“என்ன பண்ணிண்டிருக்கே இப்போ?”

கரிச்சான் குஞ்சு அவர்கள் எழுதிய ‘பசித்த மானிடம்’ நாவலை மீண்டும் வாசித்தேன்,  ஏடகம் உதவியுடன்.

தொழுநோயாளி கணேசனிடம் குருடி சொல்லும் பகுதி இது :

“நான் போனேன் (குடும்பத்தை) தேடிக்கிட்டு. மூஞ்சிலே காறி உமியறாப்பலே பேசினாங்க. திரும்பி இங்கேயே வந்துட்டேன். அவருக்கு உறவுக்காரங்கன்னு வந்தவங்களும், இங்கே ஒண்ணும் பசையில்லேன்னு தெரிஞ்சதும் செத்த மாட்டை உண்ணி விட்டுட்டுப் போற மாதிரிப் போயிட்டாங்க. அப்போ இந்தப் புள்ளைக்கு ரண்டு வயசுகூட ரொம்பலை. டீக்கடையை எடுத்துக்கிட்டவரு ஏழெட்டு மாசம் ஏதோ குடுத்துக்கிட்டிருந்தாரு. அப்புறம் கோவில்காரங்க வந்து கடையைக் கலைச்சிட்டாங்களாம் அங்கே இருக்கக் கூடாதுன்னு. அதனாலே எனக்கு வந்துக்கிட்டிருந்த ரண்டு காசும் போயிடுச்சு. அப்புறம் இட்லி சுட்டு வியாபாரம் பண்ணினேன். கண்ணில்லாததனாலே எல்லாரும் ஏமாத்திட்டாங்க, எப்படியோ மானமாக் காய்ச்சிக் குடிக்கணுமேன்னு பிச்சை எடுக்கறேன். அமாவாசை, கிருத்திகைகள்ளே இங்கே வந்து குந்திப்பேன். கொஞ்சம் கிளக்கே அமலாசிரமம் இருக்குப் பார்த்திருக்கீங்களா, மாதா கோயில். அங்கே வாரத்திலே ரண்டு மூணு நாள் போறதும் உண்டு. இந்தப் பிச்சைக் காசை வெச்சிக்கிட்டு வயத்தை வளர்த்துக்கிட்டிருக்கேன். நீங்க பேசின வார்த்தைங்கள்ளாம் கேட்டேன். எனக்கு ஆம்பிள்ளைத் துணை வேணும், இந்தப் புள்ளையைப் பிச்சைக்கு விடாமை இருக்கணும். பெருமாள் நிச்சயமா இதைத் தப்புன்னு கொள்ள மாட்டான்னு தோணிச்சு; உங்களைக் கூட்டியாந்திருக்கேன், நீங்க யாரு என்னங்கிறதெல்லாம் நான் கேட்டுக்கப்போறதில்லை. என்னோடே இருங்க. ரண்டுபேரும் சேந்து எதாவது சின்ன வியாபாரம் பண்ணிப் பொளைச்சிப்பம், நீங்க வெளியே கவனிச்சுக்குங்க. நான் இட்லி இடியாப்பம் செஞ்சு தரேன். வியாபாரம் பண்ணுவம். இந்தப் புள்ளையை ஆளாக்கப் பாடுபடுவோம். பக்கத்துலே உள்ளவங்க எதனாச்சும் சொல்லுவாங்க கொஞ்ச நாளைக்கு. அப்புறம் தானா வாயடைச்சுப்போயிடுவாங்க. அங்கங்கே அவுங்க அவுங்க குடிசையிலும் எத்தனையோ இருக்கு ஓட்டையும் ஒட்டும். நம்ம மனசு ஒத்துப்போயிட்டா, வேறே ஒண்ணுக்கும் நாம் பயப்படவே வேண்டாமே, எனக்கும் துணை வேணாமா, எல்லாத்துக்கும்தான் சொல்றேன். எனக்கும் ஆசை இருக்கக் கூடாதா என்ன, சும்மா இருங்க என்னோடே” என்றாள் குருடி. கணேசனும் இருந்துவிட்டான்.
(பக்.231)

*
நாவலில் ‘கிட்டா’வின் பாத்திரம் எதற்கு என்று எனக்கு விளங்கவில்லை. இந்தக் கடைசிப் பகுதிக்கு இருக்கலாம்!

 

“சரி, என்ன பண்ணிண்டிருக்கே இப்போ?” என்று பெரும் பணக்காரன் கிட்டா கேட்கிறான் – ஞானி கணேசனிடம்

“என்ன பண்ணணும்? ஒண்ணும் பண்ணலை, சும்மா இருக்கேன்.”

“சும்மாத் தொழில் சோறு போடுமா?”

“போடறபோது போடறது. போடாட்டாலும் நான் கவலைப் படறதில்லை , நீ என்ன பண்ணிண்டிருக்கே இப்போ?”

“அவஸ்தைப்பட்டுண்டிருக்கேன், அழுதுண்டும் இருக்கேன். ஒண்ணுமே பிடிக்கலை மனுஷாளைக் கண்டா அடியோடே பிடிக்கலை ”

“அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமோ? உனக்கே உன்னைப் பிடிக்கலேன்னு அர்த்தம்.”

“உனக்குப் பிடிக்காதவாளே கிடையாதா?”

“எனக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனாலே, எல்லாரையும் எனக்குப் பிடிச்சிருக்கு. கிட்டா, இன்னொரு ரகசியம் தெரியுமோ உனக்கு தனியா உக்காந்து இதை நினைச்சுப் பாரு முன்னேல்லாம், எல்லாரையும் எல்லாத்தையும் உனக்குப் பிடிச்சுதுன்னு வெச்சிண்டு இருந்தையோன்னோ, அதுக்குக் காரணம், அவாளையும் அதுகளையும் நீ உன்னுடைய சொந்தப் பிரியத்துக்காகத்தான் அவ்வளவு பிரியமா வெச்சிண்டிருந்தே, அதே மாதிரிதான் அவாளும் அதுகளும் உனக்காக இல்லவே இல்லை, தங்களுக்காகத் தங்கள் பிரியத்துக்காக உங்கிட்டே பிரியமா இருந்ததுகள். இங்கே, இந்த உலகத்துல யாருக்குமே, தங்களைவிட வேறு எதுவுமே பிரியமாக இருக்க முடியாது. நீ அதையும் இழந்துட்டு, உன்னையே உனக்குப் பிடிக்கலேன்னு சொல்ற விபரீத நிலைக்கு வந்திருக்கையே. இப்படி வீணாப் போயிட்டையே கிட்டா; தற்கொலையைவிட இது இன்னும் கொடுமை. உயிரை அழிக்கிறேன்னு உடம்பைக் கொன்னுக்கிற பைத்தியக்காரத்தனம் தான் தற்கொலை,”
(பக்.269)
*
நன்றி : காலச்சுவடு
*
தொடர்புடைய கட்டுரை :
உடைதலில் மிளிரும் பசித்த மானிடம்! – ஆ.சந்திர சேகர்,