பீம்சென் ஜோஷி – பாலமுரளி கிருஷ்ணா

Download

கேட்டீர்களா என்றும் என்னை மயக்கும் பீம்சென் ஜோஷியின் குரலை?

’என்ன ரசிகன் நீ!’ என்று கேலியாகக் கேட்டதுபோல இருந்தது – இன்று காலையில் அலமாரியைக் குடைந்தபோது கிடைத்த – கல்கியில் (Feb2011) வெளியான – அஞ்சலி. ’நிஜமாகவே நீங்க எனக்கு குருதான்!’ என்று அவர்கள் கொடுத்திருந்த தலைப்பு  பிடிக்கவில்லை. சோம்பலை மூட்டைகட்டிவிட்டு உடனே டைப்செய்து பதிவிடுகிறேன். சொல்வனத்தில் வெளியான சேதுபதி அருணாச்சலத்தின் கட்டுரை விரிவாகப் பேசியிருந்தாலும் பீம்சென் ஜோஷியின் மரணத்திற்கு எழுதப்பட்ட மிகச் சிறப்பான அஞ்சலி நண்பர் சுகுமாரனுடையதுதான். காலச்சுவடில் வந்திருந்தது.  ’பிரபல சரோத் கலைஞரான அலி அக்பர்கான் ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் “இந்த நூற்றாண்டின் கடைசிப் பாடகர் பீம்சேன் ஜோஷி. இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர்தான் இதைப் போன்ற கலைஞன் உருவாவது சாத்தியம்”. அப்படியானால் நான் வணங்கியது பீம்சேன் ஜோஷியை அல்ல; ஒரு நூற்றாண்டின் இசையை.’ என்று முடிவாகச் சொல்லியிருப்பார். அதைவிட நான் என்ன பெரிதாக சொல்லிவிடப் போகிறேன்?  பாலமுரளிகிருஷ்ணா  சொல்லும் அந்த கன்னட சினிமாப் பாடலை டவுன்லோட் செய்தி வைத்திருந்தேன் முன்பு, சட்டென்று சுட்டி இப்போது கிடைக்கவில்லை. பிறகு இணைக்கிறேன். கல்கி இதழுக்கும் கட்டுரை வடிவம் கொடுத்த நண்பர் எஸ். சந்திர மௌலிக்கும் நன்றி. – ஆபிதீன்

***

பீம்சென் ஜோஷி – அஞ்சலி : பாலமுரளி கிருஷ்ணா

ஹிந்துஸ்தானி இசை மேதை பீம்செனும் நானும் சேர்ந்து நூற்றுக்கும் அதிகமான ஜுகல்பந்தி கச்சேரிகள் செய்திருக்கிறோம். அதில் பத்து ஜூகல் பந்திகள் அமெரிக்க நகரங்களில் நடந்தவை; அந்த நிகழ்ச்சிகளில் நான் கர்நாடக இசையையும், அவர் ஹிந்துஸ்தானி இசையையும் அளித்தோம் என்பதை விட, நாங்கள் இருவரும் இணைந்து உலகளாவிய ரசிகர்களுக்கு இந்திய இசையை வழங்கினோம் என்ற நினைவு பசுமையாக இருக்கும்போது ஹிந்துஸ்தானி இசை மேதை பீம்சென் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை.

அவரை நான் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முனால் முதல் தடவையாகச் சந்தித்தேன். தஞ்சாவூருக்கு வந்து கர்நாடக இசை கற்றுக்கொள்ளும் ஓர் இளைஞனின் கதையை கன்னடத்தில் படமெடுத்தபோது, நான் அதற்கு இசையமைப்பாளர். அதில் பீம்சென் ஜோஷி ஒரு பாட்டுப்பாட வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்பினார். ஜோஷியும் சம்மதித்தார். ரெக்கார்டிங் பெங்களூருவில் நடந்தது.

