ஆரஞ்சுப் பழத்தைப் போல இந்தக் கவிதை நீல நிறம்!

பிரெஞ்சுக் கவிஞர் போல் எல்யுவாரின் (Paul Eluard) பிரமாதமான ‘ஆரஞ்சுப் பழத்தைப் போல பூமி நீல நிறம்’  வரியைத் திருகித் தலைப்பாக வைத்திருக்கிறேன். எல்லாம் ஒரு சுதந்திரம்தான், நான் எழுதியதாக சொன்னேனா என்ன? சரி,   ‘வேற்று மொழி எழுத்துக்களைத் (படைப்பிலக்கியம், சிந்தனை, உரைநடை) தெரிந்துகொள்வதும் ஜன்னலைத் திறந்து வைக்கும் செயலே’ என்று பத்தி எழுதி , போல் எல்யுவாரின் ‘சுதந்திரம்’ கவிதையை மொழிபெயர்த்துள்ள மதிப்பிற்குரிய வெ.ஸ்ரீராம் அவர்களுக்கு என் நன்றி. காலச்சுவடு இதழில் (மே 2004) வெளியான கவிதை இது.

ஒரு இனிய ஆச்சரியம். மாட்சிமை பொருந்திய துபாய் மன்னர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூமிடமிருந்து இங்குவாழும் அனைவருக்கும் SMS (for the 41st anniversary of the UAE) வந்தது. வேடிக்கையும் நடந்தது. தனக்கு மட்டுமே SMS வந்ததாக நினைத்த சில அசடுகள் பெருமை தாங்காமல் பேச மறுத்தார்கள். நாகூர் கந்தூரி ஆரம்பிப்பதற்கு ஒரு மாதம் முன்பே, ‘சாந்து தொடங்க’,  எல்லா வீடுகளுக்கும் ஆள் வைத்து சொல்லிவிடும் வழக்கம் தெரியாது போலும். வேறு சிலரோ ‘Thank u Sir’  என்று மாமன்னருக்கு பதில் SMS அனுப்பிக் கொண்டிருந்தார்கள்!

22 வருடங்களாக என் குடும்பத்திற்கு சோறு போடும் இந்த அமீரகம் நீலநிறத்தில் செழிக்கட்டுமாக. எனது 26 வாசகர்களின் பிரியத்திற்காக போல் எல்யுவாரின் கவிதையை இங்கே இடுகிறேன். அடீ அஸ்மா, இத போடுற சொதந்தரமாச்சும் இங்கெ இரிக்கிதே… – ஆபிதீன்

***

paul-eluard

சுதந்திரம் – போல் எல்யுவார்

என் பள்ளி நோட்டுப் புத்தகங்களில்
என் மேசையில் மரங்களில்
மணலில் உலர் பணியில்
எழுதுகிறேன் உன் பெயரை

படித்துவிட்ட பக்கங்களில் எல்லாம்
வெற்றுத் தாள்களில் எல்லாம்
பாறை குருதி காகிதம் அல்லது சாம்பலில்
எழுதுகிறேன் உன் பெயரை

பொன்னாலான உருவங்களில்
போர்வீரர்களின் ஆயுதங்களில்
மன்னர்களின் மகுடத்தில்
எழுதுகிறேன் உன் பெயரை

இரவின் அற்புதங்களின் மேல்
பகல் பொழுதின் வெண்ரொட்டி மேல்
திருமணப் பருவக் காலங்களின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

காட்டில் பாலவனத்தில்
பறவைக் கூடுகளில் ‘ழெனெ’ மலர்களில்
என் குழந்தைப் பருவத்தின் எதிரொலி மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

என்னுடைய நீலநிறத் துடைக்கும் துணிகளின் மேல்
வெயிலில் பாசி படர்ந்த குளத்தின் மேல்
நிலவொளி மிளிரும் ஏரியின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

வயல் வெளிகளின் மேல் தொடுவானம் மேல்
பறவைகளின் இறக்கைகளின் மேல்
நிழல்களின் காற்றாலை மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

