மகளுக்கு வாழ்த்து சொன்ன மதுமிதா

‘மகள்க்கு’ படத்தில் மஞ்சரி பாடிய ‘முகிலின் மகளே’ பாடலை நேற்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த பாடல்களுள் ஒன்று. அவருக்கு அப்போது ஸ்டேட் அவார்ட் வாங்கிகொடுத்த பாடல் . ‘Anyone can sing the first two lines. But after that, it’s really difficult. It was a challenge and I really worked hard on the song under the guidance of Ramesh Narayan sir. Another favourite song of mine is `Parayaan maranna paribhavam,’ a similar song in `Garshom.’ என்று ‘பறைவார்’ மஞ்சரி.   அட, என்னைப்போலவே இந்த ‘பறயான் மரந்ன’வும் இவருக்கு பிடிக்கிறதே.. !  கேட்கும்போதெல்லாம் அழவைக்கிற இன்னொரு பாடலாயிற்றே அது.  ஹரி ஹரிதான்! சரி,  எனது மகளார் அனீகா நிலோஃபரின் பிறந்த நாளுக்கு கவிதாயினி மதுமிதாஜீயும் நண்பர் ஹரன் பிரசன்னாவும் முன்பு எழுதிய வாழ்த்துகள் ஞாபகம் வந்தது. அதைப் பதிகிறேன். செல்ல மகளாரின் பிறந்தநாள் நவம்பர் 28தான். ஆனால், ‘நதீமுக்கு மட்டும் ரெண்டு பதிவா?’ என்கிற அவரது நேற்றைய கோபத்தை இன்றே தணிப்பது மிக அவசியம். மகளிர்..!

**

முதலில்  – ‘இது ‘முகிலின் மகளே’ பாடலின் மெட்டில் எழுதிய பாடல். பாடலின் மொழிபெயர்ப்பல்ல’ என்று சொல்லும் – மதுமிதா :

உயிரின் உயிரே உருகும் உறவே
கண்ணில் மின்னும் நெஞ்சில் வாழும்
புண்ய தீஞ்சுடரே
உன்னைச் காணாது கண்கள் சோர்ந்து
உள்ளம் கொதிக்க ஜென்மம் வீணே
உயிரின் உயிரே

என்றோ சேர்கையில் பூபாளம் தென்றலாய் இசைமீட்டும்
வந்தே தூவிடும் தூறல்களாய் பூமியும் கரகோஷமிடும்
மாலை நேர மந்த்ரம் தானே மென்னிதழாம் காதல்                    (உயிரின் உயிரே)

வந்தே மனதில் ஒரு கனவாய் தந்திடும் உருவம் தோற்றம்
காணும் கண்ணில் மதன காவியம் தேடி வந்த தருணத்தே
சேரவந்தேன் வேர்த்தேஓடி நீவியணைத்தாய் பூஞ்சொர்க்கம்       (உயிரின் உயிரே)

***

இப்போது ஹரன்பிரசன்னா . ‘ஆபிதீன், எனது முயற்சி! யார் எந்த நாட்டில் மாட்டிக்கொண்டாலும் பரவாயில்லை.
இந்தப் பாடலைப் படித்துவிடுங்கள். 🙂 உங்கள் மகளுக்கு வாழ்த்துகள். இதை எழுத 45 நிமிடங்கள் ஆனது. பாடலை 6 முறை கேட்டேன். (எக்ஸெலெண்ட் சாங்.) முதல் நான்கு வரியிலேயே ஒரு பிடி கிடைத்துவிட்டது. அப்புறம் படபடவென தட்டிவிட்டேன். எங்காவது சந்தம் தப்பினால், ஸாரி, அது பாடகரின் குறை. நான் எழுதியது சரியாகத்தான் இருக்கமுடியும். 😛 அப்படியும் சரியாக வரவில்லையென்றால்  இடையில் மானே தேனேல்லாம் போட்டுப்பார்க்கவும்’ என்றார் பிரசன்னா!

அழகின் மகளே
பொழியும் நிலவே
கண்ணினுள்ளே வந்து வாழும்
தாயின் பெண்ணுருவே
உன்னைக் காண
அள்ளிச் சேர்க்க
நெஞ்சு தவிக்க
கண்ணினுள்ளே அழகின் மகளே

உந்தன் பார்வையில் வானெங்கும் மேகமாய் பூத்திருக்கும்
உந்தன் வார்த்தையில் பூவெல்லாம் மாலையாய் கோர்த்திருக்கும்
அந்திநேரம் மஞ்சள் வானம்
உன்னைக்கண்டே நீர்தெளிக்க (அழகின்)

உந்தன் சிரிப்பை பூமியிலே சோலை வந்து பார்த்திருக்கும்
எந்தன் வாழ்க்கைப் பாதையிலே சொர்க்கம் வந்து காத்திருக்கும்
வானவில்லின் நிறங்களெல்லாம்
உன்னைக்கண்டே பூவிறைக்க  (அழகின்)

 **

நன்றி : மதுமிதா, பிரசன்னா , ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமம்