அகமியம் தளத்திலிருந்து விளக்கம்

என்ன வினோதம்! இன்று காலை 11 மணிக்கு சலீம்மாமாவை சந்திப்பதாக இருக்கிறேன். ‘சின்ன எஜமான்’ என்று அழைக்கப்படும் தாதாவின் ஹத்தம் ஆயிற்றே இன்று…சந்திப்பார்களா? சலீம்மாமா எழுதி மர்ஹூம் வாஹித் பாடிய அருமையான பாடலை முதலில் கேளுங்கள் :
அலங்காரவாசலுக்கு முன் பந்தல் போடப்பட்டிருக்கிறது. சுத்துவட்டாரத்து ஜனங்கள் விதவிதமாக நேர்ந்துகொண்டு பலமாதிரி ஐட்டங்களை கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். (நாலைந்து பராட்டக்களைக் கூட நேற்று பார்த்தேன்!). எனக்கும் நேர்ந்துகொண்டு , ‘என்ன கட்டலாம் மச்சான்?’ என்றாள் அஸ்மா.
’என்னைக் கட்டித் தொங்கவிடு புள்ளே!’
தமாஷ் கிடக்கட்டும், இன்று இணையத்தைத் திறந்தால் சலீம்மாமாவின்  ஒரு பாடல் சம்பந்தமான விளக்கம்  அகமியம் தளத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. ஆக, ஆபிதீன் பக்கங்களை மூன்றாவது நபரும் பார்க்கிறார். சந்தோசம்தான். இறைவன் இருட்டில்தான் இருந்தான் என்கிறார்கள். முன்பு எப்படியோ , ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறேன் என்று ’நேட்டோ’ படைகள் ஏதாவது ஒரு நாட்டில் நுழையும்போதெல்லாம் இருட்டில்தான் – நம் வள்ளலார் சொல்வது மாதிரி , ‘உரிமை நாயகன்’ – இருப்பதாக எனக்குப் படும்.  என் சந்தேகத்தை விடுங்கள். அகமிய விளக்கத்தைப் பாருங்கள். நன்றி. –ஆபிதீன்
***
’அகமியம்’ மெயில் :
அப்துல் கையும் எழுதி தங்களின் இணையத்தளத்தி்ல் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ள ‘இறைவனும் இருட்டும்’ என்ற பதிவுக்கு (பார்க்க : https://abedheen.wordpress.com/2009/04/15/qaiyum_on_salim/ ) பதிலாகவும் விளக்கமாகவும் அமையும் பதிவு :
 
‘இருட்டில் இருந்தான் இறைவன்’ என்று நாகூர் சலீம் அவர்கள் பாடிய பாடல் சரியானதே அதற்கான விளக்கத்தை இலங்கையில் வாழ்ந்து அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மகான் குருபாவா அவர்கள் இலங்கையில் வெளிவந்த “ஞானச் சுரங்கம்” என்ற பத்திகைக்கு எழுதிய கட்டுரை.
 
பதிவைப் படிக்க :

http://www.ahamiyam.co.cc/2011/10/blog-post_206.html

***

Thanks :

Ahamiyam
The Islamic Sufism web in Tamil

இந்த ஹந்திரி இருக்கே… – ’நாகூரி’

‘நாயனின் அருள்கொடி நாகூரில் பறக்குது’ என்ற ஏ.டி ஷரீப் பாடலுடன் பதிவிடலாம் என்று நினைத்தேன். ஜனங்கள் பயந்து விடுவார்கள்! ’அது அருள்கொடியா ? இருள்கொடியா?’ என்றும் அடிக்க வந்துவிடுவார்கள் –  ஒஸாமாவை விட்டுவிட்டு. வம்பு எதற்கு? பாருங்கள், ’வாப்பா.. கலாட்டா நடந்தாலும் நடக்கும். சுத்தாதே’ என்று மகனார் நதீமிடம் நேற்றிரவு சொன்னேன். ‘அம்மை’யின் கோரம் முடிவுற்று இப்பதானே தேறியிருக்கிறான் செல்லப்பிள்ளை?  ‘சரி வாப்பா..சுத்துறேன்’ என்று அமைதியாகச்  சொல்லி  தன் அம்மையிடம் கொடுத்துவிட்டான்! கோபிக்கலாம் என்று வாயைத் திறப்பதற்குள் , ‘சின்னபுள்ள , சுத்தாம என்ன செய்வான்? சும்மா இருங்க’ என்று ஒரு அதட்டல் போட்டாள் அவள். அசந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். ஊர்க்கலவரங்களை விட வூட்டுக் கலவரங்கள்தான் அதிகம் பயமுறுத்துகின்றன. ஹைர், ஷாஹூல் ஹமீது பாதுஷா பற்றி மறைந்த பாடகர் ஷாஹுல் ஹமீது பாடிய பாடலை (’தீன் இசை மாலை’ தொகுப்பில் உள்ளது. இசையமைத்தது ஏ.ஆர்.ரஹ்மான் என்று அசனா சொன்னார்.) பதிவிட்டுவிட்டு அப்படியே எனது அருமை நண்பர் கய்யூமின் கந்தூரி கலாட்டக்களையும் மீள்பதிவு செய்கிறேன். எனக்கு ரொம்பவும் சிரிப்பை ஏற்படுத்தும் எழுத்து அவருடையது. அவர் திரும்பவும் எழுத அவுலியாதான் உதவி செய்ய வேண்டும்! – ஆபிதீன்

