The Living Body – Our Extraordinary Life

Thanks : Naked Science & Rajagopal
**

அறிவியலே அனைத்திற்கும் தீர்வு – பில்பிரைசன்

‘புத்தகம் பேசுது’ ஆகஸ்ட் மாத இதழில் வெளியான இந்த நேர்காணலை கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் ஃபேஸ்புக்கில்  பகிர்ந்திருந்தார். இது எங்கள் Ex-Spic Employees குழுமத்தில் ஒரு நண்பரால் பகிரப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார்.  அவர்களுக்கு நன்றி சொல்லி மீள்பதிவிடுகிறேன். அனுமதி பெறாமல் பதிவிடுவதால் நண்பர் ‘ரா.சு’ என்னை அடிக்கலாம். அறிவியல்பூர்வமாக அடிக்கவும். அதுதான் தீர்வு!

‘A Short History of Nearly Everything’ (PDF) தரவிறக்குவதற்கான சுட்டி பதிவின் அடியில் உள்ளது. மறக்காமல் டவுன்லோட் செய்யுங்கள் , படிக்க வேண்டாம்! – ஆபிதீன்

***

Bill_Bryson_1

நம்புங்கள் – அறிவியலே அனைத்திற்கும் தீர்வு

பில்பிரைசன்

*

விஞ்ஞானம், வரலாறு, மொழியியல் மற்றும் பயண நூல்கள் என பில்பிரைசன் கைபடாத துறைகள் இல்லை. அட்லாண்டிக் சமுத்திர நாடுகளின் அவென்டிஸ் விருது முதல் பல கண்டங்களின் விருதுகளைக் கடந்து சாமுவேல் ஜான்சன் விருது வரை அறிவியல் எழுத்துகளுக்காக இருக்கும் அத்தனை விருதுகளையும் வழங்கி, உலகம் ‘பில்பிரைசன் விருது’ என்றே ஒரு விருதையும் உருவாக்கி அவரது அறிவியல் எழுத்துக்களுக்கு மகுடம் சூட்டி உள்ளது.

ஆனால் ஒரே ஒரு புத்தகத்திற்காக (A Short History of Nearly Everything) 19,000 கி.மீ. பயணம் செய்து 178 நாட்களை பயணத்தில் கழித்து, 176 அருங்காட்சியகங்களைப் பார்த்து 2000 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து உலகை அதிர்ச்சி அடைய வைத்தாரே, அந்த பில்பிரைசனின் 25வது புத்தகம் (The Home) சமீபத்தில் வெளிவந்துள்ளது.

லண்டன் ராயல் கழகத்தின் (Royal Society) உறுப்பினராகத் தேர்வாகி இருக்கும் அவர் தனது அறுபதாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ‘கிராமப்புற இங்கிலாந்தைக் காப்போம்’ எனும் சூழல் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து மனம்திறந்த சமீபத்திய உரையாடல் இது. ராயல் கழகத்தின் 350வது ஆண்டு அனுசரிப்பிற்காக “Seeing Further The story of Science and the Royal Society” எனும் நூலை தொகுத்துள்ளார். ராயல் சொசைட்டியின்
இணைய இதழ் (royalsociety.org)க்காக மாக்ஸ் டேவிட்சனும், ஜுலியன் ஜேம்ஸும் அவரோடு உரையாடுகிறார்கள்.

*

Q: கல்லூரியில் அறிவியல் படிக்காத நீங்கள் இன்று ராயல் கழக விஞ்ஞானி அந்தஸ்த்து பெற்றிருக்கிறீர்களே, இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் பில் பிரைசன்?

A: இது (ராயல்) சொசைட்டி பற்றிய விமர்சனமா பில்பிரைசன் பற்றிய விமர்சனமா? எதுவாக இருந்தாலும் ஏற்கெனவே இப்படி நடந்துள்ளது. உதாரணமாக பதினேழாம் நூற்றாண்டில் எட்மண்ட் ஹாலி கல்லூரிப்பட்டம் பெறுவதற்கு முன்பே ராயல் கல்வியக உறுப்பினரானார்; தனது பரிணாமவியலை வெளியிடுவதற்கு பல வருடங்கள் முன்பு தன் பீகிள் கப்பல் பிரயாணம் முடிந்த கையோடு டார்வின் உறுப்பினராக்கப்பட்டார்.

Q: நீங்கள் உங்களை விஞ்ஞானி என்று அழைத்துக் கொள்வதில்லையே?

A: நான் விஞ்ஞானி அல்ல. விஞ்ஞானத்தை, விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ச்சியர் லீடர் நான்! அறிவியலின் அசைக்க முடியாத ஆதரவாளன். என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கே தொகுத்து வழங்குபவன். அறிவியல் வரலாற்றாளனின் வேலை அதுதான். என் வாழ்விலிருந்து எனக்கு கிடைத்த பெரிய உண்மை என்ன தெரியுமா, அறிவியலை நீங்கள் புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு அறிவியல் பட்டமே தேவை கிடையாது! அறிவியல்வாதியாக
சிந்தித்தாலே போதும்.

Q: சிந்திப்பது வேறு, பில், நீங்கள் அறிவியல் வரலாற்றை அதன் சிறுதுளிகள் விடாமல் கரைத்து இடித்து விட்டதாகவே படுகிறது. ‘அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு’ மாதிரி அறிவியலுக்கு வெளியே இருந்து ஒருவர் எழுதமுடியாது என்றே தோன்றுகிறது. இது எப்படி சாத்தியமாயிற்று?

