18++ : குறும்பா, இது என்ன கரும்பா?

கோவிலன் எழுதிய ’தட்டகம்’ நாவலிலிருந்து….(பக் : 285-288)

***
இறக்கத்து குறும்பா மகா கில்லாடி. அவளை நாடி வந்த ஆண்கள் அனைவரும் தோற்றுத் திரும்பினார்கள். குறும்பா குளக்கரையில் தனியாக வசித்து வந்தாள். துணைக்கு அத்தை ஒருத்தி இருந்தாள். தேடிவந்த ஆண்களெல்லாம் வெற்றிலையில் தட்சிணை வைத்து, அத்தையை மகிழ்வித்தார்கள். சிங்காரித்துக் கண்ணில் மைதீட்டி, சாந்துப்பொட்டும், சந்தனமும் வைத்து குறும்பா உள் அறையில் நின்றிருந்தாள்.  எப்போதும் நீராடல், எப்போதும் அலங்காரம். நீராடிய பிறகே அடுத்தவனைத் தொடுவாள் குறும்பா. ஒருமுறை வந்தவன் அடுத்தமுறை வரமாட்டான்.

தேவியைத் தரிசிக்க சிறுவர்களும் வந்தார்கள். சென்னையில் வக்கீலுக்காகப் படிப்பவர்களும், டாக்டருக்குப் படிப்பவர்களும், இளம் வாலிபர்களும் வந்தார்கள். அவர்களை வாஞ்சையோடு வரவேற்றாள் குறும்பா. பிறந்த மேனியாய்ச் சுவரில் சாய்ந்து நின்று , அவர்களின் கைகளைப் பற்றி ஆசி வழங்கி உச்சி முதல் அடிவயிறு வரை நீவினாள்.

குறும்பா இது சொன்னாள் :

‘கொழந்தைகளுக்கு இது போதும்.’

உள்ளூரிலும், வெளியூரிலும்  குறும்பாவின் பேச்சு அடிபட்டது.

காமுகர்களின் கூட்டம் ஒன்று வந்தது. படுமுட்டாள்கள்! “இப்படி ஒரு குறும்பா மலையாள மண்ணுல இருக்கிறாள்னா அவள நாங்க அவசியம் பாக்கணும். ஒரு பெண்ணுக்கு இத்தனை குறும்பா?”

அத்தை மசியவில்லை.

”பாக்கலாம், பாக்கலாம். வெற்றிலையும் தட்சிணையும் வெய்யுங்க.”

“தட்சிணை வெக்கறோம்.”

“ஒரு தடவை ஒருத்தன் மட்டும்.”

“போதும்”

“அடுத்தவனைத் தொடனும்னா பொண்ணு குளிச்சிட்டு வரணும்.”

“வரட்டும்.”

முதலாவது மடையன் தட்சிணை வைத்தான்.

குறும்பா நீராடிவிட்டு அலங்கரிந்து நின்றாள். இரண்டாவ்து மடையன் படு முட்டாள் தட்சிணை வைத்தான். குறும்பா நீராடிவிட்டு அலங்கரிந்து நின்றாள். நான்காவது காமுகன், மடையன் முட்டாள் தட்சிணை வைத்தான். அவனும் இடத்தைக் காலி செய்தபோது நீராடிவிட்டு திரும்பிய குறும்பா மெதுவாகக் கேட்டாள் :

“வர்றதுக்கு ஆம்பளைங்க யாராச்சும் இருக்காங்களா?”

“யாருமில்ல.”

……

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாடோடி வந்தான்.

சடைபிடித்த தலைமுடி. செம்புத் தாடி. நீண்ட முகம். நீளமான மூக்கு. கண், காது, உதடுகள், வாய், உடம்பு ,நீண்டு நிமிர்ந்த ஒரு மனிதன். தோளில் மூட்டை. பால்காயம், ரத்தச் சந்தனம், மயில் என்ணெய், கஸ்தூரி, கோமேதகம், கன்மதம், எலும்புக்கூடு மட்டுமே நாடோடியின் உடம்பில் இருந்தது. சதையும் நாடி நரம்புகளும், புஜங்களும் எலும்புக் கூட்டில் ஒட்டியதைப் போன்றிருந்தன.

நாடோடி மூட்டையை இறக்கி வைத்தான்.

நாடோடி விசாரித்தான்.

“பொண்ணு எங்க?”

அத்தை பதிலளித்தாள்:

“அங்கே, இங்கே எல்லாம் இந்த எடத்தில வேண்டாம். மலையாளத்தில பேசு.”

“காலங்காலமா மலையாள மண்ணுலதான் சுத்திட்டு வர்றேன். பொண்ணு எங்க?”

அத்தை ஆத்திரப்பட்டாள்:

“பாக்கணுமா? தட்சிணை வெக்கணும்.”

நாடோடி சொன்னான்:

“நான் வைத்தியன், ஜோதிடன், மந்திரவாதம் தெரியும். முகத்தைப் பாத்துச் சொல்லுவேன். தட்சிணை எனக்குத் தரணும் அம்மா.”

“கேட்டுட்டு வர்றேன்.” என்றாள் அத்தை.

நிலைப்படியில் குறும்பாவைப் பார்த்தான் நாடோடி. உலகப் பேரழகி. கேள்விப்பட்டது அனைத்தும் உண்மை என நாடோடி புரிந்து கொண்டான்.

“அம்மா தாயே..” நாடோடி கண்களைப் பாதிமூடி, தனது கையை மார்பின் மீது வைத்தான்.

