”ஆபத்து முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்தான்” – ரவிக்குமார்

( 16.12.2019 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,சிபிஐ,சிபிஐ எம், சிபிஐ எம்எல்,மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ரவிக்குமார் M.P ஆற்றிய உரை)

*

தோழர்களே!

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அந்தப் போராட்டத்துக்கு நம்முடைய ஆதரவைத் தெரிவிக்கும் விதமாகவும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,இடதுசாரிக் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று இரவு முழுவதும் டெல்லியில் மாணவர்கள்மீது போலீஸ் நடத்திய மிருகத்தனமான காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவியதைப் பார்த்திருப்பீர்கள்.நிராயுதபாணியாக நூலகத்தில், கழிவறையில் இருந்த மாணவர்கள்மீது மிகக் கொடூரமாகக் காவல்துறை தாக்குதல் நடத்தியது. போலீஸ்காரர்கள் மட்டுமின்றி ஜீன்ஸ் பேண்ட்டும் டி ஷர்ட்டும் போட்டுக்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டிருந்த ஒருவன் மாணவிகளைக் கட்டையால் அடிக்கும் புகைப்படம் நெஞ்சைப் பதற வைத்தது. பேருந்து ஒன்றின்மீது போலீஸ்காரர் ஒருவர் கேனில் எடுத்துச்சென்று எதையோ ஊற்றுகிற வீடியோவைப் பார்க்க முடிந்தது. படுகாயமடைந்த மாணவர்களைக் கைது செய்து அவர்களுக்கு சிகிச்சைகூட அளிக்காமல் போலிஸ் லாக் அப்பில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானதும் மாணவர்கள் அந்த போலிஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டார்கள். அப்போது அங்கே வந்து தனது ஆதரவைத் தெரிவித்த முதல் அரசியல் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா அவர்கள்தான். அவர் அங்கு மாணவர்களுக்குப் பாதுகாப்பாக, ஆதரவாக வந்து நின்றதற்குப் பிறகுதான் தோழர் பிருந்தா காரட் உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்கள் அங்கு வந்தார்கள். இரவு முழுவதும் இடைவிடாமல் நடந்த போராட்டத்துக்குப் பிறகு சில மாணவர்கள் விடுவிக்கப்பட்டாலும் பலபேர் இன்னும் லாக் அப்பில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் கொஞ்சமும் அஞ்சாமல் இன்றும் மாணவர் போராட்டம் தொடர்கிறது.

இப்போது நாடு முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படுகிற ஒன்றாக இருக்கிறது.பாஜக இப்போது மிகப் பெரும் எண்ணிக்கை பலத்தோடு வெற்றி பெற்றுள்ளது, அதனால் அது அடக்குமுறையை ஏவுகிறது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2016 ஆம் ஆண்டிலேயே, பாஜகவின் கடந்த ஆட்சியின் போதே கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். இது 2016ஆம் ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு எழுந்ததால் அது பாராளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதற்கு முன்பாகவே இந்த சட்டத்தில் உள்ள அம்சங்களை அவர்கள் உள்துறை அமைச்சகத்தின் குறிப்பாணைகள் மூலமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

2015 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பாணை மூலமாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இப்போது கொண்டு வந்துள்ள திருத்தங்களை ஏற்கனவே நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். 2015ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் சட்டத்தில் முதலில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முதல் திருத்தத்தின் மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிறித்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாக இங்குவந்து குடியேறி இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளோடு ஆப்கானிஸ்தானும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்த மசோதா முதலில் 2016ஆம் ஆண்டு பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக்குழு தன்னுடைய அறிக்கையை 2019 ஜனவரி மாதத்தில் அரசிடம் அளித்தது. அதனால் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாக அவசரஅவசரமாக மீண்டும் மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்கள். மக்களவையில் அவர்களுக்கு எண்ணிக்கை பலம் இருந்ததால் அங்கே அது நிறைவேற்றப்பட்டது.ஆனால் மாநிலங்களவையில் அவர்களுக்குப் போதுமான பலம் இல்லாத காரணத்தால் அங்கு நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. அத்துடன் அந்த ஆட்சியும் முடிந்துபோனது. தேர்தல் வந்துவிட்டது. எனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.

