மாலதி மைத்ரி பார்வையில் ‘லுமூம்பா’

குமுதம் தீராநதி இதழ் (மே – 2004)ல் மாலதி மைத்ரி எழுதிய கட்டுரை. மாலதி மைத்ரிக்கும் , தீராநதிக்கும் , மீள்பிரசுரம் செய்த ‘ஊடறு‘வுக்கும் , நன்றியுடன்.

***

சமகாலத் தமிழ் அரசியல்- இலக்கியச் சூழலில் உறுதியாகவும், உரத்தும், இடையறாது ஒலிக்கும் குரல் மாலதி மைத்ரியுடையது. கவிதைகளில் பெண்மொழியின் உச்சபட்ச சாத்தியத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பவரும் மாலதி மைத்ரிதான். ‘ஆபாச எழுத்துகள்’, ‘அதிர்ச்சி மதிப்பீட்டுக்கான எழுத்துகள்’ என்றெல்லாம் கலாசார காவலர்கள் இன்றைய பெண் எழுத்துகளை தூற்றும் போதெல்லாம் அந்தக் காவலர்கள் மீதான முதல் அடியாகவும் ஆழமான அடியாகவும் மாலதியின் குரல் ஒலிக்கிறது. – ‘சத்தியக் கடதாசி’

***

பத்ரீஸ் லுமூம்பா

மாலதி மைத்ரி
lumumbaஅன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியதும் கி.ரா.வின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் செல்ல அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தோம். என் மகள் குறிப்பிட்ட எண்ணிலிருந்து  தொலைந்து போன கார்ட்டூன் சேனலைத் தேடிக் கொண்டிருந்தாள்.  திடீரென ஆப்பிரிக்க மேளம் அதிர அவளுக்குத் தலைவாரி விட்டபடியிருந்த நான் பார்வையை உயர்த்தினேன். திரை எரிந்து கொண்டிருந்தது.  குளோசப் காட்சி பின் நகர இரண்டு தார் டின்களிலிருந்து தீ சடசடவென கொழுந்துவிட்டு எரிகிறது. சில்லவுட்டில் இருவர் எதையோ வாளால் அறுத்தும் கோடரியால் வெட்டியும் துண்டுகளை டின்களில் போட்டபடி இருந்தனர். அவர்களின் வாயையும் மூக்கையும் சேர்த்து துணியால் கட்டியிருந்தனர். பிறகு காமிரா தீயை சுட்டிவிட்டு அணைகிறது.  இதன் பிறகு படம் ஆப்பிரிக்கக் காலனிய நகரமொன்றின் பரபரப்பான நெருக்கடி மிகுந்த காட்சிகள் கோஷங்கள், போராட்டங்கள், கலவரங்கள், வெள்ளை இராணுவத்தின் அடக்குமுறை என வலி நிறைந்த வாழ்க்கையைப் பேசத்தொடங்கி என்னை வெளியே போகவிடாமல் நிறுத்திவிட்டது. ஒரு ஐந்து நிமிடக் காட்சிகள் சென்ற பிறகு தான் இன்றுதான் ‘லுமும்பா‘ படம் என உணர நேர்ந்தது. 