A: பள்ளிக்கூடத்தில் மிக மோசமான அறிவியல் மாணவன் நான். மிகவும் சுவாரசியமான அறிவியல் உலகத்தை பாடப்புத்தகங்கள் அதிரடியாக துப்பாக்கி முனையில் நிறுத்தி, நம்மை நோக்கி கட்டளைகளாக, ஏன் சுவாரசியமற்ற தொனியில் முன்வைக்க வேண்டும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அறிவியல் ஒரு தொடரும் முடிவற்ற தேடல். அதை ஏற்கெனவே முடிந்துவிட்ட, ஜடத்தனமான, வெட்டிக் கூறுபோட்ட வெற்றுச் செய்திகளால் வகுப்பறையில் கொட்டுகிறார்கள். என் காலத்திலும் அதுவே நடந்தது. அம்மா, அப்பா இருவருமே பத்திரிகையாளர்கள் என்பதால் சொற்களை பற்பல வடிவங்களில் எதிர்கொள்ளுதல் வீட்டின் தன்மைகளில் ஒன்றாய் இருந்தது. ஒரு கால்பந்து போட்டி பற்றி எப்படி எல்லாம் எழுதி வழங்க முடியுமென விளையாட்டாக அவர்கள் விவாதித்ததும் என்னோடு சமஆட்களாக உரையாடியதும் மொழியியலை நோக்கி என்னைக் கொண்டு சென்று விட்டது. ஆனாலும் அறிவியலை அதன் வரலாற்றை எனக்கு பள்ளிக்கூடம் எப்படி வழங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படி எழுதவேண்டும் எனும் தவிப்பும் அதனை நானாகவே சுயதேடல் மூலம் கற்கவேண்டும் எனும் பிடிவாதமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

Q: ஆனால் இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்களே?

A: இருக்கலாம்.. அறிவியல் வகுப்புகள் ரொம்ப போர்… ஆனால் வளர்ந்த ஆளாக மனிதனாக அறிவியலைப் புறக்ககணிப்பது சாத்தியமல்ல. அதனோடு எப்படி அறிந்து இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான எனது தீர்வு அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு “A short history of Nearly Everything.”

Q: பயணம் செய்வதை கல்வி கற்றலின் ஒரு வகைபாடாக ஆக்குவது ஏன்? இணையத்தில், எல்லாம் கிடைக்கிறதே?

A: 1972ல் டிரெக் பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டே ஆண்டுகளில் பொறுமை இழந்து வெளியேறி இருந்தேன். எதை வாசித்தாலும் அது அந்த விஷயம் குறித்த யாரோ ஒருவரின் மனப்பதிவாக இருப்பதையே உணர்ந்தேன். சில விஷயங்களில் உண்மை லேசாக வேறுபட்டது. சொந்தமாக கற்க, நேரில் அறிய, பயணிப்பது நல்ல வழி என்றுபட்டது. பயணங்களில் நான் பதிவு செய்ததை ஏற்கனவே புத்தகங்களாக எழுதியும் இருக்கிறேன். அறிவியலுக்காக சுமார் 20,000 கி.மீ. பயணம் செய்ததும் 2000 வாழும் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து அவர்களை நேரடியாகப் பதிவு செய்ததும், புது அனுபவமாக இருந்தது. அது எந்தப் பள்ளியிலும் பல்கலைக்கழகத்தாலும் அளிக்க முடியாத கல்விஅனுபவத்தை எனக்கு வழங்கியது. என்மாதிரி ஒரு சராசரி ஆர்வம் கொண்ட இன்னொரு மனிதருக்கு கதை மாதிரியே பேச நான் விரும்பினேன்.

Q: இப்புத்தகம் இவ்வளவு பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்த்தீர்களா, பில்?

A: உண்மையில் நான் மிகவும் பயந்தேன். என்னிடம் திரட்டப்பட்டிருந்த செய்திகளில் ஒரு எழுபது சதவிகிதத்தைத் தான் எழுத்தில் வடித்தேன். புத்தகம் கடக்கும் கால மற்றும் பொருள் வெளிக்குப் பொருந்தாத, ஆனால் என்னால் திரட்டப்பட்ட பல விஷயங்கள் மூட்டை கணக்கில் என்னிடமே உள்ளது. உதாரணமாக ஜாக்கப் ப்ரொனொப்ஸ்கி. ஏதோ வில்லியம் பிளேக் கவிதைகள், கவிஞர் வாழ்வு என்றெல்லாம் புத்தகம் எழுதிக் கொண்டிருந்தவர் திடீரென்று டார்வினை உள்வாங்கிக் கொண்டு அடுத்த பத்தாண்டு கடுமையாய் ஆய்வுகள். தி அசெண்ட் ஆஃப் மேன் (The Ascent of man) புத்தகத்தை எழுதுகிறார். அற்புதமான பதிவு. இன்று அது இன்றி டார்வினுக்குப் பின்னான பரிணாமவியலைப் புரிதல் கடினம். ப்ரொனொவ்ஸ்கி மாதிரி பலரை அந்தப் புத்தகம் பதிவு செய்யவில்லை. ஆனால் எனது புத்தகத்தை விஞ்ஞானிகள் மிகவும் கரிசனத்தோடே அணுகி இருக்கிறார்கள்.

Q: பாடப் புத்தக வாதிகள் எழுத்துப் பிழை விடாமல் விமர்சித்துள்ளார்களே?

A: ஆனால் வாசிக்காமல் இருக்க முடியவில்லை என்பதுதானே உண்மை? நான்கு பல்கலைக்கழகங்களின் கவுரவ டாக்டர் பட்டங்கள், ஏன், புத்தகம் என்னை ஒரு பல்கலைக்கழக கவுரவத் துணைவேந்தராக்கிவிட்டதே! குழந்தைகள் பாட புத்தகத்தைவிட, “A really short history of nearly Everything” புத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவத்தை வகுப்பறைக்கு தைரியமாக எடுத்துச் செல்கிறார்கள். அறிவியல் எவ்வளவு விறுவிறுப்பானது, சுவையானது, அது நம் வாழ்வை என்னவெல்லாம் செய்யும் என்பதை உணராமல் எந்தக் குழந்தையும் பள்ளிக்கல்வியை முடித்துவிடக்கூடாது.

