வாசகர் பார்வை : ‘தங்ஙள் அமீர்’

மறைந்த உயிர் நண்பர் தாஜ் (எழுதும்போதே கண்ணீர் வருகிறது எனக்கு) எழுதிய குறுநாவல்களின் தொகுப்பான ‘தங்ஙள் அமீர்’ பற்றி சகோதரர் முஹம்மது சுஹைப் முகநூலில் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளரா என்று ஆச்சரியப்படும் சுஹைப், யாரென்றே தெரியாமற் போனாரே தாஜ் என்று உருகுகிறார்.

பதிவில் கண்ட மறுமொழிகளையும் கீழே இணைத்திருக்கிறேன். – AB
*

தமிழில் இப்படி ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் இருந்தார் என்றே ரொம்ப நாட்களுக்குப் பிறகு… எனக்கு இந்தப் புத்தகம் பார்த்துதான் தெரியும்.

சீர்காழியைச் சேர்ந்த தாஜ் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை .மிகச்சமீபமாகத்தான் இவர் நம்மை விட்டும் மறைந்தார் என்ற தகவல் கூட அருமை நண்பர் நிஷா மன்சூர் சொல்லித்தான் தெரியும்.

இப்படித்தான் சிலர் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்து போகின்றனர்.

அவரது அடர்த்தியான எழுத்துக்களைக் கொண்ட ’தங்ஙள்அமீர்’ என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை ..வாசிக்கும் போது இவர் இருக்கும் போது இவரை அறியாமற் போனோமே என்ற வருத்தமே மேலோங்கியது.

சிறுகதை என்ற இலக்கணத்தையும் மீறிய சற்றே பெரிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது…நாலோ…ஐந்தோ கதைகள்தான் உள்ளன.

பொதுவாக… தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்து எங்கள் பக்கம்…அல்லது குமரி மாவட்டத்தைச் சேர்ந்ததான கதைகளையே நான் பெரிதும் வாசித்துள்ளேன். ஆனால்…முஸ்லிம்கள் தமிழகமெங்கும் பரவி வாழ்கிறார்களே…இல்லையா…?

கீழ்த் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை…மிக நேர்த்தியாக .எனதுமுதல்திருமணம்… பெருநாள்காலை..போன்ற கதைகளில் மிக விரிவாக சித்தரிக்கிறார்….

தொகுப்பின் தலைப்புக் கதையான ’தங்ஙள் அமீர்’ கதை முழுக்க சவூதி அரேபியா தம்மாம் மற்றும் ரியாத் நகர்களில் நடக்கிறது…இந்த இரண்டு ஊர்களிலுமே நான் பணி செய்தவன் என்பதால் இக்கதையும் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது…

இந்தியாவிலிருந்து மாந்ரீகம் செய்யும் ஒரு கேரளத் தங்ஙள் மும்பை வந்த ஒரு அரபியின் அழைப்பை ஏற்று அவன் காதலிக்கும் ஒரு பெண்னை மாந்த்ரீக சக்தியால் அவனோடு சேர்த்து வைக்கும் பொருட்டு அவனோடு ரியாத் சென்று… அது முடியாத காரணத்தால் எங்கே அந்த அரபி தன்னை நாடு திரும்ப அனுமதிக்க மாட்டானோ…?என்ற அச்சத்தில் கேரள முஸ்லிம்களிடம் தஞ்சமடைய…அவர்கள் தங்களது செல்வாக்கை பய்படுத்தி தங்ஙளை இந்தியாவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும் செயலை…மிக அற்புதமாக சித்தரிக்கிறது கதை.

சவூதிக்கு ஒரு முதலாளியிடம் வேலை செய்ய வந்து அந்த முதலாளியின் அராஜகம்…பிடிக்காததால்…அவனை விட்டும் தப்பி…வேறு எங்கோ சென்று தலைமறைவாக வாழ்ந்து…நாலைந்து ஆண்டுகள் உழைத்த பொருளோடு ..இறுதியாக இந்தியத் தூதுவரகத்தில் தஞ்சமடைந்து பிறகு தூதுவரகம் வழங்கும் தற்காலிக பாஸ்போர்ட்டில் தாய்நாடு திரும்பிய பலரது கதைகளை நான் அங்கிருக்கும் போது நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

தங்ஙள் கதையும் அம்மாதிரியானதுதான். என்ன வழக்கமான கூலித் தொழிலாளியாக இல்லாமல் சற்று மேல் மட்ட கதையாக இது சொல்லப்படுகிறது

“எனது முதல் திருமணம் “கதை தாஜ் சிறுவயதாக இருந்த போது… விளைச்சல் இல்லாத தென்னை மரத்துக்கு திருமணம் செய்து வைத்தால்…விளைச்சல் பெருகும்..என்ற பாரம்பர்ய கீழ்த்தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நம்பிக்கையையொட்டி….அந்த தென்னை மரத்துக்கு தாஜையே திருமணம் செய்து வைத்த கலகலப்பான நிகழ்வை… அங்குள்ள முஸ்லிம்களின் பேச்சு நடையில் சித்தரித்துள்ளார்..