***

முதலில் மர்ஹூம் ஷாஹுல் ஹமீதின் பாட்டு :

Download

***

அந்த 14 நாட்கள் –  அப்துல் கையூம்
(இந்தப் பதிவை, கதை, கட்டுரை, டயரிக் குறிப்பு, ஆட்டோகிராப் என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் சரிதான்)

நாகூர் கந்தூரி விசேஷத்தை கண்குளிர கண்டு எத்தனையோ மாமாங்கம் ஆகி விட்டது. ‘இந்த வருஷமாவது போய்ப் பார்க்க வேண்டும்’ என்று மனதில் உதித்த ஆசையை இங்கிருக்கும் என் பக்கத்து ஊர் நண்பரிடம் பகிர்ந்துக் கொண்டபோது “எத்தனை PJ வந்தாலும் உங்களைத் திருத்தவே முடியாது” என்று பொரிந்து தள்ளி விட்டார். காரணம் அவர் ‘உஜாலா’வுக்கு மாறிவிட்டிருந்தார்.

“நான் கந்தூரி சமயத்தில் ஊர் போக நினைக்கும் காரணமே வேற .. “ என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் முன்பே “நீங்க இந்தக் கட்சியா? அந்தக் கட்சியா? உங்க கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியல்லியே..?” என்று தீர்ப்பும் வழங்கி விட்டார்.

*      *     *

அந்த 14 நாட்கள் – நினைத்தாலே இனிக்கும். மனதுக்குள் மத்தாப்பு மலரும். சங்கு சக்கரமாய் என் இளமைக்கால அனுபவங்கள் எனக்குள்ளே சுழன்றது. நிகழ்வுகள் சரவெடியாய் ஒவ்வொன்றாய் கண்முன் வந்து நின்றது. அந்த ‘எட்டாம் இரவு’ வாணவேடிக்கையை என் மனதுக்குள் நானே நிகழ்த்திப் பார்த்தேன்.

பள்ளிப் பருவத்தில் கந்தூரி கொண்டாட்டத்தை ரசிக்க அளவுக்கு இப்போது ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது கவலை அறியாத வயசு.

கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கி சாப்பிடச் சொல்லும் மனசு. கால் போன போக்கில் சுற்றித் திரிந்த காலம்.

இப்போது, நண்பர்களோடு ஊர் சுற்றலாம் என்று நினைத்தால், நாம் விடுமுறையில் போகும் சமயத்தில் அவர்கள் ஊரில் இருக்க மாட்டார்கள். துபாயிலோ, சவுதியிலோ, சிங்கப்பூரிலோ அந்த ஊர் கரன்ஸியை எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

இப்பொழுதெல்லாம் கந்தூரி வந்தால் ‘இது அனாச்சாரம். மார்க்கத்திற்கு புறம்பானது’ என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம். போஸ்டர் ஒட்டுகிறார்களாம்; நோட்டீஸ் வினியோகிக்கிறார்களாம். ஆனால் கூட்டம் மட்டும் முன்பு வந்ததை விட கூடுதலாகவே வருகிறதாம். சொல்கிறார்கள். கந்தூரியில் கூடு வருகிறதோ இல்லையோ ஏ.ஆர்.ரஹ்மான் கண்டிப்பாக வந்து விடுகிறாராம்.

“கடைத் தெருவில் நடந்தால் எரிச்சல்தான் வருகிறது. கூட்ட நெரிசலிலாவது சென்று விடலாம். இந்த இசையின் இரைச்சலில்.. .. அப்பாடா காது சவ்வு கிழிந்து விடுகிறது” என்று அலுத்துக் கொண்டார் சென்ற ஆண்டு கந்தூரிக்குப் போய்வந்த வேறொரு நண்பர்.

