சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (19)

முன்குறிப்பு : ‘இது சாதாரணர்களுக்கானதல்ல என்று குறிப்பு எழுதணும். பெரிய தும்பமையா!.’ என்று ஒரு நண்பர் சொன்னார் மறுமொழியில்  . கோபமில்லை, ‘சூஃபிஸத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்தத் தொடர். அதுதான் தலைப்பே சொல்கிறதே.. அதற்கப்புறமும் ஏன் சீரியல் கதைகள் எழுதுவதில்லை என்று கேட்டால்?’ என்று பதில் சொல்லியிருந்தேன்.

’மன்னு, சல்வா’வாகவே இருந்தாலும் சும்மா கிடைத்தால் மதிப்பிருக்காதுதான். ஹைர்… இப்போது ’மன்னு சல்வா என்றால் என்ன?’வென்று கேள்வி வரும் பாருங்கள். அட, கூகுளில் தேடுங்களேன் ஐயா… இஸ்லாமியர்கள் எழுதுவதில்தான் எவ்வளவு இடைஞ்சல்கள்!  – AB

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18

அத்தியாயம் 19

ஆபிதீன்

*

17-24.11.95 கேஸட்டிலிருந்து ‘S’:

‘ஜம்’ சமயத்துலெ ஒரு குறிப்பிட்ட ‘செண்ட்'(Scent)ஐ use பண்ணுங்க. அது இன்னோரு ஆளு யூஸ் பண்ணுறதா இருக்கக்கூடாது. நான் இப்ப மகிழம்பூவை ரெகமண்ட் பண்ணுவேன். ஒரு குறிப்பிட்ட Postureலெ உட்காருங்க. அதேமாதிரி வேற சூழல்லெ உட்காரக்கூடாது. இது செஞ்சா ‘ஜம்’ இன்னும் ஸ்ட்ராங் ஆவும். ‘ஜம்’ சமயத்துலே நடக்குற நடை மத்த நேரத்துலெ வரக்கூடாது. Distinctஆ இருக்கனும்.

Auto Suggestion 3 பகுதிகள் கொண்டது. a) ரிலாக்சேஷன். b) இமேஜினேஷன். c) மூச்சோட்டம்.

நினைச்சா முடிக்கனும். இதுக்கு similarity என்னா? சிகரெட் பத்தனும்டா பத்தியாகனும். சொறியினுமா? சொறிஞ்சுக்கனும். ஆனா ‘சொறியனும்’டு நாம நினைச்சு சொறியினுமே தவிர அரிப்புக்கு உட்பட்டு சொறிஞ்சிக்கக்கூடாது. முக்கியமான பாயிண்ட் இது. எந்த எண்ணத்தையும் நீங்க எடுத்துவச்சி நெனைக்கனுமே தவிர அது இருக்குற / இழுக்குற பக்கம் போனா அதுக்கு நீங்க அடிமையாயிடுவீங்க. எண்ணத்தை நீ அடிமையாக்குறதுக்கும் எண்ணத்துக்கு நீ அடிமையாவுறதுக்கும் இங்கேதான் வித்யாஸம் இக்கிது.

24.11.95 கேஸட்டிலிருந்து ‘S’ :

எந்தப்பொருளை நாம அடையினுமோ அதைவிட நாம பெருசாவனும்டு சொல்லிப்புட்டேன். எந்தப்பொருளும் ஏன் சின்னதா வைக்கிறீங்க? Full Extentக்கு வளர்ந்துடுறது நாம! who we areங்குற உண்மையைக் கண்டு புடிச்சிடுறது! அப்ப எதையும் செய்யலாமுல்லே? அதுக்குத்தான் ‘ரியாலத்’ தேவை. அது நிலையா நிக்கிறதுக்கும் மாறாம இக்கிறதுக்கும் இந்த talk தேவை. talk தேவையில்லே, talkஐப் பத்தி நீங்க புரிஞ்சிக்கிற அண்டர்ஸ்டாண்டிங் தேவை. ஏண்டா,’ஊதுவத்தி காட்டுங்க’ண்டு சொன்னா ரொம்பபேரு ஊதுபத்தியையே காட்டிடுறாங்க! ஊதுபத்திலெ புகை காட்டனும்!.

‘அமெரிக்க மூளையைவிட இந்தியா மூளை விலைகூட. ஏண்டா அது புதுசா இக்கிதுண்டு’ ஒரு பழமொழி. அவ்வளவு புதுசா வைக்காதீங்க. கொஞ்சம் பழசாத்தான் ஆவட்டுமே!

ரஜினிகாந்த் ஒரு பேட்டிலெ சொன்னானாம். ரேடியோவுலெ சொன்னான் போலக்கிது. ‘நீங்க ராத்திரி பிளான் போடுங்க. அதே மாதிரி (அடுத்தநாள்) செய்யிங்க. செஞ்சிப் பழகுங்க’ண்டு. கேட்டுக்கிட்டிருந்த நம்ம செட் சின்னப்புள்ளையிலுவ, ‘மாமா..மாமா..!’ண்டிக்கிறான். அதாவது , மாமா சொன்ன செய்தி! சர்க்கார்ட வார்த்தையை நிரூபிக்கிறதுக்கு ஒரு ரஜினிகாந்தும் ராஜீவ்காந்தியும் வரனும்டா எங்கே போறது?!

*

‘மாமா..ஒரு சந்தேகம்.. நீங்க பிளான் போடுங்கண்டு சொல்றீங்க. எழுதிவச்சி பிளான் போடுறதா, நினைச்சிக்கிறதா?’ – ரவூஃப்.

‘ஆரம்ப நிலையிலே எழுதாம போடுறது கஷ்டம்; எழுதிட்டு பண்ணுறது நல்லது. ஆனா , எழுதாம பண்ணுறது கஷ்டம்; நல்லது!. எழுதிவச்சிக்குங்க. ஆனா பாக்க்ககூடாது. complicationஆன காரியங்களை ‘ஷார்ட்’டா எழுதிவச்சிக்கலாம். பிறகு ஞாபகம் பண்ணிப்பாருங்க. மெமரி பவர் டெவலப் ஆவும். ஆனா.. செய்யனும்’- ‘S’

*

‘எதை நினைக்கிறீங்களோ அது mindலெ வேலைசெய்யும். அதை கமாண்ட் பண்ணுறமாதிரி செய்யனும். சரி, நாலுமணிக்கு முழிக்கனும்டு நெனைச்சிப்படுத்தா முழிப்பு வருதா இல்லையா?’