பெல்ஜீய காலனி ஆதிக்கத்திலிருந்து காங்கோவை விடுவிக்கப் போராடும் லுமூம்பா 1960 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு அவரது மக்கள் தேசியக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க அவர் காங்கோவின் முதல் பிரதமராகப் பதவியேற்கிறார். அவர் அரசு முற்றாக பெல்ஜீய ராணுவம் காங்கோவை விட்டு வெளியேற வேண்டும் என விரும்புகிறது. அதற்கான அறிக்கைகளையும் வெளியிடுகிறார். இக் கோரிக்கையை உலகநாடுகளின் கூட்டத்தில் அறிவிக்கிறார். தனது காலனியை இழக்க விரும்பாத பெல்ஜீய அரசு லுமூம்பாவை ஒழித்துக் கட்ட தீர்மானித்து அமெரிக்காவுடன் சேர்ந்து திட்டம் வகுக்கிறது. காங்கோவின் பிற மாவட்ட இனக்குழு தலைவர்களை லுமூம்பாவுக்கு எதிராகத் திரட்டுகிறது. இதில் கடாங்கா நிலப்பகுதி முழுவதும் பெல்ஜீய கட்டுப்பாட்டில் இயங்கும் தலைமையின் கீழ் தனி அரசாக உருவாகிறது. பெல்ஜீய இராணுவத்தின் கீழ் இயங்க மாட்டோம் என காங்கோ சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபடுகின்றனர். கலகக்காரர்கள் ஐரோப்பிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் ஆப்பிரிக்க கண்டத்தை கம்யூனிஸ்டுகள் கைப்பற்ற முனைவதாகவும் புரளி பரவவிடப்படுகிறது. லுமூம்பா,  ஐ.நா படைகளை காங்கோவுக்கு அமைதியை நிலைநாட்ட அழைக்க ஐ.நா படைகள் காங்கோவுக்குள் நுழைகின்றன. பிறகு ஐ.நாவும் பெல்ஜீய அரசுடன் இணைந்து உள்நாட்டுக் கலகங்களுக்கு துணைபோகிறது. இரண்டே மாதத்தில் லுமூம்பாவின் அரசு தூக்கியெறிப்பட்டு அவர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்படுகிறார். லுமூம்பா அரசின் கர்னலாக இருந்த மொபுடு பெல்ஜீய அரசின் துணையுடன் இராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுகிறான்.

லுமூம்பா, வீட்டுக் காவலிலிருந்து தப்பி தனது ஆதரவாளர்களைத் திரட்ட முயலுகையில் தனது இரு தோழர்களுடன் கைது செய்யப்படுகிறார். பெல்ஜீய அமெரிக்க அதிகாரிகள் கூடிப்பேசி லுமூம்பாவை கொன்றுவிடும் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை சில இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். காவலில் அவர் பெல்ஜீய இராணுவ ஜெனரல்களின் முன்னிலையில் கருப்பினத் தலைவர்களாலும் சிப்பாய்களாலும் கொடுமையான வன்முறைக்கு உள்ளாகின்றார். அவரை கண்டபடி அடித்து நொறுக்கின்றனர் அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்படுகிறது. அவரும் இரு தோழர்களும் 1961 ஜனவரி மாத முதல் வாரத்தில் கார் மூலமாகவும், விமானம் மூலமாகவும் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் முகாம் முகாமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வழி நெடுகிலும் கறுப்பு சிப்பாய்கள் அவர்களை அடித்து உதைத்தபடியே இருக்கின்றனர். பின்பு தெற்கு நகரமான எலிஸபெத்துக்குக் காரில் அழைத்துச் செல்லப்பட்டு ஜனவரி 17ந்தேதி ஒரு வனப்பகுதியில் மரத்தினடியில் நிற்க வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் உடல் அங்கேயே புதைக்கப்படுகிறது.

பிறகு லுமூம்பா மற்றும் அவர் தோழர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டால் காங்கோவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்று கருதிய அதிகாரிகள் அவர்களது உடலை முற்றாக அழித்துவிட திட்டமிடுகிறார்கள். அதன்படியே இரண்டு பெல்ஜீயர்களும் சில கறுப்புச் சிப்பாய்களும் அமில பேரல்களுடன் சென்று மூன்று பேர்களின் உடலையும் தோண்டி எடுத்து முரட்டுத் துணியினால் கட்டி லாரியில் ஏற்றி பல கிராமங்களைச் தாண்டி சென்று மலைக் கிராமத்தின் அடிவாரத்தில் அவர்களின் உடலை அவிழ்க்கினறனர். படத்தின் ஆரம்பக் காட்சிகள் மீண்டும் வெளிச்சத்தில் நிகழ்கின்றன. மூவரின் உடலும் வாளாலும் கோடரியாலும் வெட்டி துண்டாக்கப்பட்டு அமில பேரல்களில் போட்டு எரிக்கப்பட்ட தீ வான் நோக்கி எழுவதுடன் படம் முடிகிறது.