ஒரே சமயத்தில் நாகூர் ஹனிபா, உவைஸ் ரிஸா காதிரி, சாப்ரி பிரதர்ஸ் 8,7, 6 கட்டையில் மாறி மாறி பாடிக் கொண்டிருந்தால் கொடுமையைக் கேட்கவா வேண்டும்? வேறு எங்கே.. ? கேசட் கடையில்தான்.

கால்மாட்டுத்தெருவிலும். தெருப்பள்ளித் தெருவிலும் பிளாஸ்டிக் சாமான் கடைகளின் எண்ணிக்கை குறைந்துப் போய்விட்டதாம். பிறகு கந்தூரியில் என்ன சுவராஸ்யம் இருக்கப் போகிறது? பாவம் தாய்க்குலங்கள். வாழ்க்கையே வெறுத்துப் போயிருப்பார்கள். அவர்களுக்கு அதுதானே ‘ஹந்திரி’!

அரும்பு மீசை துளிர் விட்ட வயதில் கந்தூரியின் போது நண்பர்களுடன் அடித்த லூட்டி; சேரனுக்கு ஆட்டோகிராப்பில் ஞாபகம் வந்ததுபோல; என் கண்முன் வந்து நிழலாடியது. அந்த குதூகலம், உல்லாசம், இப்போது போனால் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. அது மட்டும் 100% கியாரண்டி.

சாப்பீஸ் விற்கும் ஹேட்டுபாய், ஆட்டுக்கால் சூப்பு / பொறிச்ச மூளை விற்கும் மாமு, வாடா விற்கும் சுல்தான் இவர்களெல்லாம் உயிரோடு இருந்த காலத்தில், விதவிதமாக  நாக்குக்கு ருசியாக சாப்பிட்டதைப் போல; இப்போது சாப்பிட முடியாது. கொலஸ்ட்ரால் வந்து விடுமாம்.

ஆந்தைகள் வெளியே வரும் நேரத்தில்தான் நண்பர்கள் ஒன்று கூடி வந்து “வா கச்சேரிக்குப் போலாம்” என்பார்கள். திட்டச்சேரிகாரர்கள் போல கழுத்தில் ஒரு மப்ளரை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்புவேன். (அந்த ஊர்க்காரர்கள்தான் “கிழமை ராவு” என்ற சாக்கில் கையில் டார்ச் லைட், கழுத்தில் மப்ளர் சகிதம், ரேக்ளா வண்டி பூட்டிக் கொண்டு நாகூர் கிளம்பி வந்து விடுவார்கள்)

தர்கா முற்றத்தில் கச்சேரி களை கட்டியிருக்கும். “லாலு முரீத்.. லாலு முரீத்” என்று கவ்வாலி பாடகி பியாரி பாடிக் கொண்டிருப்பார். கூடவே அவரது மகள் சாதனா. இளவட்டங்கள் அங்கேதான்  குழுமியிருப்பார்கள். இளங்காளைகள் இசையை இந்த அளவுக்கு ரசிக்கிறார்களே என்று எனக்கு ஆச்சரியம் தாங்காது. அடுத்த நாள் செளத்ரி சாபு வீட்டில் வி.ஐ.பி.களுக்காக தனியே கச்சேரி நடக்கும்.

கலிங்கத்துப்போரில் காயம்பட்டுக் கிடந்த போர் வீரர்களைப்போல பக்தகோடிகள் இடது கோடியில், தலை வேறு, கால் வேறாக தூங்கிக் கொண்டிருப்பார்கள். “தமா தம் மஸ்த் கலந்தர்” என்ற பாடல் வரி வரும் சமயத்தில் டோலக்குகாரர் பலமாக தட்டுவார். ‘கும்..கும்’ என்ற சப்தம் தர்கா குளம் வரை எதிரொலிக்கும். அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் ‘போர்வீரர்கள்’ அலறியடித்துக் கொண்டு பாதித்தூக்கத்திலிருந்து எழுந்து பயபக்தியாக உட்கார்ந்துக் கொள்வார்கள். (வேறு வழி?)

எதிர் மண்டபத்தில் பெங்களுர் பாஷா பாடிக் கொண்டிருப்பார். அல்லது கலிபுல்லா பாய் ஹார்மோனியத்தில் காற்றை நிரப்பி, தர்கா உள்ளேயே உட்கார்ந்துக் கொண்டு, “நீர் எங்கே? எங்கே? எங்கே? சாஹிப் மீரானே!” என்று வலைவீசி தேடிக் கொண்டிருப்பார். (“எழுந்து சற்று தூரம் போனால் சாஹிப் மீரானை தரிசித்து விடலாமே!” என்று நண்பர்கள் கமெண்ட் அடிப்பார்கள்)

வேறொரு முற்றத்தில் பாவாமார்கள் தாயிரா சப்தம் முழங்க நாக்கிலே கூர்மையான ஆயுதத்தை சொருகிக் கொண்டிருப்பார்கள். வளைகுடா நாடுகளில், ‘சிக்கன் டிக்கா’ கம்பியில் சொருகி வைத்திருப்பதைப் பார்க்கையில் இந்த காட்சிதான் எனக்கு ஞாபகம் வரும்.

