’ஓடு, ஓடு, ஓடிவிடு!’ – ஸ்ரீலால் சுக்ல

ஸ்ரீலால் சுக்ல அவர்களின் ‘தர்பாரி ராகம்’ நாவலைப் படித்து வரிக்கு வரி சிரித்த இபுலிஸ் (இது ஒரிஜினல் பெயர். புனைபெயர் : சாதிக். லொகேஷன் : அல்கைல்கேட் / துபாய்) ,  ‘எளிய சாதாரண வாசகன் இதைப் பார்த்தால் குழம்பித்தான் போவான்.  ஒரு பக்கம் பயம் , மறுபக்கம் வளர்ச்சி. மாயக்கயிறு மேலேற்றவா, கழுத்துக்கா? தற்காலக் கல்வியை , ’ரோட்டில் கிடக்கும் நாய்’ என்கிறார் ஸ்ரீலால் சுக்ல. இந்த உரையாடல்களின் நீட்சியாக அவர் நாவலின் சிறு பகுதியை அனுப்புகிறேன்’ என்று ஓரிரு பத்திகளை அனுப்பியிருக்கிறது. படித்துவிட்டு ஓடுவதும் ஓடாததும் உங்கள் இஷ்டம். – ஆபிதீன்

***

தர்பாரி ராகம் – ஸ்ரீலால் சுக்ல :

’நீ நடுத்தர வர்க்கத்து மனிதன். மனிதத்தன்மை என்ற சேற்றில் அழுந்திவிட்டாய்.உன்னைச் சுற்றிலும் ஒரே சேறும் சகதியுந்தான். சகதியிலிருந்து தப்பித்துக்கொள். இந்த இடத்திலிருந்து போய்விடு, இங்கிருந்து தப்பித்தோடிவிடு. எங்கே அழகிய வண்ணப்படங்களில், நீ ’லுக்’ லைஃப்பைத் தேடியிருக்கிறாயோ, எங்கே மலர்க் கிரீடங்களும், கிட்டாரும் உன்னைக் கவர்ந்தனவோ, எங்கே பெண்கள் உனது ஆத்மாவை எப்பொழுதும் புதிய புதிய தேடல்களுக்காக அழைத்துக் கொண்டே இருக்கிறார்களோ, எங்கே காற்று மிக மிகச் சூட்சமமாக உள்ளதோ, எங்கே ரவிசங்கர் முத்திரையடித்த இசையும், மகரிஷி யோகியின் முத்திரை பெற்ற ஆத்மிகத்தின் குன்றாத, குறையாத கனவு மயக்கமும் இருக்கிறதோ, அங்கேயே சென்று மறைந்துகொள். இங்கிருந்து ஒடிவிடு, இந்த இடத்தைத் துறந்துவிடு.

’இளைஞர்களான டாக்டர்கள், இன்ஜீனியர்கள், விஞ்ஞானிகள் யாவரும் அகில உலகப் புகழுக்காக ஏங்கும் மாந்தர்களைப் போலவே எல்லோருமாகச் சேர்ந்து தங்களை இன்பமாக வாழ விடவில்லை என்று இருபத்திநாலு மணி நேரமும் அழுவதைப் போலவே நீயும் தப்பித்துக் கொள்ளப் பார். இங்கேயுள்ள தொந்தரவுகளில் மாட்டிக் கொள்ளாதே.

‘துரதிர்ஷ்டவசமாய் நீ இங்கேயே இருக்கவேண்டி நேர்ந்தாலும் உனக்கென்று ஒரு தனியான கற்பனை உலகத்தைச் சிருஷ்டித்துக்கொள். எண்ணற்ற அறிவு ஜீவிகளைப் போலவே நீயும் கண்களை முடிக்கொண்டு அந்த உலகத்திலேயே கிட. ஹோட்டல்கள், கிளப்புகள், மதுச்சாலைகள், காபி ஹோட்டல்கள், சண்டீகட், போபால், பெங்களுரில் கட்டப்பட்டுள்ள புதிய புதிய பவனங்களில், கட்டங்களில், விடுதிகளில் மலை நாட்டு வாசஸ்தலங்களில் இடைவிடாமல் நடைபெற்று வரும் கூட்டங்களில், வெளி நாட்டு உதவியுடன் நிருவ ப்பட்டிருக்கும் ஆராய்ச்சிக் கூடங்களில் இந்தியத் திறமை உருவாகிக்கொண்டிருகிறதே, அங்கேபோய் நீயும் சஞ்சரித்துக் கொண்டிரு. சுருட்டின் புகை மண்டலம், பளபளக்கும் அட்டையுடன் கூடிய புத்தகங்கள், தவறான,ஆனால் கட்டாயப் பாடமான ஆங்கிலத்தின் புகை படிந்த பல்கலைக் கழங்களில் எங்கேயாவது ஒன்றில் போய் உன்னைப் புதைத்துக் கொள். அங்கே இரு.

‘இதெல்லாம் முடியாவிட்டால் கடந்த காலத்தில் உன்னை மறைத்துக்கொள். கணாத், பதஞ்சலி, கெளதமிடத்திலோ, அஜந்தா, எல்லோரா, எலிபெண்டாவிலோ, கோனார்க், கஜுராஹோவிலோ, சாலபஞ்சிகா, சரசுந்தரி, அலசகன்யாவின் ஸ்தனபாரங்களிலோ, ஜப, தப, மந்திரங்களிலோ; சாதுக்களிலோ,சாதுக்களின் சத்சங்கத்திலோ, சோதிடத்திலோ, எங்கே இடம் கிடைக்கிறோதோ அங்கே போய் ஒளிந்து கொள்.

’ஓடு, ஓடு, ஓடிவிடு!

’யதார்த்தம் உன்னைத் துரத்திக்கொண்டோடி வருகிறது.’

***

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட் , சரஸ்வதி ராம்னாத் , இபுலிஸ்

மேலும் பார்க்க :
ஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம் – ஜெயமோகன்