‘வருது சர்க்கார்’

‘அலாரம் வச்சித்தானே?!’
*

எப்ப நீங்க சிகரெட் குடிக்கமாட்டீங்களோ, ‘இப்ப கண்டிப்பா சிகரெட் குடிக்கனும்’டு அந்த நேரத்துலெ urge வரணும். குடிச்சே தீரனும்ங்குறமாதிரி ஆசை வரனும்டு நெனைச்சிக்கிட்டு , வுட்டுடுங்க. அப்புறம் ஆசை வரும்போது நெனைச்சிப்பாருங்க. கரெக்டா இருக்கும். கரெக்டா இல்லையா? உங்க conscious ஆர்டருக்கு உங்க subconscious உட்படலேண்டு அர்த்தம். கெடுத்து வச்சிருக்கீங்க! கொஞ்ச நாளாவும். கொஞ்ச நாளுண்டா வருஷக்கணக்கா அல்ல, ஒரு சில வாரங்கள். அவ்வளவுதான்.

*

செயலும் , செய்யாமலிருப்பதும் செயல்தான். ஒரு பொருளை பார்க்குறதும், அதப் பார்க்க வாணாம்டு சும்மா இக்கிறதும் பார்வைதான்.

அழுகையை கண்ட்ரோல் பண்றதுக்கு சிரிப்பை கண்ட்ரோல் பண்ணனும். சிரிச்சிக்காட்டுங்க, நீங்க சிரிச்சிடாதீங்க.

காசு வர்றதுக்கு முந்தி எந்த மெண்டாலிடி இருந்திச்சோ , என்னா ஃபோர்ஸ் இருந்திச்சோ , வந்த பிறகும் இருக்கனும். பொருட்படுத்தினா என்னா வரும்? இந்த காசும் பொய்டும், கீழே பொய்டுவீங்க. பொருட்படுத்தாம இருந்தா என்னா வரும்? வந்துக்கிட்டே இக்கிம்! நீ பார்த்ததில்லே? கடன்காரன் வந்தா வந்துக்கிட்டே இருப்பான், காசு வந்துட்டா வந்துக்கிட்டே இக்கிம், பட்ட காலுலெயே படும். இது புண்ணுக்கு மட்டும் பொருந்தாது, எல்லாத்துக்கும் பொருந்தும். ஏன், நல்லதே படுற மாதிரி செஞ்சுக்க! என்னைக்காச்சும் ஒருநாளு ‘மிஸ்’ ஆனிச்சிண்டா டோன்ட்கேர்! விட்டுத்தள்ளு! அதான் சொன்னேன், ‘தோல்விகள் வந்தா சங்கடப்படாதே, வெற்றியடைஞ்சா சந்தோஷப்படாதே. மல்லாக்கொட்டை மாதிரி இருக்கனும் – உறைப்புமில்லாம, இனிப்புமில்லாம.

எப்ப சமுதாய உறவைவிட தனியா உட்காரும்போது – தனியா இருக்கும்போது – மகிழ்ச்சி அதிகமா இருக்கோ, ‘தனியா இருக்குறது ஒரு வாய்ப்பு, பெஸ்ட் opportunity, not to miss it’ண்டு எப்ப தோணுதோ நாம வளர்றோம்டு அர்த்தம்.

மத்தவன் உங்களை வாழுறாண்டு சொல்றதைவிட உங்க மனசு உங்களை சொல்லனும். ‘பரவாயில்லெப்பா..  பரவாயில்லேப்பா நீ!’ அப்படீண்டு. உங்க மனசு உங்களை சொல்லனும். அப்படி இருக்கும்போது ஊர் உங்களை அம்மியில வச்சி நசிச்சாலும் பரவாயில்லே. இந்த நிலையிலே ஊர் உங்களை உச்சியிலே வச்சிப் பாராட்டினாலும் சரி, அதற்கு அர்த்தம் கிடையாது.

உங்கள்ட்டெ இல்லாத ஒண்ணை இருக்குறதா ஒருத்தன் சொன்னாக்கா , ‘பேப்பய.. நம்ம நிலை தெரியலை அவனுக்கு..’ – ஒரு வழி. மறுவழி என்னா? எது நம்மள்ட்டெ இருக்குண்டு அவன் சொன்னானோ நாளைக்கி – அவன் பாக்குறதுக்கு முன்னாடியே – அதை உண்டாக்கிடனும். அதைவிட இது கஷ்டம். ஆனா அதைவிட இது பெஸ்ட். இமாம் அபு ஹனிபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொன்னாஹா. ‘உன்னை ஒருத்தன் அறிவாளிண்டு பாராட்டுனாண்டு சொன்னா – அந்த அறிவு உன்னெட்ட இல்லாத நிலையிலெ அதை நீ ஏத்துக்கிட்டா – நீ திருடன்!’டு. விளக்கம் தேவையா?!

*

‘எப்ப பணம் உன்னை ஆட்கொள்ளுமோ அப்ப ஃபர்ஸ்ட் வர்றது கடன்! கடன் எப்படி வந்திச்சோ அதேமாதிரி ஆயிரம் பிரச்சனை வந்தாலும் சரி, சமாளிக்குற திறனை வளர்த்துக்கனுமே தவிர கடனை அடைக்க முயற்சி பண்ணக்கூடாது. கடன் பொய்டும், கடன் படுற பழக்கம் இக்கிது பாத்தீங்களா? மறுபடியும் கடன் வரும். இப்ப அஞ்சு ரூவா தேவைண்டு சொன்னா நூறு ரூவா வாங்கனும்ங்க. செலவு அதிகமாவுது, வருமானம் பத்தலேண்டு சொன்னா செலவை குறைக்கிறதல்ல, வருமானத்தைப் பெருக்கனும்’

– இதைச் சொல்லிவிட்டு சர்க்கார் என்னைப் பார்த்துச் சொன்னார்கள் : ‘இப்ப நீங்க ஒரு கம்பெனியிலெ வேலை செய்யிற வரைக்கும் அது சாத்தியமில்லே. அதனாலே நீங்க டெவலப் ஆகும்போது நீங்க தனியாத்தான் வருவீங்க!’. ரவூஃப் ஏக்கமாய் பார்த்தான். ‘நீயும் அப்படித்தான் ‘ என்றார்கள். துபாயின் முக்தார் அப்பாஸ் கம்பெனியையும் ஓம்பூரில் மஜ்ருல் உலூம் கல்லூரியையும் சர்க்கார் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்!