பெருநாள் காலை’யும் அதே மாதிரியான ஒரு முஸ்லிம்கள் வாழ்வியல் சித்தரிப்புதான்.

இறந்தவன் குறிப்புக்கள்’ மிகவும் அடர்த்தியான இலக்கியச் சொல்லாடல்கள் மிகுந்த கதை.இப்படியான எழுத்துக்களை எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்கள் கூட…இருந்திருக்கிறார்களா..? என்று என்னை வியக்க வைத்த ஒரு நிரூபணம் .

தாஜ் பத்திரிக்கைகளில் எழுதியவரா…? என்று தெரியவில்லை.

எனக்குத்தான் தனிப்பட தெரியாமல் போனாரா…? அல்லது இஸ்லாமிய சமூகமே அவரைக் கண்டு கொள்ளவில்லையா….? என்பதும் தெரியவில்லை.

கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர். யாரென்றே தெரியாமற் போனது ஒரு இலக்கிய சோகம்.

*

Thanks to : K S Mohammed Shuaib

*

மறுமொழிகள் :

Firthouse Rajakumaaren Nazeer : ஒரு சிறந்த இலக்கிய வாசகர் கவிஞர் ,எழுத்தாளர் தாஜ் அவர்களைத் தெரியாமல் இருந்தது ஆச்சிரியமாக இருக்கு ஜி !

நிஷா மன்சூர் : பெரும் சோகம் இது. தமிழ்ச் சூழலில் படைப்புகளை விட படைப்பாளிகளின் பாலிடிக்ஸ் முக்கியத்துவம் பெறுகிறது

Slm Hanifa : எனக்கு பத்துவருடங்களுக்கு முன்னரே அறிமுகமானார்.. ஆபிதீன் பக்கங்களை அவர் எழுத்துக்கள் அலங்கரித்தன.. தளம் சிற்றிதழ் அவரின் படைப்புகளை பிரசுரித்தது.. தமிழ்சினிமாவின் பின்னணியில் அசோகமித்திரன் எழுதியதைவிடவும் இவரின் எழுத்து உன்னதமானது.. ஆனாலும் இவரைப்பலரும்கண்டுகொள்ளவில்லை… மரணத்திற்கு முதல் நாளும் இவரோடு பேசினேன் … அனாரின் கவிதைகள் பற்றிய இவரின் பார்வை எத்துணை சிறப்பானது தம்பி..

Mohamed Sabry : இவர் அறிமுகமானவர்தான். கட்டாயம் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். புத்தகம் இருந்தும் வாசிக்கவில்லை. அவர் மரணச் செய்தி கேட்டதும் மிகவும் கவலையாக இருந்தது. அண்மையில்தான் தங்ஙள் அமீர் வாசித்தேன்.

Meeran Mitheen : நல்ல நேசமுள்ள அன்பாளராக இருந்தார்.

Kannan Sundaram : சுரா நடத்திய காலத்திலிருந்தே காலச்சுவடில் பங்களித்துள்ளார். அதிகம் எழுதுபவர் அல்ல.

நசிஹா நேசன் : முகநூல் நண்பராக இருந்தவர்…முன்னர் சில நேரங்களில் முகநூல் உள்டப்பி மூலம் பேசியதுண்டு காகா….

Moulasha Moulasha (பிறைநதிபுரத்தான்)  : 2002-3 களில் திண்ணை இணைய தளத்தில் அடிக்கடி கட்டுரை கவிதை எழுதுவார். அவ்வப்போது நானும் எழுதும்போது நன்பரானோம். அடிக்கடி மெயில் மூலம் ஊக்கம் தருவார். சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இரண்டு முறை வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடையில் போன் மூலம் தொடர்பு கொள்வதுண்டு எழுத நிறைய விஷயங்கள் இருந்தன அவரிடம். எதிர்பாரா மரணம் – ஒரு படைப்பாளியை பறித்துக் கொண்டது.

Rasool Mohideen ; ஐம்பது லட்சம் முஸ்லிம்கள் வாழும் தமிழகம். இன்று ஐயாயிரம் முஸ்லிம் எழுத்தாளர்கள் உயிர் வாழக் கூடும். மாவட்டம், சாதி, இஸம், முற்போக்கு லாபி, குழு மனோபாவம் அழுத்துகிறது.இப்போதைக்கு முகநூல் இணைக்கிறது.

சுஜாதா, கொஞ்சம் குஸ்கா சாப்டுறீங்களா?