பக்கத்திலிருக்கும் குளுந்த (குளிர்ந்த) மண்டபத்தில்தான் நாங்கள் உட்கார்ந்து சூடான விவாதம் செய்வோம். அருகாமையில் உப்புக்கிணறு இருக்கும். தைரியமாக கிணற்றுக்குள் குதிக்கலாம். வேண்டுமானால் ‘டைவ்’ கூட அடிக்கலாம். உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது.

உ..ம் (பெருமூச்சு). அது ஒரு நிலாக்காலம்.

*     *     *

“ஹலோ.. ஹலோ.. உங்களைத்தானே…என்ன யோசனையிலே மூழ்கிட்டீங்க?”

கூப்பிட்டது சக நண்பர்தான். “எப்ப போறதா உத்தேசம்?. சாந்து பூசுறதுக்கு போறீங்களா இல்லாட்டி பாம்பரம் ஏத்துறதுக்கு போறீங்களா?” (இப்பொழுது ஏது சாந்து? ஆயில் பெயிண்ட்தான் யாரோ அடித்துக் கொடுக்கிறார்களாம்)

நண்பரின் கிண்டல் புரிந்தது. இவருக்கு பதில் கொடுத்து அந்த பவித்ரமான கனவுகளை பாதியில் கலைக்க நான் தயாராக இல்லை. அவரைக் கண்டு கொள்ளாமல், மறுபடியும் அந்த வண்ணமயமான பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன்.

*     *     *

கந்தூரியைக் களைகட்ட வைப்பதே இந்த கைலி கடைக்காரர்கள்தான். ரிக்சாக்காரன் படத்தில் கனவுக்காட்சியில் போடும் செட் போல கட்-அவுட் சகிதம் ‘தோட்டாதரணி’கள் வந்து இறங்கி விடுவார்கள்.
 
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தாஜ்மகால் பீடி வேன், கூம்பு போன்ற நீண்ட ஒலிபெருக்கி பொருந்திய சொக்கலால் ராம்சேட் பீடி வேன் எல்லாமே வந்து சேர்ந்துவிடும். ஹாட்டின் பீடி வேனில் பயில்வான் பொம்மையொன்றை இருக்கும். அந்த பொம்மையின் கைவிரல்களில் பீடி. வாயருகே அது கொண்டுச் சென்றதும் புகை வரும். கூட்டமாக நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். “மாமா, மாமா, மாமா, ஏமா, ஏமா, ஏமா” என்று குறவன் குறத்தி வேடத்தில் ஜோடிகள் டான்ஸ் ஆடி மகிழ்விப்பார்கள்.

சீரியல் லைட் போட்டு “பீம புஷ்டி அல்வா” விற்பனை சூடு பிடிக்கும். எனக்கு அதைச் சாப்பிட பயம். அந்த விளம்பரப் பலகையில் உள்ள பீமாவைப்போல நாமும் தடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான், (அதைச் சாப்பிடாமலே இப்போது நான் தடித்து விட்டேன் என்பது வேறு விஷயம்)

சாலையோரத்தில் ‘தவில்’ வாத்தியத்தை செங்குத்தாக நிறுத்தி வைத்ததைப்போல பூமிக்கிழங்கை வைத்துக் கொண்டு மெல்லிய வட்டமாக அறுத்து விற்பார் ஒருவர். இனிப்பென்றால் இனிப்பு அப்படியொரு இனிப்பு.

உள்ளுர்க் கலைஞர் ஹாஜா பாஷா நகத்தாலேயே படம் வரைந்துக் கொண்டிருப்பார். விளம்பரப்பலகை ஒன்று வைத்திருப்பார். சினிமா பிரபலங்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

எடை பார்க்கும் எந்திரத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார் ஒருவர். கட்டணம் பத்து பைசாதான். எல்லு மிட்டாய் வில்லைகளை குவித்து வைத்து கொண்டு தராசில் எடை பார்த்து கிலோ கணக்கில் விற்றுக் கொண்டிருப்பார் இன்னொருவர். பம்பாய் மிட்டாய்காரன் சோன்பப்டி விற்றுக் கொண்டிருப்பான்.  பக்கத்திலேயே நம் திறமைக்கு சவால் விடும் வேறொரு நபரை நாம் பார்க்கலாம். இரண்டடி கம்பிக்குள் மாட்டி வைக்கப்பட்டிருக்கும்

வளையத்தை கை நடுங்காமல் இக்கரையிலிருந்து அக்கரைக்கு அக்கறையாய் போய்ச் சேர்த்துவிட வேண்டும். உரசி விட்டால் ‘கீக்.. கீக்’ என்ற சத்தம் வந்துவிடும்.

