அமீரகச் சிறுகதைகள் – கே.என்.சிவராமன் அணிந்துரை

Uma Kathir (fb) : அண்ணாச்சி உங்க கதை உண்டா?

Asif Meeran (fb) : அதுக்குத்தானலே மூதி இந்த ஏற்பாடே?! 🙂

*

குறிப்பு : சென்னை புத்தகத் திருவிழா 2019-ல் கிடைக்கும் இந்த ‘ஒட்டக மனிதர்கள்‘ நூலில் ஆபிதீன் ஐட்டமும் உண்டு. என்ன, அது கொஞ்சம் பெருசு. பொறுத்துக்கொள்ளவும்.   அரங்கு எண் : 719 ரஹ்மத் பதிப்பகம், அரங்கு எண் : 602  அன்னம்  பதிப்பகத்தில் நுழைந்து பார்க்கவும்.

பாலைவனத்தில் முளைத்த தொப்புள் கொடி! – கே.என்.சிவராமன் அணிந்துரை :

பலர் எழுதியிருக்கும் கதைகள்தான். சிறுகதை தொகுப்புதான்.

என்றாலும் இது பத்தோடு பதினொன்றல்ல. போலவே சாதாரணமானதும் அல்ல.

மறுக்கவில்லை. மரியாதைக்கும் வணக்கத்துக்கும் உரிய ஆபிதீன், அப்துல் மஜீத் என மூத்த படைப்பாளிகளில் தொடங்கி தங்கள் முத்திரையை ஏற்கனவே சிறியதும் பெரியதுமாக வாசகர்கள் மனதில் பதித்திருக்கும் இளம் படைப்பாளிகளான அய்யனார் விஸ்வநாதன், பெனாத்தல் சுரேஷ், ஆசிப் மீரான், சென்ஷி, செல்வராஜ் ஜெகதீசன் எனப் பயணித்து முதல் முறையாக பிரசுரமாகும் சிறுகதையை எழுதியவர்கள் வரை பலரும் இத்தொகுப்பில் கைகோர்த்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக மட்டும் இத்தொகுப்பு அசாதாரணமானதாக மாறவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் எழுதியிருக்கும் தமிழ் சிறுகதைகள் என்பதுதான் இத்தொகுப்பை பத்தோடு பதினொன்றாக மாற்றாமல் இருக்கிறது.  முக்கியத்துவமும் பெறுகிறது.

ஆம். தமிழகத்திலிருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பவர்கள் எழுதியிருக்கும் கதைகள் இவை.

மொழி வேறு. நிலம் வேறு. எழுதியிருப்பவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே தங்கள் மனைவி, குழந்தைகளுடன் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள். எஞ்சியவர்கள் நெருங்கிய சொந்தங்களை பிரிந்து தன்னந்தனியாக வாழ்பவர்கள். மொத்தத்தில் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அனைவருமே தங்கள் உற்றார் உறவினர்களை, நிலங்களை, வீடுகளை விட்டுப் பிரிந்து கண்காணா தொலைவில் நடமாடுபவர்கள்.

அப்படியிருந்தும் நினைவுகளை பொத்திப் பொத்தி பாதுகாப்பது போலவே தங்கள் மொழியையும் பொக்கிஷமாக பத்திரப்படுத்தி இருக்கிறார்கள்; அதை பூட்டி வைக்காமல் வளர்க்கவும் செய்கிறார்கள்.

இதன் காரணமாகவே மற்ற சிறுகதைத் தொகுப்பில் இருந்து இது வித்தியாசப்படுகிறது; முக்கியத்துவமும் பெறுகிறது.

குறிப்பாக தங்கள் குடும்பத்தில் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை பட்டதாரிகளாக இருப்பவர்களே கதை சொல்லிகளாக இருப்பதை முழுதுமாக படித்து முடித்ததும் அவதானிக்க முடிகிறது. இந்தப் புள்ளி தமிழகத்தில் நிகழ்ந்த / நிகழும் பெரும் சமூக மாற்றத்தின் விளைவை சிறுகதையின் பேசுப்பொருளாக இருக்கும் நிகழ்வுக்கும் சம்பவத்துக்கும் அப்பால் பலத்தளங்களில் விரிவுப்படுத்துகிறது.