இரண்டு வருடங்களுக்கு முன் இங்கே பரிமாறியது இந்த ‘குஸ்கா’.  எழுதிய வாசக நண்பரின் பெயர் அப்துல் காதர். இது வேறு காதர். ’எல்லைக்கல் யூசுப்’ பற்றி எழுதி எல்லோரையும் சிரிக்கவைத்த ‘ஆஹா பக்கங்கள்’ காதர் அல்ல. உத்தமபாளையம் காதர். ’ஊஹூ பக்கங்கள்’ காதர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். சகோதரர் ரமீஸ் பிலாலியின் தோழர். எனவே ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடுடையவர் என்று தெரிந்திருக்கும். ‘ஒரு சூஃபி கோபப்பட இயலுமா?’ என்று ஏதோ ஒரு கதையில் ஒரு வரி எழுதியிருந்தேன் போல. அதைப் படித்துவிட்டு தொடர்புகொண்ட காதர் , ‘தினம் ஒரு பூண்டை’ ப் படித்து – எச்சரிக்கையாகப் படித்தீர்கள்தானே? –  ’உன்னண்டை பேசமாட்டேன் போ’ சொல்லிவிட்டார். போகட்டும்,  ’குஸ்கா’வுக்கு நான் அன்று கொடுத்த தலைப்பு காதருக்குப் பிடிக்கவில்லை. அந்த தலைப்பு…. இங்கே வேண்டாமே..  குஸ்காவையும் கடவுளையும் தொடர்புபடுத்தி கிண்டலடித்து இருந்தேன். பிரியாணியை படைத்தவன்தானே குஸ்காவையும் படைத்தான் என்ற ஆன்மிக சிந்தனை. அப்படியில்லை போலும். காதரிடம் அனுமதி பெறாமல் நான் செய்தது தவறுதான். எதற்கு வீண் வம்பு என்று  பதிவை அழித்து விட்டேன்.

தற்போது திருச்சி ஜமாலில் படித்துக்கொண்டிருக்கும் என் செல்ல மகனார் நதீம் , ‘இந்த (ஹாஸ்டல்) குஸ்காவைத்தான் சூப்பரா இக்கிம்டு சொன்னீங்களா வாப்பா? கேவலாமவுல இக்கிது?’ என்று அடிக்கடி சொல்வதால் (அவருக்கு எல்லாமே கேவலம். ஒரு கதையிலும் சொல்லியிருக்கிறேன். ’மோசம்’ என்பதை கேவலம் என்பார், கேவலமாக. நான் போட்டிருந்த சட்டையை ’கேவலமா இக்கிது வாப்பா’ என்று சொன்னதால் எல்லா சட்டைகளையும் திருப்பித்தான் போடுகிறேன் இப்போதெல்லாம்.) நமது அருமையான பழைய குஸ்கா காலங்களை நினைவு கூர்வோமே என்று பட்டது. என்னுடைய, ரஃபி (நாகூர் ரூமி)யுடைய கல்லூரிக் காலம் வருகிறது இந்த ’குஸ்கா’வில் என்பதால் பதிவிடுகிறேன். வரலாறு முக்கியம். நம்ம ரூமி அந்த காலங்களில் ஹாஸ்டலில் செய்த கூத்துகளை – முக்கியமாக , பெருமழை பெய்த நாளொன்றில் ஹாஸ்டல் மைதானத்தின் நடுவே தனியாக நின்று அவர் ஆடிய நடனத்தை – பிறகு எழுதுவார், இன்ஷா குஸ்கா!

இந்த அப்துல்காதர் தனியாக ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறார். முகவரி மறந்துவிட்டது. தெரிந்ததும் ’லிங்க்’ கொடுக்கிறேன். ‘குஸ்கா’வுடன் காதர் எழுதிய ’முடிச்சு’ எனும் ஆன்மிகப் பதிவையும் படியுங்கள். சுஜாதாவுடன் முடிச்சு போடுகிறார். ‘கடவுள்’ என்ற சுஜாதாவின் புத்தகத்திலிருந்து எடுத்த ஓரிரு பத்திகள். ஆன்மிகம் என்றால் அலறி ஓடும் ஆட்களா?  சகோதரி ராமசந்திரன்உஷா செய்த ’குஸ்கா’வை இங்கே போய் ருசியுங்கள்.

நதீம் பற்றி ஒருவிஷயம் சொல்ல மறந்து விட்டேன்.  அவருக்கு ஜமால் ஹாஸ்டல் ரூம் பிடிக்கவில்லை – இந்த வருடமும். சின்ன அறையில் ஏழெட்டு பேரைப்போட்டு கொல்லுகிறார்கள் என்கிறார். பெரிய கல்லூரி இன்னும் பெருசாக எப்படித்தான் வளர்வதாம்? அப்புறம்… தினம் கூட்டங்கூட்டமாக வரும் இஸ்லாமிய அழைப்புகள் – சுவனம் காட்ட.  பூமியில் உருவாக்கத் தெரியாமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு அலையும் கூட்டம். ஒவ்வொரு மதத்தவரும் அடுத்த மதத்தவர்களை மதித்தால் சொர்க்கம் உடனே பிறந்துவிடாதா சுலபமாக இங்கே? முடிகிற காரியமா என்று முனகாதீர்கள். உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். கவிஞர் தாஜை நான் மதிக்கிறேனே..  🙂