Q: ஒரு பள்ளி, அறிவியலை எப்படி போதிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

A: தக்க வாழ்வியல் காரணமின்றி, பகுத்தறியும் வாய்ப்பு இன்றி ஒரு கேள்விபதில் அம்சமாக மட்டுமே அறிவியல் இடம் பெறுவதை நாம் நிறுத்த வேண்டும். ஒரு வேதியியலாளரைப்போல பாவித்து மாணவரிடம் மடமடவென்று வேதியியல் பாடவேளை களத்தில் இறங்கிவிடுகிறது. இயற்பியலும் அப்படித்தான். ஆனால் ஒரு குழந்தை அவ்விரண்டாகவும் இன்னும் ஆகவில்லை. என்மாதிரி, ஒருபோதும் விஞ்ஞானி ஆகப் போவதில்லை என்பவருக்கு அதில் மூன்றாவதாக ஏதோ ஒருவகை வாழ்க்கை பிணைப்பு இருக்க வேண்டும். இந்தப் பொதுஆர்வம் அறிவியல் வரலாற்றில் மட்டுமே உள்ளது. அதன் கூறுகளைக் கலந்து தராத கல்வியால் பலனில்லை. அறிவியலின் பெரிய திருப்புமுனைகளை நாம் எல்லோருமே அறிவோம். ஆனால் வாழ்நாள் முழுதும் ஏதோ ஒரு சிறிய அறிவியல் விஷயத்தை துரத்தியபடி பெரிய திருப்புமுனை ஏற்படுத்தாத பயணங்களை நாம் அறியும்போது அறிவியல் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வகுப்பறை அப்படிப்பட்ட ‘த்ரில்’ கதைகளின் வடிவமைப்பாக அறிவியலை முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சுவையற்ற வெற்று வார்த்தைகளால் அறிவியல் என்பது, என்னாலும் உங்களாலும் முன்னெடுத்துச் செல்லமுடிந்த, நமக்கு சம்பந்தமான ஒன்றாக இல்லாமல் அறுபட்டு விடுகிறது. அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்காக உலகெங்கும் மத வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையை ஏன் பாடப்புத்தகங்கள் மூடி மறைக்கவேண்டும்? இன்றைக்கு அறிவியலோடு தங்களைத் தொடர்பறுந்து போக யாராவது விரும்ப முடியுமா? குழந்தைகளுக்கு அறிவியலை போதிப்பதைவிட அவர்களாகவே அதனை தேடிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்காத வகுப்பறை அறிவியலுக்கே எதிரானது. ஒருவர்
விஞ்ஞானி ஆவதற்கோ, அறிவியலாளர் ஆவதற்கோ அறிவியல் பட்டம் (Degree) வாங்கி இருக்கவேண்டும் என்பது அவசியமே இல்லை என்பதுதான் என் கருத்து, செய்தி.

Q: ராயல் கல்வியக உறுப்பினர்களாக இந்த 350 வருடத்தில் சுமார் 8000 பேர் இருந்துள்ளனர். உங்களையும் சேர்த்து, அவர்கள் அனைவரது வாழ்வையும் தொகுத்திருக்கிறீர்கள். உங்களை மிகவும் கவர்ந்தவர் யார்?

A: உண்மையில் அந்த வேலையில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நியூட்டன், கிரிஸ்டோபர் ரென், சார்லஸ் டார்வின், ஆல்பிரட் ஐன்ஸ்டீன் என்று ஜாம்பவான்கள் இதில் இணைந்துள்ளனர். ஆனால் இவர்களில் பாதிரியார் ரெவரன். தாமஸ் பேஸ் (Thomas Bayes) தனித்து நிற்கிறார். இவர் ஒரு கணிதமேதை, பேய்ஸ் தேற்றத்தை வழங்கியவர், கணித சக்ரவர்த்திகளில் ஒருவர். ஆனால் இதை எல்லாம்விட தாம்ஸ் பேய்ஸ், தேவாலயம் அறிவியலாளர்களை தண்டிக்க கிளம்பியபோதெல்லாம், அதன் உள்வட்டத்தில் இருந்தபடி, வெளியில் தெரியாமல் தன் சொந்தச் செல்வாக்கினால் பலரைக் காப்பாற்றி விடுவித்திருப்பதைச் சேர்த்து யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது! இவரது கணிதக் குறிப்பாக ‘நிகழ்தகவு சூத்திரங்கள்’ இல்லையேல் இன்று அறிவியல்மய உலகே சாத்தியமில்லை. பருவநிலை மாறுதல், கணினி, பங்குச்சந்தை, வானியல், இயற்பியல் என அது இல்லாத துறையே இல்லை. ஆனால், பொதுவாக, விஞ்ஞானிகளுக்கு தங்களது கண்டுபிடிப்புகளைச் சுவையாக முன் வைக்கத் தெரியாது. ஐன்ஸ்டீன் மட்டும் ஒரு விதிவிலக்கு. நியூட்டன் தொடங்கி டார்வின், ரூதர்ஃபோர்டு, பாலி, கியூரி, மென்டல்… என எல்லோருமே நகைப்பதற்கு நேரமற்ற, ஆனால் நகைக்கத்தக்க அனுபவங்களுடன் வாழ்ந்தார்கள். ராயல் கல்வியகம் இவர்களுக்கு மேடைபோட்டுக் கொடுத்து, எல்லோரோடும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து, பலருக்கு மீதி ஆய்வைத் தொடர நிதி உதவியும் செய்துள்ளது. நியூட்டனின் பிரின்சிபியாவை ராயல் கழகம்தான் வெளியிட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பாதிரியாராக இருந்த தாமஸ் பேய்ஸ் ஒரு ஜீனியஸ். அவரை அடையாளம் கண்டு உறுப்பினராக அவரை ஏற்ற
ராயல் கழகம், எத்தகைய ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் இன்றுவரை அறிவுத்தேடலை தனது ஒரே அளவீடாகக் கொண்டுள்ளது என்பது பெரிய விஷயம்தான்.