விடியலின் ஒவ்வொரு மூச்சின் மேல்
கடலின் மேல் கப்பல்களின் மேல்
பிரம்மாண்ட மலையின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

மேகங்களின் நுரையின் மேல்
புயலின் வியர்வைத் துளிகளின் மேல்
சுவையற்ற அடர்ந்த மழையின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

பளபளக்கும் உருவங்களின் மேல்
நிறங்களின் மணியோசைகளின் மேல்
பௌதிக நிஜத்தின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

விழித்திருக்கும் வழிகளின் மேல்
பரந்து கிடக்கும் பாதைகளின் மேல்
நிரம்பி வழியும் சதுக்கங்களில்
எழுதுகிறேன் உன் பெயரை

ஏற்றப்பட்ட விளக்கின் மேல்
அணைந்துவிட விளக்கின் மேல்
என் இல்லங்கள் அனைத்திலும்
எழுதுகிறேன் உன் பெயரை

கண்ணாடியிலும் என் அறையிலும்
இரண்டாகப் பிளக்கப்பட்ட பழத்தின் மேல்
ஓட்டின் வெறுமையான என் கட்டிலின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

என் இனிய சாப்பாட்டுராமன் நாயின் மேல்
நிமிர்ந்த அதன் காது மடல்கள் மேல்
அதன் முரட்டுக் கால்களின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

என் வீட்டு வாயில் படியின் மேல்
பழகிவிட்ட பொருள்களின் மேல்
வாழ்த்தப்பட்ட தீப் பிழம்பின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

எனக்குக் கிடைத்த ஒவ்வொரு சதையின் மேல்
என் நண்பர்களின் நெற்றி மேல்
நீட்டிய கரம் ஒவ்வொன்றின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

ஆச்சரியங்களின் கண்ணாடிக் கதவின் மேல்
காத்திருக்கும் இதழ்களின் மேல்
மௌனத்திற்கு மிகவும் அப்பால்
எழுதுகிறேன் உன் பெயரை

அழிக்கப்பட்ட என் புகலிடங்களின் மேல்
நொறுங்கிவிட்ட கலங்கரை விளக்கங்களின் மேல்
என் அலுப்பின் சுவர்களின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

ஆசைகளற்ற இருத்தலின்மையின் மேல்
நிர்வாணத் தனிமையின் மேல்
சாவின் படிக்கட்டுகளின் மேல்
எழுதுகிறேன் உன்  பெயரை

திரும்பப் பெற்ற ஆரோக்கியத்தின் மேல்
மறைந்துவிட்ட அபாயத்தின் மேல்
நினைவுகளற்ற எதிர்பார்ப்பின் மேல்
எழுதுகிறேன் உன் பெயரை

ஒரு சொல்லின் சக்தியுடன்
தொடங்குகிறேன் என் வாழ்வை
நான் பிறந்தது உன்னைத் தெரிந்துகொள்ள
உன்னைப் பெயரிட்டு அழைக்க

சுதந்திரம்.

***

வெ.ஸ்ரீராமின் குறிப்புகள் :