கணபதியே வருவாய் அருள்வாய் (கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க (கணபதியே)

‘பாத்து நடந்துக்க வாப்பா.. எல்லாரோடவும் ஃப்ரெண்ட்லியா பழகனும். முக்கியமா அடுத்த மதத்துகாரங்களோட அண்ணன் தம்பியா பழகனும். ஹுசைனப்பா (என் வாப்பாவை நதீம் அப்படித்தான் அழைப்பார். வாப்பாவுக்கும் அது இஷ்டம்) அப்படித்தான் சொல்வாஹா’ என்றேன். ‘எனக்கு உங்கள மாதிரிலாம் டிஃபரன்ஸ் பாக்கத் தெரியாது வாப்பா. எல்லாரும் ஒண்ணுதான் எனக்கு ’ என்று ஒரு அறை அறைந்தார். சந்தோஷமாக இருந்தது.

‘இன்னொரு கஷ்டம் இக்கிது வாப்பா’

‘படிக்கிறதா?’ –  கால்தான் உடையுமென்று தெரியாமல் கல்லை உதைத்தேன். ஓ, அந்த ’எல்லைக்கல்’ விஷயத்தை விட்டுவிட்டேனே… நண்பர் ஒருவரை வேலை நிமித்தம் ஓரிடத்திற்கு போகச் சொல்லி விட்டு, திரும்பி வந்து பார்க்கும் சமயம் இருட்டிவிட்டதாகவும், அவர் போகாமல் இருட்டில் உட்கார்ந்திருக்கக் கண்டு எட்டி உதைத்ததாகவும், பிறகுதான் அவர் உதைத்தது ஊரின் எல்லைக்கல் என்றும், உதைத்ததில் அந்தக்கல் இரண்டு துண்டாய் உடைந்து போனதாகவும், அதனால் அவர் பெயர் எல்லைக்கல் யூசுப் என்று பெயர் விளங்கக் காரணமாகியது என்கிறார்கள் என்று கடுமையாக சிரிக்க வைக்கிறார் காதர். திட்டமாக சிரிக்க திட்டச்சேரி பற்றிய அவர் பதிவுக்குச் செல்லுங்கள். இங்கே உதைக்க வேண்டும்!

சரி, செல்ல மகனுக்கு என்ன கஷ்டமாம்? சாப்பாடு ரொம்ப கேவலம் என்பாரோ வழக்கம்போல? அதுதான் வாராவாரம் ஊர்வந்து பாட்டியா பொன்னாச்சிமாவை தாளித்து வாத்துக்கறியாக அமுக்குகிறாரே.. .’என்னாவாப்பா பன்றது, கெணத்துல ஊத்துற சாம்பாரு மாதிரி அங்க போடுறாஹலாம்..’ என்று கொஞ்சுகிறார்கள் தன் பேரனை – என்னப் பெத்த உம்மா. ஒன்றும் சொல்ல முடியவில்லை நதீமை. ஊர்தான் என்னை அடக்குகிறதென்றால் நண்பர்களோ அதட்டி மிரட்டுகிறார்கள்.  காரைக்குடி மஜீத் அடித்தே விடுவார் போல. ’அடிக்கடி ஊருக்கு வந்துடுறான்’ என்று புகார் அளித்தால், ‘நல்லதுதானே.. அம்மாவ பாக்கத்தான் வர்றாரு.. வேற எங்கேயும் போகலையே..’ என்று மஜீதின் முதலாளி, அதான்.. அவருடைய துனைவி,  புதிய விளக்கம் கொடுக்கிறது. என்ன செய்வேன்? ஆமாம் , என்னதான் நதீமுக்கு பெரிய கஷ்டம்?

’வஹாபிங்க மெரட்டுறாங்க; தப்லீக்காரங்க கெஞ்சுறாங்க. ரெண்டுபேருக்கும் நடுவுலே மாட்டிக்கிட்டு முளிக்கிறேன் வாப்பா’ என்கிறார்.

‘வஹாபிலுவ மெரட்டுறாஹா, தப்லீக்குகாரஹ கெஞ்சுறாஹாண்டு தமிள்லெ சொல்லனும்ங்கனி’

‘ஆமா’

அங்கேயுமா?! ஆனாலும் அவர் சொன்னதை நான் ரொம்பவும் ரசித்தேன். ஒன்று பணிந்தே ஆகவேண்டும் என்ற கட்டளை. இன்னொன்று குனிந்து கெஞ்சும் கோழைத்தனம். இரண்டையும் சேர்ந்து தாங்குவது கஷ்டம்தான்.