Q: அறிவியலின் எதிர்காலம் எப்படி இருக்கும், பில்?

A: உலகின் ஒரே நம்பிக்கையான எதிர்காலமாய் அறிவியல் மட்டுமே இருக்க முடியும். வறுமை, பிணி, படிப்பறிவின்மை, சுரண்டல், பருவநிலை மாறுதல், சுற்றுச்சூழல் பிரச்சனை, மனிதநேயச் சிக்கல்கள் என யாவற்றுக்கும் தீர்வு கண்டிப்பாக அறிவியல்தான். அறிவியல் கல்வி சார்ந்த ஒருவர் தீர்வின் முன்மொழிவாளராக இருப்பார். அறிவியலை அதன் கண்டுபிடிப்புகளைத் தாக்குபவர்கள் யார் என்று பாருங்கள்: மனிதத் தன்மையற்ற பழம்பெருச்சாளிகள் தங்களது ஆதிக்க அடையாளத்தை உதிர்க்கும்போது எழும் இறுதிக் கூச்சல் அது. அறிவியலில் பிரச்சனை இல்லாமலில்லை. ஆனால் அவற்றின் தீர்வும் அறிவியலில் உண்டு. அதைக் கைவிடுவதில்லை.

Q: இப்படிப் பேசும் நீங்கள் இங்கிலாந்தின் கிராமப்புறத்தைக் காப்பாற்ற (Campaign to Protect Rural England) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக இருப்பது முரணாக இல்லையா?

A: இந்த இடத்தில்தான் மற்றவர்களிடமிருந்து நான் வேறுபடுகிறேன். இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டு, சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வின் மீதே அச்சுறுத்தல் விடுக்கும் எதையும் அறிவியலாக ஏற்க முடியாது. கார் கண்ணாடியை இறக்கி, காலியான பீர் பாட்டிலை, டின் பிராண்டியை விட்டெறியும் ஒருவர் விட்டுச்செல்லும் ஆபத்து புவியை அதன் மண்செழிப்பை விவசாய நிலங்களைப் பாதிப்படைய வைக்கிறது. ஒரு பாலிதீன் பை உங்கள் அணு ஆயுதங்களைவிட ஆபத்தானது, இல்லையா? கிராமப்புறங்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு அதை அறிவியல் என்றழைப்பது தவறான அணுகுமுறை. பசுமையை, இயற்கை வளத்தைக் காப்பாற்ற முடியாத அறிவியல் என்று எதுவும் இருக்க முடியாது. அதற்கு நாம் சாதாரண மக்களின் வாழ்விலிருந்து அறிவியலைக் கற்க வேண்டும். எனது “ஹோம்” (Home) புத்தகத்தின் நோக்கம் அதுதான். வீட்டின் இன்றைய அமைப்பு, அதைக் கண்டுபிடித்த இனம் எது? சமையலுக்கு ஒரு அறை, உணவுக்கு ஒரு இடம், இது இப்படி… அப்படி என உருவான வரலாற்றை அந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறேன். அறிவியல். நீங்கள் வசிக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்கள் மூதாதையர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் என்பதைப் பார்க்கலாம்.

Q: வாழ்வின் மறக்க முடியாத அனுபவம்?

A: டார்வின் போலவே (அதுபற்றி எழுதிட) கப்பல் பிரயாணம் அதே வழியில், 178 நாட்கள் மேற்கொண்டது. காலோஃபோகஸ் தீவு. அதை மானுடம் இறுதி வரை இதேபோல காப்பாற்ற வேண்டும்.

***

Bill_bryson_a_short_history

Download A Short History of Nearly Everything (PDF)

***

Thanks to : Bill Bryson , royalsociety.org , ‘புத்தகம் பேசுது’ , Ex-Spic Employees குழுமம். ராஜ சுந்தர்ராஜன்

கடவுளாகி விடுவானா மனிதன்? – மாலன்

மனித ஜீன்-இல் சில மாற்றங்கள் செய்து , முட்டாளை புத்திசாலியாகவும், கெட்டவனை நல்லவனாகவும் மாற்றலாமாம். ‘உங்களுக்கும் அந்த எண்ணம் உண்டா?’ என்று தாஜ் என்னைக் கேட்டிருக்கிறார். விஞ்ஞானிகள் எவ்வளவு முயன்றாலும் அஞ்ஞானி ஆபிதீனை மாற்றவே இயலாது! போகட்டும், ‘ஒரே… இலக்கியம், ஆன்மீகம் என்று இருக்கிறதே..  அறிவியல் செய்திகள் அறவே இங்கு இல்லையே’ என்று நான் ஏங்கியதற்காக மெனக்கெட்டு ஒரு  கட்டுரையை  தட்டச்சு செய்து அனுப்பிய தாஜுக்கு நன்றி. என்ன ஒன்று, மரைக்கார் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்; மாலன் எழுதியதில் வருத்தமே! ம்ம்…, நம்ம ‘சீயாழி ராவுத்தர்’ சில குறிப்புகள் தருகிறார். அதைப் படித்துவிட்டு நண்பர் மாலனின் கட்டுரையை வாசியுங்கள். நன்றி.

இன்னொன்று…

‘இயற்கைக்கு மாறாக இன்றுள்ள புதினங்கள்
இருந்தாலும் ஒரு செய்தி; இனியேனும் சிந்திப்பீர்
செயற்கைப் பயன்கண்டு செருக்குற்ற ஆணினமே!
சேய்களை ஈன்றெடுக்க சாலுமோ உன்னாலே?’ என்று
புலவர் ஆபிதீன் காக்கா கேட்டிருக்கிறார் – ‘விஞ்ஞான விளையாட்டு’ பாடலில். ஆண்டு 1949.

முடியும் காக்கா, இன்று முடியும்! விபரமறிந்தவர்கள் வி/இடலாம். எனக்கு அனுபவம் பத்தாது!