கவுச்சி வாடைக்காக டியூஷனில் இருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு சிறுகதையாகி இருப்பது இதற்கு ஓர் உதாரணம்.

வரலாறு என்பது ஒருவகையில் நினைவுகளின் தொகுப்புதான். அசைபோடுவது எல்லாம் கடந்த காலத்தில் மட்டும் அடங்கிவிடுவதில்லை. நிகழ்காலத்தின் காரணிகளையும் எதிர்காலத்தின் போக்கையும் கூட அவை பிரதிபலிக்கின்றன. இந்தத் தொகுப்பு, அதற்கு ஒரு சோறு பதம்.

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் சம்பவங்களையும் கதையாக்கி இருக்கிறார்கள். விடுமுறைக்காக ஊருக்குச் சென்றபோது சந்தித்த நிகழ்வுகளையும் எதிர்கொண்ட மனிதர்களையும் படைப்பாக்கி இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் ஊரில் நடந்ததை இப்போது எண்ணிப் பார்த்து தங்கள் ஏக்கத்தை பதிவும் செய்திருக்கிறார்கள்.

என்றாலும் இதிலிருக்கும் அனைத்து சிறுகதைகளின் மையமும் கதை சொல்லியின் அந்நியமாதலை அழுத்தமாக உணர்த்துகிறது. தன் கதையில் பெனாத்தால் சுரேஷ் குறிப்பிட்டிருப்பதுபோல், துபாயில் மதராஸியாகவும் ஊரில் துபாய்க்காரனாகவும் அடையாளப்படுத்தப்படுவது பெரும் சோகம். எங்குமே அவர்களாக அவர்களை யாரும்  சுட்டிக் காட்டுவதில்லை. அரசியல் காரணங்களுக்காக அகதியானவர்கள் மட்டுமல்ல; வாழ்வியல் காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்களும் அன்றாடம் சந்திக்கும் அவலம் இது.

கூடவே கடலில் குளிக்கும்போது அருவியில் குளிக்க வேண்டும்; அருவியின் கீழ் நிற்கும்போது கடலில் கால் வைக்க வேண்டும் என்ற மனநிலை.

இதை இத்தொகுப்பில் இருக்கும் அனைத்து சிறுகதைகளும் அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றன. முதலாளிகளுடன் ஏற்படும் முரண்பாடு முதல் சொந்த உறவினர்களிடம் தன்னியல்பாக நிகழும் விலகல் வரை அனைத்தின் ஊடாகவும் இந்த நிராகரிப்பும் ஏற்கச் சொல்லும் மவுனக் கதறலுமே மையமாகவும் மையம் விலகிய விளிம்பாகவும் தொத்தி நிற்கின்றன.

ஊர் என்பது வெறும் பெயரல்ல. போலவே வாழ்ந்த இடமோ வாழும் இடமோ வெறும் நிலமும் அல்ல. அவையும்  அவரவர் எண்ணங்களில் உயிர்த்திணைதான். ஒருபோதும் அவை அஃறிணை அல்ல.

கண்காணா தொலைவில் நடமாடினாலும் நம் நாசியை வருடும் இட்லியின் மணம் அம்மா / மனைவியின் சமையலையும் அடிக்கடி நாம் விரும்பி சாப்பிட்ட உணவகத்தின் நினைவையும் மீட்டு விடும். எங்கோ எதிர்படும் ஒரு புங்கை மரம் பால்யத்தை கண்முன் கொண்டு வந்துவிடும்.

தனிமையை அனுபவிப்பவர்களுக்கு நினைவுகளே ஒரே பிடிப்பு. இதன் வழியாகவே தங்களுக்குள் தாங்கள்  மரணிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். இக்கதைகளும் இதை எழுதியவர்களுக்கு அப்படித்தான். உயிர் வாழ்கிறது; வாழ்கிறார்கள்.

எழுதிய அனைவருக்கும் என்றும் அன்பு. சிதறியவற்றைக் கோர்த்து மாலையாக – தொகுப்பாக – கட்டியவருக்கு முத்தங்கள்.

*

நன்றி : கே.என். சிவராமன் (‘குங்குமம்’ இதழ் ஆசிரியர்)

*

தொடர்புடைய இரு பதிவுகள் : ஷஹிதா மதிப்புரை  & ஆசிப்மீரான் முன்னுரை