இப்போது பொதுத் தேர்தல் முடிந்து முன்பைவிட அதிக பலத்தோடு பாஜகவினர் வெற்றிபெற்ற காரணத்தினாலே முதல் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை. எனவே இப்போது குளிர்காலக் கூட்டத் தொடரிலே இது அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் அவசரஅவசரமாக அறிமுகம் செய்யப்பட்டு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிலேயே நள்ளிரவு 12 மணிக்கு இந்த சட்டம் மக்களவையில் நிறைவேறியது. அதற்குப்பிறகு மாநிலங்களவைக்கு அந்த மசோதா சென்றது. மாநிலங்களவையில் இப்போதும் அவர்களுக்குப் பெரும்பான்மை கிடையாது. எனவே மாநிலங்களவையில் இந்த மசோதா தோற்கடிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையைப் பொய்த்துப் போகச் செய்தது தமிழகம்தான்.

ஜனநாயக சக்திகளும் இத்தகைய நம்பிக்கையோடிருந்தார்கள். அவர்களுடைய நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதற்குத் தமிழகம்தான் காரணமாகி இருக்கிறது. இது வரலாற்றில் துடைக்க முடியாத பழியாக, கறையாகத் தமிழ்நாட்டின் மீது படிந்திருக்கிறது. மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ள அதிமுகவினுடைய 11 உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு உறுப்பினர்- இந்த 12 உறுப்பினர்கள் வாக்களித்ததன் காரணமாகத்தான் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது. இன்று நாடு முழுவதும் கொந்தளிப்பும், போராட்டமும் ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அதிமுகவும் பாமகவும் தான். இதை நாம் பேசாவிட்டாலும், பேசாமல் புறக்கணித்தாலும் இன்று இந்தியா முழுவதும் இந்த துரோகத்தை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஆட்சியிலே இருக்கின்ற பாஜகவினர் மத அடிப்படையில் முஸ்லிம்களையும், இன அடிப்படையில் தமிழர்களையும் இந்த நாட்டுக்கு எதிரானவர்கள், அந்நியமானவர்கள் என்பதைப் போல சித்திரிக்க பார்க்கிறார்கள். இந்தியாவுக்கு அண்டை நாடுகளாக இருக்கிற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அரச மதமாக அறிவித்துக் கொண்ட நாடுகள், அவற்றிலே இருக்கிற சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள், அவர்கள் இங்கே தஞ்சம் புகுந்திருக்கிறார்கள், அவர்களுக்குக் குடியுரிமை வழங்குகிறோம் என்று இந்த சட்டத்துக்கு விளக்கம் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தியாவிலே இன்னும் பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள் இருக்கிறார்கள். அரசியல் தஞ்சம் தேடி வந்தவர்கள் ஏராளமாக இங்கே இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த நாட்டில் அந்த நாட்டுக் குடி மக்களும் இருக்கிறார்கள், அங்கு புகலிடம் தேடிவந்த அகதிகளும் இருக்கிறார்கள்.அகதிகள் இல்லாத நாடே இந்த உலகத்திலே இல்லை. இந்த நிலை இப்போது ஏற்பட்டதல்ல, 50ஆண்டுகளுக்கு முன்பாகவே 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டுவிட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் புகலிடம் தேடி ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்கள் ஓடினார்கள். ஐநா பொது மன்றம் இதற்காக முதலில் 1951 ஆம் ஆண்டில் ரெஃப்யூஜிஸ் கன்வென்ஷன் என்று ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அகதிகளுக்கான உரிமைகளையும் அவர்கள் தஞ்சம் புகும் நாட்டின் கடமைகளையும் அது வரையறுத்தது. தஞ்சம் புக வருபவர்களையும் ஒரு நாடு தனது குடிமக்களைப் போலக் கருதிப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. அதற்குப் பிறகு 1967 ஆம் ஆண்டில் அகதிகளுக்காக ப்ரொட்டகால் ரிலேட்டிங் டு த ஸ்டேட்டஸ் ஆஃப் ரெஃப்யூஜிஸ் என்று இன்னொரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அகதி என்பதற்கான விளக்கத்தை விரிவுபடுத்தியதோடு அவர்களுக்கான உரிமைகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கான பாதுகாப்புகளை எப்படி ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டும் என்று ஐநா அந்த ஒப்பந்தத்தில் நெறிமுறைகளை உருவாக்கியது. இதுவரை அகதிகளுக்காக இப்படி இரண்டு ஒப்பந்தங்கள் ஐநா மன்றத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் உலகின் 145 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அந்த இரண்டு ஒப்பந்தங்களையும் மதிக்காத, அவற்றில் கையெழுத்திடாத நாடு இந்தியா. அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியாக இருந்தாலும் சரி, ஐக்கிய முன்னணி ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜனதா ஆட்சியாக இருந்தாலும் சரி எந்த ஆட்சியானாலும் அகதிகள் பிரச்சினையில் இந்திய அரசுக்கு ஒரே நிலைப்பாடு தான். ’அகதிகளுக்கு எந்தப் பாதுகாப்பையும் கொடுக்க மாட்டோம், அவர்களை நாங்கள் சமமாக நடத்த மாட்டோம், அவர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றுதான் அழைப்போம்’ என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு. இதில் பாஜகவுக்கும் எந்த வித்தியாசமான நிலைப்பாடும் கிடையாது.

அகதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத அரசு, சர்வதேச அளவில் அகதிகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புகளை மதிக்காத அரசு திடீரென்று அகதிகள் மீது எங்களுக்குப் பரிவு வந்துவிட்டது என்று சொன்னால், அவர்களுக்கு நாங்கள் குடியுரிமை கொடுக்கிறோம் என்று சொன்னால் அது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக சட்டத்திருத்தத்தை ஏற்படுத்துகிற நேரத்தில் மனித உரிமை மீது அக்கறை கொண்டவர்கள் என்கிற முறையிலே அது நல்ல நோக்கத்தோடு இருந்தால் நாம் வரவேற்றிருப்போம். அகதிகளுக்கு இந்த நாட்டிலுள்ள குடிமக்களைப்போலவே உரிமைகள் வழங்கப்பட்டால் அது சரியானதுதான் என்று கூறியிருப்போம். ஏனென்றால் ஈழத் தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாம் நீண்டநாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்அகதிகள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தால் இங்கே வந்தவர்கள்; ஆயுதப் போராட்டம் நடந்த நேரத்தில் வந்தவர்கள்;முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது தப்பித்து வந்தவர்கள் – இப்படி இங்கே வந்த ஈழத் தமிழர்கள் முகாம்கள் என்ற பெயரில் எந்தவித வசதியுமில்லாத இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணிலே இருக்கிறவர்கள் உள்ளனர்; இங்கே வந்ததற்குப் பிறகு பிறந்த குழந்தைகள் பெரியவர்களாக ஆகி விட்டார்கள். நீண்ட நெடுங்காலமாக இங்கே அவர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லி பல்வேறு தீர்மானங்களைத் தமிழ் நாட்டிலே இருக்கிற அரசியல் கட்சிகள் நிறைவேற்றி இருக்கின்றன. ஈழத் தமிழர்களுடைய உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட ’டெசோ’ அமைப்பின் மாநாட்டில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஈழத் தமிழ் அகதிகள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும், அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