***

முதலில் சில வார்த்தைகள் – தாஜ்

அன்புடன்
வாசக நண்பர்களுக்கு….

‘புதிய தலைமுறை’ ஆசிரியரான
நண்பர் மாலனின்
‘படைப்பதனால் என் பேர் இறைவன்?’ என்கிற
இந்தக் கட்டுரையினை
உங்களின் பார்வைக்கு வைப்பதில்
மிகுந்த மகிழ்ச்சியுண்டு.

ஜீன் ஆய்வு குறித்த
செய்திகள் அறிய
ஏக்கம் கொண்டவனாகவே இருந்து வருகிறேன்.

உலகில் உள்ள பெரும்பான்மையான மதங்கள்
இந்த ஆய்விற்கு முட்டுக்கட்டை போடுகிறது.
பல நாடுகள்…
இந்த ஆய்வை தங்களது நாட்டில் நிகழ்த்த
அனுமதிப்பதும் இல்லை.
வாடிகன் தலைமை போப்பும் கூட
‘இதெல்லாம் வேண்டாம்.
ஆண்டவனுக்கு மாறான செயல்.’
என சொல்லி விட்டார்.

இப்படிதான்…
கலிலியோ,
‘உலகம் உருண்டை /
பிரபஞ்சத்தில் சுழன்றபடி
சூரியனை அது சுற்றிவருகிறது’ என்றபோது…
‘மதத்திற்கும், கடவுளுக்கும் மாறாக
கலிலியோ பேசுகிறார்.
வேதம், உலகை தட்டை என்கிறபோது
கலிலியோ எப்படி உருண்டை என கூறலாம்?’
என்கிற கொதிப்பில்
அன்றைய வாடிகன் போப்
விஞ்ஞானி கலிலியோவுக்கு
சிரச்சேத தண்டனை வழங்கினார்.

காலம் மாறியது…
உலகம் உருண்டையென
கலிலியோ கூறிய கருத்தை
விஞ்ஞானம் ஒப்புக் கொண்டது,
உலக மக்கள் எல்லோரும்
ஒப்புக்கொண்டார்கள்!
இன்றைய போப்பிற்கு முந்தைய போப்,
தங்களின் முந்தைய போப்பாண்டவரும், அவரது சபையும்
கலிலியோவுக்கு வழங்கிய தண்டனைக்காக
பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்!
இவர்கள்தான் இன்றைக்கு
ஜீன் ஆராய்ச்சிக்கு எதிராக கொடி தூக்குகிறார்கள்.

உயிரைப் படைப்பதில்
இறைவனின் கீர்த்திகள் குறித்து
பேசாத மதங்களே இல்லை.
அத்தகைய மகத்துவம் பொருந்திய ‘உயிரை’
இன்றைய விஞ்ஞானிகள் சிலர்
தங்களது ஆய்வுக்கூடங்களில்
செய்பொருளாக தயாரிக்க துவங்கிவிட்டார்கள்!
இன்னும் முழுமைகூடிய
உற்பத்திப் பண்டமாக அதைப் பெருக்க
தீவிர முயற்சியிலும் இருக்கிறார்கள்.
 
மதவாதிகளுக்கு
இது குறித்த செய்திகள்
பேரதிர்வுகளைத் தரும் என்பதில்
இரண்டு கருத்து இருக்க முடியாது.!
அவர்களின் சொல்லை மீறி / தடைகளை மீறி
இந்த ஆய்வு நடப்பதால்
சகிக்கவும் முடியாதுதான்!
அவர்களது கடவுளர்களிடமிருந்து
‘பேட்டர்ன் ரைட்ஸ்’ வாங்காமல்
இந்த விஞ்ஞானிகள் தன்னிச்சையாக முயல்வது
எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும்?
எந்த மதத்துக்காரர்கள்தான் ஒப்புக்கொள்வார்கள்?

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள்
பூரண வெற்றிகொண்டபின்
‘எங்க வேதத்தில்…
இது முன்பே சொல்லப்பட்டிருக்கிறது’ என்று
வேத வரிகளில் சிலவற்றிற்கு
புதிய விளக்கங்களைச் சொல்லியபடி
கொல்லை வாசல் வழியாக
இந்த மதவாதிகள் உள்ளே வந்து
புதிய உயிரை
செல்லம் கொஞ்சுவார்கள்….
அங்கீகரிக்கவும் செய்வார்கள் என்பது வேறு செய்தி!
இவர்கள் தங்களது வேதத்தில்
ஒரு எழுத்துப் பிசகாது பாதுகாப்பார்கள் என்பது நிஜம்தான்.
ஆனால், புதுப் புது உரைகள் என்று எழுதி
வேத அர்த்தங்களைப் புதுப்பித்துக் கொண்டேயும் இருப்பார்கள்!

*

இந்தக் கட்டுரையில்
ஜீன் ஆய்வு பற்றி
மாலன் வழங்கியிருக்கும் தகவல்கள்
மிகவும் குறைவென நினைக்கிறேன்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்
இந்த ஆய்வு , எட்டி இருக்கிற உயரத்தைவிட
சில விஞ்ஞானிகள் தனிப்பட்ட முறையில்
‘ஸ்பான்ஸர்’களின் உதவியோடு
பிரச்சனையற்ற தீவுகளில் ரகசியமாக
நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆய்வின்
வெற்றிச் செய்திகள்
இன்னும் கூடுதலானதென்றும் தகவல்!

ஜீன் ஆய்வுகளைக் கொண்டு
மனித உறுப்புகள் ஒரு சில
உயிர்ப்போடு தயாரிக்கப்படுவதையும்,
தேவைப்படுபவர்களுக்கு
அதைப் பொருத்த முடியுமென்றும்
நான் வாசித்த கூடுதல் தகவல்கள் சொல்கின்றன.