இடையிடையே முஸ்லிம் சங்கம் தொண்டர்படை காரியாலயத்திலிருந்து காணமல் போன குழந்தையைப் பற்றிய அறிவிப்பு ஏதாவது ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டே இருக்கும். ரயில்வே புக்கிங் செய்வதற்காக கிளை திறந்திருப்பதையும் அறிவிப்பார்கள்.

கையில் பில்புக் வைத்துக் கொண்டு நடைபாதை வணிகர்களிடம் தகராறு செய்துக் கொண்டிருப்பார் ஒருவர். அவர் வசூல் செய்வதற்கு அடிக்கடை கான்ட்ராக்ட் எடுத்திருப்பவராம்.

“எங்கேயோ கேட்ட குரல்” காற்றில் மிதந்து வருகிறதே என்று திரும்பிப் பார்த்தால், கண் தெரியாத இரண்டு பேர்கள் “காதர் ஒலி பாபா! அல்லாஹி தியேகா” என்று இரட்டைப் புலவர்களைப் போல கோரஸ் பாடிக் கொண்டு யாசகம் கேட்பார்கள். வீதியில் கப்பல் வலம் வருகிறதோ இல்லையோ இவர்கள் கட்டாயம் வலம் வந்து விடுவார்கள்.

“தீன் கொடி நாட்டிய தேவா! – எங்கள்; தூதரே யா முஸ்தபா!” என்ற பாடல் கேட்கும். நாகூர் ஹனிபாவின் பாடல்களை ராகத்தோடு பாடிக்கொண்டு ஆபிதீன் காக்காவுடைய பாட்டு புத்தகத்தை விற்றுக் கொண்டே செல்வார் அவரது ஆத்மார்த்த ரசிகர் ஒருவர்.

காலுக்கு அடியில் ஏதோ ஒரு உருவம் தென்படும். கைகளுமின்றி, கால்களுமின்றி வயிற்றில் ஒரு நசுங்கிய அலுமினிய பாத்திரத்தை வைத்துக்கொண்டு ஊர்ந்து சென்றுகொண்டிருப்பார் ஒரு பிச்சைக்காரர்.

விதவிதமான வால் பேப்பர் பின்னணியில் ‘திடீர்’ கலர்போட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஆக்ராவுக்குப் போகாமலே தாஜ்மகால் முன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு வருவார்கள் காதல் ஜோடிகள்.

ஆண்டிகுளத்து முனையில் கைராட்டினம் நிறுத்தப்பட்டிருக்கும். அதனருகில் ஒரு கூடாரம். பேசும் கடற்கன்னியை கொண்டு வந்திருப்பார்கள். ஆச்சரியத்துடன் அந்த அதிசயப் பிறவியைப் போய் பார்ப்பேன். தலையிலிருந்து இடுப்பு வரை மனித உடல். இடுப்புக்குக் கீழ் மீன் உருவம். கதையில் படித்த “Mermaid”-யை நேரில் பார்க்கும்போது பரவசம் ஏற்படும்.

மறுநாள் அந்த பெண் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தாளாம். நண்பன் சாய் மரைக்கான் சொன்னான். “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற எம்.ஜி.ஆர்.பாடும் பாடல் என் காதுகளில் அசரீரியாய் ஒலிக்கும். (சாய் மரைக்கானே ஒரு நல்ல மிமிக்ரி ஆர்டிஸ்ட்தான். எம்.ஜி.ஆர். மாதிரியே அட்டகாசமாக பேசிக் காண்பிப்பான்)

தெற்குத்தெரு முனையில் சிறுவர்கள் கலர் கலராய் தண்ணீரை வைத்துக் கொண்டு சர்பத் என்ற பெயரில் விற்றுக் கொண்டிருப்பார்கள்.  ஆந்திராவிலிருந்து வந்திருக்கும் ‘டபுள் டெக்கர்’ லாரி பக்கத்திலேயே பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும்.

