கவிஞர் சாதிக் கௌரவிக்கப்பட்டார்

அல்லாஹ்வை நாம் தொழுதால் – சுகம் எல்லாமே ஓடி வரும்‘ போன்ற புகழ்பெற்ற பாடல்களை எழுதிய கவிஞர் சாதிக் அவர்கள் நேற்று மாலை நாகூர் தமிழ்ச் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார். விழாவில் நடந்த விருந்திற்குப் பிறகு , நண்பர் நாகூர் ரூமி ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு இது. பசியுடன் பகிர்ந்துகொள்கிறேன்! – AB

*

இன்று (17.07.19) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நாகூர் தமிழ்ச்சங்கத்தில் கவிஞர் சாதிக் நானா சிறப்பாக கௌரவிக்கப்பட்டார். அவருக்கு ஒட்டு மொத்தமாக திரண்ட 96000 ரூபாய்கள் வழங்கப்பட்டன. என் மூலமாக வந்த ரூ 42000/- யும் சேர்த்து.

தாராளமாக அன்பளிப்பு செய்து உதவிய சிங்கப்பூர் வாழ் என் தம்பிகள் தீன், நிஜாம் மற்றும் முஸ்தஃபா மாமா, சகோதரர் அபூபக்கர், தம்பி அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் பிலால் மூலம் அன்பளிப்பு செய்த தம்பி ஜாஃபர் சாதிக், பெயர் சொல்ல விரும்பாத ஒரு சகோதரர் ஆகியோருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். அல்லாஹ் இவர்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், பரக்கத்தையும் அருள்வானாக ஆமீன்.

சாதிக் நானாவோடு சேர்த்து இரண்டு பேர் கௌரவிக்கப்பட்டார்கள். ஒருவர் பேரா. ஜெயச்சந்திரன் என்பவர்.இன்னொருவர் தமிழக அரசின் தமிழ் அறிஞர் விருது பெற்ற எழுத்தாளர் ஜி.அஹ்மது. இவர் எனக்கு நெருங்கிய உறவினர் என்பது அவரோடு பேசிய பிறகுதான் தெரிய வந்தது எனக்கு! என் மாமா அறிஞரும் பன்மொழி வித்தகருமான மர்ஹும் ஹுசைன் முனவ்வர் பேக் அவர்களோடு வேலை பார்த்ததாகவும் கூறினார். என் அக்கா மகளின் மாமானாரும் கூட!

நாகை மாவட்ட காவல் கண்காளிப்பாளர் திரு. ராஜசேகரன் வந்திருந்து விருது வழங்கினார். அவர் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்! சார் ஆட்சியர் கமல் கிஷோர் அவர்கள் வரமுடியவில்லை.

சகோதரர்கள் மாலிம், நிஜாம், வி.சாதிக், காதரொலி ஆகியோர் பேசினார்கள். காதரொலி சாதிக் நானாவின் பைத்து சபா பாட்டொன்றையும் பாடிக்காட்டினார்! அவர் பாடகராகப் போயிருக்கலாம். கவிதையாவது தப்பித்திருக்கும்! வி. சாதிக் பண்டைய தமிழ் இலக்கியம் பற்றி நிறைய பேசினார். அவரது தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற முதுகெலும்பாக இருந்த நண்பர் ஹுசைன் மாலிமுக்கும், அவர் தம்பி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுக்கும், நண்பர் நூர் சாதிக்குக்கும், காதரொலிக்கும், வி. சாதிக்குக்கும் என் சிறப்பு நன்றிகள்.

நாகூர் பற்றிய தகவல்களைக் கொட்டி வைத்திருப்பவர்கள் இரண்டு நாகூர்க்காரர்கள். அப்துல் கய்யூம், ஆபிதீன். இருவர் ஏற்படுத்தி வைத்துள்ள இணைய வலைத்தளங்களும் பொக்கிஷங்கள். அவற்றில் இருந்த சில விஷயங்களையும் நான் ’அல்லாஹ்வை நாம் தொழுதால்’ என்ற சாதிக் நானாவின் கவிதை நூலுக்காக பயன்படுத்திக்கொண்டேன். முக்கியமாக கய்யூமின் ஒரு கட்டுரையை அப்படியே – அவர் பேரில்தான் – நூலில் பயன்படுத்தியும் உள்ளேன். நூல் வடிவமைப்பு, அச்சிடல் போன்ற விஷயங்களில் உதவியவர் நண்பர் கவிஞர் யாழன் ஆதி.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இறைவன் மேலும் மேலும் நாகூரின் பொக்கிஷமாய் உள்ள படைப்பாளிகளை உலகுக்கு வெளியில் கொண்டு வர உதவி செய்வானாக.

*
நன்றி : நாகூர் ரூமி

*

தொடர்புடைய பதிவு (அப்துல் கையும் எழுதியது) :

சாதிக்க வந்த கவிஞன்  நாகூர் சாதிக்