முடம் நீக்கும் முடவன்குட்டி

’மதவெறி’ என்று கூகிளிட்டால் ’ஆபிதீன் பக்கங்கள்’தான் முதலில் வருகிறது (ச்சும்மா, இனி அதிகம் வரும் பாருங்கள்!). அதை நீக்க, ’மதத்தின் பெயரால் நடந்த கலவரத்தில் சபிக்கப்பட்ட மனிதனை முன்வைத்து’ முடவன்குட்டி எழுதிய கவிதையை இங்கே மீள்பதிவிடுகிறேன் . முடவன்குட்டியிடம் அனுமதி கேட்கவில்லை முயல்குட்டி. எல்லாம் மதவெறிதான் காரணம்! ’ திண்ணை’ கதைகள் பகுதியில் தென்பட்ட வித்தியாசமான பெயர்கொண்ட இந்த ’முடவன்குட்டி’ யார் என்று நீண்ட நாட்களாக தேடி வந்தேன். ’யார் இந்த பர்வீன்?’ என்று கேட்டதற்கு நண்பர் மாலிக் மிகச்சரியாக தவறாக சொன்னதுபோல் சொல்லாமல் முடவன்குட்டியின் உண்மைப் பெயரைச் யாராவது சொன்னால் நல்லது. அது போகட்டும், நண்பர் முடவன்குட்டி திரும்ப வந்திருக்கிறார். கடையநல்லூர்க்காரர் என்று தெரிகிறது. அங்கே அவருக்கென்றே தனி பக்கமே இருக்கிறது. அருமையான கதைகளும் கவிதைகளும் (இந்த ‘அருமையான’வை விடவே மாட்டியுமா? –  ரஃபி) எழுதுகிறார். ’பூர்வீகத்து வீடு’ ஒண்ணு போதும் அவரது பூரணத்துவத்தைச் சொல்ல. சரி, ’திண்ணை’யில் இருக்கும் அவருடைய கதைகளுக்கான சுட்டியைத் தருகிறேன். படித்துவிட்டு அந்த கவிதைக்குப் போகவும். ஜெயக்குமார், எல்லா கவிஞர்களையும் நாடு கடத்திவிட வேண்டாம்; முடவன்குட்டி போன்றோர் இருப்பது முஸ்லிம்களுக்கு நல்லது!

***

முடவன் குட்டியின் சில கதைகள் :

விடுதலை

எழுதிச் செல்லும் விதியின் கை

வாப்பா.. நான் செஞ்சது தப்பா…. ?

***

மதத்தின் பெயரால் நடந்த கலவரத்தில் சபிக்கப்பட்ட மனிதனை முன்வைத்து ….. (கவிதை)

முடவன்குட்டி

இவன் மனிதனா..?
திடுக்கிட்டு நின்றது காற்று:
கருகித் தீய்ந்தது சூரியன்:
வதங்கி உதிர்ந்தன
தளிர் இலை பூக்கள் ..

மனிதனல்ல மிருகம்:
இமையாது உருளும் கண்களாய்
காது மடலோரம்
பதுங்கிற்று- சட்டம்:
காவலோ-
புறந்தலை குறிவைத்து
அரவமற்றுப் பின் தொடரும்:

நீ தான் மிருகம் / இல்லை நீ தான்:
சொல்லியும்
சொல்லாது நழுவியும்
வியாபார விதி பேணி
உண்மையை
அளந்தே உரைத்தன-
பத்திரிகை… மீடியாக்கள்:

மனிதன் இறந்து விட்டான்:
புராதன வீட்டில்
நிழல்களாய் உலாவும்
மூதாதையர் முணுமுணுப்பை
மொழிபெயர்த்தது-சரித்திரம்.

சந்து முனையிலோ…சாலையோரமோ..
“பேரருள்” இரந்தபடி
அப்போதும் கேட்கும்
பள்ளிவாசல் பாங்கொலியும்..
கோயில்மணி ஓசையும்..

கால-இட-வெளி தாண்டிய
சூன்யத்தில்
ஓரொலியாய் எதிரொலிக்கும்
அதன் உள்ஒலி:
இதனின்றும் பிரிந்ததோர் கதிர் இழை
கீழே-
“சாபமாய்க்”கிடக்கும்
மனிதனின்
மனவாசல்
மெல்லத் தொடும்
“மனிதம்” வேண்டி.

***

முடவன்குட்டியின் குறிப்பு :

மதத்தின் பெயரால் வன்முறை: ” நீ மிருகம்”,” நீ செத்துவிட்டாய்”
என மனிதனைச் சபித்து- சட்டம், காவல், அரசு, மீடியா, சரித்திரம் என சகலமும் அவனைக் கைவிட்டு ஒதுங்கிக்கொள்ள அவனுக்கு ஆதரவாக வருவது -மதங்களெல்லாம், தமது ஆதார சுருதியாய் – சதா இரந்தபடி இருக்கும் – “பேரருள்” தான். கவிதை இதனை மெல்லச்சொல்ல முயல்கிறது. (சமரசம் ஆகஸ்ட் 1999 இதழில் இக்கவிதை வெளி வந்தது. இக்கவிதையை அனுப்பத் தயங்கினேன்: சமரசம் இதழ் ஆசிரியர் சிராஜுல் ஹசன் கவிதையை சட்டென உள்வாங்கி ஆத்மார்த்தமாகச் சொன்னது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. “…பாய் ..அடிப்படையைத் தேடுறீங்க.. எழுதுங்க எழுதுங்க.. எதுவென்றாலும் போடுகிறேன்.. உங்க மேல நம்பிக்கை இருக்கு “

**

நன்றி : முடவன்குட்டி, கடையநல்லூர் இணையதளம்