ஹீரோவுக்கு, குரு பாட்டுச் சொல்லிக் கொடுப்பது போல படத்தில் ஒரு சீன். குருவுக்காக நானும், சிஷ்யனுக்காக அவரும் பாடும் பாடலுக்கான ஒலிப்பதிவுதான் அன்றைக்கு. பீம்சென் ஜோஷியைவிட நான் வயதில் சிறியவன் என்பதால் தயக்கத்துடன் பாடச் சம்மதித்திருந்தார். பாட்டுச் சொல்லித் தருவது போன்ற பாட்டு என்பதால், குரு சொல்லித் தருவது, சிஷ்யனுக்குச் சரியாகப் பாட வராது. அதை குரு திருத்துவது போல இருந்தால்தான் இயற்கையாக இருக்கும். ஆனால் எனக்கு தப்பாய் பாடி பழக்கமில்லை. ஆகவே, ரெக்கார்டிங்குக்கு முன்னால் ஒத்திகை பார்த்துவிடலாமா?’ என்றார். ‘சிஷ்யன்’ என்றால் தப்பாகத்தான் பாட வேண்டும் என்ற கட்டாயமில்லை. என்னைவிட நன்றாகப் பாடும் சிஷ்யர்கள் எனக்கு இருக்கிறார்கள். சிஷ்யன் நன்றாகப் பாடினால் குருவுக்குச் சந்தோஷம்தான்! எனவே ஒத்திகை அவசியமில்லை’ என்று சொல்லிவிட்டு நேரே ரெக்கார்டிங்கை ஆரம்பித்தோம்.

நான், கர்நாடக இசை கமகங்களை ஆரம்பிக்க, சட்டென்று அவரால் சுத்தமான கர்நாடக சங்கீதம் பாட முடியவில்லை. நான் தவறைத் திருத்த, அவர் சரியாகப் பாட, அப்படியே பாடல் இயற்கையாக ஒலிப்பதிவானது. ஒலிப்பதிவு முடிந்ததும் , என் கைகளைப் பிடித்துக் கொண்டு. ‘தம்பி! நிஜமாகவே நீ எனக்குக் குருதான்!’ என்றார். எவ்வளவு பெரிய மனசு வேண்டும்?

பல வருடங்கள் கழித்து. ஒரு நாள் ஜோஷியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தன் குரு சவாய் காந்தர்வா நினைவாக பூனாவில் நடத்தும் ஓர் இசை விழாவில் நான் பாடவேண்டும் என்று அழைத்திருந்தார். உடனே நான் என் சம்மதத்தைத் தெரிவித்தேன். கச்சேரிக்கு நான் பூனா போய் இறங்கியபோது என்னை அழைத்துப் போக அவரே, தானே காரை ஓட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்.

அவருக்கு கார்கள் மீது அபாரக் காதல். ‘நான் இசைக்கலைஞராக ஆகாமல் இருந்திருந்தால், ஒரு திறமையான மெக்கானிக்காக கார்களுடன் என் வாழ்க்கையைக் கழித்திருப்பேன்’ என்று சொல்லுவார். எனக்குக் கூட அவரைப் போலவே வேகமாக கார் ஓட்டுவது ரொம்பப் பிடிக்கும்.

அன்று இரவு பத்து மணிக்குக் கச்சேரி. பிரம்மாண்டமான பந்தலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். அரங்கத்தில் கச்சேரிக்கு முன்னால், என் கூட உட்கார்ந்து தம்புராவுக்கு ஸ்ருதி சேர்த்தார். நான் மேடைக்குப் போனபோது ஒரு கையில் தம்புராவை, தானே எடுத்துக்கொண்டு கூடவே வந்தார். மேடையில் அமர்ந்தவுடன், அவரும் எனக்குச் சற்று பின்னால் தம்புரா சகிதம் உட்கார்ந்துவிட்டார். நான் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்க்க, ‘உங்கள் கச்சேரிக்கு தம்புரா போடும் பாக்கியத்தை எனக்குத் தரணும்’ என்றவுடன் எனக்கு அதிர்ச்சி. ‘நீங்க என் முன்னால் உட்கார்ந்து கச்சேரியைக் கேட்டு ரசிக்கணும்; என்னை ஆசிர்வாதம் பண்ணணும்னு நான் ரொம்ப ஆசைப்படறேன்’ என்று சொல்லி, வற்புறுத்தி அவரை அரங்கத்தில் அமரச் செய்தேன்.

கச்சேரி முடிந்தவுடன் ஒரு கவரை என் கையில் கொடுத்தார். ‘ஒரு சக இசைக் கலைஞர் தம் குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடத்தும் இசைவிழாவில் கலந்துகொள்வது எனக்குப் பெரிய கௌரவம். நான் பணம் வாங்கிக்கொள்ள மாட்டேன்’ என்று நான் சொல்ல, அவரோ, ‘இந்த இசைவிழாவை நடத்துவதில் மூன்று நோக்கங்கள் உண்டு. முதலாவது என் குருவுக்கு நான் செலுத்தும் அஞ்சலி; இரண்டாவது சக வித்வான்களை நல்ல சன்மானம் கொடுத்துக் கௌரவிப்பது; மூன்றாவது கலா ரசிகர்களுக்கு நல்ல இசை¨யைக் கொடுப்பது. இந்த விழாவை நடத்த பலரும் நிறைய நன்கொடை கொடுக்கிறார்கள். எனவே, தயங்காமல் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார். சுமார் 40 வருஷங்களுக்கு முன்னால், அன்றைக்கு ஜோஷி கொடுத்த கவரில் இருந்த தொகை ஒரு லட்சம் ரூபாய்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் கச்சேரிக்காக பூனா போயிருந்த சமயம். உடல் நலம் குன்றி இருந்த ஜோஷியை நான் போய்ப் பார்த்தேன். அதிகமாகப் பேசமுடியாதபடி இறுமல் தொல்லை. நாங்கள் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளாவிட்டாலும் நான் வந்து பார்த்ததில் அவருக்கு சந்தோஷம்.  அவரது கண்களில் ஆனந்தம் வழிந்து என் கண்களில் நிறைந்தது.

***

நன்றி : கல்கி, எஸ். சந்திர மௌலி

***

Visit :

http://mio.to/album/24-Classical_Hindustani_Vocal/4677-Bhimsen_Joshi/#/album/24-Classical_Hindustani_Vocal/4677-Bhimsen_Joshi/

 

2012 : முறையீடு

’தானே’ புயல் வீணே போகவில்லை; ’அரசு எந்திரம் நினைத்திருந்தால் பல ஆயிரம் மரங்களை காப்பாற்றி இருக்கலாம்’ என்று அம்மாவின்அடிமை என்பவர் தினமலரில் சொன்னதற்கு, ’யோவ்.. எல்லா மரங்களையும் வேரோடு பிடுங்கி பேங்க் லாக்கரில் வைக்கவா முடியும் ?’ என்று பதில்கொடுத்து சிரிக்கவும் வைக்கிறது. அவர்களை விடுங்கள், நாம் ‘அவனிடம்’ முறையிடுவோம் அழகாக. ஆபிதீன்காக்காவின் ‘முறையீட்டை’ இப்போது பதிவிடுகிறேன். 1947ல் வெளியான ’தர்த்’ படத்தில் வரும் ’பீச்சு பவர்மே(ங்)’ மெட்டில் எழுதியிருக்கிறார். ‘தேன்கூடு’ நூலில் இருக்கிறது. மிகவும் சோகமாக இருந்தால் ஆறுதல் தர  பாலமுரளி கிருஷ்ணாவின் அபூர்வமான சினிமாப் பாடலும் கீழே உண்டு. அதுவும் முறையீடுதான். கேளுங்கள். எழுதிய கவிஞரின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இசையில் தொடங்குதம்மா…! –  ஆபிதீன்

***

முறையீடு – புலவர் ஆபிதீன்

(பல்லவம்)

இன்னும் வருமமோ கூறுவாய் நீயே
இரங்காததேனே? ஓ எம்பிரானே!  (இன்)

(அனுபல்லவம்)

உன்னையல்லால் இனி யாரிடம் சொல்வேன்
ஊர்ஜித மாக நான் தொழு தேனே
தீனசரண் யனே நீ கை விடாதே
தீயவனை இறை யோனே!  (ஓ எம்)

(சரணம்)

ஆரறிவார் மன வேதனைத் தன்னை
ஆண்டனே அல் லாது உன்னை
அறியாமலும் செய் பாபங்கள் தீராய்
அடைக்கலம் யான் இறையோனே  (ஓ எம்)

***

last edited on 28.07.2019

அருள்வாயே நீ அருள்வாயே… –  பாலமுரளி கிருஷ்ணா  

First song composed by Mellisai Mannar T.K. Ramamurthi for the first film of his, SAADHU MIRANDAAL (1966) sung by the legendary singer Dr. M. Balamurali Krishna. Lyrics: Alangudi Somu .