*

கடனோ கஷ்டமோ நஷ்டமோ – கரைஞ்சிடாம, ஸ்டெடியா இருந்தாக்கா- இந்த மனப்பான்மை மட்டும் வரும், ‘மோதிடுச்சில்லே? இனிமே மோதுனா அது தகர்ந்து பொய்டும்!’. அப்படித்தான் வளரனும். அப்படித்தான் வாழனும். நாம தீர்மானிச்சிட்டா அந்த கெபாசிடி டெவலப் ஆகும். readyness வரும். when you are ready for a thing it is sure to happen’. ரெண்டுமாசம் முந்தலாம், பிந்தலாம். தட்ஸ்ஆல்.

இதெல்லாம் சொன்ன உடனேயே கேட்டு செய்யனும். ஆர்க்யூமெண்ட்ஸ் பண்ணிக்கிட்டிருக்கக்கூடாது. once, ஆர்க்யூமெண்ட்ஸ் உண்டாயிடிச்சிண்டு சொன்னாக்கா, ரிஸல்ட் வேறமாதிரி வந்துடும். லைஃப், மெக்கானிகல் Accuracy; ஜியோமெட்ரிகல் Accuracy. கர்..ரெக்டா இருக்கும்.

(ரியாலத்லெ) நான் எதையும் மாத்தலே.. அதையே டெவலப் பண்ணிக்கிட்டுத்தான் போறேன். வேணுண்டே சில சமயத்துலே பால்புட்டி மாதிரி கொடுத்திருப்பேன். கட்டிப்பால் திங்கிற காலம் வரும்போது பால்புட்டியை தூக்கிப் போடச் சொல்லுவேன். எது பால்புட்டி, எது கட்டிப்பாலுங்குறது இப்ப தெரியாது. போகப்போக உங்களுக்கே தெரியும். அப்ப உங்களுக்கே புரிஞ்சிடும். இது தற்காலிகம்டு. இங்கே ஒத்தரு கேட்டாரு: ‘இப்படி மாத்தி மாத்தி கொடுக்குறீங்களே சர்க்கார், இப்ப சொல்லுறது மாத்தக்கூடியதா , மாத்தாம இருக்கக்கூடியதா?ண்டு!

*

28.07.1996

நேற்றிரவு மீலாதுநபிக்கு சர்க்கார் கொடுத்த ‘இஸ்மு’ :

சலவாத் -11
‘யா ரஹ்மான் யா ரஹீம்’ – 251
‘யா காஃபி யா க(g)னி யா ஃபத்தாஹ் யா ரஜ்ஜாக்’ – 315
‘சலாமுன் கவுலன் மின் ரப்பில் ரஹீம்’ – 88
சலவாத் – 11

நேரம் : இரவு 10 – 10 1/2 மணி. இன்று ஆஃபீஸ் விடுமுறையாதலால் , சாப்பாட்டு பிரச்சனைகளிருக்கும் என்று , நேற்று இரவு ‘தேரா’ போனேன். இந்த ரூமின் அமைதி எங்கும் கிடைக்காதுதான். இருந்தாலும் அடுத்தநாள் விடுமுறையில் சாப்பாட்டுக்கு செலவழிப்பதிலும் அமைதி இல்லாமல் போய்விடுமே.. தவிர, எப்படியிருந்தாலும் போய்த்தான் ஆகவேண்டியிருந்தது. அஸ்ராவுக்கும் அனீஸுக்கும் துணிமணிகள், ஸ்கூல் பேக்குகள் வாங்கவேண்டியிருந்தது. நண்பர் ஃபரீது 30-ஆம் தேதி ஊர் போகிறார். ‘இஸ்மு’ ஓதுவதற்கு மஸ்தான்மரைக்கான் ரூமெல்லாம் ஒத்துவராது. நாசர் சதுக்கம் பின்புறமுள்ள- இண்டர் கான்டினென்டல் ஹோட்டல் பக்கமுள்ள – ஹலால்தீன் தங்குமிடம்தான் சரிப்பட்டுவரும். அவர்கள் கடை முடித்து திரும்பிவர 11 1/2 மணியாகும். எனவே அமைதி உத்தரவாதம். அந்த அறைக்கு போய்க்கொண்டிருக்கும்போது முந்தாநாள் இரவு ‘இப்போது வாழைப்பழம் சாப்பிடுவது’ என்று குறித்துவைத்திருந்தது ஞாபகம் வந்தது. பஜாரில் பங்காளிகள் அடிக்கடை மாதிரி போட்டு மலிவாக விற்றுக்கொண்டிருப்பார்கள்தான். ஆனால் அங்குபோய் திரும்ப தாமதமாகும். ஹலால்தீன் அறைக்குப் பக்கத்திலுள்ள கடைகள் வாழைப்பழம் விற்கும் ரகமல்ல. அப்படியே விற்றாலும் அதை தங்கத்தில் செய்து விற்றுக்கொண்டிருப்பார்கள். அந்த ஏரியா அப்படி. அந்த ஏரியாவில் ஹலால்தீனுக்கு இடம் கிடைத்திருப்பது கீழக்கரை ஸ்டைல். பிரமாதமான தங்குமிடம், சாப்பாடு. சம்பளம் – சாப்பாட்டுத் தட்டு வாங்க!. எனக்கு தட்டு வேண்டாம். இப்போது வாழைப்பழம் வேண்டும். சாப்பிட்டுவிட்டு எப்போதும் வாழைப்பழம் சாப்பிடும் ரகமல்ல நான். ஏனோ குறித்து வைத்திருந்தேன் முதல்நாள். வரும்போது மெஹ்பூர் ரெஸ்டாரண்டில் இடியாப்பமும் சூப்பும் சாப்பிட்டு வந்தேன். பஜாரைக் கடந்துதான் வந்தேன். அப்போது ஞாபகம் வந்திருக்கலாம். இப்போது வருகிறது. சட்டென்று ஞாபகம் வந்தது. பக்கத்தில் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. 24 Hours. அங்கு போகலாமே..அங்கு இல்லாவிட்டால்? அதனாலென்ன, வாழைப்பழத்தை நாளைக்கு கிடைக்கும் இடத்தில் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். அப்படித்தானா? எங்கே போனாலும் திரும்ப தாமதமாகிவிடுமோ.. மணி 9 : 45 ஆகிறது. நான் ஹலால்தீன் அறையுள்ள கட்டிடத்தை நெருங்கியிருந்தேன். திடீரென்று வாசலில் இரு பங்காளிகள் தோன்றினார்கள். வாசலில் வாழைப்பழம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அங்கே அவர்கள் வர வாய்ப்பே இல்லை. நான் அங்கே வாழைப்பழம் விற்பவர்கள் பார்த்ததில்லை இரண்டுவருடமாக . இன்று வரத்தான் செய்வார்கள்! நான் இரண்டு வாழைப்பழத்திற்கு பதிலாக நான்கு வாழைப்பழங்கள் வாங்கினேன் – சந்தோஷம், ஆச்சரியத்தில்! இவ்வளவு கூடாதுதான். ஹராம்! எண்ணிக்கை, என் செலவுபண்ணுகிற புத்திசாலித்தனத்திற்கு similarity… இன்னொன்றும் நடந்தது. பஜாரில் வரும்போது ஒரு புதிய மலையாள சினிமா வீடியோவில் ரிலீஸ் ஆகியிருந்தது. இதைப்பார்த்தால் நன்றாகத்தானிருக்கும் என்று ஒருகணம் எண்ணினேன். இஸ்மை ஓதிமுடித்து விட்டு அங்கிருந்த சமையல்காரரிடம் ‘ஏதாச்சும் படம் போடுங்க காக்கா’ என்றால் அதே படம்! ஆசைப்பட்டேனே தவிர பார்க்க இயலவில்லை.. கண்கள் டி.வியை தாண்டிதான் நிற்கிறது.. இப்போதெல்லாம் அப்படித்தான் நிற்கிறது..