’என்னையும்தாங்கனி’ என்று சொல்லலாமா? அல்லாவே, முறைக்கிறார்களே யாரோ…

ஆபிதீன்

***

குஸ்கா – அப்துல் காதர் பிலாலி

‘நீ எங்கிருந்தாலும் நமது ஹாஸ்டல் குஸ்காவை மறவாதே’ –  இவ்வாறாக எழுதி எனது ஆட்டோகிராஃபில் கையெழுத்திட்டார் கபீர். குஸ்கா என்பது யாது? பிந்திய 70களில் ஜாலி ஜமால் விடுதியில் இருந்தவர்களிடம் இதைக் கேட்டால் சொல்வார்கள். இது பிரியாணி மைனஸ் கறி என்று சுருக்கமாகக் கூறி விளங்க வைக்கலாம் அறியாதவரிடம். அக்கால பி.யு.சி வகுப்புகளில் பெருங் கூட்டமாக இருக்கும். பிளஸ்2 வந்த பிறகு கல்லூரிகளின் போக்கு மாறி விட்டது. 40 வயதைக் கடந்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியம்.

அங்கு தப்லீக்காரர்கள் வலை வீசி வருவார்கள். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை புரோகிராமென்று. விழுந்தடித்துக் கொண்டு ஓடி ஒளிவதில் கொல்லையிலும் உதவி தேடப்படும். இன்னும் இது முனைப்பாகத் தொடர்வதாக சொல்லப் படுகிறது.

ஒரு முறை இருந்த கொல்லைகளில் உள்ளே இருந்தவர்கள் பல மணி நேரங்களுக்கு வெளியே வராது இருந்தால் பெரிய கூட்டமாகி விட்டதென்றும் யாரோ ஒரு வெகு ஜன விரோதி ஒவ்வொரு கொல்லைக்குள்ளும் புகுந்து உள்ளே தாழிட்டு விட்டு பிறகு மதிலேறி மற்றொன்றில் புகுந்து இவ்வாறான தீரச் செயல் செய்து விட்டிருக்கிறானென்றும் பேசிக் கொண்டார்கள். நல்ல வேளையாக அந்த சமயத்தில் க்யூவில் நான் இல்லை.

பவர் கட். இரவில் ஸ்டடி நேரத்தில்! ஒருவர் கையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வந்து ஹாஸ்டலின் உள் மைதானில் வலம் வந்தார். டைனமோ விளக்கு எரிய ஒருவர் சைக்கிள் விட்டார். மேலே இருந்த பௌதிக விஞ்ஞானி ஒருவர் அந்தக் காலத்து சார்ஜர் லைட்டை ஃபோகஸ் செய்து அரங்கில் ஒரு இடத்தில் ஒளி வட்டத்தை ஏற்படுத்தினார். இருளில் வெளவால், கோட்டான், நரி ஆகியவைகளின் ஒலி எழுப்பப் பட்டன. இவைகளெல்லாம் நிகழ நம்மால் ஆன ஒரு காரியம் செய்தாக வேண்டுமே என்று 110 ஆம் நம்பர் ரூமில் வாசஞ் செய்த நான் களமிறங்கினேன். ஒளி வட்டத்திற்கு சென்றேன். நட்ட நடுவில் சிரசாசனம் செய்தேன். இம்பல்ஸிவ்வாக செய்தது எல்லாமே தலைகீழ் என்று ஸிம்பாலிக்காக உணர்த்துவதாக அமைந்தது. ஹோ..வென்ற பாராட்டு ஆரவாரத்தில் மூழ்கி (கண்) சிவந்தேன்.

அகால வேளைகளில் 111 நம்பர் ரூமில் இருக்கும் ஜன்னலை லேசாகத் திறந்து ‘ஹ்ஹ்ஹஹ்ஹபீய்ய்ர்” என்று பேரொலி இடுவது, எந்தப் பேயன் இவன்? என்று  எரிச்சலுடன் அவர்கள் 5 பேரும் எழுந்திருக்க கபீர் ஓடி வந்து ‘ஹ்ஹ்ஹ்ஹகாதர்” என்று பதிலுக்கு அலற இவ்வமளிகளில் மனம் சந்தோசிக்கும்.