இந்த ஈழத்தமிழ் அகதிகள் சட்டவிரோதக் குடியேறிகள் என்றுதான் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக நான் மக்களவையில் ஒரு கேள்வியை எழுப்பினேன். ”30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டிலே அகதிகளாக இருக்கின்ற ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுக்கப்படுமா?”என்ற வினாவை நான் எழுப்பினேன். இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக அதற்கு எழுத்துப்பூர்வமான பதில் எனக்கு மக்களவையில் அளிக்கப்பட்டது. இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்ரும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. அந்த சட்டத்தின் பிரிவு 5இன் படி பதிவுசெய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமையைப் பெற முடியும்.,அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெற முடியும்.ஆனால் சட்டவிரோதமான குடியேறிகள் இந்த இரண்டு விதங்களிலும் குடியுரிமையைப் பெற முடியாது” என அந்தப் பதிலில் உள்துறை இணை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி, வங்கதேசத்திலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் எல்லோருமே பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு வந்தவர்களில்லை. இந்தியாவுக்குள் வந்துள்ள அகதிகள் எல்லோருமே இந்த நாட்டின் சட்டப்படி ‘சட்டவிரோதக் குடியேறிகள்’தான். ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இது பொருந்தும். ஈழத் தமிழர்கள் எப்படி இங்கே வந்தார்களோ அப்படித்தான் பாகிஸ்தானிலிருந்தும் மியான்மரிலிருந்தும் இங்கே வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு என்ன சொல்கிறதென்றால் அப்படி வந்தவர்களில் இந்துக்கள் சீக்கியர்கள், பார்சிக்கள், கிறித்தவர்கள்,சமணர்கள், பௌத்தர்கள் இவர்களுக்கு மட்டும் தான் நாங்கள் குடியுரிமைக் கொடுப்போம் என்று சொல்கிறது. குடியுரிமைப் பெறுவதிலிருந்து முஸ்லிம்களை விலக்கி வைக்கிறார்கள். நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் ஒருவர் இந்தியராக இருந்தாலும் சரி, அயல்நாட்டவராக இருந்தாலும் சரி அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்று தான் கூறுகிறது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 எல்லோரையும் சமத்துவத்தோடு நடத்தவேண்டும் என வலியுறுத்துகிறது.இந்த சட்டம் அந்த சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிராக இருக்கிறது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதாரமான அடிப்படை அம்சங்கள் எவை என்று உச்சநீதிமன்றம் ஆராய்ந்து ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று. அது போலவே சமத்துவம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை அம்சங்களில் எந்த மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உறுதியாகக் கூறியிருக்கிறது. நீங்கள் எத்தனை சட்டத்திருத்தத்தை வேண்டுமானாலும் கொண்டு வரலாம். அண்மையில்கூட 126 ஆவது சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் திருத்த முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக இருக்கிற சமத்துவம் என்ற கோட்பாட்டை கெடுக்கும் விதமாக இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான்,வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் ஆகிய இந்த மூன்று நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அங்கே பாதிக்கப்படுவது அங்குள்ள சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள்தான். எனவேதான் நாங்கள் முஸ்லிம்களை உள்ளடக்கவில்லையென்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் பாகிஸ்தானில் அகமதியா முஸ்லிம்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களை முஸ்லிம்களாகவே அங்கே கருதுவதில்லை அவர்களும் அந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களும் இங்கே தஞ்சம் தேடி வந்திருக்கிறார்கள் . வங்கதேசத்தில் இறைமறுப்பாளர்கள், பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றி வருபவர்கள் எல்லாம் கொலை செய்யப்படுகிறார்கள். அத்தகைய கொள்கை கொண்டவர்களும் இங்கே தஞ்சம் தேடி வந்திருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்கள் என்றாலும் அவர்களும் அந்த அரசுகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அப்படி வந்தவர்களுக்கு இங்கே குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு கொடுக்க முடியாது என்று இந்த அரசாங்கம் மறுக்கிறது. அதுபோலவே இன அடிப்படையில் தமிழர்களை ஒதுக்கி விட்டிருக்கிறார்கள். அண்டை நாடுகளைத் தான் நாங்கள் இந்த சட்டத்திலே சேர்த்து இருக்கிறோம் என்று சொன்னால் இலங்கையும் அண்டை நாடுதான்.அரச மதமாக ஒரு மதத்தை அறிவித்துக்கொண்ட நாடுகளைத்தான் நாங்கள் சேர்த்திருக்கிறோம் என்றால் இலங்கையிலும் அரச மதம் என்று ஒன்று இருக்கிறது. அரச மதமாக பௌத்தம் அங்கே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்பதற்காகத்தான் இலங்கை இந்தப் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடப்பட்டுள்ளது. மத அடிப்படையில் முஸ்லிம்களையும் இன அடிப்படையில் தமிழர்களையும் இந்த நாட்டில் அந்நியர்களாக சித்திரித்து இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

இன்று முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்ற மாநிலங்கள் எல்லாவற்றிலும் இந்த சட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நேற்றிரவு கேரளாவில் மிகப் பெரிய பேரணி நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும்கூட பெரிய அளவில் போராட்டம் எழவில்லை. இந்த சட்டத்தின் காரணமாக இங்கிருக்கிற ஈழத் தமிழர்கள் எல்லாம் ஒன்று இந்த நாட்டை விட்டுப் பலவந்தமாக வெளியேற்றப் படுவார்கள், அங்கே இருக்கிற இனவாத அரசின் முன்னால் பலி ஆடுகளாக கொண்டுபோய் நிறுத்தப்படுவார்கள். அல்லது, அசாமில் எப்படி சட்டவிரோத குடியேறிகளுக்குத் திறந்த வெளி சிறைச்சாலைகளை உருவாக்கியிருக்கிறார்களோ அதேபோல பெரிய முள்வேலி முகாம்களை உருவாக்கி ஈழத்தமிழர்களை அதிலே கொண்டு போய் அடைப்பார்கள்.