*

29.07.1996

நேற்று இரவு வந்த நண்பன் பளவூட்டுத்தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆண்டெனா பாழாகிவிட்டதால் ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகளை சரிவர பார்க்க முடிவதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தேன். டிஷ் இருந்தால் Starன் ஸ்போர்ட்ஸ் சேனலில் அலம்பலாகப் பார்க்கலாம் என்று சொன்னான் அவன். கம்பெனி முதலில் அதையெல்லாம் வைத்துத் தருவதாகத்தான் சொன்னது. இப்போது கேட்டால் அவர்கள் ஒலிம்பிக்ஸே நடக்கவிடாமல் தடுத்து விடுவார்கள் – வெறியில். அதனால் ஷாட்புட் வீசுவது ‘ஜாவலின் த்ரோ’வாகத் தெரிந்தாலும் பரவாயில்லை. அப்படியொன்றும் எந்த டி.வி நிகழ்ச்சிகளிலும் மனது ஆர்வமாக பார்க்கமாட்டேன் என்கிறது. ஆனால் டிஷ் இருந்தால் நன்றாக இருக்கும்தான்! பார்க்கும் கொஞ்சநேரத்தை ஒழுங்காக பார்க்கலாம். சேனல்33 முக்கியமாக ஆண்மையான பெண்களை மட்டும்தான் , புடைத்தெழும் பாகங்களை புடைக்கவைக்கிற டிஸைன்கள் உள்ள நிகழ்ச்சிகளாகக் காட்டுகிறது என்று சொன்னான் அவன். இதை நிறைவாகச் சொன்னானா குறையாகச் சொன்னானா என்று தெரியவில்லை. அப்படியொன்றும் டிஷ் அதிக விலை இல்லைதான். ஆனால் வாங்கி நிறுத்தத்தான் காசு வேண்டும். காசு செலவு பண்ணாமல் – கம்பெனிக்கும் தொல்லை தராமல் – டிஷ் வைக்க வழி இல்லையா என்று நினைத்தேன். காலையில் குளித்துவிட்டு மொட்டைமாடியில் டவல்-ஐ காயப்போடும்போது அது இருந்தது. டிஷ் ஆண்டெனா! இதே கட்டிடத்தின் அடுத்தபக்கத்து கம்பெனிக்காரர்கள் தனது ஊழியர்களுக்கு பொருத்தியிருக்கிறார்கள். சரியான தங்குமிடம் கூட கொடுக்காத அவர்கள் இத்தனை நாள் இல்லாமல் தன் ஊழியர்களை குஷிப்படுத்தக் காரணம் என்ன? யாரால் யாருக்கு வந்தது இது? இனி அவர்களை கேட்டுக்கொண்டு கனெக்சன் மட்டும் ஏற்படுத்திக்கொண்டால் போதும். எத்தனை சுலபம் டிஷ் வைப்பது! நேற்று ஒரு கனடாக்காரன் சாதனை பண்ணினான் – 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில். Donavan Bailey. 9. 84 செகண்ட்ஸ். இப்படியே போனால் அடுத்த ஆயிரம் வருடத்தில் ஓட்டம் துவங்குமுன் ஓடி முடித்திருப்பார்கள். இதென்ன சாதனை? ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சிகளில் இந்த 100 மீட்டர் நிகழ்ச்சியை மட்டும் ரிகார்ட் பண்ணவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பத்திரிக்கைகளில் , டி.வியில் ஷெட்யூல் பார்க்கும் வழக்கமும் கிடையாது. எப்போது ஓடுவார்கள், நமக்கு நேரம் ஒத்துவருமா என்றெல்லாம் பார்க்காமல் நினைத்துவிட்டேன். ஆனால் நினைத்து விட்டேன். நேற்று பளவூட்டுத்தம்பி போனபிறகு சாப்பிட்டுவிட்டு டி.வியைப் போட்டால் 100 மீட்டர் ரேஸ் ஆரம்பமாகிறது! நிகழ்ச்சி மிகத் தெளிவாகத் தெரிந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு அவீர் குடவுன் கேஷ் சேல்ஸ் 18000 இருக்கலாம் என்று நினைத்தேன். 18080. அன்றே இன்னும் நெருங்கிய உணர்வில் சனிக்கிழமை (குடவுன் உண்டு – எந்த நபி பிறந்தாலும்!) 30000 இருக்கும் என்று நினைத்தேன். 30025 தான்!. இன்று காலைதான் கம்ப்யூட்டரில் புகுத்தினேன். ஆனால் சந்தோஷம் இல்லை. சந்தோஷம் ஹராம். ஆனாலும் அது மயிலிறகுபோல் வருடலாம், தப்பில்லை. சென்ற வெள்ளி செஷனில் கேட்ட 19-26.01.1996 கேஸட்டில் சர்க்கார் இதைத்தான் வற்புறுத்தினார்கள் :