இரு அஜ்மல்கள் இருந்தார்கள் அந்த அறையில். அதில் ஒருவர் இந்தி ஸ்டார் போல. போடிக்காரர். பக்கத்து ஊர்க்காரர் என்று அவரிடம் மரியாதையாக நடந்து கொண்டும் அறந்தாங்கி அஜ்மலின் எரிச்சலை சம்பாரிப்பதும் எனது ஒரு பொழுது போக்கு. அவசரமாக அவசரமாகக் கல்லூரி செல்ல நோட்டு, புத்தகங்கள் எடுக்க டேபிள் கிளாத் விரித்த மேசையில் கைப்பிடி இல்லாத மூழி டிராயரின் கீழே கையை வைத்து இழுத்து இழுத்துப் பார்ப்பார். வராது. எப்படி வரும்? டேபிள் மாற்றிப் போடப்பட்டிருக்கும். டிராயர் பக்கம் மதிலைப் பார்த்தபடி இருக்கும். பேயன், பேயன் என்று டேபிளை திருப்பிப் போடும் போது பலே பலே என்று இருக்கும். கபீர் ரசிப்பார். துரை பெரிய மனிதன். இதையெல்லாம் ரசிக்கார். இவரின் ஆப்தர் ஆபிதீன். நாகூரிலிருந்து வருவார். ஓவியரான அவர் எங்களை அமர வைத்து அச்சாக வரைந்து காட்டுவார். தனது பெல்பாட்டம் பேண்ட்டுகளை மதுரை ஜிடெக்ஸில் கட்டிங் மாஸ்டரிடம் வரைந்தே காட்டி வடிவமைக்கக் கூறுவார் என்பார்கள். நாகூர் ரபி என்பவர் தோளில் ஜோல்னா பையை போட்ட படி ஆபிதீன், துரை ஆகியோரிடத்து ஆங்கிலத்தில் விவாதித்துக் கொண்டிருப்பார். பிரமிப்பாக இருக்கும்.

அரிஸ்டோ ஹோட்டலுக்கு போனால் நாவில் ஒட்டும் டீ கிடைக்கும். உபயம் துரை. திருச்சி வரும் போது ஆஸ்பி ஹோட்டலில் சிவாஜி கணேசனும், அரிஸ்டோவில் எம்ஜியாரும் தங்குவார்கள் என்று இருபத்தைந்து வருட இடைவெளிக்குப் பிறகு அவ்வழி சென்ற காலை என் மகனிடம் கூறிய போது அவருக்கு சற்றும் ரூபகரப்படவில்லை. டிவிஸ் டோல் கேட்டில் உள்ள  கடையில் இன்ஸ் டீ என்று அக்காலத்திய இன்ஸ்டன்ட் தேநீர் கிடைக்கும். இது நாவில் ஒட்டாது. ஆனாலும் நன்றாக இருக்கும். கண்டிப்பான நிர்வாகி – துரையின் தந்தையார் முன் அரிஸ்டோவிற்கு டீ க்காகவே அடிக்கடி விஜயம் செய்தால் நன்றாக இருக்குமா என்ன? கவிக்குயில் திரைப்பட பாடல்கள் அங்குமிங்கும் எங்கும் ஒலிக்கும். கலையரங்கத்தில் சிட்சோர் இந்தி திரைப்படம் பார்த்து விட்டு நானும் துரையும் பேசிக் கொண்டே வந்ததும் ஞாபகத்தில் இருக்கிறது.

வளர்த்தியான ஜெய்னுதீன் எம்ஜிஆரின் ரசிகர். பள பள சட்டை, ரோஸ் பவுடர், கூலிங் கிளாஸ் சகிதம் மெஸ்ஸ{க்கு வருவார். இவரிடமிருந்து லேக்டோ காலமைன் லோஷனை கேட்டு வாங்கி நான் பூசுவது உண்டு. இவரது கூலிங்கிளாஸை நான் கேலி செய்த போது வெகுண்ட அவர் ‘ இதன் விலை என்ன தெரியுமா உனக்கு? ” என்றார். அது விலையுயர்ந்த கண்ணாடி தான். என்ன, போட்டுக் கொண்டால் ஒரு கிழ தொழிலதிபர் தோற்றம் வரும். ‘ஆயிரமே இருக்கட்டுமுங்க! முகத்துக்கு பொருத்தக் கேடா எவனாவது போடுவானா என்ன?’ இது நான். ஆயிரம் ரூபாய் அந் நாட்களில் பெரிது. ‘அடிடா சக்கை, வெளுத்துட்டான்யா!’ இது துரை.

ஹாஸ்டல் வார்டன் மேஜர் ஷா கறுத்த கூலிங் கிளாஸ் கண்ணாடியுடன் நின்று கொண்டிருப்பார். ஸலாமிடலாமா? எங்கு தான் பார்க்கிறார், பதில் மடக்குவாரா? அல்லது மற்ற மாணவர்கள் மத்தியில் இவ்வமல் சுயமரியாதையை அடகு வைக்கும்படி ஆகி விடுமா? கேள்விகள் சிலவற்றிற்கு பதில் இல்லை என்ற பட்டியலில் இதுவும் சேரும்.

சௌகத் அலியின் ரோதை வைத்திருந்த சிங்கப்பூர் சூட்கேஸில் அவர் இல்லாத நேரம் பார்த்து அதில் ஒருவர் ஏறி அமர்ந்து அதன் கைப் பிடியை மற்றொருவர் இழுத்து காரோ, தேரோ ஓட்டப் படும். திடும் பிரவேசமாக அவர் அறையில் நுழைந்து மனம் வெம்புவதும் நடக்கும். வெம்பிய மனம் அவருடையதாகவே இருக்கும். ஒரு அசட்டு சிரிப்பு மட்டும் ஏறி அமர்ந்தவரிடம் வெளியாகும். இழுத்தவர் நழுவி விடுவார். சித்துப் பிறவியான சௌக்கத்தால் என்ன செய்ய இயலும்?

