எழுதியிருக்கிறார். எந்தப் பிரசுர கர்த்தாவும் மௌனியின் கதைகளுக்காகத் தவம் இருந்ததாக சொல்லமுடியாது. அவ்வகையில் பிரசுர கர்த்தாக்களின் கெடுவை மீறி அவர்களின் பொறுமையைச் சோதிக்கும் வாய்ப்பு மௌனிக்கு இருந்ததாகவும் சொல்லமுடியாது. சிலவேளை கசடதபறவுக்குக் கதை பெறுவதற்கு இவர்கள் அப்படிச் சிரமப்பட்டிருக்கக்கூடும். மற்றபடி புதுமைப்பித்தனைப் போல், பி.எஸ். ராமையா போல் பத்திரிகைகளின் நெருக்குதல்களுக்கா எழுதிக்குவித்தவர் அல்ல மௌனி. தவிரவும் தருமுசிவராமுவும் சாமி நாதனும் மௌனியின் எழுத்து முயற்சிகளை நேரில் அறிந்தவர்களை போலவே எழுதுகின்றனர். 60களில் தான் இவர்கள் மௌனியைச் சந்தித்தார்கள் என்று நம்புகிறேன். அந்நேரம் மௌனி தான் எழுதுவதைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டார். இவர்களுடைய இலக்கியப் பிரவேசத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தனது பெரும்பாலான கதைகளை எழுதி முடித்துவிட்டார். ஆகவே மௌனி தனது பெரும்பாலான கவிதைகளை மீண்டும் மீண்டும் திருத்தி செப்பனிட்டு எழுதினார் என்பதை இவர்களுக்கு நேரில் அறியும் வாய்ப்பு இருக்க பெரும்பாலும் நியாயம் இல்லை. இது பற்றி மௌனி அவர்களுக்கச் சொல்லி இருந்தால் தான் உண்டு. அல்லது அவரது திருத்தப்பட்ட கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்திருந்தால் தான் உண்டு. ஆனால் இது பற்றி என்னால் திடமாக ஒன்றும் சொல்ல முடியாது. மௌனி என்னிடம் சொன்ன தகவலை வைத்துக்கொண்டு பார்க்கும்போது இவர்கள் சொல்பவை மிகவும் முரண்பாடாகத் தோன்றுகின்றன. எனக்கு இது ஒரு முக்கியமான விஷயமாகப் படுகின்றது. மௌனி பிரக்ஞை பூர்வமாகத் தன் மொழியைக் கையாண்டாரா இல்லையா என்பது அவரது படைப்புகள் பற்றிய மதிப்பீட்டில் முக்கிய பங்காற்றக்கூடிய ஒன்றாகும். நிறையப் புதுமாதிரியான பிரயோகங்கள் நிறைந்த அவருடைய மொழியில் அவை அவருடைய பிரக்ஞைபூர்வமான புத்தாக்கமா (inழெஎயவழைn) அல்லது அவருடைய வழுவா என்பதை நிர்ணயிப்பதில் இது முக்கியமானது. சல சொற்பிரயோகங்களைப் பொறுத்தவரையில் மௌனி பிரக்ஞை பூர்வமாகவும் பிடிவாதமாகவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. நான் முன் குறிப்பிட்ட ‘காதல் கண்ட’ என்பதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். கொள், காண் என்ற வினைச் சொற்களை அபரிமிதமாகவும் தமிழுக்குப் புதுவிதமான அமைப்புக்களிலும் (உழளெவசரஉவழைளெ) இவர் கையாண்டுள்ளதையும் கூறலாம். உதாரணமாக ‘இரவு கண்டு விட்டது’ ‘காலை காண ஆரம்பித்தது’ போன்ற வாக்கியங்களைக் காட்டலாம். (மனக்கோலம்) தமிழிலே காண் என்பது செயப்படு பொருள் குன்றிய வினையாகப் பயன்படுத்தியுள்ளார். இது ஒரு வழுப்போல் தோன்றினாலும் இதை அவருடைய புத்தாக்கம் என்று நாம் அங்கீகரிக்கலாம். ஆனால் வாக்கிய அமைப்பில் எப்போதும் அவர் பிரக்ஞைபூர்வமாக இருந்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. அவருடைய வாக்கியங்கள் பல தாறுமாறாக உள்ளன. அவருடைய வசனம் எளிமையானது என்று சொல்கிறார்கள். ஆனால் அவரைப்போல் தெளிவில்லாத வசனம் எழுதியவர்கள் தமிழில் வேறுயாரும் இல்லை. அவர் சொல்ல நினைத்த பலவற்றைச் சொல்வதற்குப் பல சந்தர்ப்பங்களில் அவருடைய மொழித்திறன் தடையாக இருந்திருப்பதை உணர முடிகிறது. கவிதை போன்ற அற்புதமான வசனங்கள் அவருக்குச் சாத்தியமாகி இருக்கின்றன என்பதில் ஐயம் இல்லை. ஆனால் கரடுமுரடான வசனங்களும் அவரிடம் ஏராளம் உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு ஒன்று தருகிறேன். “அவ்வேளைகளில் அவன் தவறாது மேற்குப் பார்த்த அ;நத ஜன்னலின் முன் நிற்பான். சிலசமயம் அவன் பார்வையில் குறுக்காக அவளைக் கோவிலுக்குப் போகப் பார்க்க நேரிடுவதும் உண்டு”. (மனக்கோலம்). இதில் வரும் இரண்டாவது வசனம் மிகவும் தாறுமாறானது. இங்கு அவர் சொல்ல வருவது அவன் ஜன்னலில் நிற்கும் போது, சில சமயம் அவள் கோவிலுக்குப் போவதைப் பார்க்க நேரிடுவதும் உண்டு அல்லது அவள் என்பதுதான். ஆனால் மௌனியின் மேற்காட்டிய வசனம் எவ்வகையிலும் புத்தாக்கம் அல்ல. தமிழின் வாக்கிய அமைதிக்குக் கட்டுப்படாதது. அதனால் குழப்பமானது. பொருள் தெளிவற்றது@ வழுவானது. அவர் தனது மொழியில் பூரண பிரக்ஞையுடன் இருந்திருந்தால் இத்தகைய கட்டற்ற வசனங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று எனக்குத் தோன்றுகின்றது.