இந்த ஆய்வின் இன்னொரு கூற்றாய்…
மனிதனை, முன்னூற்றுக்கும் அதிகமான வருடங்கள்
இளமை மாறாமல் வைக்க முடியும் என்றும்
மனித வாழ்வை
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீட்ட முடியும் என்றும்
மனிதனின் ஜீனில் சில திருத்தங்களைச் செய்து
கெடுமதிக் கொண்டவனை நல்லவனாகவும்
திருடனை போலீஸ்காரனாகவும்
மன்னிக்கவும்…
திருடனை உபகாரியாகவும்
முட்டாளைப் புத்திசாலியாகவும்
மாற்ற இயலும் என்கிற செய்திகளையும்
வாசித்திருக்கிறேன்.

மனித ஜீனில் சில திருத்தங்கள் என்கிற சங்கதி
விரைவில் நடைமுறைக்கு வரும் பட்சம்…
அதன் உதவி கொண்டாவது
புத்திசாலியாகவும் / நல்லவனாகவும்
ஒரு நாளாவது வாழ்ந்து பார்க்க
ஆசையுண்டு!
ஆபிதீன்…
உங்களுக்கு அப்படி ஏதேனும்
எண்ணம் உண்டாயென்ன?
முன் பதிவு செய்துவிடலாமா?!

*

நிலவில் மனிதன் கால்வைத்தபோது
அமெரிக்க வானொலி
உலகம் தழுவ ஒலிபரப்பிய
நேரடி செய்தி நிகழ்ச்சியை
தமிழக மக்கள் எல்லோரும்
கேட்டறியவேண்டும் என்கிற சிந்தனையில்….
‘வீடுகளில் ரேடியோ வைத்திருக்கும்
கட்சிக்காரர்கள் அத்தனைபேர்களும்
தங்களது ரேடியோவை
வீட்டு வாசலில் வைத்து
அந்த நேரடி ஒலிபரப்புத் தகவல்களை
பொதுமக்கள் அறியச் செய்யுங்கள்’
என தனது கட்சிக்கார்களுக்கு உத்தரவு இட்டவரும்
‘மனிதனை நினை’ என
அழுத்தம் தந்து போதித்தவருமான
பெரியார்
ஜீன் ஆய்வின் இந்த வெற்றியைக்
காணவும் / கொண்டாடவும்
உயிரோடு இல்லை என்பது
காலச் சதியின் கோரமாக இருக்கிறது.

கநாசு.தாஜ்

***   

படைப்பதனால் என் பேர் இறைவன்?
மாலன்

முதன் முறையாக
செயற்கை உயிரினம் ஒன்றை
மனிதன் படைத்திருக்கிறான்.
இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
கடவுளாகி விடுவானா மனிதன்? – மாலன்
*

மே 20, 2010.

கண்ணகல, புருவங்கள் உயர அறிவியல் உலகம் சற்றே அவநம்பிக்கையுடன் அந்தச் செய்தியை வாசித்தது. வாசித்தவர்களில் சிலர் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்கள். கலிலியோ வானை நோக்கி டெலஸ்கோப்பைத் திருப்பியதற்கு நிகரான கண்டுபிடிப்பு என்று குதூகலித்தார்கள். அணுகுண்டு வெடிப்பிற்குப் பின் மேற்கொள்ளப்பட்டுள்ள அபாயகரமான முயற்சி என்று சிலர் உதட்டைச் சுழித்தார்கள்.

அப்படி என்ன நடந்து விட்டது?

அமெரிக்காவில் உள்ள கிரேய்க் வெண்டர் என்ற விஞ்ஞானியும் அவரது குழுவினரும் (அவர்களில் மூவர் இந்தியர். ஒருவர் தமிழ்ப் பெண். ராதா கிருஷ்ணகுமார் என்ற அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்). செயற்கை உயிரை உருவாக்கியிருப்பதாகச் சொன்னது செய்தி.

என்னது, உயிரைப் படைப்பது கடவுள் என்றல்லவா நம்பிக் கொண்டிருக்கிறோம். அதை மனிதன் படைக்கிறானா?

ஆம்! மனிதன் உயிரைப் படைக்கிறான். அதுவும் சில வேதிப் பொருட்களைக் கொண்டு, சோதனைச் சாலையில்!

அதை விளக்கிக்கொள்ள வேண்டுமானால், முதலில் உயிர் என்றால் என்ன என்ற கேள்விக்குப் போக வேண்டும்.

இந்தக் கேள்வியைப் பல ஆயிரம் ஆண்டுகளாக மனித குலம் கேட்டுக் கொண்டிருக்கிறது. பல சிந்தனையாளர்கள் பல கருத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள். பஞ்ச பூதங்களையும் சேர்த்து கடவுள் உயிரைப் படைத்ததாக மதங்கள் சொல்கின்றன. ஆனால், அறிவியல் சொல்வது இதுதான்:

எது தனக்கு வேண்டிய சக்தியை உணவின் மூலம் பெற்றுக் கொள்கிறதோ – மெட்டபாலிசம் என்று  ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் – எது தன்னைப் பிரதி எடுத்துக்கொள்ளும் சாத்தியங்கள் கொண்டதோ, அதை உயிர் என்கிறது அறிவியல். மனிதன், யானை, கொசு, தென்னை மரம், பாக்டீரியா எல்லாம் செய்வது இதுதான். அதனால், அவை உயிருள்ளவை. மேஜை, குக்கர், பாத்திரம், கணினி, புத்தகம் இவற்றிற்கு இந்தச் சக்தி கிடையாது. அதனால், அவை உயிரற்றவை.

இந்தத் தன்னைத் தானே பிரதி எடுத்தல்தான் இயற்கையின் ஆச்சரியமும் கூட! தாவரங்களுக்கு அவை உருவாக்கிக் கொள்ளும் விதை போதும். பல விலங்குகளுக்கு (மனிதனையும் சேர்த்து) ஒரு தாயும் தந்தையும் தேவைப்படுகிறது.

