நைஜீரிய முதுமொழிகள்

அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய தீக்கொன்றை மலரும் பருவம்’ (Season of Crimson Blossoms) நாவலில் , ஹாஜியா பிந்த்தாவை அடிக்கடி ஈரமாக்கும் போக்கிரி ரெஸா சொல்கிறான்: “நாம் எல்லோரும் ஆடையைப் போன்றவர்கள். கசக்கப்படுகிறோம், சுருங்கி விடுகிறோம், கிழிக்கப்படுகிறோம். சில வேளைகளில் அவை சரி செய்ய முடியாத அளவிற்கு இருக்கின்றன. சிலர் மீண்டும் தைக்கப்படுகிறார்கள், ஒட்டுப் போடப்படுகிறார்கள், சிலரோ தூக்கி வீசப்படுகிறார்கள். சில ஆடைகள் பாக்கியம் பெற்றவை. மற்றவை அப்படி இல்லை. துரதிர்ஷடத்தோடும், மைக்கறையோடும் இன்னும் என்னென்னவெல்லாமோடோமோ பிறப்பவை.” (P.243) .

தமிழில் : லதா அருணாச்சலம்

சுவாரஸ்யமான நாவல். போடாத சமயங்களில் நாயகி பிந்த்தாவும் ரவுடி ரெஸாவும் ஒருவருக்கொருவர் , நீ தொழுதாயா, துவா கேட்டாயா என்று விசாரித்துக்கொள்கிறார்கள்! சரி, எல்லா அத்தியாயங்களின் ஆரம்பத்தில் வரும் பிரமாதமான முதுமொழிகளை நன்றியுடன் பகிர்கிறேன்.

***

  • ”உயரே வீசி எறியப்பட்ட கல், நிச்சயம் நிலம் வீழ்ந்தே தீரும்”
  • “பறக்க இயலாததால் வண்ணத்துப்பூச்சி தன்னை ஒரு பறவையாகப் பாவித்துக் கொள்கிறது”
  • “சலவை சோப்பைக் கண்டுபிடிக்கும் முன்னரே கொக்கின் நிறம் தூய வெண்மைதான்
  • ”விழுந்த இடத்தைப் பற்றிக் கவலைப்படாதே; சறுக்கிய இடத்தை அடையாளம் கண்டுகொள்”
  • “முதியவரை உண்டபின், வாயில் நரைமுடி வருகிறதென்று முறையிடுதல் கூடாது”
  • “சட்டையை உரித்தபின்னும் பாம்பின் இயல்பு மாறுவதில்லை”
  • ”சிறு துரும்பென உள்நுழையும் தீமை, பின் விருட்சமெனப் படர்ந்து விடுகிறது”
  • “எத்தனை கனமாக இருந்த போதிலும் யானைக்குத் தந்தங்கள் சுமையல்ல”
  • “நிலத்திலிருந்து பறந்து எறும்புக்குழியின் மீது அமரும் பறவைக்குத் தெரிவதில்லை தான் இன்னும் நிலத்தில்தான் இருக்கிறோமென்று..”
  • “கருப்பு ஆட்டை இருள் கவியும் முன்பே தேடத் துவங்குதல் நலம்”
  • “கழுதைப் புலியால் தன் உடல் வீச்சத்தை ஒருபோதும் நுகர இயலாது”
  • “பாம்பு பெற்றெடுப்பதும் நீண்டதாகவே இருக்கும்”
  • “அடுப்படியில் தாய் இருக்கையில், மகனின் கிண்ணங்கிளில் உணவுக்கு எப்போதும் குறைவில்லை”
  • “கொம்புகளுள்ள எதையும் கோணிப்பையில் மறைத்து வைக்கக்கூடாது”
  • ”விவேகமான பறவையை வார்த்தைகளால் மட்டுமே வளைத்துப் பிடிக்கலாம்”
  • “கருமையான நீரில் கண்ணுக்குத் தெரியாமல் நீர் யானையை மறைய வைக்க முடியும்”
  • “நலிந்த எலும்பென்ற சொல் கேட்கையில் முதிர்பெண்டிர் மனதில் சஞ்சலம் எழும்பும்”
  • “கடல் வண்ணத்தை மாற்ற ஒரு வாளி சாய நீர் போதுமானதல்ல”
  • “நொண்டிக் கழுதைகளுக்கு ஏற்றதல்ல பந்தயக் குதிரைகளின் மைதானம்”
  • “பத்துத் தவளைகளைக் காட்டிலும் உடல் மெலிந்த யானை உயர்வானது”
  • “எதுவும் தீண்டாதவரை தென்னை ஓலைகள் சலசலப்பதில்லை”
  • “புத்தியுள்ளவன் கண்களுக்குத் தென்பட்டுவிடும் செம்மறி ஆட்டின் நரைத்த ரோமம்”
  • “மேகம் கறுப்பதைக் கண்டவுடன் பானைத் தண்ணீரை வீசியெறிதல் கூடாது”
    24 “விவேகமில்லாத குருடன்தான் வழிகாட்டியிடம் வாதம் செய்வான்”
    25 “பருந்தின் ஆதிநிலம் அறியாமல் இருந்திருந்தால் தான் மெதீனாவிலிருந்து வந்ததாக நம்ப வைத்துவிடும்”
  • “ஆட்டுக் கிடாய்கள் கூடியிருக்கும் இடத்தில், தனக்கும் கொம்புகள் இருப்பதாக ஒருபோதும் நத்தை சொல்லாது”
    27 “உணவுப்பண்டத்தை வாளால் வெட்டி உண்பதென்பது நடைமுறைக்கு ஒவ்வாதது”
  • “பாலைப் போன்றது நல் மதிப்பு, திரிந்துவிட்டால் மீண்டு வராது”
  • “கழுகுகளின் நீதிமன்றத்தில் கோழிகளுக்கு நியாயம் கிடைக்காது”
  • “கழுதைப் புலியும், காட்டுக் கோழியும் உலவுமிடத்தில் என்றாவது ஒருநாள் மோதல் நிகழும்”
  • “ஒப்பாரிப் பாடலின் இனிமை இழப்பை ஈடு செய்யாது”
  • “வல்லூறுகளால் சூழப்பட்டிருக்கையில், இறக்காமலிருக்க முயற்சி செய்”