ரயிலடி அருகேதான் எங்களுக்கு நன்றாக பொழுது போகும். மிருகக் கண்காட்சி என்ற பெயரில் வத்தலும் சொத்தலுமான மிருகங்களை கொண்டு வந்திருப்பார்கள். மரணக்கிணற்றில் இரண்டு பேர் ‘டுர்.. டுர்..’ என்று மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பார்கள். வெளியே ஒரு சிறிய மேடை போட்டு ஒரு சிறிய வளையத்திற்குள் ஆணும் பெண்ணும் உடலை நுழைத்து சர்க்கஸ் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். வேறொரு பக்கம் “Puppet Show” எனப்படும் பொம்மலாட்டம் நடக்கும். இந்த பாரம்பரியக் கலைகள் எல்லாம் இப்போது எங்கே ஒழிந்துப் போனது என்றே தெரியவில்லை.

கடற்கரை வழி நெடுக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பறவைகளுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கலைப் போல பிச்சைக்காரர்களுக்கும், தொழுநோயாளிகளுக்கும் இந்த கூடாரங்கள்தான் சரணாலயம்.

*     *     *

“என்ன பேச்சு மூச்சையே காணோம்? ரொம்பத்தான் சிந்தனை போலிருக்கு?”

என்னை விடுவதாக இல்லை நண்பர். என்னதான் இருந்தாலும், உற்சாகம் பொங்கும் அந்த பழைய குதுகூலம் நிச்சயமாக நமக்கு கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் ஊர்ஜிதமாகத் தெரிந்தது.

“கந்தூரிக்கு இந்த தடவை நான் ஊர் போறதா இல்லேன்னு முடிவு பண்ணிட்டேன்.”

நான் சொன்னதைக் கேட்டு நண்பரின் முகத்தில் பிரகாசம்.

“நீங்க யோசிக்கும்போதே நெனச்சேன். நீங்க படிச்சவரு. நல்லது கெட்டது புரிஞ்சவரு. அல்லாதான் உங்களுக்கு நல்ல வழியை காண்பிச்சிருக்கான். கைர்”. என் கையை பிடித்து குலுக்கு குலுக்கோ என்று குலுக்கினார்.

“இந்த கூடு, கொடியேத்தம், ஹத்தம், ஹந்திரி இதெல்லாம் இருக்கிறதே.. ..”
நண்பர் பிரசங்கத்தை தொடங்க அங்கிருந்து நான் மெதுவாக நழுவி விட்டேன்.

***

நன்றி : அப்துல் கையூம்

***

மேலும் பார்க்க : கந்தூரி – 2008

அடி ஆத்தி ! – அப்துல் கையூம்

‘இறைவனோடு நாமிருப்பது
முடியாத ஒன்று
என்றாலும்
இறைவன்
நம்மோடிருக்க
முயற்சி செய்யலாம்!’

என்று ஜபருல்லாநானா ‘கவிதை’ சொன்ன அடுத்த நொடியில் நண்பர் அப்துல் கையுமிடமிருந்து குறுஞ்செய்தி. அடி ஆத்தி… இவருக்கு ஆக்ஸிடெண்ட்டான மாதிரியே தெரியலையே!

நலமே விளைக – வாசகர்களுக்கு!

*- 

அடி ஆத்தி !
அப்துல் கையூம்

ஆங்கிலத்தில் ‘Banana Lazy’ என்ற சொற்பதத்தை யாரும் கையாள்வதில்லை. “வாழைப்பழ சோம்பேறி” என்ற வார்த்தையை நாம்தான் பயன்படுத்துகிறோம்.

ஆனைக்கு கவளச்சோறு கொடுப்பதைப்போல் உருண்டை பிடித்து ஊட்டி வளர்ப்பது தமிழன்தான் போலும்.

“ஊரெங்கும் திண்ணைக் கட்டி
வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்?” 

என்று கண்ணதாசன் தமிழனைப் பார்த்துதானே பாடினான்?

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் படித்த காலத்தில் ஜங்ஷன் அருகிலுள்ள “ஹோட்டல் டி ப்ராட்வே”யில் சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. (பிளாட்பாரக் கடைக்கு பசங்க இப்படித்தான் பெயர் வைத்திருந்தாங்க).

புறாட்டாவை நாறு நாறாய் பிய்த்துப் போட்டு அதற்கு மேல் குழம்பை ஊற்றுவான் சப்ளையர். நண்பன் ஹாஜாவுக்கு சப்ளையர் பிய்த்துப் போடாததினால் வந்ததே கோபம். அப்பப்பா! ரகளை பண்ணி விட்டான். 

“அவுங்களுக்கெல்லாம் பிய்ச்சு போடுறே? எனக்கு மட்டும் பிய்ச்சு போடலே ஏன்? பிய்ச்சுடுவேன் பிய்ச்சு” என்று ரகளை பண்ணிவிட்டான். அவன் முத்தாய்ப்பாய் “பிய்ச்சிடுவேன்” என்று சொன்னது புறாட்டாவை அல்ல; சப்ளையரை.