வேப்பங்கொட்டையிலிருந்து தோன்றும் வேப்பமரம், வாழை மரம் போல் இருப்பதில்லை. இன்னொரு வேப்பமரம் போல்தான் இருக்கிறது. எப்படி? பசு மாட்டின் கன்று, யானைக் குட்டி போல் இருப்பதில்லை. ஏன்? மனிதர்கள் தாயின் ஜாடையில் அல்லது தந்தையின் சாயலில், தாயின் கண், தந்தையின் உயரம் என்று பிறக்கிறார்கள். எப்படி? அங்குதான் மரபணுக்கள் என்று நாம் தமிழில் சொல்லும் ஜீன்கள் வருகின்றன.

மரபணு என்றால் என்ன? புரத அமிலங்களின் தொகுப்பு என்று சிம்பிளாகச் சொல்லலாம். இந்தப் புரத அமிலங்களில் முக்கியமானது டி.என்.ஏ. (டி ஆக்சி ரிபோ நியூக்ளிக் ஆசிட் – Deoxyribonucleic acid) எங்கே இருக்கின்றன இந்த டி.என்.ஏ.க்கள்? எல்லா இடத்திலும் நம் தலை முடியில், நகத்தில், தோலில், உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், நம் ஒவ்வொருவரின் டி.என்.ஏ.யும் தனித்துவமானவை. உங்களுடையதைப் போல என்னுடையது இருக்காது. என்னுடையதைப் போல இன்னொருவருடையது இருக்காது. நம் கைரேகையைப் போல நம்முடைய அடையாளமே அதுதான்.

இந்த டி.என்.ஏ.வின் முக்கிய வேலையே தகவல்களை நீண்ட காலத்திற்குச் சேமித்து வைத்துக்கொள்வதுதான். பாரம்பரியமாகத் தகவல்களைச் சேமித்து வைத்துக் கொள்ளும் பகுதியை ஜீன் என்று சொல்கிறோம். டி.என்.ஏ.வின் வேறு பகுதிகள் செல்களை அமைக்கும் தகவல்களைக் கொண்டிருக்கின்றன.

செல்கள் என்றால்?

உயிரினங்களின் அடிப்படையான அமைப்பு இதுதான். பல செங்கற்கள் சேர்ந்து ஒரு சுவராகிறது. பல சுவர்கள் சேர்ந்து அறைகளாகின்றன, அறைகள் சேர்ந்து வீடாகிறது அல்லவா. அதுபோல செல்கள் சேர்ந்து திசுக்கள் ஆகின்றன, திசுக்கள் சேர்ந்து உறுப்புகள் ஆகின்றன. உறுப்புகள் சேர்ந்து ஒரு சிஸ்டம் ஆகின்றன. பல சிஸ்டம்கள் கொண்டது நம் உடம்பு.

அமெரிக்க விஞ்ஞானிகள் செய்தது செயற்கையாக ஒரு செல்லை உருவாக்கியதுதான். அதாவது, உயிரினங்களின் ஆதாரமான ஒன்றை உருவாக்கிவிட்டார்கள்.

இதில் என்ன புதிதாக இருக்கிறது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் குளோனிங் என்றெல்லாம் அமர்க்களப்பட்டதே? அது வேறு சமாச்சாரம். அது ஏற்கனவே இருக்கும், ஓர் உயிரிலிருக்கும் மரபணுக்களைக் கொண்டு அதைப் போன்ற ஒரு நகலை உருவாக்குவது. ஓர் ஆவணத்தை ஜெராக்ஸ் செய்வதைப் போல்.

ஆனால், இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் செயற்கை உயிர் இரண்டு வகையில் வித்தியாசமானது.

1. இந்த உயிருக்கு ‘முன்னோர்’கள் கிடையாது. அதாவது, முன்பிருந்த எந்த மரபணுவிலிருந்தும் இது உருவாக்கப்படவில்லை.
2. இது ஒரு சோதனைச் சாலையில் சில வேதிப் பொருட்கள் கொண்டு (வெறும் 4 பாட்டில்களில் இருந்தவை) தயாரிக்கப்பட்டது.

இப்போது தயாரிக்கப்பட்டிருப்பது ஒரு சிறு நுண்ணுயிர்தான். ஆனால், இது இனி நமக்கு வேண்டும் உயிரை(தாவரமோ, விலங்கோ), நமக்கு வேண்டும் பண்புகளோடு ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரையும் சில பாட்டில் ரசாயனங்களையும் கொண்டு தயாரித்துக் கொள்ளும் சாத்தியத்தை உறுதி செய்திருக்கிறது.

அதாவது, கடவுளின் வேலையை மனிதன் செய்யமுடியும் என்பதற்கான ஆரம்ப அறிகுறி இது.

அப்படியானால், செயற்கையாக ஒரு மனிதனைத் தயாரித்து விட முடியுமா? இன்று முடியாது. ஒரு மனிதனை மட்டுமல்ல, ஒரு குருவியை, கன்றுக்குட்டியைக் கூட இன்று தயாரித்துவிட முடியாது. காரணம், மனிதர்கள் பலவித செல்களால் ஆனவர்கள். (மனித உடலில் 100 டிரில்லியன் செல்கள் இருக்கின்றன (அதாவது 10க்குப் பின் 14 பூஜ்யங்கள்). ஒவ்வொரு செல்லுக்குள்ளும் பலவிதமான டி.என்.ஏ. அமைப்புகள் கொண்டவர்கள். அவற்றில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் எக்கச்சக்கமானவை. 

அதனால், இன்று செயற்கை மனிதனைத் தயாரிப்பது சிரமமானது. ஆனால், இன்று சிரமமானது எதுவும் நாளை சாத்தியமாகலாம். மனிதன் நிலவில் கால் வைக்க முடியும் என்பதை நம் தாத்தாக்களின் அப்பா நினைத்துப் பார்த்திருப்பாரா?