1942இல், இரண்டாம் உலகப்போரின் மத்தியில் பிரெஞ்சு கவிஞர் போல் எல்யுவார் (1895 – 1952) எழுதிய இந்தக் கவிதை, பிரான்ஸின் சுதந்திரப் போராட்டக் கவிதைகளில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. இள வயதிலேயே உடல்நலக் குறைவினால் பள்ளிப் படிப்பு தடைபட்டாலும், அப்போதிலிருந்தே இவருடைய மனதில் அழுந்தப் பதிந்துவிட்ட சுவடுகள் ஒரு நல்ல கவிஞரை, சிந்தனையாளரை உருவாக்கின. தனது இருபதாவது வயதில்  தொடங்கி மொழியின் பல பரிமாணங்களை அறிந்துகொள்ளும் தேடலில் ஈடுபட்டார். அப்போது கலை, இலக்கிய உலகில் பிரபலமாக இருந்த ‘சர்ரியலிஸம்’ என்ற இயக்கம் இவருக்கு ஒரு பாதையைக் காட்டியது. ‘யதார்த்தத்திற்கு அப்பால்’ என்று பொருள்படும் இந்த இயக்கம் நாளடைவில் ஓவியம், சிற்பம், இலக்கியம், திரைப்படம் என்று பல துறைகளிலும் பல வடிவங்களைப் பெற்றது. இந்த இயக்கத்தின் தலைவர் ஆந்த்ரே ப்ரெதோன் (Andre Breton. 1896 – 1966) இதற்கு அளித்த வரையறை : ‘சிந்தனையின் நிஜமான செயல்பாட்டைச் சொற்களாலோ, எழுத்துக்களாலோ, அல்லது வேறு எந்த வகையிலோ, வெளிப்படுத்த வேண்டும் என்று ஒருவரை விரும்பச் செய்யும், அவருடைய உள்மனதின் அனிச்சையான செயல். அழகியல் அல்லது ஒழுக்க நெறிகளுக்கு அப்பால், தர்க்கவாதத்தின் தளைகள் எதுவுமற்ற சூழலில், சிந்தனையின் வெளிப்பாடு”. கவிதை மொழி, படிமங்கள் போன்ற தளங்களில் ஏற்பட்ட இந்த இயக்கத்தின் தாக்கங்கள் எல்யுவாரின் கவிதையிலும் தென்பட்டன. பிரெஞ்சு கவிதை உலகில் அந்த நாட்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய அவருடைய ஒரு கவிதை வரி :

“ஆரஞ்சுப் பழத்தைப் போல பூமி நீல நிறம்”

மேல்புறமும் கீழ்புறமும் தட்டையான கோள வடிவம் உடையது பூமி என்பது அறிவியல் உண்மை. வடிவத்தில் இது ஆரஞ்சுப் பழத்தை ஒத்திருக்கிறது என்பது கண்கூடு. விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும்போது  அது நீலநிறப் போர்வை போர்த்தியது போலத் தோன்றுவதையும் கவிஞனின் மனம் பதிவு செய்கிறது. எந்த ஒரு பொருளும் நம் பார்வையில் படும்போது அதன் வடிவமும் நிறமும் ஒரே சமயத்தில் நம் மனதில் பதிவாகின்றன. ‘ஒரே சமயத்தில்’ என்ற தன்மையை ஒரே வரியில் கொண்டுவர முயற்சித்த எல்யுவாரின் மொழியின் மீதான இந்த ஆளுமை வியப்பை அளித்தது. 1934க்குப் பிறகு இவர் இந்த இயக்கங்களிலிருந்து விலகி கவிதையின் எல்லாப் பரிமாணங்களிலும் ஆர்வம் கொண்டார். தவிர, அன்றைய அரசியல் போராட்டங்களில் இவருடைய ஈடுபாடு தீவிரமடைந்தது. “பொதுவாழ்வில், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் கவிஞனும் மூழ்கியிருக்கிறான் என்ற கருத்தை ஏற்கவேண்டிய பொறுப்பும் கடமையும் எல்லாக் கவிஞர்களுக்கும் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று வலியுறுத்தினார். ஓவியக் கலைஞர் பிக்காஸோவின் நெருங்கிய நண்பரான எல்யுவார் அவருக்காகவும், அவருடைய படைப்புகளைப் பற்றியும்  கவிதைகள் எழுதியுள்ளார். 1942இல் வெளிவந்த எல்யுவாரின் கவிதைத் தொகுப்பு “கவிதையும் உண்மையும்” என்ற தலைப்பைக் கொண்டிருந்தது. அதில் இடம் பெற்ற ஒரு கவிதை : “சுதந்திரம்”.

***

sreeraam

நன்றி : வெ.ஸ்ரீராம், காலச்சுவடு