அது போகட்டுமுங்க. சிலபேருக்கு காப்பியை கொண்டு வந்து அவர்கள் கண்முன்னே ஆற்றிக் கொடுத்தால்தான் திருப்தியே ஏற்படும். மேலே காணப்படும் இந்தப் புகைப்படம் இலங்கை புகைப்பட நிபுணர் ஒருவர் நாகூர் ஹோட்டலில் எடுத்தது. சுவரில் சாட்சிக்காக தேசத்தலைவர்கள் வேறு. அந்த புகைப்படத்திற்கு மட்டும் பேசக்கூடிய சக்தி இருந்தால் “இப்படியொரு வாழைப்பழ சோம்பேறியாக இருக்கிறீயே?” என்று திட்டித் தீர்த்திருப்பார்கள்.

இந்தப் பதிவு மட்டும் நடிகர் விவேக் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். கண்ணில் பட்டால் தன் அடுத்த படத்திற்கு தமிழனுக்கு மெசேஜ் சொல்ல இதை அபேஸ் பண்ணினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

**

நன்றி : இஜட். ஜபருல்லா, அப்துல் கையும்

பாட்டும் நானே! பாவமும் நானே!

பாவம் கய்யும்… பஹ்ரைன் பொங்கல் விழாவில் ஓட்டப்பந்தயம் ஓடியிருக்கிறார். ‘ஆக்ஸிடெண்ட்’  ஏற்பட்டுவிட்டது (அவருக்குத்தான்) . இதற்குத்தான் முன்னால் ஓடவேண்டும் என்பது!  இப்போது  ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் இருக்கிறார் சார். பத்துநாள் ரெஸ்ட்டாம்.  அவருக்காக பிரார்த்திக்கிறேன். கா.மு. ஷெரீஃபிற்காக ஒரு கட்டுரை அனுப்பியிருக்கிறார் –  இந்த நிலையிலும். ஓடிக்கொண்டிருக்கும்போதே எழுதியதாக சொன்ன ஞாபகம். இப்போது வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்! மேட்டர் ரொம்ப சீரியஸ்… 

*

கா.மு. ஷெரீஃப்

பாட்டும் நானே! பாவமும் நானே!

– அப்துல் கையூம்

திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது  கண்ணதாசனா அல்லது  கவி.கா.மு.ஷெரீப்பா?

இந்த விவாதம் இன்று நேற்றல்ல வெகு காலமாகவே நடந்து வருகிறது.

இந்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது என்னவோ திரு.ஜெயகாந்தன் அவர்கள்தான். அவர் வாயைத் திறந்திருக்காவிட்டால் இந்த ரகசியம் பெட்டிக்குள் வைத்தது வைத்தபடி இருந்திருக்கும். நாமும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. 

‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். ஏ.பி.நாகராஜன் அவரது நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவந்த போதும் ‘கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது’ என்று மனமுவந்து பாராட்டும் உயர் பண்பை நான் இவரிடம்தான் பார்த்தேன்.

இப்படியொரு பெரிய அரிவாளை “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் எடுத்துப் போட்டார் அந்த கொடுவாள் மீசைக்காரர்.

இத்தோடு நிறுத்தியிருந்தால் பராவாயில்லை.

‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார்.

என்ற குற்றச்சாட்டைக் கூறுகிறார்.

வேறொருவர் பாட்டை தனது பாடல் என்று கூற வேண்டிய அவசியம் கண்ணதாசனுக்கு ஏன் வந்தது? நொடிக்கு ஒரு பாடலை அள்ளி வீசக்கூடிய கண்ணதாசன் மீது எப்படி ஒரு பழியா?

பெயர் டைட்டிலில் போடப்பட்டு விட்டதினால், தன் இமேஜைக் காப்பாற்ற இப்படியொரு தற்காப்பு தேவைப்பட்டதோ?

கவி.கா.மு.ஷெரீப்பை அவர்களை உயர்த்தி சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இப்படியொரு பழியை தன்னை அறியாமலேயே போட்டு விட்டாரா ஜெயகாந்தன்?

ஜெயகாந்தனுக்கும் கண்ணதாசனுக்கும் ஏதாவது முன்விரோதமா?

கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் ஜெயகாந்தன். நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவர் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த இந்த உண்மையை ஒருநாள் போட்டு உடைத்தும் விட்டார். இதுதான் உண்மை.