படம் முடிந்தவுடன் நான் உறைந்து போய் அமர்ந்திருந்தேன் மீள முடியாத வாதைக்குள் சிக்கி பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்தேன்.
ஏகாதிபத்தியங்களின் முன் மூன்றாம் உலக வாழ்க்கை என்பது மிகவும் அவலமானதாகவும் அற்பமானதாகவும் மதிப்பற்றதாகவும் மாறியது ஏன்? இனத்தின் பேராலும், மதத்தின் பேராலும் உள்நாட்டு கலவரங்கள் தூண்டப்படுவதன் காரணங்கள் என்ன? அதன் பின்னணியில் இயங்கும் அந்நிய சக்திகள் யார் யார்? சொந்தநாட்டு மக்களுக்கு எதிராகவே அந்நாட்டு தலைவர்களை அதிகார வெறிபிடித்தவர்களாக உருவாக்குவது எப்படி சாத்தியம்? இன்றளவும் தொடரும் மறைமுக ஆதிக்கக் கொடுரத்திலிருந்து யார் வந்து நம்மை மீட்டெடுப்பது? ஒரு ஏகாதிபத்திய குடிமக்களின் வாழ்க்கை வசதிக்காக சராசரியாக இருபது மூன்றாம் உலகக் குடிமக்களின் செல்வமும் உயிரும் கொள்ளை போய்க் கொண்டிருப்பதை எச்சட்டத்தைக் கொண்டு பாதுகாக்க முடியும்? “சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் தட்டேந்தி நிற்கும் துயரம். எந்த நீதிமன்றத்திற்குப் போய் இதற்காக நியாயம் கேட்பது? விடுதலை என்பது என்ன? ஜனநாயகம் என்பது என்ன? இந்த வார்த்தைக்கான அர்த்தங்கள் இன்று உயிரோடு இருக்கின்றனவா?”

முதல் காலனிய மனோபாவம் ஒரு பெண்ணை வெற்றிகொள்வது அவளுடலை தனக்கான உபரி உடலாக வைத்துக்கொள்வது என்ற ஆணின் மனோபாவத்திலிருந்தே விரிவடைகிறது. ஆண்-பெண் என்ற தனித்த இரு உடல்களுக்கிடையிலான அரசியலே இரு நாடு களுக்கிடையிலான அரசியலாக விரிவடைகிறது. வன்முறையை செயல்படுத்தவும் ஏற்றுக் கொள்ளவுமான மனப்பழக்கம் இந்த ஆண்-பெண் எதிரிடைகளிலிருந்தே உருவாகிறது. ஆனால் இன்றைய உலக ஆதிக்க அரசியல் எந்த ஒரு தர்க்கத்திற்குள்ளோ ஆய்வுக்குள்ளோ அடங்கிவிடாது. புத்தனைப்போல, இயேசு போல, சேகுவேரா போல மீட்பர் உலகில் தோன்ற வேண்டும். ஆனால் அந்த மீட்பர் இம்முறை ஒரு பெண்ணாக இருக்கப்போவது மட்டும் உறுதி. அந்த மீட்பரின் உதயம் எந்த நூற்றாண்டில் நிகழுமோ தெரியவில்லை.

கரையில் படகுக்காக மகளோடு நின்ற தன் மனைவியை காலனி வெறியர்கள் பிடித்துவிட அடுத்த கரையை நெருங்கவிருந்த லுமூம்பா தன் மனைவி வராதே எனத் தடுத்தும் படகைத் திருப்பிக்கொண்டு கரைக்கு வந்து கைதாகிறார். கணவனும் மனைவியும் பேச்சற்று ஒருவரின் கண்களை ஒருவர் பார்க்கின்றனர். அந்தப் பார்வையில் பால் பேதமுமில்லை ஆதிக்கமுமில்லை இறுதிப் பார்வை அது. 

***

நன்றி : தீராநதி , மாலதிமைத்ரி

சுட்டிகள் :

‘லுமூம்பா’  பற்றி விக்கிபீடியா 

மாலதி மைத்ரி – நேர்காணல் (சத்தியக் கடதாசி)

மாலதி மைத்ரி – படைப்புகள்  (கீற்று)