அழகி கேட்டாள்:

“என்ன வேணும்?”

தொண்டையைச் செருகி நாடோடி சொன்னான் :

“முகலட்சணம் பார்த்துச் சொல்லுவேன். நாடி பார்ப்பேன். முற்காலம், வருங்காலம், நிகழ்காலம் பத்திச் சொல்வேன். மங்கலம் உண்டாகும். மந்திரம் பண்ணுவேன். நோய் தீரும்.”

குறும்பா தயங்கினாள்.

“நாடி பாக்கணும்னா கையைத் தொட மாட்டியா?”

”கையைப் பிடிச்சுதான் நாடி கண்டுபிடிக்க முடியும்.”

குறும்பா எதிர்த்தாள்.

“என்னத் தொடனும்னா குளிக்கணும்.”

நாடோடியும் தயங்கினான். குளித்து எத்தனை நாட்களாயிற்று..

அவ்வேளையில் குறும்பா சொன்னாள் :

“பலா குளிச்சாதித் தைலம் தர்றேன். இண்டங்கொடி நாரும், வாகைப் பொடியும் தர்றேன். துடைக்கறதுக்கு ஈரிழைத்துண்டு, மாற்றுத்துணி…அத்தை.”

நாடோடி குளித்து, துடைத்துவிட்டு திரும்பினான்.

நாடியைப் பார்த்து நாடோடி சொன்னான்:

“முகலட்சணத்த பாக்கறப்ப கொழந்த நீ ஒரு ராணி. மகாராணி. கடலோட இக்கரையையும் மூணு உலகத்தையும் நீ ஆட்சி பண்ணுவே. ஆனா உன்னோட நோயைத் தெரிஞ்சு, நோயை குணப்படுத்தணும்னு ஊர் சுத்திகிட்டிருந்தப்ப மனசுக்குள்ளே ஒரு அழைப்பு கேட்டது. அதனாலதான் வந்தேன். கொழந்தை உனக்கு மன சமாதானம் இல்ல. அதனாலதான் கண்ணால எல்லோரையும் அலட்சியப்படுத்தற சுபாவம். மனுசன் சில சமயம் தோற்கணும். அது பிரபஞ்ச நியதி, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எவரும்  ஒருதடவை தோற்கணும். கொழந்தை ஏன் தோற்க மாட்டேங்கற. உன்னோட குடல்ல ரெண்டு பருக்கை. குறுக்கும் நெடுக்குமா கெடக்குது. குறுக்கும் நெடுக்குமா குடல்ல அப்படியும் இப்படியுமா கெடக்கற இதுங்க அசையணும். செரிக்கணும். கொழந்தையோட நோய் தீரும்.”

“அதுக்கு என்ன வைத்தியம்?” குறும்பா கேட்டாள்.

“வைத்தியம் இருக்கு. கொழந்தை தாம்பாளம் எடுக்கணும்.”

பீடத்தில் ஐந்து திரியைக் கொண்ட குத்துவிளக்கு ஒளிர்ந்தது. நாடோடி களம் வரைந்தான். பத்மாசனத்தில் அமர்ந்தான். குறும்பா நீராடிவிட்டு வந்தாள். கதவும், பின்  கதவும் சாத்தப்பட்டன.

கருத்தா கட்டளையிட்டான்.

“நூல் உறவு இருக்கக் கூடாது.”

கருத்தாவுக்கும், கருவுக்குமிடையில் நூல் உறவு அறுபட்ட நிலையில் நாடோடி தாம்பாளத்தில் திரியைக் கொளுத்தினான். குறும்பா கையேந்தி நின்றாள்.

தீப் பந்தத்தின் தீபச்சுடரில் குறும்பா பிரபஞ்சத்தை தரிசித்தாள். ஏழுமுறை எதிரிலும் , மூன்று முறை தலைமீதும் தாம்பாளத்தால்  ஆரத்தி எடுத்தாள். நாடோடி உத்தரவிட்டதைப் போல குனிந்து களத்தினெதிரில் தட்டைச் சமர்ப்பித்தாள். அப்போது முழங்கைகளைத் தரையிலூன்றி மல்லாக்க விரித்து நாயைப் போல மண்டியிட்டு குறும்பா தொழுது நின்றாள். பிரியத்தோடும், பாசத்தோடும், கருணையோடும், நாடோடி அவளது சிரசையும் , கழுத்தையும், முதுகையும் வருடினான். அச்சப்படத் தேவையில்லை. திகைப்பும் வேண்டியதில்லை. மெதுவாக மெதுவாக முதுகைத் தட்டி உடலும் மனமும் விழிப்புற்றபோது நாடோடி சொன்னான்:

“கொழந்தை அசையாம நின்னா போதும்.”

குனிந்தும் குனியாமலும் அவள் பின்னால் நின்று தாழ்ந்து போகும் முகத்தை உயர்த்தி, வலது கையால் இடுப்பைச் சேர்த்தணைத்தான். சற்றும் நோக வைக்காமல் பீதியூட்டாமல் நாடோடி ஏறினான். தன்னை முழு முற்றாக ஆரத்தழுவியதையும், தன்னை இழந்ததையும் பிரபஞ்சத்தில் கரைந்ததையும் குறும்பா உணரவில்லை.

இறக்கத்து குறும்பா நாடோடியுடன் ஓடிப்போனாள்.

***

நன்றி : கோவிலன், சாகித்திய அகாதெமி