‘ஒரு காரியம் நிலைச்சி நிக்கிறதா இருந்தா மகிழ்ச்சி அடையக்கூடாது. அதோடு மோசம், மகிழ்ச்சியடைஞ்சி யார்ட்டெயும் சொல்லக்கூடாது. எந்தப்பொருளைப் பத்தி மகிழ்ச்சி அடையிறீங்களோ அந்த காரியம் நடக்காது. மகிழ்ச்சி அடையிற காரணத்துனாலெதான் நழுவுற வாய்ப்பு உண்டாவுது’ என்றார்கள்

அதிக மகிழ்ச்சியடைந்தால் யாரிடமும் மட்டுமல்ல, இந்த டைரிக்கே சொல்லக்கூடாது! ஒரு பார்ட் டைம் வேலை (ஒரு கேணையனுக்கு புரோக்ராமிங் கற்றுக்கொடுக்கும் வேலை) நழுவிப்போனது. நெருங்கிவந்த ‘Incredible Image Pack’ கிடைக்காமல் போனது. கேணையன் நான் தான்! என்ன மகிழ்ச்சி வேண்டியிருக்கு? It is quite natural..! (பிரிட்டிஷ் பாஸ்போர்ட் கிடைத்தால் மட்டும் லே…சாக பட்டுக்கொள்ளலாம் மனமே!).

‘மகிழ்ச்சியடைஞ்சி சொல்லும்போது (கேட்குற) அவனுக்குள்ள mindலெ நெகடிவிடி இக்கிதுல்லே, அது உங்களுக்கு பாய்ஞ்சிடும். சொன்ன உடனே, பிளான் பூரா ‘டக்’குண்டு உடைஞ்சி பொய்டும். வெளிலே சொல்றதுனாலே மனசுல உறுத்தல், அழுத்தம், light டென்சன் கெட்டுப்போயி ரிலாக்ஸ் ஆயிடுவீங்க. நம்ம பிரின்ஸிபிள்லெ எப்படி ரிலாக்ஸ் ஆகனுமோ அப்படித்தான் ரிலாக்ஸ் ஆகனுமே தவிர மாறுபட்ட வழிகள்லெ ரிலாக்சேஷன் அடையக்கூடாது. Mindலெ உறுத்தல் இருந்துக்கிட்டே இருக்கனும்’ – ‘S’

ரவூஃபின் 24.01.1996 கடிதம் உண்டாக்கிய உறுத்தல் , இந்த 19-26.01.1996 கேஸட் கேட்டபிறகுதான் நீங்கியது. சர்க்காரின் உருவத்திற்கு மேல் நான் கடிதம் எழுதிவிட்டேன் என்று வருத்தப்பட்டிருந்தான் அதில். என் எழுத்தில் பின்னணியில் சர்க்கார் இருக்கிறார்கள் என்று நான் உணர்த்த, அவன் புரிந்ததோ அப்படி! அது அவன் Ph.D ஆய்வு அனுப்புமுன் புரிந்ததாக இருக்கும். எனக்கு மனது சங்கடமாக இருந்ததுதான். அவனுடைய மரியாதை வியக்க வைத்ததனால் இனி அவ்விதம் செய்யக்கூடாது என்று நினைத்து இருந்துவிட்டேன். அவனுக்கு எழுதும் கடிதத்தில் எந்த ஓவியமும் இனி கிடையாது! இது சர்க்காருக்கு எட்டியிருக்குமோ? ஏதும் தப்பாக நினைத்துக்கொள்வார்களா? சே, ரவூஃப் அப்படியெல்லாம் என் தவறை சர்க்காருக்கு சொல்லமாட்டான்.

என் யூகம் தப்பு! ரவூஃப் அழகாக , தான் மற்ற சீடர்களைக் காட்டிலும் எவ்வளவு மரியாதை உள்ளவன் என்று சர்க்காரிடமே சொல்கிறான் இந்த கேஸட்டில். இப்போதெல்லாம் நாம்தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

‘இப்ப…மனசுல வர்ற எண்ணங்கள் ரொம்ப அபூர்வமானதாகவும் ரொம்ப க்ளாரிடி உள்ளதாகவும், குழப்பமில்லாம தெளிவா உள்ளதாகவும் தெரியாதா இப்ப?’ – சர்க்காரின் கேள்வி. ‘இந்த எண்ணத்தை மட்டும் காப்பாத்திக்கிட்டா போதும். நாம் லைஃப்லெ எதையும் அடைஞ்சிடலாம்டு தோணுதா?’ என்றும் கேட்கிறார்கள்.

‘இப்படியும் தோணுது. அதேமாதிரி ஒரு விஷயம் நடக்கும்போது முன்னாலெ புரியாதுதுலாம் இப்ப புரியிறமாதிரியும் தோணுது’ – ரவூஃப்

‘முதல்லெ புரியாம போன விளைவுதான் இது’

‘ஆபிதீன் எனக்கு எப்பவும் வரைஞ்சிதான் லெட்டர்லெ எழுதுவான். வரைஞ்சி வரைஞ்சி , அதுமேலே எழுதி அனுப்புவான். ரொம்ப அளகா இக்கிம். அந்த ப்யூட்டியைத்தான் நான் ரசிச்சிக்கிறேன். இப்ப ஒரு லெட்டர் போட்டிருந்தான். அதுலெ உங்களை வரைஞ்சிருக்கான். இதுவும் அளகாதான் எழுதியிருந்தான், பழையபடி பொடிசு பொடிசா அழகான எழுத்துலெ. எனக்குத் தோணிச்சி..இது மரியாதைக் குறைச்சல், சர்க்கார்மேலே எழுத்து வருது.. அது கூடாதுண்டு. அதை அவனுக்கும் எழுதினேன்!’ – ரவூஃப்

‘அந்த மீனிங்லெ அவரு செய்யலே’ – சர்க்கார்

என் உறுத்தல் சட்டென்று நீங்கியது – இடுப்புவலி நீங்கியது போல. அப்ப்பா.. என்ன சுகம், என்ன அழகான பிள்ளை! மனதைப் படிப்பது எப்படி என்று ரவூஃப் Ph.D பண்ணலாம். பால்கோவாவுக்கு எறும்பு வந்ததை , ‘தகுதி இருந்தால் எதுவும் தேடிவரும்’ என்று சொன்னான் அன்று.