என்னில் மற்றவர் பொறாமை கொள்ளும் அம்சம் என்று மருண்ட, சுருண்ட முடியுடைய ஹமீது நத்தர் தன் சிரசிற்காகவே பெருமை கொள்வார். இவ்வகையான கேசத்திற்கு நான் எப்போதுமே ஆசை கொண்டதில்லையாதலால் ‘உமக்கு வழுக்கை விழ’ என்று எப்போதும் நான் கருகியதில்லை. சராசரிக்கும் சற்றே குறைவான உயரம் உள்ள ஸலாகுத்தீனும் நானும் ‘உயரமாகுங்கள்’ என்ற வரி விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்துவோம்.

சீரியஸாக திருஞானம், நத்தர் கனி போன்றோர் ஐஐடி, மண்டலப் பொறியியல் கல்லூரி என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். ஆண்டுகள் பல கடந்த பின்பே ஐ.டி.ஐ க்கும் ஐ.ஐ.டிக்கும் உள்ள வித்தியாசம் எனக்குத் தெரியலாயிற்று. நாம் யார்? எதற்காக இங்கு வந்தோம்? எங்கு செல்வோம்? என்றெல்லாம் குறிக்கோளில் தெளிவிருந்தவர்கள்! அமலும் செய்தவர்கள்.

***

முடிச்சு

நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் தோய்ந்த கீழ்க்காணும்  வாசகங்களைப் பாருங்கள்:-; சீடர் ஏதாவது தவறான காரியத்தில் பிரவேசிக்க நாடினால், பிரவேசித்தால் அவருடைய குரு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

அப்படி இருக்க முடியுமா? சீடர் செய்வது குரு அவர்களைப் பாதிக்குமா?

இவ்விதம் கேள்வி எழுப்புவது பகுத்தறிவு என்று பெயர் வைப்போம்.

ஒவ்வொரு விஷயத்திற்கும் அதை நிரூபணம் செய்ய சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருப்பது ஒரு ரகம். (நம்பிக்கை, நல்லெண்ணம் குறைச்சலுள்ளவர்?) சில நம்பிக்கைகளுக்கு சாட்சியங்கள் கிடைக்கின்றன. பலவற்றுக்கு கிடைப்பதில்லை. சமீபத்தில் படித்த புத்தகத்தில் இருந்த கருத்துக்களுடன் மேலெழுதப் பட்டவைகளை முடிச்சுப் போட்டு பார்த்தேன்.

சுஜாதாவின் ‘கடவுள்’ என்ற புத்தகத்திலிருந்து…

‘ஜே.எஸ். பெல் என்பவர் 1964ல் ஒரு புரட்சிகரமான விஷயத்தைச் சொன்னார். பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை விஷயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது என்று நிரூபித்துச் சொன்னார். பெல்லின் சித்தாந்தம் மிகவும் சிக்கலானது. அதைக் கொஞ்சம் எளிமைப் படுத்திச் சொன்னால் க்வாண்டம் தத்துவத்தின் கணக்குகள் சரியென்றால் உண்மைகளைப் பற்றி நம் பகுத்தறிவு கூறுவதெல்லாம் தப்பு| என்று நிரூபித்தார். க்வாண்டம் தத்துவத்தின் கணக்குகள் எல்லாமே சரிதான். எனவே பகுத்தறிவு தவறு! எப்படி பார்க்கலாம்?

பகுத்தறிவுக்குப் புறம்பானது என்பது எது? நீங்கள் என்னை வந்து சந்திக்கிறீர்கள். நாம் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய உரையாடல் நம் இருவரை மட்டும் பாதிக்கிறது. பிரபஞ்சத்தின் மற்ற அங்கங்களை பாதிப்பதே இல்லை. இது பகுத்தறிவு.

நாம் பேசிக் கொள்வது பிரபஞ்சம் முழுவதையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது என்று சொன்னால் அது நம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. ஆனால் க்வாண்டம் மெக்கானிக்ஸின் படி இப்படி நடந்தாக வேண்டும் என்று பெல் சொல்கிறார்.