மௌனியை மீண்டும் சந்திக்கும் போது இதுபற்றி விளக்கமாக அறிய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். உடனே அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இலங்கைக்குப் போய்விட்டேன். ஜுன் 5ஆம் தேதிதான் திரும்பி வந்தேன். அந்த வார இறுதியில் மௌனியை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அது முடியாமலே போயிற்று. 5ஆம் தேதி அவர் காலமான செய்தியை மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தியன் எஸ்பிறஸ் மூலம் அறிந்தேன். எனது சந்தேகங்கள் பற்றி மௌனி மூலம் தெளிவுப்படுத்திக் கொள்ள இனி வாய்ப்பே இல்லை.

மௌனியின் மறைவுக்குப் பிறகு தாய் சஞ்சிகை 30—85 இதழில் அவரைப் பற்றிய சிலரின் கருத்துக்களை வெளியிட்டிருந்தது. அவற்றுள் கி.அ. சச்சிதானந்தன் மௌனியோடு நன்கு பழகியவர். மௌனி கதைகள் நூலை வெளியிட்டவர். அவர் இவ்வாறு சொல்லியுள்ளார்.

“(மௌனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”

தருமு சிவராமு, வெங்கட் சாமிநாதன் ஆகியோர் கருத்துடன் சச்சிதானத்தனின் கருத்தும் ஒத்திருக்கின்றது. சச்சிதானந்தனுக்கும் மௌனியின் எழுத்தை நேரில் அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காதுதான். ஆனால் அவர் மௌனியின் கை எழுத்துப் பிரதிகள் பலவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கதையைத் திரும்பத் திரும்ப வெட்டி, திருத்தி, மாற்றி எழுதிய மௌனியின் கைப்பிரதிகள் அவரிடம் இருந்தால் அது அவருக்கு ஒரு நல்ல ஆதாரமாக இருக்கும். அதைச் சச்சிதானந்தன் வெளிப்படுத்துவாராயின் அது இலக்கிய ஆய்வாளருக்கும், விமர்சகருக்கும் பயனுடையதாக இருக்கும். இவர்கள் சொல்வது உண்மையெனில் தமிழ் வாக்கியத்தை லாவகமாகவும் வழுவின்றியும் கையாள்வதில் மௌனிக்கு இயல்பான சில தடைகள் இருந்தன என்பது உறுதிப்படுவது ஒருபுறம் இருக்க, மௌனி ஏன் என்னிடம் வேறு மாதிரியாகக் கூறினார் என்பது என்னைத் தொடர்ந்து சங்கடப்படுத்திக் கொண்டே இருக்கும்.
செப்டம்பர் – 1985.

***

நன்றி : எம்.ஏ. நுஃமான் , நூலகம்