ரவூஃப், இறந்த வண்டுக்கும் எறும்பு வரும்; மொய்க்கும். அதன் சுபாவம்!

*

DONT’S
——-

1. ஆச்சரியம் / மகிழ்ச்சி அடையக் கூடாது.
2. அவசரப்படக்கூடாது.
3. பொறாமைப்படக் கூடாது
4. ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காரியங்களில் ஈடுபடக்கூடாது.
5. அடுத்தவர் பணம் எண்ணுவதைப் பார்க்கக் கூடாது.
6. ‘S’ டைரியை பஸ்ஸில் படிக்கக்கூடாது.
7. உள்பேச்சு (அதாவது தேவையில்லாத நினைப்புகள்/ கற்பனைகள்) கூடாது
8. செக்ஸ் கற்பனை கூடாது.
9. மனைவியல்லாத பிற பெண்களை ஏறிட்டும் பார்க்கக்கூடாது
10. நமது சக்தியை வெளியில் காட்டக் கூடாது.
11. சாப்பிடும்போது பேசக்கூடாது
12. Unpleasant Emotionsஐ express பண்ணக்கூடாது. அதாவது மனரீதியான/ உடல்ரீதியான கஷ்டங்களை வாயால் அடுத்தவர்களிடம் சொல்லிக்காட்டக் கூடாது. (அதாவது , கஷ்டத்தை கசங்காமல் உணரவேண்டும்)
13. லாடம் கிடைத்தவுடன் குதிரை வாங்க நினைக்கக் கூடாது. அதாவது , புறத்தூண்டுதலின் பேரில் நினைக்காத ஒரு நோக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.
14. வெளியே உட்கார்ந்து அரட்டை அடிக்க, டீ குடிக்க என்றெல்லாம் போகக்கூடாது.
15. ‘S’ஐத் தவிர வேறு யாரையும் மதிக்கக்கூடாது. (மற்றவர்களிடம் மரியாதைக் குறைவாக நடக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல).
16. ஒருவர் மீது பழிபோடக் கூடாது.
17. ‘S’ -உடையதைத் தவிர யாருடைய ஜோக்குக்கும் சிரிக்கக்கூடாது
18. எதைக்கண்டும் அதிர்ச்சியோ பயமோ அடையக்கூடாது
19. மூன்று மணி நேரத்திற்கு மேல் ‘ஜம்’மைத் தொடரக்கூடாது (‘S’ சொன்னாலொழிய)
20. அடுத்தவரிடம் கருத்தோ உபதேசமோ கேட்கக்கூடாது
21. ‘S’ முன்னால் சாய்ந்துகொண்டோ கோணிக்கொண்டோ தேவையில்லாத உடல் அசைவுகளுடனோ அமரக்கூடாது
22. ‘ரியாலத்’ செய்வதற்கான ரிஸல்ட்டை எதிர்பார்க்கக்கூடாது
23. யாருக்கும் உபதேசம் பண்ணக்கூடாது
24. மக்களிடம் காட்டுவதற்காக செலவு பண்ணக்கூடாது
25. ரியாலத்தில் செய்யும் கற்பனையை மற்ற நேரத்தில் செய்யக்கூடாது.
26. சோம்பேறித்தனம் கூடாது
27. ஒத்திப்போடக் கூடாது. (அதாவது கடந்தகால பழக்கத்தின் காரணமாக)
28. ஆரோக்கியத்தைப் பற்றி(யே) நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது.
29. Rationalise பண்ணக் கூடாது.
30. Projection கூடாது
31. Inhibition கூடாது.
32. இஸ்லாமிய சட்டதிட்டங்களின் பின்னணியில் உள்ள நோக்கங்களை பார்க்கக் கூடாது
33. நேரம் போதவில்லை என்று சொல்லக்கூடாது
34. ஓதும்போது அர்த்தம் பார்த்தும் மெட்டு போட்டும் ஒதக்கூடாது.
35. நம்முடைய அறிவு, செல்வம் போன்ற எதையும் வெளியில் காட்டக்கூடாது.
36. பேசி மகிழ்வதைப்போல நினைத்து மகிழ்வதும் கூடாது.