அதிமுகவை உருவாக்கிய திரு எம்.ஜி.ஆர் அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருந்தார். விடுதலைப் புலிகளுக்கு நான்கு கோடி ரூபாய் வழங்கினார் என்பது நாடறிந்த உண்மை. அவருக்கு அடுத்து அந்தக் கட்சியை வழிநடத்திய செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு ஈழத் தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் எடுத்தார். அதற்கான தீர்மானங்களையும் அவர் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.திரு எம்ஜிஆரை, ஜெயலலிதா அம்மையாரைத் தமது முன்னோடிகளாக சொல்லிக்கொண்டிருக்கிற இன்றைய ஆட்சியாளர்கள் தமது கட்சியை உருவாக்கிய தலைவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்து இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய துரோகம்!

பாட்டாளி மக்கள் கட்சி 1992 இல் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்திய காரணத்தால் அந்த கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று பலர் வலியுறுத்தினார்கள். அப்போது அந்த கட்சிக்கு ஆதரவாக நாமெல்லாம் குரல் கொடுத்தோம். ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் தான் உண்மையான ஆதரவாளர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர். அவர்கள் இன்று இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள். கூட்டணி தர்மத்துக்காக நாங்கள் வாக்களித்தோம் என்று இப்போது அதற்குக் காரணம் சொல்கிறார்கள். கூட்டணி தர்மத்துக்காக ஒரு இனத்தை அழிப்பதற்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று சொன்னால் உங்களுடைய அரசியல் எவ்வளவு துரோகத்தனமானது என்பதை இன்று இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு கட்சிகளின் துரோகத்தால் இன்றைக்கு நாடே தீப்பற்றி எரிகிறது. இந்தியாவில் இருக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இன்று மிகப்பெரிய அச்சத்தில் இருக்கிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தோடு இது முடிந்து விடப் போவதில்லை,

இதற்கு அடுத்ததாக ‘என்.ஆர்.சி (NRC) முறையை இந்தியா முழுவதும் கொண்டு வரப் போகிறோம்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.அப்படி வந்தால் நாம் ஒவ்வொருவருமே நம்முடைய பாட்டன் முப்பாட்டன் கால ஆவணங்களைக் காட்டித்தான் நாங்களெல்லாம் பூர்வமாக இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் நம்மையெல்லாம் இந்த நாட்டுக் குடிமக்கள் இல்லை என்று சொல்லி நம்முடைய குடியுரிமையைப் பறித்து விடுவார்கள். எனவே இந்த ஆபத்து முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்று நாம் இருந்துவிடக்கூடாது.நம் எல்லோருக்குமே ஆபத்து வரப்போகிறது. ஏற்கனவே தமிழினத்தைக் குறி வைத்து விட்டார்கள். இங்கே இருக்கிற பாஜக எதிர்ப்பாளர்களை, சங்கப் பரிவார அரசியலை எதிர்ப்பவர்களைக் குறிவைத்து அவர்களுடைய குடியுரிமைகளையெல்லாம் பறிப்பதற்கு சதி செய்து கொண்டிருக்கிறார்கள்.இதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு கேள்வி எழுப்பினார்: “நமது பிரதமர் பட்டப்படிப்பு படித்திருப்பதாகத் தேர்தலின்போது தாக்கல் செய்த தன்னுடைய பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கான சான்றுகள் எங்கே என்று கேட்டால் இதுவரை அவரால் அளிக்க முடியவில்லை. பிரதமர் எந்த கல்லூரியில் படித்தார்? என்ன பட்டம் வாங்கினார்? என்று ஆர்.டி.ஐ மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு இத்தனை ஆண்டுகாலமாகப் பதில் அளிக்க முடியவில்லை. பிரதமருடைய கல்விச் சான்றிதழையே தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நம்முடைய பாட்டன் முப்பாட்டனுடைய ஆவணங்களைக் கொண்டு வரச்சொன்னால் எப்படி நாம் கொண்டு வர முடியும்?” என்று அவர் கேட்டிருக்கிறார். பிரதமர் மட்டுமல்ல இப்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இன்னும் சிலர்மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இன்றைய ஆட்சியாளர்கள் எதையும் செய்யத் துணிந்துவிட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். நன்றி வணக்கம்.

*

Thanks to : Ravikumar