இதோ அந்த பாடலின் முழு வடிவம் :

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே – (பாட்டும்)

கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ – (பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு – (பாட்டும்)

பாடலின் வரிகளை வைத்துக் கொண்டு ‘இது இன்னாருடைய வரிகள்’ என்று சொல்லும் திறமை நமக்கு போதாது. உதாரணத்திற்கு மருதாகாசி, கவி.கா.மு,ஷெரீப் – இவர்களுடைய பாடல்கள் கேட்பவர்களுக்கு குழப்பத்தைத் தரும். எது யாருடைய பாடலென்று சொல்ல முடியாது. 

“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். 

இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை ஏ.பி.என் எதிர்பார்த்தார்.

பாட்டுக்குத்தான் மெட்டு என்பது கண்ணதாசனின் பாலிஸி. அதற்காக மெட்டுக்கு கண்ணதாசனால் பாட்டு எழுத முடியாது என்று யாரும் நினைக்கக் வேண்டாம். கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன். அவனால் எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலைக்கும், எப்படிப்பட்ட மெட்டுக்கும் பாட்டெழுத முடியும்.

Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.

‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும்  ஒகே ஆகிவிட்டது. அதுதான்  இறைவனின் நாட்டம் போலும். 

‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு.

அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு.

நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.

யாரோ எழுதிய பாடலை தானெழுதியதாக ‘புருடா’ விடும் கவிஞர்களின் மத்தியில் தானெழுதிய சிறப்பான பாடலை மற்றவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, உண்மையிலேயே பெரிய மனது வேண்டும். அந்த பெருந்தன்மை, கண்ணியம், மனப்பக்குவம், நாகரிகம் கவி கா.மு.ஷெரீப் அவர்களிடம் நிரம்ப இருந்தது. படத்தின் டைட்டிலில் கண்ணதாசன் பெயர்தான் போடப்பட்டிருந்தது.
 
கா.மு.ஷெரீப், கண்ணதாசன் என்ற இரு மாபெரும் கவிஞர்களை பிரித்து வைத்திருந்தது அரசியல்தான். கண்ணதாசனைப் பொறுத்தவரை தமிழகத்துக் கட்சிகள் அனைத்திலும் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கா.மு.ஷெரீப் கட்சி விஷயத்தில் மிகவும் கொள்கைப் பிடிப்போடு இருந்தவர். கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்தபோது கா.மு.ஷெரீப் அவர்கள் மாபொசி தலைமையின் கீழ் இயங்கிய தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்திருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதைக்கூட தவித்தார்கள்.

கண்ணதாசனுக்கும், தி.மு.,க.வுக்குமிடையே இருந்த உறவு கசந்து, கண்ணதாசன் வேறு புகலிடம் தேடிக் கொண்டிருந்த நேரம் அது. தமிழரசு கட்சியில் முக்கிய அங்கம் வகித்த ஏ.பி.என். அவர்கள் கண்ணதாசனை கோழியை பிடித்து அமுக்குவதைப்போல் ஒரே அமுக்காக அமுக்கி விட்டார்.  

வடிவுக்கு வளைகாப்பு, நவராத்திரி போன்ற ஏ.பி.என். படங்களுக்கு கண்ணதாசன்தான் பாடலெழுதினார். அதுசமயம் கண்ணதாசனுக்கும், கவி.காமு. ஷெரீப்புக்கும் இடையே இருந்த அரசியல் மனக்கசப்பு விலகி சுமூக உறவு தொடர்ந்தது. 
 
‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியவர் சத்தியமாக கண்ணதாசன்தான். அதுவும் கே.வி.மகாதேவன் பாடல் பதிவரங்கத்தில் மெட்டு போட்டுக் காட்ட, உடனுக்குடன் கண்ணதாசன் எழுதித் தந்த பாடல் அது என்று வாதிடுவோரும் உண்டு. 

நம் போதாத காலம் சம்பந்தப்பட்ட நபர்கள் – ஏ.பி.என்/ கண்ணதாசன்/ கவி.கா.மு.ஷெரீப்/ கே.வி.மகாதேவன் – யாருமே இப்போது உயிரோடு இல்லை. உயிரோடு இருக்கின்ற ஒரே நபர் டி.எம்,செளந்தர்ராஜன் ஒருவர்தான். அவரும் இந்த விஷயத்தில் ஏனோ வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார். “நல்லா மண்டையைப் பிச்சிக்கிடுங்கோ!” என்று வேடிக்கை பார்க்கிறார் போலும்.

வாமனன் எழுதிய டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் என்ற 496 பக்கங்கள் அடங்கிய தலையணை புத்தகத்தில் துருவித் துருவி ஆராய்ந்தேன்.

ஊஹூம்.. .. ..

***

நன்றி : அப்துல் கய்யும்

***

மேலதிக விபரங்களுக்கு பார்க்க : http://kavikamu.wordpress.com/

« Older entries