*

அடிக்கடி நினைவில் கொள்ள :
—————————-
1. உங்களுடைய அரிப்புக்கு அடுத்தவனை சொறியச்சொன்னல்கூடப் பரவாயில்லை. ஆனால் உங்களுக்காக
சிந்திப்பதை மட்டும் நீங்கள்தான் செய்யவேண்டும்.
2. உங்கள் அழுக்கை நீக்கினால் நீங்கள் யார் என்று தெரியவரும்
3. ‘கிணற்றை உற்றுப்பார்’ என்றால் அதன் பொருள் , ‘போய் உற்றுப் பார்த்துவிட்டு வந்து விடு’ என்பதல்ல; தூர் எடுத்து தூய்மைப்படுத்து என்பதுதான்.
4. எண்ணுவதைச் செய்ய வேண்டும். செய்யமுடிவதைத்தான் எண்ண வேண்டும்.
5. முதல் நோட்டு மாதிரியே கடைசி ரூபாய் நோட்டையும் செலவு செய்ய முடிவதுதான் ‘பரக்கத்’.
6. நாம் எண்ணியது நடக்குமுன்னர் ஒரு குறிப்பிட்ட வரிசையில் – sequenceல் – நிகழ்ச்சிகள் நடக்கும். அதன்படி ரிஸல்ட் வரும். அந்த sequenceஐ மாற்றினால்/ உடைத்தால் அந்த ரிஸல்ட் வராது.
7. எந்த ‘நியமத்’தும் வருமுன்பே அதுவந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
8. ‘பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்’ என்று சொன்னால் , அதைப்பார்த்துக்கொண்டே நோன்பு பிடிக்கவேண்டும் என்று அர்த்தமல்ல.
9. ஒரு சக்தி நம்மிடம் இல்லை என்றால் அது நம்மிடம் இல்லை என்று பொருளல்ல. அந்த சக்தியை இதுவரையிலும் பயன்படுத்தவில்லை /உணரவில்லை என்று பொருள்.
10. மினாராவில் சில தட்டுகள் ஏறினால் தர்ஹா மண்டபம் தெரியும். மேலே போகப்போக கடலும் அதைத் தாண்டியும் தெரியும்.
11. எல்லாப் பணக்காரனுக்கும் பணக்காரன் என்ற பெயர் பொருந்தாது. பணம் வைத்திருப்பவன்; அவ்வளவுதான்.
12. தண்ணீர் பள்ளத்தை நோக்கித்தான் ஓடும் என்பதல்ல. மேட்டை நோக்கியும் ஓடவைக்கலாம். பவர்ஃபுல் மோட்டார்மூலமாக.
13. ஒவ்வொரு பொருளும் அதற்கு நேர் எதிரான பொருளை வைத்தே அறியப்படுகிறது.
14. கொஞ்சம் என்பதும் இல்லை என்பதும் சமம்.
15. எல்லா நிஃயமத்தையும் எண்ணத்திற்கு அடுத்தபடியாக ஆண்டவன் மூச்சோட்டத்தில் வைத்துள்ளான்.
16. எந்த காரியமும் ஆரம்பத்தில் தோணும் தோற்றம் வேறு. அதைப்பத்தி எண்ண எண்ண அது சிறுத்துக்கொண்டே போகும்.
17. அறிவென்பது கற்றுக்கொள்வதல்ல. தானாக வருவது. கற்றுக்கொள்வதெல்லாம் குப்பைதான்.
18. குழந்தைக்கு பட்டம் வாங்க வேண்டுமே என்ற கவலையும் எட்டாவது பென்ஸ் கார் வாங்கவேண்டும் என்ற டென்சனும் ஒன்றுதான்.
19. எதிர்பார்ப்பது தவறா என்பது பீ நாத்தமா வாசமா என்பதைப் போன்றது.
20 வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையவில்லை நாம். நெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம்.
21. மேகத்துக்கு கீழே உள்ளவன்தான் மழைக்காகக் குடை பிடிக்க வேண்டும்.
22. வைரக்கல்லுக்கும் பனித்துளிக்கும் உள்ள வித்தியாசம் வைரத்தின் உறுதிதான்.
23. அடுத்த வீட்டு ஃபேன் காற்றில் உட்காருகிறவரை – அந்த மகிழ்ச்சி அடையும்வரை – நீ ஃபேன் வாங்க முடியாது.
24. எண்ணிவிட்டோம் என்றாலே பவர்-ஐ சப்ளை பண்ணிவிட்டோம் என்றுதான் பொருள்.
25. கேட்காதது கிடைக்காது. கேட்பதும் கேட்பதுமாதிரி முறைப்படி கேட்காவிட்டால் கிடைக்காது.
26. அறிவுள்ளவன் எப்போதும் அறிவோடிருப்பதில்லை.
27. துனியாவில் குருடனாக வாழ்பவன் மறுமையிலும் குருடனாகத்தான் இருப்பான்.
28. துன்பத்தை அடக்குவதும் பொறுமைதான்; இன்பத்தை வெளிக்காட்டாதிருப்பதும் பொறுமைதான்.
29. என் மீது எந்த அளவுக்கு அன்பு வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் நானாக மாறுவீர்கள்.
30. சாப்பிடும் இட்லியைப்பற்றி யோசிக்க முடியும், அதன் கீழேயுள்ள தட்டைப் பற்றியும் அதன் கீழேயுள்ள தரையைப் பற்றியும் யோசிக்க முடியாதா?
31. வெளியே சொல்லமுடியாத சிரமங்கள் வரும்போது வெளியே சொல்லாமலிருந்தால் சொல்லவேண்டிய அவசியமே இல்லை என்று தெரிய வரும்.
32. நம்மிடம் அறிவிருக்கிறது என்று காட்டுவதும் நம்மிடம் சாமான் உள்ளது என்று வழித்துக்கொண்டு காட்டுவதும் ஒன்று.
33. நீங்கள் சாய்ந்துகொண்டிருப்பது அல்லாஹ்வின் முதுகில் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.
34. வாழ்க்கையில் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும்; வெற்றியடைந்து விடலாம்.
35. வாழ்வில் உங்களுக்கு பிரச்சனைகள் உள்ளதா? அப்படியானால் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான்.
36. மனது எப்போதும் கூராக இருப்பது இயற்கையல்ல என்று நாம் நினைக்கிறோம். காரணம் , இயற்கைக்கு மாறுபட்ட வகையிலேயே (நினைத்துப்) பழக்கப்பட்டு பின்னர் அதுவே நம் இயற்கையாகிவிட்டது.
37. அடைந்து இழந்த ஒன்றை திரும்ப அடைவதுதான் முதன்முதலாக அடைவதைவிட கஷ்டம்.
38. ஒரு காரியத்தை/ விஷயத்தை/ பொருளை etc. அடைவதற்கு முன் எப்படி அடைவது என்று பிளான் போடுவதுதான் positive tension.
39. அமைதி என்பது உணர்ச்சி கலக்காமல் இருப்பதுதான்.