பிரபஞ்சத்தின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு வித உள்ளூர்த்தன்மை காரணம் (local causality) இருக்கிறது என்பது பகுத்தறிவு. நிகழ்சிகளுக்கு ஒரு வித பிரபஞ்சத்தன்மை இருக்கிறது என்பது பெல்லின் வாதம். இதை அவர் சும்மா சொல்லவில்லை. எலக்ட்ரான்களின் சில நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு அதன் ஆதாரத்தில் தான் சொல்கிறார். சில சமயம் எலக்ட்ரான்கள் இரட்டை இரட்டையாக வெளிப்படுகின்றன. இந்த இரட்டையர்களைப் பிரித்து ஒன்றைக் கிழக்கேயும் மற்றதை மேற்கேயும் போகச் சொல்லுமாறு பரிசோதனைகள் அமைக்க முடியும். இவ்வாறு பிரிந்த எலக்ட்ரான்களில் ஒன்றை, கிழக்கே போனதை என்று வைத்துக் கொள்ளலாம், காந்த சக்திக்கு உட்படுத்தி வலது பக்கம் திருப்ப வைத்தால், மேற்கே போன எலக்ட்ரான் அது பிரபஞ்சத்தில் எங்கு சென்றாலும் அதை எப்போது அதே வகை காந்த திருப்பலுக்கு உட்படுத்தினாலும் முன் எலக்ட்ரான் எந்தப் பக்கம் திரும்பியதோ அதற்கு எதிர்ப்பக்கம் திரும்புகிறது! அது வலது என்றால் இது இடது, அது இடது என்றால் இது வலது!

எலக்ட்ரான் என்பது ஒரு துகள். உயிர் தன்னிச்சசை என்று ஏதும் இல்லாதது. கிழக்கே சென்ற எலக்டரானைப் பற்றி மேற்கே சென்றதற்கு, எப்படியோ ஒரு செய்தி போய்ச் சேருகிறது. அதுவும் கால இடைவெளியில்லாமல்! கிழக்கு எலக்ட்ரானின் திருப்பம் மேற்கு எலக்ட்ரானின் திருப்பத்தை, விதியை, உடனே நிர்ணயித்து விடுகிறது.

ஐன்ஸ்டைனின் தத்துவப்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செய்தி போக ஒரு வேக எல்லை உண்டு. அது ஒளியின் வேகம். அதற்கு மேல் செய்தி போவதற்கு ஐன்ஸ்டைனின் தத்துவத்தில் சாத்தியமே இல்லை.

ஆனால் இங்கு நடப்பது கால இடைவெளியில்லாத ஒரு தொடர்பு. எங்கோ நிகழ்வது வேறு எங்கோ நிகழ்வதை உடனே பாதிக்கிறது.

எனவே பிரபஞ்சம் முழுவதும் ஒரு விதமான காரணத்தால் தொடர்பு கொண்டு இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதுமே! பெங்களூர், நியூயார்க், சந்திர மண்டலம், கோடிக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள நட்சத்திரம் எல்லாமே ஒரு மஹா மஹா ஒற்றுமையா? இயக்கமா?

பெல்லின் சித்தாந்தம் ஒரு விதத்தில் விஞ்ஞானத்தின் விளிம்பு. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் துவங்கிய கோட்பாடுகளின் விளைவாக இன்று இந்த விளிம்புக்கு வந்து இதற்கு மேல் உண்மையைத் தேட முடியுமா என்கிற பிரமிப்பில் நிற்கிறது இன்றைய விஞ்ஞானம்.

‘நான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டொழிந்து ஏன் என்ற பேச்சு இல்லாமல் ” இருக்க வேண்டும் என்றார் சித்தர்.. … …

உணர்வுகளுக்கும் புலன்களுக்கும் வார்த்தைகளுக்கும் நியாயங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விழிப்புக்கும் சிந்தனைக்கும் தோற்றங்களுக்கும் அப்பால் பரிபூர்ண ஞானம் ஒன்று கண்ணாமூச்சு காட்டுகிறது.
 
அதை அடைய முயற்சிக்கும் பாதையில் விஞ்ஞானமும் வேதாந்தமும் ஒன்று சேர்ந்து கொண்டு விட்டன. ”

***

நன்றி :  சுஜாதா ,  உயிர்மை பதிப்பகம் , அப்துல்காதர் பிலாலி

***

நானும் கொஞ்சம் சொல்லவா?

குஸ்காவுக்கும் பிரியாணிக்கும் என்ன வித்யாசம்? என்று கேட்டேன் ஜாஃபர்நானாவிடம். ‘குஸ்கா என்றால் கோழி, ஆடு எதுவுமே போடாத சாதா பிரியாணி’ என்று ஒருவர் விளக்கியதற்கு ,  ‘கோழி,ஆடு எதுவும் போடலன்னா அது குஸ்கா . அப்ப மசாலா எதுவும் போடலன்னா அது மஸ்காவா?’ என்று கேள்வி கேட்டிருந்தார் இன்னொருவர் – ஜமால் நண்பன் புஹாரி நடத்தும் அன்புடன் குழுமத்தில் (பிரியாணி சாப்பிடாமல் குஸ்கா மட்டும் சாப்பிடும் சங்கம்) .  அப்படி ஏதும் சொல்வாரோ என்று பார்த்தால், ‘நான் எழுதுனா பிரியாணி, நீங்க எழுதுனா குஸ்கா’ என்று செமையாக வெடைத்தார் என்னை. வெடை என்ன, உண்மைதான். சுஜாதா, குஸ்கா சாப்டிங்களா? – ஆபிதீன்