ஆனாலும், இந்தச் செயற்கை நுண்ணுயிரைத் தயாரிக்க முனைந்த கிரேய்க் வென்டர் மிகக் கவனமாகத்தான் முதலடியை எடுத்து வைத்திருக்கிறார். கிரேய்க் வென்டர் (ஹாமில்டன் ஸ்மித் என்ற இன்னொரு விஞ்ஞானியுடன் சேர்ந்து) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு (1995ல்) முதன் முதலாக வாழும் உயிரினம் ஒன்றின் டி.என்.ஏ. தொடரைக் கண்டுபிடித்தவர். 2003ல் ஒரு புது வைரஸை (செயற்கை வைரஸ் அல்ல) உருவாக்கியவர். ஆனாலும் முதலடியை மிகக் கவனமாகத்தான் எடுத்துவைத்தார்.

செயற்கை உயிரினம் ஒன்றை உருவாக்குவது என்று தீர்மானித்த அவர், அந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், அது ஒரு மிகச் சிறிய நுண்ணுயிராகத்தான் இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டார். அதற்கான ஒரு முன் மாதிரியாக மைக்கோபிளாஸ்மா ஜெனிடாலியம் என்ற பாக்டீரியாவை எடுத்துக் கொண்டார். அது, பிறப்புறுப்பின் பாதையில் வாழ்கிற ஒரு மிகச் சிறிய பாக்டீரியா. 485 ஜீன்கள் மட்டுமே கொண்டது.

சில ஜீன்களைக் கழித்துவிட்டு அதை இன்னும் எவ்வளவு சின்னதாக ஆக்க முடியும் என்று பார்த்தார் வென்டர். 100 ஜீன்கள்வரை நீக்க முடிந்தது. ஆனால், அதையும் ஒரே நேரத்தில் நீக்க முடியவில்லை. அதற்கு நிறைய காலம் பிடித்தது. ஏனெனில், ரொம்ப மெதுவாக வளரக்கூடிய உயிரினம் மைக்கோபிளாஸ்மா ஜெனிடாலியம்.

ஆனால், அதற்குள் அறிவியல் உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. டி.என்.ஏ.. தயாரிக்கும் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கான செலவும் குறைந்துகொண்டே வந்தது. அதனால், ஜீன்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியைக் கைவிட்டு நேரடியாக மை.ஜெனிடாலியத்தின் சாயலில் ஒரு செயற்கை உயிரினத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர் கிரேய்க் வென்டரும் அவரது குழுவினரும்.

கிரேய்க் குழுவினரைப் போன்று பலர் செயற்கை உயிரியல் சோதனைகளில் இறங்கி உள்ளனர். அநேகமாக அமெரிக்காவில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்களில் பல முக்கியமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஹார்வேர்ட் மருத்துவக் கல்லூரியில் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

டி.என்.ஏ.க்களில் தகவல்கள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தாலும் அந்தத் தகவல்களை எடுத்துச் சென்று ரிபோசம்ஸ் என்பவைகளிடம் எடுத்துச் செல்பவையாக ஆர்.என்.ஏ. என்ற இன்னொரு அணுக்கூட்டம் இருக்கிறது. இவற்றைப் பற்றிய ஆராய்ச்சி ஹார்வேர்ட்-ல் நடக்கிறது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி தகவல்களைக் கையாள்வது போல் செல்களை தங்களிடம் உள்ள மரபு சார்ந்த தகவல்களைக் கையாளச் செய்ய முடியுமா என்ற கோணத்தில் ஆராய்ச்சி நடக்கிறது.

செயற்கை உயிரியல் என்பது ஒரு தனித் துறையாக வளர்ச்சி அடைந்து வருவதைத்தான் இது காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக டி.என்.ஏ. தயாரிப்பிற்கான செலவு குறைந்து வருவதும், அதில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் இது எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தைப் போல உலகை ஆளப்போகிற ஒரு துறையாக இருக்கப்போகிறது என்று கோடிகாட்டுகிறது.

ஆனால், இதுவே பலரது கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்பதும் உண்மை. அறிவியலாளர்கள் நல்ல நோக்கத்தோடேயே இந்த ஆராய்ச்சிகளைச் செய்யட்டும். ஆனால், தவறுதலாக அல்லது ஒரு விபத்து போல் ஏதாவது நடந்து விட்டால்? ஜுராசிக் பார்க் சினிமாவில் வருவது போல் ஏதாவது பூதம் கிளம்பிவிட்டால்? இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மனிதனைச் சுரண்டி, காசு பார்க்கும் புதிய வியாபாரம் முளைத்து விட்டால் என்பதெல்லாம் அவர்களது கவலைக்குக் காரணம்.

இந்தக் கவலைகள் நல்ல எண்ணத்தோடும் சில ஆதாரங்களோடும் முளைக்கிற கவலைகள் என்றே எடுத்துக் கொள்வோம். ஆனால், மனித குல வரலாற்றைப் பார்க்கும்போது ஆங்காங்கே சில இடறல்களும் தவறுகளும் நடந்திருந்தாலும் அறிவியல் பெரும்பாலும் நன்மையே செய்து வந்திருக்கிறது. அறிவியலை நம்பாதவர்கள் வரலாற்றையாவது நம்பலாம், அதற்கும் மனம் இல்லையென்றால், கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்ளலாம்.

இப்போது அவரது வேலையில் கொஞ்சத்தை மனிதன் எடுத்துக் கொண்டு விட்டால், இது போன்ற பிரார்த்தனைகளுக்கு காது கொடுக்க, அவருக்கு கூடுதலாகச் சற்று நேரம் இருக்கும்.

***


நன்றி: மாலன் / புதிய தலைமுறை (10 ஜுன், 2010)
தட்டச்சி , வடிவம் அளித்த தாஜுக்கும் நன்றி!
Taj’s E-Mail : satajdeen@gmail.com