**

31.07.1996

ரவூஃப், சர்க்காரின் அனுமதியுடன், உள்வட்டச் சீடர்கள் அனைவருக்கும் தனது குறிப்புகளை வகைப்படுத்தி கொடுத்திருக்கிறான். DO’S ஏற்கனவே எனக்கு அனுப்பிவிட்டான். ‘Don’t & நினைவில் கொள்ள வேண்டியவைகள்’ஐ அனுப்ப இத்தனை நாள் தாமதமானதில், DO’Sகளை தப்பாகச் செய்வது Don’t, இந்த இரண்டையும் நினைவில் கொள்வது’ நினைவில் கொள்ள வேண்டியவை’ என்று நினைத்திருந்தேன்! சில மாற்றங்கள் இருக்கிறதுதான். ஆனால் எனக்குத் தெரிகிற மாற்றம் அவனுக்குத் தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் அதை அடிக்கடி நினைவில் கொள்கிறானா? கொள்பவன் என்மேல் குறை சொல்வானா – உண்மையை உள்ளேயிருந்து வெளியே எடுக்காமல்? அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டியவைகளில் No. 26 முக்கியம்! ஊர்ப்பெண்கள் அரபுநாட்டு தினசரி பத்திரிக்கையைப் பார்த்தாலே தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கண்ணில் ஒத்திக்கொள்வார்கள். அது துபாயாக இருந்தால் , ஏதேனும் நைட் கிளப்பின் பெல்லி டான்ஸிங் நிகழ்ச்சிகளாகவோ , சௌதியாக இருந்தால் தலைவெட்டும் படலமாகவோ , அல்லது அரபுநாடுகளுக்குப் பொதுவாக – தன் ‘ஸ்பான்ஸர்ஷிப்’பிலிருந்து தப்பியோடி வெளியில் அலைகிற , வேலைபார்க்கிற , இந்திய பாகிஸ்தானி பங்காளி தொழிலாளர்களுக்கும் தனக்கும் ‘டூ’ சொல்கிற – கம்பெனிகளின் விளம்பரமாகவோ.. எதுவாக இருந்தாலும் சரி, அரபு எழுத்துக்கு ஒரு மரியாதை. அரபிப்பாடல்களா? கண்டிப்பாக அது குர்-ஆன்தான்! முக்கடை இழுத்துப்போடு, தசுவமணியை உருட்டியபடி! இது அதுதானா என்று தெரியாமல்தான் ரவூஃபும் உருட்டுகிறானா? பழைய கேஸட்கள் ஒன்றில் , ஒரு பெண்மணி சர்க்காரிடம் பெருமையாகச் சொல்லும். யாரோ சர்க்காரைப் பற்றி கிண்டலாகச் சொல்லிவிட்டார்களாம். இது வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டது!

‘அப்ப..நீங்க அவ்வளவு Weakக்கா இக்கிறீங்க..!ம்..’ என்றார்கள் சர்க்கார். அது ஞாபகம் வருகிறது. ஆனால் தன் மரியாதையைச் சொல்லவேண்டும் என்கிற ஆர்வம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அந்த மரியாதை உயர்வானதுதான். எனவே இனி அவனுக்கு சர்க்காரின் ஓவியம் வரைவதில்லை. சென்ற கடிதத்தில் , நான் சர்க்காரின் Instructionஐ கிண்டல் பண்ணுவது ரசிக்கத் தகுந்ததாக இல்லை என்றும் சொல்லியிருந்தான். பதில் எழுதும்போது, இத்தனை தூரத்தில் இருந்துகொண்டு அங்கு நடப்பது கொடுப்பது சரியாகத் தெரியாமல் , வாங்கிக்கொடுப்பவர் திரித்து எழுதுவதும் கோபத்தை உண்டுபண்ணுவதில் , அம்மாதிரி கிண்டல் பிறக்கிறது என்று எழுதினேன். ‘ரியாலத்’தின் இப்போதுள்ள புது ஸ்டெப்ஸ்களில் Astral Body பார்க்கும் (பார்த்து உருவாக்கும்/ எதிரில் தெரியும்) ‘SS’ன் Symbolக்கான Color Sceneல் முக்கோணத்தின் வண்ணம் cream என்கிறான். ஊரிலிருந்து விசிட்விசாவில் வந்திருக்கும் தஸ்தகீர் என்பவர் வெள்ளைதான் என்று அடித்துச் சொன்னார். கவுஸ் மெய்தீன் ‘பால் வெள்ளை’ என்கிறார். பரவாயில்லை , பெரும்பான்மையோரின் கருத்துக்கிணங்க முக்கோணத்தின் வண்ணத்தை நீலமாக மாற்றலாம்! என்ன இது? தஸ்தகீரிடம், ‘ பி இஜ்ஜத்திக்கல்லாஹூம்ம’ இஸ்மு ஓதும் இந்த ஸ்டேஜில் , Astral Body பார்க்கிற மூன்று Bodyகள் தரையில் உள்ளனவா அல்லது ஆரம்பத்தில் இருந்துவந்த மாதிரி (ஆரம்பம் என்பது பழைய ஸ்டெப்ஸ்) ஒன்றின் மேல் ஒன்றாகவா (ஜெப்பார்நானா சொன்னது போல) என்று கேட்டேன். அவர் குழப்பம் தீர்த்தார். என் அனுமானம் சரிதான். ரவூஃப் சரியாக எழுதியிருக்கிறான்; ஆனால் தவறாகப் படம் வரைந்திருக்கிறான். அதாவது , எழுத்தின் மேல் அவன் வரைந்த படம் தப்பு! Refer Notes # 16. அழகிய தவறு. இப்போதைய ‘SS’ பயிற்சிதான் எவ்வளவு எளிமையாக இனிமையாக இருக்கிறது. ‘S’ன் அனுமதியுடன் வாங்கி, கரடுமுரடான 31வது படியிலிருந்து என்னைக் காப்பாற்றினானே..!

ரவூஃப், இனி தமாஷ் செய்ய மாட்டேன். சீரியஸ் சந்தேகங்களுள்ள லெட்டர்தான். எனவே நீ சிரித்துக்கொண்டே படிக்கலாம்.

(தொடரும்)

குறிப்புகள் :

‘S’ – ‘சர்க்கார்’ என்பதன் சுருக்கம்
ஜம் – ஒரு பயிற்சி
ரியாலத் – (‘SS’) பயிற்சி
இஸ்மு – மந்திரம்
சலவாத் – ரசூல் (சல்) மீது வாழ்த்து சொல்வது
பரக்கத் – வளம்

2 பின்னூட்டங்கள்

  1. BARAKATHULLAH. A said,

    17/11/2017 இல் 11:16

    சூஃபி டைரிக்குறிப்புகள் அத்தியாயம் 1 முதல் 20 வரை படித்தேன். அருமையான ஆன்மீகப் பதிவுகள். ரூமியின் திராட்சைகளின் இதயம் நூலும் படித்தேன். அறியத்தந்தமைக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s